உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 20 கடலில் கரையோரமாகத்தான் அலைகள் அதிகமாயிருக்கும் என்றும் தொலைவில் அதாவது நடுக்கடலில் அவ்வாறு இருக்காதென்றும் கூறுவர். அன்று அது நேரம் வரை அலைகளும் அதிகம் இல்லை. காற்றும் அதிகமில்லை. ஆனால் திடீரென்று ஒரு பெருங்காற்று அதிவேகமாக வீசியதும் கப்பலின் தீவர்த்திகள் சட்டென்று அணைந்தன. பிரார்த்தனை செலுத்திக் கொண்டிருந்தவர்கள் இந்தத் திடீர் இருட்டினை அந்நேரம் வரவேற்கவே செய்தார்கள். யாங்சின்னோ கடல் தேவதையே தன்னைப் பழிவாங்கத்தான் இவ்வாறு செய்கிறாள் என்று நம்பி உண்மையாகவே பிரார்த்தனையில் தன்னை மறந்து ஈடுபட்டான். அமைதி மீண்டது என்றாலும் இருள் இன்னும் அகலவில்லை. ஏதோ சிறு சிறு அரவங்கள். யாரும் பேரலைகள் ஒலி பற்றியே கவலைப்படாத போது இந்தச் சிற்றரவங்களைக் கவனிப்பார்களா? ஏறத்தாழ மூன்று நாழிகை நேரம் பிரார்த்தனை நடந்து முடிந்ததும் குருமார்கள் “அவரவர்கள் தங்களுடைய இறுதி நேரத்தில் எல்லா உலக ஆசைகளையும் விடுத்து இயற்கையுடன் நாம் மீண்டும் இணைகிறோம் என்ற நம்பிக்கையுடன் மனக்குறையின்றி தீரமாகவே நம்பி வழிபடுங்கள். கண்களை மூடிப் பிரார்த்தியுங்கள் இறுதியாக” என்று கூறியதும் ஒருவர் பாக்கியில்லாமல் யாங்சின்னும்தான் கண்களை மூடிக்கொண்டு கடல் தேவதையைப் பிரார்த்தித்துக் கொண்டான். “அஞ்ச வேண்டாம். அனைத்தும் நலமாகவே முடியும்” என்று அசரீரி கூறியதும் யாங்சின் “அது...!” என்றான். வணிகர்கள் “கடவுளே..!” என்றார்கள். சிப்பந்திகள் துள்ளினார்கள். மரணத்தை வென்றுவிட்டோம் என்று கப்பலில் இருந்த அனைவரும் எக்களித்ததும் குருமார்கள் கடலில் இம்மாதிரி ஒரு அதிசயம் தங்கள் பிரார்த்தனையால் உண்டாகி அது அசரீரி வாக்காய் வருகிறதே என்று எண்ணி அவர்களே அதிசயித்தார்கள். யாங்சின் கண்களைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான். அப்படியானால்... ஓடினான் கருவியண்டை. அங்கு தொலைவில் இன்னமும் புகைமண்டலம்தான்... இப்படி நினைந்து “கடவுளே நீ இப்படி ஏமாற்றலாமா?” என்று வாய்விட்டே கத்திவிட்டான். “யாங்சின் நலம்தானே?” என்று கடவுள் பதில் கேள்வி போட்டதும் அவன் திகிலடித்துப் போய் அக்கேள்வி வந்த திசையை நோக்கினான். அங்கு கம்பீரத் தோற்றத்துடன் நிற்பவன் யார்? கடவுளா? இதென்ன அதிசயம்! தன்னை நலம் விசாரிக்கக் கடவுளே வந்தார் என்றால்... இதென்ன பேத்தல்... ஆம். பின்னே என்ன... அச்சமும் அதிர்ச்சியும் மூளையைக் குழப்பிவிட்டதால் இதெல்லாம் தோன்றி, மேலும் மூளையை, சிந்தனா சக்தியை இழக்கும்படி செய்துவிடுகின்றன என்று தான் எதையோ பார்ப்பதாக நினைத்ததை உதற முயன்றான். “என்ன யாங்சின் நலமாக இருக்கிறாயா என்று கேட்டதற்குப் பதில் இல்லையே” என்று கேட்டபடி மேலே செல்லும் படிகளிலிருந்து அவ்வுருவம் இறங்கி இவனை நோக்கி வந்ததும் எதற்கும் அஞ்சாத அவன் கூட அத்தருணம் அஞ்சி நடுங்கி விதிர் விதிர்த்து நின்று பிறகு கண்களையும் மூடிக்கொண்டான். அவன் தோள் மீது ஏதோ ஒரு கரம் பட்ட உணர்வேற்பட்டதும் கண்களைத் திறந்தான். மிகவும் கம்பீரமான ஒரு கருத்த தோற்றம் படைத்த உருவம். சீனத்தில் இதைக் கரும்பூதம் என்பார்கள். ஆம். அதுதான் அவன் தோளைத் தொட்டு நின்றது. குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வோர் திடீரென்று பூதம் வந்தது. தேவையானதைக் கொடுத்தது. அது போன்று இது சட்டெனச் சிரித்தது. எவ்வளவு அழகான சிரிப்பு! பற்கள்தான் எவ்வளவு வெள்ளையாக... மேலும் சிரித்தது. அது வாய்விட்டுச் சிரித்த ஒலி அமைதி நிலவிய அந்தச் சூழ்நிலையில் மிகப் பயங்கரமாகக் கேட்டதும் அவனோ “ஐயோ...!” என்று அலறிப் பின்னால் நகர்ந்தான். திரும்பத் திரும்ப நலமா நலமா என்று அவன் கேட்டதும் அது பலமுறை எதிரொலித்ததும் பேய் பிசாசுகள், பூதகணாதிகளிடம் நம்பிக்கையில்லாத யாங்சின் கூட அப்படியும் இருக்குமோ என்று பெரிதும் அச்சமுற்று ‘ஓ...!’ என்று ஒரேயடியாகக் கூவிக் கூப்பாடு போட்டான். அவன் கடல் பயணத்தின் போது ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் போயிருக்கிறான். அங்கும் கறுப்பர்களைப் பார்த்து இருக்கிறான். ஆனால் இவ்வளவு கறுப்பாக, தோற்றமே பிறர் கண்டு நடுங்கும்படியாக யாரையும் கண்டதில்லை அவன். எனவே இது மனிதனல்ல. மனித ரூபத்தில் வந்துள்ள பேய்தான் என்று நினைத்து விட்டான். யாங்சின் நடுங்கியதைக் கண்டு “ஓ...!” என்று கூப்பாடு போட்டது கண்டு வாய்விட்டுச் சிரித்த அந்தக் கரிய உருவினன் “யாங்சின், நீ கூடவா பயம் கொள்ளுபவன்? ஊர் உலகத்தை...” மீண்டும் ஒரு குண்டு வெடித்த பயங்கர ஓசை. மீண்டும் புகைமண்டலம். கடலும் வானமும் ஒரே வர்ணத்தில் இருந்ததால் நீலத்திரையூடே புகைத்திரளும் கலந்ததால் புள்ளிகள் கூடத் தெரியவில்லை கருவியில். தன் பக்கத்தில் நிற்கும் கரிப்பிராணி இன்னமும் அப்பால் நகரவில்லை. அதே சமயம் படிக்கட்டில் யாரோ நடந்து இறங்கி வருவது போல ஒரு ஒலி... பயத்துடன் யாங்சின் ‘இன்னும் ஒன்றா...?’ என்று அங்கே பார்த்த போது, ஏழெட்டு வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள். இதே சமயத்தில் கப்பலின் அடித்தளத்தில் ஏகக்கூச்சல். அச்சமா, ஆனந்தமா என்று இனம் பிரிக்க இயலாத கூச்சல். யாங்சின்னுக்கு ‘எப்படி இவ்வளவு வீரர்கள்? அத்தனை பேரும் சோழ நாட்டு வீரர்கள்.. எப்படி இங்கே வந்தார்கள்?’ கீழ்த்தளத்திலிருந்து ஒரு சீனன் ஓடிவந்தான். ஒரே ஆனந்தத்துடன் அவன் சீன மொழியில் ஏதோ சொன்னான். அவனிடம் யாங்சின் திரும்ப நோக்கினான் சோழ வீரர்களை. அவர்களோ யாங்சின் பக்கத்தில் நிற்கும் கரியனை உற்றுப் பார்த்தார்கள். அந்த உருவம் மெல்ல நகர்ந்தது. மேல் பகுதியானதால் பலகையில் அவ்வுருவம் டக்டக்கென்று நடந்து சென்றதை ஊன்றிக் கவனித்த யாங்சின் ‘சேச்சே...! மனிதன்தான். கால்கள் இருக்கின்றனவே...’ என்று சற்றே அச்சத்தை அகற்ற முயன்றான். “யாங்சின் இன்னும் தீரவில்லையா உன்னுடைய பீதியும் குழப்பமும்? கடல்களின் கொள்ளை ராஜாவான நீயே பயப்பட்டால்... அப்புறம் உன்னுடைய ஆட்கள் கதி என்ன? இதோ தைரியமாகப் பார் என்னை வெளிச்சத்தில்” என்று கரியன் அவன் தோளைத் திருப்பிவிட்டதும் சற்றே தெளிந்திருந்த அவன் சற்றே உற்று நோக்கினான். பிறகு கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். “நீ... நீங்கள் நினைவில் இருக்கிறது. ஆனால் என்ன பயங்கரமான தோற்றம் இது...” “வீரபாலன் என்ற ஒரு சம்பா நாட்டு இளைஞனை...” “ஓ...!” என்று கர்ஜித்து ஒரு துள்ளி துள்ளினான். “ஆமாம். அவன்தான் நீ... இல்லை இல்லை. நீதான் அவன்... இல்லை. கரியனான நீ எங்கே? அந்த சிறுபயல் நல்ல அழகன்... களையான முகம்... ஆனால் கடவுளே! ஒன்றும் புரியவில்லையே. சின்ன வயதில் அவ்வளவு அழகாயிருந்தவன் இந்த வயதில் வளர்ந்திருக்கலாம் ஆனால் எப்படி இவ்வளவு கறுப்பாக இருக்க முடியும்?” “யாங்சின் நெடுநேரமாக விழிக்கிறாய். அந்த இளம் வயதுப் பையன்தான் இந்தக் கரிப்பிராணி. நீ பேயோ பிசாசோ என்று இத்தனை நேரமும் தவித்துப் பயந்ததற்குக் காரணம் இந்தத் தோற்றமேயன்றி வேறெதுவுமில்லை.” யாங்சின் நிதானித்தான். பிறகு தலையாட்டினான். “அந்தப் பையன் ஒரு அநாதை. நான் கூட என் குழுவில் சேருகிறாயா என்று கேட்டதற்கு முடியாது என்று தைரியமாகவே சொன்னான். ஆனால் நீ அவனாயிருந்தால் இவ்வளவு கறுப்பனாக எப்படி ஆக முடிந்தது...? அல்லது எங்களை மிரட்டக் கரி பூசி வந்திருக்கிறாயா?” என்று கேட்டதும் கரிவர்மன் வாய்விட்டுச் சிரித்தான். இதற்குள் கீழேயிருந்து ஏழெட்டு சீன வீரர்கள் நிறைய உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்து