உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 9 மகா சக்தி வாய்ந்த விக்ரஹ நிக்ரஹன், பரசமயிகளின் பரமவைரி எனப் பேரெடுத்த சுல்தான் கஜினி முகமது ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த சிறியதோர் சமஸ்தானமான கஜினியைச் சேர்ந்தவன்தான். எனினும் இவனுடைய தந்தை சபக் தஜின் பஞ்சாபில் ஜெயபாலனிடம் முன்பு தோற்று விட்டதால் அதற்குப் பழிவாங்கவே இந்நாட்டில் படையெடுத்து வந்தான் என்பதும் வரலாறு கூறும் விவரம். இந்தியாவில் ஏராள நிதிக் குவியல்கள், அரும் பெரும் பொக்கிஷங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதற்காகவே அதாவது அவற்றைக் கொள்ளையடித்து செல்லவே சென்றிருக்கிறான் என்றும் வேறு சில வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். விக்ரஹ நிக்ரஹன் அவன். எனவே, விக்ரஹங்களை வணங்குவோரை வெல்லவும் அவற்றைச் சிதைத்திடவுமே வந்தான் என்றும் மற்றும் சிலர் கூறுவர். ஆக யார் எது கூறினாலும் கஜினி முகமது இந்நாட்டில் ஒருமுறைக்குப் பலமுறையாகப் படையெடுத்து வந்தான் என்பது திண்ணம். ஒவ்வொரு தடவையும் அவன் வரும் போது இந்நாட்டில் இருந்த நிலைமை, அவனுக்குச் சாதகமாகவே இருந்தது. சுதேச மன்னர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு எதிரியை, மிகவும் பலமான படைகளுடன் வந்த பகைவனை ஒன்று கூடி எதிர்க்க இயலாமல் தனித் தனியே மோதிச் சிதறி துகள் துகளாகிவிட்டனர். ஒரு சிலர் கூட்டாக அவனை எதிர்த்து நிற்கவும் முயலாமலில்லை. எனவே அவனுடைய பெரும்படை, அவற்றின் வேகம் அதிரடித் தாக்குதல்கள் ஆகியவற்றை அவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல், விட்டால் போதும் என்று ஓடிவிட்டது என்னவோ உண்மை. ஆனால் அவனைக் கண்டதும் பயந்து நடுங்கிப் போய் அவனிடம் சரணாகதி! எப்படி வேண்டினாலும், எது வேண்டுமாயினும் செய்யத் தயார் என்று மண்டியிட்டுச் சலாம் போட்டவர்களும் இல்லாமலில்லை. நம்மிடம் இவர்கள் மண்டியிட்டுக் கெஞ்சுகிறார்கள், கண்டதுமே நடுங்குகிறார்கள், எதிர்ப்படவும் அஞ்சுகிறார்கள்! விட்டால் போதும் என்று ஓடுகிறார்கள்! எனவே நாம் பயங்கரமானவர்கள். நம்மால் இவர்களை தூளாக்க முடியும் என்ற துணிச்சல் கஜினியிடம் உண்டாகி விட இவர்களே காரணமாயிருந்தனர். இப்படிக் காரணமாயிருந்தவர்களில் முக்கியமானவர்களை நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். பிசாசைக் கண்டு பயந்தோடியவர்கள் கோழைகள் என்றால் மண்டியிட்டுக் குலாமானவர்கள், காட்டில் கொடுத்த கயவர்கள் ஆகமாட்டார்களா? கேவலம் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொந்த மதத்தை விட்டு அன்னிய மதத்துக்கு மாறியவர்கள் நம்பத் தகுந்தவர்களா? எனவே மக்கள் கொதித்தெழுந்ததிலோ, சுதந்திரமாக இயங்க விரும்பிய ஜெயந்திரனைத் தங்கள் தலைவனாகக் கொண்டதிலோ அதிசயமில்லை. ஆனால் அவன் நாளாவட்டத்தில் ஒரு சர்வாதிகாரியாகவே மாறத் துணிந்ததும் நிலைமை விரோதமாகி விட்டது. கஜினி முகமது கன்னோசி மன்னன் ராஜ்யபாலனை தனது நாட்டைவிட்டு ஓடி எதிரிக்கு எதிர்ப்பேயில்லாமல் கன்னோசியைச் சரண் அடையச் செய்தது பிடிக்காமல் மக்களே விரட்டி விட்டு விட்டார்கள் என்று அறிந்ததும், ஓகோ...! அப்படியானால் இனி