விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

18

     பூந்துறை நாயகன் கனக விஜயர்களைக் கண்டதும் “பிரமாதம்...” என்று ஒரே வார்த்தையில் தனது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டான்.

     கடுங்கோன் தங்கள் நடிப்பைப் பற்றிப் பேசுகிறாரா? அல்லது கடிதங்கள் பெற்ற வகையைப் பற்றியா? என்று விழித்தான். ஆயினும் விழிகளைப் பெரிதாக்கி உருட்டும் பான்மையில்லை.

     “நல்லவேளை. நீ மீண்டும் விழித்து விடுவாயோ என்று பயந்துவிட்டேன் கடுங்கோன்” என்று கூறிச் சிரித்தவன் “சரி, நீங்கள் புறப்படலாம். நீங்கள் கலைஞர்கள். ஆதலால் குதிரையேறத் தெரியாதவர்கள். சிவிகைகளுக்குப் பதில் இரு குதிரைகள் பூட்டிய வண்டி இரண்டு தயாராயிருக்கிறது. தலைநகரில் பூங்கொடிக்குத் துணையாக ஒரு வயதான அம்மையாரை ஏற்பாடு செய்திருக்கிறேன். தைரியமாகப் போய் வாருங்கள். நாளைக் காலையில் சோழ நாட்டு வணிகப் பெருமகன் தமது இரு உதவியாட்கள், ஏராள பொருட்களுடன் குவலயபுரம் செல்லுகிறார். அந்தப் பெருமகனின் பெயர் செல்வப் பேரரையர் என்பது. இவருக்காக அங்கு பெருமாளிகையும் ஏற்பாடாகிறது. உங்களுக்கும்தான். ஒரு குறைவும் இருக்காது. நம் திட்டத்திற்கு மாறாக ஏதாவது நடக்குமானால் சமய சந்தர்ப்பம் அறிந்து அதற்கேற்றபடி நடக்க உங்களுக்கு பூரண உரிமையுண்டு.”

     “நல்லது தலைவரே. நாங்கள் புறப்படுகிறோம்” என்றான் மாவலி.

     பூந்துறையான் மீண்டும் சிரித்துவிட்டு “நீங்கள் முதல் பரிசோதனையில் கண்ட வெற்றி கடைசி வரை நிச்சயம் வெற்றிகரமாகவே இருக்கும்” என்று அழுத்தமாகக் கூறியதும் இருவரும் மிக்க நிம்மதி கொண்டு புறப்பட்டனர்.

     அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வண்டையூர்த் தொண்டைமானும் இளவரசன் வீரசோழனும் வந்து சேரவும் மூவரும் மன்னரைக் காண அரண்மனைக் கேகினர்.

     “இதுவரை நாம் சொந்த விஷயங்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இனி சில தினங்களுக்கு நாம் நமது குடும்ப வேலைகளையே கவனிக்க வேண்டும்” என்று பூந்துறையான் கூறியதும் வீரசோழன் “கரிவர்மரே, காலமெல்லாம் இப்படித்தான் சொல்லி வருகிறோம். ஆனால் இப்படி நடப்பதுதான் இல்லை” என்று பதில் அளித்தான்.

     அரண்மனையில் எந்த விஷயம் பேசி முடிவு செய்தாக வேண்டும் என்கிறார் பூந்துறையார் என்று தொண்டைமானுக்குப் புரியாவிட்டாலும், அரண்மனைக்குள் நுழைந்ததும் அங்கு மாமன்னர்கூட ஆகவமல்லனும், பேரமைச்சரும் மிகவும் ஈடுபாட்டுடன் பேசியிருப்பதைக் கண்டு, ‘சரிதான், வீரசோழர் சொன்ன மாதிரி இங்கு சொந்த விஷயம் என்று எதுவுமே பேச இயலாது’ என்று முடிவு செய்துவிட்டான்.

