விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

10

     நீண்ட காலம் நாம் சோழ நாட்டிலேயே இருந்துவிட்டோம். மீண்டும் நமது பழைய நண்பர்களான ஜகன்னாதன், வக்ரபதி அவர்களிடம் சிக்கியுள்ள பூங்கொடி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? தவிர கடுங்கோன் ஏதோ ஒரு முறைதானே நம் எதிரில் வந்தான். அதாவது வீரசோழன் எதிரில். அவன் இப்போது என்ன செய்கிறான் என்று சிறிது ஆராய வேண்டாமா? அவன் மட்டுமா, அவனுடைய நண்பனும் வீர காலிங்கராயர் மகனுமான மாவலியும் சேர்ந்து என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.

     கடுங்கோன் பயங்கரமான தோற்றமுடையவன் என்றால் மாவலி சற்றுச் சிவந்த கவர்ச்சித் தோற்றம் வாய்ந்த வீரன் என்று கூறலாம். கடுங்கோன் முன்கோபி. மாவலிக்குக் கோபம் இலேசில் வராது. வந்தால் உடனே போகாது. கடுங்கோன் தடாலடிப் பேர்வழி, தந்திரக்காரனல்ல. மாவலி மகா தந்திரக்காரன். தடலாடி சமாசாரமே கிடையாது இவனிடம். முன்னவனுக்கு இங்கிதம் என்றால் என்னவென்றே தெரியாது. பின்னவன் இங்கிதமே உருவானவன். மொத்தத்தில் ஒருவன் வடதுருவம் என்றால் இன்னொருவன் தென்துருவம். ஆனால் இதில் பேரதிசயம் என்னவென்றால் இவர்கள் அருமை நண்பர்கள். அதாவது சோழ நாட்டார் இவர்களை இரட்டையர் என்றே அழைப்பர். போதுமா?

     இந்த இரட்டையர் வீரசோழனிடம் அனுமதி பெற்றுக் கலிங்கம் நோக்கிப் புறப்பட்டார்கள். எப்படி?

     நீண்ட காலம் வைத்திய சிகிச்சை பெற்று வந்தவனாதலால் கடுங்கோன் தாடி மீசை வளர்ந்திருந்ததல்லவா. அதில் பழுப்பு வெள்ளைச்சாயம் ஒன்றைப் பூசிக் கொண்டான். தலையிலும் வெள்ளை, இடதுகால் இன்னமும் காயத்துடன் ஆறாமலிருந்ததால் அதை நொண்டி நடக்கப் பழக்கிக் கொண்டான். இவனுடைய தோழனான மாவலி, பாவம்! மீசையை எடுத்துவிட்டான். வழவழவென்ற முகம்... கழுத்தில் ஏதோ ஒரு மணிமாலை. கையில் கடகம் போன்ற காப்பு. காதில் கடுக்கன்கள், இரு தோளிலும் இரு நீண்ட தோல் பேழைகள்.

     இவர்களைப் பார்த்தால் அசல் கொங்கு நாட்டு நகை வியாபாரிகள் போலத் தோற்றம். இருவரும் பல ஆண்டுகள் தெலுங்கு பேசுவோரிடையே இருந்தால் அதைத் தற்காலிகமாக தாய்மொழியாகக் கொண்டவர்களாக மாறிவிட்டனர். மூன்று தினங்கள் பயணத்துக்குப் பிறகு கலிங்க நாட்டெல்லைக்குள் போய்விட்டனர். எல்லா நாடுகளிலும் வணிகர்கள் என்றால் மக்கள் நெருங்கியே பழகுவர். அதுவும் நகை வியாபாரிகள் என்றால் கொஞ்சம் கூடிய மதிப்பில்லையா? கடுங்கோன் தன் பெயரை வைசியமணி என்றும் மாவலி பெயரை வைசியமித்திரன் என்றும் வைத்துக் கொண்டான். நொண்டியான வைசியமணி ஒரு கையில் தடி தாங்கி ஊன்றி நடக்க, அவனிடம் சுமை இல்லை. மித்திரனிடம் சுமை உண்டு. ஏறக்குறைய ஒரு பெண் முகத்தைப் போல இருந்தது அவன் முகம். ஆனால் அவன் சிரித்துச் சிரித்த “ஏமண்டி பாவா” என்று நீட்டி முழக்கியதை மற்றவர்கள் வெகுவாக ரசித்தார்கள். ஆனால் கடுங்கோனோ “கடவுளே! விமோசனமில்லையா?” என்று துடிப்பான்.

     கலிங்கத்தின் தலைநகரில் இவர்கள் நுழைந்த போது ஏராள நகைகள் வியாபாரத்துக்காக இருந்தன. அவை விற்பனையாகாமல் பார்த்துக் கொள்ளுவதில் இருவரும் கருத்தாயிருந்தார்கள். ஏழெட்டு தினங்கள் ஊரைச் சுற்றியும் ஒரு பலனும் இல்லை.

     கடுங்கோன் சொன்னான். “எவனோ ஒருத்தன் ஊசியை மணலில் போட்டுவிட்டுத் தேடினானாமே? அது போல நாம் தேடினால் ஒரு பயனும் இல்லை. நாம் சிதம்பரத்தில் அன்று தூங்கிய போது வந்தவர்களை அதாவது பூங்கொடியைக் கவர்ந்து சென்றவர்களைப் பார்க்கவில்லை. முகமும் தெரியாது. எதுவுமே தெரியாமல் தூங்கித் தொலைத்தோமே” என்று நொந்து கொண்டான்.

     “கொஞ்சம் நிறுத்தப்பா. ஏன் என்னையும் சேர்த்துக் கொள்கிறாய் உன்னுடைய தூங்கு மூஞ்சி வேலையில்? நீயும் உன் தங்கையும்தான் பாடலி சென்றுவிட்டு இருட்டிவிட்டது என்று சத்திரத்தில் தங்கினீர்களேயன்றி நான் இல்லை. கொல்லத்திலிருந்து என்னை ஏன் தூங்குமூஞ்சி என்று...”

