விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

12

     பூங்கொடிக்கு இன்று ஒரே அதிசயமாக இருந்தது நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கண்டு. அவள் பலகணி மூலமாகப் பார்த்தாள் எவனோ ஒரு கடுக்கன் போட்ட செட்டியாரை. வக்கிரன் மனைவி வந்து மாகாளியுடன் என்னவோ பேசினாள். பிறகு சிறிது நேரத்தில் ஜகன்னாதன் வந்தான்.

     “வாருங்கள் நவீன ராவணரே” என்று வழக்கம் போல் குறும்பாக வரவேற்றாள். ஆனால் அவன் முகம் இருந்த நிலைமை கண்டு ஏன் இப்படி வரவேற்றோம் என்று அவளே நொந்து கொண்டாள்.

     மாகாளியைத் தனியாகக் கூப்பிட்டு “மிக எச்சரிக்கையாக இரு. ஒரு நொடி கூட அப்பால் போகாதே” என்றான். “இரவு பாராக்காரர்கள் வீதியில் அடிக்கடி நடமாடுவார்கள்” என்றும் சொன்னான். காலையில் திரும்புவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டான்.

     அவன் போன கால் நாழிகைக்கெல்லாம் மாகாளி பூங்கொடியிடம் வெகு நைச்சியமாய்ப் பேசினாள்.

     “நான் ஒரு அவசர வேலையாக அரை நாழிகை வெளியே போய் வந்துவிடுவேன். அதுவரை நீ கூடத்தில் இருக்க முடியாது. அறைக்குள் அடைபட்டிரு” என்றாள்.

     பூங்கொடி மறுக்கவில்லை. ஏனென்றால் இந்நாள் வரை அவள் எந்தெந்தக் கதவுகளை எப்படியெப்படித் திறப்பது. அதாவது பூட்டியிருக்கும் போது என்பதை ஒரு பயிற்சியாக ஏற்று அதில் வெற்றியும் பெற்றிருந்தாள். எனவே மறுக்காமல் அவளாகவே அறையில் புகுந்து கொண்டது கண்டு மாகாளிக்கு மிக்க நிம்மதி ஏற்பட்டுவிட்டது.

     அவள் போய்விட்டாள். வீட்டின் பின்புறம் முன்புறம் ஆகிய எல்லாப் புறங்களையும் பலகணிகளையும் கூடத்தான் மூடிக்கொண்டு வெளிக்கதவை இறுகப் பூட்டிவிட்டு. இதெல்லாம் அதிசயமில்லையா?

     பத்தே நொடிகளில் வக்கிரன் வீட்டைச் சேர்ந்தவள் வாசலிலே ஒரு நொண்டியும் செட்டியும் இருப்பதைப் பார்த்துவிட்டு ‘யாராயிருக்கும்?’ என்று சிந்தித்தபடியே வீட்டினுள் நுழைந்தாள். சமையல் மணம் அபாரமாயிருந்தது.

     வக்கிரன் மனைவி அவளை மிகவும் மகிழ்வுடன் வரவேற்றாள். மாகாளிக்கு அவள் திடீரென்று தன்னை இன்று விருந்துக்கு அழைப்பானேன் என்று நினைத்தாலும் விருந்தும் ரொக்கமும் வரும் போது அதைவிட மனமில்லை.

     “வாசலிலே இருக்கும் இருவரில் அந்த நொண்டி இருக்கிறார் பார் காளி, அவர் நிரம்பவும் கெட்டிக்கார ஆரூடக்காரர். எனக்கு இன்று ரொம்ப சந்தோஷமான செய்தி ஒன்றைச் சொன்னார். அதற்காகவே உனக்கு விருந்து” என்றதும் காளிக்கு ‘ஓகோ! இவள் தனக்குக் குழந்தை பிறக்குமா என்று வருபவர் போவார் எல்லாரையும் கேட்பதுண்டு. இன்று இவரைக் கேட்டிருக்கிறாள் போலும்.’

     “நல்லது அம்மணி. உனக்குக் குழந்தை ஒரு ஆணாகப் பிறக்கட்டும்” என்று வாழ்த்தினாள். கணவனைக் கண்டாலே விரட்டிவிடும். இவளுக்குக் குழந்தை எப்படிப் பிறக்கும் என்று அந்த ஆரூடக்காரர் சொன்னாரோ இல்லையோ...