மக்கள் வேகம் அதிகரித்துவிடும். அப்படி அதிகரித்தால் ஒடுங்கிக் கிடக்கும் மன்னர்கள் கூட கிளர்ந்தெழுவர். எனவே இப்படியே விட்டு விடக் கூடாது இதை! மேலும் மேலும் தாக்கி எப்பவுமே அவர்கள் நடுங்கிச் செத்துக் கொண்டிருக்கும்படி அந்நாட்டு மக்களைச் செய்திருப்பதால்தான் தனக்குப் பெருமை என்று கருதினான். ஆகவே மீண்டும் இந்நாட்டில் படையெடுத்து மதுரா வரை வந்துவிட்டான். ஏற்கெனவே அவனால் பாழான மதுரா இன்னமும் அப்படியேதான் பாழாகிக் கிடந்தது! சோமநாதபுரமும் அப்படியே! எனவே வேறு எந்த ஊரைப் பாழாக்கலாம்? மக்களை அலறி அடித்துக் கொண்டு ஓடச் செய்ய எந்தப் பகுதியில் புதிய தாக்குதலைத் தொடுக்கலாம் என்று மதுராவிலிருந்தே திட்டமிடலானான்! இந்தத் திட்டம் செயல்படுவதற்குத் துணையாயிருக்க முன் வந்தவன் இஸ்லாமியனாக மாறிய வாரண நாட்டு ஹரதத்தன்! இவனுக்குப் பக்க பலமாக இருந்தவர்களைப் பற்றி நாம் அதிகம் கூறத் தேவையில்லை. ஆனால் மதுராவில் இருந்த கஜினியைச் சந்திக்கத் தனது நூறு மெய்க்காவலருடன் சோழ மாமன்னனின் தூதுவனாக ஜெகதேவ வல்லபேந்திரன் வந்து கொண்டிருக்கிறான் என்ற தகவல் மட்டும் நாட்டின் நாலா திசைகளிலும் பரவி கஜினியின் காதுகளுக்கும் எட்டியது. இம்மாதிரியான ஒரு தகவலைக் கேள்விப்பட்ட கஜினி முகமது வியப்படைந்து ஹரதத்தனிடம் “என்னைச் சந்திக்க எவனோ ஒரு தூதுவனா? யார் அந்தச் சோழன்? அவன் ஏன் இப்படி ஒரு ஆளை என்னிடம் அனுப்ப வேண்டும்?” என்று கேள்வி மேல் கேள்வி போட்டான்! மாஜி ஹரதத்தனுக்குச் சோழன் என்றதுமே புதிய கவலைதான் உண்டாயிற்று. “இந்தக் கஜினிதான் இப்படிப் பாடாய் படுத்துகிறான் என்றால் அவன் வேறு இந்தச் சமயம் இங்கு வந்து குட்டையைக் குழப்புவானேன்” என்று சற்று அளவுக்கு மீறி அங்கலாய்த்தான். எனவே சினத்துடன் “அந்தச் சோழன் என்பவன் இந்நாட்டின் தென்கோடி முனையில் பேரரசனாக இருப்பவன். மிகவும் பெரியதொரு சாம்ராஜ்யாதிபதி அவன்” என்றான் கஜினியிடம். ஹரதத்தனின் ஆத்திரம் கஜினிக்கு மகிழ்வூட்டியது. “சாம்ராஜ்யாதிபதி என்றால் என்ன பொருள்?” ‘நீ நாசமாய்ப் போக’ என்று மனத்திற்குள்ளே குமுறிக் கொண்டு வாய்விட்டுச் சொன்னான். “அவன் இது வரை பதினான்கு மன்னர்களை வென்றவன். வடநாட்டில் ஆறு மன்னர்களை வென்றவன். பீஹார், மிதிலை. கோசலம், வங்கம், கலிங்கம் எல்லாம் அவன் வசப்பட்டுவிட்டது. கடல் கடந்து கிழக்கே சென்று கடாரம், காம்பூஜம், சாவகம், ஸ்ரீவிஜயம், மலையம், மாநக்கவரம் எல்லாம் வென்றவன். பல லட்சம் வீரர்கள், பல்லாயிரம் குதிரைகள், யானைகள், நூற்றுக்கு மேற்பட்ட கடலோடும் கப்பல்களைக் கொண்டவன். இன்று அவனைப் போல் ஒரு பெருமன்னன் கீழ் உலகிலேயே இல்லை!” என்றான். சட்டென்று கஜினியின் உள்ளம் பெரும் பீதியடைந்தது. எனினும் கஜினி அவனை சிறிதும் நம்பாமல் வியப்புடன் ஏன் வெறுப்பாகவும் கூடப் பார்த்தான். இந்தச் சந்தர்ப்பவாதி தன்னிடம் வேண்டுமென்றே கதை அளக்கிறான் என்று நினைத்தான். எனவே தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள உடனே ஒரு ஆளை அனுப்பி, “அறிஞர் பெருந்தகை ஆல்பரூனியை அழைத்து வா” என்று உத்தரவிட்டான். கஜினிக்கு எந்த ஒரு சந்தேகம் எழுந்தாலும் நிஜாமுதீன் என்பவரையோ, ஆல்பரூனியையோதான் அழைத்துக் கேட்பான். இந்த நிஜாமுதீன் சிறந்த வரலாற்றுத் துறை நிபுணர். ஏதேதோ கணக்குகளைப் போட்டபடி ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஆல்பரூனியைக் காவலன் ஒருவன் போய் அழைத்ததும் அவர் நிதானமாகவே எழுந்து வந்தார். ‘ஏதோ அவசியமில்லாத ஒன்றைக் கேட்கப் போகிறான். நாமும் அதற்கு விளக்கம் கூறியாக வேண்டும்! இந்தச் சோதனைக்கு ஒரு முடிவேயில்லை போலும்!’ என்று நினைத்தபடி சென்றார். ஆல்பரூனியின் முழுப் பெயர், அபுரிஹான் ஆல்பரூனி; அந்தக் காலத்தின் சிறந்த மேதை. வான சாஸ்திர நிபுணர். இந்து சாஸ்திரங்களைப் பயின்றவர். கீதையைக் கூட ஆராய்ந்தவர். கஜினியின் குண விசேஷங்களை விரும்பாதவர். ஆனாலும் அவனுடைய ஆலோசகர்களில் முக்கியமானவர். அறிஞர் ஆல்பரூனியின் முகம் களையிழந்திருப்பதைக் கண்டுவிட்டான் கஜினி முகமது! அவன் யுத்தத்தில் எவ்வளவு வேகமுள்ளவனோ அவ்வளவுக்கு சமய சந்தர்ப்பங்களை அறியும் ஊகமுள்ள ராஜ தந்திரி! எனவே இவரை நம் பக்கம் திரும்பச் செய்ய வேண்டுமானால் இவர் போக்கிலேயே அணுக வேண்டும் என்று தீர்மானித்தான்., அவரைத் தன் பக்கத்தில் அமரச் செய்தான். பிறகு குறிப்பிட்ட விஷயம் என்றில்லாமல் கால நிலை, வான நிலை, பூகோள நிலை ஆகியவை பற்றியெல்லாம் ஏதேதோ கேள்விகள் போட்டான். ஆல்பரூனிக்கு ஒரே மகிழ்ச்சி. போயும் போயும் யுத்தம், அடுத்த நாடு, அடுத்த நாசம் பற்றியே பேசித் தற்பெருமை கொள்ளும் கஜினி இன்று பொது அறிவியல் கலைகளில் ஏன் கவனம் செலுத்துகிறார் என்று யோசித்தாலும் தமக்குப் பிடித்தமான விஷயங்களைப் பேசுவதில் அவர் வெகுவாக உற்சாகம் கொள்ளலானார்! மெதுவாகச் சரித்திரக் கலையிலும் நுழைந்தான் கஜினி. ஆல்பரூனிக்கு பூகோளமும், கணக்கும் வேத சாஸ்திரங்களிலும் எவ்வளவுக்குத் தெரியுமோ அவ்வளவுக்குச் சரித்திரமும் தெரியுமாதலால் அவனுடைய கேள்விகளுக்கு மிக்க விளக்கமான பதில்களை அளிக்கலானார்! “இந்த இந்துஸ்தானத்தில் நமக்குத் தெரிந்து இரு பெரிய ஆறுகள் அதாவது கங்கையும், யமுனையும்” என்றான் கஜினி. வேறு சில ஆறுகள் உண்டு என்று அவனுக்குத் தெரியும். பாஞ்சாலத்தில் அவன் ஆடிய ஆட்டத்தின் போது அங்கு எத்தனை நதிகள் என்று தெரியுமா? தெரியும். என்றாலும் அவரிடமிருந்து உண்மை வரவேண்டுமே! கஜினி முகமதுவினுடைய பூகோள அறியாமையை அவர் கேலி செய்த வண்ணம். “இதோ பார் சுல்தான், இந்த இந்துஸ்தானம் ஆப்கனிஸ்தானம் அல்ல. இது பரந்த பூமி. இந்த இமயமலை மாதிரி விந்திய மலை என்று ஒன்று இந்நாட்டை வடபகுதியாகவும் தென் பகுதியாகவும் பிரிக்கிறது. இது உத்தர இந்துஸ்தானம் என்றால் அதை தட்சிண இந்துஸ்தானம் என்பர். இங்கே கங்கை, பிரும்மபுத்திரா, யமுனை, பஞ்ச நதிகள், நர்மதை, தபதி, மஹாநதி என்று எத்தனையோ பெரிய பெரிய நதிகள்.” “அப்பாடியோவ்! இந்த வடபகுதியிலேயே இத்தனை நதிகளா? இதனால்தான் இங்கு இவ்வளவு வளம்! நாம் எத்தனை தடவை வந்து போராடி நாசம் செய்தாலும் இங்குள்ளவர்கள் திரும்பவும் பிழைத்துக் கொள்ள இயற்கை உதவி செய்து விடுகிறது! அப்புறம் இந்நாட்டின் தென் பகுதியில் ஏதாவது இருக்கின்றனவா?” “அந்தத் தட்சிணத்தில் கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்திரை, பிநாகினி, காவேரி, பாலாறு, வைகை, தாமிரபரணி