     “இல்லை... இல்லை. மன்னித்துவிடப்பா. ஏதோ நினைவில் சொல்லிவிட்டேன். இப்பொழுது இங்கு நாம் என்ன செய்வது? ஒன்றுமே புரியவில்லையே. ஏதாவது ஒரு தந்திரம் சொல்லித் தொலையேன். நீதான் தந்திரக்காரனாயிற்றே” என்று கெஞ்சுவது போலக் கூறியதும், அவன் ஏதோ யோசிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டு கண்களை மூடினான். பிறகு வாயைத் திறந்தான்.

     “ஒரு பிரமாதமான யோசனை வந்துவிட்டது” என்று குதித்தெழுந்தான் அவன். கடுங்கோன் அப்படியொன்றும் குதிக்கவில்லை. நண்பன் புத்திசாலி என்பதில் அவனுக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் அவன் தந்திர யோசனைகள் சோழ நாட்டில் செலாவணியாகலாம். இங்கு...

     “நேராகக் கோயிலுக்குப் போவது. அங்குள்ள சுவாமிக்கு நாம் ஒரு அர்ச்சனை செய்வது பிரமாதமாக. பிரசாதங்களை விநியோகிக்கும் போது இல்லை இல்லை! பிரசாதங்களை விநியோகிக்கும் முன் அங்கு கூடும் கூட்டத்துக்கு நாம் ஒரு விண்ணப்பம் செய்வோம். யாரோ ஒரு பெரிய மனிதர் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு நகைகளை வாங்கிச் சென்றார். அவர் எழுதிய கடிதப்படி வந்தால் உரிய தொகை தரப்படும் என்று கூறிப் போனார். நம்பினோம். ஆனால் கடிதத்தில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் புரியவில்லை. தயவு செய்து இங்கு யாராவது இக்கடிதத்தைப் படித்துச் சொன்னால் பத்து வராகன் இனாம் என்போம். எல்லாரும் ஓடி வந்தாலும் வரலாம். ஆனால் கடிதம் தமிழில் எழுதப்பட்டிருக்கும்” என்றான்.

     கடுங்கோன் சற்றே யோசித்தான். ‘வேறு எதுவுமே தோன்றாத போது இதைத்தான் சோதித்தால் என்ன? தவிர கலிங்கத்தில் நிலவும் பஞ்சத்தைப் பார்த்தால் இந்த வராகன்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போலிருக்கிறது? முயற்சித்தால் என்ன?’

     ஆலயத்தில் அமர்க்களமாகப் பூசை. ஏகக் கூட்டம். பிரசாதம் கிடைக்கும் என்று தெரிந்ததும் பெரிய மனித தோரணையிலிருந்தவர் கூடக் கூடிவிட்டனர்.

     மித்திரன் தெலுங்கு மொழியில் அறிவிப்பு செய்தான் கடிதம் பற்றி. எதிர்பார்த்தது நடந்தது.

     முண்டியடித்துக் கொண்டு பலர் வந்தனர் கடிதத்தைப் படிக்க. அடக்கஷ்டமே! அருவா மொழியில் அல்லவா எழுதப்பட்டுள்ளது. உதட்டைப் பிதுக்கிவிட்டு அவர்களைத் திட்டிவிட்டு அப்பால் போயினர்.

     பிரசாதம் கிடைக்குமா என்ற கவலையில் பலர் அங்கிருந்து நகராமலே சுற்றினர். மேலும் சிலர் அக்கடிதத்தை வாங்கிப் பார்த்தனர். அவர்களில் வக்கிரபதியும் ஒருவன்.

     கடிதத்தையும் அவர்களையும் மாறி மாறிப் பார்த்தான். பிறகு தெலுங்கில் அவர்களிடம் “இக்கடிதம் கொடுத்தது யார்?” என்று கேட்டான்.

     கடிதத்தில் இருப்பதாகக் கூறினான் மித்திரன்.

     “சரி, என்னுடன் வாருங்கள்” என்று அழைத்தான்.

     உடனே பூசாரியிடம் பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிக்கும்படி சொல்லிவிட்டு அவனைத் தொடர்ந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அவன் நேராக ஜகன்னாதனிடம் சென்றான்.

     அவன் சற்று நேரத்துக்கு முன்னர்தான் அந்த வாயாடிப் பூங்கொடியுடன் மன்றாடிவிட்டு வெளியே வந்திருக்கிறான். அவன் அந்தப் பேய்மகளை ‘படாதபாடு பட வைக்கிறாயோ’ என்று மிரட்டினால் இதோ நஞ்சு என்று வாயிடம் கொண்டு போகிறாள். பரப்பிரும்மமோ ‘அவள் உயிர்தான் நமக்கு உயிர்’ என்று எச்சரிக்கிறார். இந்தத் தருமசங்கடப் பிரச்னையில் சிக்கிக் கொண்டுவிட்டோமே... தவிர சோழ நாட்டில் பெண்களைக் கவர்ந்தால் மரணதண்டனை... அதுவும்... சித்திரவதையாமே...

     பயந்து கொண்டே வீதிக்கு வந்தவன் எதிரே வக்கிரபதி இரண்டு வணிகர்களையும் கொண்டு நிறுத்தினான்.

     ஜகன்னாதன் “இதென்ன வக்கிரா? இவர்கள் யார்? வணிகர்களுக்கு நம்மிடம் என்ன வேலை... துரத்திவிட்டு வா. நமக்கு ஏகப்பட்ட வேலைகள் காத்திருக்கின்றன” என்றான்.

     “இல்லை தலைவரே, இவர்கள் இருவரும் தெலுங்கர்கள்.”

     “அதுதான் தெரிகிறதே, தாசரி மாதிரி அவன் இருக்கிறானே.”

     “நகைகளை வியாபாரம் செய்கிறார்கள்...”

     “செய்யட்டும், அந்தப் பயலைப் பார்த்தாலே பெண் மாதிரிதான் இருக்கிறது. பெண்கள் இருக்குமிடம் போய்த் தொலையட்டும்.”

     “இவர்களிடம் ஒரு கடிதம் இருக்கிறது.”

     “யாருக்கு?”

     “அதுதான் புரியவில்லை.”

     “புரியாது போனால் தொலையட்டுமே.”

     “அது தமிழ் மொழியில் இருக்கிறது.”