தட்டுக்களில் யாங்சினுக்கு எதிரேயிருந்த பலகையில் வைத்துவிட்டு சீன மொழியில் ஏதோ சொன்னார்கள். அவன் திகைத்தான். “உண்மையாகவா? இவர்களா கொண்டு வந்தது...? எங்கே பார்க்கலாம்” என்று கீழ்த்தளம் செல்ல அங்கு அத்தனை வணிகர்களும் கடல் சிப்பந்திகளும் கிடைத்தது இலாபம் என்ற நினைவில் உண்டிகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். யாங்சின் திகைத்து விழித்தான். ‘சோழர்கள் நமக்குக் கொண்டு வந்த உண்டி என்றால்... இதோ சுற்றிலும் நிற்பவர்கள் யாவரும் சோழர்கள் என்றால்... இந்தக் கரியன் இவர்களுடன் எப்படி உறவு பூண்டுள்ளான்? இவனைக் கண்டதும் இவர்கள் மிக்க மரியாதையாக இருக்கிறார்களே... இவன் நம்மிடம் அனுதாபம் கொள்ளக் காரணம்?’ எதிரே இருந்த உணவைப் பார்த்தான். சட்டென்று தன் கப்பல்கள் பறிபோனதாக ஒரு நினைவு எழுந்தது. ‘இருபதாண்டுக் கால துன்பங்கள், உழைப்பு, கொள்ளை யாவுக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டதே அந்த யவனக் கப்பல்.’ “ஏன் சாப்பிடத் தயங்குகிறாய் யாங்சின்? பசி இல்லையா?” “பசி இல்லாமல் என்ன? நீ உண்மையாகவே அந்த பையனாயிருந்தால் என்னை இப்படிக் கேட்டிருக்கமாட்டாய். நீ முன்பு கண்டதுமே கிடுகிடென்று நடுங்குவாயே அந்த மின் அவன் கப்பல், லாய் அவன் கப்பல் எல்லாம் இன்று கேவலம் ஒரு யவனக் கப்பலால் அழிந்துவிட்டன. அவர்களும் இந்நேரம் கடலுக்குப் பலியாகியிருப்பார்கள். இந்நிலையில் எனக்கு எப்படிச் சாப்பாடு உள்ளே செல்லும்?” என்று மனமொடிந்து பேசினான். “ஓகோ! நீ உன்னுடைய இரண்டு கப்பல்களையும் இங்கு நிறுத்தியிருக்கும் போது எப்படி அவர்கள் இவ்வளவு அருகே சோழர் எல்லைக்குள் வந்து தாக்கிக் கவர்ந்து செல்ல முடிந்தது? இரண்டு பெரிய சோழக் கப்பல்கள் வேறு காங்கேசன் துறைப் பகுதியில் நங்கூரம் பாய்ச்சியிருக்கும் போது?” என்று சாதாரணமாகக் கேட்டதும் அவன் வாய் திறக்கவில்லை. ஆனால் அடுத்த நொடியே ஒரு பெரும் சப்தம். இத்தருணம் அது வெடிகுண்டல்ல. மக்கள் கோஷம். சட்டென்று எட்டிப் பார்த்தான் யாங்சின். பத்துப் பனிரெண்டு சிறு - கப்பல்கள் இவனுடைய கப்பல்களைச் சுற்றி நின்றன. “சோளி... சோளி...” என்று குதூகலத்துடன் சீனர்கள். அந்தப் பெரும் படகுகளிலிருந்து தம் கப்பலுக்குள் வருபவர்களை வரவேற்றார்கள் சோழ நாட்டு வணிகக் குழுவினர். யாங் திடுக்கிட்டான். ‘சோழிய மல்லன். சோழிய கடல் படைத்தலைவனல்லவா...?’ மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தான். அடித்து வைத்த சிலைகள் மாதிரி சோழ வீரர்கள் ஆடாது அசையாது கரிவர்மன் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆகவமல்லன் மேல்தளம் வந்ததும் யாங்சின் அவனைப் பார்த்த பார்வையில் ‘என்ன செய்யும் நோக்கத்துடன் நீ இங்கு வந்தாய்?’ என்ற கேள்வி தொனித்தது. “பூந்துறையாரே, அனைத்தும் நலமாக முடிந்தது. சேதம் எதுவுமில்லை” என்றான் ஆகவமல்லன். “உயிர்ச் சேதம்..” “ஒன்றுமில்லை.” “நல்லது. டைபீரியஸின் குழந்தை...” “இப்போது ஐந்து வயதுப்பயல் ஆகிவிட்டானே... நிரம்பவும் அழகாயிருக்கிறான். நீலக்கண்கள், செம்பட்டை மயிர். அரோரோவை உரித்து வைத்த மாதிரி” என்று அவன் சொல்லும் போது யாங்சின்... “டைபீரியஸ்... ஆம்... அவனா என் கப்பல்களை நாசம் செய்தது. ஆகா! அந்த யவனனா...? மின்னை, லாயை, வாங்கை... யாரங்கே?” என்று பழையபடி சொள்ளைக்கார பாங்கின் மிருகமாக மாறிக் கத்தினான். “சத்தம் போடாதே யாங். உன் கப்பல்கள் உயிரோடுதான் இருக்கின்றன. அந்த மாமிச பர்வதமும் நன்றாகத்தான் இருக்கிறது. ஏன் வாள் வாள் என்று கத்துகிறாய்? இது சோழ நாடு. நீ அதன் கடல் எல்லையில் இருக்கிறாய் என்பதை மறந்து என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? இலட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்களுடன் உன்னை