விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

22

     கங்கபாடியில் கனகவிசயர் கூத்தும், நேசமித்திரன் மோகமும் ஸ்ரீ ஹரியின் ஹரிஹரியும் இதுவரை நம்மை வெகுவாக ஆட்கொண்டுவிட்டது. போதாதென்று கனகவிசயரின் கஷ்டங்கள் நம்மையும் நாடிவிட்டன. எனவே சற்று இந்தக் குழுவிலிருந்து விலகி நாம் நம்முடைய நல்லெண்ணத் தூதுவன் சிம்மநாதனைக் கொஞ்சம் பார்த்து வருவோமே.

     ஆம். அவன் இப்போது பூந்துறை நாட்டின் வளமான நிலப்பகுதியையும், வானந்தொடும் சிகரங்களைக் கொண்ட மலைப்பகுதியையும் கண்டுவிட்டுத் தனது ஒன்றரை மாதக் காலச் சோழ நாட்டு வாசம் பற்றி தனது ஊழியனுடன் உரையாடுகிறான், அதோ அந்த அருவிக் கரையில் அமர்ந்து அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தபடி.

     உலூகன் கடந்த சில தினங்களாகத் தகடூரான் மூலம் சேகரித்து வந்த பல தகவல்களை அவனிடம் விளக்கினான். அவை ஊக்கமளிப்பதாயில்லை. மாறாக மிகவும் மனக்கிலேசத்தை உண்டு பண்ணுவதாகவே இருந்தன. குறிப்பாக சோழ நாட்டுக்கு அண்மையில் வந்துள்ள பொறுப்புள்ள வணிகர் சிலர் நேசமித்திரன் பற்றியும், இங்கிருந்து அனுப்பப் பெற்ற கலைக்குழுவினர் அவனிடம் படாதபாடுபடுவது பற்றியும் கேள்விப்பட்டவை கவலை தந்தன.

     ‘சோழக் கலைஞர்களில் ஒரு பெண் இருந்தது எவ்வளவு கெடுதியாகிவிட்டது. சோழ நாட்டிலிருந்து அங்கு போயுள்ள பெருந்தலையான வணிகப்பிரபு இந்தக் கலைஞர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்று சொல்லி உதறிவிட்டது எவ்வளவு துர்ப்பலனை உண்டாக்கிவிட்டது? அந்தப் பெண் கூத்தச்சிக்கு ஏதாவது மானஹானி நேர்ந்தால் சோழ அரசே தலையிட நேரும் என்று எச்சரிக்கக்கூடிய நிலைமையல்லவா ஏற்பட்டுவிட்டது. மன்னர் மட்டும் சற்றே துணிந்திருந்தால் நேசமித்திரனை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கலாமே. அவர் அவனிடமும் பெருந்தலைகளிடமும் இன்னமும் கூடப் பயந்து காலமோட்டினால் நாம் இங்கு என்ன செய்துதான் என்ன பயன்?’ என்று மனம் நொந்து வருந்தினான்.

     “நாம் இங்கு செய்வதற்குப் பலன் இருக்கிறது தலைவரே. ஆனால் அது நம் கையில் இல்லை. பலமான கங்கபாடி மக்களின் கையில் இருக்கிறது. இங்கு நாம் செயல்பட வேண்டிய காலம் நெருங்கிவிட்டது போல, அங்கு அந்தப் பிரபுக்களின் அக்கிரமங்களுக்கு முடிவுதேடும் நாளும் நெருங்கிவிட்டது. நம் குருநாதர் பழைய பெருச்சாளி. காலம் கருதி காத்திருக்கிறார். நமது சாதனையை முட்டத்து அடியார் அவருக்கு அறிவித்த அடுத்த நொடியே மக்களைக் கிளர்ந்தெழச் செய்துவிடுவார் அவர். அப்புறம் அந்த நாலு தலைகளும் நடுத்தெருவில் உருளும். அக்கிரமம் சமாதியாகும். புதுமை பொலிவுறும். நாடு நம் வசமாகும். விஜயகீர்த்தியின் ஆதரவில் குழந்தை மன்னன் குமுத சந்திரன் அரசனாவான். சிம்மநாதன் பிரதமர் ஆவார். நான் எப்பவும் போல அவர் ஊழியனாகவே இயங்குவேன். ஆனால் சுதந்திரமான கங்கபாடியில்...” என்று அவன் ஆவேசமாகப் பேசியதும் சில நொடிகள் சிம்மநாதனே உணர்ச்சிவசப்பட்டுவிட்டான்.

