உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 14 தஞ்சை அரசரின் அரண்மனை பெரிது. அழகானது, வலுவானது என்று வருணிப்பது அவசியமில்லை. ஆனால் கலை மாளிகை என்று கூறப்படும் அந்தத் தமிழ்வாணியின் இருப்பிடம் உண்மையிலேயே ஒரு அற்புத நிலையம். மாளிகை வாயிலில் மிக அழகான இரு கந்தர்வப் பெண்கள் சிம்மநாதனை வரவேற்ற போது அப்படியே சொக்கிப் போய் நின்றுவிட்டான். இதற்குள் இவனைக் கொண்டு சேர்த்த தகடூரான் நகர்ந்துவிட, “வாரும்... வாரும்” என்று வரவேற்று தனது கரகரத்த குரலில் அழைத்தபடி பட்டித்தேவன் வந்த பிறகுதான் அவனுக்கு தான் இரு சிலைகளுக்கு எதிரில் நிற்கிறோம் என்பது புரிந்தது. நுழைவாயில் தாண்டியதும் கூடத்துச் சிறுவாயில் பிரமாத வேலைப்பாடுகள். வாயிற்படியின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு அதிசயம். அதைச் சிறிதே பார்த்து நகர்ந்ததும் மிகப் பிரும்மாண்டமான கூடம்... ஒரு சிறு நூற்றுக்கால் மண்டபம் மாதிரி. ஆனால் ஒரு தூண் கூட நடுவில் இல்லாது, விரிவான மேல்விதானத்துடன் கூடிய கூடம். வழுவழுப்பான தரை, வண்ணக் கோலங்கள் விதவிதமாக. சுற்றுச் சுவர்களில் வண்ண ஓவியங்கள். சிறு சிறு சிலைகள். எத்தனையோ வகை வகையான இசைக் கருவிகள்... “பட்டித்தேவா... அந்தக் கங்க வீரன்” என்று கேட்டபடி தன் அறையிலிருந்து வெளிவந்த தமிழ்வாணி “வந்தாயிற்றா?” என்று அடுத்துக் கேட்டுவிட்டு கூடத்துக்கு வந்தவள் “ஓ...! சிம்மநாதனா... நல்லது. இதோ இங்கிருந்து பார்... அங்கே” என்று மேல்மாடத்தில் ஒரு சுவரைப் பரபரப்புடன் காட்டியதும் சிம்மநாதன் சற்றே தள்ளி நின்று மேலே பார்த்தான். பார்த்த உடனேயே அது யார் என்று தெரிந்து கொண்டான். “அவர்தான் கங்க நாட்டு கலைத் திலகம் லட்சவிதேவி...” “இதே படம் ஒன்றை நான் உதயேந்திர மாமன்னர் மாளிகையில் பார்த்திருக்கிறேன். இங்கு அது தத்ரூபமாயிருக்கிறது.” “ஆமாம். உங்கள் அரண்மனை ஓவியன் லச்சவிதேவியை நேரில் பார்த்து அப்படியே எழுதியது. அவர் இங்கு பல நாட்கள் இருந்தார். அப்போது. எனக்கு இளம் வயது.” “ரொம்ப அழகும் கூட” என்றான் பட்டித்தேவன். ராஜ குடும்பத்தினருடன் அவன் கொண்டிருந்த பாசம் இவ்வாறு பேசச் சொல்லியது போலும். “எங்கள் பட்டித்தேவர்தான் எங்களுடைய அன்புத் தாத்தா. அவர் என்னை அழகி என்றாலும் சரி, குரூபி என்றாலும் சரி, எது சொல்லவும் அவருக்கு உரிமையுண்டு.” “அதற்காக அவர் என்னை என்ன சொல்லுகிறார் தெரியுமா?” என்று பரபரப்புடன் கேட்டுக் கொண்டே இளவரசி ராஜசுந்தரி அங்கு வந்ததும் சில