     ஜகன்னாதன் சட்டெனப் பதறிக் கேட்டான். “என்ன... தமிழ்க் கடிதமா? எங்கே அது...? முதலில் இவர்கள் இருவரையும் பிடித்துக் கட்டு... உம்...”

     வைசியமித்திரன் நடுநடுங்கிவிட்டான். அதாவது அது மாதிரியே நடித்தான். கடுங்கோன் நடிக்க விரும்பவில்லை. ஆனால் விழித்தான்.

     ஜகன்னாதன் அந்த விழிகளைப் பார்த்துவிட்டு இவன் ஏன் இப்படிப் பயங்கரமாக விழிக்கிறான்! என்று வியந்தாலும் மித்திரன் நீட்டிய கடிதத்தைப் பிடுங்குவது போலவே வாங்கிக் கொண்டான்.

     மின்னல் வேகத்தில் வீதியைத் தாண்டி ஓடினான். அப்புறம் கடுங்கோன் அவன் எங்கு நுழைந்தான் என்று புரியாது விழித்தான். பரிதாபமாக விழித்த கடுங்கோன் உதட்டைப் பிதுக்கியபடி திண்ணையில் உட்கார்ந்துவிட்டான்.

     மாவலி தலையைச் சொறிந்து கொண்டான். அடுத்த வீதியில் ஏதோ ஒரு வீடு. அங்குதான் அவள் இருக்க வேண்டும். ஆனால் அது எந்த வீடு?

     பூங்கொடி திரும்பவும் ஜகன்னாதன் வந்ததைக் கண்டு, ஏ... பேய் மகனே!” என்று கத்திவிட்டுத் தன் வழக்கமான ஆயுதத்தை எடுத்துவிட்டாள்.

     “பெண்ணே! கொஞ்சம் இரு... இதோ தமிழ்... ஒரு தமிழ்” என்று உளறினான் ஜகன்னாதன்.

     சட்டென ஆயுதத்தைக் கீழே போட்டாள். தமிழ் என்றதும் மலர்ந்த முகத்துடன் “என்ன உளறுகிறாய்?” என்று பொருமினாள்.

     “ஒரு கடிதம், அது தமிழில் இருக்கிறது. தயவு செய்து படித்துச் சொல்ல வேண்டும்... அவ்வளவுதான். கோபப்படாமல் இதைப் படித்துக் கூறு தாயே!” என்று கூறியபடி நீட்டினான் அதை.

     பூங்கொடி வாங்கினாள்... பிரித்தாள்... படித்தாள். உடனே சிரித்தாள்... அதுவும் பயங்கரமான சிரிப்பல்ல. பெரும் அவுட்டுச் சிரிப்பு...

     “முட்டாள்! ஏமாளி! மடையர்! மக்குகள்! ஜடங்கள்!”

     ஜகன்னாதன் பயந்துவிட்டான். பைத்தியம் வேறு பிடித்துவிட்டதா இந்தச் சண்டிக்கு... அல்லது கடிதம்தான்...

     ஆனால் அவள் சட்டென சிரிப்பை நிறுத்தி, “இந்தக் கடிதம் யார் யாருக்கு எழுதியது?” என்று கேட்டதும், நல்ல காலம் இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை என்று தெளிந்தவன் “நீ கேட்பதையெல்லாம் கடிதம்தான் கூற வேண்டும்” என்றான்.

     “இதில் ஒரு முட்டாள் ஒரு மூடன் என்று எழுதியிருக்கிறது.”

     “ஆமாம். முட்டாள் என்பவன் நொண்டி, மூடன் என்பவன் மொட்டை” என்றான். பிறகு ஆவலுடன் அவளைப் பார்த்தான் மேலே சொல்லுவாள் என்று.

     “கடிதத்தில் இருந்ததெல்லாம் இதுதான்... ‘ஊனமான காலும் உன்மத்தப் பார்வையும் உள்ள முட்டாள் வணிகனும் பெண்ணைப் போலத் தோற்றமளித்துச் சிரிக்கும் மூட வணிகனும் எனக்கு விற்ற நகைக்காகக் கொடுத்த இக்கடிதப்படி, எந்த மடையனாவது நூறு வராகன்களை இவர்களிடம் சேர்த்துத் தானும் ஒரு மக்குதான் என்பதை நிரூபிக்கட்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது.

     வாய்விட்டுப் படித்தாள் சற்றும் தயங்காமல் பூங்கொடி. வந்ததே ஆத்திரம் ஜகன்னாதனுக்கு!

     “அப்படியா? நம்மை முட்டாளாக்கிய அவன் பெயர் அக்கடிதத்தில் இருக்கிறதா?” என்று கேட்டான்.

     “இதை எழுதியவன் புத்திசாலியாயிற்றே. எப்படிக் கையெழுத்துப் போடுவான்?” என்று அவள் கேலியாகக் கேட்டதும், “சரி, சரி, அந்தக் கடிதத்தைக் கொடு... அந்த ஆந்தை விழியனை...”

     “ஆந்தை விழியனா... ஏதோ நொண்டி என்றல்லவா எழுதியிருக்கிறது” என்று தன் மனதில் எழுந்த சந்தேகத்தை மிக ஜாக்கிரதையாக அடக்கிக் கொண்டு கேட்டாள் பூங்கொடி.

     “ஆமாம் பெண்ணே! அந்த நொண்டி விழிப்பதைப் பார்த்தால் ஆந்தையைக் காட்டிலும் பயங்கரமாக இருக்கிறது” என்றதும், பூங்கொடி ‘அப்படியா...! இதில் ஏதோ சூது இருக்கிறது’ என்று முடிவு செய்து, “அந்த இரண்டு பேரும் எந்த ஊர்?” என்று கேட்டாள்.

     “தெரியவில்லை. ஆனால் தெலுங்கு பேசுகிறார்கள். தாசரி மாதிரி இருக்கிறான் ஒருத்தன்” என்றான் ஜகன்னாதன்.

