உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 17 சோழர்களின் காலத்தில் சகல கலைகளும் பிரமாதமாக வளர்ந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் நிறைய உண்டு. அறுபத்து நாலு கலைகள் என்று கூறப்படுவதுண்டே அவை அனைத்தும் அக்காலத்தில் மக்களால் நன்கு பயிலப்பட்டன என்றும் கவிஞர்கள், ஓவியக் கலைஞர்கள், சிற்பிகள், இலக்கியப் படைப்பாளர் ஆகியோர் மிகவும் மதிப்புடன் அரசினாலேயே பராமரிக்கப்பட்டனர். ஓவியர்களைக் கைவல்லார் என்றும் கலை இலக்கியம், கட்டுரை வல்லுநர்களைக் கலைவல்லார் என்னும் அரசு மதிப்பாகப் பாராட்டி ஆதரித்தது. வானக் கோள் ஆராய்ச்சிக் கலைஞர்கள் ஆகாச கமனர் என்றும், ஓலைகள் எழுதுவோரை ஓலைநாயகம் என்றும், கல்வி பயிலுவித்தாரைக் கணக்காயர் என்றும், பாடல்களை இயற்றிப் பாடியவர்களைப் பாவாணர் என்றும், சாதகம் கணிப்போரை கணியர் என்றும், தேவாரம் ஓதுபவர்களை திருப்பாட்டு மகேசர் என்றும், இதே போன்று நாட்டியம் ஆடுவோரை கூத்தரசு அல்லது தேவரடியார் என்றும் (இவர்கள் தெய்வத் தொண்டு செய்வதையே தலையானதாகக் கருதல் வேண்டும்) கூத்துக்களிலும், கோயில்களிலும் யாழ் இசைப்போரை யாழ்ப்பாணர் என்றும் அழைப்பர். இவ்வாறாக கலைகள் பலவற்றையும் குறையின்றி வளர்த்த குலம் சோழர் குலம். சோழ அரசிகள் கூட கூத்துக் கலையில் தேர்ந்து கூத்தும் நடத்தியுள்ளனர். இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் அன்று தமிழ்வாணி, இளவரசி ராஜசுந்தரி போன்றோர். அன்று கலைமாளிகை அமர்க்களப்பட்டது. அதனுள்ளிருந்த கலைமண்டபம் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரிய பெரிய தீவர்த்திகளை தூண் ஓரங்களில் செருகியும் மேடையில் பாவை விளக்குகள் பலவற்றை ஏற்றியும் மண்டபத்தை ஒளி மயமாக்கிவிட்டனர். மாலை நடந்த மாநாட்டில் கூத்துக்கலை பற்றிய ஆராய்ச்சி விளக்க உரையில் அனைவரும் பங்கு கொண்டனர். அவற்றில் தொண்டைமான் ஆற்றிய ஆய்வுரை வெகுவாகப் பாராட்டப் பெற்றது. கூடியிருந்த பெருங்கலைஞர் பலரும் அவன் உரை ஒரு சிறந்த கருத்துக் கருவூலம் என்று கூறினர். மாமன்னரே வந்து சிரக்கம்பம் செய்து அவனை ஊக்கிவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. சிம்மநாதன் நடு மையமான இடத்தில் உட்காராமல் ஒரு மூலையில் அமர்ந்திருந்தது ஏன் என்று சிலர் யோசித்தாலும் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இளவரசி, தமிழ்வாணி இருவரும் அவன் ஆராய்ச்சி உரை கேட்க முடியாமல் போயிற்றே என்று சிந்திக்காமலில்லை. எனினும் அவர்கள் கங்க மொழி அறிந்தவர் இல்லையே. எனவே வேறு வழியில்லை. சிம்மநாதனைத் தொண்டைமான் பார்த்தானாயினும் அவனைக் கவனிக்காதவன் மாதிரியே இருந்துவிட்டான். ஆனால் சிம்மநாதன் பதவியின் திமிர் கண்களை மறைத்துவிட்டது என்று உள்ளூர உறுமாமலில்லை. ‘அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் வம்பு செய்தது போல இங்கும் வம்புக்கு இழுத்தால்... பூந்துறையார் வரட்டும். அவரிடம் சொல்லிவிட்டால் என்ன?’ அன்று நிகழ்ந்ததை என்றும் நினைத்தான்... ஆனால் பூந்துறையார் வரும் போது நன்றாக இருட்டிவிட்டது. எனவே அவரைச் சந்திக்கவும் வாய்ப்பில்லை. என்ன நடக்குமோ என்ற எண்ணக் கலக்கத்துடன் சென்றான் இரவு கூத்து நிகழ்ச்சிக்கு. மாமன்னர் சிம்மாசனம் போன்ற ஒரு பெரும் இருக்கையில் நடுநாயகமாக வீற்றிருக்க, அவர் பக்கத்தில் வலப்புறம் பேரமைச்சர் பிரமாதிராயரும், இடப்புறம் மதுராந்தக மூவேந்த வேளாரும் அமர்ந்திருந்தது கண்டு சற்றே வியந்தான். பின் வரிசையில் நடுவில் தொண்டைமானும் அவன் பக்கத்தில் தனக்கும், அவனுக்கு அடுத்தாற் போல் பூந்துறையாரும் அமரும் நிலை ஏற்பட்டது கண்ட சிம்மநாதனுக்குச் சப்தநாடியும் அடங்கிவிட்டது. அன்று இளவரசியின் கூத்து நிகழ்ச்சி அற்புதமாகத்தான் இருந்தது. அனைவரும் ஏகமனதாக ரசித்தனர் சிம்மநாதனைத் தவிர... பாவம்! அன்று காலையில் அவன் இருந்த இருப்பென்ன? இப்போது அவன் தவிக்கும் தவிப்பென்ன... சேச்சே! இனி இம்மாதிரி ஒரு நெருக்கடி நிலையை ஏற்கவே கூடாது... கதவருகில் போய் நின்றால் கூடத் தன்னை மறந்து ரசித்திருக்கலாம். இந்தப் பாவியின் பக்கத்தில் அமர்ந்து... என்ன சொல்வானோ, ஏது செய்வானோ என்ற நினைவைத் தவிர வேறு நினைவு எதுவுமின்றி நரக வேதனையுடன் அந்த ஆறு நாழிகையையும் உன்பாடு என்பாடென்று நகர்த்தினானே அன்றி கூத்தினையோ இளவரசியையோ அவன் கவனிக்கவேயில்லை. எதிர்பார்த்தபடி எதுவும் நடைபெறவில்லை. தொண்டைமான் எந்த வம்பும் பேசவில்லை. அன்று அவன் சாதாரண ஆசாமி. இன்று பெரிய பதவி. அதனால் தன் வாயைக் கட்டுப்பாடு செய்து கொண்டிருக்கிறான். உரை வாசித்த போது கூட ஏதோ பெரிய பதவி என்றுதான் கை தட்டினார்களே அன்றி திறமையை உண்மையிலேயே பாராட்டியா? இருக்காது. ஆனால் இளவரசி கைதட்டி பிரமாதம் என்றாளே... அது... மன்னரைத் திருப்தி செய்ய... அவ்வளவுதான். வழக்கம் போல இல்லாமல் பூந்துறையார் முன் வரிசையில் அமராமல் தொண்டைமான் பக்கம் ஏன் உட்கார்ந்தார்? தன்னை மீறி, தன் பதவியும் தகுதிக்கு ஏற்ப நடந்து கொள்ளப் பயிலுவிக்கத்தான்... உம் பாவம்! மன்னர் வற்புறுத்தலால் கிடைத்த பதவி... பூந்துறையார் ஒரு நாள் விரும்பாவிட்டால் அப்புறம் இவன் பதவியேது? எத்தனையோ பேர் இவன் திடீர்ப் பதவி உயர்வு காணப் பொறாமைப்படாமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் பூந்துறையாரிடத்தில் கோள் மூட்டாமலிருக்க மாட்டார்கள். நமக்குக்கூட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு சந்தேகக் கணையைத் தொடுக்க வேண்டியதுதான். “சோழ நாட்டில் மன்னர் தயவு