விநாடிகள் திகைத்த சிம்மநாதன் சட்டென்று “வணக்கம் இளவரசி” என்றதும் அவள் திடுக்கிட்டாள். தனக்கு... அதாவது இது ஒரு இளஞ்சிட்டு என்று அத்தனை பேரும் நினைத்து குழந்தையாகவே பாவிக்க இவர் தன்னை மதித்து வணக்கம் சொன்னதும் அவள் திடுக்கிடாமலிருக்க முடியுமா? அதிசயமாகப் பார்த்தாள் அவனை. பிறகு “வணக்கம்... வணக்கம்” என்ற பரபரப்புடன் இரண்டு முறை வேகமாகக் கூறியதும் தமிழ்வாணியும் பட்டித்தேவனும் சிரித்துவிட்டனர். எதற்கு இந்த சிரிப்பு என்று அவர்களைச் சற்றே கோபத்துடன் பார்த்த இளவரசியிடம் “இந்தக் கங்க நாட்டு வீரர் இங்கு வந்ததும் எனக்குக் கூட வணக்கம் கூறவில்லை. உனக்குத்தான் கூறினார். நீயோ பதிலுக்கு இரட்டை வணக்கம் போடுகிறாய். அதுதான் சிரித்தேன்” என்றான் அடக்கமாகச் சிரித்தபடி. இளவரசியையே பார்த்துக் கொண்டிருந்த சிம்மநாதன் நாணமுற்றான். “உண்மைதான். ஆனால் அடுத்துப் பட்டித்தேவன் “சிட்டுக் குருவிக்குக்கூட பதில் வணக்கம் சொல்லத் தெரிந்துவிட்டதே. என்றுதான் சிரித்தேன்” என்றான். “ஓகோ! நான் என்ன சின்னப் பாப்பாவா... இன்னமும் கூட? ஏ! தாத்தா... நீங்கள் என்னை இப்படிக் கேலி செய்தால்” என்று உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு பட்டியை விழித்துப் பார்த்தாள். பட்டித்தேவன் ஒரு பெருமூச்சுவிட்டு “இப்படித்தான் அம்மா... ஒவ்வொன்றாகப் பெரிதாகிப் பறந்துவிடுகிறது என்னை மட்டும்விட்டு. பாசம் ஒரு தீவர்த்தி மாதிரி...” என்று கூறியபடி நகர்ந்தான். சட்டெனப் பாய்ந்து அவன் கையைப் பிடித்த அரசகுமாரி “தாத்தா... என் மேல் கோபமா? நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்...” என்று குழைந்ததும் “நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை. காலம் சொல்லுகிறது. ஒரு நாள் நீங்களும் வேறிடத்துக்குப் போக வேண்டியவர்தானே என்று... அப்பொழுது நான் யாரைச் சிட்டுக்குருவி என்று சொல்லிக் கொஞ்ச முடியும்?” என்றதும் ராஜசுந்தரி சட்டென அவன் காதுக்குள் ஏதோ சொல்ல... அவன் கண்கள் வியப்பால் மலர்ந்து... “ஆ! ஆ! ஓ! பேஷ் பேஷ்! நீ... நீங்கள்” என்று தாங்க முடியாத ஆனந்தத்துடன் ஏதோ உளறிக் கொண்டே போய்விட்டான் அப்பால். தமிழ்வாணி சற்று நேரம் பேசாமல் பட்டியையும் இளவரசியையும் பார்த்துவிட்டு “பாவம் பட்டி! எங்களை எல்லாம் எடுத்து வளர்த்து பாசத்துடன் இருந்த பிறகு நாங்கள் அவனை தனியாளாக விட்டுவிட்டுப் போய் விடுகிறோம். எழுபதாண்டுகளாக இந்தக் குடும்பத்தில் அவரும் ஒருவர்” என்று