விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

19

     இந்துமாக் கடலின் கோடிமுனை என்று கூறப்படும் கோடிக்கரைப் பகுதியில், தமிழ்நாட்டுக் கரைக்குக் கொஞ்சம் தள்ளி அதாவது ஒரு காத தூரம் தள்ளி நின்றது நாலு பெரிய கப்பல்கள். இலங்கையின் வடகோடி கடல்துறையிலிருந்தும் இதே தொலைவுதான். அக்கால வழக்கப்படி நாங்கள் இன்ன இடத்தில் நங்கூரம் பாய்ச்சியுள்ளோம் என்று அந்தந்த நாடுகளுக்குத் தகவல் தெரிவிப்பது உண்டு.

     கொள்ளையனானாலும் யாங்சின் தனக்கென்று சில விதி முறைகளைக் கடைபிடித்தான். ‘நான் இன்ன இடத்தில் என்னுடைய கப்பல்களுடன் நிற்கிறேன். எனக்கு உடனடியாக இன்னின்னது தேவை. உடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள். மூன்று நாள் கெடு. மீறினால் எங்கள் கப்பல் உங்கள் துறைக்குள் புகும். கப்பல் ஆட்கள் நாட்டில் புகுவர். அப்புறம் நடப்பது யாருக்கும் மகிழ்ச்சி தராது’ என்று எச்சரிக்கைத் தகவல் கொடுப்பான்.

     நமக்கேன் வம்பு இவனுடன்? என்று நினைத்தவர்கள் அவன் கோரிக்கைப்படி இயன்றதை அனுப்பி சமரசமாக ஒதுங்கி விடுவர். வம்பு செய்ய விரும்புபவர்கள் அவனிடம் தாங்க முடியாத அவதிப்படுவர். ஆனால் அன்றைய நிலையில் அவன் சோழர்க்கு ஒரு சிறு படகில் இரு தூதுவர்களை அனுப்பினான்.

     ‘எங்கள் சீனத்துப் பெருவணிகர் நூற்றியொரு பேர்கள் உங்கள் நாட்டில் வாணிபம் செய்வதற்கென ஒரு பெருங்குழுவினராக வந்துள்ளனர். இவர்களிடம் எந்த வகை ஆயுதங்களும் இல்லை. ஏராளப் பொருள்கள்தான் இருக்கின்றன. விலைமதிப்பற்றது. இப்பொருள்கள் சோழர்களின் நெடுநாளைய தேவையைப் பூர்த்தி செய்யும். எனவே இவர்களை நாலைந்து பேர்களாக புகாருக்குள் அனுப்ப அனுமதிக்க வேண்டுகிறோம்’ என்று எழுதி அவர்களை கரைக்கு அனுப்பினான்.

     சில நாழிகையில் அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி அனுமதி கிடைத்திருக்கிறது என்று அறிவித்ததும் நிம்மதியுற்றான். இன்னொரு செய்தியை இலங்கைத் துறைமுகத் தலைவருக்கு அனுப்பினான். அதில் ‘கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் ஒப்புக்கொள்ளப்பட்ட முறையில் இலங்கை எங்களிடம் காணிக்கைகளை அனுப்பவில்லை. நாளதுவரை இது பற்றித் தகவலும் இல்லை. உடன் ஏற்பாடு செய்யவும். மூன்று நாள் கெடு. இல்லையேல் உரிய பலனை எதிர்நோக்கவும்’ என்று எச்சரித்து எழுதினான்.

     கடித வாசகம் சுருக்கமானது என்றாலும் எச்சரிக்கை பயங்கரமானது. இலங்கை இப்போதுள்ள பஞ்ச நிலையில் எதுவும் செய்ய இயலாது. உள்நாட்டுப் பஞ்சம் காரணமாக மக்கள் தவித்தனர். சேனை வலுவிழந்து சிதறிக் கிடந்தன. கடந்த மூன்றாண்டு பஞ்சம் நாட்டினரைப் புத்தி பேதலிக்கச் செய்தது.

     இலங்கை மன்னன் இளைஞன்தான். ஆனால் சோழ மாமன்னர் குலோத்துங்கன் மகளை மணந்தவன். அவள் சொன்னாள்: “நாம் புத்தி தடுமாறக் கூடாது. உடன் பூந்துறையாருக்குத் தகவல் அனுப்புங்கள்” என்றாள்.

