உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 15 கங்கைகொண்ட சோழபுரம் திரும்பிவிட்ட கடுங்கோனும், மாவலியும் வீரசோழன் எதிரே வந்து நின்று வணங்கியதும், “நல்லது கடுங்கோன். உன் தங்கையைக் கொண்டு வந்துவிட்டாய் அல்லவா?” என்று கேட்டான். “ஆம் இளவரசே” என்று நறுக்காகப் பதில் அளித்தான் கடுங்கோனும். ஆனால் மாவலி, “ஒரு பாதியைத்தான் சொன்னான் அவன். மறுபாதியை நான் சொல்ல வேண்டும்” என்றான் அடுத்தபடி. வீரசோழன் வியப்புற்று “மறுபாதியா? அதென்னப்பா மறுபாதி?” என்று கேட்டான். “நான் கூட இருந்து அவன் தங்கையைத் திரும்பக் கொண்டு வந்ததை மறந்துவிட்டு நீங்கள் விட்டாயா என்று கேட்டதும் விட்டேன் என்றானே, அது பாதி உண்மைதானே” என்று கூறியதும் வீரசோழன் பக்கென்று சிரித்து விட்டான். கடுங்கோன் உதட்டை பிதுக்கி “இவன் அங்கு போய் வந்தது முதல் தானும் பைத்தியமாகி என்னையும் பைத்தியமாக்குகிறான் இளவரசே. இதை இப்படியே விட்டுவிடக் கூடாது” என்றான் வெடுக்கென்று. “உண்மைதான். உனக்கு ஒரு பழமொழி தெரியுமா கடுங்கோன்? ஒருவன் பைத்தியம் தீரவேண்டுமானாலும் கல்யாணத்தைப் பண்ணிப் போடு என்பதுதான் அந்தப் பழமொழி. எனவே உன் தங்கையை இவன் தலையில் கட்டு. தானே பைத்தியம் பறந்துவிடும். உன் தங்கைதான் பேயை ஓட்டியவளாமே” என்றதும் கடுங்கோன் வியந்து “அதெப்படி உங்களுக்குத் தெரியும்?” என்றான். “இப்போது அவள் இங்கு அரண்மனையில்தான் இருக்கிறாள்” என்றான் வீரசோழன். “மன்னிக்க வேண்டும்” என்றான் மாவலி. “எதற்கப்பா மன்னிப்பு?” “அரண்மனையில் யாருக்குப் பைத்தியம்?” என்று கேட்டதும் இளவரசன் மீண்டும் பெரிதாகச் சிரித்துவிட்டான். கடுங்கோன் கூடச் சிரித்துவிட்டு “நீங்கள் இவனுக்கு நிரம்பவும் இடமளித்து விட்டீர்கள் இளவரசே” என்றான். “அதனால்தான் இவனைப் பிடித்து பேயோட்டியிடம் தள்ளு என்கிறேன்” என்றான் இளவரசன். “அவள் மனதை நான் இன்னும் அறியவில்லையே” என்றான் அண்ணனாகிவிட்ட கடுங்கோன். இளவரசன் “நான் தெரிந்து கொண்டுவிட்டேன். இவனைப் பிடித்திருக்கும் பேயை ஓட்ட அவள் தயார் என்று கூறுகிறாள்.” “ஐயையோ!” என்றான் மாவலி. “ஏன்... ஏன்? என்ன ஆயிற்று மாவலி?” என்றான் இளவரசன். “என்னைப் பிடித்த பேயை விரட்டுகிறேன் என்றால் அது பாவமில்லையா?” என்றான் மீண்டும். “பாவமா? அதெப்படி?” “எங்கே போவான் இவன் இளவரசே அடித்து விரட்டிவிட்டால்...” என்று கூறிவிட்டுச் சட்டென அப்பால் நகர்ந்துவிட்டான் அவன். இளவரசன் வாய்விட்டுச் சிரித்தபடி... “நல்ல ஜோடி. இல்லை இல்லை சரியான இரட்டையர்... சரி கடுங்கோன், இனி கேலியைவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்” என்றான் இளவரசன். “நான்தான் காத்திருக்கிறேனே” என்றான் கடுங்கோன். “மன்னர் வரை எட்டிவிட்டது உங்களுடைய விவகாரம். எனவே அதிவிரைவில் உங்கள் விவகாரத்திற்கு ஒரு முடிவு காண வேண்டுமென்று