சொன்னதும் சிம்மநாதன் “ஆமாம், அவர் வெளிப்பார்வைக்கு பயங்கரம். உள்ளே அத்தனையும் மனுஷ்ய பாசம்” என்றான். தமிழ்வாணி இதை ஒப்பியவள் மாதிரி “ஏ! சுந்தரி! நீ என்ன சொல்லி நம்ம பட்டியை அப்படிச் சிரிக்க வைத்தாய்” என்று கேலியாகக் கேட்டதும் “அது ஒரு பெரிய ரகசியம். அவருக்கும் எனக்கும்தான் தெரியும்” என்று சொல்லிவிட்டுச் சட்டென ஒரு துள்ளுத் துள்ளி இசைக்கருவிகள் வைத்த இடத்துக்கோடி ஒரு யாழின் நரம்பைச் சுண்டிவிட்டதும் அது ‘ங்கொய்’ என்று சுநாதமாக ஒலித்தது. “இதுமாதிரி யாழ் உங்கள் ஊரில் உண்டா கங்க நாட்டு வீரரே?” என்று நேருக்கு நேராக அவள் சர்வசாதாரணமாகக் கேட்டதும் அவன் பதில் கூறத் திணறி விட்டான். ஏதோ உள்ளத்தில் ஒரு பரபரப்பு. வெளியில் தனிப்பரவசம். தன்னுடன் அவளாகவே பேசுகிறாள். இப்படி எண்ணியதும் உடல் புல்லரித்தது... “சில யாழ்கள் உண்டு எங்கள் ஊரில்... ஆனால் நான் இசையில் தேர்ந்தவனல்ல. எனவே எனக்குப் பெயர்கள் தெரியாது” என்று பதில் தந்தான். “எனக்கு உங்களுடைய உண்மையான பதில் பிடித்திருக்கிறது. தெரிந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும். தெரியாததையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அசட்டுத்தனமாக எல்லாம் தெரிந்த மாதிரி பாவனை செய்வது எனக்குப் பிடிக்காது” என்று இளவரசி பரபரவென்று பேசியதும் தமிழ்வாணி “இவள் இப்படித்தான் ஒளிவு மறைவில்லாமல், கள்ளங்கபடில்லாமல் பட்பட்டென்று பேசிவிடுவாள். இது இவள் சுபாவம்” என்றாள். “சரி சரி. என் சுபாவம் எல்லாருக்கும் பிடிப்பதில்லை” என்று அவள் ஏதோ கூற ஆரம்பித்த சமயம் சோழகங்கன் உள்ளே வந்தான். “என்ன ராஜசுந்தரி... யாருக்கு எது பிடிக்காது?” என்று கேட்டபடி தன் மேலங்கியைக் கழட்டினான். சட்டென அதை வாங்கிய ராஜசுந்தரி “அண்ணனும் வந்தாச்சு. இனி இந்த வாய்க்குப் பூட்டுத்தான்” என்றாள் குறும்புக்காரி. “நடக்காது” என்றான் சோழகங்கன். “எது நடக்காது?” என்றாள் அவள். “உன் வாய்க்குப் பூட்டுப்போட... எந்த... எந்த...” என்று ஏதோ சொல்ல வந்தவன் அங்கே வாயிற்படியில் பூந்துறை நாயகன் வந்து நின்றதைக் கண்டு நிறுத்திவிட்டான் மேலே சொல்லாமல். நெடிதுயர்ந்த தோற்றத்துடன் வாயிற்படியில் கம்பீரமாக வந்து நின்ற கரிவர்மன், “கலைமாளிகையில் எனக்கு அனுமதியுண்டா?” என்று கேட்டுவிட்டு மெதுவாக வந்ததும் தமிழ்வாணி... “இம்மாதிரி இடங்களில் உம்மைக் கண்டதாக இதுவரை எவரும் கூறியதே இல்லை. கலை என்பது வெட்டிப்பொழுது போக்கும் வீணர்களின் வம்பு என்பது உங்கள் கருத்தாயிருக்க