     செட்டியார் வந்தார் உள்ளே.

     “அக்கா, நம்ம விருந்தில் இன்று இந்தப் பழரசத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது முக்கனிரசம் என்று எங்கள் ஊரில் ரொம்பவும் ருசிகரமானது என்று பிரசித்தி பெற்றது. இப்பொழுதே பருகிப் பாருங்களேன் ஒரு வாய். உங்கள் தோழியருக்கும் கொடுங்கள்” என்று இரண்டு கோப்பைகளை நீட்டினான்.

     ஒரு வாய் சுவைத்தாள் அக்காள். “ஆகா!” என்றாள். பிறகு அவள் தோழி மாகாளியும் அருந்தினாள்... “அடாடா...!” என்று மளமளவென்று குடித்தாள். இது போன்ற ஒரு பானத்தை அவள் இன்றளவும் அருந்தியதேயில்லையே. அம்மணியும் எஞ்சியதைக் குடித்துவிட்டு “தம்பி, நீ நல்லா சமையல் கூட செய்வாய் போலிருக்கிறதே?” என்று கேலியுடன் சொன்னதும் “ஓ! நான் நளனையும் வெல்லக் கூடியவன்தான். வேண்டுமானால் ஒரு முறை சோதனை செய்யுங்கள் இப்பவே...”

     காளியம்மாள் ஒரு கொட்டாவிவிட்டு வாய்க்கு நேரே விரலைச் சொடுக்கினாள். அக்காளும் ஒரு கொட்டாவி விட்டாள் தொடர்ந்து.

     “இதென்ன கஷ்டம். இன்னும் விருந்தைச் சுவைப்பதற்கு முன்னாலேயே கொட்டாவியும் கிறக்கமும்” என்றாள் காளி.

     “இதோ இலை போடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் மீண்டும் ஒரு கொட்டாவி விட காளியும் போட்டி போட்டாள்.

     “ஒரு நொடி இப்படிச் சாய்கிறேன் அம்மணி” என்று படுத்தாள் மாகாளி.

     “எனக்கும் கூட ஒரே...” ஒரு கொட்டாவி விட்ட அக்காளும் சற்றே சாய்ந்தாள் அவள் பக்கத்தில். அவ்வளவுதான். இருவரும் கொட்டாவிக்குப் பதில் குறட்டைகள் விடுவதில் போட்டியிட்டனர்.

     மாகாளியின் இடுப்புச் சாவி மாவலியிடம் வந்ததும் அவன் அங்கிருந்து புறப்பட அவனுக்கு முன்னால் போய்விட்டான் கடுங்கோன் அங்கே.

     அறைக்குள் அடைபட்டிருந்தவள் வாசற்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் தான் அறைக்கதவுப் பூட்டைத் திறக்கும் முயற்சியை விட்டுவிட்டுப் பூனை போலப் படுத்தாள். இதற்குள் திரும்பிவிட்டாளே அந்த மாகாளி. அடுத்த கதவும் திறக்கப்பட்டதும் கூடத்து இருளில் மாகாளி விளக்கைத் தேடினாள் போலும். ஆனால் ஏன் விளக்கு ஏற்றப்படவில்லை என்று நினைத்துத் திகைத்தவள் காதில் “பூங்கொடி...!” என்று ஒரு குரல்.

     ஆம் அது அண்ணன் குரல்தான். நிச்சயமாக அண்ணனுடையதுதான்..

     மீண்டும் “பூங்கொடி...!” என்று அழைத்தான் அவன்.

     “அண்ணாச்சி...! இதோ... இங்கே இந்த அறை... உண்மையில் நீங்கள்தானே... இல்லை ஆள் மாறாட்டம் இதிலும்...”

     “இல்லை பூங்கொடி. இத்தனைக் காலமாக உன்னைத் தவிக்கவிட்ட அந்தப் பாவி அண்ணன்தான் தங்கச்சி” என்று அவன் அறைக் கதவை நாடிச் சாவியைப் பூட்டில் வைத்தான். பயனில்லை. மற்றும் ஒரு சாவி அதுவும் பயனில்லை...