     ஆனால் இதற்கு முன்னரே திரிகோணமலையில் வெள்ளைக் கொடி பறந்த இருபெரும் சோழக் கப்பல்கள் தென்பட்டதாக மக்கள் அறிந்ததும் பெருமகிழ்ச்சி கொண்டனர். மன்னனும் சோழகுலவல்லியும் இதனால் பெற்ற நிம்மதிக்கு. ஈடில்லை.

     யாங்சின் தன்னுடைய கப்பலிலிருந்தே இவற்றைத் தொலை தூரக் கருவிகளால் கண்டான்.

     ‘சோழக் கப்பல் வெள்ளைக்கொடி தாங்கி நிற்கிறது. உறையூரில் ஒரே ஒரு கப்பல், இலங்கையில் இதே சோழக் கப்பல் இரண்டு ஏன்? அஞ்சாதே என்று அபயம் அளிக்க வந்தார்களா? நம்மை மிரட்டவா? அல்லது இயல்பாக நடந்துள்ள சம்பவமா? இதுகாறும் இலங்கைக்குச் சோழன் கப்பலை அனுப்பி உதவி செய்ததேயில்லையே... இதென்ன திடுதிப்பென்று இடையீடு. ஒருவேளை இந்த இடைக்காலத்தில் சோழர்களும் இலங்கையரும் விவாக வகையிலோ வேறு வகையிலோ உறவினர்களாகி விட்டார்களா? அப்படியானால் சற்று யோசித்தே செயல்பட வேண்டும்’ என்று நிதானமாக நினைத்தவன் தன்னுடைய தொலை தூர ஆய்வுக் கருவியை வேறுபுறம் திருப்பிய போது அங்கு ஏதோ ஒரு புள்ளி நகருவது மாதிரி ஒரு தோற்றம். உஷாராக அதை மீண்டும் பார்த்தான் உன்னிப்புடன். ஆம்! ஏதோ ஒரு கப்பல்தான்.

     “வாங்” என்று அவன் இரைந்து அழைத்தது கேட்டதும் கட்டை குட்டையான ஒருவன் ஓடோடி வந்தான்.

     கருவியை அவனிடம் நீட்ட அவன் அப்பக்கம் பார்த்தான். பத்து விநாடிகள், இருபது, முப்பது... நீண்ட நேரம் கவனித்த பிறகு “தலைவரே, அது யவனக் கப்பல், அந்நாட்டுக் கொடி பறக்கிறது. மிக்க வேகத்தில் ஓடுகிறது... இல்லை, இல்லை நம்மை நோக்கி... இல்லை... இல்லை. அதோ இந்தக் கரையில் உள்ள துறையை நாடியே வருகிறது... ஆமாம். அது சோழர் துறையொன்றை நாடுகிறது. இங்கல்ல... அதோ அனேகமாக தரங்கையை நோக்கித்தான். ஆமாம். தரங்கைக்குத்தான். இன்னும் ஐந்து காத தூரம் அது இருக்கிறது” என்றான் வாங்.

     “சரி, நீ புறப்படு. நம்முடைய யாளியை நடத்தி அதை மறித்து நிறுத்து. நான் வந்து சேருகிறேன்” என்றான்.

     வாங் ஒரு நொடியும் தயங்கவில்லை. சோழ எல்லையிலிருக்கிறோம் என்று அவன் சொல்ல நினைத்தாலும் வாய் திறக்கவில்லை. யாங்சின்னை அவன் போக்கில் விடாமல் எதிர்த்தால் உயிர்தான் போகும்.

     சீனத்து யாளி என்ற பயங்கரப் போர் படைக் கப்பல் மிகப் பெரியதும் அல்ல சிறிதுமல்ல, நடுத்தரமானது. ஆனால் ஏராளமான ஆயுதங்களையும் தற்காப்புக் கருவிகளையும், கடற் சண்டையில் மிகத் தேர்ந்த இரு நூறு வீரர்களையும் கொண்டது. நாளதுவரை யாளி தோல்வி கண்டதேயில்லை. அதன் மதிப்பை மீறிய கப்பல்கள் கடலுக்கு இரையாகிவிடும். மதிப்பை மீறாது ஒத்துழைத்த கப்பல்கள் உயிருடன் திரும்பும் பொருள்களை மட்டும் இழந்து.

