விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

11

     நொண்டி வைசியபதியும், மண்டு வைசியமித்திரனும் மீண்டும் தலையில் கைவைத்துக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டனர். தன்னுடைய ஒரு நல்ல காலை நீட்டிக் கொண்டான் பாதி இடத்தில். நகை மூட்டையைத் தன் முதுகுக்குச் சாய்மானமாக வைத்துக் கொண்டான் மித்திரன். இருவரும் அடுத்தபடி நமக்கு என்ன பதவி என்று ஆராய்ந்த வண்ணம் எதிரும் புதிருமாக எதுவும் பேசாமல் உட்கார்ந்தார்களேயன்றி வாய் பேசவில்லை.

     அந்தப் பெரிய வீட்டுக்குள்ளே ஏகப்பட்ட பாத்திரங்கள் புரளும் ஒலியும் தொடர்ந்து “நாசமாய்ப் போக நீயும் உன் நண்பர் கூட்டமும். இங்கே நான் சத்திரமா வைத்திருக்கிறேன். உன்னை வாரிக் கொட்ட” என்று கத்தியது ஒரு கர்ண கடூரமான குரல்.

     இதன் எதிரொலி தாங்காமல் மித்திரன். “ஐயோ பாவம்!” என்று முணுமுணுத்தான்.

     “யாருக்கு?” என்றான் பதி.

     “வக்கிரனுக்கு” என்றான் மித்திரன்.

     உள்ளே ஒரு நிமிட ஓய்வு. உடனே கதவு திறந்தது. “எங்கே அந்த உங்கள் மகாப்பிரபு?” என்று கத்தினாள் அவள் கையில் பெரிய விறகுக் கட்டை ஒன்றுடன்.

     நொண்டி அவளைப் பார்த்து விழித்தான் ஒருமுறை.

     ஏனோ அவள் நடுங்கிவிட்டாள் அந்தப் பார்வையைக் கண்டு.

     குனிந்த தலை நிமிராது இருந்த மித்திரனைப் பார்த்து “நீதானே சொன்னாய் வக்கிரன் என்று? எங்கே அவர்?” என்று மீண்டும் கத்தியதும் மீண்டும் ஒருமுறை உறுமிவிட்டு விழித்தான் கடுங்கோன்.

     அவள் கரத்திலிருந்த கட்டை நழுவி விழுந்தது. உடல் நடுங்கி வியர்த்து விதிர்விதிர்த்து ஆடிப்போய்விட்டது. அப்படியே உட்கார்ந்து விட்டாள் அவள், ஏதோ பேய் பிசாசைக் கண்டவள் மாதிரி.

     குனிந்த தலை நிமிராத மித்திரன் சற்றே நிமிர்ந்தான். பிறகு திரும்பினான். சிலையடித்த மாதிரி உட்கார்ந்துவிட்டவளைப் பார்த்தான்.

     “அம்மணி...!” என்றான் அடக்கமுடன்.

     “அ! அ! உம்!” என்றாள் இன்னும் பயம் தீராமல் நொண்டியிடமிருந்து பார்வையை நீக்காமல்.

     “பசி... பசி” என்றான்.

     “யாருக்கு?” என்றாள் அந்த அம்மணி.

     “நகை நிறைய இருக்கிறது” என்றான்.

     அவள் பேராசையுடன் அவன் காட்டிய மூட்டையைப் பார்த்துவிட்டு “உம்...” என்று பெருமூச்சுவிட்டபடி மீண்டும் கடுங்கோன் விழிகளைப் பார்த்தாள். ஆனால் அவன் கண்களை மூடிவிட்டான். சற்றே தைரியம் வந்துவிட்டது அவளுக்கு.

     “நான் உன்னை வீட்டுக்குள்ளிருந்து விரட்டியது தப்புதான் தம்பி” என்றாள் சற்றே தெரிந்தவளாய்.

     “ஆமாம் அக்கா!” என்றாள் அவன்.

     “அக்காவா? நானா?” என்று திகைத்தாள் அவள்.

     மித்திரன் தந்திரசாலியாயிற்றே. “ஆமாம். நீங்கள் எனக்கு அக்காதான், எங்கள் ஊரில் ஒருவன் தன் மனைவியைத் தவிர மற்றவர்களைச் சகோதரிகளாகவே கருத வேண்டும்” என்றான்.