இப்படியாகப் பல நதிகள்!” என்று அவர் கூறியதும் மெய்யாகவே மிகவும் வியப்புற்றவனாகி “ஏன் இதெல்லாம் எனக்கு முன்பே தெரியவில்லை?” என்றான் படபடப்புடன். “நீ கேட்கவில்லை. நான் பிறர் கேட்காமல் எதையும் கூறுவதில்லை. ஆனால் பின்னால் பயன்படும் என்று விளக்கமாக எழுதி வைத்திருக்கிறேன்” என்றார் தன்னடக்கத்துடன். சிறிது நேரம் பேசாமலிருந்த சுல்தான் கஜினி, “உம்! ஆகவே இன்னமும் நமக்குத் தெரியாதன எத்தனையோ இருக்கிறது” என்றான். அவரும், “ஆமாம் சுல்தான். ‘நாம் கற்றது கையின் அளவு, கல்லாதது உலகளவு’ என்று அந்த தென்னாட்டின் மூதாட்டி ஒருவர் கூறியுள்ளார்!” “யார் அந்த மூதாட்டி?” “தமிழகத்தின் ஒளவைப் பிராட்டியார்!” “தமிழகமா? அது எங்கே இருக்கிறது?” “தென்னாட்டில்! தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் என்ற பெரும் நாடுகள் உண்டு” என்று கூறியதும் மீண்டும் வியப்படைந்த சுல்தான் சிறு குழந்தை போலப் பரபரப்புடன் “நீங்கள் கூறுவதைப் பார்த்தால் அந்த மூதாட்டி கூறியது முற்றிலும் உண்மை என்று ஆகிவிடும் போலிருக்கிறதே!” “ஆம். முற்றிலும் உண்மைதான். நீ ஆப்கானிஸ்தான்தான் பெரிது என்று முதலில் நினைத்தாய். பிறகு எல்லைப்புறம் தாண்டி இந்துஸ்தானத்துக்குள் நுழைந்தாய். இங்கே உனக்கு எல்லாமே அதிசயமாய் இருந்தது! காஷ்மீரை சொர்க்கம் என்றாய்! பிறகு தில்லியை இதுதான் சொர்க்கம் என்றாய். காஷ்மீரை பஞ்சாபை ஆகா! இதுவன்றோ களஞ்சியம் என்றாய். பிறகு ராஜஸ்தானத்தை மெய்யாகவே வீரபூமி என்றாய். கூர்ஜரத்தை அடாடாடா! செல்வம் கொழுத்த ஸ்தலம் என்றாய். இப்போது தென்னகம் பற்றி என்னை விசாரிக்கிறாய்! ஆனால் எந்தக் காலத்திலும் உன்னால் விந்தியம் தாண்டிச் செல்ல முடியாது” என்றார் அழுத்தந்திருத்தமாக. விருட்டென நிமிர்ந்து உட்கார்ந்தான் சுல்தான் கஜினி. உக்காவைக் கீழே வைத்துவிட்டு “இந்தக் கஜினியால் முடியாதது கூட உண்டா?” என்று இறுமாப்புடன் கேட்டான். அவரும் பிடி விடாமல், “உண்டு சுல்தான்!” என்றார் அஞ்சாமல். “விந்தியத்திற்கப்பால் ஆளும் மகாராஷ்டிரர்களைப் பற்றி நீங்கள் பெரிதாக எண்ணியிருக்கிறீர்கள்!” என்றான் துடிப்புடன். “இல்லை சுல்தான்” என்றார் மிக நிதானமாகவே. “ஏன் நீங்கள் கூட இப்படிச் சொல்லுகிறீர்கள்?” “தமிழகத்தில் சோழ சாம்ராஜ்யத்தையாளும் சோழ மாமன்னன் இருக்கிறான். அவனை இன்று வெல்ல இப்பூவுலகில் யாருமே இல்லை!” என்று சுருக்கமாகக் கூறியதும் அவன் “இவ்வளவு தற்பெருமையுள்ளவனா அவன்?” என்றான் கேலியாக. “இல்லை! உண்மையான பெருமையும், பெருமைக்குரிய தகுதியும், தகுதிக்குரிய திறமையும், திறமைக்குரிய வலுவும், வலுவுக்குரிய அனுபவமும் அதற்கு ஈடாக உன்னதமான அரசியல் அறிவும் பெற்றவன் அந்த மகா மன்னன்!” என்று வரிசையாக அவர் அடுக்கியதும் சுல்தான் மிதமிஞ்சிய ஆத்திரம், ஆச்சரியம் இரண்டும் கொண்டவனாக, “பேஷ் பேஷ்! நீங்கள் இவ்வளவு பிரமாதமாக அந்தப் பர சமயத் துரோகியை புகழ்ந்து பேசுகிறீர்களே! நீங்கள் அவனைப் பற்றிய உண்மையை எல்லாம் அறிவீர்களா?” என்று வெறிக் குரலில் கேட்டான். “அவனைப் பற்றி நான் அறிந்துள்ள விவரங்களை யெல்லாம் வேறு