     இந்தச் சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்று எண்ணிய பூங்கொடி “நீங்கள் ஒன்று செய்தால் என்ன? இந்தக் கடிதத்தை எழுதியவன் ஒரு பலே ஆள்தான். அவனை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இவர்கள் மூலம்தான் முடியும். எனவே இவர்களைப் பிடித்து விசாரித்தால்.. அதாவது நாம் நகை வாங்க முயலுவது மாதிரி ஒரு நாடகம் போட்டு இங்கே என்னை அடைத்திருப்பதைப் போல...”

     “சேச்சே! அவர்கள் நமக்கு என்ன தவறு செய்தார்கள்?”

     “ஏன்? நான் மட்டும் உங்களுக்கு என்ன தவறு செய்தேனாம்?”

     “நீ சோழ நாட்டுப் பெண், எங்கள் பகை மகள்...”

     “நானா உங்களைப் பகைத்து வம்பு செய்தேன்? நன்றாக தூங்கியவளை கொண்டுவந்து அக்கிரமம் செய்தது நீங்களா? நானா?”

     “சரி சரி. இந்தத் தெலுங்கு வியாபாரிகள் பற்றிப் பேசு...”

     “பேசுவதற்கென்ன இருக்கிறது? நீங்கள் நம்பாத போது எனக்கு மட்டும் என்ன? இதோ கடிதம். முட்டாள், மூடன், மட்டி, மடையன் எல்லாம் போய்க் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு அவள் அப்பால் நகர்ந்ததும் ஜகன்னாதன் எதுவுமே புரியாமல் அங்கிருந்து வெளியே வந்து வணிகரிடம் சென்றான்.

     வக்கிரபதி “என்ன ஆயிற்று என்று கேட்டான்?”

     “முதலில் இவர்களை நாம் கொண்டு போய் உன்னுடைய வீட்டில் சிறைப்படுத்துகிறோம்” என்றான் ஜகன்னாதன்.

     அவன் திகைப்பதற்குள் பதறிய வைசியமித்திரன் “ஐயோ தேவுடா! நாங்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். நகையை கொடுத்து ஏமாந்தவர்கள். இப்படி செய்யும்படி கூறுகிறதா அந்தக் கடிதம்? பாவி கெடுத்தானே...” என்று ஓலமிட்டான்.

     அவர்கள் கதறல் தாங்காத வக்கிரபதி “நாம் இவர்களைச் சிறை செய்ய வேண்டாம். அவர்கள் கருமிச் செட்டிகள். நகைகளுக்குப் பணம் கிடைக்கும் வரை எங்கும் போகமாட்டார்கள். இவர்களால் போகவும் முடியாது. இதோ பார். ஏ... நொண்டி, இப்படிக் கொடு அந்தத் தடியை” என்று வெடுக்கெனப் பிடுங்க அவன் குய்யோ முறையோ என்று கதற, வக்கிரன் சிரித்துக் கொண்டே “வாரும் தலைவரே போகலாம். நாம் இனி இவர்களைப் பாதுகாக்கத் தேவையில்லை?” என்று புறப்பட்டான் அவன்.

     ஜகன்னாதன் மட்டும் சிறிது நேரம் என்ன செய்வதென்று புரியாமல் தயங்கினான். இவர்களைப் பற்றிய உண்மை தெரிந்தாக வேண்டுமே என்ற கவலை. உண்மையில் இவர்கள் தெலுங்கு நாட்டு வணிகர்களாக இருந்தால் எந்தக் கவலையும் இல்லை. மாறாக இவர்கள் பகைவர்களின் ஆளாக இருந்துவிட்டால்...

     மீண்டும் கடுங்கோனைப் பார்த்தான் உன்னிப்பாக. அவனோ தெலுங்கில் கண்டபடி திட்டினான். தொலைவில் போய் நிற்கும் வக்கிரபதியையும் ஏசினான். மாவலி ஒரு பெண் பிள்ளை போல அழுதான்.

     “அயல் நாட்டுக்கு வராதே என்று கெஞ்சினேனே. கேட்டாயா... எவனோ தடியன் வந்தான் ஏமாந்தோம். இவர்களிடம் உதவி கேட்டோம். உள்ளதும் போச்சு... ஏ... தேவுடா!” என்று புலம்பினான்.

     நிச்சயமாக இவர்கள் எதிரிகள் அல்ல. சோழ வீரர்கள் செத்தாலும் இப்படிப் புலம்ப மாட்டார்கள். உண்மையிலேயே ஏமாந்து விட்டார்கள் பாவம்!

     வக்கிரனைச் சைகை செய்து அழைத்தான். அவனும் வேண்டாவெறுப்பாக திரும்பி வந்தான்.

     “நாம் இவர்களை ஏமாற்றியவனைக் கண்டுபிடித்து இவர்களுக்கு உதவ வேண்டும்” என்றான்.

     மித்திரன் சட்டென அழுகையை நிறுத்தி “எங்களால் ஆன பொன்னையும் கொடுக்கிறோம்” என்றான்.

     ஜகன்னாதன் சிரித்தான். வக்கிரன் சிரிக்கவில்லை. ஆசை யாரைத்தான்விட்டது.

     “சரி தலைவரே, இவர்களை என் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன்” என்றான் சட்டென்று.

     மித்திரன் துள்ளி எழுந்தான். ஆனால் பதி நொண்டியில்லையா? தோழனின் தோளைப் பிடித்துக் கொண்டு எழுந்தானானாலும் நடக்க முடியவில்லையே. வேறு வழியில்லை. தடியைக் கொடுத்தான் வக்கிரன் அவனிடம்.

     ஜகன்னாதன் வக்கிரனிடம் ஏதோ சொன்னான். மித்திரன் காதில் ‘நீலம்’ என்ற வார்த்தை மட்டும் விழுந்தது. கடுங்கோனைப் பார்த்தான். ஆனால் அவன் கண்கள் வீதியைப் பார்த்தன.

     மூவரும் நடந்தார்கள். ஜகன்னாதன் இயற்கையில் கெட்டவன் அல்ல. அரச குடும்பத்தினன்தான். ஆயினும் இந்த நொண்டி எவ்வளவு கஷ்டப்பட்டு நடந்து இந்த நாட்டுக்கு வியாபாரம் செய்ய வந்திருப்பான். பாவம்! இவர்களை எவனோ வஞ்சித்திருக்கிறானே... அவன் நிச்சயம் ஒரு தமிழனாகத்தான் இருக்க வேண்டும். அவன் யார்?

