உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 13 நாம் மீண்டும் சோழ நாட்டுக்குள் நமது நண்பர்கள் கடுங்கோன், மாவலி, பூங்கொடியுடன் பயணம் செல்ல வேண்டிய தருணம் வந்திருக்கிறது. கொங்கு நாட்டு வண்டியொன்றில் இவர்கள் ஏறினார்கள். ஒரு பகல் முழுதும் பயணம் சென்றவர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேரும் பொழுது இரவு ஆகிவிட்டது. என்றாலும் மனம் வெளிச்சமாகிவிட்டது. கடுங்கோன் தன் ஊர் யானையாகி விட்டான். மாவலி தன் வேஷத்தை இரவோடு இரவாகக் கலைத்து விட்டான். பூங்கொடி தன் அண்ணனுடன் வீடு சேர்ந்ததும் வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதலைக் கண்டுவிட்டதாக எண்ணி மகிழ்ந்தாள். எனவே சோழ நாட்டில் பொழுது புலர்ந்ததும் அவர்கள் வாழ்விலும் விடிந்தது என்று அவர்கள் நினைத்ததில் அதிசயம் எதுவும் இல்லை. ஆனால் அதிசயப்பட்டவன் அந்த ஊருக்கு நல்லெண்ணத் தூதுவனாகக் கங்க நாட்டிலிருந்து வந்திருக்கிறானே சிம்மநாதன் என்பவன், அவன்தான். ஏனென்றால் அவனுக்காக இரவு முதல் தஞ்சையிலிருந்து ஒரு தூதுவன் வந்து காத்திருப்பதாகப் பொழுது விடிந்ததும் விடியாததுமாக உலூகன் கூறியதும், ‘தஞ்சையிலிருந்தா? அங்கு யாருக்குத் தன்னைத் தெரியும்? திடீரென்று இங்கு ஒரு நிகழ்ச்சி அதுவும் நம்மை மையமாக்கி நடக்கிறதே!’ என்று அதிசயித்தான். என்றாலும் இரவு முதல் காத்திருப்பவனை மேலும் காக்க வைக்க இஷ்டமில்லாமல் “உலூகா, இன்னும் கால் நாழிகை நேரத்தில் அவனை நாம் சந்திப்போம்” என்று சொல்லும்படி உத்தரவிட்டுக் காலைக் கடன்களை முடிக்கத் சென்றான். சில நொடிகளில் எல்லாம் முடிந்தது. குளித்து முடித்துச் சுத்தமாகச் சுறுசுறுப்பாகத் தங்கள் கங்காதேவியைக் கும்பிட்ட அவன் புதிய ஆடையணிகள் தரித்துத் தன் மாளிகைக் கூடத்தை அடைந்ததும் தஞ்சை வீரன் சட்டென எழுந்து “அடியேன் தஞ்சைத் தரணியின் இசைத் தமிழ்வாணிப் பெருமகள் அவர்களின் மெய்யுதவி. இன்று அங்கு தங்களை வர இயலுமாவென்று அறிந்து வரும்படி உத்தரவு. இயலுமானால் உடனிருந்து அழைத்து வரும்படி உத்தரவு. இதோ ஓலை” என்று பணிவுடன் நீட்டினான். “அப்படியா! மிக்க மகிழ்ச்சி. என்னையும் மதித்து உங்கள் அரசியார் அனுப்பியுள்ள அழைப்புக்கு இணங்க இன்றே வரத் தயார்” என்று சிம்மநாதன் சட்டென கூறிவிட்டுக் ஓலையைப் பிரித்தான். ‘நாளை கங்க நாட்டின் கலைத்தேவதை லச்சவிதேவியின் நினைவு நாள். விசேஷ நிகழ்ச்சிகள் உண்டு. இளவரசி ராஜசுந்தரி எனக்கு இவ்வகையில் பேருதவி புரிகிறாள். முக்கியமானவர்கள் வருகிறார்கள். நீங்களும் வரலாம்’ என்று மரியாதைத் தொனியில் எழுதியிருப்பது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான். ‘அப்படியானால் இளவரசி ராஜசுந்தரி நம்மை நினைவில் வைத்து இருக்கிறாள்...’ இப்படி நினைத்ததுமே அவன் அடைந்த உற்சாகமும் உள்ளப் பெருமிதமும் துள்ளியெழச் செய்தன. “இன்னும் இரண்டு நாழிகையளவில் நாம் புறப்பட்டலாம். இளவரசர் வீரசோழரிடம் தெரிவிக்க எனது உதவியை அனுப்புகிறேன்” என்றான் சிம்மநாதன். “தேவையில்லை. நானே அவரிடம் அனுமதி பெற்று விட்டேன் நேற்றிரவே” என்று தஞ்சை ஆள் கூறியதும் “ஓகோ!” என்று வியப்புடன் கூறியவன். “நல்லது...” என்று அதை ஆமோதித்துவிட்டு அப்பால் சென்றான். அவன் உள்ளம் இன்னதென்று விளக்க இயலாத மகிழ்ச்சியில் திளைத்தது. உலூகன் வந்தான் தயாராக. தன் தலைவனுடைய உள்ளம் கடந்த சில தினங்களாக எந்த மாதிரி வேலை செய்கிறது என்பதை நன்கறிந்தான் அவன். சோழர்களுடன் எவ்வளவு நெருங்க முடியுமோ அவ்வளவுக்கு நெருங்கி உறவாட வேண்டும் என்ற கட்டளையை அப்படியே செயல்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொண்டான் இவன். தவிர இதற்கேற்ற மாதிரி