முடியாதே!” என்று கேட்டதும் அவன் இளநகையுடன் “என்னைப் பற்றிப் பரவியுள்ள தவறான கருத்துக்களில் இதுவுமொன்று. எங்கே ராஜ சுந்தரி...? அந்தப் பேரியாழை இப்படி எடுத்து வா பார்க்கலாம்” என்று கூறிவிட்டு நடுக்கூடத்தில் அமர்ந்துவிட்டான் அவன். தமிழ்வாணி அயர்ந்துவிட்டாள். இளவரசியோ தன் விளையாட்டுப் பேச்சையும் கேலியையும் சட்டென நிறுத்திவிட்டு அவன் காட்டிய பேரியாழை மெதுவாக எடுத்து வந்து அவன் எதிரே வைத்தாள். கணீர் என்று ஒலி புறப்பட்டது அந்த யாழின் ஒரு நரம்பினை அவன் மீட்டிய போது... “உட்காருங்கள் அம்மணி... சோழகங்கா, சிம்மநாதா நீங்களும்தான் இப்படி உட்காருங்கள்... ராஜசுந்தரி என் பக்கத்தில் வந்து அமைதியாக உட்கார்” என்றதும் அத்தனை பேரும் யந்திரப் பொம்மைகள் போல உட்கார்ந்துவிட்டனர். தமிழ்வாணி மட்டும் இவன் என்னதான் செய்யப் போகிறான் தன் எதிரே ஒரு வீணையை வைத்துக் கொண்டு... அதுவும் இசை மாமேதைகளே கையாள அஞ்சும் பேரியாழை அல்லவா... விழித்தாள், திகைத்தாள். “பேரியாழை மீட்டி வாசித்துப் பாடும் எவரையும் நான் அண்மைக் காலத்தில் பார்த்ததில்லை. ஒரே ஒருமுறை பெரும் பிடவூர்ச்சாத்தனார்... அதாவது தங்கள் தந்தையார் இசைக்கக் கேட்டிருக்கிறேன். அதுவும் அவர் பூரணமாக அதை மீட்டினார் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் இது இருபத்தியோரு நரம்புகள் கொண்டது. நம்முடைய தமிழிசையாகிய ஏழிசையை அதாவது குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் ஆகியனவற்றை நம் நுணுக்கமறிந்து பாடும் போது சுருதி எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு அதிகமாகவே இந்த யாழில் நரம்புகளை மீட்ட கைவிரல் பழக்கமும், கருத்து ஒருமிப்பும் முக்கியமாகும்.” “இதோ பாருங்கள்... ஒரு பண்ணின் துவக்க ஒலியை மீட்டிக் காட்டுகிறேன்” என்று பேரியாழை மீட்டத் துவங்கினான். அவன் கைவிரல்கள் அநாயாசமாக நரம்புகளை இலேசாகவும் அழுத்தமாகவும் தொட்டு அப்பண்ணின் ஒவ்வொரு இலட்சணத்தையும் விளக்கி பிறகு முழுமையாகப் பண் வாசித்த போது தமிழ்வாணி தன்னை மறந்துவிட்டாள். அவள் திகைபுற்றமனம், இசையின் வாய்ப்பட்ட இதயம் இரண்டும் ஒன்றாகி பேரியாழ் வாசிப்பை அவள் ரசித்தாள் என்றால் அதற்குமேல் வர்ணிக்க நம்மால் ஆகாது. யாரும் அசையவில்லை. இசை என்றால் ஒன்றுமே தெரியாத சிம்மநாதன் கூட தன்னையுமறியாமல் மனம் ஒன்றித் தலையசைத்தான் என்றால் பூந்துறை நாயகனின் யாழ் வாசிக்கும் திறன் அத்தகையது. சுமார் ஒரு நாழிகை