கூறிவிட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் ஒரு நிபந்தனை” என்றான் இளவரசன். “என்ன நிபந்தனை?” என்று கடுங்கோன் கேட்டதும் “எனக்கு முதலில் ஒரு விவரம் தெரிய வேண்டும்” என்றான் மாவலி. “அதென்ன விவரம்?” “எங்கள் விவகாரம் மன்னர் வரை போய் அது உடனடியாக முடிவாக வேண்டுமென்று உத்திரவானதாகச் சொன்னீர்கள் அல்லவா?” “ஆமாம்.” “அது என்ன விவகாரம்?” “அதுவா... கடுங்கோன் கேட்கவில்லையே அது என்னவென்று.” கடுங்கோன் சற்றே தயங்கி “விவகாரம் என்றதும் ஏதோ விஷயம் என்று நினைத்தேனேயன்றி... இவன் மாதிரி எனக்கு” என்று தயங்கினான். “கண்களை உருட்டி விழித்தால் போதாதப்பா. மூளையும் கொஞ்சம் வேலை செய்தாக வேண்டும்” என்றான் மாவலி. கடுங்கோன் அவனைப் பார்த்தான் விழித்து. ஆனால் அவன் இவனைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தான். “விவகாரம் என்றால் உன் தங்கை கவரப்பட்டது, தப்பி வந்தது, அவளை மாவலி மணக்க இருப்பது என்பதுதான். மன்னர் பெண் வந்தாயிற்று. எனவே நடத்து திருமணத்தை என்று கூறிவிட்டார். ஆனால் ஒரு நிபந்தனை...” “திரும்பத் திரும்ப ஒரு நிபந்தனை என்றால்...” “என்ன அது என்றுதான் கூறுங்களேன் இளவரசே.” “கூடாது இளவரசே? இன்னொரு சந்தேகம்.” “அது என்ன?” “திருமணம் நடத்து என்றால் நிபந்தனை போட்டவர் அவர் அல்ல. சரிதானே?” “சரிதான், மன்னர் நிபந்தனை போடவில்லை.” கடுங்கோனுக்கு கோபம் வந்துவிட்டது. “யார் போட்டால் என்ன? நிபந்தனை நிபந்தனைதான். நாம் அதை நிறைவேற்ற வேண்டியதுதானே?” என்று கேட்டுவிட்டு “அது என்ன?” என்றான். இளவரசன் சற்றே நிதானித்தான். கடுங்கோன் எப்போதும் எதையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு ஆசாமி. எனவே அவன் செய் என்பதற்கு முன்னர் செய்து முடிக்கும் பேர்வழி. ஏன், என்ன, எப்படி? என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டு நிதானிப்பவன் அல்ல. ஆனால் மாவலி அப்படியில்லை. காலிங்கராயன் மகன் என்றால் சாதாரண விஷயமா? அனுபவ ஞானமும், அறிவும் பக்குவமும் கொண்டவனல்லவா? “மாமன்னர் அல்ல என்றால் நீங்களா அல்லது...” “சோழ கங்கனோ நானோ அல்ல. உங்களால் ஊகிக்க முடியாது. பூந்துறை நாயகன்” என்று வீரசோழன் கூறியதும் “ஆ...!” என்று கடுங்கோன் எழுந்தான். மாவலியோ பதறிவிட்டான். பிறகு இளவரசனை உன்னிப்பாகப் பார்த்துவிட்டு. “எங்களை ஒரு பொருட்டாக மதிக்கவும் செய்கிறாரா அவர். நம்ப முடியவில்லையே?” என்றான் பெருவியப்புடன். “எனக்கும்தான்.” ஒத்துப் பாடினான் கடுங்கோன். “எங்களுக்கும்தான் திகைப்பு, வியப்பு எல்லாம். ஆனால் இதுதான் உண்மை, ஏன் என்றால் உங்களிருவரையும் உடனே வந்து தம்மைச் சந்திக்குமாறு சற்று முன்தான் கூறினார். அதாவது இன்னும் அரை நாழிகையில் நீங்கள் கலை மாளிகையில் இருக்க வேண்டும்” என்றான் வீரசோழன். இருவரும் அச்சமுற்று விழித்தனர். கலை மாளிகையில் நமக்கு என்ன வேலை என்று புரியாமல். பிறகு