     ஆனால் கரிவர்மனையும், வீரசோழனையும் கண்டதும், மாமன்னர் “கடல்நாடுடையார் ஒரு முக்கியமான தகவல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்” என்று கூறிவிட்டுப் பூந்துறையாரை உற்றுப் பார்த்தார்.

     அவருடைய பார்வையின் கருத்தை ஊகித்த கரிவர்மன் “நாம் முதலில் வயிற்றுப் பாட்டை முடித்துக் கொள்வோம். அதற்குள் யாங்சின் இங்கு வந்துவிடப் போவதில்லை” என்று சாதாரணமாகக் கூறியதும் மன்னரும் அமைச்சரும் திடுக்கிட்டு “அப்படியானால் உங்களுக்கு முன்பே தெரியுமா?” என்று கேட்டனர்.

     “இது நாம் பதறுவதற்குரிய விஷயம் இல்லை. யாங்சின் புகார்த் துறை வரும் முன்னர் மூன்று பெரும் மரக்கலங்களை கவனித்தாக வேண்டும். இரண்டு யவனக் கப்பல்கள், ஒன்று எகிப்திய நாட்டுடையது. நம்முடைய சோழக் கப்பல்கள் யாவும் கரைக்கு வந்துவிட்டன. முதலில் அவன் அந்த அன்னியக் கப்பல்களைக் கொள்ளையடித்து முடித்த பிறகுதான் தனது நாட்டு வணிகரைக் கொண்டு சேர்ப்பது பற்றி யோசிப்பான். ஆனால் சிங்களம் பயந்துவிட்டது. நியாயம்தான். கடல்நாடுடையார் நம்முடைய இரு பெரும் கப்பல்களை அனுப்பியுள்ளார் சிங்களருக்குத் துணையாக. அதாவது பாதுகாவலாக... யாங்சின் அவற்றை எதிர்க்காமல் இணங்கி சிங்களத்தையும் எதுவும் செய்யாமலிருந்தால்தான் அவனுடைய நாட்டுக்குப் பெருவணிகர்கள் அனைவரையும் இறக்க அனுமதிப்போம்” என்றான்.

     விக்கிரமன் எவ்வளவு விரைவில் இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது என்று வியந்தாலும் வாய்விட்டுக் கேட்காமல் அமைச்சரைப் பார்த்தான்.

     அவரோ “நமக்கு முன்பே தெரிந்திருந்தால் நாம் இவ்வளவு கவலையுடன் இங்கு தவித்திருக்க மாட்டோம். கடல்நாடுடையார் இப்பொழுதுதான் வந்தார் அவர். அநேகமாக யாங்சின் இன்னும் மூன்று நான்கு நாட்களில் இந்துமாக் கடலில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்” என்றார்.

     “பூந்துறையாருக்கு அதுவும் தெரியும்” என்றான் வீரசோழன்.

     இப்படிச் சொல்லிவிட்டு ஒரு நொடி தயங்கியவன் “இப்போது நம் நாட்டில் உள்ள சீனர்களும் ஒரு பயமும் இல்லாதபடி பாதுகாக்கப் படுகிறார்கள்” என்று கூறிச் சிரித்ததும் மன்னர் ‘சரி சரி. இவர்கள் நம் வரையில் இப்போதைக்கு இத்தகைய பிரச்னைகளைக் கொண்டுவர விரும்பவில்லை’ என்று நினைத்து அமைச்சரிடம், “எழுந்திருங்கள், முதலில் உண்டியை முடித்துக் கொள்ளலாம்” என்று கூறியதும் அவர் இசைவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அனைவரும் சாப்பிடப் புறப்பட்டனர்.

     தொண்டைமான் ஏதேதோ நடக்கப் போகிறது என்று கலங்கியதென்னவோ உண்மை. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. வேகமாக வீச வந்த புயல் அடங்கிப்போன தென்றல் மாதிரி என்று நினைத்தான்.

