உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 21 நாலு குதிரைகள் பூட்டிய வண்டிகளை அக்காலத்தில் மன்னர், மன்னர் குலத்தைச் சேர்ந்தவர்கள், மிகப் பெரிய உயர்குடிப் பெருமக்கள் ஆகியோரே உபயோகித்து வந்தனர். இரட்டைக் குதிரை வண்டிகளை சாதாரண நிலையில் உள்ள பெருங்குடிமக்களும், கலைஞர்களும், புலவர், சிற்பிகள், வைத்தியர்கள் போன்றோரும் பயன்படுத்தி வந்தனர். இம்மாதிரி இரு குதிரைகள் பூட்டிய இரு வண்டிகள் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு நாடாகத் தாண்டிச் சென்று கொண்டிருந்தன. அந்த வண்டிகளில் முன்னதில் இரு கூத்து இசைக் கலைஞர்களாக மட்டுமின்றி நட்டுவாங்க நிபுணர்களாகவும் விளங்கிய பந்தணை நல்லூர்ப் பரம்பரைக் கலைஞர்களான கனகராயரும், விஜயராயரும் இருந்தனர். பின்னதின் அவர்களின் பிரதம மாணவியும் கூத்துக் கலையாட்டத்தில் தன்னிகரற்றவளுமான, மோஹினி என்னும் பேரழகியும், அவளுக்குத் தாதியாகவும் உதவி செய்யும் பெண்ணாகவும் நியமனமான நல்லம்மையும் இருந்தார்கள். இரு காவலர்களை சோழ அரசினரே ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் கங்க நாடு வரை போய் பயணத் துணையாக இருக்க உத்தரவு. ஐந்து நாட்கள் பயணம் செய்த பின்னர் குளுகுளு பூமியான கங்க நாட்டில், குவலயபுரத்தில் அவர்கள் நுழைந்த போது பகல் பொழுது அனேகமாக முடிந்துவிட்டது என்று கூறும்படியாக பருவ நிலையிருந்தது. அங்கு மாலை நாலு மணிக்கே குளிரும் பனி மூட்டமும் இருக்கும் என்று இவர்களுக்கு முன்னரே கூறப்பட்டது. கலைஞர் இருவரும் கம்பளிப் போர்வையைப் போட்டு உடலை மூடிக் கொண்டனர். ஊர் நெருங்கி குவலயபுரத்தின் கோட்டையைச் சேர்ந்ததும் அங்கு நின்ற காவலர்களிடம் கோட்டைக்குள் செல்ல அனுமதி வேண்டியதும் அவன் “யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டான் சற்று இரைந்த குரலில். ‘சரிதான். ஆசாமி செவிடு போல இருக்கிறது’ என்று ஊகித்த கனகன் அவன் காதில் “கோட்டைக்குள்ளே போய் ராஜரத்ன குருமகராஜ் விஜயகீர்த்தி அவர்களைப் பார்க்க வந்திருக்கிறோம். நாங்கள் சோழ நாட்டுக் கலைஞர்கள்” என்று இரைந்து சொன்னான். “ஏன் ஐயா இப்படிக் கத்துகிறீர்? என்னைச் செவிடன் என்று நினைத்துவிட்டீர்களா?” என்று அச்செவிடன் கொச்சைத் தமிழில் கேட்டுவிட்டு கதவைத் திறந்தான். அக்காலத்தில் கங்க நாட்டுக்குள் சோழர்கள் நுழைய அல்லது தங்க தனி அனுமதி எதுவும் தேவையில்லை. தவிர மக்களில் பெரும்பாலார் சோழர்களை வரவேற்று இருக்கச் செய்ததற்கு காரணம் அவர்களுடைய செல்வ வளம்தான். விளக்கு வைக்கும் நேரம் வரை விஜயகீர்த்தி தமது இருப்பிடம் வராததால் இந்தக் கலைக் குழுவினர் தவியாய்த் தவித்து விட்டனர். எங்கேயாவது போய் ஏதாவது சாப்பிடலாம் என்றால் மொழி ஒரு பெரிய பிரச்னை. தப்பித்தவறி