உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 23 உலூகன் பூந்துறை வந்தவுடன், “நல்லகாலமாக நீ திரும்பினாய். இன்னும் இரு தினங்கள் நீ திரும்பாதிருந்தால் நான் சலிப்பினாலேயே செத்து விடுவேன் என்ற அவ்வளவு சலிப்பு உலூகா” என்று சிம்மநாதன் தன் நிலைமையைச் சொன்னதும், அவன் அதே சலிப்புடன்தான் புரவி மீதிருந்து இறங்கினான். அவனுடைய சலிப்பினைக் கண்ட சிம்மநாதன் ‘பாவம், பயணச் சிரமம், பசி, களைப்பு.. அதனால்தான் இந்தச் சலிப்பு’ என்று ஊகித்தவனாய், “முதலில் நீ போய் உண்டி முடித்துக் கொண்டு வா, பிறகு பேசலாம்” என்றான். உலூகன் சலிப்புடன் “இனி பேச எதுவுமேயில்லை. எல்லாம் தொலைந்து விட்டது, நம் இரண்டு பேரைத் தவிர” என்று சொன்னதும் சற்றே திகைத்த சிம்மநாதன் ‘நம்மிடம் இப்படிப் பேசும்படியான அளவுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது அங்கு... அப்படியானால் இது நாள் வரை பேசாதிருந்த பூந்துறையான் தனது சுய உருவத்தைக் காட்டிவிட்டானா?’ என்று எண்ணித் திகைத்துவிட்டான். “எனக்குப் பசியும் இல்லை. தாகமும் இல்லை. இனி அதெல்லாம் உண்டாகாத ஒரு நிலையில் நான் இருக்கிறேன்” என்று அவன் ஒரு மாதிரி பேசியதும் ‘சரி, இனியும்தான் தலைவன். அவன் ஊழியன் என்பதைக் கொஞ்சம் சுட்டிக்காட்ட வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கு வந்த அவன், “உலூகா பயணக் களைப்பில் ஏதேதோ உளறுகிறாயே... சற்று மரியாதையைக் காட்டிப் பேச வேண்டாமா?” என்று எச்சரித்ததும் உலூகன் சட்டென்று “தலைவரே, நான் தங்களிடம் மரியாதையின்றிப் பேசியிருந்தால் அதை மன்னிக்க வேண்டும் நீங்கள். ஆனால் நான் அப்படிப் பேச நினைத்ததும் இல்லை. இனி இதற்கெல்லாம் அவசியமும் இல்லை. நம்முடைய வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நாளை ஊர் திரும்பும்படி குருநாதர் உத்திரவிட்டாலும் அதிசயமில்லை. இதை நான் சொல்லவில்லை. முட்டத்துப் பெரியார் உங்களிடம் அறிவித்துத் தயாராகவே யிருக்கும்படி சொல்லச் சொன்னார்” என்று நிதானமாக கூறினான். சிம்மநாதன் எதுவும் புரியாதவனாய் “என்ன இதெல்லாம் உலூகா? நீ மனநிதானத்துடன் என்னிடம் பேசுகிறாயா? அல்லது முட்டத்துப் பெரியார் புத்திதான் பேதலித்து விட்டதா? அங்கு என்னதான் நடந்தது...? கொஞ்சம் எல்லாவற்றையும் புரியும் படியாகத்தான் சொல்லேன்” என்றதும் உலூகன் ஒரு சிறு மேடையில் அமர யத்தனிக்க எதிரே இருந்த பெரிய மேடையில் சிம்மநாதன் அமர்ந்து கொண்டு “உட்கார் உலூகா” என்றான். “தலைவரே, நமது முயற்சிகள் யாவும் வீணாகிவிட்டன. நமது குருநாதருக்கே இப்போது நெருக்கடியான சோதனை. கங்க நாட்டில் ஒரே களேபரம். நேசமித்திரன் காமவெறியனாகி