     “என்ன இருந்தாலும் யாங்சின்னும் அவனுடைய அந்த நாலு கப்பல்களும் அவற்றில் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்ட ஆயிரம் பேர்களும் கீழை நாடுகளைச் சுற்றி கடல்களில் பயங்கர பூதங்கள் மாதிரி செயல்படுகிறார்களே. இதற்கு விமோசனமேயில்லையா?” என்று உண்டி முடிந்த சற்று நேரத்தில் பூந்துறையானிடம் கேட்ட போது அவன், “யாங்சின் கொள்ளைக்காரன். அது அவன் தொழில். கடலில் அநாயாசமாகச் சுற்றிச் சுழன்று எவ்வளவோ பயங்கரமாகவே கொள்ளையடிக்கிறான் என்பது உண்மை. ஆனால் அவன் நம்மவர்களை அதாவது கீழை நாட்டினரைக் கொள்ளையடிக்காமல் யவனர்களையும் உரோமானியர்களையும், எகிப்தியரையும் கொள்ளையடிக்கிறான். அதற்கு ஒரு நியாயம் கூறுகிறான். எவ்வளவோ முயன்றும் அவனை யாரும் எதுவும் செய்ய இயலவில்லை. சீன மக்கள் பலரும் இவனுக்கு ஆதரவாக இருப்பதால் மன்னரும் இவனை ஆதரிக்கும் நிர்ப்பந்தத்துக் குள்ளாயிருக்கிறார். நாமும் நம்மிடம் அவன் வம்பு செய்யாத வரை ஒதுங்க வேண்டியதுதான். இல்லையேல் நாம் கடலோடுவதை நிறுத்தி அவனோடு முழுப் போர் ஒன்று நடத்த வேண்டும். இது ஒரு அசாத்தியமான விஷயம். ஏனெனில் அவன் அவனுடைய ஆட்கள் கடலோடுவதில் இன்று நிகரற்றவர்கள். தவிர அவனுடன் நாம் போராட நமது நட்பு நாடான மிகப் பெரிய சீனம் நமக்கு விரோதம் ஆகிவிடும். இத்தகைய விரோதம் நம்மைப் பெரிதும் நஷ்டத்துக்குள்ளாக்கும். எனவே நாம் யாங்சின்னைப் பொறுத்தவரை நரி எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகட்டும் மேலே விழுந்து பிடுங்காமல் போனால் போதும் என்று ஒதுங்கியிருப்பது அரசியல் முறையின் உத்தமம்” என்றான்.

     மாமன்னரும், பேரமைச்சரும் இதைப் பூரணமாக ஆதரித்ததும் ஆகவமல்லன் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டான்.

     பூந்துறை நாயகன், “மன்னரும் அமைச்சரும் துயில் கொள்ளட்டும். நாம் வடகரைவரை சென்று வரலாம்” என்று பூந்துறையான் அழைத்ததும் வீரசோழனும், வயிரவனும் உடன் புறப்பட்டுச் சென்றனர் நொடியும் தாமதியாமல்.

     அவர்கள் அப்பால் சென்றதும் பேரமைச்சர் மிக்க நிதானத்துடன் “மாமன்ன, நீங்கள் இளைஞர். என்றாலும் சூழ்நிலைக்கேற்ப இயங்கத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். இது ஒரு நல்ல சகுனமும் கூட. ஏன் என்றால் தங்கள் தந்தையாரிடம் நான் முப்பதாண்டுக் காலம் அமைச்சராக இருந்தவன் என்ற அனுபவத்தில் ஒன்று கூற விரும்புகிறேன். அவரை நான் வெகுவாக மதித்தவன். அவருடைய அபாரமான திறமை, பண்பட்ட பேச்சு, இயங்கும் சுறுசுறுப்பு யாவும் போற்றத்தக்கவை. ஆனால் முன்கோபம் அவரைப் பல சமயத்தில் காலை வாரிவிட்டுவிடும். பிறர் யோசனையை ஏற்பதிலும் அவர் பிடிவாதம் பிடிப்பார். தமது முடிவுகளைப் பிறர் மீது திணிக்கவும் முயலுவார். இதெல்லாம் அந்நாளில் செல்லுபடியாயிற்று. நாங்கள் ஆட்சிக் குழுவில் இருந்த போது மன்னரோ அல்லது அவரது அன்னையாரும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் மகளுமான அம்மங்கா தேவியும் வைத்தது சட்டம். அதை மாற்றுவதென்றால் படாதபாடுபட வேண்டும். இப்போது நீங்கள் பூந்துறை நாயகனைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அவரிடம் சந்தேகப்பட்டது முன்னர் எங்கோ இருந்து வந்தவர் இவரால் சோழர் நடைமுறையை அறிந்து செயல்பட முடியுமா என்றும் கலங்கினோம்.