நேரம் அவன் அந்தப் பேரியாழில் வாசித்திருப்பான். அதுவரை தங்களை மறந்திருந்த ரசிகர்களாகிய தமிழ்வாணி, இளவரசி, சோழகங்கன், சிம்மநாதன் ஆகியோர் இடையே பெரும்பிடவூர்ச் சாத்தனாரும், கூத்தழகி வல்லபியும், அவளுடைய குருநாதரும், இசையிலும் கூத்திலும் இவரே சிறந்தவர் என்று அன்றைய தமிழகம் போற்றிய திருமாவாத்தூர் இசைநயப்பாவாணரும் வந்து நெடுநேரமாகக் கேட்டுத் தம்மையும் மறந்திருந்ததை இவர்கள் கவனிக்கவில்லை. பூந்துறை நாயகன் முரடன் அல்லவானாலும் அவன் தோற்றம் இசை போன்ற லளிதமான கலைகளை ரசிப்பவனல்ல என்றே காட்டியது. அரச காரியங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் இம்மாதிரி ஆடல் பாடல் என்று காலத்தைச் செலவிடுவதை விரும்புபவனும் அல்ல. ஆனால் இதை முற்றிலும் பொய்யாக்கி விட்டானே இன்று. பாவாணர் இதுவரை பேரியாழை இவ்வளவு கடுமையாக சற்றுக்கூடச் சிரமமின்றி வாசித்தவரைக் கண்டதேயில்லை. தமது தந்தை சிறிது வாசித்துக் கேட்டிருக்கிறார். பெரும்பிடவூர்ச் சாத்தனார் சிறிதளவு பயின்றிருக்கிறார். ஆனால் சேர்ந்தாற் போல கால் நாழிகை கூட வாசிக்க யாராலும் முடியாது... ஆனால் கரிவர்மன் அநாயாசமாக வாசிக்கிறார். “பளா... பளா!” என்றார் சாத்தனார். மெய்மறந்தவர்கள் திரும்பிப் பார்க்க, “தெய்வப் பிரசாதம்” என்றார் பாவாணர். தமிழ்வாணி இவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்று திகைக்க கூத்தரசி வல்லபி “இதயமுண்ட அமிழ்தம் இதுதான்” என்றாள். தமிழ்வாணி சொன்னாள். “என்னுடைய தந்தையின் பாராட்டுதலுக்கு முன் என் பாராட்டுதல் எம்மாத்திரம்? ஆனால் பூந்துறையாரே, இது உலக அதிசயங்களில் ஒன்று. இசை என்றால் என்ன விலை என்று கேட்பவர் நீங்கள் என்று நான் மட்டுமல்ல, இந்த நாட்டினர் அனைவரும் நம்பினோம். அது பொய்யாகிவிட்டது. நீங்கள் ஒரு அதிசயப் பிறவி. ஆனால் ஒரு கேள்வி... நான் மகரயாழில் கூடியவரை இசைப்பேன். என் தந்தையும் இதோ உள்ள பாவாணரும் தேர்ந்தவர்கள். சகோடயாழில் தேர்ந்தவள் இதோ இருக்கும் வல்லபியின் தாய். செங்கோட்டு யாழில் நானும் தேர்ந்தவள். நமது ராஜசுந்தரியும் தேர்ந்தவள். நீங்கள் எப்படி இதில் இவ்வளவு தேர்ச்சி பெற முடிந்தது என்று சொல்ல முடியுமா? விருப்பமிருந்தால் கூறுங்கள். எனக்கு ஏற்பட்ட அதிசய அதிர்ச்சியில் தங்களை இவ்வாறு கேட்கும்படி பேராவல் ஏற்பட்டுள்ளது” என்றாள் சற்றே பரபரப்படைந்தாலும் நிதானத்தைக் கைவிடாமல். சட்டெனப் பதில் கூறவில்லை கரிவர்மன். எல்லாரையும் ஒருமுறை பார்த்தான். பிறகு “ராஜசுந்தரி, அந்த குழலை