இங்குள்ளவர்களும் இணக்கமாகவே இருக்கிறார்கள் என்பதறிந்ததும் தங்களுடைய இலட்சியம் அதிவிரைவிலேயே எட்டப்படும் என்பதில் ஐயமில்லை என்ற முடிவுக்கு வந்தான் அவன். “உலூகா, காலைச் சிற்றுண்டி முடிந்ததும் நாம் தஞ்சை புறப்படுகிறோம். குதிரைகளைத் தயார் செய்துவிடு. இங்குள்ள காவலர்கள் இருவரைத் தவிர மற்றவர்களுக்கு, குறிப்பாக சமையலாள், போன்றவர்களுக்கு விடுமுறை கொடுத்துவிடு” என்று கூறியதும் அவன் வெளியே வந்து ஒவ்வொருவராக அழைத்து ஆளுக்குப் பத்து பொற் காசுகள் அளித்து மீண்டும் தெரிவிக்கும் வரை ஓய்வில் இருக்கும்படி கூறியதும் அவர்கள் மகிழ்வுடன் நகர்ந்தனர். சிற்றுண்டி முடிந்தது. மாளிகையில் யாவும் ஒழுங்கு செய்யப்பட்டன. பிறகு தஞ்சைத் தூதுவன், வேவுப்படையிலிருந்து இரு ஆட்கள் வந்ததும் புறப்பாட்டுக்கான யத்தனம் செய்து முடித்தான். சிம்மநாதன் தன் குதிரை மீது ஏறியதும் முன்னே இரு குதிரை வீரர்கள் செல்ல, பின்னே உலூகனும் தஞ்சை ஆளும் தொடர, அவர்களுக்கும் பின்னே இரு வீரர்கள் செல்ல... நகரின் நாலு வீதிகளையும் சுற்றிய மாதிரி இந்தக் குழு சென்று ஆலய வாசலில் இறங்கி அங்கே வணக்கத்தை வெளியே நின்றபடி செலுத்திவிட்டு நகரைவிட்டுப் புறப்பட்டதும் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு இவர்கள் வெளியேறிய பிறகு மீண்டும் மூடப்பட்டன. சூரியனார் கோயில் வரை இதர உதவிகள் உடன் வந்து திரும்பிவிட்டனர். இப்போது சிம்மநாதன், உலூகன், தஞ்சை மெய்யுதவி தகடூரான் ஆகிய மூவரும்தான் பெருவழிச் சாலையில் பயணம் செய்தனர். “இந்தச் சூரியனார் கோயில் எத்தனையோ காலத்துக்கு முன்னர், யுக யுக யுகாந்தரத்துக்கு முன்னர் என்றுகூடச் சொல்லுகிறார்கள்... சமைக்கப்பட்டதாம். சூரியதேவனே நவக்கிரஹங்களுக்கு தோஷ பரிகாரத்துக்காக பூசை செய்வதாக ஐதிகம். எங்கள் சோழ மன்னர்கள் சூரிய குலமாதலால் இந்தக் கோயிலுக்கு அவர்கள் கொடுத்துள்ள முக்கியத்துவம் சிறப்பானது. தவிர இங்கேயே முன்னாளைய மன்னவன் பட்டத்தரசியாரும் இருந்தார்கள். இப்போதும் கூட அரசகுல மாதேவியர் இங்கேயே தங்கி வருகிறார்கள். இது ஒரு பெருந்தலம்” என்றான் தகடூரான். சிம்மநாதன் கங்க நாட்டிலேயே இவ்வூர் பற்றிக் கேள்விப்பட்டுள்ளான். எனவே கீழே இறங்கி இறைவனை தொலைவிலிருந்தே வணங்கிவிட்டு ஏறினான் குதிரை மீது... மீண்டும் பயணம் தொடர்ந்தது. “இதுதான் கொள்ளிடம்... இப்பகுதியின் பாசன வசதிக்கும் நில வளத்துக்கும் ஆதாயமாயிருக்கும் அன்னை காவிரியின் கிளை நதி. அடுத்து வருவது... இதோ இதுதான் திருப்பனந்தாள். இதுவும் புராண காலத்தலம். இறைவன் இங்கு சற்றே குனிந்தாற் போலச் சாய்ந்து தரிசனம் அளிக்கிறார். இது பாடல் பல பெற்றதும் மட்டுமில்லை. தமிழ் வளர்க்கும் திருப்பதியும் ஆகும்.” சிம்மநாதன் இருபுறமும் பச்சைப்பசேல் என்று நாலா திசையிலும் பச்சைப் போர்வை போர்த்தியிருப்பது மாதிரி பிரமையூட்டும் இயற்கையும் செயற்கையும் இணைந்த அருங்காட்சியில் லயித்தபடி சென்றான். சோழ நாடு சோறுடைத்து என்று பழமொழி. எனவே நாட்டு வளம்தான் சோழ நாட்டை எல்லா வகையிலும், வீரம், தீரம், அறிவு, ஆற்றல் அனைத்திலும் நிறைவுபெற்ற மக்களைப் பெற்று, நாட்டினைச் சிறப்புடன் இயங்கச் செய்கின்றது என்று எண்ணப் பெருமூச்சு செறிந்தவன் செவியில், “இது ஆடுதுறை. இருபுறமும் நதிகள் வளமான ஊர்... தாம் இப்பொழுது இடைமருதூர் வந்திருக்கிறோம். புராண காலத்திலிருந்து பெருமை பெற்ற தலம்... இதோ திருக்குடந்தை நாட்டை அடைகிறோம். சோழர் சீமையில் சீர்மிகு தலமிது. இது திருவேரகம்... தஞ்சையின் எல்லையை நெருங்கி விட்டோம்.” உச்சி வெய்யில் காரணமாக அவர்களுடைய குதிரைகள் சற்றே களைத்தாலும் வேகத்தைக் குறைக்கவில்லை. தரணி