     உலூகன் அனுமன் போல. எப்பவும் அடக்கமாகவே இருப்பான். தூண்டிவிட்டால் பிரமாதமாகக் குமுறி எழுவான்.

     “உலூகா... நீ சொல்வதெல்லாம் நடைபெறுவதற்கான ஒரு சின்னம் கூட இன்னும் ஏற்படவில்லையே என்பதுதான் பெரிய கவலையாயிருக்கிறது. கலைக்குழுவை நல்ல நோக்கத்துடன்தான் இவர்கள் அனுப்பினர். ஒரு அரசியல் குழு என்றால் அது விபரீதம் உண்டாக்கலாம். ஆனால் நம்மவரே கலைஞர்களை... நேசமித்திரன் அந்தப் பெண்ணைத் தன்னிடம் ஒப்புவிக்காவிட்டால் அவர்களை நசுக்கிவிடுவதாகக் கூறியிருக்கிறானாம். கெடுநாள் கூட வைத்துவிட்டானாம். என்ன விபரீதம்...?”

     “விபரீதம்தான். ஆனால் இதை அந்தச் சோழப் பிரபு ஏன் கவனிக்கவில்லை? தங்கள் ஊர்க்காரர்கள் என்று உதவி செய்ய முன்வந்தால் நேசமித்திரன் அஞ்சுவானே... அப்போது சோழர்களுக்காக...”

     “அங்கு போயிருப்பவன் வணிகன். எனவே இலாபத்தில்தான் அவனுக்குக் குறி. மனிதர்களிடமில்லை.”

     “நீதிமார்க்கன் ஏன் எதையுமே கவனிக்காதிருக்கிறார்? நம் குருநாதர், அவர், ஸ்ரீபதி ஆகியவர்கள். அந்த நேசமித்திரனையும், ஸ்ரீஹரியையும் மன்னரிடமிருந்து பிரித்துவிடக் கூடாதா?”

     “நேசமித்திரன் தங்கைதான் மன்னரின் ஆசை மனைவி என்பதை நீ மறந்துவிட்டாயே.”

     “ஆம்! அது வேறு நமக்குப் பெரிய இடையூறு.”

     “அதுமட்டும் இல்லை உலூகா. அந்த சோழப்பிரபு, போயிருக்கிறானே அவன் நேசமித்திரனுக்கு நிரம்ப வேண்டியவனாக மாறிவிட்டானாம். பெரிய பெரிய பண்டகசாலைகள் தேவையென்று இந்த வணிகன் அவனிடம் கூறி... பல்வேறு உதவிகளைப் பெறுகிறானாம்... முட்டத்துப் பெரியவர் உடனே என்னை வந்து பார் என்று கூறுயுள்ளார். வெள்ளை மயில் விஷயம் வேறு... எனக்கு எல்லாமே ஒரே குழப்பமாகி விட்டது. நம் குருநாதர் கூட இப்படித்தான் இப்போது குழம்பிக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.”

     “தவிர நான் ஒரு விடயம் கேள்விப்பட்டேன். இதுவும் தகடூரான் சொன்னதுதான். சீனத்துக் கொள்ளைக்காரன் யாங்சின் புகார் வந்தானாம். பூந்துறையாரைச் சந்தித்தானாம். பத்து தினங்கள் இங்கே தங்கியிருந்தானாம்... அவன் வேறு ஏதாவது...”

     சிம்மநாதன் பதற்றத்துடன், “ஆமாம் உலூகா... அவனை இவர் குடைந்திருப்பார். ஆனால் அவன் பயங்கரமான பேர்வழி. இந்தப் பூந்துறையாருக்கெல்லாம் அஞ்சமாட்டான். ஆனானப்பட்ட மன்னாதி மன்னரையெல்லாம் அவன் ஆட்டி அலட்டும் போது...”