நம்பி இங்கு வந்திருக்கும் சீன வணிகர்களை மறந்துவிட்டு உன்னுடைய கொள்ளைக்காரப் புத்தியை காட்டிவிட்டாயே? அதற்கென்ன தண்டனை தெரியுமா?” என்று ஆகவமல்லன் சற்றே கோபமுற்றவன் போலக் கேட்டான். யாங்சின் சட்டென தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு “சோழ மல்லரே... நான் செய்தது தவறுதான். நான் அப்படிச் செய்திருக்கக் கூடாதுதான். சற்று நிதானிக்கத் தவறிவிட்டேன்.” “நீ பல கொள்ளைகளில் பெறக்கூடிய வருவாயை இவர்கள் உனக்கு கொடுத்திருக்கும் போது நீ இப்படிச் செய்தது சிறிதும் நியாயமில்லை.” “தவறுதான் என்று ஒப்புக்கொள்ளுகிறேன். கடந்த இருபது நாழிகைகளாக நான் அனுபவித்த நரகவேதனையே இதற்குத் தண்டனை என்றே நான் நம்புகிறேன். ஆனால் டைபீரியஸ் என் கப்பல்களை எச்சரித்து அனுப்பாமல்...” “உன்னுடைய கப்பல்கள், அதிலுள்ள வீரர்கள் யாவரும் தரங்கையில் வெகு பாதுகாப்பாக இருக்கிறார்கள். இதற்குள் இரண்டு வேளை உணவுண்டு இருப்பார்கள். கவலைப்படாதே. உன்னுடைய கப்பல்களும், ஆட்களும் அப்படியே திருப்பித் தரப்படுவார்கள். ஏனென்றால் ஒரு காலத்தில் நீயும் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாய்” என்றான் பூந்துறையான். “உன் உயிரை நான் காத்தேனா? அதெப்படி?” “சாவகத்தார் என்னைப் பிடிக்க வந்த போது, நீ அவர்கள் பெரும் பொருளை எனக்குப் பிரதியாகத் தந்தும், நீ என்னைத் தர இசையவில்லை. ஆனால் மின் என்னை நள்ளிரவில் தூக்கிக் கொண்டு ஓடினான். ஆயிரம் பொற்காசுகள் என்றான். ஆனால் நீ குறுக்கிட்டாய். என்ன காரணமோ நீ என் மீது அன்பு காட்டி மின்னை மிரட்டிப் பிடுங்கி என்னை மீட்டாய் நீ. அன்றே நான் நீ கொள்ளைக்காரன் ஆனாலும் சுயநலமில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான் கரிவர்மன். இப்பொழுது கரிவர்மனை மிக அருகில் சென்று உற்றுப் பார்த்தான், மீண்டும் ஒருமுறை அவனை விழுங்கிவிடுகிற மாதிரி. “ஆம். நீதான் அந்த வீரபாலன். ஆமாம். பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன அல்லவா. ஆனால் வீரபாலா... இவர் உன்னைக் கரிவர்மர் என்கிறார். நீயோ கரியனாகிவிட்டாய். அதெல்லாம் எப்படி? ஒரு மனிதன் இளைக்கலாம், பருக்கலாம். ஆனால் வண்ண மாறுதல்...” “அதெல்லாம் ஒரு பெருங்கதை. சாவகாசமாகப் பேச வேண்டியவை. இப்போது ஒரு உண்மையைக் கூற விரும்புகிறேன் யாங். அதிர்ச்சியடையாமல் கேள்” என்றதும், யாங்சின் மீண்டும் அதிர்ச்சியடைவே செய்தான். நல்லகாலமாகச் சீன வணிகர் தலைவர் மேல்தட்டுக்கு வந்ததும் யாங் அவரை வியப்புடன் பார்த்தான். அவர் எல்லாரையும் ஒருமுறை மகிழ்ச்சியுடன் வணங்கினார். “ஐயா வீரர்களே, நாங்கள் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்த பலனே நீங்கள் எங்களைக் காக்க வந்த காரணம். நாங்கள் மரணம் அடையப் போகிறோம் என்று எங்கள் குருமார்களுடன் இறுதிப் பிரார்த்தனையைச் செய்த போதுதான் நீங்கள் தேவதைகள் போல வந்து குதித்தீர்கள். பிழைத்தோம். கரைக்கு அழைத்துச் செல்ல நீங்களே கப்பல்களைக் கொணர்ந்தீர்கள். பசியைத் தீர்த்தீர்கள். உங்கள் அனைவருக்கும் கடைசி நேரத்தில் எங்களை சோதித்தாலும், எங்களை இங்கே உயிருடன் கொண்டு வந்த யாங்சின்னுக்கு மிக்க நன்றி. அவர் சொன்ன வாக்கைக் காப்பாற்றி எங்களை இங்கு கொணர்ந்ததற்கு நன்றியறிதலை மட்டும் வாயளவில் சொன்னது போதாது. இவர் திரும்ப சீனம் சென்றதும் அங்கு எங்கள் உறவினர்கள் ஏராள மரியாதைகள் செய்வார்கள். வருகிறோம். மீண்டும் நன்றி” என்று விடைபெற்றுக் கொண்டதும் யாங்சின் கூட பதில் வணக்கம் கூறினான். இதுவரை யாரையுமே வணங்கிப் பழக்கமில்லாத அந்த வணங்காமுடிக்குக் கூட ஒரு மாறுதல். சட்டெனக் கேட்டான் கரிவர்மனிடம். “வீரபாலா, நீ என்னை