     இது யாங்சின் கையாளும் வழிமுறை. மற்றவர்களுக்காக அவன் ஏற்படுத்திய தருமம் அல்ல இது. தனக்காக அவனே ஏற்படுத்திக் கொண்ட விதிமுறை. இதை மீறுவோருக்குதான் ஆபத்து. அவனுக்கில்லை. இதை நன்கு அறிந்தவர்கள் அவன் கோரிக்கையை எதிர்ப்பதேயில்லை.

     ‘யாளி அந்த யவனக் கப்பலிடம் போய்ச்சேர இன்னும் நாலு நாழிகையாவது ஆகும். ஒருக்கால் அவர்கள் இதன் வரவையறிந்து வந்த வழி திரும்பினால் அல்லது நாகைக்குத் திரும்பினால்...’ சற்றே நிதானித்தவன், அப்படியும் அவர்களைச் செய்யும்படி விடாமல் தடுத்துவிட்டால் நல்லது. “யார் அங்கே? லாய்...” என்று அழைத்தான் முன் மாதிரியே இரைந்த குரலில்.

     ஒடிந்து விழுகிற மாதிரி ஒருவன் தொங்கு மீசை, ஊடுருவும் கொடூரப் பார்வை, வறண்ட சிரிப்பு இன்னதென்றே அறியாத முகம். எதிரே வந்து பூனை மாதிரி நின்றான்.

     “நீ பைசாசத்தை நடத்தி நாகைப் பகுதி போ. தரங்கையை அந்த யவனக் கப்பல் சேராமல் பார்த்துக் கொள். நாகை அருகேவிடாதே. அது திரும்பினால் வாங் கவனித்துக் கொள்ளுவான். இடையில் நான் வருகிறேன்” என்றான்.

     லாய் என்பவன் சரசரவென்று இறங்கி பைசாசத்தின் மீது ஏறி அதைப் பாய் விரித்துக் கடலோடினான் சில நொடிகளில்.

     யாங்சின் உள்ளூரத் திருப்தி கொண்டான்.

     ‘இனிப் பயமில்லை, அந்த யவனக் கப்பல் தப்ப வழியில்லை. நம்முடைய இரண்டு கப்பல்களும் அதை மடக்கிவிடும். இங்கு நம் வணிகர்கள் மட்டும் உள்ள கப்பல் ஒன்று மட்டும் இருக்கட்டும். மற்றொன்றில் நாம் போய் யவனத்தின் கப்பலில் உள்ள பொருள்களைப் பறித்துக் கொண்டு திரும்பலாம். இந்த முறை ஏராளத் தொகையை நமக்கு தந்துவிட்டு பயணிகளாக வரும் இந்த வணிகர்களுக்கு ஆபத்து எதுவும் வராதிருக்க கடல்வழியில் கொள்ளையடிக்காமலிருக்க ஒப்புக் கொண்டது உண்மைதான். இனி என்ன? நாளைக் காலையில் இறங்குகிறார்கள் இவர்கள் பத்திரமாக. எனவே நம் ஒப்பந்தத்தை மீறியவர்களாக மாட்டோம். ஆனால் அந்த யவனம் விவகாரம் செய்தால் அது பயங்கரமான விளைவை உண்டுபண்ணிவிடும். உடனடியாக இவர்களை இறக்காமல் போய்விட்டது இப்போது ஒரு பெரும் பிரச்னையாகி விட்டது. இத்தனைக்கும் காரணம் அந்த இலங்கை நாதன். சும்மா விடக்கூடாது அவர்களை... என்றாலும் அங்கே போய், இரண்டு சோழக் கப்பல்கள் நிற்கின்றனவே.’ யாங்சின் தவித்தான்.

     எந்தச் சமயத்திலும் சமிக்ஞைகள் வரலாம் என்ற பரபரப்புடன் தொலை நோக்கியைக் கையில் தாங்கியபடி அங்கேயே உற்றுப் பார்த்தான். யவனக் கப்பல் சட்டெனப் பின்னால் நகர்ந்தது. ‘இதென்ன வம்பு? தரங்கைக்கும் போகாமல், நாகைக்கும் செல்லாமல் திரும்புகிறதே பின்னால்?’ கவலை கொண்டுவிட்டான் அந்தக் கப்பலின் நோக்கம் புரியாமல். சட்டென அது மீண்டும் அதிவேகமாகச் சுழன்று கிழக்கு நோக்கித் திரும்பிவிட்டது. தொலை நோக்கியில் பார்த்த யாங்சின் ஆடிப்போய்விட்டான். அவன் அனுப்பிய ‘யாளி’ அதை எந்தப் பக்கம் சென்று மறிப்பது என்று புரியாமல் தவிப்பதைப் புரிந்து கொண்டான்.