     “அடக்கடவுளே! இதென்ன?” என்று பதறிவிட்டான் அவன்.

     “அண்ணாச்சி, பயம் வேண்டாம். இதோ பாருங்கள், நான் திறக்கிறேன்” என்று அவள் பூட்டை உள்ளிருந்தபடியே கை நீட்டி என்னவோ செய்ய அது சட்டென திறந்து கொண்டது.

     “கடுங்கோன் அண்ணாச்சி, நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்று தெரியும். இது அதிசயம்தான் ஆனால் உண்மைதானே?” என்று கேட்டதும், “ஆம் தங்கச்சி, நான் இத்தனை நாளும் கொடிய காயம்பட்டு வைத்தியசாலையில் கிடந்தேன். எப்படியோ நான்...”

     “கடுங்கோன்... தாமதம் ஆபத்து... புறப்படு” என்று எச்சரிக்கை வந்ததும் “தங்கச்சி, அதுதான் நம்ம காலிங்கராயரின் மகன் மாவலி. என்னுடைய கஷ்டங்களில் எல்லாம் அவன்தான் உற்ற துணையாக இருந்து...”

     “சரி, சரி நீ பேசிக் கொண்டே காலமோட்டாதே” என்று மீண்டும் வெளியிலிருந்து எச்சரித்தான் அவன்.

     “நம்ம பெரிய காலிங்கராயர் மகனா...! அவர் பெரிய வீரர் ஆயிற்றே...! அவர்...”

     “ஆமாம். இந்த நட்ட நடுநிசியில் தானா வீரவிலாசம் பற்றி ஆராய்ச்சி?” என்று அவன் மீண்டும் மிரட்டியதும் அண்ணனும் தங்கையும் வெளியே வந்தனர்.

     ஒரு பெரிய மூட்டையுடன் நின்றான் அவன்.

     செட்டியாரைப் பார்த்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. களுக்கென்று சிரித்தவளை எச்சரிக்கிற மாதிரி, “பூங்கொடி, இனிதான் நமக்கு ஆபத்தெல்லாம்... பாராக்காரர்கள் வீதியில் நடமாடுகிறார்கள். நம்மை யார் என்பார்கள். நான் நொண்டி நொண்டி நடப்பேன். இவன் ‘ஏமண்டி’ என்பான். நீ ‘ஆமண்டி’ என்று ஏதாவது உளற வேண்டும். எல்லைவரை இப்படித்தான். ஆனால் இரவுக்குள் நாம் எல்லையைத் தாண்டிக் கொங்கு நாட்டைச் சேர்ந்திட வேண்டும்” என்றான்.

     “எட்டு காத தூரத்தை ஒரே இரவில் கடந்துவிட நாம் என்ன அரபுக் குதிரைகளா?” என்று முணுமுணுத்தபடி முன்னே நடந்தான் மாவலிராயன்.

     அவன் மனம் அதிதீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தது. ‘குதிரைகளை எங்கேயாவது கண்டால் கவர்ந்திட வேண்டியதுதான்... மூன்று குதிரைகள் எல்லை வரை வந்தால் போதும். அப்புறம் நம் ராஜ்யம்தானே.’

     நகரத்தின் புறவாயில்... கோட்டைக் காவலர் “யார்?” என்று கேட்டதும் முன்னே ஓடிய வைசியமித்திரன் “ஏமண்டி...” என்று பேசத் துவங்கியதும் “ஓகோ! நீயா...? சரி. சரி... சும்மா தொணதொணக்காமல் போய்ச் சேர்” என்றான். நொண்டியைப் பார்த்தான். பூங்கொடியை சற்று உற்றுப் பார்த்தாலும் இருட்டில் எதுவும் தெளிவாக இல்லை. மூவரும் நகர எல்லையைத் தாண்டிவிட்டனர். இன்னும் ஒரு காத தூரம் போய்விட்டால் பிறகுள்ள ஒன்பது காதமும் காடு மலைகள்தான்.

     மூன்று பகல் இரவுகள் தேவை அவற்றைத் தாண்ட. ஒரே இரவில் நடந்து கடப்பதாம்...