விட்டான். அவனுக்கு வால்பிடிக்கிறான் ஹரி ஹரி. இங்கிருந்து சென்றுள்ள கூத்துக்குழுவினர் இப்போது சிறையிடப்பட்டுள்ளனரா, வெளியிலிருக்கிறார்களா என்று புரியவில்லை. ஆனால் நேசமித்திரன் அந்தப் பெண் மோஹினியைத் தன்னிடம் கொடுக்கா விட்டால்... அப்புறம் அவன் என்ன சொன்னான் என்பது தேவையில்லை. போதாக்குறைக்கு மிகப் பெரிய அபாயம் உண்டாகியுள்ளது. அயல் நாடுகளிலிருந்து நெடுநாட்களாக இறக்குமதி செய்து பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்கள், பண்டகசாலைகள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அந்த சோழ நாட்டுப் பிரபு நம்ம நேசமித்திரன் மூலம் தெரிந்து கொணடிருக்கிறானாம்...” என்று சொன்னதும் துள்ளியெழுந்த சிம்மநாதன் “என்ன? என்ன சொன்னாய் நீ?” என்று இரைந்து கத்திவிட்டான். தொலைவில் நின்ற காவலர்கள் பதறி ஓடி வந்த பிறகுதான் அவனுக்குத் தான் இரைந்து கத்திவிட்டது தெரிந்தது... காவலனைக் கண்ட சிம்மநாதன் “ஒன்றுமில்லை, நீ போகலாம்” என்றதும் அவன் ஒரு மாதிரியாக அவர்களைப் பார்த்துவிட்டு அப்பால் நகர்ந்தான். “பதற்றப்படாமல் கேளுங்கள். அந்த சோழ வணிகர் இங்கு ஏதோ பெருங்குற்றத்தில் சிக்கி பெரும் நடவடிக்கைக்கு இலக்காக இருந்தாராம். ஆனால் சட்டென அவர் கங்கபாடி ஓடியதும் இப்போதைக்கு நடவடிக்கை இல்லையாம். அவன் பூந்துறையாருக்குப் பரமவிரோதியென்றும் முட்டத்துப் பெரியவர் கூறுகிறார்... எப்படியிருந்தாலும் அவன் சோழன். நமது உயிர் நாடியான ஒரு ரகசியத்தை அவனிடம் இவன் எப்படிக் கூறலாம்? நீதிமார்க்கன் இதைத் தடுக்காமலிருந்ததெப்படி? சோழர்கள் இந்த ரகசியம் அறிந்தால் அடுத்த நொடியே நாம் பலி இங்கே. அடுத்தது கங்கம் தவிடுபொடியாகுமே. முட்டத்துப் பெரியார் இதனால் பெரிதும் மனமுடைந்து போயிருக்கிறார். நம் குருநாதர் நிலைகூட முன் போல இருக்குமா என்பதில் அவர் ஐயம் கொண்டுள்ளார். எனவே நாம் இப்போதைக்கு நமது திட்டங்களைச் செயல்படுத்துவது கூடாது. லட்சியமும் சில காலம் மூட்டை கட்டி வைக்கப்பட வேண்டும் என்பது அவர் தந்துள்ள புத்திமதி... நாம் இங்கு இருக்கும் வரை இவர் யோசனைப்படி இயங்க வேண்டுமென்பதே நம் குருநாதர் கட்டளை. இது நம் விஷயம். இப்போது இந்த சோழ நாட்டு விஷயத்துக்கு வருகிறேன். உங்களுக்கு யாங்சின் என்று ஒரு சீனக் கடற்கொள்ளைக்காரன்...” “ஆமாம்... சின்ன வயதிலிருந்து அது எனக்குப் பழக்கமான பெயர். என்னைப் பயமுறுத்த இந்தப் பேரை அப்போதெல்லாம் சொல்லுவார்கள். பிறகு நான் வளர்ந்ததும் அவனைப் பற்றிய பல பயங்கர விஷயங்களைப் பலர் மூலம், நம் குருநாதர் மூலம் கூடக் கேட்டிருக்கிறேன். நேரிலும் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அவனுக்கென்ன?” “கடந்த பத்து நாட்களாக அவன் உறையூரில் இருக்கிறான்.” “அடடே! சோழர்கள் கடற் படைத்தலைவர் அவனை...” “இல்லை... இல்லை. அதெல்லாம் பெரிய கதை. ஆனால் நீங்கள் இதுவரை ஒரு மாமிச மலையைப் பார்த்திருக்க மாட்டீர்கள்.” “அதுவும் பார்த்திருக்கிறேன். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் நானும் குருநாதர் கூட கடாரம் போயிருந்தது உனக்கு நினைவிருக்கிறதா? அப்போது ஒரு பயங்கர கொள்ளை அந்நாட்டில் நடந்தது. எப்படித் தெரியுமா? பட்டப் பகலில் ஒரு பெரும் கப்பலிலிருந்து இந்த யாங்சின் தலைமையில் ஒரு கொள்ளைக் கூட்டம் வந்தது. அப்போது நாங்கள் ஒரு கோயிலில் இருந்தோம். பல பணக்காரர்கள்... ஒருவர் வந்து கடற்கரையில் ஒரு பெரிய இருக்கையில் அமர்ந்திருந்த யாங்சின் காலடியில் பணத்தை, நகைகளை இன்னும் பல அரிய பொருள்களைக் காணிக்கை. செலுத்துவது போலக் கொட்டினார்கள். அந்த யாங்சின் பக்கத்தில் நீ இதுவரை உன் ஆயுளில் பார்த்திருக்கவே முடியாத ஒரு பிரும்மாண்ட ராக்ஷசன் நின்றிருந்தான். அவன் நின்ற முறை ஒரு பெரிய மாமிசக் குன்று நகர்ந்து வந்து நிற்பது போலவே இருந்தது. சின்னக் கண்கள், சற்றும் சலனமில்லாத முகம். எனக்கு அப்போது பதினேழு பதினெட்டு வயதுதானே. ஆவல், பயம் எல்லாம் என்னை அந்தப் பக்கம் உற்றுப் பார்க்கச் செய்தது. எவனோ ஒருவன் கருமியான செல்வந்தன் ஒரு சிறு பை பணத்தைப் போட்டான் சற்றே அலட்சியமாக. அவ்வளவுதான். அந்த யமகிங்கரன் தனது இடது கையினால் அவனை... அவனும் நல்ல குண்டன்தான்... தூக்கி எறிந்து விட்டான், ஒரு சிறு பந்தை எறிவது போல. அப்புறம் என்ன? அதோடு அவன் செத்தான். நம் குரு ‘ஐயோ பாவம்!’ என்றார். நான் கேட்டேன், ஏன் இந்த நாட்டுக் காவலர்கள் அவனைப் பிடித்து தண்டிக்கவில்லையென்று. அவர் சொன்னார். ‘சிம்மா... கொள்ளைக்காரர்கள் இன்ன நாளில் இன்ன நேரத்தில் இன்ன இடத்துக்கு வருவோம் என்று முன்கூட்டி அறிவிப்பார்கள். இவர்கள் வரும் நாளன்று மன்னர் முதல் சாதாரண காவலன் வரை எங்கேயாவது ஓடி ஒளிந்து விடுவார்கள். கொள்ளையர் போனது உறுதியான பிறகே திரும்புவர்’ என்றார். எனக்கோ வியப்பு.. இதற்குள்ளாக மீண்டும் அங்கே ஏதோ தகராறு நடந்தது. அந்த மாமிச மலை ஒரே சமயத்தில் ஐந்தாறு பேரைப் பிடித்து சுற்றிச் சுழற்றி அடித்துக் கொன்றுவிட்டது. ஒரு பையன் என் வயதிருக்கும், ‘அடே பாவி! எங்கப்பனைக் கொன்று விட்டாயே...’ என்று யமன் மீது பாய்ந்தான். ஆனால் அவனைப் பிடித்து அந்த பூதம் நறநறவென்று கைகளால் பிடித்து நசுக்கியே கொன்ற கண்றாவியைப் பார்த்ததும் நான் ‘ஓ...!’ என்று அலறிவிட்டேன். குருநாதர்கூட அன்று பாவம் வாய்விட்டு அழுதுவிட்டார் என்றால் அந்த கோரத்தை மேலும் வர்ணிப்பானேன். அது போகட்டும், நீ சொல்ல வந்ததைச் சொல்... நான் ஏதேதோ பழைய கதையைச் சொல்லிப் பயன் என்ன?” “நான் அந்த மாமிச மலையை இன்று பார்த்தேன்” என்றான் உலூகன். ‘மீண்டும் இவன் புத்தி தடுமாறுகிறதே. ஒருவேளை கள்ளைக் குடித்திருப்பானோ...?’ “சரி உலூகா, நீ போய் வந்த விஷயத்தைப் பற்றிச் சொல்” என்றான். “அதைத்தானே சொல்லுகிறேன். நான் அந்த மாமிச பர்வதத்தைக் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்கு மன்றாடி முடிவில் பிழைத்துவிட்ட அந்தக் குண்டாதி குண்டனை இந்தக் கண்களாலேயே பார்த்தேன்” என்றான் உலூகன் அழுத்தம் திருத்தமாக. ‘இவனிடம் மேலும் பேசாமல் இன்று விட்டு நாளை பேசலாம்’ என்று நினைத்த சிம்மநாதன் “சரி உலூகா, வேறு முக்கியமான விஷயம் அங்கு எதுவும் நிகழவில்லை. அவ்வளவுதானே?” என்று எழுந்தான். உலூகனுக்கு இப்போது கோபமே வந்துவிட்டது. “தலைவரே, நீங்கள் கேட்க வேண்டிய முக்கியமான விஷயத்தை இனிதான் கூறப்போகிறேன். அந்தக் குண்டன் பெயர் மின். அவன் கடந்த பத்து நாட்களுக்கு முன்னால் பூந்துறை நாயகரால் அடித்துப் போடப்பட்டான்” என்றான். அவனைச் சிம்மநாதன் சற்றே வேகமாகப் பார்த்துவிட்டு “நீ இதுவரை சொன்னவை அனைத்தும் உண்மைதானே?” என்று சட்டெனக் கேட்டதும் அவனும் கோபத்துடன் “தலைவரே, நாளதுவரை நான் தங்களிடம் பொய் சொன்னதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. இப்போது நான் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை” என்று கூறிவிட்டுச் சட்டென மவுனமானான். ஏனெனில் தொலைவில் யாரோ வருகிற மாதிரி ஒரு தோற்றம். உண்மையாகவே யாரோ... ஒரு பெண்... அது... அது என்ன விந்தை. இளவரசி ராஜசுந்தரி அல்லவா வருகிறாள். இது உண்மைதானா? அல்லது உலூகன் கூற்றே புனைந்துரைகள் மாதிரி இதுவும் ஒரு கனவா? துருதுருவென்று அவர்களை நோக்கி வேகமாக வந்த இளவரசி “ஐயா கங்க நாட்டாரே... நீங்கள் நிரம்பவும் துரதிர்ஷ்டசாலி. ஆமாம். இல்லாவிட்டால்... நாடு முழுதும் பரவி அமர்க்களப்படும் அந்த அதிசயத்தை நேரிலே பார்க்காமல் இந்த முடுக்கில் வந்து ஒடுங்கிக் கிடப்பீர்களா?” என்றாள் பரிதாபமாக. சிம்மநாதன் ‘இப்போது தான் இதுவரை கேட்டதெல்லாம் அதிசயமில்லை என்று மறுத்து இந்த அரசகுமாரி இன்னொரு புதிய கதை கூறப்போகிறாள் போலும். என்றாலும் தன் மனம் கவர்ந்த ராஜகுமாரியாயிற்றே, சொல்லட்டும், கேட்போம்’ என்று நினைத்து “நான் துரதிர்ஷ்டசாலிதான் இளவரசி” என்றான். இதுதான் சமயம் என்று உலூகன் அப்பால் போய்விட்டான். “சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, நீங்கள் அதிர்ஷ்ட