முதலாவதல்ல. இரண்டாவதுமல்ல... முதலில் பூந்துறை தயவு... பிறகு வீரசோழன், சோழகங்கன் தயவு. அப்புறம்தான் மன்னர் தயவை நீ நாட வேண்டும். எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் பூந்துறையாரின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துவிடு. அப்புறம் கவலையில்லை. ஆனால் அவன் சந்தேகத்துக்கு மட்டும் இடங்கொடுத்து விடாதே. அது பேராபத்து. மூட்டைப் பூச்சியை நசுக்கிவிடுவது போல நசுக்கிவிடுவான்” என்று தன் குருநாதர் சொன்னதை நினைத்துக் கொண்டான். ‘ஆமாம். இதுவரை அவர் சந்தேகங் கொள்ளவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் மூட்டைப்பூச்சி மரணம் அடைந்திருக்க நேருமே...’ என்று உள்ளூர உவகையுடன் நினைத்தவன் ‘சரி, நேரம் கிடைத்ததும் அவனைப் போய்ப் பார்த்து கொஞ்சம் துதி பாடிவிட்டு தொண்டைமானைப் பற்றி ஒரு பொடி வைத்துப் பேசிவிட்டு பூந்துறை நாடு செல்லவும் அனுமதி கேட்க வேண்டும். அங்கிருந்தபடியேதான் சேதி நாட்டுத் தலைவருடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். எப்போதும் பூந்துறையார் கங்கைகொண்டபுரத்தில் அல்லது உறையூர் இல்லையேல் தஞ்சை ஆகிய இடங்களிலேயே இருப்பதால் அவருடைய மண்டலத்தில் தங்குவதில்லை. எனவே அதை ஒரு சாதகமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் நினைத்தான் சிம்மநாதன். சிம்மநாதன் இப்படித் தன்னந்தனியாக அமர்ந்து பல பட யோசித்திருந்த சமயத்தில் உலூகன் சும்மாயிருக்கவில்லை. கடந்த பத்து நாட்களில் அவன் சில முக்கிய தகவல்களைச் சேகரித்திருந்தான். அவற்றில் சில முக்கியமானவை. இவர்களுடைய முயற்சியையும், லட்சியத்துக்கான பயணத்தையும் பாதிக்கக் கூடியவை. தகடூரான் என்று அழைக்கப்படும் மெய்யுதவியை இவன் வெகுவாகச் சினேகம் பிடித்துக் கொண்டான். தஞ்சை மெய்யுதவிகளின் தலைவனான பட்டித்தேவனிடம் தகடூரானுக்கு நடுக்கம்தான். ஆனால் ஒரு குறை அவனுக்கு. தகடூர் அதிகமான் ஆண்ட பகுதி. கங்க நாட்டை ஒட்டிய பகுதி. அங்கு அக்காலத்தில் பேசிய மொழி பெரும்பாலும் கங்க மொழிதான். (அது இக்காலத்தின் கன்னடம் என்று கூடக் கூறலாம்). தகடூரானின் உண்மைப் பெயர் லிங்கப்பன் என்பதாகும். இந்தப் பெயரை விடுத்து தமிழர்கள் அவனைத் தகடூரானாக்கிப் பிறகு, ஒரு தமிழ்ப் பெண்ணை அவனுக்கு மனைவியும் ஆக்கிவிட்டனர். இதனால் அவனுக்குப் பட்டித்தேவரிடத்தில் சிறிதளவு கோபம் இருந்தது. தன் ஊர் திரும்பி தன் பகுதிப் பெண் ஒருத்தியை மணந்து கொள்ளக் கூட வாய்ப்புத் தராமலிருந்து விட்டார்களே என்ற கசப்பு அவன் மனதில் நிலைத்திருந்தது. உலூகன் கெட்டிக்காரனில்லையா? இந்தக் கசப்பினை வெறுப்பாக மாற்ற இரண்டு மூன்று தினங்கள் எடுத்துக் கொண்டான். பிறகு தகடூரான் வீட்டுக்கே போனான். விருந்து