வீரசோழன் உத்திரவைத் தாமதமின்றி நிறைவேற்ற, இதுவரை தமாஷாகப் பேசியதை யெல்லாம் மறந்துவிட்டு கடமையில் கருத்தாக இருவரும் புறப்பட்டுக் கலைமாளிகை சென்றனர். ஆனால் வேகமாகப் போன காரணத்தாலோ அல்லது பூந்துறை நாயகன் நம்மைக் கூட மதித்துப் பேசுவாரா என்ற எண்ணத்திலோ தெரியவில்லை. பேசவேயில்லை வழியில். கடுங்கோன், சோழ நாட்டின் பெருங்குடி மக்களில் மூத்தவர்கள் பரம்பரையான போத்தரையர் குலத்தில் வந்தவன்தான். ஆனால் யாது காரணமோ தெரியவில்லை. அசகாயத்தனமான வீரம் இருந்தும், பயங்கரத் தோற்றமும், அச்சமற்ற ஆண்மையிருந்தும் நாளது வரை இவன் பிரமாதமானவன் என்று நாட்டு மக்கள் போற்றும் எக்காரியத்திலும் ஈடுபட்டதில்லை. அதாவது அத்தகைய சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால் பூந்துறையார் தொண்டைமான் மகனுக்குத் தந்த வாய்ப்பினை அன்றே தனக்குத் தந்திருந்தால் தானும் இன்று நாடு போற்றும் நிகரற்ற வீரனாக மதிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தான். ஆனால் காலிங்கராயன் மகன் அப்படி நினைக்கவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. சந்தர்ப்பம் பிறர் கொடுத்து வருவதில்லை. நாமாக உண்டாக்கிக் கொள்வது. தவிர பிறர் கொடுத்துப் பெறும் எதுவும் சுயமதிப்புக்கு உகந்ததல்ல என்று எண்ணுபவன். இத்தகைய நேர்மாறான மனநிலை கொண்ட இருவரும் அடுத்து சில நொடிகளில் அங்கு, அதாவது கலை மாளிகையில் போய்ச் சேர்ந்ததும் ஏற்கனவே தொண்டைமான் மகன் அங்கே இருந்தது கண்டு வியந்தனர். அவனும் இவர்களைக் கண்டதும் மதிப்புடன் வரவேற்று “உங்கள் இருவரையும் எதிர்பார்த்து உள்ளே இருக்கிறார் பூந்துறையார்” என்று கூறியதும் இருவரும் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “வேறு யாரேனும்...” என்று இழுத்தான் மாவலி. “இருக்கிறார்கள். கடுங்கோன் சகோதரியாரும், கூத்தரசி வல்லபியாரும்” என்று கூறியதும் கடுங்கோன் ‘அடக் கடவுளே! இதென்ன வம்பு? அந்தப் பெண்கள் என்ன தவறைச் செய்துவிட்டு இந்த மனுஷனிடம் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். அதுவும் பூங்கொடி இதுநாள் வரை வெளிநாட்டில் சிறையிருந்தவள். அவள் இதற்குள் என்ன தவறு செய்திருக்க முடியும்?’ என்று மனம் மறுகினான். ஆனால் ‘வீராதி வீரர்களும், அரசகுலத்திலும் உயர் குடியிலும் பெண்மணிகள் இல்லையா? அவர்களைக் கொண்டு சாதிக்க முடியாததை இந்தப் பெண்களையும் நம்மையும் கொண்டு சாதிக்க நினைக்கிறாரே பூந்துறையார். அது ஏன்?’ என்று ஆராய்ந்தான். கடுங்கோன் சற்று முன்னர்தான் வண்டையூர்த் தொண்டைமான் மகன் பற்றி நினைத்தான். இப்போது அவன் எதிரே நிற்கிறான். இந்தப் பூந்துறையார் ஒரு பயங்கரமான அதிசய மனிதர். நாம் நினைத்தாலே போதும், அது எதிரில் இருக்கும்படி செய்கிறார். ஒருவேளை ஏதோ நிபந்தனை என்று கூறினாரே இளவரசர்... அது பூங்கொடி பற்றியதாக இருக்குமோ... இருக்க முடியாது. ஏனென்றால் அவள் மாவலிக்குத்தான் என்று பேச்சளவில் நிச்சயமாகிவிட்டது. இனி அதில் மாற்றம் இல்லை. மன்னரும் உறுதிப்படுத்தி விட்டதாக இப்போதுதான் சொன்னார் இளவரசர் வீரசோழன். அப்படியானால் நம்மைச் சாமானியராக மதிக்கக்கூடத் தயாராயில்லாத பூந்துறையார் எப்படி நம்மை அழைத்து நிபந்தனை போட முன்வந்தார்? நேற்று வரை நாம் இருப்பதை அறியாதிருந்த மாதிரி இருந்தவர்? கடுங்கோன் கலைமாளிகையின் உள்ளே நுழைந்த போதுதான் இப்படிப் பலபட எண்ணினான். மாவலி இதற்கு மாறாகத் தன் போக்கில் நினைத்தாலும் எப்போதும் போல இல்லை, இருக்கவில்லை அவன் சிந்தனை. ‘ஏதோ ஒரு பெரிய திட்டம் பூந்துறையாரிடம் உருவாகிறது. அதைச் செயல்படுத்தும் ‘கருவிகள் சில’ அவசரத் தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய ஆள் பிடிக்கிறார். இப்படிப் பிடிபடும் கருவிகளில் தானும் இருக்கலாம், கடுங்கோனும் இருக்கலாம், தொண்டைமானும் இருக்கலாம். மாறாக இல்லாமலும் போகலாம். ஆனால் நமக்கு நிபந்தனை என்ற பேரில் விஷயம் வந்திருப்பதால் ஏதோ முக்கிய பணிகள் இல்லாமலிருக்காது. எனவே எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும்’ என்று எண்ணியபடி உள்ளே நுழைந்தான். கலைமாளிகையின் நடுக்கூடத்தில் கம்பீரமாகத்தான் அமர்ந்திருந்தான் பூந்துறை நாயகன். ஆனால் அவன் எதிரே இரு இருக்கைகளில் இரு பெண்களை சம அந்தஸ்தில் அவர் உட்கார்த்தி வைத்திருந்தது மட்டும் பார்ப்பவர்களுக்கு அதிசயமாகவே தோன்றியது. கடுங்கோன் ‘பெண்கள் என்றாலே பீடைகள் என்று துரத்துவார் பூந்துறையார் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இங்கு காட்சி நேர்மாறாக இருக்கிறது. தவிர சேனையில் இன்று உபசேனாதிபதி அஸ்தஸ்து வகிக்கும் தொண்டைமானை வாசலில் நின்று வரவேற்கும்படி அவர் செய்ததும் நம்பற்கரிய நிகழ்ச்சிதான்’ என்று நினைத்தான். இந்த ஒரு நினைப்பில் மட்டும் மாவலிராயன் இவனுடன் ஒத்து வந்தான். ஆமாம். வருங்காலத்தில் பெரும் பதவியைக் குறிப்பாக சோழ நாட்டுப் பெரும் படைகளின் தலைமைப் பொறுப்பினை ஏற்க இருப்பவன் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவன் தொண்டைமான் என்னும் போது அவனை வரவேற்க நியமித்திருப்பது அதுவும் சாதாரணமான தங்களிருவரையும் வரவேற்கச் செய்திருப்பது அதிசயம்தானே. நண்பர்கள் இருவரும் இவ்வாறு பலபட சிந்தித்துச் சென்றாலும் நடுக்கூடத்தில் உட்கார்ந்திருந்த நாயகனை கண்டதும் சிந்தனைகள் சிதறிவிட்டன. எப்போதும் போல அவனைக் கண்டதுமே ஏற்படும் அலாதி மரியாதையும் சிறிதே அச்சங்கலந்த மனநிலையும் ஏற்படாமலில்லை. இருவரும் வணங்கினர். சிரக்கம்பம் செய்தான் இளநகை பூத்த முகத்துடன் பூந்துறையான். தொண்டைமான் சற்று எட்டத்தில் நகர்ந்து நின்றான். “அப்படி இருவரும் அமருங்கள்” என்று கரிவர்மன் உத்தரவிடுகிற மாதிரி கூறியதும் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். ‘தன் எதிரில் அமரச் சொல்கிறாரே, உண்மையா? விளையாட்டா? சோதனையா? அல்லது...’ ஆனால் சட்டென அமர்ந்துவிட்டார்கள். “‘வீரியம் பேசாதே காரியத்தைச் செய்யாமல்...’ என்று அடிக்கடி காலிங்கராயர் சொல்வதுண்டு. நினைவிருக்கிறதா மாவலி?” என்று பூந்துறையான் புன்னகை மாறாமல் கேட்டதும் மென்று விழுங்கித் தலையாட்டினான் பதில் கூற இயலாது. “வெட்டு ஒன்று போட்டு துண்டாக இரண்டு கொண்டு வா என்பதற்குள் கொண்டு வந்திடும் கடுங்கோன், நீ போட்ட நொண்டி வேடம் பிரமாதம். அதைக் காட்டிலும் ஆரூடம் அபாரம்” என்றதும் ஆடிவிட்டான் கடுங்கோன். ‘அடப் பாவி! இந்தச் சோழ நாட்டு மூலையில் உட்கார்ந்திருக்கும் நீ அந்த வடகோடியில்... ஓகோ! தங்கை சொல்லியிருப்பாள்...’ என்று நினைத்து அசட்டுச் சிரிப்பொன்றைச் சிரித்ததும் “அங்கு நடந்தது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்பது தவறுதான். என்றாலும்...” என்று பூங்கொடி குறுக்கிட்டதும் கடுங்கோன் திடுக்கிட்டான். ‘தங்கை கூறவில்லை. என்றாலும் இவருக்குத் தெரிந்திருக்கிறது. அதெப்படி?’ “அதெப்படித் தெரியும் என்று சிந்திக்கிறாயா கடுங்கோன்? அவசியமில்லை. ஆனால் நீங்கள் மூவரும் அபார சாதனை புரிந்திருக்கிறீர்கள்... ஜகன்னாதன், வக்கிரன் இரண்டு பேரையும் இடையூறு செய்ய விடாமல் அப்பால் கொண்டு சென்றது தவிர” என்று கூறியது மாவலி திகைத்து விட்டான். ‘அப்படியானால் அந்த இரவு அவர்கள் அவசரப் பயணம் செய்தது இவர் தந்திரமா?’ “எனினும் நீங்கள் குதிரைகளைக் கவர்ந்த தந்திரம், ஆரூடத்தைப் போலத் திறமையான ஒரு தந்திரம்தான். பாராட்டுகிறேன். இப்போது நான் அழைத்தது எதற்குத் தெரியுமா? சொல்லுகிறேன். நீங்கள் மூவரும் கலிங்கத்தில் போட்ட வேடத்தை மீண்டும் ஒரு முறை வேறு வகையில் போட வேண்டும். அதுவும் கங்கபாடியில்... உங்களுடன் இன்னும் ஒரு வேடதாரியும்... இன்னும் ஒரு பெண்ணும். இருப்பாள். இரண்டு பெண்கள் இரண்டு ஆண்கள், அனைவரும் இளம் வயதினர். ஆக நீங்கள் போடும் வேடங்கள், செயல்படும் முறைகள், சாதிக்கும் செயல்கள் ஆகியவற்றால் ஒரு பெரும் போர் ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமா என்று சோதிக்கப் போகிறேன். இந்தச் சோதனையில் வெற்றி நாம் பெற்றோமானால்... ரத்தக்களறியில்லை.” கடுங்கோன் திருதிருவென்று விழித்தான். ‘மீண்டும் வேடமா? அடக்கடவுளே! ஒரு முறைபட்ட துன்பம் போதாதா? நொண்டுவது, சாதுவாக நடிப்பது, ஆரூடம் சொல்வதெல்லாம் நமக்கு இனி ஒத்துவராதே. இந்தப் பூந்துறையாரிடத்தில் இப்படிச் சொல்ல முடியாதே’ என்று எண்ணிப் பரிதாபத்துடன் பார்த்தான் தன் நண்பன் மாவலியை. அவனோ இவனைப் பார்த்து “உன் விழிகள் இங்கு ஒன்றும் பலிக்காது. பேசாமல் குலை என்றால் குலைக்க வேண்டியதுதான். ஆடு என்றால் ஆட வேண்டியதுதான். சிரி என்றால் சிரிக்க வேண்டியதுதான். வேறு வழி இல்லை” என்று உதட்டைப் பிதுக்கிவிட்டான். “வேடம் போடுவது