     ‘யவனக் கப்பல்காரன் பலே பேர் வழியாக இருக்க வேண்டும். நம்மைப் பார்த்துவிட்டான். எனவே வேண்டுமென்றே அலைக்கழிக்கிறான். திக்குத் திசை புரியாதவன் மாதிரி நடித்து நம்மை இப்படியும் அப்படியும் ஓட்டினால் பாய்மரத்துக்குப் பழுது நேர்ந்து விடுமல்லவா?

     இப்பொழுது என்ன செய்வது? இங்கு தன்னிடம் இருப்பது தனது தாய்க் கப்பலும் இன்னொரு போர்க் கப்பலும்தான். அதில் இருக்கும் கருவிகளைக் கொண்டு தொலை தூரத்திலிருந்து தாக்குவது எளிது. ஆனால் அதை மிகவும் ஒரு ஆபத்தான தருணத்தில் நான் பயன்படுத்த வேண்டும். தவிர அது நம்மைவிட்டுச் சென்றுவிட்டால், தாய்க் கப்பல் தனித்துவிடும். நடுக்கடலில் தனியாக இருப்பின் செத்தோம் என்று முடிவு செய்துவிடலாம். ஆனால் இங்கு சோழியக் கரையோரம் இருக்கிறோம். இக்கப்பலுக்கு ஆபத்து என்று கொடி காட்டலாம். ஆனால் உதவிக் கப்பலைக் கொள்ளையடிக்க அனுப்பிவிட்டு ஆபத்து உதவி கேட்கிறாயே என்று அவர்கள் உதவ முன்வராவிட்டால். சேச்சே...! இதென்ன புத்தி தடுமாற்றம். ஒரு கோளாறும் இல்லாமல் ஐந்நூறு காத தூரம் மூன்று கடல்களைக் கடந்து வந்துள்ள நாம், போயும் போயும் இந்த யவனரிடமா சிக்கிக் திணறுவது? வேண்டாம் வம்பு என்று திரும்ப அழைத்து விடலாமா? பிறகு பேரவமானம்தான். இருபதாண்டுக் காலம் கிழக்குக் கடல்களின் பயங்கர கொள்ளைக்காரன் தோற்றோடி விட்டான் என்று உலகம் கும்மாளம் போடும்.’

     பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டவன் பின்னால் ஏதோ சத்தம் கேட்டு இடையிலிருந்த கத்தியை வேகமாக எடுத்துத் திரும்பினான். ஒரு சீனன் நடுநடுங்கி நின்றான். ஆத்திரமும் வெறுப்பும் அவன் மீது திரும்பின. எரிந்து விழுந்தான் என்னடாவென்று கேட்டு.

     பேச வாய் வரவில்லை. “வணிகர்கள் ‘இன்னும் ஏன் தாமதம் கரையிறங்க?’ என்று பதறுகிறார்கள்” என்றான். வந்ததே ஆத்திரம்.

     “கடலில் குதித்துச் சாகச் சொல்” என்று இரைந்து கத்தினான். அவன் ஓடிவிட்டான்.

     “யாங்சின், உனக்கு என்ன வந்துவிட்டது? கலங்காமல் செயல்படும். புத்தியைத் தீட்டு. கத்தியைத் தூர எறி. யவனன் ஏதோ ஒரு திட்டம் போட்டு வேலை செய்கிறான். உன்னிடமிருந்து இரு கப்பல்களை பிரித்து விட்டான். எச்சரிக்கை. மூன்றாவது கப்பலையும் அனுப்பி விட்டாயானால் உனக்கு ஆபத்து. எந்த எதிரிக்கப்பலும் உடனே தாக்க முடியும். நிதானித்துப் பார். தற்காலிகமாக உனக்கு ஒரு தோல்வி ஏற்பட்டதால் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. ஏனென்றால் உனக்கு பை பையாகத் தொகைகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு வணிகர்கள் பாவம்! உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவிக்கிறார்கள். நிதானித்து யோசி.”