     “சொல்வதற்கில்லை. பூந்துறையானும் இலேசுப்பட்டவன் இல்லை. சில சமயம் பயங்கரமானவனாகவும் மாறிவிடுகிறார். அவரைப் பற்றி நாம் எந்த முடிவையும் சுளுவாகக் கூறிவிடுவதற்கில்லை. இதற்கிடையே முட்டத்துப் பெரியார் வேறு நாம் வரவில்லையானால் தாமே வர நேரும் என்று மிரட்டியுள்ளார். அவர் இப்போது புகார் வந்துள்ளாராம்...”

     “அப்படியானால் நீ ஒன்று செய் உலூகா... நான் புறப்பட்டுச் சென்றால் சந்தேகம் ஏற்படும். நீ சென்று அவரைச் சந்தித்து சமீபகால நிகழ்ச்சிகளைப் பற்றிக் கலந்து பேசு... விவரம் அறிந்து உடன் திரும்பு. பிறகு யோசிக்கலாம்” என்றான் சிம்மநாதன்.

     உலூகன் பதில் கூறி மறுக்காமல் உடன் புறப்பட்டு விட்டான். அன்று இரவில் அவன் குதிரை உறையூரில் நுழையும் போது முன்னிரவுதான். நிலவும் இருந்தது. எனவே முட்டத்துப் பெரியார் மடம் இருந்த இடம் கண்டுபிடிப்பது கஷ்டமாயில்லை. எல்லாரும் வைத்தியசாலை என்றால் இதுதான் என்கிறார்கள். பெரியார் கெட்டிக்காரர். வைத்தியத் தொழிலை மக்கள் நலம் கருதி செய்து வருவதால் நல்ல செல்வாக்கு.

     குரங்கணி முட்டத்துப் பெரியார் மடம் என்பதுதான் உறையூரில் பெரிய வைத்தியசாலை. அவர் முதிய பிராயத்தினர். பெரிய துறவி. பெரிய வைத்தியருங்கூட. எனவே இந்த வைத்தியசாலையில் நாட்டின் பெருந்தலைவர்கள் சிகிச்சை பெற வருவதுண்டு.

     உலூகன் அம்மடத்திற்குள் நுழைந்த சமயம் ஒரு கூடத்தில் தனியாக ஒரு ஆள் ஒரு பெரிய இருக்கையில் அமர்ந்திருந்தது தெரிந்தது. அவன் முதுகுப்புறமே இவனுக்குத் தெரிந்தது. சிவப்புச் சட்டை, கறுப்புக் குல்லாய்... பெரிய உருவம்தான்.

     ‘யாராயிருக்கும்...?’ என்று தயங்கியவன் பெரியார் வருவது கண்டு விழுந்து - வணங்கினான்.

     நிமிர்ந்து பார்த்த அவர் “நீயா? நல்லது. அவன் எங்கே?” என்றார் வேகமாக.

     நடுநாயக உருவம் திரும்பிப் பார்த்தது.

     ‘அப்பாடி! சீனன்தான். பயங்கரமாகப் பார்க்கிறானே...’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

     “உள்ளே வா” என்று அழைத்துக் கொண்டே சென்றவர் பின்னே பணிவுடன் போனான் உலூகன்.

     இருக்கையில் அமர்ந்த அவர் “எங்கே சிம்மநாதன்? இங்கே வந்தது முதல் அவன் என்னைப் பார்க்கவில்லையே? எது அவசரம் எது முக்கியம் என்று அவனுக்குப் புரியவில்லையே” என்று கத்தினார்.

     இந்த வேகம் கண்டு பயந்துவிட்டான் உலூகன்.

     “சரி சரி, நான் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன். நமது திட்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகும் நிலை ஏற்பட்டுவிட்டது” என்றார் அவர்.

     “ஐயோ...!” என்று அலறினான் அவன்.

     “ஆமாம். பூந்துறையார் நம்மைவிட, ஏன்? எல்லாரையும்விடப் பெரிய ஆள்... அங்கே வெளியில் உட்கார்ந்திருப்பது யார் என்று உனக்குத் தெரிந்ததா?