என்றால் நொண்டி முடம் இல்லை, ஆரூடமில்லை. இரண்டு நட்டுவாங்கக் கலைஞர்கள் செல்கிறார்கள் கங்க நாட்டுக்கு. அவர்களுக்கு முன்னே ஒரு சோழ நாட்டுப் பிரபு கங்கபாடிக்கு ராஜரத்ன விஜயகீர்த்தியிடம் செல்லுகிறான். தமிழ் நாட்டு நடனக் கலையரசி ஒருத்தி கங்கபாடிக்கு வரப்போகிறாள். நட்டுவாங்கர்கள் கூடவரும் மோஹினி என்னும் பேரழகியின் கூத்தினை அங்கு மன்னர் முன்னே அரங்கேற்ற அந்தப் பிரபுவின் உதவியை நாடுகிறார்கள் இந்த இரு பெரும் கலைமாமணிகள். ஆனால் சோழப் பிரபுவுக்கு இதெல்லாம் தமக்குச் சம்பந்தமில்லாதது என்றும் விஜயகீர்த்தியைப் பார்த்து ஏதாவது செய்து கொள்ளுமாறும், கூறுகிறார். கலைஞர்கள் விஜயகீர்த்தியைப் பார்க்கும் போது கூத்து நடத்த தங்களுக்கு அனுமதி வேண்டுவதுடன், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்றவர்கள் வந்துவிட்டார்களா? என்று ஆராய வேண்டும். அவர்கள் நால்வர், பெயர் நீதிமார்க்கன், நேசமித்திரன், ஸ்ரீஹரி, ஸ்ரீபதி என்பனவாகும். பூதநாகன் என்னும் கங்கபாடியின் பெரும் வணிகன் திரும்பிவிட்டானா என்றும் ஆராய்ந்திட வேண்டும். உங்கள் குழுவில் இருக்கும் பேரழகி மோஹினி, யாரும் - மன்னர் கூடத்தான் முன்கூட்டி உங்களிடம் அனுமதியைப் பெறாது சந்திக்க முடியாது. இரவில் அவள் கூத்துச் சாலையில் தோன்றுவதைத் தவிர வேறு நேரத்தில் பகலிலும் இரவிலும் அவள் யார் கண்களிலும் தென்படமாட்டாள். கடுங்கோன் பெயர் அங்கு விசயராயன் என்பதாகும். மாவலியின் பெயர் கனகராயன் என்பது. நீங்கள் சோழ நாட்டின் பண்டைக் காலம் முதல் பெருமை பெற்ற பந்தணை நல்லூர் கூத்துப் பெருமக்கள் பரம்பரையினர். மோஹினியும்தான். கங்கர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய பிரபுக்கள்தான் உள்ளனர். மேலே கூறிய நால்வரும் இவர்களைச் சேர்ந்தவர்களே. நேசமித்திரனும் ஸ்ரீஹரியும் பெண் மோகம் பிடித்த போக்கிரிகள். எப்படியாவது சந்திக்க வேண்டும் மோஹினியை என்று இவர்கள் முயலுவார்கள் விடாமல்... அல்லது முயலும்படி... ஆமாம். நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு விட்டான் மாவலி... நல்லது. பிரபு வேடக்காரர் நெருக்கப்படுகிறார். சோழ நாட்டுக் கூத்தழகியைத் தங்கள் வசம் ஒப்புவிக்கும்படி... அவர் ‘அஞ்ச வேண்டாம். இவளைவிடப் பேரழகி ஒருத்தி வருகிறாள் வேங்கியிலிருந்து. அவள் பெயர் விஜயநந்தினி. அவளைப் போல அழகி இந்த அகில உலகிலும் இல்லை. இதோ பாருங்கள் அந்த நந்தினியின் படத்தை’ என்று காட்டுகிறார் ஒரு அழகிய ஓவியத்தை... வேங்கிக்கு நேசமித்திரன் போக ஏற்பாடு. ஆனால் அன்று கூத்து நடக்கும் போது திடீரென்று விளக்குத் தீவர்த்திகள் அணைந்துவிட அரங்கம் இருளாக, அழகி மோஹினி காணாமல் போய்விடுகிறாள்... ‘ஐயகோ...!’ என்று அலறுகிறார்கள் கனகனும் விஜயனும். சோழப் பிரபுவுக்கு இது தெரிந்ததும் ஆத்திரமடைகிறார். மன்னரிடம், விஜயகீர்த்தியிடம் எச்சரிக்கிறார். சோழர் படைகள் வரும் என்ற பயத்தில் நேசமித்திரனே அவளைக் கடத்திக் கொண்டு போய்விட்டதாகப் புரளி செய்கிறார் நீதிமார்க்கன். பெரிய தலைவர்களான இவர்களால் ராணுவம் இரண்டு படுகின்றன. மன்னன் திணறுகிறார். வேறு வழியின்றி, மன்னர் ஸ்ரீஹரி, ஸ்ரீபதி, நேசமித்திரன் ஆகியோரை நம்புகிறார். மன்னனிடம் நேசமித்திரன் மீது குற்றம் சாட்டுகிறார். வேங்கிக்கு மன்னன் ஆள் அனுப்பி நேசமித்திரனைக் கைது செய்யும்படி செய்துவிடுகிறார். வேங்கியில் ஒரு பகுதியினர் கிளர்ந்தெழுகிறார்கள் நேசமித்திரனை ஆதரித்து. கங்கத்திலும் அவனுடைய ஆதரவாளர்கள் துடித்து எழ உள்நாட்டில் அவர்களுக்குள்ளேயே பூசல். விஜயநந்தினியின் பேரழகும் சாகசமும் வேங்கியின் மகா சேனாதிபதியான வீரவல்லபனைக் கவருகிறது. நாட்டு நிலையை உத்தேசித்து மன்னன் விஜயாதித்தியன் சோழர் உதவியை நாடுகிறார். எனவே சோழர்கள் அந்த இரண்டு நாடுகளிலும் மக்களால் அமைதி காக்க அழைக்கப்படுகின்றனர் என்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த வேடம், நாடகம் எல்லாம். இதற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் காலம் மூன்று மாதங்கள்தான். தொண்டைமான் அங்கு சோழப் பிரபுவாக செயல்படுவார். உங்களுக்குள் சமிக்ஞைகள் மூலம்தான் தொடர்பு.” மூன்று மாத காலத்தில் ஒரு அயல் நாட்டில் நடத்த வேண்டிய மஹா பயங்கர நாடகமொன்றை முக்கால் நாழிகையில் கூறிவிட்டான் கரிவர்மன். சோழர்கள் இம்மாதிரி தந்திரங்களைச் செய்வது ஏன்? யுத்தம் என்ற பயங்கரம் ஏற்படாதிருக்கவே. அப்படி ஏற்பட்டால் இரு தரப்பிலும் ஏராள நஷ்டம் ஏற்படாமலிருக்காது. நஷ்டம் ஒருபுறமிருக்க, மக்களிடையே வெறுப்பு ஏற்பட்டுவிட அனுமதிக்கக் கூடாது. தவிர எதிரிகளுக்கு முதல் இடம் அளித்துவிடக் கூடாது. அதாவது எதிரி முந்திக் கொண்டுவிட்டால் யுத்தத்தில் வெற்றி தோல்வி யாருக்கு என்று முன்கூட்டியே உறுதிப்பட்டுவிடாது. உதவி என்ற பேரில் நாம் போனால், அவர்கள் நிச்சயமாகத் தோல்வியடையவே செய்வர். தவிர நமக்கும் நியாயம் ஒன்றுக்காகவே தலையிட்டோம் என்று உலகறிய உறுதி கூறுவது சாத்தியமாகும். “கடுங்கோன் நீ விஜயனாக நடிக்க வேண்டியதெல்லாம் பத்துப் பதினைந்து தினங்கள்தான். அப்புறம் நீயும் சரி, மாவலியும் சரி சோழ மாவீரர்களாகச் செயல்படுவீர்கள். நம் வீரசோழரோ அல்லது சோழகங்கரோ... வருவார்கள். முடிவில் வெற்றி நமக்கே என்று உறுதியாகும் சமயத்தில் மன்னரே அங்கிருப்பார்” என்று கூறியதும் “பளா!” என்றான் அவன். பிறகுதான் பூந்துறையார் எதிரில் இப்படி சொன்னது தவறாயிற்றே என்று பயந்து விழித்தான். ஆனால் அவர் அதைக் கவனிக்காமல் “உங்கள் பூங்கொடி ஒரு அசாதாரண தந்திரக்காரி. எனவே நாலைந்து பெண்களுடன் அங்கு சிவிகையில் அமர்க்களமாக வரும் இவள் மோஹினியென்றால் வேங்கியில் சரச சல்லாப சிங்காரியாக நடிப்பவள்...” என்று ஏதோ சொல்ல இருந்தவர் தனக்குப் பின்னே ஏதோ நடை