எவரும் அறிந்திருக்கவில்லை. ஒருக்கால் நமது நிஜாமுதீன் அங்கு சென்றவர். ஆதலால் சிறிது அதிகமாக அறிந்திருக்கலாம்! அவ்வளவுதான்! தவிர நான் புகழ்ந்து அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. ஏனெனில் இன்று எகிப்தியர், அராபியர்கள் பாரசீகர்கள் ஆகியவர்கள் வைத்துள்ள கப்பல்களைக் காட்டிலும் அதிகக் கப்பல்களை அதாவது எனக்குத் தெரிந்த வரை நூற்றி இருபது மாபெரும் கலங்களை வைத்திருப்பவன் அவன்! உலகில் இன்று அவன் வைத்துள்ள அவ்வளவு பெரிய கடற்படை வேறு எந்த மன்னரிடமும் இல்லை. கடல் கடந்த நாடுகள் நாற்பதினை... ஆமாம் உன்னுடைய ஆப்கனிஸ்தானத்தைப் போல பதினாயிரம் மடங்கு பெரிய அளவு கடல் பிரதேசத்தை அவன் வென்றிருக்கிறான்” என்று அவர் மேலும் கூறுவதற்குள் கஜினி, “அறிஞரே, நீங்கள் இந்த இந்துஸ்தானத்தைவிட சீனா அபாய நாடு என்பதை மறந்துவிட்டீர்களா?” என்று எகத்தாளமாகக் கேட்டான். ஆல்பரூனி சிரித்துவிட்டு, “நான் எதையும் மறக்கவில்லை சுல்தான். அந்த சீனா இன்று சோழனுடன் இணைந்து நின்று மதிப்பான முறையில் அவன் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதையும் நீ அறிய வேண்டும்...” என்று அவர் கூறி முடிக்கும் முன்னர், “நிறுத்துங்கள் அறிஞரே! சீனாவை நீங்கள் ஒரு கிள்ளுக் கீரையாக நினைத்தும் பேசுகிறீர்கள். நீங்கள் கூறும் இந்தச் சோழ நாட்டை அந்நாட்டின் நூற்றில் ஒரு பகுதிக்குக் கூட ஈடு கூற முடியாது” என்றான். “ஆம், இல்லையென்று நான் கூறவில்லை. ஆனால் இந்தச் சின்னஞ்சிறு நாட்டின் அரசனான இராஜேந்திர சோழன் இன்றைய உலகின் மாமன்னன் என்னும் போது, அவனுடைய பேராதரவுதான் தனக்கு தேவை என்று அந்த மாபெரும் சீனாவே நாடியிருக்கும் போது, அந்த உண்மையைக் கூற வேண்டாம் என்று என்னை நீ தடுத்தால் நான் மேலே எதுவும் பேச விரும்பவில்லை. நீயும் என்னை இனி வற்புறுத்து வேண்டாம்!” என்று பட்டெனக் கூறிச் சட்டென எழுந்ததும் சுல்தான் திடுக்கிட்டான். அறிஞரிடம் விவகாரம் செய்யக் கூடாது என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால் அவர் ஏதோ கதை மாதிரி ஒரு சுண்டைக்காய் சோழனைப் பற்றி அளந்ததும், கோபம் வராமலிருக்குமா? எனவே தன் நிலை இழந்துவிட்டான். எனினும் அவர் எழுந்த சமயம் நிஜாமுதீன் பரபரப்புடன் உள்ளே நுழைந்ததும் “அறிஞரே! ஏன் திடீரென்று கோபித்துக் கொள்ள வேண்டும். சந்தேகம் தெளிவாக வேண்டுமல்லவா? உட்காரும். நான் தவறாகப் பேசினாலும் தெளிவிக்க வேண்டியதில் குறை வைக்கலாமா?” என்று கஜினி குழைவுடன் கேட்டதும் அறிஞர் ஆல்பரூனி வேறு வழியின்றி இருக்கையில் அமர்ந்தார். நிஜாமுதீன்* இங்கு காரசாரமாக ஏதோ விவாதம் நடப்பதாகக் கேள்விப்பட்டுத்தான் வந்தவராதலால் அரசன் நிலை, அறிஞர் நிலை இரண்டையும் சட்டென ஊகித்துக் கொண்டார்.