     “முதுகுப்புறம்தான் பார்த்தேன்.”

     “அவன்தான் சீனக் கொள்ளைக்காரன் யாங்சின்” என்றதும் அவன் மீண்டும் ஒரு ஐயோ போட்டான்.

     வெறுப்புடன் அவர் அவனைப் பார்த்து “சும்மா சும்மா அவலச் சத்தம் போடாதே. அவன் கப்பல்களையெல்லாம் பூந்துறையார் பிடித்துவிட்டார். அவனுடைய ஆட்களில் முக்கியமான மின் என்பவன்...”

     “ஆம் சுவாமி. கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் ஒரு மாமிச மலை என்றும் ஒரு திமிங்கலத்தையே அவன் கசக்கிப் பிழிவான் என்றும் மகா பயங்கரன் என்றும் நம் குருநாதரே கூறியிருக்கிறார். அவனுக்கென்ன சுவாமி...?” என்று பயந்து கேட்டான் பாவம்.

     “அவனுக்கா? ஒன்றுமில்லை. உயிருக்கு மன்றாடினான் இந்த நாற்பது நாட்களாக. இப்போது பரவாயில்லை...”

     “அவனுக்கு உடம்பு என்ன சுவாமி?”

     “ஒன்றுமில்லை. அந்த ராட்சசனை பூந்துறையார் நீ சொன்னாயே அந்த மாதிரி திமிங்கலத்தை நசுக்குவது போல நசுக்கிவிட்டார். அவ்வளவுதான்” என்றார்.

     அவன் மீண்டும் ஒரு முறை “ஐயோ...” போட்டான். ஆனால் இந்த முறை அவர் கோபிக்கவில்லை.

     இதற்குள் வெளியில் ஏதோ சத்தம் கேட்டதும்.. பெரியவர் வெளியே செல்ல உலூகன் தொடர்ந்தான்.

     யாங்சின், பெரியவரின் கைகளைப் பிடித்துப் பலமாகக் குலுக்கினான். அறையிலிருந்து ஏதோ ஒன்று பெரிய நிழலாகப்பரவி நீண்டு உருவாக வந்ததைக் கண்ட உலூகன் ஒரு பெரிய மாமிச மலை தன்னை நோக்கி வருவதைக் கண்டு ‘ஜ... ஐ...’ என்றானே தவிர ‘யோ’ சொல்லுவதற்குள் மயங்கி விழுந்துவிட்டான்.

     “யாரங்கே? தூக்கிச் செல்லுங்கள் இவனை” என்று கர்ஜனை வந்த போது சற்றே தெளிந்து எழுந்து உட்கார்ந்தவன் அங்கு பூந்துறை நாயகன் கம்பீரமாக வந்து நிற்பதையும் அவன் எதிரே யாங்சின் அடக்க ஒடுக்கமாக வணங்கி நிற்பதைவும் மாமிசபர்வதம் அவன் கால் தொடுவது போலக் குனிந்து வணங்குவதையும் கண்டு கிலி கொண்டவனாய் ‘இதெல்லாம் உண்மையா? பொய்யா? கனவா கற்பனையா?’ என்று குழம்பிப் போய் அடித்த சிலை மாதிரி நின்றான்.

     “ஏ... உலூகா, பூந்துறையாரை வணங்காமல் தீவட்டி நிற்கிறாயே” என்று யாரோ மிக அருகில் இடித்துக்காட்டியதும் “ஐயோ...” என்று கத்த முயன்றவன் கையும் காலும் வணங்கும் போது நடுங்கி ஆடின.

     பூந்துறையான் அவனைப் பார்த்துவிட்டு “முட்டத்துப் பெரியவரே, இவன் எங்கே இங்கு வந்தான்? கங்க நாட்டுச் சிம்மநாதனுடன் பூந்துறையில் இருக்க வேண்டியவனாயிற்றே இவன்?” என்று கேட்டதும் பெரியவர் அசந்துவிட்டார்.

