உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 16 தஞ்சை அரண்மனையில் தமிழ்வாணியின் விருந்தினனாக இருந்ததில் சிம்மநாதன் அடைந்த மகிழ்ச்சி அபாரம். இரண்டொரு நாள் அவன் கலை, இசை என்று தமிழ்வாணியால் அவர்களுடைய குழுவில் சேர்க்கப்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் இளவரசியுடன் பேச, பழக, ஏன் சிறிது நேரம் நந்தவனத்தில் உலாவக்கூட சந்தர்ப்பம் கிடைத்தது. இதெல்லாம் நடக்கிற காரியமா? கங்கர் எங்கே? சோழ இளவரசி எங்கே? யாருக்கு யார்? கற்பனை கூடச் செய்ய முடியாத ஒரு கவர்ச்சி... இது எந்த விதத்திலும் சரியல்ல, முறையும் அல்ல என்று அவன் மனம் எச்சரித்தாலும் அவன் கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்கத் தயாரில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். அவளிடம் அவன் கொண்ட கவர்ச்சியை காதல் என்று கூடச் சொல்லலாமாயினும் தவறாகவோ நெறிக்குப் புறம்பாகவோ அவன் அவளைப் பற்றி சிந்திக்கவும் இல்லை, ஆசை கொள்ளவும் இல்லை. அந்தஸ்து, நாடு, இனம் ஆகிய வேற்றுமைகள் குறுக்கே நிற்கின்றன. தவிர சோழ இளவரசியாகப்பட்டவள் நிச்சயம்மாக ஒரு சோழனைத்தான் மணப்பாள். அது முத்தரையனோ, வேட்டரையனோ, கோவரையனோ, முனையரையனோ... எவனோ அவன் சோழ நாட்டானாக, பெருந்தலைக் குடும்பமாக அல்லது சோழர் குலமாகவே இருப்பின் மிக்க பொருத்தம். ஆனால் காலம் மாறுகிறது. எத்தனையோ புதுமைகள் நடைபெறுகின்றன. ஏன் இவ்வகையிலும் ஒரு மாறுதலை ஏற்படுத்தக் கூடாது என்று அவன் எண்ணினாலும் அடுத்த நொடியே குருநாதர் எச்சரிக்கை குறுக்கே புகுந்து ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. எந்த லட்சியத்துக்காக அவன் இங்கு வந்துள்ளானோ அந்த லட்சியத்தை எட்டிக்கூட பார்க்காத வண்ணம் செய்திடும் ஒரு நிலையை இவனே உண்டாக்கிக் கொள்ளலாமா? சோழர்கள் இவனுக்கு இன்னும் மதிப்புக் கொடுத்து சுதந்திரமாக இயங்க இடமளித்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் இளவரசியை நேசம் பிடிக்கும் முயற்சி ஒரு அத்துமீறிய செயல் என்று இவனுக்குப் புரிய வேண்டாமா? வரம்பு மீறிய முயற்சி இது என்று உலூகன் கூட எச்சரித்து விட்டான். ஆயினும் இவன் மனம் கேட்கவில்லையே. மனம் ஒரு குரங்கு. எனவே அதைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பார் ராஜரத்ன விஜயகீர்த்தி. இது வரை இந்தக் குரங்கை அடக்கித்தான் வைத்திருந்தான். கங்க நாட்டுப் பெண்கள் எவ்வளவு சிறந்த அழகிகள். அவர்களைக் கண்டு மயங்காத இவன், கூத்தழகி வல்லபி சாதாரண அழகியா... அவளை நடு இரவில் தன்னந்தனியாகச் சந்தித்து ஆறு நாழிகைக்கு மேல் உரையாடியிருக்கிறான். அதுவும் மேன்மாடத்தில், குளிர்ந்த நிலவொளியில் எவர் தலையிடும் இன்றி. அப்போதும் இவன் மனம் பேதலித்ததில்லை. ஆனால், சோழ இளவரசியைக் கண்ட உடனேயே மனம் கள் குடித்த குரங்கு மாதிரி கட்டு மீறி அலைகிறதே. என்ன செய்ய? கடமைக்குப் பொருந்தாதுதான். அந்தஸ்தை மீறியதுதான். முறையற்ற ஈடுபாடுதான். இல்லை என்று தைரியமாகச் சொல்ல இயலவில்லை. ஆனால் இவ்வளவு உண்மை தெரிந்தும் மனம் ஏன் இப்படி அலைகிறது என்று தவித்தாலும் தடுமாறத்தான் செய்தான். இலட்சியத்தைக் காட்டிலும் ‘இது’ பெரிதா? இல்லை இலட்சிய சாதனையைக் காட்டிலும் இது பெரிதா? இல்லை... உண்மை இதுவாயிருக்க