புகழ்த் தஞ்சையென்றும், தஞ்சாபுரி என்றும் பெயர் பெற்று சோழ குலத்தின் மாமன்னனாகவும் தமிழகத்தின் சிறப்புமிக்க திரிபுவனச் சக்கரவர்த்திகளாகவும் விளங்கி திருமகள் போலப் பெருநிலச் செல்வியும், தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள, காந்தளூர்ச் சாலைக்கல மறுத்தருளி வேங்கை நாடு, கங்கைபாடியும்... கொல்லமும், கலிங்கமும் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும்... செழியரைத் தேடிக் கொள் கோராசகேசரி அருமொழி மும்மடிப்பன்மரான ராஜராஜன் இருந்து ஆண்ட நகரமும், பெருவுடையார் கோயிலும் கொண்ட ஊரான தஞ்சைக்குள் மூவரும் நடுப்பகல் நேரத்தில் நுழைந்தனர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் பற்றி நிரம்பக் கேட்டிருக்கிறான். தொலை தூரத்திலிருந்தே அதன் கோபுரம் நன்றாகத் தெரிந்தாலும் கோயில் அழகை அருகில் போய்க் காணும் வாய்ப்பு, இவ்வளவு காலமாகக் கிடைக்குமா? என்று நினைத்தவனுக்கு இன்று கிடைத்திருக்கிறது என்றால்... தஞ்சை மாநகர்க் கோட்டையின் முகவாயிலில் குதிரைகள் மீது இரு காவலர்கள் கம்பீரமான உடையணிந்து எடுப்பான தோற்றத்துடன் வலங்கை இடங்கை மாறி காவல் புரிந்தனர். சிம்மநாதனை அழைத்து வந்த காவலர்கள் அவர்களை வணங்க அவர்களும் பதில் வணக்கம் செலுத்தினர். அரண்மனையுள்ளே அங்கு வேலை செய்பவர்கள் கூட ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். பெருங்கதவு... அதில் ஒரு சிறு திட்டிவாயில். உள்ளேயிருந்து வந்தவன் பெருங்கதவைத் திறந்துவிடுமாறு கூறி சிம்மநாதனுக்கு வணக்கம் செலுத்தினான். பிரதி வணக்கம் செய்தவன் கதவு திறந்ததும் இருவரும் உள்ளே செல்ல மீண்டும் கதவுகள் மூடப்பட்டன. “இது புறம்பாடி” என்றான் தகடூரான். சிம்மநாதன் சற்றே விழித்து “அப்படியென்றால்?” என்று விளக்கம் கேட்டதும் “நாம் செல்லும் பாதையில் பெருவீதிகள் மட்டும் இல்லை. பேரங்காடி, சிற்றங்காடி, நாளங்காடி, இவை தவிர எங்களைப் போன்ற அரசு ஊழியர்களின் குடியிருப்புகள்... அதோ பார்த்தீர்களா... அவைதான் எங்கள் குடியிருப்புகளை இங்கே வேளம் என்று கூறுகிறோம். நாம் செல்லும் இந்த வீதிதான் வீரசோழப் பெருந்தெரு. அது ராசவித்தியாதரப் பெருந்தெரு, திரும்பிச் செல்லும் அந்த வீதிதான் சூரசிகாமணித் தெரு. இவை தாண்டி விட்டோமல்லவா? அது இசை வல்லார் குடியிருப்பு. அடுத்தது வில்லிகள் குடியிருப்பு. அதன் பக்கத்தில் யானைப் பாகர் தெரு, குதிரைக்காரர் தெரு. இதோ நாம் உள்ளாலையை நெருங்குகிறோம். அதாவது இதுவரை நகரின் புறம்பாடிப் பகுதியில் வந்த நாம் உள்ளாலை என்று கூறப்படும் அரண்மனைகள் உள்ள ராஜவீதி, ராஜகுடும்பத்துடன் உறவு கொண்டுள்ள பெருந்தலைகள் குடியிருப்பு. சேனையிலும் அரசிலும் மிக உயர்ந்த பதவி வகிப்போர் விடுதிகள், பெரு வணிகர்கள் ஆகியோரைக் கொண்ட நாலு வீதிகள் உள்ளாலையில் அடங்கியவை” என்று கூறியவன் வீதிகளில் அங்குமிங்கும் இதர மெய்யுதவிகளைக் கண்டு வணங்கியபடியே சென்றான். “நாம் இப்போது மாமன்னர் அரண்மனையை நெருங்குகிறோம். அங்கிருந்து தினசரி இறைவனைத் தரிசிக்க அரண்மனை வாயிலுக்கு வந்து அதோ அந்த மேடை இருக்கிறதே அங்கு நின்று தரிசிப்பார். மூலஸ்தானம் தீபாராதனை இந்த இடத்திலிருந்தே தெரியும்.” “தஞ்சைப் பெருவுடையார் கோயில் தென்னகத்தில் மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டது. எங்கள் சோழப் பேரரசுக்கு என்றென்றும் பெருமையைத் தந்து துணை செய்யும் இறைவர் பெருவுடையார். எங்கள் முன்னாளைய மாமன்னர் திரிபுவன சக்கரவர்த்திகள் ராஜராஜ சோழ தேவர் எடுப்பித்த இக்கோயில் 500 அடி நீளமும் 200 அடி அகலமும் கொண்ட பரப்பில் அமைந்துள்ளது. முன் வாயில் முற்றமே 250 சதுர அடிகள். கோயிலின் கம்பீரத் தோற்றத்தை