     உலூக்னோ செத்தோம் என்று முடிவு செய்துவிட்டான். ஆனால் இதையெல்லாம் கவனியாமல் “பெரியவரே, சீனத்து யாங்சின் உங்கள் வைத்தியத்தை வெகுவாகப் பாராட்டுகிறார். நீங்கள் இல்லையேல் அவர் உயிர் பிழைத்திருக்க மாட்டான் என்றும், உங்கள் சேவையைப் பாராட்டும் வகையில் உங்கள் மடத்துக்குக் காணிக்கையாக ஆயிரம் சீனப்பொற் காசுகளைத் தருகிறேன் என்று கூறுகிறான் யாங்சின். அதை ஏற்கிறீர்களா?” என்று கேட்டதும் பெரியவர் கேள்வியின் கருத்தைப் புரிந்து கொண்டு “சோழ நாடு நாடி வந்த ஒரு பெரும் சீனக் கடலோடி இங்கு ஒருவருடன் வலுச்சண்டை போட்டது தவறுதான். ஆனால் அதற்காக அவன் உயிர் இழப்பதை நாம் விரும்பவில்லை. எனவே அவன் உயிர் பிழைத்தது இறையருள் என்று சோழ நாடு எண்ணி அவனை மனமுவந்து ஆசியுடன் அனுப்புகிறது. பயன் கருதிப் பணியாற்றவில்லை நாம். எனவே ஊதியம் எதுவும் தேவையில்லை. மீறி வாங்கினால் நம்மை நாமே தாழ்த்திக் கொண்டவர்களாவோம்” என்றார்.

     “பளா... பளா...!” என்று பாராட்டிய பூந்துறையான் “யாங்சின், நீ கொள்ளையனானாலும் சோழரைப் பொறுத்த வரை நீ அவ்வாறில்லை. மின் நாம் பரம்பரை எதிரிகள் அல்ல. சண்டையிட்டோம் ஒரு விளையாட்டைப் போல. விளையாட்டில் வெற்றி தோல்வி ஒருவருக்கே உரிமையில்லை. எனவே அன்புடன் இப்போது விடைபெற்றுக் கொள்ளுவோம்” என்று முழங்கியதும் யாங்சின் அவனை இறுக அணைத்துக் கொண்டு அதே போன்று அன்பைக் காட்டிக் கைகளை வெகுவாகக் குலுக்கினான்.

     சீன மொழியில் அவன் “நாம் இன்று, நாளை, என்றும் நண்பர்கள்தான்” என்று கூறியதும் கரிவர்மன் “அப்படிச் சொல் என் சிங்கமே... கீழை நாடுகளில் இரு பெரும் சக்திகளான சீனாவும் பாரதமும் பெரும் கடல்களாலும், உயர்ந்த மலைகளாலும் சூழப்பட்டிருப்பினும் பிரிக்கப்படாது மனுஷ்யத்துவம், சகோதரத்துவம், சமத்துவம் என்ற அடிப்படைப் பிணைப்பால் இணைக்கப் பெற்று நண்பர்களாகவே வாழ்வோம்” என்று அதே சீன மொழியில் கூறியதும் அந்த மாமிசமலை பூந்துறை நாயகனைக் கட்டித் தூக்கி கூத்தாடினான் அளப்பரிய ஆனந்த மிகுதியால்.

     இந்த ஆனந்தக்காட்சி கூட உலூகனை உலுக்கிவிட்டது... பிறகு அத்தனை பேரும் உற்சாகம் மேலிட அவர்களுக்கு வழிவிட்டதும் எல்லாரும் நகர்ந்தனர் அங்கிருந்து.

     வைத்திய நிலையம் அமைதியானதும் உலூகனிடம் தனித்துப் பேசிய முட்டத்துப் பெரியவர். “பைத்தியக்காரா, நீ இன்று இரண்டு முறைகள் உன்னைக் காட்டிக் கொண்டுவிட்டாயே” என்றார்.

     அவனோ இன்னும் தன் கலக்க உலகத்திலிருந்து வெளிவராமல் பயத்தையும்விட முடியாமல் “சுவாமி, இதெல்லாம் என்ன? அந்த மனித மாமலையை இந்தப் பூந்துறையார் பந்தாடினாரா? நம்ப முடியவில்லையே...” என்று அங்கலாய்த்தான்.