     “அப்படியா? நீ நல்லவனாக இருக்கிறாய். உள்ளே வா. ஒரு பிடி சோறு போடுகிறேன்” என்றாள் நகை மூட்டையை நன்றாகப் பார்த்தபடி.

     “ஆமாம் அக்கா. நல்ல பசி. இப்போது ஒரு பிடி சோறு ஒரு நூறு வராகன் மாதிரி” என்றான் அவன்.

     அவள் திகைத்தாள். ‘ஒரு நூறு வராகனா? பத்து எருமைகளை வாங்கலாமே?’ என்று நினைத்தது அந்த நல்ல மனம்.

     மாவலி புரிந்து கொண்டான். கலிங்கர்களில் பெரும்பாலான குடும்பத்தினர் மாடுகளை வைத்திருப்பது ஏன் என்று. அது ஒரு மதிப்பான சொத்தும் தொழிலும் போலும்.

     “நீ உள்ளே வா... இந்த ஆளுக்குக் கூட ஒரு கவளம் தருகிறேன்” என்றாள்.

     “பேஷ்! ஒரு பிடி சோறு, அடுத்து ஒரு கவளம் அன்னம். பேஷ் பேஷ்!” என்று கூறிக் கொண்டே தொடர்ந்தான் அவளை. அம்மணி என்பது அவன் பேரல்ல.

     ‘அக்காள் என்று உறவுமில்லை. பையன் நிரம்பவும் நல்லவன். தன்னை உறவு முறையுடன் அழைத்துப் பேசுகிறான். அந்த நொண்டி ஒரு மந்திரவாதியோ என்னவோ... அவன் பார்வை ஏன் அப்படி...?’ கைகள் கடகடவென்று நடுங்கியது சோறு எடுக்கும் பொழுது.

     “என்ன அக்கா இப்படி நடுங்குகிறது கைகள்? எனக்குக் குளிரவில்லையே” என்றான் அப்பாவி.

     “நடுக்கம் இல்லை. இது பழக்கம்” என்றாள் அம்மணி.

     “ஓகோ! உங்கள் கணவர் இப்படித்தான் அடிக்கடி கெடுபிடி செய்து நடுங்க வைப்பாராக்கும்?” என்றான் தட்டு நிறைய போட்ட அன்னத்தை விழுங்கியவாறு.

     அவள் விழித்தாள். தன்னிடம் புருஷன் கெடுபிடியா? சிரிப்பு வந்தது அவளுக்கு. பாவம்! அவன் படும்பாடு இவர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் இப்படிக் கேட்பானா? ஆனால் பேச்சை மாற்றினாள் அவள்.

     “உன் கூட வந்திருப்பவர் உனக்கு என்ன உறவு...?” என்று கேட்டாள்.

     “உறவு இல்லை. வியாபாரத்தில் பங்காளி... அவ்வளவுதான்.”

     “ஓகோ! ஒரு கால்...”

     “நொண்டி! ஆனால் பலே ஆசாமி!”

     “தெரிகிறது. ஏதாவது மந்திரம் மாயம் செய்வாரோ?” என்று அவள் அச்சத்துடன் கேட்டதும் அவன் வாய்விட்டுச் சிரித்துவிட்டான்.

     “அவன் ஒரு அப்பாவி... திடீர் திடீர் என்று முழிப்பான் திருதிருவென்று. அவ்வளவுதான். ஒரு நாளைக்குப் பத்து வார்த்தைகள் கூடப் பேசமாட்டான். ஆனால் கொஞ்சம் ஆரூடம் தெரியும்” என்று பொடி வைத்தான்.

     வக்கிரன் மனைவி அதிசயமான மகிழ்ச்சியுடன் “அவருக்கு சோசியம் கூடத் தெரியுமா?” என்று மிகப் பரபரப்புடன் கேட்டதும் “ஆமாம்! ஆனால்...”

     “இதோ தம்பி. நீ எனக்கு உண்மையிலேயே தம்பியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.”

     “ஒன்றென்ன? ஒன்பது கூட செய்யத் தயார். உங்கள் கணவர் எங்களுக்கு உதவி செய்யும் போது நாங்கள் செய்யமாட்டோமா?”