இப்படி எடுத்து வா?” என்றதும் திகைத்துவிட்ட அவள் பிரமையுடன் எழுந்து போய்க் குழலை எடுத்து வந்தாள். வேய்ங்குழலைக் கையிலெடுத்தவன் வாயில் வைத்ததுதான் தாமதம். அற்புதமான ஒரு பண் தேனாக உருகித் தெய்வாமிருதமாகப் பரிணமித்தது என்பார்களே அது மாதிரி அங்கு கூடியிருந்தவரை மீண்டும் ஒருமுறை தம் நிலையிழக்கச் செய்துவிட்டது. அரை நாழிகை குழலில் வாசித்து முடிந்ததும்... சாத்தனார் “குழலினிது யாழினிது என்றாரே பொய்யா மொழி... அவர் இதைக் கேட்ட பிறகே அப்படி கூறியிருக்க முடியும்” என்றார். குழலை தனது கரத்தால் மிருதுவாகத் தடவியபடி பூந்துறை நாயகன் “என் தாய் இசை மேதை, என் தாத்தா பல இசைக் கருவிகளை அபாரமாக வாசிப்பார். தனிக்காடு, தாய், பாட்டன்தான் எனக்குத் துணை... எங்கும் மரங்கள், புள்ளினங்கள், துள்ளும் மான்கள். இத்தகைய சூழ்நிலையில் அவர் யாழ் வாசிப்பார், குழல் வாசிப்பார், பாடுவார். ஏன் கூத்தும் பயின்றவர் அவர்... ஆனால் என் தாய் என்னைச் சிறு வயதில் யாழில் வாசிக்க அனுமதித்தவள், குழலில் ஊத அனுமதித்தவள் வாலிபனானதும் ‘போதும் இதெல்லாம்... இனி உனக்கு பாட்டும் கூத்தும் தேவையில்லை. எப்படியாவது சோழ நாட்டுக்குப் போ. அங்கு உனக்குக் கடமை காத்திருக்கிறது. அதைச் செய், இதையெல்லாம் உதறிவிட்டு’ என்று கட்டளையிட்டாள். அப்படியே வந்தேன். ஓரளவுக்கு கடமையாற்றி வருகிறேன். மாமன்னர் அமரர் ஆகும் முன் ஒருவகைக் கடமை. பிறகு வேறு வகை. ஆகக் கடமைகளை என் மனச் சாட்சிக்கு ஏற்ப செய்து வருகிறேன். இனி நிம்மதியாயிருக்கலாம் என்றுதான் நான், வீரசோழன், சோழகங்கன், உடன் கூட்டம், ஆட்சிக்குழு அனைத்தையும் துணையாகக் கொண்ட இன்றைய சோழ மன்னர் நம்புகிறார். அடுத்து அவருடைய திருமணம், இளவரசி திருமணம் என்று சுப காரியங்கள் நடைபெற இருக்கின்றன. இதனால் மீண்டும் இதுபோன்ற கேளிக்கைகளில் நாட்டம் செலுத்தலாம் என்றால் வாய்ப்பில்லை. சோழர்களை இன்றும் கூட இரண்டொரு தேள்கள் தீண்ட முயற்சிக்கின்றன. ஆமாம். தேள்கள்தான். கொடுக்குகளை மட்டும் அறுத்தால் போதும் என்கிறான் வீரசோழன். சோழகங்கன் தேள் தேள்தானே என்று கூறுகிறான். நானோ கொடுக்கு அறுந்தாலும் தேள் குட்டி போடாதா என்று கேட்கிறேன். மன்னர் நம் விருப்பம் போல என்று கூறுகிறார். எனவே வேறு வழியில்லை. நான் பூந்துறை நாயகனாக இன்னமும் இருந்தால்தான் வீரசோழனும் சோழகங்கனும் வழக்கம் போல இயங்கினால்தான் தேள்கள் நசுங்கும். மன்னரிடம் இது பற்றிச் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். இடையில் இங்கும் எட்டிப் பார்த்துப் போகலாம் என்று வந்தால்...” பிடவூர் சாத்தனார் நீண்ட பெருமூச்சுவிட்டார். ‘ஏன் இந்த மாதிரி ஒரு சமயத்தில், மகிழ்ச்சியான பொழுது நகர்ந்த சமயத்தில் தங்களுக்கு இது சம்பந்தமில்லையென்று தெரிந்தும் கூட கரிவர்மன் இப்படிப் பேசினான்?’ என்று தமிழ்வாணி சிந்தித்தாள். ஆனால் சிம்மநாதன் மனம் மட்டும் தவித்துவிட்டது. பூந்துறையான் வந்த நோக்கம், பேசிய விளக்கம் இரண்டும் தானாக ஏற்பட்டதல்ல, குறிவைத்தே சொல்லப்பட்டது. போர்ப் பயிற்சி நடைபெறுகிறது நாடு முழுமையிலும் என்பதற்குத் தஞ்சை அணிவகுப்பு ஒரு உதாரணம். என்றாலும் சிம்மநாதன் தன்னைக் குறிப்பிட்டு அவன் சொல்லியிருப்பானா என்று ஆராய்ந்து பார்த்த போது இப்படி இருக்க முடியாது. ஏனெனில் கங்க நாடு ஒரு போர் செய்யும் எண்ணமே கொண்டதில்லை. இது ஊடுருவிகளுக்குத் தெரியும். ஆயினும் கலிங்கம் பற்றி எதுவும் கூறுவதற்கில்லை. வேங்கி நாடும் வீரசோழன் சோழ நாடு திரும்பிய பிறகு சோழ நாட்டின் மீது பழிவாங்க விரும்புகிறது என்று கேள்விப்பட்டிருந்தான். “நீங்கள் ஏதோ நிம்மதியாயிருக்க முனைந்த சமயத்தில் நான் குறுக்கிட்டுக் கெடுத்து விட்டேன். இனி நீங்கள் உங்கள் இசை ஆராய்ச்சியை நடத்தலாம். சோழகங்கனும் நானும் புறப்படுகிறோம்” என்று கூறிப் புறப்பட்டவன் வாயிற்படியருகே நின்று “பிடவூர்ச் சாத்தனாரே, உமது பேத்திக்கு ஒரு நல்ல வரனைப் பார்த்திருக்கிறேன். அந்த வரன் அவளுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்று ராஜசுந்தரியிடம் தெரிந்த பிறகு உங்களுக்கு மன்னர் தெரிவிப்பார்” என்று கூறிவிட்டுச் சட்டெனப் புறப்பட்டுப் போய்விட்டான் சோழ கங்கனுடன். “அது கெட்டுது பிடி... சட்டுப்புட்டென்று எத்தனை முடிவுகளை ஒரே நேரத்தில் செய்துவிடுகிறான்... இவன் மூளை ஒரு யந்திரமோ என்னவோ...” என்று பிடவூரார் தாமாகவே பேசிக் கொண்டது கேட்ட ராஜசுந்தரி “தாத்தா, அது யந்திர மூளையில்லை. தந்திர மூளை அல்லது மந்திர மூளையென்று கூற வேண்டும். ஏன் தெரியுமா? அந்த மூளை இசையைக் கூட பயின்றிருக்கிறதே?” என்றாள் குறும்பாக. பிடவூரார் அவளைக் “கிட்டே வா” என்றார். சுந்தரி நெருங்கிச் சென்றாள். “யார் அந்தத் தடியன்?” என்று கேட்டார். “யாரைத் தடியன் என்றீர்கள் தாத்தா? இங்கு யாரும் அப்படி இல்லையே...” “இதோ பார். நீ சொல்லாவிட்டால் நாளை மன்னரையே போய்க் கேட்டுவிடுவேன். ஆமாம். நீயாகப் பிடித்தாயா? யாராவது பிடித்தார்களா? அவன் யார், எந்த ஊர், என்ன பேர், உனக்கு