     பெரியவர் அவனுடைய வியப்பை, அறியாமையைக் கண்டு வருந்தினாலும், வேறு அவசரமான விஷயங்களை அவனுடன் பேச வேண்டியிருந்ததால் “உனக்கு இதெல்லாம் போகப் போகத்தான் நன்றாக அனுபவத்தில் அடிபட்டால்தான் புரியும். இப்படி உட்கார் முதலில்” என்று கூறிவிட்டு, அவன் உட்கார்ந்ததும் “நாம் நமது திட்டங்கள், செயல்கள் அனைத்தையும் இப்போதைக்கு முற்றிலும் கைவிட்டாக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்” என்று அவர் ஏதோ சொல்லத் துவங்கியதும் அவன் யோசித்ததெல்லாம் தன்னைத் தவிர மற்ற எல்லாருக்கும், அடியாரையும் சேர்த்துதான் மூளை கிறுகிறுத்துக் கலகலத்து விட்டதாகவே கருதினான் அவன். ஆயினும் பேசாமல் தலையசைத்தான் அப்பாவி போல.

     ‘சரி, இவனுக்கு, இன்னமும் புரியவில்லை’ என்று நினைத்தவர் “உலூகா, பொறுமையாகக் கேள். முதலில் என்னை வந்து நாளது வரை சிம்மநாதன் சந்திக்கவில்லை. இது அவன் தவறு. அதை பூந்துறையார்தான் இம்மாதிரி நம்மைச் சந்திக்க முடியாத நிலையை உண்டாக்கியது என்பது என் ஊகம். இன்று நாம் சந்திப்பது பேசுவது எல்லாம் அவனுக்குத் தெரியாமலில்லை. நான் உன்னுடன் பேச வேண்டும். பேசி முக்கியமான விஷயங்களைக் கூற வேண்டும் என்பதற்காகவே உன்னை இங்கு அனுமதித்திருக்கிறான்.

     கங்கபாடியில் நம்மவர்களே நமக்கு எதிரிகளாகிவிட்டனர். நேசமித்திரன் ஒரு விபரீதமான அக்கிரமத்தைச் செய்ய முனைந்திருக்கிறான். ஸ்ரீஹரியும் அவனுடன் இதில் சேர்ந்திருக்கிற மாதிரி தெரிகிறது. நீதிமார்க்கன் ஒருவன்தான் மன்னன் பக்கம். ஸ்ரீபதியோ வழக்கம் போல இரண்டுங்கெட்டான். இங்கும் இல்லை. அங்கும் இல்லை.

     நாட்டியக்காரி அஞ்சனா தேவியைத் தன் கையாளாகப் பயன்படுத்திக் கொண்டு அவள் மூலம் இங்கிருந்து சென்ற மோஹினியை எவ்வளவோ தந்திரமாக வசப்படுத்த முயன்றிருக்கிறான். மன்னர் அவளையும் அவள் குழுவினரையும் மதித்து ஆதரவு அளித்து அவர்களுக்கு எந்த அசெளகரியமும் நேராமல் பாதுகாப்பதில் நமது குருநாதர் சொற்படி இயன்றதைச் செய்து வருகிறார்.

     இதற்கிடையே இங்கிருந்து ஒரு வணிகப் பிரபு அங்கு போயிருக்கிறார் அல்லவா? அவர் பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் பூந்துறையாருக்கு வேண்டியவரா? எதிரியா? என்று புரியவில்லை. ஆயினும் அவனை நேசமித்திரன் மிகவும் அந்தரங்க நண்பனாகக் கருதி, நாம் அயல் நாடுகளிலிருந்து மிக மர்மமாக இறக்குமதி செய்துள்ள ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள பண்டகசாலைகளை இந்த சோழப் பிரபுவுக்கு மாத ஊதியத்தில் காப்பாக வைத்திருக்கிறான்.”

     “ஐயோ! மெய்யாகவா? அந்தப் பாவிதானே வெளிநாடுகளுக்குப் போய் அவ்வளவு ஆயுதங்களையும் கொணர்ந்தவன். இப்போது இது வெளிப்பட்டுவிட்டால் நம் பாடு மிக ஆபத்தாயிற்றே சுவாமி...”