     வக்கிரன் போய்த் திரும்புவதற்குள் தலைநகரில் உள்ள தமிழர்களையெல்லாம் எண்ணிப் பார்த்தான்.

     ‘நூறு பேர்கள்தான் இருப்பர். அவர்களில் மிகப் பெரும்பாலோர் கோயிலில் வேலை செய்பவர். பரம ஏழைகள். எல்லையில் இருக்கும் ஏராளமான தமிழர் படையினரில் எவரும் எல்லை தாண்டி இங்கே வர முடியாது. எனவே இங்கேயுள்ள ஒரு நூற்றுவரில் எவனோ ஒன்றிரண்டு பேர்கள் சிறிதே வசதியுள்ளவர்கள். அவர்களில் ஒருவன் ஜகன்னாதர் ஆலயத்தில் பெரிய பூசாரி... இன்னொருவன் கோநகர்ச்சூரியன் கோயில் பூசாரி... தமிழ்ப் பயிற்றுவிக்கும் புலவர் தமிழ்வேள் எந்த வம்புக்கும் வரமாட்டார். தவிர நம் குருநாதருக்கு வேண்டியவர் அவர். எஞ்சி நிற்பவர் சிற்பி கனகன், ஓவியன் உதயன், பாடகன் பரணன், ஓ...! கோநகர் போகும் வழியில் பெரும் மாளிகையொன்று அமைத்துக் கொண்டு இருக்கும் மாதேவநாயகன் ஒருவன் இருக்கிறான்... ஆ...! அவனிடம் ஏழெட்டு தமிழ் வேலையாட்கள்... நல்ல ஆடையணிகளும் நேர்த்தியான தோற்றமும் கொண்ட அவர்கள் பிரபுக்களாகத்தான் இருக்க முடியும். அவர்களில் ஒருவனாக இந்த ஏமாற்றியவன் இருக்கலாமல்லவா?

     மாதேவநாயகன் நான் பிறக்கும் முன்பே இந்நாட்டிற்கு வந்த தமிழ் நாட்டார். நம் குருநாதன் அடிக்கடி இவனுடைய மாளிகைச் சென்று வருவதுண்டு. இதுவரை நடந்த சோழ கலிங்கப் போர்களில் இவன் நடுநிலை வகித்தவன். சோழ இளவரசன் ஒரு முறைக்குப் பல முறையாக விரட்டியும் கூட நமக்கு விரோதமாக மாறாதவன். எனவே சட்டென சந்தேகம் கொண்டு விடுவதற்கில்லை. எனினும் சட்டென ஒதுக்கி விடுவதற்கும் இல்லை.’

     இப்படி இவன் சிந்தித்த சமயம் தன் வீடு சென்று திரும்பிவிட்டான் வக்கிரன்.

     “அவர்கள் பாவம்! வெறும் அப்பாவிகள் தலைவரே. என் மனைவியைக் கண்டதும் நடுநடுங்கி ஓடிவந்து விட்டான் மித்திரன். நொண்டி உள்ளேயே செல்லப் பயந்தான்” என்றதும் ஜகன்னாதன் வாய்விட்டு சிரித்துவிட்டான்.

     “அதனால்தான் உன்னுடைய வீட்டுக்கு அழைத்துப்போ என்றேன். நீ ஒவ்வொரு நாளும் அவளிடம் பயந்து சாவது போதாதென்று இவர்களும் சேர்ந்திருக்கிறார்கள் பாவம்!” என்றான்.

     வக்கிரன் வெட்கப்படாமல் “என்ன செய்வது தலைவரே? என் தலைவிதி. எனக்கு ஒரு பெண்ணுக்குப் பதிலாக அரக்கியைக் கொண்டு வந்து மனைவி என்று கட்டி வைத்து விட்டார்கள் பெரியவர்கள். அவர்கள் நாசமாய்ப் போக... போய்விட்டார்களே... அகப்பட்டுக் கொண்டவன் நான் அல்லவா? இந்த பதினைந்து ஆண்டுகளும் நான் குடும்பம் என்னும் நரகத்தில்தான் தவியாய்த் தவித்துப் படாதபாடு படுகிறேன்” என்று மனம் குமுறி சொன்னான் வக்கிரன்.

     ஜகன்னாதன் மேலும் இந்த பேச்சை வளரவிடாமல் “சரி வக்கிரா, முதலில் நாம் இருவரும் கோநகரம் புறப்படுகிறோம். குதிரைகள் தயாராகட்டும்” என்று கூறியதும் அவன் சட்டென அப்பால் நகர்ந்தான்.

     ஜகன்னாதன் சுற்று முற்றும் ஒருதரம் பார்த்துவிட்டு பூங்கொடி சிறை வைக்கப்பட்டிருக்கும் வீட்டினை ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டுச் சட்டெனத் திரும்பினான்.

     ஆனால் நொண்டி வைசியபதி அவனைத் தொடர்ந்து திரும்பு முனைவரை திரும்பியதை அவன் கவனிக்கவில்லை. திரும்பியவன் நொண்டி தெருக்கோடியில் உள்ள வக்கிரன் வீட்டு வாசலிலேயே இன்னும் நிற்பதைக் கண்டு ‘பாவம்! பேயிடம் தப்பி பூதத்திடம் சிக்கிவிட்டார்கள். கஷ்டப்படட்டும். எப்படியாவது உதவுவோம்’ என்று எண்ணி நடந்தவன் எதிரே இரு குதிரைகளுடன் வந்து நின்றான் வக்கிரன்.

     “கிளம்புவோம் வக்கிரா?” என்று அவன் குதிரை மீது ஏறியதும் வக்கிரனும் தன் குதிரை மீது ஏறிவிட்டான்.

     கோநகரம் பாதையில் பறந்தன பரிகள். இவர்களைத் தாங்க தமிழகத்தின் பெரிய பிரபுவான அந்த மாதேவநாயகன் வீட்டில் நல்ல ருசியான சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டதும் வக்கிரன் அதே நினைவில் பேசக்கூட முயலவில்லை. ஜெகன்னாதன் மனதிலோ ஏகப்பட்ட கவலைகள். அவற்றில் தலையாயது பூங்கொடி பற்றியதுதான்.