தெள்ளிய முறையில் எடுத்துக் காட்டும் விமானத்தின் உயரம் 190 அடிகள். விமானத்தைத் தாங்கும் கருவறையின் உயரம் 50 அடி. ஒற்றைக் கல்லில் உருவாகியுள்ள பெரிய நந்தி தமிழகத்திலேயே மிகப் பெரிதாகும். இதை நாங்கள் ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கிறோம். அங்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் எங்கள் ராஜேந்திர சோழச் சக்கரவர்த்திகள் படைத்துள்ள கோயிலை கங்கைகொண்ட சோழீஸ்வரம் என்று அழைக்கிறோம். இதோ நாம் அரண்மனைக்கு வந்துவிட்டோம்” என்று தகடூரான் கூறியதும் எதிரே நீண்டதொரு சுவர் போல 101 குதிரை வீரர்கள் அரண்மனை வாயிலை அணிவகுத்து நிற்பதைப் பார்த்த சிம்மநாதன் ‘நடுப்பகல் வெய்யிலில் அதுவும் சமாதான காலத்தில்... ஏன் இப்படியொரு அணிவகுப்பு!’ என்று எண்ணிய போது சற்று எட்டத்தில் இன்னொரு வீரர் சுவர் பக்கவாட்டில் ஒன்று பின் பக்கத்தில் ஒன்று... ‘ஓகோ! யாரோ அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் போலும்...’ என்று எண்ணியவன் செவியில் “சோழ நாட்டின் மெய்க்காவல் படைத்தலைவர் சோழ இளவரசர் சோழகங்கன் வந்திருக்கிறார். அதோ” என்று கையை நீட்டிக் காட்டினான். மிகக் கம்பீரமான வெள்ளைப்புரவி ஒன்றின் மீது அமர்ந்தபடி சோழகங்கன் அணிவகுப்பைப் பார்வையிட்டுக் கொண்டு வந்தான். அரண்மனையின் முன் வாயிலை சுவர் மாதிரி அடைத்து நின்ற அணி சட்டென இரண்டாகப் பிளக்க ஊடே ஊடுருவி வந்தான் இளவரசன். “அணிவகுப்பால் சற்று தாமதிக்கும்படி செய்துவிட்டேன்... நீங்கள் போகலாம்” என்று என்று அயர்ச்சியுடன் சோழகங்கன் சொன்னதும் சட்டென வணங்கினான் சிம்மநாதன். அதை ஏற்றவன், “தகடூரா... தெற்குப் பகுதி மாளிகையில் இவருக்கு இருக்கை ஏற்பாடு. சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும். இன்னும் இரண்டு நாழிகையில் தமிழ்வாணி இவரைத் தன் மாளிகையில் சந்திக்கிறார்.” சோழகங்கன் நகர்ந்து கொள்ள தகடூரான் முன்னே செல்ல சிம்மநாதன் ‘அநாவசியாக ஒரு வார்த்தைகூடப் பேசமாட்டார்கள் போலிருக்கிறது இந்த சோழ ராஜகுலத்தினர்!’ என்று வியந்தபடி தகடூரானைத் தொடர்ந்தான். “தகடூர்த் தம்பிக்கு மன்னர் பெயரில் வாழ்த்துக்கள்” என்று சற்றுத் தளர்ந்த நடையுடன் வந்த ஒரு முதிய பிராய சோழ வீரன் இவர்கள் அண்டை வந்ததும், தகடூரான் சட்டென இறங்கி “பெரிய ஐயா! வணக்கம்!” என்று கூறிவிட்டு “இவர் கங்க நாட்டிலிருந்து வந்துள்ள பிரபு பெயர்...” என்று இழுத்தான். “தெரியும் தம்பி. சிம்மநாதன் என்னும் தூதர். ராஜரத்ன விஜயகீர்த்தியின் வளர்ப்புப் பிள்ளை இவர்” என்றதும் திடுக்கிட்டான் சிம்மநாதன். ‘யார் இந்தக் கிழவன்? நம் குருவின் பெயரைச் சர்வசாதாரணமாகக் கூறுகிறான்...’ என்று யோசித்தபடி இறங்கினான். “என்னை இங்கே பட்டித்தேவன் என்று சொல்லுவார்கள்” என்று அவன் சொன்னதும் சிம்மநாதன் காலில் ஏதோ சுட்டுவிட்ட மாதிரி ஒரு துள்ளி துள்ளினான். “நீங்கள்... தான்... மாவீர மெய்யுதவி... பட்டித்தேவரா? ஐயா! வணக்கம் ஒன்றல்ல, நூறல்ல, ஓராயிரம் என்றாலும் சரி. என்னையும் என் குருநாதரையும். உயிர்காத்த உத்தமரே மிக வணக்கம்!” என்று வெகுவாகப் பதறிக் கூறிவிட்டு அவரை நெருங்கி அவருடைய இரு கரங்களையும் பிடித்துத் தன்னுடைய கண்களில் ஒற்றிக் கொண்டான் சிம்மநாதன். கிழவன் பட்டித்தேவன் கண்கள் கூடக் கலங்கிவிட்டன சில நொடிகள். இலேசில் அசைந்து கொடுக்காத மனமாயிற்றே அவனுடையது. “ரொம்பவும் வர்ணிக்க வேண்டாம் தம்பி. நீ அப்போது குழந்தைதானே. நாலைந்து வயதுதானிருக்கும் இல்லையா?” “ஆமாம். ஆனால் குருநாதர் சொல்லியிருக்கிறார்.” இதற்குள் அணிவகுப்பு முடிவுபெற்றதாலோ என்னவோ வீரர்கள் பலர் பட்டித்தேவரை வந்து சூழ்ந்து நின்று வணக்கம் கூறி