ஏற்றவன் என்று எவன் முடிவு செய்தது?” என்று பரபரவென்று ஆனால் சத்தம் போடாமல் பேத்தியிடம் கேட்டதும் அவள் “தாத்தா, மெய்யாகவே எனக்கு எதுவும் தெரியாது. சென்ற வாரத்தில் பூந்துறையார், வீரசோழ அண்ணன், சோழகங்க அண்ணன், மாமன்னர் ஆகிய நால்வரும் என்னைத் தங்களுடைய உரையாடலில் கலந்து கொள்ளக் கூடாது என்று விரட்டிவிட்டு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.” “அப்படியானால் அவர்கள் உனக்கேற்ற தடியனாகத்தான் பிடித்திருப்பர். ஆனால் யார் அந்த...” “தாத்தா, சும்மா இருக்கப் போகிறீர்களா இல்லையா? அப்புறம் நீங்கள் இப்படி தர்புர் என்றால் அழுதுவிடுவேன்” என்று மிரட்டியதும் அவர் “நன்றாக அழு. நீதான் பாப்பா இல்லை பாட்டி என்றாயே... எவன் அந்தப் பாட்டன்?” என்று சற்று இரைந்தே கேட்டதும் அவள் ஓடியே விட்டாள். “என்னப்பா அவளிடம்?” என்று தமிழ்வாணி கேட்டதும் “ஒன்றுமில்லை. யார் அந்த அதிர்ஷ்டக்காரன் இவளுக்கு வரனாக வந்திருப்பவன் என்று கேட்டேன். புரியவில்லை. உனக்குத் தெரியுமா?” என்று கேட்டதும் அவள் உதட்டைப் பிதுக்கிவிட்டு “இந்தப் பெண்ணுக்கு ஏற்ற ஒரு வாயாடி நம் சோழர்களுக்குள் எங்கே இருக்கிறான் அப்பா?” என்று கேட்டுவிட்டு “சரி சரி, நம் மண்டையைப் போட்டு இதற்காக உடைத்துக் கொள்ளுவானேன். நாளை மன்னர் தானாகவே கூறுவார். இப்பொழுது நாம் இந்த இசைவிழா பற்றி பேசலாம் அப்பா. பாவாணர், வல்லபி இருக்கிறார்கள். நீங்களும் இருங்கள்” என்றாள். “மறுப்பில்லை மகளே. ஆனால் அந்தப் பூந்துறையான் ஏதோ தேள் என்றான், கொடுக்கு என்றான். உம்மென்றேன் பிறகு பேத்தி என்றான். வரன் என்றான். என்ன என்று கேட்பதற்குள் பறந்து விட்டான் பதில் ஒன்றும் கூறாமல். அதனால் புத்தி இதிலெல்லாம் லயித்திடுமாவென்று புரியவில்லை. இருந்தாலும் இசை நம் உயிர் ஆயிற்றே. பேசலாம். ஆமாம் இந்த சிம்மநாதன் என்பவன் அன்று அவையில் பிரமாதமாகப் பேசி, வினயமாக வணங்கி மன்னரைக் கவர்ந்துவிட்டான்... அது சரி... ஆனால் இவனுக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டதும் தமிழ்வாணி “சம்பந்தம் நம்முடைய காலம் சென்ற கங்க நாட்டின் லட்சவிதேவிதான். இவனைக் கண்டதும் அவள் நினைவு வந்தது. அந்த நினைவில் வரவழைத்திருக்கிறேன்.” “ஓகோ! அப்படியா? எங்கே இவனும் பூந்துறையான் மாதிரி கொண்டா என்று... அடேயப்பா என்ன வாசிப்பு, என்ன அருமையான பிடிகள்! எத்தகைய சுநாதம்... அவன் மனிதன் அல்ல, இசையே உருவான தெய்வம்தான்... ஆமாம்” என்றார் ஏதோ கனவில் இருப்பவரைப் போல. |