     அவளைக் கவர்ந்து வந்த நாள் முதல் அவனுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். அவனுடைய இளம் மனைவி, ஒரு அருவா அழகியுடன் தன் கணவனைக் கண்டதும் “ஐயகோ...!” என்று அலறி அடுத்த நொடியிலேயே பிறந்த வீடு புறப்பட்டு விட்டாள்.

     அன்று போனவள்தான். இன்று வரை திரும்பவில்லை.

     பரப்பிரும்மமோ சோழர்கள் “தங்கள் பெண் ஒருத்தி கவரப்பட்டாள் என்றால் உடனே பறந்து வருவர் மீட்க. எந்த நிபந்தனைக்கும் ஒப்பிவிடுவர். இவளைப் பணயமாகக் கொண்டுதான் நாம் நம்முடைய சோழ குலாந்தக கலிங்கனை மீட்க முடியும். இவளை நாம் பிடித்து வந்ததற்குப் பலனை ஆறு திங்களுக்குள் காணவில்லையானால், எவனாவது ஒரு கலிங்கனிடம் இவளைத் தள்ளிவிடலாம்” என்றார்.

     ஆறு திங்களும் ஓடிவிட்டது. இவளை எவனிடமும் தள்ள முடியவில்லை. துணிந்து முயற்சித்தால் “இதோ நஞ்சு” என்று பயமுறுத்துகிறாள்.

     குருநாதர் இவளை மரணம் அடையவிடக் கூடாது. என்றாவது ஒருநாள் சோழர் வருவர். இவளுக்காக என்று இன்னமும் நம்புகிறார். அவர் நம்பிக்கையை நாம் எப்படி மாற்ற முடியும். பூங்கொடி என்ற அழகான பெண்ணைக் கொண்டுவரவா நானும் இவனும் போனோம். போனது யாருக்காகவோ? கிடைத்ததோ இந்த நஞ்சு தின்னும் நங்கைதான்.

     “நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டோம். அதோ பாருங்கள். தமிழகத்தின் மகாதேவரை” என்று வக்கிரன் சற்றுத் தொலைவில் தளர்ந்த நடையுடன் ஒரு பெருந்தோட்டத்தில் சென்றவரைக் காட்டினான்.

     சட்டெனக் குதிரையை தட்டிவிட்ட ஜகன்னாதன் அவர் எதிரே போய் குதிரையை நிறுத்திவிட்டு இறங்கியதும் அவர் சற்றே நின்றார் நிதானித்து,

     “என் பெயர் ஜகன்னாதன், மன்னரின் மெய்க்காப்பாளர்களின் உபதலைவன். ராஜகுரு பரப்பிரும்மத்தின் பரமசீடன்” என்று கூறினான்.

     “நல்லது தம்பி. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று அவர் மிக அடக்கமாகக் கேட்டதும் ஒரு நொடி விழித்தான் ஜகன்னாதன். தம்பி என்கிறார், ஜயா என்று அழைக்காமல். வயதில் மூத்தவர்தானே?

     “தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று அவர் சற்று நயமாகவும் அழுத்தமாகக் கூறுவது போலவும் கேட்டதும் அவர் நிதானமாக “என்னிடம் எந்த உதவியும் எதிர்பார்க்கக் கூடாது யாரும். மாமன்னரும் பரப்பிரும்மமும் என்னிடம் கேட்கும் உதவிக்குத்தான் உரிய மதிப்புத் தரப்படும்” என்று கூறியதும் ஜகன்னாதன் திடுக்கிட்டான்.

     ‘என்ன திமிர் இந்தத் தமிழ்... அருவாக் கிழவனுக்கு?’ என்று அண்மையில் நின்ற வக்கிரனுக்கு ஆத்திரமேற்பட்டதும் “ஏ... அரவாக்கிழம், தலைவர் கேட்டதற்கு பதில் கூறாமல் திமிருடன்...” என்று அவன் முடிப்பதற்குள் “ஐயோ...!” என்றலறிவிட்டான் அவன். சரியானதொரு சாட்டையால் சுளீர் என்று அடிபட்டால் யார்தான் அலறாமலிருக்க முடியும்?

     ஜகன்னாதன் சட்டெனத் திரும்பிய போது ஆத்திரமே உருவாக அங்கு கையில் ஒரு சாட்டையுடன் நின்றவன் கலிங்கத்தின் முப்பெருந் தளபதிகளில் ஒருவனான வீரவர்மன்.

     நடுங்கிவிட்ட ஜகன்னாதன் சிறிதும் தயங்காமல் சட்டென மண்டியிட்டு வணங்கினான் அந்நாட்டு முறைப்படி. பூமியிலே சுருண்டு விழுந்த வக்கிரன் வேதனையுடன் எழுந்து “பார் தலைவரே என்னை...” என்று கேட்டு நிமிர்ந்த போது எதிரே யமகிங்கரன் மாதிரி நின்ற வீரவர்மனைக் கண்டதும் “ஐயோ...! கடவுளே! அபசாரம்... அபசாரம்” என்று அலறி நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் அவன் காலடியில்.

     கலிங்க மாமன்னன் அநந்தவர்மனின் முப்பெரும் ராணுவத் தலைவரில் ஒருவனான வீரவர்மன் அந்நாட்டில் பெற்றிருந்த மதிப்பு அசாதாரணமானது. அவன் பேரைக் கேட்டாலே நாடு நடுங்கும். எதிரிகள் கூட இவனுக்குக் கொடுத்த மதிப்பு எல்லையற்றது. அவ்வளவு பயங்கரமானவன்.

     இவனைத் தவிர இன்னும் இரண்டு தானைத் தலைவர்களும் கலிங்கத்தின் முதுகெலும்புகள். அவர்கள் முறையே விஜயவர்மன் என்றும் ஹரிவர்மன் என்றும் கூறப்படுவர். இவர்களில் ஹரிவர்மன் என்பவன் மகாபண்டிதன். போர்களில் மட்டும் அல்ல, கலைகளிலும், தத்துவங்களிலும் அக்காலத்திய சிறந்த மேதை எனப்பட்டவன்.