     ஆனால் பேரரசி அம்மங்கா தேவி தமது இறுதி நாளில் “இனி சோழ நாடு இவன் வழிப்படித்தான் செல்லும். அப்படிச் சென்றால்தான் நாடு வாழும், நாட்டு மக்களும் வாழ்வர், சோழர்களும் ஆட்சி செய்ய முடியும்” என்று கூறிவிட்டுச் சென்றதும் மன்னரும் அப்படியே அதை ஆமோதித்ததும் நாங்கள் திகைத்தோம். என்றாலும் காடவர்கோன் பதவியை மகனிடம் விட்டு நகர்ந்தார். கடல்நாடுடையார் ஆகவமல்லனிடம் ஒப்பித்துவிட்டார் கடற்படையை. முனையரையர் மகன், முத்தரையர் மகன், வீரசோழன், சோழகங்கன் ஆகிய இளைஞர் அணியின் தலைமை இன்று கிடைத்திருக்கிறது. கரிவர்மன் தன் விருப்பம் போலவே இவர்களை இயக்குகிறான். ஆனால் அவன் உடல் பொருள் ஆவி அனைத்தும் சோழ நாட்டு நலனுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதால் நாங்கள் எவரும் ஒரு துளிகூடக் குறைப்படுவதற்கில்லை. குறைப்படுவதும் தவறு. முழுத் தவறு. எனவே நான் இன்று உங்களிடம் ஒரு வரம் கேட்கவே வந்தேன்” என்றார் ஸ்ரீ வத்ஸ பிரும்மாதிராயர்.

     விக்கிரம சோழன் வாய்விட்டுச் சிரித்தான் இத்தனையையும் நிதானமாகக் கேட்டுவிட்டு. அவர் திகைத்தார்.

     “பேரமைச்சரே, நான் என்ன கடவுளா? வரம் அளிக்க. நீங்கள் பேரமைச்சர். உங்கள் அமைச்சு இல்லையேல் இந்த அரசு இல்லை. எனவே நீங்கள் வரம் எதுவும் கேட்க வேண்டாம். உரிமையுடன் கேளுங்கள். என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

     “ஓய்வு வேண்டும். பதவி விலக விரும்புகிறேன். இதற்கும் ஒரு இளம் வயதினன் வந்தால்...”