பின்பு ஏன் மனம் இப்படி அங்கேயே திரும்பத் திரும்ப ஓடுகிறது. நாயைக் கட்டிப்போட்டால் கூட அது குரைக்காமலிருக்காதாம். மனதை அடக்க நினைத்தும் கூட திரும்பவும் நினைவுதானா? தாமரைத் தடாகத்தைச் சுற்றி நடந்தவன் இப்படிப் பலப்பட சிந்தித்துக் கொந்தளித்தாலும் ஈடுபாடு அகல மறுத்துவிட்டது. ஏன்? ஒருவேளை இளவரசியும் இவ்வீடுபாட்டினைப் புரிந்து கொண்டிருப்பாளோ? புரிந்து கொண்டு சாடையாகக் கூட எடுத்தெறியாமல், உதறாமல். பரவாயில்லை என்று பண்புடன் இதற்கு இடமளிக்கிறாளோ... அல்லது என் மனநிலை புரியாது எப்போதும் போல விளையாட்டுத்தனமாக, களங்கமற்ற சகோதர பாசத்துடன் நடந்து கொள்ளும் பான்மையில் பழகுகிறாளோ... தெரியவில்லையே. பெரியவர்களும் ஜாக்கிரதை என்று என்னையும் எச்சரிக்கவில்லை, உலூகனைத் தவிர. அவனுக்கு அடிப்படையான சோழ நாட்டுக்கு வந்த இலட்சிய அடிப்படை இதனால் தகர்ந்துவிடப் போகிறதே என்ற பயம். ஏதேனும் விபரீதம் நேரும் என்னும் அச்சம். ஆமாம். இது நியாயமான அச்சம்தானே. “பூந்துறை நாயகன் மகா தந்திரசாலி... அவனுடைய அபார மூளையில் அவ்வப்போது தோன்றும் குயுக்திகள் எதிரிகளைத் தம் இலட்சியங்களைக் கூட மறக்கச் செய்யும். எந்த வகைக் கருவியையும் அது துரும்பாயிருந்தாலும் சரி, தூணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, பேயாயிருந்தாலும் சரி, தன் வசப்படுத்திக் கையாண்டு எதிரிகளைச் சாடி தவிக்க வைத்து உருக்குலைத்திடப் பயன்படுத்துவதில் சதுரன். எனவே ஜாக்கிரதை” என்றாரே குருநாதர். ஆனால் இவனுடைய கையாள்தான் வல்லபி என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவள் கலிங்கப் பிரதானின் கையாளாக இருந்து சந்தேகத்தைத் தகர்த்து விட்டாள். வேறுவகைத் தந்திரங்களை ஈடுபடுத்துவாள் என்று நினைத்து எச்சரிக்கையானால் அவன் நம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதாகத் தெரியவில்லை. மன்னன் நம் மீதும் மதிப்பு வைப்பதில் இவன் தலையிடுவான் என்று பார்த்தால் கவனிக்கவேயில்லை அதை. பரிசிலைக் கொடுக்கும் போது முத்தரையர் பாராட்டியதை இவனும் மனப்பூர்வமாகப் பாராட்டி ரசித்ததைக் கண்டேன். தமிழ்வாணி அழைத்த போது தலையிடுவான் என்று நினைத்தேன். மாறாக அவனே வந்து மதித்து யாழ் வாசித்துக் காட்டுகிறான். ஆம். எவ்வளவு லாகவமாக வாசித்து நம்மை அன்று இசை என்றால் என்ன என்று கேட்கும் என்னையே வேறு ஒரு உலகுக்கு அழைத்துச் சென்றுவிட்டான். “அவன் தந்திரத்தில் மயங்கி ஏமாந்து விடாதே” என்றார் குருநாதர். ஆனால் என்னை ஒரு சாதாரண சோழ மகன் மாதிரி நினைத்து நடத்துவதைத் தவிர வேறு ஒரு மாறுதலையும் விபரீதமாகக் கருதி அஞ்சும்படியாக எதையும் அவன் இது வரை செய்ததில்லை. எனவே எதைக் கொண்டு நாம் சந்தேகத்தை விடாமல் வலுப்படுத்திக் கொண்டு எதிரியாகப் பாவித்துக் கொண்டு எட்ட நிற்பது என்றும் புரியவில்லையே. ஆம். பூந்துறையான் ஒரு பதுங்கும் புலியா அல்லது குழியில் ஒளியும் குள்ள நரியா என்று இன்னமும் புரியவில்லை நம்மைப் பொறுத்தவரை. ஆனால் இளவரசி ராஜசுந்தரியுடன் நான் பழகுவதை அவர்கள் யாவரும் தவறாகக் கொள்ளவில்லை என்பது மட்டும் உறுதி. அப்படிக் கருதியிருந்தால் ஏற்கெனவே எச்சரித்து ஒதுங்கியிருப்பர் என்பது உறுதி. எனவே சந்தேகம் இல்லை. நாமும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். குரங்கு மனதை ஈடுபாட்டுடன் நிறுத்தி அடுத்த நிலைக்குக் காலம் கருதிக் காத்திருக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்து கொண்டு தடாகக் கரை உலாவுதலை முடித்துக் கொண்டு மாளிகைக்குத் திரும்பியவன் எதிரே கலகலவென்று சிரித்தபடி எதிரே வந்தாள் ராஜசுந்தரி. முல்லைப்பூ போலப் பற்கள் வரிசை பளிச்சிட்டு மோகனப் புன்முறுவல் ஒன்றை உதிர்த்ததும் அதுவும் அவன் எதிரே அருகே வந்து நின்று அடங்காச் சிரிப்புடன் “எனக்கும் தாத்தாவுக்கும் ஒரு பெரிய போர்” என்றதும் அவன் தன் வசம் இழக்காமல் இருந்தான் என்றால் அது அசாத்திய மானதொரு திடநிலைதானே? “தாத்தாவுடன் போரா?” என்று பதறிய மாதிரிக் கேட்டவன் நாசி, நறுமணத்தை ஈர்த்து உள்ளத்தில் உவகை கொள்ளச் செய்து மனதில் கிளுகிளுப்பூட்டியது. ஆனால் அவள் இவன் முகத்தைக் கூடப் பார்க்காமல் தாமரைப் பூக்களைப் பார்த்தபடி சட்டெனப் படித்துறையில் அமர்ந்தவள், “நீங்களும் இப்படி உட்காருங்கள், நடந்ததை எல்லாம் முழுக்கச் சொன்னால்தானே உங்களுக்குப் புரியும்” என்று சொல்லிவிட்டு இரு சிறிய கூழாங்கற்களை எடுத்து நீரில் போட்டதும் அத்தனை மீன்களும் அப்பால் ஓடியது. மீண்டும் கலகலவென்று சிரித்தாள் கட்டழகி. அவள் புன்முறுவல் அவனைக் கவிஞனாக்கிவிட்டது.
‘கள்ளமில்லா வன்புக் கட்டழகி கண்டேன்; கருத்தினையவளிடம் கண்டதும் தந்தேன்; முல்லைப்பல்வரிசை மோகனப் புன்முறுவல் எல்லையில்லாமல் என் உள்ளம் தவிக்குதம்மா.’ ‘கடவுளே! ஏன் இந்தச் சோதனை?’ என்று குமைந்தபடி அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். உள்ளூரத் துள்ளியெழும் ஆசைவெறியை அடக்க முயன்றபடி. “தாத்தா என்ன கேட்டார் தெரியுமா? ‘நீ ஒரு பொம்மைக் கலியாணம் நடத்துகிறாயா?’ என்று. நான் என்ன குழந்தையா? உண்மையாகக் கலியாணமே நடத்தப் போகிறேன் என்றேன். இதில் என்ன அதிசயத்தைக் கண்டாரோ தெரியவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். எனக்குக் கோபம் வராமலிருக்குமா? ஏன் தாத்தா இந்த சிரிப்பு? பெரியவர்கள் சிறியவர்களுக்குக் கலியாணம் நடத்தி வைப்பது போலச் சின்னவர்கள் பெரியவர்களுக்கும் நடத்தி வைக்க முடியும் என்றேன். ‘எப்படி?’ என்று கேட்டார். தாத்தா, பெரியவர்கள் அறுபது வயதானால் ஒரு அறுபதாங் கலியாணம் நடத்துகிறார்களே... அதை நடத்தி வைப்பது யார்? பிள்ளைகளும். பெண்களும் பேரன் பேத்திகளும்தானே... பிறகு எண்பதாங் கலியாணம்... சதாபிஷேகம் என்று பெரிய வார்த்தை அதற்கு... அதை உற்றார் மட்டுமில்லை, ஊராரே கூடிச் செய்கிறார்கள் என்றேன். தாத்தா சிரித்தார். பிறகு அவர் முகம் மாறிவிட்டது. ஏன் தாத்தா இப்படி சோகமாகிவிட்டீர்கள்.. பாட்டி இல்லையே எப்படி நூறாம் ஆண்டு கலியாணம் நடத்துவதென்றோ? பயப்படாதீர்கள். நடத்தி வைக்கிறேன் என்றேன். ‘எப்படி?’ என்று கேட்டார் பாவம். தாத்தாவுக்கு இப்போது தொண்ணூற்றாறு பிராயம். இன்னும் நாலு வருடம் போனால்... என் வாக்கும் பொய்யாகக் கூடாது. ஆனால் அவர் ஜோடியாகத் திருமண மணையில் அமர பாட்டியில்லையே... அதற்கென்ன செய்வது? யோசித்தேன்... ஒரு சிலை பாட்டியைப் போல அமர்த்திச் செய்தால் என்ன? புராணத்தில் கூட இப்படிச் செய்ததாக ஆதாரமுண்டே என்றேன். அவர் மீண்டும் சிரித்தார். ‘அசடே. அது புராணம். நமக்கு ஒத்துவராது. மக்கள் ஏற்கமாட்டார்கள்...’ என்றார். நான் ஏற்கச் செய்கிறேன். இதுதான் சண்டைக்குக் காரணம். இப்போது அவர் ‘உன்னால் முடியாது...’ என்றார். முடிந்துவிட்டால்... என்று கர்ஜித்தேன். ‘அப்படியானால் என் தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன்’ என்று தாத்தா ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அவ்வளவுதான். அங்கு எனக்கு வந்த சிரிப்பு இன்னும் கூட அடங்கவில்லை” என்று அப்பாவித்தனமாகச் சொல்லி களுக்கென்று சிரித்த அந்தச் சிரிப்பு இருக்கிறதே. அவனைப் பாடாய்ப் படுத்திவிட்டது. “ஏன் விழிக்கிறீர்கள் கங்கரே? நான் ஏன் சிரித்தேன் என்றா? எங்கள் தாத்தா தலையில் ஒரு மயிர்கூட இல்லை. ஒரே வழுக்கை மண்டை” என்றாளே பார்க்கலாம்... அவனும் சிரித்துவிட்டான். ‘இந்தப் பெண் இன்னமும் குழந்தையா? அல்லது அறுபதாங் கலியாணம் எண்பதாங் கலியாணம், நூறாங் கலியாணம் என்று அத்தை பாட்டிப் பேச்செல்லாம் பேசும் வயது வந்த உலகை நன்கறிந்த பருவக்குமரியா...?’ புரியாமல் தவித்தான் பாவம். தொலைவில் கண்டாமணி ஒலித்தது. “ஓகோகோ... பிற்பகல் போய்விட்டது. இன்று முன்மாலைப் பொழுதிலேயே கூத்து ஆரம்பம். நாளையுடன் விழா முடிகிறதல்லவா? இன்று கூத்தழகி ஆடுகிறாள். நாளை... யார் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு யார் என்று கூறாமல் அவனைப் பார்த்ததும் அவன் “தெரியவில்லையே” என்றான். “ஏன்? தெரியவில்லையா? அக்கறை இருந்தால் அந்தக் கறுப்புப் பலகையில் குண்டு குண்டாக அன்றாட நிகழ்ச்சிகளை எழுதி வைத்திருக்கிறோமே அதைப் பார்த்திருக்கலாமே? உங்களுக்கு அக்கறையில்லை. அதனால் நான் சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு விஷயம். நாளை மாமன்னர் வருகிறார். அவருடைய வடமண்டல சேனாதிபதி வண்டையூர்த் தொண்டைமான் வருகிறார். அனேகமாகப் பூந்துறையாரும் வடிவு அண்ணியும் கூட வரலாம். ஆமாம்” என்று கூறியவள் சட்டென எழுந்து “முடிந்தால் நீங்களும் நாளைக்கு...” என்று கூறிக் கலகலவென்று சிரித்துவிட்டுப் பறந்துவிட்டாள் பாவை. சிம்மநாதன் நெடுநேரத்துக்குப் பிறகு நீண்டதொரு பெருமூச்சுவிட்டான். ‘எத்தனை பெரிய சோதனை...? தன்னந் தனியான சூழ்நிலையில் தாமரைத் தடாகக் கரையில், அழகி சாதாரண அழகியல்ல, தேவ மகளிரை வெல்லும் பேரழகுப் பெட்டகம். சாதாரணப் பெட்டகமல்ல, அரசாளப் பிறந்த அழகுப் பெட்டகம் அருகில் இருக்கும் போது நீ துறவி மாதிரி நில்லடா என்று விதி எச்சரித்தால் அதைவிட நரகம் வேறொன்று எங்கே இருக்க முடியும்?’ என்று எண்ணி ஏங்கியபடி திரும்பினான் மாளிகைக்கு. விதி வேறு உருவத்தில் அங்கு காத்திருந்தது, ஆமாம். உலூகன் அங்கு உட்கார்ந்திருப்பதைக் கண்டு இப்படித்தான் நினைத்தான் அவன். தன் தலைவரைக் கண்டதும் எழுந்து வணங்கிய அவன் “தலைவரே, நாம் இங்கு கலைவல்லுநர்களாக மாறியிருக்கிறோம்” என்றான். தன் ஊழியன் கேலி செய்கிறானே என்று கோபம் வந்தாலும் வேறு வழியில்லை மவுனமாயிருப்பதைத் தவிர. உலூகன் தந்திரசாலி. அப்பாவி போல் நடித்துப் பிறர் வாயைப் பிடுங்கி முக்கியமான விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளுவதில் மிகக் கெட்டிக்காரன். இவன் அசடு என்றெண்ணிப் பல பெரிய தலைகள் முக்கியமான பல தகவல்களை இவனை வைத்துக் கொண்டே