     மிகப் பண்பட்ட மனமும், நெறிமுறையான வாழ்வும் நேர்மையுணர்வும் கொண்டவன். ஆனால் சோழர்கள் ஏனைய ராணுவத் தலைவர்களைக் காட்டிலும் இவனிடமே பயமும் மதிப்பும் கொண்டிருந்தனர். யுத்தத்தில் இவன் அபார சாதனைகளைப் புரிந்தானாயினும், குலோத்துங்க சோழனின் பிரதிநிதியாக வந்து யுத்தம் புரிந்த வீரவிக்கிரம்னிடத்தில் (நமது கதாநாயனாக விளங்கும் இன்றைய சோழ மன்னன் விக்கிரமன்தான் இவர்) தோற்கும்படியாகிவிட்டது.

     ஆயிரக்கணக்கான வீரர்கள் அப்போரில் இறந்தனர். எத்தனையோ பெண்கள் வேளம் ஏற்றப்பட்டனர். பல்லாயிரவர் கைதாகினர். ஹரிவர்மன் ஒரு வரம் கேட்டான் சோழ இளவரசனிடம்.

     “இவர்களைச் சோழ நாட்டுக்குக் கொண்டு போய் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அப்படி ஏதாவது செய்வதாயிருந்தால் இவர்கள் அனைவருக்கும் பிரதிநிதியாக என்னைக் கொண்டு சென்று எது வேண்டுமாயினும் செய்து கொள்ளுங்கள்” என்றான்.

     இளவரசன் இத்தனை வீரமக்களும் தங்கள் வீடு வாசல் பெண்டிர் பிள்ளைகளை இழந்து வேற்று நாட்டில் வருவானேன்? அவர்களுக்காக நான் வாடத் தயார் என்று பண்புடன் தன்னையளிக்கும் இவனை நல்ல மரியாதைகளுடன் கைது செய்து இன்று சோழ நாட்டுச் சிறையொன்றில் வைத்திருக்கிறான் இப்போது. அவன் அதாவது விக்கிரம சோழன் மன்னனாகிவிட்டான். இந்த நல்ல நாளை உத்தேசித்து எத்தனையோ பேர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் இன்றளவும் ‘சோழ குலாந்தக கலிங்கன்’ என்று கலிங்கத்தில் பாராட்டப் பெற்று பெருமையாகப் போற்றப்படும் இந்த ஹரிவர்மனை விடவில்லை.

     இதுதான் கலிங்க மன்னனுக்கும், பரப்பிரம்ம பிரதானிக்கும் மக்களுக்கும் மக்கள் தலைவர்களுக்கும் மிகவும் துக்கத்தையும், துக்கத்தினால் ஏற்பட்ட கோபத்தையும், கோபத்தின் வாயிலாக வெறுப்பையும் வஞ்சந்தீர்க்கும் வெறியையும் உண்டாக்கிவிட்டது.

     முன்னாளைப் போல திறை செலுத்தாமல் நாங்கள் சுதந்திரர்கள் என்று பிரகடனம் செய்தால் மீண்டும் போர் எழும். ஒன்றன்பின் ஒன்றாக மூன்று போர்கள். அதனால் ஏற்பட்ட தோல்விகள் ஒருபுறமிருக்க ஏராளமான உயிர்களும், பொருள்களும் நாசம். இன்னொரு போர் என்றால் கலிங்கம் மண்ணோடு மண்ணாகிவிடுமே என்று மன்னர் கலங்கினார். மக்களும் தயாராயில்லை, அனுபவித்த துன்பங்கள் போதும் என்று அடங்கி விட்டனர்.

     பிரதானியோ காலம் மாறும் வரை பொறுத்திருப்போம் என்று நிதானித்தார். ஆயினும் சோழ குலாந்தகனை விடுதலை செய்தாக வேண்டுமென்பதற்கு அவர் எத்தனையோ தந்திரங்களைக் கையாண்டார். வீரமர்வனுக்கும் சரி, இன்று கலிங்கத்தில் நசிந்து போன ராணுவத்தை எல்லையோரத்தில் எங்கோ ஓரிடத்தில் சீர்படுத்த முனைந்துள்ள விஜயவர்மனுக்கும் பரப்பிரும்மம் ஏதோ செய்கிறார் என்று தெரியுமேயன்றி என்ன செய்கிறார் என்பது தெரியாது. தெரிந்து கொள்ளவும் அக்கறை காட்டவில்லை.

     காரணம் பரப்பிரும்ம பிரதானி மன்னரைத் தன் இஷ்டம் போல ஆட்டி வைத்துக் கொண்டிருப்பதனால்தான். கலிங்க மன்னன், ஒருபுறம் ராணுவத் தலைவர், இன்னொரு பக்கம் ராஜகுருவின் கூட்டம், ஆகிய இரண்டுக்கும் இடையே இருதலைக்கொள்ளி எறும்பாகத் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

     இந்த நிலைமையில்தான் ஒரு நாள் தமது சீடனான ஜகன்னாதனைச் சிதம்பரத்துக்கு அனுப்பிய பிரதானி, அங்கு சத்திரத்தில் இருந்த பூங்கொடியை சோழ அரசகுமாரி என்றெண்ணிக் கவர்ந்து வரும்படி செய்துவிட்டார். பிறகு அவள் சோழகுலவல்லி அல்ல என்று தெரிந்ததும் திகைத்தார். தவிர வீரவர்மனுக்கோ, விஜயவர்மனுக்கோ இந்த விவரம். அதாவது பெண்ணைக் கவர்ந்த தந்திரம் தெரிந்தால் பதறி எழுவர் என்பது தெரியும்.

     எழுந்தால் மன்னரிடம் போகும். போனால் மன்னரே இதென்ன கேவலமான வேலை என்று நொந்து கொள்வான். இப்போது இவளை விடுவதும் தவறு. எனவே சோழர்கள் எவராவது இந்தப் பெண்ணைத் தேடி வருவார் என்று எதிர்பார்த்தார். இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்படி வந்தால் தமது நிபந்தனையை ஜகன்னாதன் மூலம் அறிவித்து கலிங்கனை மீட்கப் பார்க்கலாம். அவர்கள் ஒப்பினால் கலிங்கனும் மீண்டும் விடுவான். அப்புறம் அந்த தந்திரம் கேவலமானாலும் வெகுவாகத் தூஷணைக்குள்ளாகாது என்றும் எண்ணினார்.