இரண்டொருவர் தமிழ் பேசினால் அது ஒரு கலவைக் குழப்பமாகவே இருந்தது. நல்லகாலம். விஜயகீர்த்தியின் உதவிகள் புத்திசாலிகள். இவர்களை அவர் வரும்வரை தற்காலிகமாக மடத்தின் ஒருபுறத்தில் வைத்து ஏதோ இயன்றவரை பால், பழம், பலவிதமான கனிகள் என்று கூற வேண்டும் கொடுத்து அரைப் பசியாற்றினார்கள். “தொட்ட ஆசார்யா வருகிறார்” என்று ஒரு சீடன் அறிவித்ததும் அவர்தான் விஜயகீர்த்தியாக இருக்க வேண்டுமென்று நினைத்த கலைக் குழுவினர் எழுந்து நின்றனர். பெரிய குரு என்று பொருள்படும் தொட்ட ஆசார்யா, “இவர்கள் யார்?” என்று சீடனைக் கேட்டதும் “நாங்கள் சோழ நாட்டுக் கலைஞர்கள். இங்கு தமிழ்க் கூத்துக்கள் நடத்த வந்திருக்கிறோம். சில காலம் தங்கியிருப்போம். உங்களுடைய பேராதரவு வேண்டும்” என்று பீடிகை போட்டபடி சிம்மநாதன் கொடுத்த கடிதத்தை மிக்க மரியாதையுடன் நீட்டினான் விஜயன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது பிரதம சீடன் எழுத்தை பார்த்ததும் அவர் பேரானந்தமுற்று கடிதத்தை ஒரு முறைக்கு இருமுறை படித்தார். கங்க மொழியிலிருந்த அக்கடிதம் ‘இவர்கள் உண்மையாகவே கலைஞர்கள்தான். போலிகள் அல்ல. சோழ நாட்டில் இந்தப் பரம்பரைக் கலைஞர்களுக்குப் பேராதரவு. அங்கு கிடைத்தால் நல்லதுதான்’ என்று கருதி அவரைக் கடிதத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் பலமுறை வணக்கம் செலுத்தியிருந்தான். அவர் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்தாரோ என்னவோ... ஆனால் அவன் அதை எழுதவில்லை. எனினும் ஏமாற்றமில்லை. ஒரு சீடனை உடனே கூப்பிட்டார். “இவர்கள் சோழ நாட்டின் மிகப் பெரிய நாட்டிய நாடகக் கலைஞர்கள். நம் ஊரில் நாட்டியம் எல்லாம் நடத்த வந்திருக்கிறார்கள். ராஜவீதியில் உள்ள ஸ்ரீவிலாசமஹாலை இவர்களுக்கு ஒதுக்கும்படி முத்திராதிகாரியிடம் சொல்லி... தளிகை, இருக்கை, பூஜை... இப்படி எல்லாவற்றிற்கும் ஏற்பாடுகள் செய்யும்படி சொல்லி...” என்று கூறிவிட்டு விஜயனைப் பார்த்து நல்ல தமிழில் “நீங்கள் இங்கு கலா சேவைக்கு வந்திருப்பதில் நமக்கு ரொம்ப மகிழ்ச்சி. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கலாம். நேற்றைக்குத்தான் உங்களூரிலிருந்து ஒரு மஹாப் பிரபு வந்திருக்கிறார்” என்றார். கனகன், “எங்களூரில் கலைஞர்களைத் தவிர வேறு பிரபு யாரும் இல்லையே...”என்றான். விஜயகீர்த்தி இலேசாகச் சிரித்துவிட்டு “உங்கள் நாடு என்பதை அப்படிச் சொன்னேன். இங்கு உங்களுக்கு எல்லா சவுகரியங்களும் செய்து தரப்படும். ஸ்ரீவிலாசம் ரொம்பவும் அழகான மாளிகை, கலையம்சம் கொண்ட வீடும் கூட.. ஏதாவது சவுகரியக் குறைவு ஏற்பட்டால் உடன் தெரிவியுங்கள். உங்களுக்கு உதவியாக இருக்க ஒரு உதவியை, தமிழ் தெரிந்தவனாக அனுப்பி வைக்கிறேன்... அவன் எப்பவுமே உங்கள் கூட இருந்து உதவி செய்வான். எனவே மொழிக் கவலை வேண்டாம். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் மன்னர் பேட்டிக்குக் கூட ஏற்பாடு செய்கிறேன்” என்றார். “நீங்கள்தான் எங்களுக்கு எல்லாம். ஊர் புதிது, மொழி புதிது, மனுஷர்கள் புதிது. எல்லாம் எங்கள் குருநாதர் அருளால் சாதகமாகவே இருக்கும் என்றார் உங்கள் சீடர் சிம்மநாதன்” என்று அவன் துதி செய்யத் துவங்கியதும் குருநாதர் மகிழ்ந்துவிட்டார். “ஆமாம். அவன் எனக்குச் சொந்தப் பிள்ளை மாதிரி” என்று கூறிவிட்டு சிறிது நேரம் மவுனமாயிருந்தார். “உங்களை அதிகச் சிரமப்படுத்துவதாகக் கருதக் கூடாது. நீங்கள் பரமபவித்திரமான குருநாதர். ஆகவே தயவு செய்து எங்கள் கலை விழாவை ஆரம்பித்து வைப்பதுடன் அதற்கான ஒரு நாளையும் நீங்களே கிருபை கூர்ந்து...” ‘ஆகாகா...! இந்த சோழக் கலைஞர்கள்தான் எவ்வளவு மரியாதை காட்டுகிறார்கள். எவ்வளவு எளிமை, அடக்கம்...’ “நிச்சயமாகப் பார்க்கிறேன்... இனி உங்களுக்குக் கவலை எதுவும் தேவையில்லை. நாம் இருக்க பயமேன்?” என்று அவர் கூறியதும் “இது போதும் நமஸ்காரம்.. வருகிறோம்” என்று அந்த ஊர் வணக்க முறையில் வணங்கிவிட்டு வழிகாட்டிச் சீடனுடன் வெளிவந்தனர். இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியை எல்லாரும் அதிசயமாய்ப் பார்த்தனர். ராஜவீதியிலிருந்த ஸ்ரீவிலாசம் மிக அழகாகவே இருந்தது. இங்கு ஒவ்வொரு மாளிகையிலும் ஒரு ஸ்ரீ சேர்ந்திருந்ததைக் கண்டு மோஹினி “ஏன் நானும் ஒரு ஸ்ரீயைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது?” என்று கேட்டதும் “தாராளமாகச் சேர்க்கலாம். ஒன்று என்ன பல ஸ்ரீக்களை... ஏன் இந்தக் கங்கபாடியையே இணைத்து ஒரு கங்க மோஹினியாகக் கூட இங்கு பரிமளிக்கலாமே?” என்றான். ஸ்ரீவிலாசம் இவர்களுக்குக் சகல வசதிகளும் கொண்டதாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களுக்குக் குறிப்பாக கடுங்கோனுக்கு இந்த நடிப்பு சற்றும் பிடிக்கவில்லை. நாள் தோறும் சிலம்பம், வாள்போர் என்று பயிற்சி பெற்று கட்டுமஸ்தான உடலைக் கொண்டிருந்த அவனுக்கு ஒரு வம்பு விளையாட்டு, போர் என்று சந்தர்ப்பம் கிட்டாமல் இப்படி செயலற்ற வேடம் போடும் போலிகளாக இயங்க வேண்டும் என்றால் நிரம்பவும் ஏமாந்து கொண்டான். ஆனால் மாவலி இதை ஒரு அறைகூவலாக ஏற்றுக் கொண்டான். எப்படியும் ஏதாவது ஒரு வகையில் தங்கள் சேவையை பூந்துறை நாயகன் ஏற்றுக் கொண்டதே பெருமைக்குரிய ஒன்றாகும். எத்தனையெத்தனையோ வேடங்கள் போட்டு எத்தனையோ வழிமுறைகளைக் கையாளும் ராஜதந்திரத்தில் தங்களுக்கு நேற்று வரை அனுபவம் இல்லையென்றாலும் கலிங்கத்தார் செய்த பேருதவி இது என்று கூறிவிடலாம் என்று நினைத்தான். பூந்துறை நாயகன் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து உதவி