     “பிரமாதிராயரே, உங்களுக்குப் பிள்ளைகள் இல்லை. ஆனால் அப்படியே இருப்பினும் நான் இளைஞன். இந்தப் பெரிய பதவிக்கு சோழ மன்னனுக்கு அடுத்ததான இப்பதவிக்கு வருவதை விரும்பவில்லை. நீங்கள்தான் இருக்க வேண்டும். முதியவர் ஒருவரே இப்பதவிக்குத் தகுந்தவராவர். இப்போதைக்கு சோழ நாட்டில் தங்கள் பதவியை ஏற்கும் திறமையோ, அனுபவமோ, தகுதியோ கொண்டவர் யாரும் இல்லை. இது ஒரு வகையில் துரதிர்ஷ்டமே. முடியுமானால் நீங்கள் எவரையாவது தேர்ந்தெடுத்து, பயிற்சி தாருங்கள். ஆனால் நீங்கள் இருக்கும் வரை நீங்கள்தான் சோழ நாட்டின் பேரமைச்சர். இதை யாரும் பூந்துறையாரும் சேர்ந்துதான் மாற்ற முடியாது. புரிகிறதா?” என்று அழுத்தந்திருத்தமாகக் கேட்டதும் பேரமைச்சர் ‘அப்பாடி! என்ன வேகம்? என்ன அழுத்தம்...’ என்று பதறி “சரி மாமன்னரே. உங்கள் ஆக்ஞையை மீறுவதற்கில்லை” என்றார் பணிவாக. ஆனால் மகிழ்ச்சி அவர் குரலில் நன்கு தொனித்தது.

     மன்னர் புரிந்து கொண்டார். எல்லாம் இளவட்டங்களே இன்று. எனவே நமக்கும் அவர்களாகவே மாற்றம் ஏற்படுத்தும் முன்னர் நாமாகவே போய்விடுவோம் என்று அவராகவே முடிவு செய்து வந்திருக்கிறார். இவருடைய இறுதிக் காலத்தில் நாம் எதற்காக ஒரு அதிர்ச்சியை உண்டாக்க வேண்டும்? அவர் இருக்கும் வரை இருக்கட்டுமே என்று மனிதத்தன்மையைப் பிரதானமாகக் கொண்டு சட்டென முடிவுக்கு வந்தார். பூந்துறையார் நிச்சயம் இதை எதிர்க்கமாட்டார் என்பதில் அவருக்கு நம்பிக்கையிருந்தது.

     “சரி பேரமைச்சரே, நாம் துயில் கொள்ளச் செல்வோம். வடகரை போனவர்கள் அங்கிருந்து தங்கை செல்லுவார்கள். நாளைதான் திரும்புவார்கள்” என்று மன்னர் விளக்கமாகச் சொன்னதும் ‘சரி, பூந்துறையான் சீனக் கொள்ளைக்காரன் சம்பந்தமாகவே சென்றிருக்கிறான்’ என்று புரிந்து கொண்டார் அவர்.

     மாமன்னர் ஊகம் சரியானதே.

     பூந்துறையார், வீரசோழர், தொண்டைமான் ஆகிய மூவரும் வடகரை சென்றதும், அங்கே கடல்நாடுடைய ஆகவமல்லன் இவர்களை எதிர்பார்த்திருந்தவர் போலத் தயாராயிருந்தார். பிறகு நால்வரும் புரவிகளை வடகரை மீதே ஓட்டியபடி தங்கையை நோக்கிச் சென்றனர். அங்கு இவர்கள் வரவை எதிர்பார்த்து ஒரு சிறு மரக்கலம் நின்றது.

     அந்தச் சிறு கப்பலில் நால்வரும் ஏறியவுடன் அது கிழக்கு நோக்கி நகர்ந்தது. பூந்துறை நாயகன் உள்ளே மற்றவர்களுடன் இருக்கைகளில் அமர்ந்ததும், “சரி மல்லரே, இனி நாம் மனம்விட்டுப் பேசலாம். ஏனெனில் நாளைக் காலையில் கங்கபாடிக்குப் புறப்படுகிறான் வயிரவன். அங்கு இவன் செயல்படும் வகை பற்றிச் சொல்லி விட்டேன். ஆனால் கங்கர்கள் குறிப்பாக ஸ்ரீபதி, ஸ்ரீஹரி, நீதிமார்க்கன், நேசமித்திரன் ஆகியோர் யாங்சின்னைப் பார்த்திருக்கிறார்களா என்ற விவரம் தேவை...”

     “அது உறுதியாகக் கூறுவதற்கில்லை. ஆனால் இந்தத் தடவை அவனுடைய உதவியாட்களுக்கு ஏகப்பட்ட பெண்களைத் தானம் செய்வதாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.”