* நிஜாமுதீன் கஜினி முகமதின் அவையில் இருந்த சிறந்ததோர் வரலாற்று வல்லுனர். இவருடைய தபகத்-இ-அக்பரி என்னும் வரலாற்றுத் தொகுப்பு அக்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய ஆதாரபூர்வமானதோர் நூலாகும். “இதோ பாரும் நிஜாமுதீன்! நாம் கேட்கும் கேள்விகளுக்கு பட்பட்டென்று பதில் வர வேண்டும்! வழவழ, கொழகொழா கூடாது. எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம். விந்திய மலை என்பது இந்தியாவை இரண்டாகப் பிரிக்கிறதா?” என்று கேட்டான். “ஆமாம்! தெற்கே தட்சிண இந்துஸ்தானம் என்ற பகுதி எவர் தலையீடுமின்றி மிக அமைதியாக இருக்கிறது!” என்று கேட்காத கேள்விக்கும் பதில் சொன்னார். “அப்படியா? அந்தத் தென் இந்தியாவில் எந்தப் பகுதி பிரபலமாகியுள்ளது?” “இன்றைய நிலையில் சோழ நாடு. அதன் அரசன் உலகத்தின் மாமன்னர்களில் ஒருவன்.” “என்னைவிடவா?” “ஆம் என்று கூற வருத்தமாகத்தான் இருக்கிறது! ஆனால் இதுவே உண்மை சுல்தான்.” “ரோம நாட்டினைவிடவா?” “ஆமாம்! பாரசீகத்தைவிட, கிரேக்கத்தைவிட ஏன் சீனாவைவிட என்றாலும் சரியே!” என்று கூறியதும் சுல்தான் முகமது வாயடைத்துப் போய் அவரை வியப்பு கலந்த வெறுப்புடன் பார்த்தான். எனினும் நீண்ட நேரம் பேசாமலேயே அவரையும் ஆல்பரூனியையும் மாறி மாறிப் பார்த்தான். அவர்கள் தன்னிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தவிர ஆல்பரூனி எந்தக் காரணம் கொண்டும் தவறான தகவல்களைக் கூறவே மாட்டார். என்றாலும் தான் இது வரை சோழன் என்ற ஒருவனைப் பற்றிக் கேள்விப்பட்டிராத போது- மகாராஷ்டிரர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான்! முரட்டு வீரர்கள். பரசமயிகள் அவர்கள் என்ற குறை ஒன்றை தவிர வேறில்லை. மாஸ்கியின் மன்னர் ஜெயசிம்மா பெரும் வீரர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறான். நேரம் கிடைத்தால் இவர்களை ஒரு கை பார்க்கவும் தயாராயிருந்தான். எனவே வாய்விட்டுக் கேட்டான்... “மகாராஷ்டிரர்களை முரட்டுச் சண்டைக்காரர்கள் என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள். தங்கள் சமயத்துக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யும் தீரர்கள் என்றும் முன்பு சொல்லியிருக்கிறீர்கள். அவர்களைவிட சோழன்...” “சோழர்களால் இன்று அவர்கள் முழுமையாக வெல்லப்பட்டுவிட்டனர்!” என்றார் ஆல்பரூனி. மீண்டும் வியப்புக் கலந்த சந்தேகத்துடன் அவரைப் பார்த்துவிட்டுப் பிறகு நிஜாமுதீனையும் நோக்கினான். ஆனால் அவர் “அதுமட்டுமில்லை சுல்தான், மாஸ்கி மன்னர் ஜெயசிம்மரும் அவனிடம் படுதோல்வி கண்டு பறந்தோடிவிட்டான்!” என்று கூறியதும் சுல்தான் கஜினி முகமதுவுக்கு மறுபடியும் ‘ஏன் இந்தச் சோழன் என்னும் சைத்தான் பேச்சைத் துவக்கினோம்’ என்றாகி விட்டது. பிறகு நைந்து போன குரலில், “நீங்கள் இருவரும் கூறுவதைப் பார்த்தால் அந்தச் சோழன் விந்தியத்துக்குக் தெற்கேயுள்ள கர்நாடகம் வென்றான், கடம்பனை வென்றான், நுளம்பரை வென்றான் என்று கூடச் சொல்லுவீர்கள் போல இருக்கிறதே?” என்று ஏளனமாகக் கூறினான். அறிஞர் ஆல்பரூனியும் நிஜாமுதீனும் வேண்டுமென்றே சோழனைத் துதிபாடத் துணிந்திருக்கிறார்களோ என்று கூடச் சந்தேகித்தான். ஆனால் நிஜாமுதீன் சிறிதும் கலக்கம் கொள்ளாமல் “அதுமட்டுமில்லை சுல்தான் சாஹேப்! வடநாட்டில் உள்ள மகதம், மாளவம், கோசலம், கலிங்கம், வங்கம், விஹாரம் ஆகிய நாடுகளையும் அந்தச் சோழன் வென்று தனது நாட்டை மிக விசாலப்படுத்தி ஒரு சாம்ராஜ்யமாக ஆண்டு வருகிறான் என்றால் நீங்கள் அதிசயப்படக் கூடும்” என்று கூறியதும் சட்டெனக் கோபத்துடன் எழுந்துவிட்டான் கஜினி. எழுந்தது