     இவருடைய பரமசீடனான ஜகன்னாதன் இவர் வார்த்தைகளை தெய்வ வாக்காகக் கொண்டவனாதலால் அவனும் பரிபூரணமாக ஒத்துழைக்கிறான்.

     இதெல்லாம் இவ்வாறிருக்க இப்போது தமிழகத்துப் பிரபு மகாதேவரிடத்தில் வீரவர்மனிடம் சிக்கி அவதிப்படும் ஜகன்னாதன் வக்கிரபதி இருவரும் இந்த யமகிங்கரனிடத்தில் வந்து மாட்டிக் கொண்டோமே என்று தவித்துக் கொண்டு நின்றார்கள்.

     வீரவர்மன் சாட்டையைச் சுருட்டி குதிரையின் சேணத்தில் வைத்துவிட்டு தன்னுடைய நீண்ட ஆட்டுக்கிடா கொம்பு மீசையை ஒரு தரம் நீவிவிட்டுக் கொண்டே “ஏ! ஜகன்னாதா, இந்தத் தமிழகத்து பிரபு யார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கோபத்வனியில் கேட்டதும் அவன் திகைத்து விழிக்க,

     “கிடக்கிறார்கள் வீரவர்மா... இவர்களையெல்லாம் நாம் ஒரு பொருட்டாகக் கருதினால் பிறகு நமக்குத்தான் அவமதிப்பு. மன்னித்து அனுப்பிவிடு” என்று ஏக வசனத்தில் சொன்னதும், ஜகன்னாதன் ‘இதென்ன வம்பு? நம்முடைய நாட்டின் மாபெருந்தலைவனை இவர் ஏக வசனத்தில் பேசுகிறார். அவரோ இவர் எதிரில் மதிப்பாகவே நிற்கிறார்... ஒன்றும் புரியவில்லையே’ என்று வேதனைப்பட்டு விழித்தான்.

     “நல்லது ஜகன்னாதா. நீ இங்கு ஏன் வந்தாய் என்று பிறகு விசாரித்துக் கொள்ளுகிறேன். இப்போது முதலில் இவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேள். உம்..” என்று உத்தரவிட்டதும் அவன் வெகுவாகத் திடுக்கிட்டுப் போய் “நான்... நான் கலிங்கன். இவர்...” என்று உளறினான்.

     “அவர் மாமன்னர்... உம் சீக்கிரம்” என்றதும் அவன் சட்டென்று அவர் கால்களில் விழுந்தான்.

     அவரும் “சரி சரி... போ! இனியாவது ஆள், இடம், நேரம் பார்த்து நடந்து கொள்” என்றதும் வக்கிரன் தானாகவே அவர் காலில் விழுந்துவிட்டு எழுந்து ஓடினான்.

     நெடுந்தூரம் வரை அவர்கள் தங்கள் குதிரை மீது கூட ஏறாமல் தயங்கி நடந்தார்கள். பின்னால் சாட்டை வரும் என்ற பயமோ என்னவோ! பிறகு ஏறினார்கள். இரண்டு மூன்று முறை குதிரை மீது ஏறும் போது தடுமாறக் கூடச் செய்தான் வக்கிரன். ஆனால் ஜகன்னாதன் மட்டும் உள்ளூரப் பொருமினான்.

     ‘தான் மன்னருக்குப் பங்காளி முறையினன் என்பதைக் கூட எண்ணாமல் தன்னை ஒரு அருவாவுக்கு வணங்கும்படி செய்துவிட்டரே இந்த வீரவர்மர்? இதற்கென்ன செய்வது?’ என்று பலவாறு வருந்தி நேராகத் தன் குருநாதரிடம் சென்றான் குதிரையை வேகமாகத் தட்டிவிட்டு.

     வக்கிரன் இனிப்பயமில்லை, சாட்டையாடி தேடி வரவில்லை என்று முடிவான பிறகுதான் குதிரையைத் தட்டிவிட்டான்.

     ஒரு நாழிகை நேரத்துக்குப் பின்னர், மேல் மூச்சும் கீழ்மூச்சுமாகக் குதிரை மீது இறங்கும் தமது சீடனைக் கண்ட பிரதானி, அவன் முகம் ஏன் இப்படிப் பிரேதக்களை இட்டிருக்கிறது? என்று ஆராய்ந்தாலும் புருவத்தை மட்டும் உயர்த்தி என்ன என்று கேட்பது போல் பார்த்தார். எப்பவுமே அவர் இப்படித்தான்.

     அவசரம் அவசரமாக அவரை வணங்கியவன், “இன்று நமது மகாசேனாதிபதி வீரவர்மர் என்னைப் பெரிதும் அவமதிப்புக்கு உள்ளாக்கிவிட்டார். அதுவும் ஒரு அருவாவின் முன்பு. தாங்க முடியாத பேரவமானம் இது” என்றான் குமுறல் தாங்காத வேகத்துடன்.

     “அருவாவா? யாரவன் இங்கே வந்தது...?”

     “யாரும் புதிதாக வரவில்லை. அங்கே கோநகர் போகும் வழியில் குடியேறியிருக்கிறானே ஒரு கிழ அருவ...” என்று அவன் வெறுப்புடன் கத்தி முடிப்பதற்குள் “அடப்பாவி! காரியத்தைக் கெடுத்தாயே” என்று பதிலுக்கு ஒரு ஹூங்காரம் போட்டு அவர் கத்தியதும் நடுங்கிவிட்டான் பாவம்.

     எட்ட நின்ற வக்கிரனோ இன்று யார் முகத்தில் விழித்தோமோ என்று குமைந்து போய் இன்னும் சற்று எட்டவே விலகி நின்றான்.

     பிரதானியோ ஜகன்னாதனை விழுங்கிவிடுகிற மாதிரி பார்த்த பார்வை மிகப் பயங்கரமாக இருந்தது. அவன் விலவிலத்துத் போனான்.