பேசிவிடுவதுண்டு. எனவே இவன் சேவை இன்றியமையாத தேவை. தவிர ராஜரத்னாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். சிம்மநாதனிடம் இவன் கொண்டுள்ள நம்பிக்கை எல்லையற்றது உறுதியானது. எந்த நிலையிலும் மாறமாட்டான். “என்ன உலூகா, நமக்குச் சம்பந்தமில்லாத கலைப் பேச்சை ஆரம்பித்தாய்?” என்று கேட்டுவிட்டு இருக்கையில் சலிப்புடன் அமர்ந்தான். “நான் ஆரம்பிக்கவில்லை தலைவரே, நிகழ்ச்சிப் பலகையைப் பார்த்தேன். அதில் இருந்ததைப் படித்தேன். உடனே ஓடி வந்தேன். நீங்கள் இங்கு இல்லை. பொறுமையுடன் உட்கார்ந்துவிட்டேன். ஆமாம். நீங்கள் எப்போது தமிழ்க் கூத்து பற்றி ஆராய்ந்து அற்புதமான விளக்கத்தைக் கூறினீர்கள் நான் அறியாமல்?” என்று கேட்டதும் சிம்மநாதன் அவனுடைய புரியாத பேச்சினால் சற்றே சினமுற்று “என்னப்பா நீ... பலகை என்கிறாய். ஆராய்ச்சி என்கிறாய் ஒன்றுமே புரியவில்லையே. சொல்வதைத் தெளிவாகத்தான் சொல்லேன்” என்று படபடப்புடன் கேட்டான். உலூகன் அஞ்சிவிடவில்லை. “தலைவரே, நான் தெளிவாகக் கூற முடிந்தது எல்லாம் எனக்கு நன்றாகத் தெரிந்தவைதான். இந்தக் கலை விஷயம், நமக்குத் தெரியாது... அதனால் தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் உங்கள் பெயரைப் பார்த்தபிறகு...” சிம்மநாதன் சட்டென “என் பெயரா? பலகையில் என் பெயர் எப்படி வந்தது?” என்று பதறிக் கேட்டான். “எனக்கு எப்படித் தெரியும்? குரவைக் கூத்து, ஆரியக் கூத்து, சாக்கியக் கூத்து, தமிழ்க் கூத்து ஆகிய பல்வேறு கூத்து வகைகள் பற்றிய ஆராய்ச்சிக் குழுவில் கங்க நாட்டு நல்லெண்ணத் தூதுவர் கலந்து கொள்ளுகிறார். தமிழ்க் கூத்து பற்றி தனியாக நடக்கும் அற்புதமான ஆராய்ச்சி விளக்கக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார்... என்று போட்டிருக்கிறது. இது பெருமைதானே நமக்கு என்று...” “நிறுத்து... நிறுத்து உலூகா. நானாவது... கூத்தாவது... ஆராய்ச்சியாவது... இதெல்லாம் யார் வேலை?” என்று கத்திவிட்டான். “சோழ நாட்டு இளவரசி ராஜசுந்தரியின் கையொப்பம் கீழே இருக்கிறது.” காவலன் ஒருவன் “அவரே எழுதவும் செய்தார்” என்று கூறியதும் “அடக் கடவுளே” என்று கத்திவிட்டான் சிம்மநாதன். “அவர் பெயரை அதில் நான் பார்க்கவில்லை” என்று அவன் குறுக்கிட்டதும் அவனை ஓங்கி அறைந்து விடுபவன் போல எழுந்தவன் “நானே போய்ப் பார்க்கிறேன். இதெல்லாம் என்ன விளையாட்டு...? நாலுபேர் முன்னே நாம் அவமானப்படவா இங்கு வந்தோம். இதை இப்படியே விட்டுவிடக் கூடாது” என்று எழுந்து நடந்தான். உலூகனும் தொடர்ந்தான். கலை மண்டபத்தின் முகவாயிலில் பெரியதொரு கரும் பலகையில் அன்றைய நிகழ்ச்சிகள் பற்றி வெகு அழகாக எழுதப்பட்டிருந்தன. மாலை நாற்பது நாழிக்கைக்குத் துவங்கும் நிகழ்ச்சி இரவு அறுபது நாழிகைவரை நடைபெறும் என்று எழுதப்பட்ட அந்த விளம்பரத்தில் ‘இன்றைய இரவு நாற்பத்தெட்டு நாழிகைக்கு சோழ நாட்டு இளவரசியின் தமிழ்க் கூத்து நடைபெறும். மாமன்னர் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு விசேஷப் பார்வையாளர்களாகப் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பூந்துறை நாயகன் அவர் மனைவி, வீரசோழன், சோழகங்கன் குடும்பத்தினர், சாத்தனார், பாணர், பாவாணர் ஆகியோரும் சோழ சேனையில் வடமண்டல முதல் சேனாதிபதியாகப் பதவியேற்றுள்ள