வீண் வார்த்தைகளைக் காட்டி ஏமாற்றவில்லையே... உண்மையிலேயே என் கப்பல்கள் மூன்றும்...” கரிவர்மன் கலகலவென்று சிரித்துவிட்டு “யாங்சின், நீ பழைய யாங்சின்னேயானாலும் நான் பழைய வீரபாலன் இல்லை. ஆனால் என் வார்த்தையை உண்மை என்று இப்பகுதியிலுள்ளோர் யாவரும் நம்புவர். நீயும் அப்படியே நம்பியாக வேண்டும்” என்று கூறியதும் யாங்சின் விழித்தான். ஆகவமல்லன் குறுக்கிட்டான். “யாங்சின், இவர் எங்கள் சோழ நாட்டில் மாமன்னருக்கு அடுத்த பெருந்தலைவர். இவர் வார்த்தைதான் இன்று சோழர் வார்த்தை” என்று சோழிய சேனாதிபதியே கூறியதும் திடுக்கிட்டான். ‘இதெல்லாம் என்ன கண்கட்டு வித்தை மாதிரி. நம்மிடம் அநாதையாக வந்த ஒரு பையன் இன்று நாமே மதித்து வணங்கும் அளவுக்கு ஒரு பெரும் நாட்டின் தலைவன் என்றால் அதிசயிக்காமலிருப்பதெப்படி?’ இதற்குள் ஒரு சோழ வீரன் ஆகவமல்லனிடம் நெருங்கி ஏதோ சொல்ல அவன் யாங்சின்னைப் பார்த்து “உன்னுடைய வீர சீடர்கள் மூவரும், வருகிறார்களாம்” என்று கூறியதும் யாங் தாங்க முடியாத மகிழ்ச்சியுடன் எட்டிப் பார்த்தான். ஒரு சிறு படகுக் கப்பலில் மின், லாய், வாங் ஆகியவர்கள் கொண்டு வரப்பட்டு அவர்கள் இக்கப்பல் கீழ்த்தளத்தில் ஏறுவதையும் கண்டான். “வீரபாலா, நீ உண்மையையே சொன்னாய்” என்றான் சட்டென்று முன் வந்து. “எது உண்மை தலைவரே?” என்று கேட்ட குரல் கர்ண கடூரமாக ஒலித்தது யாங் காதில். ஏனெனில் அப்படிக் கேட்டவன் மின். “நீங்கள் ஆபத்தில்லாமல் திரும்பியது. கப்பல்கள் நாசமாகாமல் இருப்பது... இரண்டும்.” என்றான் யாங்சின். “ஆனால் நாம் மிகக் கேவலமாக அவமானப்படுத்தப் பட்டோம் தலைவரே. நம் மீது அவர்கள் தாக்கவேயில்லை. எங்கோ குண்டுகளை வெடித்து நம்மைத் தாக்குவது மாதிரி உங்கள் மனதில் கிலியுண்டாக்கினார்கள். கடலின் பயங்கர மனிதர்களான நம்மைக் கேவலமாக உலகம் எள்ளி நகையாடும்படி, தொடை நடுங்கிகளாகக் காட்டிவிட்டது இந்தச் சம்பவம்” என்றான் மின். “ஆம் தலைவரே, இது தாங்க முடியாத அவமானம்” என்றான் வாங். “நாம் கொடுத்த வாக்கை மீறி கொள்ளையடிக்க முயன்றது தவறில்லையா?” என்று கேட்டான் யாங். “நம் தொழிலை நாம் செய்யவிடாமல் தடுத்து விட்டவர்களை நாம் சும்மா விடுவதற்கில்லை” என்றான வாங். யாங்சின் மூவரையும் வெறித்துப் பார்த்தான். ஆனால் மாமிச மலையான மின் ஒரே வார்த்தையில் “நாம் கொள்ளைக்காரர்கள் என்பது உலகறிந்த விஷயம். கடலில் போன கப்பல் அது. எனவே கொள்ளையடிக்கச் சென்றோம். இதில் எங்களைப் பொறுத்தவரை தவறில்லை” என்றான் பயங்கரமாக. ஆகவமல்லன்கூட அவனுடைய வார்த்தை வேகம் கண்டு அசந்துவிட்டான். ஆனால் அவர்கள் ஒரு அடிமுன் வைப்பதற்குள் சோழர்கள் பாய்ந்து பிடிப்பர் என்றும் அறிவான் அவன். யாங்சின் இதுவரை இப்படியொரு சிக்கலை எதிர் நோக்கியதில்லை. ஆதலால் இவர்களைத் திருப்திப்படுத்த ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் கருதினான். எனினும் தான் கொள்ளையடிக்க முயன்றது சரி என்று அவன் அசட்டுத்தனமாக நினைக்காமல் “தவறுதான் அது. டைபீரியஸ் கப்பல் அது. எனவே அவனை நாம் தாக்கத் துணிந்து சென்றது பெருந்தவறு. ஏனெனில் நம்மைவிடக் கெட்டிக்காரனான ஒருவன் நமக்கு மேல் தந்திரமாக நடந்து கொண்டிருக்கிறான். அது இந்த கரியன்தான் என்று இப்போது புலப்படுகிறது. இவன் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?” “டைபீரியஸ் எங்கள் எல்லையில் தன் கப்பலை நிறுத்த வந்த சமயம் நீ அதை மறிக்க இவர்களை அனுப்பினாய். அவனும் கெட்டிக்காரன்... என்னைக் கேட்டான். தந்திரத்தால் அவர்களை எவ்வளவுக்கு அலைக்கழிக்க முடியுமோ அவ்வளவுக்குச் செய் என்றேன். எனவே செய்தான். உன்னுடைய மூன்று கப்பல்களும் ஒரு கப்பலை வழிமறித்துக் கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்க