மகிழ்ச்சியுடன் நகர்ந்தனர். ஒரு சிலர் யாரோ ஒரு அன்னியனுடன் இப்படி அன்யோன்யமாகப் பழகுகிறாரே நம் பட்டித்தேவர் கூட! என்று வியந்து நின்றனர். ராஜரத்ன விஜயகீர்த்தி “சோழ நாட்டில் நீ பட்டித்தேவன் என்னும் மாபெரும் வீரனைச் சந்திக்க நேர்ந்தால் அவரை எனக்குச் சமமாக ஏன் எனக்கும் மேலாக மதித்துப் போற்றி வழிபடு. எனக்கும் உனக்கும் அவர்தான் புத்துயிர் கொடுத்தார். அவரில்லையேல் நானுமில்லை, நீயும் இல்லை. உனக்கு அப்போது ஐந்து வயது... எனக்குச் சுமார் ஐம்பது வயதிருக்கும்... காஞ்சிபுரத்தில் குலோத்துங்க மாமன்னர் தமது ஆட்சியின் வெள்ளிவிழாவை வெகு விமரிசையாக நடத்தினார். நான் நம் மன்னருடன் அதில் கலந்து கொள்ளப் போனேன். நீ என்னுடன் இருந்தாய்... மிகப்பெரிய ஊர்வலம். அங்கு அதைப் பட்டணப் பிரவேசம் என்பார்கள். அரசர், அரசி இருவரும் இணைந்து அமர்ந்த பெரிய யானை தாங்கிய அம்பாரியைப் பார்த்த நீ அதில் உட்கார வேண்டும் என்றாய். நான் திகைத்து உனக்குப் போக்குக் காட்டினேன். ஆனால் நீ பிடிவாதத்துடன் அடம்பிடித்து அழுதாய். நம் மன்னர் சரி... இந்தப் பயலை ஒரு யானை மீது ஏற்றிவரச் செய்யலாம். காஞ்சியில் யானைகளுக்குப் பஞ்சமா என்ன? என்று ராஜ தம்பதிகளைத் தாங்கிய யானைக்குப் பக்கவாட்டில் சென்ற இரு யானைகள் மீது யாரும் இல்லை. எனவே ஒன்றில் உன்னை ஏற்றிக் கொள்ளும்படி ஒரு காவலன் மூலம் ஏற்பாடு செய்தார். நீ என்னைவிட்டு இறங்க மறுத்து என்னையும் அதன் மீது அமரும்படி மீண்டும் அழுதாய். அந்த யானைப்பாகன் என்னையும் ஏறச் சொல்ல நீ என் மடி மீது அமர்ந்தபடி ராஜ தம்பதிகளைத் தாங்கிய யானையைப் பார்த்தாய்... இதற்குள் ஒரு நடுவயது சோழ வீரன் மிகக் கம்பீரமான தோற்றமுள்ளவன் குதிரை மீது வந்தவன் “ஏண்டா மூடா? இந்த யானை மீதா இவர்களை ஏற்றினாய்? நேற்று முழுமையும் இது மதம் பிடித்த மாதிரி...” என்று சொல்லி முடிப்பதற்குள் நம்மைத் தாங்கியிருந்த யானை தன் துதிக்கையைத் தூக்கி பயங்கரமாகப் பிளிற நீ “ஐயோ...!” என்று அலறிக் கண்களை மூடி என்னை இறுக அணைத்தாய்... நான் நடுங்கிவிட்டேன். ஏனெனில் யானை ஊர்வலத்தில் புகுந்து ஓடலாயிற்று... நாலா பக்கத்திலும் மக்கள் பயந்து ஓடினர். எனக்கு இனி பிழைக்க முடியும் என்ற எண்ணமே இல்லை. உன்னை எப்படியாவது காக்க வேண்டுமே என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். ஆனால் யானையின் வெறியாட்டத்தால் உண்டான புழுதி மண்டலம் எல்லாவற்றையும் மறைத்தது. உடனே நம்மை அது தூக்கியெறியத் துதிக்கையை நீட்டியது. நான் உன்னை தாங்கியபடி பின்னுக்கு நகர்ந்தேன். “நகராதே” என்று கத்தினான் பக்கத்தில் வந்த அந்த நடுவயது வீரன். ஆனால் மீண்டும் யானை துதிக்கையைத் தூக்கியதும் தனது வாளால் அந்தத் துதிக்கையில் போட்டார் ஒரு போடு... அவ்வளவுதான் யானை மேலும் பெரிதாகப் பிளறிக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தது. என்னுடைய பயமோ எல்லையில்லாமல் போய்விட்டது. இதற்குள் தன்னைத் தாக்குபவனை அதாவது அந்த நடுவயது வீரனை அது துரத்தலாயிற்று. மக்கள் கூட்டம் என்ன ஆகுமோ என்று நாலாபுறம் சிதறி ஓடியபடி யானையின் கொடுமையையும் அந்த நடுவயது வீரன் அதற்குப் பாய்ச்சல் காட்டி ஓடுவதையும் கண்டு கலங்கி நின்றனர். யானை முன்னே செல்லும் குதிரை வீரனைப் பிடிக்க வெட்டுண்ட துதிக்கையினால் முயன்ற போது பக்கவாட்டில் நாலைந்து புரவி வீரர்கள் இதற்குள் வந்துவிட்டார்கள். யானை நம்மைச் சுமந்து கொண்டு அந்த வீரனையே குறியாகக் கொண்டு மேலும் வேகமாக ஓடிப் பாலாற்றங்கரையை நண்ணிவிட்டது. முன்னே சென்ற நடுவயது வீரர் ஆற்றில் குதித்ததும் யானையும் ஆத்திரத்துடன் அந்த வெள்ளக்காடான