     “மண்ணாங்கட்டி. என் புருஷன் உங்களுக்கு மட்டும் இல்லை. யாருக்குமே எந்த உதவியும் செய்ய முடியாது. அவர் ஒரு கையாலாகாத மக்கு மனுஷன்” என்று கூறியதும் “பேஷ்! உங்கள் கணவனைப் பற்றி நீங்கள் பிரமாதமாக நினைத்திருக்கிறீர்களே பேஷ் பேஷ்!” என்று மீண்டும் பொடி வைத்தான் புத்திசாலி.

     “அது கிடக்கட்டும். உங்கள் நண்பர் எனக்கு சோசியம் சொன்னால் இந்த வெள்ளிக்காசு அவருக்குத்தான். இதுதான் என்னிடம் உள்ள ஒரே சொத்து” என்றாள் அம்மணி.

     மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான் மாவலி.

     அவன் தன்னை கேலி செய்கிறான் என்று நினைத்தாள் அவள்.

     “சோழர்களுடன் சும்மா சும்மா போர் நடத்தி இந்த நாடே பஞ்சத்திலடிபட்ட பூமியாகிவிட்டது. எவரிடமும் எதுவும் இல்லை. எல்லாரும் ஏழைகளாய் விட்டோம். ஒரு காலத்தில் எங்கள் ஆத்தாள் குடும்பமும் சரி, இவர் குடும்பமும் சரி, வளமாகத்தான் இருந்தது. ஒன்றா... இரண்டா... மூன்று பெரிய யுத்தம் அந்த சோழர்களுடன். பிறகு கதம்பர்களுடன். இப்படி ஒரே யுத்தங்களாக நடந்ததால் பயிர் பச்சை நிலபுலன்கள் நகை நட்டுக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. உம்... அதெல்லாம் ஒரு பெரிய கதை.”

     “ஐயோ பாவம்! அந்தச் சோழர்கள் சும்மா...”

     “இல்லை... இல்லை தம்பி. அவர்கள் வம்புச் சண்டைக்கு வரவில்லை. இந்த நாடு திறை செலுத்தியதை நிறுத்தியதும் அவர்கள் பலமுறை எச்சரித்தார்கள். வளங்குறைவு. வழியில்லை திறை செலுத்த என்றார்கள். நிறைய வேண்டாம் குறைவாகவே திறை செலுத்தும் நாடு என்ற முறையில் அனுப்பு என்றார்கள். இவர்கள் முடியாது என்று பாய்ந்தார்கள் அவர்கள் மீது... அப்புறம் என்ன? நீயேதான் இப்போது பார்க்கிறாயே நாட்டு நிலைமையை... அது கிடக்கட்டும் நான் கேட்டது...” என்றாள் மீண்டும் இறைஞ்சும் குரலில்.

     சற்றே பிகு செய்து கொண்டு ஒரு பெரிய ஏப்பம்விட்டவன் “மெல்லக் கேட்கிறேன் அவனிடம்” என்றான்.

     தட்டு நிறைய சோற்றுடன் வெளியே வந்தான் மாவலி. கடுங்கோனுக்கு நல்ல பசியாதலால் சீக்கிரமே அதைக் காலி செய்துவிட்டு நண்பனைப் பார்த்தான். நாலைந்து நொடிகளில் விஷயத்தைக் கூறிவிட்டு உள்ளே திரும்பினான் மாவலி.

     வக்கிரன் மனைவி இதற்குள் ஒரு புதுப் புடவை கட்டிக் கொண்டு நடுக்கூடத்தில் மணை போட்டு விளக்கேற்றி வைத்தாள்.

     மித்திரன் இதைப் பார்த்ததும் “பேஷ்! நீங்கள் ரொம்ப பக்தியுள்ளவர் போல தெரிகிறது. நல்லது. உங்கள் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். அவர் வருவதற்கு ஒப்புக் கொண்டார்” என்றான்.

     நொண்டி நொண்டி வந்தான் கடுங்கோன். மணையில் அமர்ந்தான். அவன் எங்கேயாவது தன்னை முன் போல விழித்துப் பார்த்துவிடப் போகிறானே என்று பயந்தவள் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

     கண்களை மூடினான். “ஹ்ரீம்...” என்றான். “ரூம்” என்றான். “ஓம்” என்றான். பிறகு கண்களைத் திறந்தான். விளக்கைப் பார்த்தான். “உம்... கேட்கலாம்” என்றான்.