     இவ்வாறு தனக்குத்தானே கூறிக் கொண்டு தொலை நோக்கி மூலம் மீண்டும் கிழக்கே பார்த்தான்.

     கப்பல்கள் எதையுமே காணோம். “ஐயையோ!” என்று அலறினான். ‘இல்லை.. .இல்லை. அதோ ஒரு புள்ளி... ஆமாம்... ஒன்று இருக்கிறது. அதோ மற்றொன்று. அப்பாடி! மஞ்சள் கொடி தெரிகிறதே. பிழைத்தோம்... ஆமாம் நாகைப் பக்கம் சென்ற கப்பல்... அடேடே! யவனக் கப்பலைக் காணோமே. நம்முடைய கப்பல் என்ன ஆயிற்று?’

     திடீரென்று ஒரு பயங்கரமான ஓசை. வெடிகுண்டுதான்...

     யாங்சின் புரிந்து கொண்டுவிட்டான். யவனக் கப்பல் நம் கப்பல்களைத் தாக்குகிறது. ஆம். சில விநாடிகள் அவனுக்கு எதுவுமே புரியவில்லை.

     ‘யாங்சின் கடல் அதிகாரம் அஸ்தமித்துவிட்டதா? யவனக் கப்பல் இப்போது வெகு தெளிவாகத் தெரிகிறது. நம் கப்பல்கள் ஓடுகின்றன உயிருக்காக. ஆம். யாங்சின் ஒரு யவனனிடம் உயிருக்குப் பயந்து ஓடுகிறான். அடத்தலைவிதியே... இனி என்ன? இப்படியே கடலில் குதித்து விட்டால் அப்புறம் உலகம் தன்னை இகழ்ந்து பேசுவதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லையே. சேச்சே...! கோழையாகிவிட்டோமே...’

     “யாரங்கே? ஏ மின்...” என்று கர்ஜித்தான்.

     மிகவும் பெரிய ஒரு மாமிச பர்வதம் அசைந்தாடி வந்து அவன் எதிரே நின்றது. நிச்சயமாக அது ஒரு மனிதப் பிராணியாக இருக்க முடியாது. கடல் பூதமாகத்தான் இருக்க வேண்டும். அவனைப் பார்த்ததும் அச்சம், நிம்மதி இரண்டுமே ஏற்பட்டது யாங்சின்னுக்கு.

     மற்றவர்களை விரட்டியதைப் போல இவனை விரட்டாமல் “நீ என்ன நினைக்கிறாய் மின்?” என்று கேட்டான் குரலில் பதற்றங் காட்டாமல்.

     “யவனன் நம்மைப் பிரிக்கப் பார்க்கிறான். நீங்கள் தனியாகிவிட வேண்டுமென்பது அவன் முயற்சி. அது வெற்றிபெறக் கூடிய சாதக நிலையில் இருக்கிறான் அவன்.”

     “உன்னுடைய போர்க்கப்பலைக் கொண்டு நீ போய்த் தாக்கினால்...”

     “செய்யலாம். ஆனால் உங்கள் கப்பலுக்கு ஆபத்து அது.”

     “நாம் கரையோரமாக இருக்கிறோம். சோழர்கள் கப்பல் இரண்டு இலங்கையின் ஓரம் நிற்கின்றன. உதவி கேட்கலாம் இல்லையா?”

     “கேட்கலாம். ஆனால் இலங்கையை நாம் எதுவும் செய்ய முடியாது.”

     “அது போனால் போகட்டும். இப்போது நம் மானம், உயிர், கப்பல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டதே.”

     “அப்படியானால் முதலில் இந்த வணிகர்களை ஏற்றிச் செல்ல ஒரு கப்பலை அனுப்பும்படி புகாருக்குச் செய்தி அனுப்புங்கள்.”

     “நம்பமாட்டார்கள். ஏனென்றால் நாம் ஐவர் ஐவராக அனுப்புகிறோம் என்று செய்தி அனுப்பி அவர்கள் அனுமதித்து விட்டார்கள்.”

     “ஏன் தாமதம் என்று யோசிப்பார்கள் அல்லவா? அவர்களும் தொலை நோக்கி மூலம் நடப்பதை அறிய முடியும். அல்லவா?”