ஆற்றில் இறங்கியதும் நான் நாம் செத்தோம் என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் யானைதான் நீரில் நகர்ந்ததே தவிர நாம் இல்லை. நம்மைக் குழந்தை மாதிரி அலக்காகத் தூக்கிக் கொண்டு கரை சேர்ந்தார் அந்த நடுவயது வீரர்... நானும் உன்னைப் போல மூர்ச்சையானேன். என் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் நான் தெளிந்து விட்டேன். நீயும் பரக்கப் பரக்க விழித்தாய். “பட்டித்தேவா, பையன் பிழைத்துவிட்டான். ராஜரத்னருக்கும் பயமில்லை” என்று சோழ மாமன்னரே கூறியது எனக்குக் கேட்டது. சட்டென நிமிர்ந்து பார்த்தால் சோழ மன்னர், சோழப் பேரரசி, நமது கங்க மன்னர். நம்மை உயிர்ப்பித்த பட்டித்தேவனுக்கு நம் மன்னரே இறுக அணைத்து தமது சொந்த முறையிலும், நம் நாட்டின் சார்பிலும் நன்றி கூறினார். பிறகுதான் தெரியும். அந்தப் பட்டித்தேவர் சோழர் சேவையில் பிஞ்சு வயதிலிருந்தே புகுந்தவர் என்றும், சோழப் பேரரசியின் மெய்க்காவல் படையின் தலைவர் என்றும் அறிந்தேன். பிறகுதான் சோழர் நாட்டுக்குச் சென்ற போதெல்லாம் பட்டித்தேவருடன் தங்காமல் வருவதில்லை” என்று முன்பு சொன்னவர் இன்னொன்றையும் சொல்லிய பிறகே சோழ நாட்டுக்குச் சிம்மநாதனை அனுப்பினார். “பட்டித்தேவர் உன்னை உயிர்ப்பித்த தெய்வம்தான். ஆனால் அவர் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சோழர். சோழ நாடு... எல்லாமே சோழ மயம்தான். எனவே நீ இதையும் மறந்துவிடக் கூடாது” என்றார். அப்படிப்பட்ட பட்டித்தேவர் இன்று எதிரே நின்று “நீ அப்போது குழந்தைதானே?” என்று கேட்கிறார். “ஆமாம் ஐயா! நான் அன்று முதல், உங்களைப் பொறுத்த வரை உங்களுக்கு ஒரு குழந்தை மாதிரிதான். ஏனென்றால் நீங்கள்தானே உயிர் கொடுத்த தெய்வம்...” “தம்பி... தம்பி... இந்த மாதிரி பேசினால் எனக்குப் பிடிக்காது. பிறரைத் துதி செய்பவன் நல்லவன் இல்லை என்பது என் கருத்து” என்று கூறியவர் பின்னே “பட்டித்தேவரே! என்ன இது? நெடுந்தூரம் வந்தவரை நிற்க வைத்தபடியே” என்று ஒரு குரல் வந்ததும் “மன்னிக்க வேண்டும் இளவரசே! ஏதோ பழைய சம்பவம்... நினைவு ஒரு தொடர் வியாதி மாதிரி” என்று கூறிவிட்டு சட்டென வணங்கியதும் சோழகங்கன் குதிரை மீது இருந்து இறங்கி “ஏ... தாத்தா... உன்னுடைய சீடப்பிள்ளையிடத்திலேயே கதை ஆரம்பிக்கிறாயே” என்று கூறிவிட்டு சிம்மநாதனைப் பார்த்து “சிம்மநாதா... இவர் தோள் மீது வளர்ந்தவர்கள்தான் நாங்கள் நால்வரும். நான் இவரிடம்தான் மெய்யுதவிகள் வேலைகள் பற்றி பயிற்சி பெற்றவன். பாராட்டு என்றால் பறந்தோடுவார். அன்பு என்றால் அணைத்திடுவார்” என்று கூறியபடியே அவரை இறுக அணைத்துத் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு கலகலவென்று சிரித்தான் அவன். பட்டித்தேவனுக்கு வெட்கமே வந்துவிட்டது. “போங்கள் இளவரசே! இதென்ன சிறு குழந்தை மாதிரி... இந்தப் பசங்கள் எல்லாரும் சிரிக்கிறார்கள் பாருங்கள்” என்று கூறிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்ததும் சோழகங்கன் “சிரிக்கட்டும் பாட்டா! சிரிக்கட்டும். சிரிப்பு ஒரு நல்ல மருந்து. இத்தனை நேரமும் அணிவகுப்பில் களைத்திருக்கிறார்கள் அல்லவா?” என்று பரிந்து பேசினான் இளவரசன். “மண்ணாங்கட்டி. இதென்ன அணிவகுப்பு? நீங்கள் ஏதோ ஒப்புக்கு நடத்துகிறீர்களே. இந்தப் பயல்களைச் சும்மா அப்படி இப்படி விடிகாலம் முதல் மாலை வரை ஆட்டி அலட்டி... உருட்டிப் புரட்டி உலுக்கிவிட வேண்டாமா? நான் பனிரெண்டு ஆண்டுகள் நரலோக வீரரிடம் என்ன பாடுபட்டுப் பயிற்சி பெற்றேன் தெரியுமா? உம்! இதெல்லாம்... ஒரு பயிற்சியா?” என்று கூறி உதட்டைப் பிதுக்கியதும் இளவரன் “ஆகாக.!” என்று கூவிவிட்டு இரைந்து சிரித்தான். எதற்கிந்த சிரிப்பு என்று