முடியுமா யாங்சின்? உன்னுடைய உதவிகள் உங்கள் மொழியில் சொல்வதெல்லாம் பழி வாங்குவோம் என்றுதானே?” என்று ஆகவமல்லன் கேட்டதும் பூந்துறை நாயகன் “ஆமாம் மல்லரே. இனி நாம் வந்த நோக்கத்தைக் கூறிவிடலாம்” என்று குறுக்கிட்ட கரிவர்மனை அப்போதுதான் அவர்கள் மூவரும் உற்றுப் பார்த்தார்கள். ஒருமுறை நடுங்கிவிட்டார்கள். ஆம். மின் கூடத்தான். “எங்கள் கடல் படை அதிபரை நீ சாவகத்தருகே சந்தித்த காலை இந்தப் பகுதியில் கொள்ளையடிப்பதில்லை என்று உத்திரவாதமளித்திருக்கிறாய். ஆனால் இன்று அதை மீறியிருக்கிறாய். வணிகர்கள் இறங்கிக் கரை சேர அனுமதி கேட்டுவிட்டுப் பிறகு அவர்களை அனுப்புவதில் அக்கரை காட்டாது, நீ கொள்ளையடிப்பதில் தீவிரமானாய்... இது இன்னொரு குற்றம். எங்களிடம் ஆபத்துதவி கேட்டு செய்தி அனுப்புகிறாய். நீ செய்த தவறை மறந்தோ அல்லது மறைத்தோ. இது மற்றொரு குற்றம்... எங்களுடைய சோழ இளவரசியின் கணவரும், இன்றைய இலங்கையின் அதிபனுமான விஜயவாகுவுக்கு மூன்றாண்டுக்கு முன் தர வேண்டிய தொகையைக் கொடுக்கும்படி மிரட்டியிருக்கிறாய். அதையும் நீ இந்தச் சோழக் கடல் எல்லைக்குள் வந்து செய்திருக்கிறாய் யாங்சின். நீ சோழ நாடு வருகிறாய் என்பது உலகறிந்த செய்தி. எனவே எங்கே தங்களுக்கு ஆபத்து வருமோ என்று அவர்கள் பயந்ததில் விந்தையில்லை. அவர்கள் உதவி கேட்டபின் அளிக்க வேண்டியது எங்கள் கடமை. இதெல்லாம் உனக்குத் தெரிந்ததே. எனினும் நீ அறியாமல் செய்த குற்றம் என்று கூற முடியாது. ஏனெனில் எங்கள் கடல் சேனாதிபதியிடம் நீ செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டிருக்கிறாய். எனவே நீ இங்கிருந்து போக வேண்டுமென்றால்... உன்னுடைய இந்தக் கப்பல் சீனக்கடல் எல்லை போய்ச் சேரும் வரை இதர மூன்று கப்பல்களும் அனுப்பப்படுவதற்கில்லை. தவிர அவை அனுப்பப்பட வேண்டுமாகில் சிங்களத்தை எந்தக் கஷ்டத்துக்கும் உள்ளாக்குவதில்லை என்று உறுதியளிக்க வேண்டும். இதை நீ உன்னுடைய உதவிகளுக்குச் சொல்லி ஒப்புதலைப் பெற்று உடனடியாக உறுதிப்படுத்தினால் நீ விரும்பும் எந்த நேரத்திலும் இந்தக் கப்பல் புறப்பட அனுமதிக்க முடியும்” என்று கரிவர்மன் அழுத்தந்திருத்தமாகக் கூறியதும் யாங்சின் தயக்கத்துடன் தனது உதவிகளை குறிப்பாக மின்னைப் பார்த்தான். அவர்கள் கொள்ளைக்காரர்கள். எனவே நியாய விதிமுறைகளை மதிக்கமாட்டார்கள் என்பது நன்கு தெரியும். எனினும் கரிவர்மன் எச்சரிக்கையை உதறிவிட முடியாது. இவர்கள் ஒப்பினாலும் ஒப்பாவிட்டாலும் நியாயத்தை நிலை நிறுத்த வேண்டிய அரசு என்ற முறையில் அவர்கள் செயல்பட வேண்டியவர்கள்தான். நடுக்கடலில் வேண்டுமானால் இவர்கள் அரசு விதிகள் செல்லுபடியாகாது. தவிர கரிவர்மன் மிக எச்சரிக்கையாகவே பேசினாலும் நீ இன்னமும் இவர்கள் தலைவன். எனவே நீ இடுவதுதான் சட்டம் என்ற உங்கள் கொள்கையை, பிடியை அதிகாரத்தை நீ விட்டுவிடாதே என்று சொல்லாமற் சொல்லிக் காட்டினான். யாங்சின் மீண்டும் பழைய கொள்ளைக்காரனானான். “இருபதாண்டுகளாக நாம் கடலின் மாபெருங் கொள்ளையராக இருக்கிறோம் என்றால் அதற்கு மூல சக்தி நான்தான். எனவே என் வார்த்தைக்கு எதிர் வார்த்தையில்லை. நான் கொடுத்த வாக்கை மீறிய ஒரு குற்றம்தான் இப்போதைய தோல்விக்குக் காரணம். எனவே அதை நான் பூரணமாக ஒப்புக்கொண்டுள்ளேன். சோழர்கள் எனக்கு நெடுங்கால நண்பர்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட எனக்கு சோழிய கோவரையர் பேருதவி புரிந்திருக்கிறார். சமீபத்தில் கூட இந்த சோழியமல்லர் பன்றித் தீவில் நாம் உணவுக்குத் தவித்த போது நம் அத்தனை பேருக்கும் உண்டியளித்து உயிர் காத்ததை மறக்கலாமா? எத்தனையோ ஆண்டுகளாகப் பாடுபட்டுப் பெற்ற நான்கு கப்பல்களில் மூன்று நாசமாகிவிட்டதே நம் முட்டாள்தனத்தினால் என்று நான் ஏங்கி