     “புகாரிலிருந்து நாம் இருப்பதைத்தான் பார்க்க முடியும். அவை தெரியாது. ஒருவேளை திரிகோணமலையிலிருந்து தெரியலாம்.”

     “நாகை, தரங்கையிலிருந்து?”

     “தெரியாது. அவை செயற்கைத் துறைகள். மிகச் சிறு கப்பல்களே போக முடியும். ஆனால் அந்தச் சிறு கப்பலிலிருந்து வேண்டுமானால் பார்க்கலாம்.”

     “யவனன் நம்மை ஏமாற்றி அங்கு இருந்து விரட்டியிருப்பது முன்கூட்டி வகுத்தத் திட்டம் என்றே நம்புகிறேன். இவ்வளவு தந்திரம் அவர்களுக்குத் தெரிய நியாயமும் இல்லை.”

     “உண்டோ இல்லையோ... செய்கிறார்களே.”

     மீண்டும் ஒரு பயங்கர வெடிச்சப்தம் கேட்டதும் யாங்சின் தொலைநோக்கி மூலம் பார்க்க யவனக் கப்பல்தான் தெரிந்தது. சரி, இரு கப்பல்களும் ஏதோ பேராபத்தில் சிக்கிவிட்டன.

     “மின், நீ நமது போர்க்கப்பலுடன் புறப்படு. நான் சோழர்களுக்குச் செய்தி அனுப்புக்கிறேன் ஆபத்துதவி கேட்டு” கூறிவிட்டு நடைப்பிணம் போல நகர்ந்தான் தன் இடத்தைவிட்டு...

     மின் பயங்கரமான தன் தோற்றத்தை அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் பார்த்தான். பிறகு கடலை நோக்கினான். அப்புறம் தன் தலைவனைப் பார்த்துப் பெருமூச்செறிந்தான்.

     ‘இருபதாண்டுக் காலமாக கடலின் கொள்ளை நாயகன் என்று பேரெடுத்த இவன் இன்று கேவலம் ஒரு யவனனிடம் தோற்கும்படி நாம் விடுவதா?’ என்று எண்ணியவன், “ஓ...!” என்று ஒருமுறை அலறினான்.

     எட்ட நின்ற யாங் அவனைப் பார்த்துவிட்டுக் கண்களை மூடினான்.

     “தலைவரே, நிச்சயமாக யவனன் மூளை இல்லை இது. எவனோ நம்மவன் ஒருவன்தான் நம்முடன் திறமையாக, மிகத் தந்திரமாக விளையாடி நம்மை இக்கதிக்கு உள்ளாக்கிவிட்டான். அவன் மட்டும் என் கையில் சிக்கினால்...”

     மின்னின் கையில் அந்நேரம் ஒரு இரும்புத் தகடுதான் கிடைத்தது. அது நொடியில் பொடியாகிவிட்டது.

     யாங் முன்னே வந்தான். அவன் தோளில் தன் கையை வைத்து, “மின், ஒரு பெருந்தவறு செய்தோம். ஒப்பந்தத்தை மீறிவிட்டோம். அதன் பலனை அனுபவிக்கிறோம்” என்றான்.

     “எந்த ஒப்பந்தத்தை மீறினோம்?”

     “வணிகர்களை சோழியக்கரை சேர்க்கும் வரை நாம் கடலில் கொள்ளை அடிப்பதில்லை என்று ஒப்பினோம்.”

     “நாம் கொள்ளையடித்தோமா?”

     “இதுவரை செய்யாவிட்டாலும் அந்த நோக்கத்தில்தானே நான் யாளியை அனுப்பினேன். அது தவறுதானே?”

     மூன்றாவதாக ஒரு பயங்கர வெடிச்சப்தம். இது முன்னவற்றைவிட மிக வேகமாகவும் கடல் எங்கும் எதிர் ஒலித்தது. புகைமண்டலம் எங்கும் சூழ்ந்தது. புள்ளி புள்ளியாகத் தெரிந்தவைகூட இப்போது புகைமண்டலத்தால் மறைந்துவிட்டது.

     “சரி தலைவரே, நான் புறப்படுகிறேன்” என்று வலக்கரத்தை நீட்டினான் மின்.

     அதை இறுகப் பிடித்துக் குலுக்கியவன் சட்டென அவனை இறுக அணைத்துக் கொண்டுவிட்டான். அவன் உள்ளம் குமுறி உடல் பதறுவது நன்றாகத் தெரிந்தது மின்னுக்கு.