உண்டான். பத்து தங்கக் காசுகளைக் கொடுத்து நேசத்தை வலுப்படுத்திக் கொண்டான். நம்மிடம் அன்பு காட்டும் உலூகனுக்குத் தேவையானதைச் செய்யும்படி அவன் மனைவியும் தூபம் போட்டாள்... மனைவி சொன்ன பிறகு மாறாமலிருப்பானா? “உலூகா... நீ என் சகோதரன் மாதிரி. இந்தச் சோழ நாடு, வர வர எனக்கு அலுத்துவிட்டது. இங்கு எப்பவுமே அவர்களுடைய காரியங்களில்தான் அக்கறை காட்டுகின்றனரேயன்றி நமக்கு எதுவுமே செய்வதில்லை. என்னடா இவனும் ஒரு மனுஷன்தானே, சற்று விட்டுக் கொடுப்போம் என்று இடம் தரவே மாட்டார்கள். நானும் பார்த்துப் பார்த்து அலுத்து விட்டேன். நீ தாராளமாகக் கேள், உனக்கு எது வேண்டுமானாலும் இங்கு ஏற்பாடு செய்கிறேன். ஆனால் நீ ஊர் திரும்பும் போது என்னையும் இவளையும் அழைத்துப் போய்விட வேண்டும். இது போதும். நீ என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டான். உலூகன் மிகவும் ஜாக்கிரதையாக “தகடூரா, நீ சோழ உப்பைத் தின்றவன். எனவே இங்கு இருக்கும்வரை சோழர்க்கு மாறு நினைக்காதே. ஆனால் நான் உனக்கு உதவி செய்யத் தயார். நீ எனக்குச் செய்ய வேண்டியது எல்லாம் சில தகவல்களைத் திரட்டித் தருவதுதான். நானும் என் தலைவரும் சோழ நாடு முழுமையும் சுற்றப் போகிறோமாதலால்... நீ இவற்றைத் தந்தால் உதவியாயிருக்கும். ஆனால் நீ சோழர்க்கு எதிராக செயல்படுவது இல்லை என்று சொன்னால்தான்” என்று கூறியதும் தகடூரான் ‘எவ்வளவு நல்லவன் இவன்’ என்று மகிழ்ந்து அவன் சொல்வதைச் செய்ய ஒப்புக்கொண்டு விட்டான். “கங்க நாட்டு வீரர்கள் மூவர் கடல் கடந்து சென்ற காலை எங்கள் கடல்நாடுடையாரைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் போனார்கள், எங்குப் போனார்கள் என்று இவர்களுக்குத் தெரியாது. தற்போது திரும்பிவிட்டதாகத் தகவல்...” “சரி, இது நாங்கள் எதிர்பார்த்ததே.” “கங்க நாட்டுக்கு ஒரு பெரிய தமிழ்நாட்டு வணிகர் செல்லுகிறார். செல்வப் பேரரையன் என்று கூறப்படும் இவர் எங்கள் நாட்டுத் தென்பகுதியிலிருந்து அதாவது நாகையிலிருந்து செல்லுகிறாராம். மன்னர் இவருக்கு அனுமதி கொடுப்பதாக உறுதி கூறியுள்ளார்...” “ஓகோ! நிரம்பச் செல்வந்தரோ?” “ஆமாம். இவருக்குச் சொந்த மரக்கலமே உண்டு.” “ஓ...! அப்படியானால் கங்க நாட்டுக்கு யோகம்தான்.” “ஆமாம். இவர் அங்கு பெரிய வணிக நிலையம் அமைத்துப் பலருக்கு வேலை வாய்ப்புத் தருவதாகவும் கூறியுள்ளார்.” “அப்படியா? மிக்க நல்ல பணி.” “அடுத்தபடியாக கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகில் பந்தனை நல்லூர் என்ற ஊர் பல காலமாகக் கலை வல்லுநர்களை வளர்த்துத் தமிழகத்துக்குத் தரும் ஊர் இது. இங்கு மிகச் சிறந்த உத்துவல்லுநர்கள் இருவர் அற்புதமான முறையில் கூத்துக்கள் நடத்தும் பயிற்சியை ஒரு பெண்ணுக்கு அளித்து