     “கடல் கொள்ளையருக்குப் பெண்கள், அதுவும் கங்க நாட்டுப் பெண்கள் என்றால் பிரதியாக அவர்கள் தருவதென்ன?”

     “போர்க் கருவிகள்.”

     “இவை எந்த நாட்டுப் போர்க் கருவிகள்?”

     “அனேகமாக யவனர்களுடையதாக இருக்கலாம் என்று ஊகிக்கத்தான் முடியும்...”

     “வயிரவா... இவை எப்போது வருகின்றன, எப்படி எவ்வழி வருகின்றன? எங்கு பதுக்கி வைக்கப்படுகிறது என்பதை வணிகர் என்ற முறையில் அல்லாமல்...”

     “புரிகிறது பூந்துறையாரே.”

     “கலிங்கத்துக்கோ வேங்கிக்கோ போனாலும் உடன் தெரிவிக்க வேண்டும். இன்னும் பத்து தினங்களில் இங்கிருந்து நானூறு முதல் ஐந்நூறு பேர்கள் அங்கு வந்து கங்குந்தி மலைப் பகுதியில் தங்கியிருப்பர்... நாடோடிகள் மாதிரி இருப்பர். இவர்களிடம் அந்தப் போர்க் கருவிகள் இருக்குமிடம் தெரியப்படுத்தினால் அவற்றைப் பாதுகாத்து எதிரிகளுக்குப் பயன்படாதபடி தடுத்துவிடுவார்.”

     “நல்லது. அதையும் தெரியப்படுத்துகிறேன்.”

     “யாங்சின் சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்னே இலங்கை மன்னரிடம் ஒரு குறிப்பிட்டிருந்த தொகை கேட்டிருந்தானாம். அவரால் அதைக் கொடுக்க முடியவில்லை. இந்தத் தடவை கொடுக்கா விட்டால் திருகோணமலையைத் தவிடு பொடியாக்கிவிடுவதாக எச்சரித்துள்ளானாம். எனவேதான் நம் கப்பல்கள் இரண்டையும் அங்கு...”

     “அக்கப்பல்களை நடத்திச் செல்லும் உத்தமப் பல்லவரையன் கெட்டிக்காரன். கூடிய வரை நேரிடையாக மோதாமல் யாங்சின்னை சமாளிக்கிறேன் என்று கூறினான். எனினும் நான் ஒரு யோசனையை மேற்கொண்டு செயல்படுத்த இருக்கிறேன்.”

     “அது என்ன ஆகவமல்லரே?”

     “சீனக் கப்பல்களில் உள்ளவர்கள் அதாவது வணிகர்கள் உறையூரில் இறக்கப்பட்டதும், அந்தக் கொள்ளைக்காரர்களும் இறங்காமலிருக்க மாட்டார்கள். யாங்சின்னை முதலிலேயே புகாரில் ஒரு நஷ்டமும் உண்டுபண்ணக் கூடாது என்று எச்சரிப்போம். ஆனால் அவர்கள் மீறிவிடக்கூடிய சாத்தியக் கூறும் உண்டு.”

     “ஆமாம். நமது தென்னங்கள், பனங்கள், ஈச்சங்கள் இருக்கும் போது நம்மவர்களே குடித்துவிட்டுக் கூத்தடிக்கவில்லையா? உம் அப்புறம்...”

     “நாம் அந்த நாலு காலிக் கப்பல்களையும் வளைத்துக் கடத்திக் கொண்டு போய்விடுவது. அதேசமயம் அவர்கள் ஆயிரம் பேரையும் துறையில் பிடித்துச் சிறையிடுவது என்பதாக ஒரு யோசனை.”