     தாங்க முடியவில்லை அவனால். அவன் செல்லும் திக்கை உற்றுப் பார்த்தபடி சோகத்துடன் நின்றான் யாங்சின்.

     யாங்சின் இந்த முறை நாலு கப்பல்களுடன் சோழ நாட்டுக் கடற்கரைக்கு வந்தான். இப்போது அவனிடம் வணிகர்கள் தங்கியுள்ள கப்பல் ஒன்றுதான். இதில் ஒரு சாதாரண வெடிக்குழாய் கூட இல்லை. கடலோடும் சீன ஊழியர்களிடமும் கத்திகளைத் தவிர வேறு கருவிகள் இல்லை. அவர்களும் இருபது இருபத்தைந்து பேர்கள்தான்.

     எனவே வணிகர்கள் பயந்து தவித்ததில் அதிசயமில்லை. தொலை தூரத்தில் வெடிகுண்டு வெடித்துப் புகைமண்டலம் என்றால் ஏதோ பெரும்போர் என்றுதானே பொருள். பாவம்! “ஐயகோ...” என்று அலறினார்கள் வணிகர்கள். தமது பெண்டு பிள்ளைகளை, வீடு வாசல்களைவிட்டு, திரவியம் தேடும் ஒரே நோக்கத்தில் வந்த அவர்கள் ஒரு முறை கொள்ளையில் யாங்சின் எவ்வளவு பெறுவானோ அவற்றுக்கு அதிகமாகவே ஊதியமளித்துவிட்டே வந்திருக்கிறார்கள்.

     இப்போது சோழ நாட்டை நெருங்கிவிட்டோம். மூன்று மாத காலப் பயணம் முடிவுற்றது வெற்றிகரமாக என்று யாங்சின் வாயாலேயே அறிவிப்புக் கிடைத்ததும் அவர்கள் மகிழ்ந்த மகிழ்வென்ன? இப்போது தவிக்கும் தவிப்பென்ன?

     வணிகர்களில் குருமார்கள் ஐந்து பேர்களும் வந்திருந்தனர். வணிகர்கள் தலைவன் அவர்களிடம் சென்று “ஐயா, இனி நமக்கு வாழ்வு இல்லை. யாங்சின் கடலில் குதித்துச் சாகச் சொல் என்று கூறிவிட்டானாம். எனவே இறுதிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று வேண்டிக் கொண்டார்கள். குருமார்கள் பிரார்த்தனை தொடங்கினர்.

     யாங்சின்னோ ‘தான் அனுப்பிய செய்திக்கு அதாவது உடன் உதவ வேண்டும் வணிகர்கள் யாவரும் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று அதில் கூறியிருந்தும் உதவியனுப்பவில்லை. மீட்சிக் கப்பலும் வரவில்லை. எனவே அவர்கள் நம்மை நம்பவில்லை. அப்படி எதிர்பார்ப்பதும் இனிப் பயனில்லை. யாங்சின் தந்திரம் செய்கிறான். ஏதோ ஒரு திட்டம் வகுத்தே முன்னுக்குப்பின் முரணாகச் செய்தி அனுப்புகிறான். அறுபது நாழிகை ஆகியும் கூட அவன் வணிகர்களை அனுப்பவில்லை. எனவே இதில் சூது இருக்கிறது என்று மதிக்காமலிருக்கிறார்கள். நம்மால் அவர்களை மிரட்டக் கூடிய நிலையிலும் நாம் இல்லை. எனவே வேறு வழி எதுவும் புலனாகவில்லை. ஒருவேளை ஏதாவது தெய்வீகம் போல ஒரு நிகழ்ச்சியால் போன கப்பல்கள் தப்பி வந்தால், நமக்கும் எதிர்காலம் உண்டு. வரவில்லையேல் நாமும் போக வேண்டியதுதான்’ என்ற முடிவில் வணிகர்களின் பிரார்த்தனையில் அவனும் கலந்து கொண்டான்.

     அவன் மட்டும் அல்ல, இதர கடற் சிப்பந்திகளும் அவனைப் பின்பற்றி கீழ்த்தட்டில் அனைவரும் கூடி குருமார்களின் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். எனவே கப்பலில் மட்டும் அல்ல. சுற்றிலும் கூட நெடுநேரம் அமைதி.