பட்டித்தேவன் கேட்பதற்குள்ளாக... மதியச் சாப்பாட்டு மணி ஒலித்துவிட்டது. “சரி சரி, நாம் முதலில் வந்த விருந்தினரை நடுவீதியில் நிறுத்தி இங்கிதமில்லாமல் பேசுகிறோம்... வாரும் போகலாம்” என்று இளவரசன் முன்னே நடந்ததும் சிம்மநாதன் தொடர்ந்தான். ஆனால் “நாம் மீண்டும் சந்திக்க வேண்டும்” என்று அவன் பட்டித்தேவரிடம் கூறாமல் நகரவில்லை. இதுகாறும் ஒதுங்கி நின்ற உலூகனும் தொடர்ந்து சென்றான். தனது மாளிகைப் பகுதியில் பயண ஆடைகளைக் கலைத்து, நீராடிவிட்டு புத்துடை அணிந்து சுத்தமாகச் சென்றான் அரண்மனை உண்டிச் சாலைக்கு. அற்புதமான அறுசுவை உணவு. கங்கைகொண்ட சோழபுரத்தில் சொந்த சமையல் ஆள் செய்திட்டாலும் இந்த அரண்மனை உணவு போல் இல்லையே அது. இருக்கை திரும்பியவன் எதிரே நின்றான் உலூகன். “என்ன உலூகா... தஞ்சை வந்தாயிற்று. இனி என்ன?” என்று தாமாஷாகக் கேட்டுவிட்டு மஞ்சத்தில் அமர்ந்தவன் எதிரே தரையில் அமர்ந்த உலூகன் “இனி என்னவோ... இங்கு எதுவுமே புரியவில்லை. நாம் வந்தது முதல் எதுவுமே புரியாததோர் சூழ்நிலை. திடீர் திடீரென்று சம்பவங்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் எதுவும் நகராத அதாவது வீண் பொழுது போவது மாதிரியும் ஒரு பிரமை. எனக்கு என்னவோ பாரதக் கதையில் வரும் மயன் மாளிகை மாதிரிதான் இங்கத்திய நிலைமை இருப்பதாய் ஒரு பிரமை. எது மேடு எது பள்ளம் என்று கூடத் தெரியவில்லை. மனிதர்களோ ஒரு பெரிய கலவை. சிரிக்கிறாரே என்றும் நம்ப இயலவில்லை. வெறுக்கிறாரே என்று ஒதுங்க இயலவில்லை. உங்களை உயிர் காத்த ஒரு கிழவன் இதெல்லாம் சாதாரணம் என்கிறான். இளவரசனோ சிம்மம் மாதிரி பார்க்கிறான். அடுத்த நொடியே தாத்தா என்று குழந்தை மாதிரி கூத்தாடுகிறான். தலைவரே, உண்மையில் சொல்லுகிறேன், இவர்கள் உண்மையாகவே இப்படித்தானா அல்லது எல்லாம் வெறும் நடிப்பா என்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.” என்றான். சிம்மநாதன் இலேசாகச் சிரித்துவிட்டு “எது எப்படியாயினும் நாம் எந்த நோக்கத்துடன் வந்தோமோ அது நிறைவேறும் வரை நாம் இதையெல்லாம் ஒதுக்கி விடுவதற்கில்லை” என்று கூறியதும் உலூகன் தலையாட்டிவிட்டு “அது உண்மைதான். ஆனால் அரசின் சகோதரி கலைச் சேவை என்ற பெயரில் உங்களை இங்கு அழைப்பதும் நீங்கள் இளவரசியைக் கண்ட உடனேயே தன்னை மறந்து விடுவதையும் எந்த வகையில் சேர்ப்பது தலைவரே?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டதும் சிம்மநாதன் வாய்விட்டுச் சிரித்துவிட்டான். பிறகு சிறிதளவு தைரிய மூட்டினால்தான் உலூகன் தெளிவு கொள்ளுவான் என்று ஊகித்துக் கொண்டு “இதோ பார் உலூகா... நாம் இங்கு வந்த வேலை வெற்றிகரமாக முடிவு பெற நிறையக் காலம் தேவை. அதாவது குறைந்தது ஆறு திங்களாவது ஆகும் என்று குருநாதரே கூறியுள்ளார். நாம் சீக்கிரம் முடிக்க முயற்சித்தாலும் நம் மீது அவர்கள் நம்பிக்கை வளர, வளர்ந்து அது உறுதி பெற்ற பிறகு நிலைத்திட சில திங்களாவது தேவை. பிறகுதான் நான் உள்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். புரிகிறதா!” “புரிகிறது. ஆனால்...” “கொஞ்சம் பொறுமையாகக் கேள். சோழ மன்னர் என்னைச் சில திங்கள் தங்கியிரு என்றார். உண்மை. ஆனால் அவருடைய அந்தரங்கச் சூழ்நிலையில் நானும் ஒரு உறுப்பினனாவது என்றால் அவருக்கு மிகவும் பிரியமானவனாக நான் தகுதி பெறுவது என்றால் அதற்கு காலம் நிச்சயம் தேவை.” “உண்மை.” “இவை இயற்கையாக இப்போது நடப்பதைப் போல நடந்திட வேண்டும். அதாவது நான் தஞ்சை வரவேண்டும் என்றோ, தமிழ்வாணியைப் பார்க்க வேண்டுமென்றோ கேட்கவில்லை. ஆனால் அவர்கள் விரும்பி அழைத்திருக்கிறார்கள்.” “ஆமாம். அதோடு அழைக்காமலே அழைத்திருக்கிறார் இளவரசியும் உங்களை...” உலூகன் கேலியாகச் சிரித்தான். சிம்மநாதன் சற்றே