வண்டையூர்த் தொண்டைமான் அவர்களும் வருகிறார்கள்’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டதும் சில நொடிகள் திகைத்துப் பிரமைதட்டி நின்றுவிட்டான். இளவரசி ஆடுகிறாள் என்ற இன்பச் செய்தியைப் படித்த அவன், வண்டையூரான் வருகிறான் என்று படித்ததும் அடைந்த துன்ப உணர்ச்சி பேரதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. அடுத்து ஆராய்ச்சி செய்வோர் குழுவில் தன் பெயர் போட்டிருப்பது கண்டு கலங்கிவிட்ட அவன் உடனே “உலூகா, நான் இளவரசியின் அரண்மனை வரை சென்று வருகிறேன். நீ நம் இடத்தில் போய் இரு” என்று புறப்பட எத்தனித்தவன் செவியில் “இப்போதுதான் இளவரசியின் மாளிகைக்கு மாமன்னரும் தொண்டைமானும் சென்றார்கள்” என்று கூறியது நுழைந்ததும் ஒரு அடி கூட நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டான். ‘இளவரசியின் மாளிகையில் மன்னர் சரி... தொண்டைமான் எதற்கு? ஒருவேளை அவருடைய சொந்த மெய்யுதவி வராமல் அவனுக்குப் பதிலாக... ஆனால் வடக்கு மண்டல மகாசேனாதிபதியைப் போன்ற பெரும் பதவி வகிப்போரை இதற்கெல்லாம் பயன்படுத்தமாட்டார்களே? அல்லது நேற்றுவரை இவன் ஒரு சாதாரண தளபதிதானே என்று... எது எப்படியிருப்பினும் இளவரசியின் மாளிகையுள் வேற்றான் ஒருவனை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லையே... நம்மையே வாயிலில் நிறுத்தித்தானே காவலன் உள்ளே போய்த் தெரிவித்து வருகிறான். மன்னர் அவனை... ஒருவேளை மஹாசேனாதிபதிகள் இளவரசியின் சொந்த மாளிகையில் போகலாம் என்று பொதுப்பட ஒரு விதியிருக்கிறதோ?’ “நீ நன்றாகப் பார்த்தாயா உலூகா?” என்று கேட்டபடி சலிப்புடன் தன் இருப்பிடம் செல்லத் திரும்பியவன் “நன்றாகப் பார்த்தேன். நாளை மறுநாள் இளவரசிக்குத் திருமணம் நிச்சயமாகிறது. அவளுடைய கணவனாக சோழர்குல மருமகப் பிள்ளையாக வர இருப்பவர் மஹாசேனாதிபதியாக உயர்ந்திருக்கும் வண்டையூர் நாட்டுத் தொண்டைமான் அவர்களே” என்று மிக நிதானமாகக் கூறியதும் “ஆ...! என்ன? என்ன சொன்னாய் நீ? ஏன் இப்படிக் கண்டது கண்டபடி உளறுகிறாய்?” என்று ஒரேயடியாகப் பதறிப் போய் ஏதேதோ கேள்விகள் கேட்டதும் உலூகன் அப்பாவி போல அவனைப் பார்த்து பரிதாபமாக விழித்தான். அதே சமயம் ஆகவமல்லன், தன் உதவிகள் நால்வர் புடைசூழ வந்திறங்கினான். அவனைப் பட்டித்தேவன் ஓடோடி வந்து வரவேற்றான். கம்பீரமான தோற்றமும், ஊடுருவி நோக்கும் வீரவிழிகளும் கொண்ட ஆகவமல்லனைப் பார்த்து ‘யார் இவர்? ஏக மரியாதையாக இருக்கிறதே...’ என்று சிம்மநாதன் உலூகனைப் பார்த்ததும் அவன் “அவர்தான் வீரகாடவ மாராய ஆகவமல்லர். கடல்நாடுடைய தேவர் என்று விருது பெற்ற சோழ நாட்டின் கடற்படைத்தலைவர்” என்று கூறியதும் “ஓகோ!” என்று சற்று நேரம் வேறு எதுவும் பேசாமல் ஆகவமல்லன் மாளிகையின் படிகளை வேகமாகத் தாண்டி ஏறுவதைப் பார்த்து நின்றான் பரபரப்புடன். அடுத்து சில நொடிகளில் இன்னொருவர் நால்வர் புடைசூழ வந்ததும் பட்டித்தேவர் மிகப் பணிவாக வணங்கி வரவேற்றதும், சிம்மநாதன் கேட்பதற்கு முன்னரே உலூகன் “அவர்தான் சோழ சாம்ராஜ்யத்தின் சம்பந்தியாகப் போகும், அதாவது சோழ மன்னரின் மாமனாராகப் போகும், மூவேந்த மதுராந்தக வேளார்... மாளிகையினுள்ளிருந்த அவரை வரவேற்க அதோ வருபவர்தான் காடவமாராயர். நீங்கள் அவரைப் பார்த்திருக்கலாம் ஏற்கெனவே” என்று அவன் கூறியதும்... சிம்மநாதன் ‘இந்த உலகமே இன்று தஞ்சையில் திரளுகிற மாதிரி இருக்கிறதே... எது எப்படியானால் என்ன? இளவரசிக்கு நாளை நிச்சயதாம்பூலம் என்றானே... அது ஒன்றே போதுமே. பேரிடி போன்ற செய்தியல்லவா? அப்படியானால் தொண்டைமான்...’ என்று மேலும் ஏதோ மனதில் நினைத்து தவிக்க இருந்தவன் எதிரே ஒரு முதிய பிராய வீரர் வந்து இறங்கியதும் அவன் ஒரு நொடி தயங்கிவிட்டுப் பிறகு வணங்கினான். “என் பெயர் அகமார்க்க ஓதுவார் என்பது. நீ கங்க நாட்டிலிருந்து வந்துள்ளாய் என்றும், ராஜகுரு விஜயகீர்த்தியின் சீடன் என்றும் சொன்னார்கள். நேரில் பார்க்கலாம் என்று வந்தேன்” என்று சொன்னவரை ஒரு இருக்கையில் அமர்த்திய அவன் மரியாதையுடன் நின்றான். “நீ இன்று கூத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி விளக்கம் கூறப் போவதாகச் சொன்னார்கள். தத்துவ ஆராய்ச்சி வல்லுநரான விஜயகீர்த்தி உன்னை இவ்வகையில் எப்படிப் பயிற்றினார் என்பதறியவும் ஆவல். மாலையில் உன் உரை கேட்ட பிறகுதான் புரியும். ஏனெனில் இன்று கருணாகரத் தொண்டைமானின் அருமந்த மகனும், சோழ இளவரசி ராஜசுந்தரியை மணக்க இருப்பவனும், மண்டல சேனாதிபதியுமான வண்டையூர் வயிரவத் தொண்டைமான் மாபெரும் வீரன் மட்டுமல்ல, உறையூர்க் கல்லூரியில் கலைகள் பல கற்றவன். குறிப்பாக கூத்துக்கலை பற்றி பெரும் ஆராய்ச்சி செய்துள்ளவன். என்னிடம் கூட உரைகள் பற்றிய ஆராய்ச்சி பயின்றவன். நல்லது, நாம் மீண்டும் மாலையில் சந்திப்போம் கலைமன்ற ஆராய்ச்சி மாநாட்டில்” என்றார். குன்றிப் போனான் சிம்மநாதன். ஓதுவார் புறப்பட்டதும் அவன் அசந்து போய்விட்டான். ‘மாலை ஆராய்ச்சியில் தொண்டைமான் பிரதானமானவன் என்றால் தான் அவமானப்படுவது நிச்சயம். எனவே அங்கு செல்ல முடியாது. அதனால் இரவு இளவரசியின் கூத்து நிகழ்ச்சியை அனுபவிக்க இயலாது. எப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம்? ஒருவேளை நான் வரலாகாது என்றே தொண்டைமான் இவ்வேற்பாட்டைச் செய்திருப்பானோ? அரசகுமாரியிடம் என் பெயரை போடும்படி சொல்லியிருப்பானோ? இப்படியும் இருக்கலாம். ஆனால் இளவரசி பகலில் இது பற்றிப் பேசிய போது ஒன்றுமே சொல்லவில்லையே. தவிர நாளை கூத்து ஆடுபவர் பற்றி சொல்லாமற் சொல்லிய அழகும்... தன்னைக் கோபித்துக் கொண்ட அழகும், தாத்தாவுடன் அவர் நூற்றாண்டு விழா திருமணம் பற்றிப் பேசிய வம்பும் விமரிசையாகச் சொன்னவள் தன் திருமணம் பற்றி மட்டும் ஏன் சொல்லவில்லை? ஒருவேளை மனமொப்புதலில்லா மணவினையோ? அரசியல் திருமணமோ இதுவும். இருக்க முடியாது. தொண்டைமான் அப்படியொன்றும் காடவர் போலவோ, முத்தரையர் போலவோ தலைமைப் பெருந்தலையுமில்லை. சோழனுக்கு இன்றியமையாதவனுமல்ல... ஒருக்கால் மன்னன் தன் போல இளவயதும் மிடுக்கும் முறுக்குமுள்ள பேர்வழி என்ற நினைவில் தன் தங்கையைக் கொடுக்கவே பெரும் பதவியும் தந்திருக்கலாம். ஆம். இப்படித்தான் இருக்கும். பூந்துறையார் கூட இத்திருமணத்தை அங்கீகரித்திருக்க முடியாது. சோழ இளவரசி இன்னொரு சோழனையோ அல்லது கங்கம், கலிங்கம் வேங்கி, கொங்கு போன்ற நாட்டின் இளவரசனைத்தான் தேர்ந்தெடுப்பார்... ஆம். அதுதானே முறை...’ “எதுதானே முறை தலைவரே?” என்று உலூகன் கேட்ட பிறகுதான் வாய்விட்டு இந்த வார்த்தையைச் சொல்லியிருக்க வேண்டும் என்று உணர்ந்தான். ‘சே...! எச்சரிக்கையாயிருக்கத் தவறிவிட்டோம். நல்ல காலம் உலூகன் மட்டும் இருந்தான்...’ “உலூகா, நான் இன்று மாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்கில்லை...” “ஐயையோ! இளவரசியின் அழைப்பு, அறிவிப்பில் பெயர் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பு எல்லாம் முக்கியமாயிற்றே. மதிக்காவிட்டால் தங்களை அவமதித்ததாக அல்லவா அவர்கள் கருதிவிடுவார்கள்?” “அதற்கு ஒரு யோசனை செய்ய வேண்டும். என் பெயரை அந்த அறிவிப்பில் வேண்டுமென்றே சேர்த்திருக்கிறார்கள் யாரோ?” “நீங்கள் அனுமதிக்காமலா?” “ஆமாம். யாரும் என்னைக் கேட்கவில்லை. எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது. எனவே போகப் போவதில்லை. இதற்காக நாம் யோசித்து ஏதாவது ஒரு காரணத்தைக் கூற வேண்டும். ஆனால் அது பொருத்தமாக இருக்க வேண்டும்.” “இரவு கலை நிகழ்ச்சிக்கு?” “அதற்குப் போகாமலிருக்க முடியாது.” உலூகன் சிரித்துவிட்டான். “நீ சிரித்துவிட்டாய். ஆனால் என் நிலை உனக்குப் புரியாது.” “புரியாமலென்ன? உங்களுக்கு மீசையும் தேவை. கூழும் தேவை. ஆனால் அந்தக் கூழ் மீசையில் பட்டுவிடக் கூடாது...” மீண்டும் சிரித்தான். சிம்மநாதன் இப்போது அவனைக் கோபிக்கவும் இல்லை. இப்படியாகிவிட்டதே தன் நிலைமை என்று மட்டும் குன்றிப் போனான். உலூகன் சட்டெனக் கேட்டான். “தலைவரே, உங்களால் ஒரு கூட்டத்தில் பேச முடியுமா?” ‘எதற்கு இந்தக் கேள்வி?’ என்கிற மாதிரி அவனைப் பார்த்தான் சிம்மநாதன். மீண்டும் அவன் கேட்ட போது “முடியும். ஆனால் கங்க மொழியில்தான் பேச இயலும்” என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னான். “ஆஹ்ஹா...!” என்றான் உலூகன். ‘எதற்கு இந்த ஆஹா?’ என்று கேட்காமல் பார்த்தான் சிம்மநாதன். “தலைவரே, கவலையில்லை. நீங்கள் கங்கர். எனவே நீங்கள் அம்மொழியில்தான் பேச முடியும். இங்கிருப்பவர்களுக்கு அது புரிந்தால் சரி. புரியாவிட்டால் உங்களுக்குத் தெரியாத மொழியில் பேசும்படி அவர்கள் வற்புறுத்த முடியாது அல்லவா?” என்று கேட்டான் நிதானமாக. இப்பொழுது ஆஹா! என்றவன் சிம்மநாதன்தான். உலூகன் இல்லை. “ஆனால் உலூகா, நீ பலே ஆள். ஆமாம். சரி நீயே துவக்கிவிட்டாய் பதில் தந்திரத்தை. அந்தத் தொண்டைமான் இன்று நம்மிடம் எதுவும் செய்ய முடியாது” என்றான். உலூகனுக்குப் புரியவில்லை. ‘தொண்டைமானை ஏன் இவர் வம்புக்கு இழுக்கிறார்? இளவரசியை அவர் மணக்க இருக்கிறார் என்பதாலா? உம்... எல்லாம் வயதுக் கோளாறு...’ “உலூகா, நாம் நம் மொழியில் பேச முன் அனுமதி வாங்க வேண்டும் என்ற சாக்கில் உன்னைத் தமிழ்வாணியிடம் அனுப்புகிறேன் ஒரு ஓலையுடன். அதற்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்திருக்கிறது நம்முடைய அடுத்தத் திட்டம்.” “ஆம், பேசலாம் என்று வந்தால் நீங்கள் நம் குருநாதரின் உரை ஏதாவதொன்றை ஒப்பித்துத் தொலைக்க முயற்சியுங்கள்” என்றான். “அது சாத்தியமில்லை. அவர் தத்துவ விளக்கப் பேர்வழி. எதற்கும் பதில் வரட்டும்” என்று உலூகனை அனுப்பி வைத்தான் ஒரு ஓலையுடன். அடுத்த கால் நாழிகையில் யாருக்கும் கங்க மொழி தெரியாது. எனவே சிரமப்பட வேண்டாம் என்று பதில் வந்தது. அப்புறம் எப்படி அவன் மகிழ்ச்சியில் திளைத்து திணறாமலிருக்க முடியும். |