உயிரைக்கூட விட்டுவிட எண்ணினேன். ஏன்? நான் செய்த தவறினால்... நல்ல காலம். கப்பல்கள் அழியவில்லை. ஆனால் அவர்கள் நம்மை நம்பவில்லையே என்று வருந்தினாலும் ஆத்திரப்படுவதற்கில்லை. நமது நீண்ட நாளையப் பழக்கம் திடீரென்று மாறிவிடாது. கப்பலும் போர்க் கருவிகளும் கிடைத்ததும் திரும்ப... சரி சரி, நமக்கு மானநஷ்டம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் நாமே ஏற்படுத்திக் கொண்டுவிட்டதற்கு நாமேதான் வருந்த வேண்டுமேயின்றி பிறரைக் குற்றம் கூறுவது சரியில்ல. எனவே நாம் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளுகிறோம். என்னுடைய உதவிகளான நீங்கள்...” என்று மின், லாய், வாங் மூவரையும் பார்த்ததும் அவர்கள் சற்றே தயங்கினார்கள். பிறகு லாய் “உங்கள் முடிவே எங்கள் முடிவும்” என்றான். “நானும் அப்படியே” என்றான் வாங். ஆனால் மின் ஆத்திரத்துடன் கரிவர்மனைப் பார்த்தான். பிறகு சட்டென யாங்சின்னைப் பார்த்து “அது... அந்த உருவம் மனிதன்தானே?” என்று கேட்டதும் சற்றே துணுக்குற்ற யாங்... “நீ மரியாதையில்லாமல் எதையும் இங்கு பேசாதே. இவர் சோழ நாட்டின் ராஜப் பிரதிநிதி. கரிவர்மர்” என்றான். மின் மீண்டும் கரிவர்மனை வெறுப்புடன் பார்த்தான். உதடுகளை ஒரு மாதிரி மடித்துக் கைகளைப் பிசைந்து கொண்டான். ஆகவமல்லன் அவனுடைய ராட்சஸ வெறி கண்டு சற்றே மலைத்தான். யாங் ‘ஏன் இப்படி இவன் வெறி பிடித்தவனாக மாறுகிறான்? கரிவர்மன் எதிர்பார்க்கிற மாதிரி இவன் தன் அதிகாரத்துக்கு அடங்காதவனாக மாறிவிட்டானா? அல்லது தன்மான உணர்ச்சி காரணமாக யாரையாவது...’ “தலைவரே... எனக்கு என்னவோ இன்று நமக்கு ஏற்பட்ட இந்தப் பேரவமானத்துக்கு, தோல்விக்கு இதோ இந்தக் கரிப்பிராணிதான் காரணம் என்று தோன்றுகிறது. நீங்கள்தான் நாம் தவறு செய்தவர்கள் என்று ஒப்புதல் கூறிவிட்டீர்கள். அதற்கு மாறாக நான் கூற முடியுமா? ஆனால் என்ன காரணமோ இவன்தான் நம்மை ஏமாற்றியவன் என்று மனச்சாட்சி கூறுகிறது. இந்தப் பிராணியை நான் ஒருமுறை...” என்று கூறிப் பற்களை நறநறவென்று கடித்தான். ஆயுதம் தரித்த சோழ வீரர்கள் கூட அவனுடைய வெறியைக் கண்டு சற்றே கலக்கமுற்றார்கள். ஆகவமல்லன் “யாங்சின், உன்னுடைய உதவி பேசுவதைப் பார்த்தால் எங்கள் தலைவருக்கு...” என்று உள்ளூரப் பயங்கலந்த எச்சரிக்கைக் கூற்றுடன் எழுந்தான். யாங்சின் கூட உண்மையில் பயந்துவிட்டான். இவனுடைய இரும்புப் பிடியிலிருந்து முன்பு ஒரு முறை அவனை மீட்டிருக்கிறான். ஆனால் இப்போது முடியாது. மின் யானை பலமும், வேங்கையின் வெறியும், புலியின் பழிவாங்கும் உணர்ச்சியும் கொண்டவன். எனவே கரிவர்மன் இவன் கையில் சிக்கினால் அவனை துகள் துகளாகத் துண்டாடிவிடுவான் இவன்... சட்டெனத் தன்னுடைய நீண்ட வாளை எடுத்துக் கொண்டு கரிவர்மனுக்குக் கவசம் போல் நின்றபடி “மின், நீ என்னுடைய உதவி... எனவே என் கட்டளையை மீறாதே... இவர் சோழ நாட்டுப் பெருந்தலைவர். நாம் இவரை எது செய்தாலும் அது நம்மை நாசம் செய்துவிடும். பார். சுற்றும் சோழ வீரர்கள் வாட்களை உருவி நிற்கின்றனர். அவர் உத்தரவிட்டால் நீ பிணமாவாய். என்னுடைய உதவியான நீ நாசமாவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் சோழர்களுடன் பகை கொள்ளவும் விருப்பமில்லை. எனவே நடந்ததை மறந்துவிடு. இந்தத் தடவை நமக்குப் பொருள் நஷ்டமில்லை. மானம் நஷ்டம் நாமாகச் சம்பாதித்துக் கொண்டது. எனவே இத்துடன் போதும் என்று புறப்பட்டு விடுவோம்” என்றான். மின் அசையவில்லை. கண்களை இமைக்காது பார்த்தான் கரிவர்மனை. “இல்லை தலைவரே... இவனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. ஏதோ பழைய எதிரி மாதிரியே காணப்படுகிறான். பழிக்குப் பழி வாங்காமல் நான் திரும்புவதற்கில்லை. அவன் உங்களுக்குப் பின்னே... இதோ இந்த வாள் வீரர்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஓட முயலுவதைக் கூட நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் கேட்கலாம். பயந்தவனை விரட்டுவதா என்று. எனக்கென்னவோ இவனை உயிருடன் பார்க்கவே பிடிக்கவில்லை. சற்றே விலகியிருங்கள்” என்றான் அரக்க உருவமும் மனமும் படைத்த அந்த மின். யாங்சின் திகைத்தான். அப்படியானால்... யாங்சின் என்றால் லாய், வாங்... போன்ற அத்தனை பேர்களும் சிப்பந்திகளும் நடுங்குவர். எனவே யாரும் குறுக்கே வந்திடப் பயந்து ஒதுங்கினர். தலைவரால் சமாளிக்க முடியாது போனால் நாம் என்ன செய்ய முடியும் என்று. இதற்கிடையே கரிவர்மன் கண்கள் இன்னும் உத்தரவிடவில்லையே என்று சோழ வீரர்கள் பதறிவிட்டனர். ஆனால் பூந்துறை நாயகன் திடீரென்று ஒரு எக்காளச் சிரிப்பு சிரித்ததும் “ஐயோ...!” என்று அத்தனை பேரும் அலறிவிட்டனர். மின் கூடப் பயந்தான் அந்தச் சிரிப்பின் ஒலி கேட்டு. மனிதன்தான் என்றால் இப்படிப் பேய்ச்சிரிப்பு எதற்கு என்று உள்ளூர நடுங்கவும் செய்தான். ஆனால் அவன் தயாராவதற்குள் நாம் அவனை வீழ்த்திவிட வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இரு கால்களையும் நன்கு ஊன்றி கைகளைக் குஸ்திக்குச் செல்லுபவன் வைத்துக் கொள்ளுகிற மாதிரி முஷ்டியை உயர்த்திய அதே சமயத்தில் முகத்தில் இரு இரும்புக் கால்கள் படுவேகமாகத் தாக்கி எறிய அவன் பட்டென விழுந்து கடகடவென்று உருண்டான். அவன் திரும்ப எழுந்திருக்கட்டும் என்பது போல எகிறுங் காளை போன்று நின்ற கரிவர்மனைப் பார்த்து யாங்சின்னே இப்போது நடுங்கிவிட்டான். சீனத்துச் சண்டைமுறை இது. உதையால் உயிர்ப்பலி வாங்கத் தெரிந்தவனிடம் தப்புவது என்பது அசாத்திய காரியம். சரி. மின் நமது குழுவில் இனி இல்லை... மின் எழுந்துவிட்டான். அடிபட்ட வேங்கையாயிற்றே... தலையை ஒருமுறை ஆட்டிக் கொண்டான். இந்தத் தடவை அவனுக்கு முதலிடம் தரக்கூடாது என்று பாய்ந்தான் புலி போல. ஆனால் கரிவர்மன் இந்த முறை பயங்கரமாகக் கூச்சவிட்டு அவன் தொப்பையில் ஓங்கி ஒரு முட்டு முட்ட அவன் மூச்சுத் திணறி மீண்டும் விழுந்து உருண்டான். இந்தத் தடவை அவன் எழுந்திருக்கட்டும் என்று சந்தர்ப்பம் தராமல் இரு கைகளாலும் தலையைப் பிடித்து தூக்கி அலாக்காக எறிந்ததும், அவன் எட்டப் போய் விழுந்தவன் எழுந்திருக்கவேயில்லை... ஒன்று, இரண்டு, மூன்று என்று பத்து தாண்டிவிட்டன. அவன் செத்துவிட்டானோ என்று தவித்த யாங்சின், ஏதோ பேய் பிசாசு... என்று உளறியபடி ஒரு புரண்டுப் புரண்டுவிட்டுப் பிறகு முடங்கி விட்டவனைக் கண்டதும், ‘சரி, சாகவில்லை முரடன். சிறிது காலம் ஆகும் உருப்படியாகத் தேறி யெழ...’ என்று நிம்மதி பெற்று “வீரபாலா, நீ அசாதாரணப் பேர்வழி. இவனிடம் இதுவரை சிக்கிச் செத்தவர் உண்டே தவிர...” என்று தழுதழுத்த குரலில் வியந்து கூறினான். ஆகவமல்லன் கொடுத்த துணியால் உடலைத் துடைத்துக் கொண்ட பூந்துறை நாயகன் “யாங்சின், அவன்தான் என்னிடம் சிக்கினான். நான் சிக்கவில்லை. நானாகச் சிக்கியிருந்தால் அவ்வளவுதான்... பரவாயில்லை. அவன் உடம்பு தேறும்வரை நீங்கள் யாவரும் இந்தச் சோழ நிலத்தில், புகார் நகரில் இருக்கலாம். சில நாளைக்குக் கொள்ளையை மறந்து எங்களுடன் எங்களைப் போல இருக்க முடியாதா?” என்று குழந்தை போலக் கேட்டதும் யாங்சின் “நீ வீரபாலகனாகக் கேட்கிறாய் பையா. நிச்சயம் உங்கள் மாதிரி இருக்க முயலுகிறேன்” என்றதும் லாய், வாங் இருவரும் பெரும் நிம்மதி பெற்றனர். ஆனால் அத்தனை சீன வீரர்களும் பூந்துறை நாயகனை மனிதனாகவே நினைக்காமல், பார்க்கவே பயந்தரும் பேயாகக் கருதிப் பதுங்கி நின்றனர் மூலைக்கு மூலை. யாங்சின் கரிவர்மன் கம்பீரமாகச் செல்வதைப் பார்த்து உள்ளூரப் பெருமகிழ்ச்சியும் கொண்டான். |