     “ஆமாம். ஆனால் அந்த சோழப் பிரபு கள்ளச் சந்தைக்காரனாம். அவன் மீது இங்கு கடுமையான நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்த சமயத்தில் அவன் இவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அங்கு போய்விட்டானாம்.”

     “ஓகோ! என்றாலும் கங்கபாடி இவர்களுக்கு அடங்கிய பகுதிதானே? அவனை விட்டுவிடுவார்களா?”

     “விடமாட்டார்கள். ஆனால் இங்கு ஒரு பரவலான பேச்சு அடிபடுகிறது. சோழ இளவரசர்களில் மூத்தவனான மும்முடிச் சோழன், தற்போது கடல் நாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன், இவனுக்கு நிரம்பவும் வேண்டியவன் என்றும் சேனையிலும், ஆட்சிக் குழுவிலும் அவனுடைய கையாட்கள் இருக்கிறார்கள் என்றும், அதனால்தான் சட்டென எதுவும் செய்யாமல் பூந்துறையார் பொறுத்தார் என்றும் ஒரு பேச்சு. தவிர இந்நாட்டு வணிகர்கள், தங்களைச் சேர்ந்த ஒருவர் மீது அரசர் தீவிர நடவடிக்கை எடுப்பின் அரசுக்கு விரோதமாகக் திரும்பி விடுவார்கள் என்ற பயம். வணிகர்களின் ஆதரவில்லையேல் அரசாங்கம் செயல்படுவது அசாதாரண விஷயம் ஆயிற்றே? அதனால்தான் பொறுத்தான் என்றும், நல்லகாலமாக அவன் நாட்டைவிட்டுப் போனது ஒரு நெருக்கடியைத் தவிர்த்தது என்றும் இங்கு பேசிக் கொள்ளுகிறார்கள்.”

     “ஓகோ! அதனால்தான் அங்கே போய் தன்னுடைய கள்ளத் தொழிலை நடத்தத் துணிந்தார் போலும்.”

     “அதில் என்ன தவறு இருக்கிறது உலூகா...? கங்கபாடிக்கு அதனால் லாபமே அன்றி நஷ்டமில்லையே. ஆனால் அவனிடம் போய் இந்த நேசமித்திரன் பண்டகசாலைத் தகவல்களைத் தருவானேன். ஊரிலே உள்ளவர், இதர நாட்டார் முக்கியமாகச் சோழ நாட்டார் நாம் ஆயுதங்களை அங்கு குவித்திருப்பது அறிந்தால் அது எவ்வளவு பெரிய கஷ்டத்தை நமக்குக் கொடுத்துவிடும்?”

     “இன்னும் இவர்களுக்கு எதுவும் தெரியாதா?”

     “சொல்வதற்கில்லை. ஆனால் அந்தச் சோழ வணிகர் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது உண்மை. தவிர அவர் பூந்துறையான் பேரைக் கேட்டாலே பதறி எழுகிறாராம். போன வாரத்தில் இங்கிருந்து போன கனக விசயர் என்ற கலைஞர்களில் ஒருவரான விசயர் கொஞ்சம் புகழ்ந்து பூந்துறையார் பற்றி அவனிடம் பேசியதும் ஆளைவிட்டு அடித்துப் போட்டுவிட்டாராம். அவனும் இங்கு தகவல் அனுப்பியிருக்கிறான். ஆனால் நேசமித்திரன் எழுதியுள்ள ஒரு கடிதம் பூந்துறையாருக்கு வந்திருக்கிறது. அதில் சோழர்களைப் பற்றி ஒரு மாதிரியாக அவன் பேசியது பொறுக்காமல் அடித்துப் போட்டுவிட்டார் என்று கூறியிருக்கிறான். அவன் வார்த்தைதானே மதிக்கப்பட வேண்டும்.”

     “அப்படியா? அவர்கள் உண்மையில் கலைஞர்கள். ஒன்றும் தெரியாத அப்பாவிகள். பூந்துறையாரைப் போற்றிப் பேசினார்கள் என்றால் அவர்கள்...”