அவளைக் கொண்டு தமிழ்க் கூத்தை வடக்கிலும் பரப்ப ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் முதலில் கங்க நாடு செல்லுவாராம்.” “ஓகோ! இவர்களுமா? ஒரு பக்கம் வாணிபம், மற்றொரு பக்கம் கலை... கங்கத்துக்கு நல்ல காலம் பிறக்கிறது போலும்.” “கங்கத்துக்கு நல்ல காலமோ இல்லையோ... இதெல்லாம் எனக்குத் தெரிந்த தகவல்கள். மூன்றாவதாக நாளை மறுநாள் உங்கள் தலைவருக்குப் பூந்துறை போகும்படி அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது. அனேகமாக நானே உடன் வரும் உதவியாக இருப்பேன். பட்டித்தேவன் பராபரியாகச் சொன்னார். இன்னும் ஓலை மூலம் உறுதிப்படுத்தவில்லை.” “அப்படியா? நீ வந்தால் அது பேருதவியாக இருக்கும். ஆமாம். பூந்துறையார் எங்களை இந்தப் பகுதியிலிருந்து அங்கு அனுப்புவானேன்?” “அது கொங்கு நாட்டுப் பக்கத்தில் இருப்பதால் நிலவளம், மலைவளம், நீர்வளம் ஆகிய மூன்றும் அதிகம் கொண்ட பகுதி. தவிர காடுகள் பல, மலைக்கோயில்கள் பல. இவை தவிர ஏலம், கிராம்பு போன்ற கடல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களை உற்பத்தி செய்யும் பகுதி. பூந்துறைக் கரும்புத் தேனாக இனிக்கும். வேட்டையாடுவதற்கு அந்தப் பகுதிதான் ஏற்றது.” “ஓகோ! உல்லாசமாக இருக்க ஏற்ற இடம் என்று நம் பூந்துறையார் எங்களை அங்கு அனுப்புகிறார் போலிருக்கிறது. நல்லது, மாமன்னர் திருமணம் வேறு வருவதால் பூந்துறையாருக்கு வேலை நிறைய இருக்கும்.” “ஆம். ஏன் என்றால் இந்தத் திருமணம் அவருடைய ஏற்பாடு. மன்னர் பட்டமேறிய பிறகு நடத்தும் திருமணமாதலால் சோழ நாட்டில் மிகச் சிறப்பாக இத்திருமணத்தை நடத்தப் போகிறார்கள். பெரிய திருவிழா மாதிரி...” “நியாயம்தானே... சோழ நாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகளைச் சிறப்பாகக் கொண்டாடுவது மக்களின் மகிழ்ச்சி கருதித்தானே. பல்வேறு துறையிலுள்ள பல பேர்கள் பிழைப்புக்கு வாய்ப்புண்டு... நல்லது தகடூரா... நாளை நாம் மீண்டும் சந்திப்போம். தலைவரை நான் போய்ப் பார்க்க வேண்டும்” என்று விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான். தலைவரிடத்தில் இவற்றை விளக்கமாகக் கூற வேண்டும். இவற்றில் மேலோட்டமாக உள்ள பொருள் உள்வகையில் மாறாயிருக்கும். ஊன்றி ஆராயும் திறன் அவருக்கே உண்டு. பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்று சிம்மநாதன் இருப்பிடம் சென்றான். ஆனால் அங்கே சென்றதும் இவனுக்கு அதிசயம். “உலூகா, உன்னைத்தான் எதிர்பார்த்தேன்... வா... இவர்கள் இருவரும் இந்த நாட்டின் பெருங் கூத்துக் கலைஞர்கள். அதுமட்டும் இல்லை. இசை வல்லுநர்களும் ஆவர். அரசியின் சகோதரி தமிழ்வாணி அனுப்பியிருக்கிறார். இவர்கள் பந்தணை நல்லூரைச் சேர்ந்த