     திடீரென்று எங்கிருந்தோ இருபது முப்பது குதிரை வீரர்கள் வந்தார்கள் குறுக்கே. அவர்களைக் கண்டதும் சட்டென ஒரு யோசனை வந்தது மாவல்லிக்கு...

     “அஹோ...” என்று ஒரு குரல் எடுத்துப் பின்பு... “ஏமண்டொய் சித்ரபுத்ரா...” என்று ஒரு தெலுங்குப் பாட்டைப் பாடினான்.

     அவன் எடுப்பும் தொடுப்பும் மிக நயமாகவும் ரசமாகவும் இருந்ததால் அவர்கள் சட்டென நின்றனர். பிறகு பாட்டிலே லயித்துக் குதிரைகளிலிருந்து இறங்கினர். பாட்டு நீண்டது. தாசரி போல ஆடினான்... கடுங்கோன் தான் என்ன செய்வதென்று புரியாமல் விழிக்க பூங்கொடி மட்டும் சட்டென ஒரு நாட்டியம் போல ஏதோ ஒன்றை அந்தப் பாடலுக்கேற்றவாறு ஆடலானாள்.

     குதிரை வீரர்களின் தலைவன் “எல்லாரும் இங்கு கொஞ்ச நேரம் இளைப்பாறலாம்” என்று அறிவித்ததும் குதிரைகளை அப்பால் கொண்டு கட்டிவிட்டு சுற்றி வட்டமாக உட் கார்ந்து கொண்டு பாட்டைக் கேட்டார்கள். நடனம் பார்த்தார்கள்.

     கடுங்கோன் தனக்கு மாவலி செய்த சைகையைப் புரிந்து கொண்டு சரசரவென நடந்தான். பிறகு ஒரு குதிரை மீது ஏறி நகரத்துக்குத் திரும்பினான்...

     கோட்டைக் காவலனிடம் “கலிங்க வீரர்கள் பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தாக சாந்தி செய்ய எதாவது...” என்று கூறியதும் புரிந்து கொண்டான் அவன். உடனே இன்னொருவனிடம் அவன் ஏதோ கூற அவன் உள்ளே ஓடினான்.

     “அந்த வீரர்கள் கிழக்கு எல்லைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்களாகும். நீ யார்? நான் உன்னை இதுவரை கண்டதில்லையே?” என்றதும், “நேற்றுதான் நான் அவர்களிடம் வேலைக்குச் சேர்ந்தேன். என் பெயர் உக்ரசேனன்” என்றான்.

     காவலன் “ஓகோ! நீ அந்தச் சேனர்கள் குழுவைச் சேர்ந்தவனா...? வங்க எல்லைக்குத்தானே போகிறார்கள்... உன் உதவி தேவைதான்” என்றதும்... உள்ளே சென்ற காவலன் இரண்டு பெரும் பானைகளைக் கொணர்ந்தான்.

     அவர்களைக் கொண்டு வரும்படி கூறி முன்னே கடுங்கோன் செல்ல அவர்களும் குறிப்பிட்ட இடத்தை அரை நாழிகையில் அடைந்துவிட்டார்கள்.

     பிறகென்ன...? ஒரே ஆட்டமும் பாட்டும்... கள்ளும் சேர்ந்தால்... ஆளுக்கொருவராக மூலையில் சுருண்டனர்.

     மூன்று குதிரைகளும் மூன்று பேரைச் சுமந்து கொண்டு தெற்கெல்லை செல்லும் வரை விடியவும் இல்லை, வம்புமில்லை. கொங்கு நாட்டின் எல்லையை மிதித்ததும் “அப்பாடி...!” என்று பெருமூச்சுவிட்டான் மாவலி.

     கடுங்கோன் கால்களை உருப்படியாக்கி நடந்தான். பூங்கொடி ஒரு புள்ளிமான் ஓடுவது போல சுதந்திரமாக அங்குமிங்கும் ஓடி ஒரு அருவிக்கரையைச் சேர்ந்தாள்.

     எத்தனைக் காலமாயிற்று அவள் இம்மாதிரி ஆடிப்பாடி சுதந்திரமாக இருந்தது. எனவே சுற்றுப்புறத்தில் எவரும் இல்லாததால் நீராடி வரலாமென்று அருவியில் இறங்கினாள் ஆனந்தமாக.