சத்தம் கேட்டுத் திரும்ப மன்னரே வேகமாக வந்து கொண்டிருந்தார். சட்டென எழுந்தான் பூந்துறை நாயகன். “உங்கள் ஆலோசனைக்குக் குறுக்கே வரவேண்டிய அவசரம் ஒன்று... நீங்கள் என்னுடன் புறப்பட வேண்டும். நாளை உங்களை மீண்டும் சந்திப்பார் பூந்துறையார்” என்று மன்னரே அறிவித்ததும் அவர்கள் சென்றதும் “கரிவர்மரே, நம் உறையூர்ச் சிறையிலிருந்து கலிங்கன் தப்பிவிட்டான்” என்று பதற்றத்துடன் கூறியதும் பூந்துறை சற்றும் நிதானமிழக்காமல் “அப்படியா! இவ்வளவுதானே?” என்று கேட்டதும் அவனை மாமன்னர் விக்கிரமன் விழித்துப் பார்த்தான். “கலிங்கன் எங்கும் தப்பிவிடவில்லை மாமன்னரே... நான்தான் இப்படி ஒரு பிரமையைக் கிளப்பி விட்டிருக்கிறேன். அவர் நம்முடைய கடல்நாடுடையார் வசம் ஐந்துறைத் தீவு ஒன்றில் ஜாக்கிரதையாக இருக்கிறார். இதை நான் நேற்றே சொல்ல இருந்தேன். ஆனால் உறையூர், தஞ்சை என்று அலைந்ததில் நள்ளிரவில் உங்களைச் சந்திக்க இயலவில்லை. தவிர இன்று காலை முதல்...” விக்கிரமன் இளைஞன்தானே? “கலிங்கன் தப்பினான் என்ற செய்தியால் நமக்கு என்ன லாபம்?” “ஒன்றுமில்லை. கொஞ்சம் அஜாக்கிரதையாயிருக்கிறோம் என்று கலிங்கர்கள் கருதலாம், கங்கர்கள் நினைக்கலாம், வேங்கி நாட்டார் சிரிக்கலாம்... ஆனால் கலிங்கரின் சேனா வீரர்கள் கூடி அவர் அங்கு வந்ததும் நம் மீது போர் தொடுக்கமாட்டார்களா என்றும் நீங்கள் கேட்கலாம். இது நடக்காது. கலிங்கர்கள் தங்கள் தலைவரைப் பார்க்காதவரை எதுவுமே செயல்படாது. ஏன் என்றால் வீரவர்மனும் விஜயவர்மனும் தாங்களாக எந்த ஒரு முடிவையும் செய்யமாட்டார்கள். கலிங்க மன்னனும் எதுவும் செய்யமாட்டான். ஆனால் அவர்களில் ஒரு சிலர் அதாவது அரைகுறை ஆசாமிகள் துள்ளலாம். இதைத்தான் நான் விரும்புகிறேன். வேங்கி இதனை எப்படி பயன்படுத்தும் என்றும் பார்க்க வேண்டும். அதற்கும் ஆள்கள் போயிருக்கிறார்கள். கங்கம் பற்றிய கவலை வேண்டாம். ஆனால் கங்க நாட்டிலிருந்து வந்திருக்கிறானே ஒருவன், சிம்மநாதன் என்பவன்தான் இப்போது நம்முடைய கவனத்துக்கு உரியவன்.” “அப்படியா? அவனுடைய நல்லெண்ணத் தூது என்பது...” “ஒரு போர்வை. அது அகலும் வரை எதுவும் தெரியாது. ஆனால் அது தானாகவே அகலட்டும். நாம் பதறக் கூடாது. அவன் நம்மிடம் நெருங்குகிறான். உறவு முறை போல் இணைந்து வருகிறான். இடம் அளிப்போம். பிறகுதான் தெரியும். ஏன் என்றால் அவன் மனதில் உள்ள திட்டம் ஏதோ ஒன்று.” “அதை உடனடியாகச் செயல்படுத்த அவன் விரும்பவில்லையோ?” “ஆமாம். அதற்காகத்தான் ஆறு திங்கள் இங்கு தங்கும் திட்டம் என்று நம்புகிறேன். பொறுப்போம். நாளை அவனாகச் சிக்கும் வரை நாம் எந்த ஒரு சந்தேகத்தையும் காட்டிக் கொள்ளுதல் அவசியமில்லை” என்று அழுத்தமாகப் பூந்துறையார் கூறியதும் மன்னர் “சரி சரி... நீங்கள் உங்கள் நோக்கப்படியே செயல்படுங்கள். ஆனால் கொஞ்சம் முன்கூட்டித் தெரிந்தால் அதிர்ச்சியில்லை” என்று கூறிச் சிரித்தார். |