     “இந்த யோசனை சாத்தியம்தானா என்று யோசிக்க வேண்டும். அடுத்தபடி இந்த யோசனைக்கு மாற்றாக வேறெதாவது சிந்திக்க வேண்டும். ஏனென்றால் அந்த யாங்சின் தந்திரக்காரன். அவன் இவர்களை அதாவது அந்த சீன வணிகர்களை இந்நாட்டில் எங்கு இறக்குவான்? அனேகமாக உறையூர் என்று நீங்கள் ஊகிக்கிறீர்கள். அவனோ தன் ஆளை முன்னே அனுப்புவான். அவர்கள் வரலாம். இங்கு எல்லாரும் ஏமாந்திருக்கிறார்கள் என்று சொல்லுவான். எனவே நம்மை ஏமாற்றவே அவன் வருவானேயன்றி ஏமாறுவதற்காக வரமாட்டான் அவன். எனவே எல்லா வகை யோசனைகளையும் அவனுடைய போக்கினை அனுசரித்தே நாம் முடிவு செய்ய வேண்டும். மாநக்கவரத்தை விட்டுக் கிளம்பிவிட்டான் என்றால் நாம் அவனை மூன்று நாட்களில் அல்லது, நாலாவது நாள் பூம்புகாரில் என்பதுதான் இப்போதைய நிலை. ஆகவே இதை அடிப்படையாகக் கொண்டே நாம் செயல்பட வேண்டுமேயன்றி அவசரப்பட்டுவிடக் கூடாது. புரிகிறதா?”

     ஆகவமல்லன் எப்பவுமே அதிகமாகப் பேசுபவனுமல்ல, காரிய சாதனையாகக் கூடாத யோசனைகளைச் செய்பவனுமல்ல. ஆனால் யாங்சின் அசாதாரணமான கொள்ளைக்காரன். அவனுடைய கொள்ளைத் திறனைக் கண்டு மேற்கத்திய உலகமே பயந்து நடுங்கியது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் கீழை நாடுகளை குறிப்பாக இந்திய நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் அவனால் கொள்ளையடிக்கப் பட்டதாகக் கூறப்படவில்லை.

     மேலை நாட்டுக் கப்பல்கள் யாவும் அவன் இலக்குக்குத் தப்பாமல் செல்லாதாம். எனவே அவர்கள் அவனைக் கடல் ஓநாய் என்று கூறுவதில் அதிசயமில்லை. அவன் பேரைச் சொல்லி பயமுறுத்தியே கூட சிலர் காலமோட்டியதுண்டு. இவ்வழி போனால் யாங்சின் குறுக்கிடுவான் என்று ஆரூடம் சொல்லியவர்கள் வேறு வழியில் மட்டும் அல்ல, சில நாட்கள் பொறுத்தே செல்லுங்கள் என்று கூறி எச்சரித்தார்கள். யாங்சின் பேரைச் சொல்லி மிரட்டி பணம் பெற்றவர்கள், இப்படியாகப் பலவகையிலும் பிழைப்பை நடத்தியவர் எத்தனையோ பேர்.

     சிங்கை, சிங்களம், மலையூர், மாநக்கவரம், கடாரம். காம்பூஜம், சம்பா, சீவிசயம், சாவகம், பாபுவம் ஆகிய பல்வேறு கீழை நாடுகளும் தீவுகளும் மேலை நாட்டுக் கப்பல்கள் வருகையை எதிர்நோக்கியே வாழ்ந்தன. பல நாடுகள் இறக்குமதியானால்தான் இவர்களால் வாழ முடியும் என்ற நிலை. எனவே இவர்களும் யாங்சின்னால் கப்பல்கள் கொள்ளையடிக்கப் படாமல் வந்தாக வேண்டும் என்று அஞ்சித் தவித்தனர்.

     ஆனால் யாங்சின் கொள்ளைக்காரர்களிலேயே மிகப் பயங்கரமானவன் என்று பெயரெடுத்த இவன் எப்படிப்பட்டவன் என்பதைப் பலர் பலவிதமாகக் கூறினர்.