     குரல் நடுங்கினாலும் ஆசை அடங்கவில்லையே... அவள் கேட்டாள் “எங்கள் திருமணம் நடந்து இருபது வருஷங்களாகிவிட்டது. குழந்தையில்லை. பிறக்குமா அல்லது பிறக்காமலே...”

     “பிறக்காது.. இப்போதைக்கு” என்றான் வெடுக்கென்று.

     “ஐயையோ! முன்னே பார்த்தவர்கள் நாள் கழித்துப் பிறக்கும் என்றார்களே” என்று அரற்றினாள்.

     “நீலம்...” என்றான் உடனே.

     “அப்படியென்றால்?”

     “நீலமாளிகை” என்றான் அடுத்து.

     “ஐயையோ! அது எங்கள் தலைவர் ஜகன்னாதன் வீடு அல்லவா?”

     “அங்கே ஒரு பெண்...”

     “அபாண்டம் அபாண்டம்! அவர் பரப்பிரும்மரின் சீடர். தவறு செய்யவே மாட்டார். ஆனால் எனக்குப் பயமாயிருக்கிறது.”

     “என்ன ஆனால்...”

     “எனக்குத் தெரியாது.”

     “தெரியாவிட்டால் திண்டாடு. அங்கு ஒரு பெண் இருக்கிறாள். உன்னுடைய கணவன் அடிக்கடி...”

     “ஆமாம். ஆனால் அது ரொம்ப ரகசியம்.”

     “ரகசியமும் இல்லை. மண்ணும் இல்லை. ஒரு பெண்ணைக் கவர்ந்து வந்து வைத்திருக்கிறார்கள் என்று தேவதை கூறுகிறது. பெண் பாவம் பொல்லாது!”

     “பெண் பாவம் பொல்லாததுதான். ஆனால் அது பெரிய இடத்து விஷயம்.”

     “அந்தப் பெண்ணைக் கவர்ந்து வருவதில் மட்டும் இன்றி காவல் காப்பதிலும் உன்னுடைய கணவன்தான் உறுதுணை. இதில் ஏதோ சூது இருக்கிறது. நீ உன் கணவனிடம் அன்பு காட்டாமல் எரிந்து விழுகிறாய். எனவே...” அவன் முடிக்கவில்லை...

     “அடப்பாவி” என்றாள்.

     கடுங்கோன் தன்னுடைய கண்களைச் சற்றே விரித்து உருட்டிப் பார்த்தான் ஒரு முறை. அவள் அந்த விழிகளைப் பார்த்து மீண்டும் “ஐயோ! என் புருஷனைத்தான் சொன்னேன். அவன்தான் அந்தப் பெண்ணுக்குக் காவலாக மாகாளியைக் கொண்டு போய் வைத்திருக்கிறான். ஆமாம் இதில் ஏதோ சூது இருக்கிறது” என்றாள்.

     விழிகளை மூடினான் கடுங்கோன்.

     ஆரூடம் முடிந்தது. அம்மணி உள்ளூர அழுதாள்.

     அப்பாவி சொன்னான் “அக்கா.. நீங்கள் கவலையை விடுங்கள். அந்தப் பேய் மகளை இவர் கவனித்துக் கொள்ளுவார்” என்றான்.

     “ஊர் உலக்குக்குத் தெரியாத மர்மம் இது” என்றாள் பயந்துபோன அம்மணி.

     “உனக்கு ஒரு பயமும் இல்லை. அந்தப் பேய் மகளும் போய் அந்தப் பெண்ணும் போய்விட்டால் அடுத்த வருஷமே இங்கு குவா குவாதான்” என்றான் மித்திரமாவலி. ஆமோதித்தான் வைசியபதி.

     நகைகளை மறந்தாள், நாட்டை மறந்தாள், புருஷனையும் எப்பவும் போல மறந்துவிட்ட அவள் அடுத்த ஆண்டே ஒரு குழந்தையா? என்று ஆனந்தத்துடன் தன்னை மறந்து குதூகலித்தாள். பெற்றோர் சொன்ன ஜோஸ்யம் பலிப்பது நிச்சயம். இந்த ஆரூடக்காரன் வாழ்க! தம்பி நகை வாழ்க...! இவர்களுக்குத்தான் என்ன வேணுமானால் உதவி செய்யலாம். அந்தப் புருஷனிடம் வாய் திறக்கக் கூடாது... ஆமாம். அவளாகவே உறுதி பூண்டாள். குழந்தை அல்லவா பிறக்கப் போகிறது? சும்மாவா?