     “அது எப்படியாவது போகட்டும். ஒரு பேச்சுக்குச் சொன்னேன். எனவே நீ சிம்மநாதனை நம் குருநாதரிடமிருந்து அத்தாட்சி பூர்வமான தகவல் வரும் வரை பூந்துறையிலேயே இருக்கச் சொல். நீயும் இரு. புரிகிறதா?”

     “அப்படியானால் நமது லட்சியத் திட்டம்...?”

     “செயல்படுத்துவதைத் தள்ளிப் போட வேண்டும்.”

     “ஒவ்வொரு நாள் தாமதமும் நமக்குச் சோதனைதானே?”

     “ஆமாம், ஆனால் வேறு வழியில்லை. ஏனென்றால் அரசரின் திருமண ஏற்பாடுகளை எல்லாரும் தீவிரமாகக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே நாம் எதிர்பார்க்கும் நிலையில் எதிர்பார்க்கும் இடத்துக்கு யாரைக் கொண்டு செல்ல வேண்டுமோ அது இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆயினும் நாம் கண்களைத் தீட்டிக் கொண்டு ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய தருணம் இது” என்று அவர் அறிவுறுத்தியதும் உலூகன் இதுகாறும் தானும் தலைவரும் மேற்கொண்ட வேலைகள் யாவும் வியர்த்தமாயிற்றே என்று வெகுவாகக் கலங்கியபடி அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் பூந்துறைக்கு.

     உலாகன் தன்னிடமிருந்து போனது முதல் சிம்மநாதன் பொழுதினைக் கழிக்கக்கூடத் தவித்துப் போனான்.

     தஞ்சை அரண்மனைக்குப் பூந்துறை நாட்டு அரண்மனை வாசிகள் போய்விட்டதால், கரிவர்மன் மாளிகை யாருமே இல்லாத இடம் போல் ‘ஓ...’வென்று விரிந்து கிடந்தது. நாலா திசையிலும் மலைகள், நடுவே கோட்டை. இங்கு வரவோ ஒரே பாதைதான். எனவே நடமாடினால் அரண்மனை வாயிலில், அல்லது சுற்றியுள்ள பூங்காவில்... குதிரை மீது ஏறினால் மலையடிவாரத்தில். திரும்பத் திரும்ப இதே மாதிரி என்றால் சலிப்பு ஏற்படாமலிருக்குமா? எதற்கு இந்த சோழ நாடு வந்தோம்? இங்குள்ள சூழ்நிலையில் சிக்கி சுகமாக இயங்க முடியாது அவதிப்படுகிறோம். அங்கிருந்தாலாவது இளவரசியுடன் பேசலாம். பழகலாம். அதை விட்டுவிட்டு இங்கு வரவேண்டிய நிர்ப்பந்த நிலைமையை நாமே உண்டாக்கிக் கொண்டு விட்டோமோ என்று மனம் நொந்தபடி பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தான்.

     காவலர்கள் இவனுக்கு எந்தவிதச் சிரமமும் இல்லாமல் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்ததால்... அவர்கள் இவன் எங்கே போகிறான் வருகிறான் என்று கூடக் கவனிப்பதில்லை.

     ‘இது ஒரு வியப்புக்குரிய நிலைதான். பூந்துறையார் ஏன் நம்மைக் கண்காணிக்கக்கூட ஆள் வைப்பதில்லை...? ஆரம்ப முதலே இந்த ஒரு விஷயத்தில் நம் குருநாதர் சொன்னபடி நடக்கவில்லையே. அது ஏன்? ஒருவேளை எந்த நோக்கத்தோடு இங்கு வந்தாலும் இங்குள்ள சூழ்நிலையில் எவராலும் சோழர்க்கெதிராகச் செயல்பட முடியாது என்ற நம்பிக்கையாயிருக்குமோ? அப்படியும் இருக்கலாம். ஆம் இதுதான் உண்மை’ என்பதாக உலூகன் வந்து சொன்ன தகவல்கள் உறுதிப்படுத்தியதும் சிம்மநாதன் தவித்துவிட்டான்.