பழம் பெரும் கூத்துப் பரம்பரையினராம். நம் நாட்டிற்குச் செல்லுகிறார்களாம். போகும் முன்னர் என்னைப் பார்த்துவிட்டு கங்கத்தில் தற்போதைய நிலையை அறிந்து புறப்படும்படி பூந்துறை நாயகன் புத்திமதி கூறினாராம். ஐயா, இவன் என்னுடைய மெய்யுதவி... பெயர் உலூகன்.” “அப்படியா! மிக்க மகிழ்ச்சி” என்று கூறியவர்களை உற்றுப் பார்த்தான். நிச்சயமாக இவர்கள் கூத்துக் கலைஞர்கள்தான். ஏனென்றால் கைகள் தானாகவே தாளம் போடுகிறது. கண்கள் அடிக்கடி மெய்ம்மறந்து மூடுகின்றன. அடுத்தவர் கால் பூமியில் பதியாமல் தட்டித்தட்டி எழுகிறது. இதில் சூது எதுவும் இருக்க வழியில்லை. இவர்கள் போய் அங்கு ஆட முடியும். அவ்வளவுதான். “தலைவரே, நீங்கள் இவர்களுக்குத் தேவையானால் நம் தலைவர்களுக்கு அறிமுக ஆதரவுக் கடிதம் கூடக் கொடுக்கலாம்” என்றான் உலூகன். அவனுடைய இந்த யோசனையின் உட்கருத்தினைப் புரிந்து கொண்டான் சிம்மநாதன். குறிப்பிட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் கடிதம் இவர்களைக் கண்காணிக்கவும் பயன்படுமல்லவா... அத்துமீறி இவர்கள் அங்கு செயல்பட முடியாதே? “நீ சொல்வது நல்ல யோசனைதான் உலூகா. சில ஓலைகளைக் கொண்டு வா. எழுத்தாணி அதோ... உம்... சரி இப்படி கொண்டு வா. உம்... உங்கள் பெயர்களைக் கூறுங்கள்...” என்று கேட்டபடி அவன் எழுத்தாணியை எடுத்ததும் ஒன்றரைக் கண்ணரான கூத்துப் பெரியவர் தன் பெயர் விசயராயன் என்றும், மற்றவர் பெயர் கனகராயன் என்றும் தங்களுடைய மாணவியின் பெயர் மோஹினி என்றும் கூறினான். “எங்களைப் பந்தணைநல்லூர் பரம்பரைக் கலைஞர்கள் என்று குறிப்பிடுவதுதான் எங்களை உண்மையாகவே மதிப்பதாகும்” என்றான். சிம்மநாதன் சிரித்துக் கொண்டான். கலைஞர்கள் எப்பவுமே இப்படித்தான். பட்டினி கிடந்தாலும் கிடப்பர். பெருமையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இவர்கள் உண்மையான கலைஞர்கள் என்பதற்கு இதுவே போதும். “எனக்கு ஒரு சிறு சந்தேகம்” என்றான் இன்னொரு கலைஞனான கனகராயன். சிம்மநாதன் எழுதுவதை நிறுத்திவிட்டு “அதென்னவோ?” என்றான் நிதானமாக. “ஒன்றுமில்லை. எங்களுக்கு நல்ல தேன் வேண்டும். அது அங்கு கிடைக்குமோ. கிடைக்காதென்றால் இப்பவே சொல்லிவிடுங்கள். இங்கேயிருந்து ஒரு பானையில்...” கங்கன் சிரித்துவிட்டான். கேவலம் தேனுக்காகவா இப்படி ஒரு குழைவு... “ஐயா, கவலைப்படாதீர்கள். கங்க நாட்டில் ஏராளமான கொம்புத் தேன் கிடைக்கும். அது அங்கு நிரம்பவும் மலிவு... இங்கே உங்கள் தொண்டை கரகரத்தால் கூட அங்கே போய் அந்தத் தேனை ஒரு துளி சாப்பிட்டால் தொண்டையே தேனாகிவிடும்” என்று கூறிச் சிரித்தான். அவர்களும் கலகலவென்று சிரித்தார்கள். “ஒரு பெரிய கவலை தீர்ந்தது விசயா... என்ன இருந்தாலும் நாம் அசலூர் போகிறோம். அங்கு நிலைமை எப்படி என்று அந்த ஊர்க்காரர் சொல்லிவிட்டால் கவலை