மட்டுமல்ல, அங்குமிங்கும் நடைபழகினான் வேகமும் மனதில் பரபரப்பும் கொண்டவனாய். இப்போது அவனுக்குப் புரிந்து விட்டது சாம்ராஜ்யாதிபதி என்றால் என்னவென்று! துருக்கிய சுல்தான், எகிப்தியப் பேரரசன், பாரசீக மாமன்னர் போல இந்தத் தென்னாட்டான் இவர்களால் மதிக்கப்படுகிறான். அவர்கள் கூட தங்கள் தங்கள் பகுதிகளில்தான் பேரரசர். இவனோ இந்துஸ்தானத்தின் பெரும்பகுதியையும், கடல் கடந்த நாடுகளான சீனம், சீயம், சாவகம், ஸ்ரீவிஜயம் போன்ற நாடுகளிலும் தனது வெற்றிச் சாதனையால், மாமன்னனாயிருக்கிறான். “நூற்றிருபது கப்பல்கள்... என்றால் அப்பாடி!” என்று வாய்விட்டே கூறிவிட்டான்! அறிஞர் வியப்புடன் பார்த்தார். நிஜாமுதீன் திடுக்கிட்டார். சட்டென அப்படியும் இப்படியும் நடை பழகியவன் அவர்களிடம் வேகமாக வந்து நின்று “அப்படியானால் நாம் உடனே அந்தச் சோழனிடம் போர் செய்யப் புறப்பட்டால் என்ன?” என்று கேட்டதும் அறிஞர் பதில் கூறவில்லை. நிஜாமுதீன் கூட தனது பதில் ஏதாவது விபரீதக் கருத்தை உண்டாக்கிவிடும் என்று அஞ்சி மவுனமானார். ஆனால் சுல்தான் மனம் எவ்வகையில் ஓடுகிறது என்பதை அவர்கள் ஊகிக்க முயன்றனர். அச்சமயம் அங்கே பரபரப்புடன் வந்த கஜினி முகமதின் குமாரனான மசூத் தன் தந்தையை நோக்கி “அப்படி செய்தோமானால் நாம் தற்கொலை செய்து கொள்ளத் துடிப்பவர்கள் ஆவோம்!” என்று இரைந்த குரலில் முழங்கியதும், முகமது அவனை மேலே விழுந்து விழுங்குபவனைப் போலப் பார்த்தான். தன் மகன் அநாவசியமாக பேசுபவனும் அல்ல! முட்டாளும் அல்ல. எதையும் சிந்தனை செய்த பிறகே பேசுவான் என்பதை அறிந்த முகமது, “ஏன் இப்படிக் கூறுகிறாய் நீ? அந்த சோழனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? நீ பரசமயிகளை வெறுப்பவன் ஆயிற்றே!” என்றான் ஆத்திரத்தை அடக்கியபடி. “ஆமாம்! நான் பரசமயிகளை விரும்புபவனில்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரு பரசமயி நம்மைக் காட்டிலும் வலுவானவன், மிக்க திறமைசாலி, மகா தந்திரி என்றால் அதை மதிப்பவனுங்கூட!” என்றான். “அந்தச் சோழன் என்ன அவ்வளவு பெரிய வீரனா?” “இல்லாவிட்டால் இந்த இந்துஸ்தானத்தை, அந்த மாபெரும் கீழைக்கடல் நாடுகளையெல்லாம் வென்று ஆள முடியுமா?” “இன்னும் என்னை அவன் வெல்லவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை!” “நீங்கள் அவனுடன் இதுவரை மோதச் சந்தர்ப்பமில்லை. மோதினால் நாம் தீர்ந்திருப்போம். இப்போது அவனே நம்மிடம் ஒரு தூதுவனை அனுப்பியிருக்கிறானாம்.” “தூதுவன் வருகிறான் என்றால் என்னிடம் கெஞ்சிக் கூத்தாடி, தன்னை எதுவும் செய்ய வேண்டாம். அதாவது விந்திய மலையைத் தாண்டி வந்துவிட வேண்டாம். எது வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருக்கிறேன் என்று மண்டியிட்டுக் குலாம் போடவும் வரலாமில்லையா?” “அப்படி வந்தால் நாம் மிகவும் பெருமை மட்டும் அல்ல, நிம்மதியும் கொள்ளலாம். நான் இத்தகைய தூது வருவதையே விரும்புவேன்” என்றார் நிஜாமுதீன். ஆனால் ஆல்பரூனியோ அவருடைய சீடனான புத்திமான் மசூதோ அப்படிக் கூறவில்லை.. தன்னைத் திருப்திப்படுத்தவே நிஜாமுதீன் இப்படிக் கூறுகிறார் என்பதை சுல்தான் புரிந்து கொண்டாலும் ரோசத்துடன் மகனைப் பார்த்தார். “எனக்கு