     “ஒரு நாள்... ஏன் நாளைக்கே அந்த மாகாளியைச் சந்தித்து விருந்து வைக்கலாம்... அப்புறம் நீலமாளிகை எதிரி காலி” என்றான் மாவலி.

     “ஐயோ பாவம்! பெண் பாவம் பொல்லாது. அவளை நாம் ஒன்றும் செய்துவிடக் கூடாது...”

     “சேச்சே! அந்தப் பெண் என்ன செய்யும்? அதை நாங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை. உனக்கு எதிரியாக இல்லாமல் அதை அதன் ஊருக்கு விரட்டிவிடுவோம். அவ்வளவுதான்.. ஆனால் மாகாளி இதை...”

     “தடுப்பாள். ஏன் என்றால் அவளுக்கு ஏராள தொகை கொடுத்து இவர்கள் காவல்காரியாக நியமித்துள்ளனர்.”

     “பயம் வேண்டாம், நீ ஒருமுறை விருந்துக்கழைத்தால்...”

     “நிச்சயம் வருவாள். அவள் பயங்கரமானவள் என்றாலும் என் நீண்டகாலத் தோழிதான். ஆனால் இந்த மாதிரி கெடுபிடி வேலைகளுக்கு அவள் எப்பவுமே ஈடு கொடுப்பாள். அதில் அவளுக்கு ஒரு சந்தோஷம்.”

     “ஓகோ! ரொம்ப நெஞ்சழுத்தக்காரி போலும்.”

     “ஆமாம். அவள் ஒரு பணப்பிசாசு. சுயநலமே உருவானவள்” என்று ஆவேசத்துடன் கூறினாள் அந்த அம்மணி அக்காள்.

     மாவலி சிரித்தான்.

     “பணம்தானே... பெட்டி நிறைய இருக்கிறது” என்றான்.

     “அப்படியானால் கவலையில்லை. இன்று இரவே வேண்டுமானாலும் விருந்தும் பணமும் என்றாள் ஓடோடி வருவாள் அவள்” என்று பரவசத்துடன் கூறியதும் “என்னவோ அக்கா! உன்னுடைய நலமே எங்கள் நலம். எப்படி உசிதமோ அப்படிச் செய்” என்றான் அப்பாவி நைச்சியமாக.

     ‘எவ்வளவு அன்பு இந்தத் தம்பிக்கு’ என்று எண்ணியவள் உடனே இறங்கிவிட்டாள் தன்னுடைய வேலையில்.

     அவன் நீலமாளிகை போகும் வேகத்தில் தன் வீட்டுக் கதவைப் பூட்ட மறக்கவில்லை. ஆனால் அப்பாவி தொடருவதைத்தான் கவனிக்கவில்லை அவள்.

     இருள் இன்னும் படரவில்லையாயினும் எங்கும் ஒரே மூட்டமாயிருந்தது. எனவே அவள் அந்த வீட்டுக் கதவைத் தட்டும் போது பேய் மகள் கதவை நிரம்ப ஜாக்கிரதையாகவே திறந்து கழுத்தை மட்டும் நீட்டினாள்.

     “ஓ...! நீயா? வா வா” என்று உள்ளே அம்மணியை விட்டுவிட்டுச் சட்டெனக் கதவைச் சாத்தினாள் அவள்.

     வீட்டைக் கவனித்ததும் திரும்பிவிட்டான் மாவலி தன் பழைய இடத்துக்கு.

     “என்ன ஆச்சு?” என்று சுருக்கமாகவே கேட்டான் கடுங்கோன்.

     “இன்று இரவே நீ உன்னுடைய தங்கையைச் சந்திக்கலாம்” என்றான் மாவலி.

     திகைத்தான் அவன். சந்தேகத்துடன் கேட்டான். “எப்படி?”

     “இன்று இரவு விருந்து அந்தக் காவல்காரப் பேய்களுக்கு இந்த வீட்டில்...”

     “இடையே வக்கிரன் வந்தால்...?”

     “நாம் அப்பாவி போல ‘கிடைத்தானா அந்தப் பாவி’ என்று புலம்பி வீட்டுக்குள் புகாமல் அதாவது உள்ளேவிடாமல் நான் கடத்திக் கொண்டு போய்விடுவேன். நீ இதற்குள் அவ்வீடு சென்று...”