செய்யும்படி கேட்டதும், தனக்கு எல்லாவிதத்திலும் ஏற்றவன் மாவலிராயர்தான் என்றும், இந்தக் கங்க நாட்டு வேடப்பணி அறுபது அல்லது எழுபது நாட்கள் வேலைதான் என்றும் அப்புறம் கடுங்கோன் பட்டித்தேவருக்குப் பதிலாக தஞ்சை அரண்மனைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த இருப்பதாகவும் அறிவித்தது பூங்கொடிக்கு நிரம்பவும் உற்சாகமளித்தது. நல்லகாலமாக இவள் சிறுவயதில் சில காலம் கூத்து பயின்றிருக்கிறாள். அது ஓரளவுக்குப் பயன்படும். தவிர கங்க நாட்டில் தமிழ்க்கூத்து வகைகளை நன்கறிந்தவர் சிலரே. எனவே கடந்த சில தினங்களாகவே கூத்தழகி வல்லபி சில முக்கியமான ஆட்ட வகைகளை இரவு பகலாகப் பயிற்றியதால் பூங்கொடி ஓரளவுக்கு இக்கலையில் பிடிப்பும் கொண்டுவிட்டாள் என்று கூறலாம். கங்கபாடியில் இதை வைத்துக் கொண்டு ஏதேதோ செய்துவிடலாம் என்று பூந்துறையாரே அறிவித்த பிறகு குறைப்பட என்ன இருக்கிறது? மறுநாள் இருவரும் அவ்வூர்ப் பெருந்தலைவர்களான ஸ்ரீஹரி, ஸ்ரீபதி, நீதிமார்க்கன், நேசமித்திரன் ஆகியோரை ஒருவர் பின் ஒருவராகச் சந்திக்க முடிவு செய்தனர். தங்களுடைய சோழ முறை ஆடையணிகள், காதிலே மண்டலம் மாதிரி பெரிய பெரிய கடுக்கன்கள், உத்தரீயம் போர்த்திய சந்தனம் பூசப்பட்டு கலைராஜன் என்பதற்குரியப் பதக்கத்தை அணிந்து கொண்ட உடம்பு, காலிலே பாதரட்சை, வலக்கையில் கங்கணம், இடுப்பிலே பட்டை தரித்து... வாய் நிறைய தாம்பூலத்தை குதப்பிக் கொண்டு வெற்றிலைச் செல்லத்தை ராஜகுரு அனுப்பிய உதவியாள் வக்கிரன் என்பவன் எடுத்துவர இருவரும் ராஜவீதியில் நடந்த நடை உண்டே.. அதுவே ஒரு அழகு... ‘அடடா! கலைஞர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். என்ன நடை! என்ன தோற்றம்!’ என்று பிரமித்தபடி நின்று பார்த்தார்கள். உள்ளூர்க்காரர்கள் சிலர் சோழ நாட்டுக் கூத்துக்கு உரியவர்கள் வந்துள்ளனர் என்று கேள்விப்பட்ட மாத்திரத்திலேயே அதிசயமாகப் பார்க்க வந்தார்கள். முதலில் இவர்கள் சந்திக்கச் சென்றது ஸ்ரீ ஹரி என்பவரை. அவர் இவர்களைக் கண்டதும் “ஹரி ஹரி” என்றார். கடுங்கோன் ‘சரி, இந்த ஆள் நாம் வந்ததுமே சரி சரி என்று பறக்கின்றான். பயமில்லை’ என்று மாவலியைப் பார்த்தான். அவன் பரம்பரையை ஆரம்பித்தான். அந்த ஆசாமி “ஹரி ஹரி” என்றான். கடுங்கோன் ‘சரி சரி என்று கூடத் சொல்லத் தெரியவில்லையே இந்த ஆளுக்கு. இவர் எப்படி அரசாங்கத்தில் நிதியமைச்சர் ஆக இருக்கிறார்?’ என்று வியந்தான். சிம்மநாதன் கடிதம் தந்தான் என்றான் மாவலி. “ஹரி ஹரி” என்று சொல்லி அதை வாங்கினார். பிரித்தார். “ஹரி ஹரி”யென்று சொல்லிப் படித்தார். “ஹரி ஹரி”யென்று முடித்தார். பிறகு அவர்களைப் பார்த்தார். மீண்டும் “ஹரி ஹரி” என்றார். கடுங்கோனால் தாங்க இயலவில்லை. ஓடத் தயாரானான். “எல்லாம் ஹரியின் செயல். அவர் இல்லையேல் நாம் இல்லை... நீங்கள் பிறவிக் கலைஞர்கள். அந்த ஹரியும் ஒரு கலைஞன்தான். அவன் துவாரகையில் கிருஷ்ணனாக ‘ஹரி ஹரி’, அயோத்தியில் ராமனாக ‘ஹரி ஹரி’ பாற்கடலில் பரந்தாமனாக ‘ஹரி ஹரி...’” கடுங்கோன் அமர்ந்திருந்த இருக்கை ஏதோ கடபுடவென்று சத்தமிட்டதும்.. “இது ஒலி...! ஹரி ஹரி. அவர் திருவிளையாடல் ஹரி... ஹரி” என்று மேலும் ஹரியை இழுப்பதற்குள் “ஐயோ!” என்றான் கடுங்கோன். சட்டெனக் கேட்டார் ஸ்ரீஹரி. “ஏன் ஐயோ என்று அவச்சத்தம்? ஹரி ஹரி” என்று கேட்டதும் “அவரும் ஒரு ஹரி பக்தர்” என்று அழைத்தான் மாவலி. அவ்வளவுதான். “ஆகா! நீங்கள் ஹரி ஹரி. சாட்சாத் மஹாவிஷ்ணு... ஹரி ஹரி. அடியேன் ஹரி ஹரி. நீங்கள் ஹரி ஹரி” என்று அவன் மீது பாய்ந்து அணைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்து ஆட ஆரம்பித்ததும் கடுங்கோன் “அடப்பாவி பூந்துறையாரே...!” என்று இரைந்தே கத்திவிட்டான். சட்டென நிறுத்தினார் ஹரி ஹரியை. அந்தப் பக்த சிகாமணி கடுங்கோனை உற்றுப் பார்த்தார். “நீங்கள் யார்? எதற்கு வந்தீர்கள் இங்கே” என்று கேட்டார். அவன் திடுக்கிட்டான். பிறகு பரிதாபமாகப் பார்த்தான் மாவலியை. அவனும் இந்தத் திடீர் மாறுதலால் எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் விழித்தான். ஸ்ரீஹரி இருவரையும் பார்த்தார் திரும்ப... “நீங்கள் சோழ நாட்டார்” என்றார். “ஆமாம்” என்றான் மாவலி உடனே. “நாங்கள் கலைஞர்கள். அங்குக் கூத்து நடத்த வந்தோம்” என்றான். ஸ்ரீஹரி வியப்புடன் “நீங்கள் அங்கே ஆட... நான் இங்கே ஆடுகிறேன். ஆனால் பூந்துறையாரை இவர் ஏன் திட்டினார்? யார் அங்கே?” என்று ஒரு அதட்டல் போட்டதும் கிங்கரனைப் போல வந்தான் ஒருவன். “இவர்களைக் காராக்ரஹத்தில் தள்ளு... உம்...” என்று முடுக்கியதும், அவன் கடுங்கோனை “உம்...” என்றான். அவன் “ஊகூம்” என்றான். கிங்கரனுக்குக் கோபம் வந்துவிட்டது. “இதோ பார்” என்று அவன் அருகே வந்தான். “என்னைப் பார்” என்றான் கடுங்கோன். அவ்வளவுதான் “ஐயோ...!” என்று அலறிக் கொண்டு ஓடிவிட்டான் அவன். “ஹரி ஹரி... ஏன் இப்படி ஓடினான் அவன்? சரி உங்களை நான் நாளை கவனிக்கிறேன். சோழ நாட்டு பெருந்தலைவரை பாவி என்று திட்டிவிட்டு இங்கு நீங்கள் ஒரு நாள் கூட இருக்க முடியாது. ஆமாம். ஹரி ஹரி...” என்றான் மீண்டும். நண்பர்கள் விட்டால் போதுமென்று சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுவிட்டார்கள். ‘நல்லநேரம் பார்த்து நாம் புறப்பட்டிருந்தால் இந்த வம்பெல்லாம் வந்திருக்காது’ என்று நினைத்தான் மாவலி. ஆனால் கடுங்கோன் மட்டும் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. ஆசாமி வேண்டுமென்றே வேடம் போடுகிறான் என்று நினைத்து எதற்காக என்றும் யோசித்தான் திரும்பும் போது. |