இல்லை பார். பூந்துறையார் இவரிடம் போகும்படி புத்தி சொன்னது தரமான விஷயம்” என்றான் கனகன். “பால்... ஏன் கேட்கிறேன் என்றால் அது கொஞ்சம்...” “கவலை வேண்டாம். அங்கு பால் ஆறே ஓடுகிறது” என்றான் உலூகன். “அப்படியா? மெய்யாகவா... பளா... பளா...! அதுதானே பார்த்தேன். முன்பு ஒருமுறை... லச்சவிதேவியம்மாள் வந்திருந்தாளே கங்க நாட்டிலிருந்து, அவர்கள் கூட சொல்லியிருந்தார்கள் இப்படி... ஆமாம் அங்கே பாலாறு ஓடுகிறது எனக்கு நினைவில்லை... என்னமோ நாங்கள் என்ன ராஜரீகம் அறிந்தவர்களா? எங்கள் கலைத் தொண்டுக்கே நேரமில்லை. இதெல்லாம் பெரிய இடத்து விஷயங்கள்.” சிம்மநாதன் தன்னுடைய குருநாதர், ஸ்ரீஹரி. ஸ்ரீபதி ஆகியோர்களுக்கு அறிமுகக் கடிதம் கொடுக்கிறான். பிறகு சொன்னான் “எங்கள் நாட்டில் உதயாதித்தியவர்ம மகாராஜா ஆண்ட காலத்தில் லச்சவிதேவி மட்டும் அகிலம் புகழும் இசை, கூத்துக் கலையரசியாக இருந்தாலும், வேறு சிலரும் உண்டு. அநங்கன் என்று ஒரு பெரும் கலைஞர் ஆரியக் கூத்திலும் சாக்கியக் கூத்திலும் தேர்ந்தவர். பூதேவி என்று பெயர் பெற்ற கூத்தழகி. இவள் பெயர் இன்னும் குன்றவில்லை. இவர்களையும் போய்ப் பார்த்து நேசமாக்கிக் கொள்ளுங்கள். அவர்களுக்கும் ஓலை கொடுத்திருக்கிறேன்.” “மிக்க நன்றி பிரபு...! நாங்கள் அங்கு இதுவரை போனதே இல்லை. பூந்துறையாரை அனுமதி கேட்ட போது அவசியம் போகத்தான் வேண்டுமா என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார். ஆனால் நாங்கள் விடவில்லை. கெஞ்சிக் கூத்தாடி... எப்படியோ பெற்றுவிட்டோம்” என்றான் கனகன். “அவர் மேலே பார்ப்பதற்குத்தான் அப்படி. உள்ளே நல்லவர்தான். ‘ஏன் ஐயா... இங்கே கொங்கு மண்டலம், பாண்டிய நாடு... சேர நாடு இல்லையா... அங்கு மொழிக் கோளாறு. உங்களுக்கு என்ன புரியும்’ என்றார். நாங்கள் ஒரு மாதிரியாக அவருடைய பிடிவாதத்தை மாற்றி அது இது என்று சொல்லி... அனுமதி பெற்றுவிட்டோம்.” சிம்மநாதன் சிரித்தான். கலைஞர்கள் பேச்சே இப்படித்தான். “என்ன உலூகா, இவர்கள் நம்ம நாடு செல்கிறார்கள். கலைஞர்களாக. நீ...” என்று இழுத்தான். “நல்லவர்கள் பாவம். கலைஞர்கள் என்றால் அசல் கலைஞர்கள்தான். தேனையும் பாலையும் பற்றி எவ்வளவு தவிக்கிறார்கள்” என்றதும் சிம்மநாதன் சிரித்து விட்டான். “நாங்கள் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நீங்கள் பேருதவி செய்திருக்கிறீர்கள்” என்று இளித்தான் கனகன். இதை ஆமோதிப்பவன் மாதிரி விசயனும் பற்கள் பளிச்சிட சிரித்தான் நன்றி கூறும் பான்மையில். இருவரும் புறப்பட அவர்களை மாளிகை வாசல் வரை கொண்டுவிட்ட உலூகன் திரும்பி வந்து “தலைவரே, சந்தேகம் சிறிதும் இல்லை. பரம்பரைக் கலைஞர்கள்தான்” என்றான். “ஆமாம். சந்தேகமில்லை” என்றான் சிம்மநாதனும். |