     சிலர் அவன் படுகிழவன். ஒற்றைக் கண் இல்லை. ஒற்றைக் கால் இல்லை என்றார்கள். மற்றும் சிலர் அவன் விருத்தன்தான் என்றாலும் விகாரம் இல்லை என்றார்கள். வேறு சிலர் அவன் கோடானு கோடி குவித்த கோடீஸ்வரன். பெண்கள், மது என்றால் வெகு பிரியமாக அவற்றில் திளைத்தவன் என்றார்கள்.

     ஆனால் ஒரு சிலரே அவனை நேரில் பார்த்திருக்கிறார்கள். அந்த ஒரு சிலரில் பூந்துறை நாயகனும், ஆகவமல்லனும் சேர்க்கப்பட வேண்டியவர்கள். இவர்களில் பூந்துறை நாயகன் சில காலம் அந்த யாங்சின் கொள்ளைக் கப்பலிலேயே சிக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

     அந்த பயங்கர நிகழ்ச்சி நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும் அதை நாளதுவரை மறக்க முடியவில்லை. சாவகத்தின் மிகப் பெரும் கப்பல் ஒன்று கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது அதை வழி மறித்தான் யாங்சின். அவர்கள் நிறுத்தி தாங்கள் சாவகர் என்று கூறியிருந்தால் அவன் வம்பு செய்திருக்க மாட்டான். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாமல் எதிர்த்தார்கள். அவ்வளவுதான். கப்பலைத் தாக்கினார்கள். யாங்சின் கப்பலுக்குள் வந்து அத்தனை பேரையும் கைது செய்தான். அவர்களில் அக்கப்பலில் உதவியாக இருந்த ஒரு பையன்தான் பூந்துறை நாயகன். அப்பொழுது இவன் பெயர் வீரபாலன். யாங்சின் அவனை முப்பது நாட்கள் தன் பிடியில் வைத்திருந்தான். அப்போதே யாங்சின்னை நன்கு அறிந்தான் வீரபாலன்.

     ஏறக்குறைய முப்பது வயதிருக்கும் யாங்சின்னுக்கு. சீனர்களில் அவன் சற்று உயரமான தோற்றமுள்ளவன். அவனுடைய தோற்றத்தைப் பயங்கரமாக்கியது அவனுடைய மிக நீண்ட மீசைதான். சிரித்த முகம், பெண்கள் என்றால் அந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான். பிரமாத ஆடையணிகள் இல்லை. பொருள்களை அவன் கப்பலிலுள்ளவர்களிடம் கொடுத்துக் கணக்கு அனுப்பி தேவையுள்ள மக்களிடம் விநியோகிக்கச் செய்வான். அவனுடைய ஆட்கள் நம்பிக்கையானவர்கள். எஜமான விசுவாசம் உள்ளவர்கள்.

     “நீயும் எங்களுடன் இருந்துவிடேன்” என்று கூடக் கேட்டான்.

     “இல்லை, நான் வேறு ஒரு கடமையைச் செய்யத் தமிழகம் செல்ல வேண்டும்” என்றான் இவன். ஒரு யவனக் கப்பலில் இவனை அனுப்பி வைத்தான் யாங்சின். அன்று பிரிந்தவன். அதுமுதல் அவனும் இவனும் சந்தித்ததில்லை. இந்த நிகழ்ச்சி நடந்து பத்துப் பனிரெண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

     எனவே இப்பொழுது யாங்சின் நாற்பது நாற்பத்தைந்து வயதுள்ளவனாயிருப்பான். இந்த இடைக்காலத்தில் அவனைப் பற்றிய கதைகள் எத்தனையோ பரவி உலகைக் கிடுகிடுக்க வைத்தான்.

     அத்தகையவனை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் என்று கூட பூந்துறை நாயகன் நினைக்காமலில்லை. அப்படிச் சந்திக்கும் நிகழ்ச்சி சில நாட்களிலேயே நடந்தும் விட்டது என்றால் அதிசயம்தானே?