குமைந்தான். உலூகன் அசடு போல நடிப்பானே, தவிர பேசிவிடமாட்டான்... அவன் விஷயம் உண்மைதானே. அவளை மீண்டும் காண வேண்டும் என்ற ஆர்வம் அடக்க முடியாத அவாதானே இப்படிக் கொண்டு வந்தது இங்கே. என்றாலும் கனவு காண்பதற்கும் கற்பனை செய்வதற்கும் ஒரு எல்லையுண்டு. “உலூகா, நீ கேலி செய்யவில்லை. எச்சரிக்கிறாய். நல்லது. நான் கனவு காணும் முட்டாள் இல்லை. ஆனால் நான் துறவியும் அல்ல. கண்களுக்கு விருந்து என்றால் கருத்தும் அவ்வழி செல்லுதல் இயற்கையே. நல்லது. இது நீ நினைப்பது போல என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடாது. கூடிய வரை ஜாக்கிரதையாகவே இருப்பேன். ஆனால் நான் நிச்சயமாக சோழரின் உள்வட்டத்தில் ஊடுருவியே ஆக வேண்டும். அதற்கு எந்த வழி கிடைத்தாலும் சரி, விடாமல் புகுந்தாக வேண்டும். இளவரசர்கள், காடவர் போன்ற பெருந்தலைவர், தமிழ்வாணி போன்ற கலையரசிகள்.” “இத்தனை பேரும் விரும்பிவிட்டால் மகாசந்தேகியான பூந்துறை நாயகன் தலையிடாமல் எட்டி நின்றுவிடுவானா?” “மாட்டான். ஆனால் தானாக ஒதுங்காதவனை மற்றவர்கள் ஒதுக்கிவிட வேண்டும். அதாவது நம் மீது கொண்ட அபிமானம் நம்மைப் பூரணமாக நம்பும்படி செய்தால் பூந்துறையானை ‘நீ மட்டும் ஏன் இப்படி சந்தேகிக்கிறாய்’ என்று அவர்களே ஒதுக்கிவிட வேண்டும்.” “அப்படி ஒதுக்காவிட்டால்...” “நமக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.” “சரி, அவன் எப்படியாவது தொலையட்டும் என்று ஒதுங்கிவிட்டால்...” “நம்முடைய வேலை சுளுவாகிவிடும்.” “அப்படியானால் நான் ஒரு யோசனை சொல்லலாமா?” “தாராளமாகச் சொல்லலாம்.” “நீங்கள் அந்தக் கூத்தாடி அழகியை உண்மையிலேயே எத்தகையவள் என்று இன்னும் கொஞ்சம் சோதித்தால் என்ன?” என்று கேட்டதும் ‘சரி, நம் மனோநிலை புரிகிறது இவனுக்கு’ என்று அறிந்ததும் சற்றே தெம்பு கொண்டவனாய் “அதைப் பற்றிச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் உலூகா.” “சிந்தியுங்கள் நன்றாக. வேண்டாமென்று கூறவில்லை. ஆனால் காலதாமதம் செய்யாமல் செய்வது நல்லது. அவளுக்கு ராஜ குடும்பத்தின் எல்லாத் தரப்பிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. நான் இதைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் நன்கு தெரிந்து கொண்டேன். முட்டத்து அடியார் கூட இவளைப் பற்றி இவளுடைய பகை - வஞ்சந்தீர்க்கும் வெறி பற்றிச் சொன்னார்.” சட்டென சிம்மநாதனுக்கு கலிங்கத்தின் தாடிப் பெரியார் வல்லபி சந்திப்பு நினைவுக்கு வந்தது. எனவே இனியும் சந்தேகிப்பதற்கில்லை. “நீ சொல்வதை நான் ஒப்புகிறேன் உலூகா. நாம் அங்கு திரும்பியதும்...” “தேவையில்லை. அவள் இங்கே வந்து இரண்டு தினங்கள் ஆகிவிட்டன. இங்கு பத்து தினங்கள் லச்சவிதேவி நினைவுக் கொண்டாட்டம் இல்லையா?” “பேஷ்! நீ அதைத் தெரிந்து கொண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி.” “தங்களுக்கு அழைப்பு வரும் தன்னை சந்திக்கும்படி!” “மெய்யாகவா? நிச்சயமாகச் சந்தித்து சில முடிவுகளை...” “இல்லை இல்லை! சோதனைகளை என்று கூறுங்கள்!” “ஆமாம்! செய்து பார்த்துப் பிறகு நாம்...” என்று அவன் மேலே பேசுவதற்குள், யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டதும், “யார் அது என்று பார்” என்று உத்தரவிட்டான் சிம்மநாதன். வந்தவன் தகடூரான். “தங்களை அழைத்து வரும்படி உத்தரவு” என்றதும் “இதோ சில நொடிகளில் புறப்படுகிறேன்” என்று சிம்மநாதன் கூறியதும் உலூகன் எழுந்து வெளியே வர தகடூரானும் அவனும் மாளிகை வாயிலில் வந்து நின்றனர். ‘ஏதாவது இவனுடன் பேசலாமா?’ என்று உலூகன் யோசிப்பதற்குள் சிம்மநாதன் புறப்பட்டுவிட்டதால் எந்தப் பேச்சும் நடைபெற வாய்ப்பில்லை. |