     “பொறு மாவலி... அந்த ஜகன்னாதன் அங்கு வந்திருந்தால்...”

     “நல்ல கேள்விதான். நீ எங்காவது பதுங்க வேண்டும்.”

     “அவனிடம் சிக்கிக் கொண்டால்... வேறு வழியில்லை. தண்டப் பிரயோகம்தான்.”

     “யோசித்துச் செயல்பட வேண்டும். ஒன்று செய்... நமக்கு ஏதோ ஒரு துப்பு கோயில் பூசாரி ஒருவன் மூலம் கிடைத்தது என்றும் உதவி செய்தால் போதும் என்று வகையாகக் கதைத்து அவர்கள் இருவரையும் இரண்டு மூன்று நாழிகை நேரம் இழுக்கடித்தால் அதற்குள் நான் பூங்கொடியிடம் பேசிவிடுகிறேன். பிறகு என்ன செய்யலாம் என்று நாம் மீண்டும் கூடி திட்டமிடலாம்.”

     “அதுவும் சரி. ஒருவேளை எந்த இடையீடும் இல்லாமல் எல்லாம் சாதகமாக இருக்குமானால், இன்றிரவே...”

     “பறந்துவிடுவோம்” என்றான் கடுங்கோன்.

     அரை நாழிகை நேரத்தில் திரும்பிவிட்டாள் அம்மணி அக்காள்.

     “இரவு பத்து நாழிகை அளவில் காளி வருவாள்” என்றாள் மகிழ்ச்சியுடன்.

     “அந்தப் பெண்...”

     “அதுதான் பாவம்! அறையில் பூட்டப்பட்டு தவியாய்த் தவிக்கும். காளி அங்கிருந்தால் கூடத்தில் நடமாடலாம். அவள் அப்பால் சென்றால் அறையில் பூட்டப்படுவாள். கத்தினால் கூடக் காதில் விழவொட்டாத சுவர் அமைப்பு, பாவம்!” என்றாள்.

     நண்பர்கள் பேசாமல் தலையாட்டினர்.

     இந்த சமயத்தில் சோர்வுடன் ஜகன்னாதனும், வக்கிரனும் வந்தார்கள் தள்ளாடி நடந்த குதிரைகள் மீது. பழைய நொண்டி பழைய திண்ணையில்.

     மித்திரன் அவர்களைப் பார்த்ததும்... “ஐயா! ஐய.! அந்தப் பாவி கிடைத்தானா?” என்று புலம்பியதும், “சட்... சும்மா இரு” என்று கத்திவிட்டான் வக்கிரன்.

     எங்கேயோ பட்ட அடி இங்கே வந்ததும் கோபமாகி விட்டது.

     ஜகன்னாதன் தன் வீடு போனதும் தன்னுடைய அப்பாவி நடிப்பைத் துவக்கினான் மித்திரன்.

     “ஐயா! ஆயிரம் வராகன் நகை ஐயா. பெரிய குதிரை... நாலுபேர் புடைசூழ வந்த பிரபுத்தோற்றம்... உறுமல் எல்லாம் என்னை ஏமாற்றச் செய்துவிட்டது... பணம் கேட்டதும் கடிதம் போதும், அதைக் கொண்டு கொடுத்தால் தானாகவே கிடைக்கும் என்றான். ஏமாந்துவிட்டு தவிக்கிறோம்...”

     வக்கிரன் சற்றே நிதானித்துவிட்டு “சரி சரி, நானும் என் எஜமானனும் அவசர வேலையாக ஒரு இடம் போக வேண்டும். இரவு திரும்பமாட்டோம். நாளை வந்ததும் நிச்சயம் கவனிக்கிறோம். அதுவரை...”

     “இங்கே சோறு...” என்றான்.

     “எனக்கே கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று வீட்டுக்குள் சென்றவனை வரவேற்றது ஏதோ ஒரு பாத்திரம்.

     “சனியன், பீடை” என்று புலம்பிக் கொண்டே வந்தவன் ஜகன்னாதனைக் கண்டதும் பெமூச்சு விட்டான்.

     “நண்பர்களே, நாளை வந்து உதவி செய்கிறோம்” என்று ஜகன்னாதன் கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டான்.

     வக்கிரனும் வெறுப்புடன் குதிரை மீது ஏறி நிதானமாகவே ஓட்டினான்.