இது பெரிதும் வியப்பூட்டுகிறது என்பதைத் தவிர இப்போதைக்கு கருத்து எதுவும் கூறத் தோன்றவில்லை!” என்றான் மசூத். “நானும் அந்தத் தூதுவன் வரும் வரை, நம்முடன் அவன் பேசும் வரை எந்த ஒரு கருத்தையும் கூற விரும்பவில்லை” என்றார் ஆல்பரூனி. ஆனால் சுல்தான் சற்றே பொறுமையிழந்துவிட்டான். “நான் அவனைச் சந்திக்க மறுத்துவிட்டால்..” “நாம் பயம் கொள்ளிகள் என்று அவன் முடிவு செய்ய சந்தர்ப்பம் தரக்கூடாது!” “கைது செய்துவிட்டால்!” “கேவலம் ஒரு தூதுவனிடம் முட்டாள்களாக நடந்து கொண்டதாக ஏச்சு ஏற்படுவதையும் விரும்பவில்லை!” என்றான் மசூத் நிதானமாக. சுல்தான் முகமது, மகனை வெறுப்புடன் பார்த்துவிட்டு உடன் ஆல்பரூனியை நோக்கினான். பிறகு தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டே “அறிஞரே! நீங்கள் இவனைப் புத்திசாலியாக்கி விட்டீர்கள் என்பது உண்மைதான். ஆனால், அதே சமயத்தில் கோழையாகவும் ஆக்கிவிட்டீர்களோ என்று சந்தேகிக்கிறேன்!” என்றான். ஆல்பரூனி இலேசாகப் புன்னகை செய்துவிட்டு, “வீரன் கோழையாவதில்லை, புத்திசாலி ஏமாளியாக்கப் படுவதில்லை என்ற பழமொழி நம் ஊரில் வழங்குகிறது. அத்துடன் தைரியசாலி எது நேரினும் மனோதிடத்தைக் கைவிடுவதில்லை என்பதையும் சேர்த்துக் கொள்வது உங்களுக்குப் பிடிக்கா விட்டாலும் இந்த மேற்கோள் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ளது” என்றார். கஜினி ஒரு துள்ளுத் துள்ளி, “நீங்கள் ஆராய்வதுடன் நிற்கலாகாதா? என் மகனுக்குமா இதையெல்லாம் உபதேசிக்க வேண்டும்?” என்று கத்திவிட்டுச் சட்டென அப்பால் சென்று விட்டான். மசூத் உதட்டைப் பிதுக்கியபடி, “ஆசிரியப் பெருந்தகையே! ஆத்திரக்காரருக்குப் புத்தி மட்டு! எனவே பொறுத்துதான் மாற்ற வேண்டும்!” என்றான். ஆனால் நிஜாமுதீன் சிறிதும் பதறாமல், “இல்லை மசூத்! இன்று வெற்றி நமக்குத்தான்! அந்தச் சோழ தூதுவரை சுல்தான் மறுக்காமல் சந்திப்பார் என்பது உறுதி!” என்றார் அழுத்தமாக. மசூத் வியப்புற்று “எதைக் கொண்டு இதைக் கூறுகிறீர்கள்? அவர் ஆத்திரப் பேச்சு இதற்கு மாறாகவல்லவா கருதும்படி செய்கிறது” என்றான். ஆல்பரூனி சொன்னார்: “மசூத், நிஜாமுதீன் கூறியதுதான் சரி. நம்மைவிட ஒரு பெரும் வீரனா என்று முதலில் வேகம், பிறகு இவ்வளவு திறமையும் பெருமையும் வாய்ந்தவனா அந்த சோழன் என்ற சிந்தனை. ஒருவர் ஆதரவாகப் பேசலாம். இன்னொருவர் எதிர்க்கலாம். ஆனால் இந்த மூவருமே அவனை ஏற்றிப் போற்றிப் பேசுவதால் ஏதோ உண்மையில்லாமலிருக்க முடியாது. முதலில் அந்த தூதுவன் வரட்டும். அவனைக் கொண்டே அவன் எசமான் எப்படியிருப்பான் என்பதை ஊகித்து விடலாம் என்று எண்ணவும் செய்யலாம். எனவே இந்த மூன்றும் கூடி அவரை உண்மையில் ஆவல் கொள்ளவே செய்திருக்கிறது!” என்று விளக்கினார்! உண்மையிலேயே கஜினி முகமது, தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் சோழ தூதனைச் சந்திப்பது என்று முடிவு செய்து விட்டான். ஆனால் மறுநாள் அந்தத் தூதனை அவன் சந்தித்துப் பேசும் முன் நிகழ்ந்த சம்பவம் இருக்கிறதே, அது அவன் வாழ்நாளிலே அது வரை நடந்திராத ஓர் அதிசயம்! ராஜ மோகினி : ஆசிரியர் உரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|