மற்றவர்தான்...” “நான்தான் ஒப்புக்கொண்டுவிட்டேனே?” “எதை?” “துரதிர்ஷ்டசாலி என்பதை!” “எதற்காக?” “நான் சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீர்களே?” “நிச்சயம் கோபிக்கமாட்டேன். அதுவும் உங்களிடம் நான் கொண்டுள்ள மதிப்பினால் நீங்கள் எனக்குக் கோபம் உண்டாகும்படி பேசமாட்டீர்கள் என்றும் தெரியும்...” “நான் தங்களைப் பிரிந்து இங்கு வந்து இங்குள்ள தனிமைச் சூழ்நிலையில் படும் அவதி பெரிய துரதிர்ஷ்டம்தானே இளவரசி?” என்று கேட்டுவிட்டு அவள் ஆத்திரத்துடன் தன் மீது பாயப்போகிறாள் என்ற பயத்துடன் நிமிர்ந்து பார்க்கவும் பயந்தான். அவளோ கலகலவென்று சிரித்துவிட்டு “இவ்வளவுதானா? என்னவோ ஏதோவென்று நினைத்து விட்டேன். என்றைக்கிருந்தாலும் ஒரு பெண் தன் சகோதரர்களை, சகோதரிகளை, தாய் தந்தையரையெல்லாம் விட்டுக் கணவன் வீடு போக வேண்டியவள்தானே? என்னோடு பிறந்த சகோதரர்களே என்னைப் பிரிவது பற்றி அதிகம் வருத்தப்படாமல் நடக்க வேண்டியது நடக்கிறது என்று மனதை அடக்கிக் கொண்டுள்ளது போல், இன்னொரு சகோதரனான நீங்களும் அவர்கள் வழியைப் பின்பற்றிவிட்டால் அப்புறம் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் கவலை எல்லாம் இல்லை பாருங்கள்” என்று சர்வசாதாரணமாக வரித்துக் கொண்டே கூறியதும் சிம்மநாதன் இதயத்தில் சுரீர் என்று ஏதோ ஒன்று குத்தியது. ‘அடக்கடவுளே! களங்கமேயில்லாத ஒரு குழந்தை போன்ற உள்ளத்தில் மனுஷ்ய உணர்ச்சி இயற்கையாக கிளைந்தெழும் பருவமல்லவா இது... நாம் வீணாக நம் மனதைத் தவறான பாதையில் தவறான இலட்சியத்தில் செலுத்தினால்... வேண்டும், இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்’ என்று நினைத்துப் பதறிவிட்டான் அவன். “ஏன் கங்கரே இப்படி வேர்க்கிறது உமக்கு? தென்றலும் மலைக்காற்றும் போட்டியிட்டுக் கொண்டு ஜிலுஜிலுவென்று காற்றடிக்கும் போது... அது போகட்டும், நான் உங்கள் அன்புத் தங்கை என்ற முறையில் உங்களிடம் அங்கு நடந்த அதிசயத்தை அதிகம் வர்ணிக்காமல் கூறுகிறேன்” என்று சொல்லத் துவங்கியவள் சற்றே தயங்கிவிட்டுப் பிறகு, “நம்ம பூந்துறையார் என்ன செய்தார் தெரியுமா? அந்த சீனக் கொள்ளையன் இல்லை, அவனுடைய உதவி மின் என்ற மலை இல்லை, அதை அலாக்காகத் தூக்கி எறிந்து அவன் நரம்புகளை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார் பாவம்!” என்று குதூகலத்துடன் பரபரப்பாகக் கூறியதும் திடுக்கிட்டான் அவன். ‘அப்படியானால் உலூகன் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது, இருந்தாலும் இதை எப்படி நம்புவது? அவன் எங்கே, இவர் எங்கே? அவனே ஒரு அடியில் எட்டுப்பேரை வீழ்த்திய யானை பலம் கொண்டவன். இவரோ உடல் அளவிலும் வலுவிலும் அவனுக்கு ஈடேயில்லை. உண்மை இதுவாயிருக்க இவர் அவனை அடித்தார் என்றால் தடியால் அடித்தாரா? அல்லது ஏதேனும் மந்திரம் மாயம் என்பது போல... நம்புவதா? தேவையில்லையா?’ என்று அதிசயத்துடன் குழம்பினாலும், உள்ளூர ‘அப்படியும் ஒருவேளை இருக்கலாம். அசாத்திய மனோதைரியம் உள்ளவர்களால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்வாரே குருநாதர். அது மாதிரி இவர் மின்னை வீழ்த்தியிருந்தாலும் வீழ்த்தியிருக்கலாம் அல்லவா?’ “நீங்கள் நான் சொல்வதை நம்பாதது போல நானும் நேரில் போய் பார்த்திரா விட்டால் நம்பியிருக்கவே மாட்டேன். முதலில் என்னை அந்தப் பர்வதத்தைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை. மயங்கி விழுந்து விடுவேன் என்று. அப்புறம் பூந்துறையாரிடமே என்னை அழைத்துப் போகும்படி கேட்டேன். அவர் ஒரு சிரிப்புச் சிரித்தார் பாருங்கள்... நானே அந்தச் சிரிப்பைக் கண்டு பயந்துவிட்டேன். பிறகு அவர் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்...” ‘இதென்ன பெரிய விஷயம் ராஜசுந்தரி, உனக்கு நாளை கணவனாக வர இருக்கும் அந்தத் தொண்டைமான் ஒரு வேங்கையைத் தனி ஆளாக அடித்தானே? அதைவிட இது என்ன பெரிசா?’ என்று கேட்டதும் நான் பொய்யாகக் கொஞ்சம் கோபமும் கொண்டேன். ‘சரி சரி, அழைத்துப் போகிறேன்’ என்று அவருக்குப் பதில் விக்கிரமனே... தப்பு தப்பு.. மாமன்னரே வந்ததும் பருத்தி புடவையாயிற்று என்று அவரோடு புறப்பட்டுவிட்டேன். அடேயப்பா! அப்படிக் கூட ஒரு உருவமா...! ராக்ஷசர்கள் இருந்ததாக ராமாயணம் படிப்பவர்கள் கூறுவார்கள். சும்மா அதெல்லாம் கற்பனை... கதைக்கிறார்கள் என்று அப்போதெல்லாம் கேலி செய்த நான் இப்போது அதெல்லாம் உண்மை, வெறும் உண்மையில்லை, நூற்றுக்கு நூறு உண்மை என்று ஒப்புக் கொள்ளுகிறேன். மாமன்னரைக் கண்டதும் ஒரு கம்பீரமான பெரிய மீசைக்காரன் அவனும் சீனன்தான் ஓடோடி வந்து அவர் கால்களில் விழுவது போலத் தாழ்ந்து பணிந்து எழுந்தான். அண்ணன், “என்ன யாங்சின்? எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டதும், ஓகோ! இந்த பயங்கர மனிதன்தானா அந்தக் கடல் கொள்ளைக்காரன்? என்று வியந்துவிட்டு கீழே கட்டிலில்... ஆமாம் அது எட்டுயானையைத் தாங்கும் இரும்புக் கட்டில்தான் கிடந்த பர்வதத்தைக் காட்டி அவன் பேர் என்ன? என்றேன். ‘அவன் மின்’ என்றான். நான் குறும்பாக மீன் இல்லை, திமிங்கலம் என்று வைக்க மறந்து விட்டீர்கள் என்றதும் அண்ணனும் யாங்சின்னும் சிரித்து விட்டார்கள்” என்று கபடமில்லாமல் அவள் சொல்லிவிட்டுச் சிரித்த போது சிம்மநாதன் ‘சே...! நான் என்ன மனிதன்... இந்தப் பெண்... கள்ளமில்லா உள்ள பாங்குடன் என்னிடம் சகோதர பாசத்துடன் பழகியதை... சேச்சே... நான் கேடுகெட்ட பிறவி... சகோதர பாசத்துக்கும் விபரீத ஆசைக்கும் இணைப்புப் போட நினைத்த மிருகம். உம்...’ என்று நீண்ட பெருமூச்சுவிட்டுக் கொண்டே, “இளவரசி, நீங்கள் அந்தக் கொள்ளையர்களைப் பார்த்ததும் என்ன நினைத்தீர்கள்?” என்று பேச்சைத் திருப்பினான். அவளும் எதிர் மேடையில் உட்கார்ந்து கொண்டு “நீரும் இப்படி உட்காரும் கங்கரே. நீங்கள் கேட்டது ஒரு நல்ல கேள்வி... ஏனென்றால் நானே அந்த யாங்சின்னிடம் தைரியமாக நீ ஒரு பெரிய வீரனாயிருந்து ஏன் கொள்ளையடிக்க வேண்டும்? என்று கேட்டேன். அவன் பகபகவென்று சிரித்ததும் அண்ணன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். ‘அது எங்கள் தொழில்’ என்றான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. கொள்ளையடிப்பது ஒரு தொழிலா? என்று கேட்டேன் அதே கோபத்தில்... ‘ஆமாம் மகளே!’ என்றான் அந்தக் கொள்ளையன். நான் திடுக்கிட்டு அண்ணனைப் பார்த்தேன். அவன் ஒரு கொள்ளைக்காரனுக்கு என்னை மகளே என்று அழைக்க என்ன உரிமை இருக்கிறது என்று நினைத்தாலும் அண்ணன் வாய்திறக்காதிருந்ததால் நானும் வாய் திறக்கவில்லை... ‘மகளே... சிலர் எவ்வளவு பாடுபட்டுச் சம்பாதிக்கிறார்கள். சிலர் எவ்வளவு பாடுபட்டாலும் தேவையான வருவாய் இல்லை. மற்றும் சிலரால் பாடுபடவோ சம்பாதிக்கவோ முடியாத அவ்வளவு ஈனமான நிலை. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் பிறரைச் சுரண்டி ஏமாற்றி நயவஞ்சகமாக அவர்கள் உழைப்பைப் பெற்று கோடியாகக் குவித்து அதன் மீது அமர்ந்து கொக்கரிக்கிறார்கள். சமூகம் இவர்களைச் செல்வந்தர்கள், பிரபுக்கள், வணிகர்கள் என்று பல தலைப்புக்களில் அழைத்துக் கொண்டாடுகிறார்கள் வெளிப்படையாக. உள்ளூர இவர்கள் கொள்ளையர்கள். ஏழைகளை உறிஞ்சுகிறார்கள் என்று பொருமுகிறார்கள். இப்படிப் பொருமும் அசத்தர்களுக்கு, ஏழைகளுக்குக் கடவுள் உதவுவதில்லை. கொள்ளையர்களாகிய நாங்கள் உதவுகிறோம். குவித்திருப்பவர்களுக்குத் தேவையானதை விட்டுவிட்டு அவர்களிடமிருந்து அனைத்தையும் பறித்து எதுவுமே இல்லாதவருக்குத் தருகிறோம். இது நியாயமா அநியாயமா என்று சிந்திப்பதில்லை நாங்கள். அதற்கு அவசியம் இல்லை. எங்கள் கொள்கை தேவைக்கு அதிகமாக வைத்திருப்போரைக் கொள்ளையடிப்பது. தேவையுள்ள பஞ்சைகளுக்கு அவற்றை விநியோகிப்பது... இதுதான் மகளே!’ என்றான். நான் சிறிது நேரம் பேசவில்லை. இதையெல்லாம் நான் சுவடிகளில் படித்திருக்கிறேன். மனித சமூகம் உண்டான காலத்திலிருந்தே இருப்பவர் இல்லாதவர் என்று ஏற்றத் தாழ்வு இருந்தது போலும். ஆனால் இதை வெறும் கொள்ளை மூலம் தீர்த்துவிட முடியுமா என்ன? ஒரு தீமையை அழிக்க மற்றொரு தீமை. அவ்வளவுதான். அவன் கொள்ளைக்காரன். எனவே அவனிடம் நியாயம் கேட்பது குருடனிடம் ஓவிய அழகைப் பற்றி கேட்கும் கதைதான் என்று மவுனமாகி விட்டேன். நான் கேட்கிறேன் கங்கரே... அவன் தொழில் கொள்ளை என்பது தவறுதான். ஆனால் அவனைக் கொள்ளையடிக்கும்படி செய்தது எது? பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்றாளே ஒளவைப் பாட்டி... அந்தப் பத்தில் இதுவும் ஒன்று ஆகுமா?” என்று ராஜசுந்தரி கேட்டதும் சிம்மநாதன் விழித்தான். அவன் நன்கு தமிழ் படித்தவன்தான். இந்தப் பழமொழிகளை எல்லாம் நன்கு அறிந்தவன்தான். என்றாலும் ராஜசுந்தரியின் இந்தக் கேள்விக்குச் சட்டென அவனால் பதில் கூற முடியவில்லை. அவளும் ஏதோ யோசனையிலிருந்ததால் அவன் மவுனத்தைக் கலைக்க விரும்பவில்லை. அவளும் தன் கேள்விக்குப் பதில் எங்கே என்று வற்புறுத்தவில்லை... அச்சமயம் குதிரைகள் பல வரும் குளம்படிச் சத்தம் கேட்டதும் இருவரும் திரும்பிப் பார்த்த போது பூந்துறை நாயகனும், மதுராந்தக வேளாரும், பிடவூர்ப் பெருந்சாத்தனாரும், காடவமாராயரும் முன்னே வர பல வீரர்கள் பின்னால் நிதானமாக வந்தனர். சிம்மநாதன் திடுக்கிட்டான். ‘ஏதோ பெரிய விஷயம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதனால்தான் இங்கு இத்தனை பேர்களும் வருகின்றனர். ஒருவேளை...’ பூந்துறை சட்டெனத் தொலைவில் இவர்களைப் பார்த்துவிட்டார். உடனே அந்த அணியிலிருந்து விலகி நேராக இவர்களை நெருங்கி “என்ன தம்பி சிம்மநாதா? இங்கு வசதிகள் இருக்கிறதா? இது பெரும்பாலும் காடு மலைகள் பகுதியில் உள்ள பகுதி மாளிகை. எனவே நீ தஞ்சை வசதிகளை...” “இல்லை இல்லை... எல்லா வசதிகளும் இருக்கின்றன... ஒன்றே ஒன்றைத் தவிர” என்றான். “ஓகோ! யாரும் துணையில்லாத சலிப்பு பற்றிக் கூறுகிறாயா? அதுதான் இளவரசி வந்தாயிற்றே... இனி ஒரே பேச்சு மழைதான். இது எப்பொழுது ஓயுமோ என்று... அதோ கோபம் வந்துவிட்டது. பாவம் சிவந்துவிட்டது... மூக்கு... ஆ...” களுக்கென சிரித்தாள் இளவரசி. ஏன் சிரிப்பு என்று கேட்பது போலப் பார்த்து புரவியிலிருந்து இறங்கிய பூந்துறையாரிடம், “நல்லகாலம் மூக்கு சிவந்துவிட்டது என்று சொன்னீர்களே... வெளுத்துவிட்டது என்று. கூறாமல்...” என்று சொல்லி மீண்டும் சிரித்தாள். “சேச்சே...! உன்னை அப்படியெல்லாம் சொல்ல எனக்கேதம்மா உரிமை... அது வேறு ஒருவனிடம் போய்விட்டது” என்று குழந்தை மாதிரி சொன்னதும் அவளும் அதே குழந்தைக் குரலில்... “உங்களுக்கில்லாத உரிமை வேறு எவருக்குண்டு? நீங்கள் எனக்கு முதல் அண்ணன். மும்முடிகூட அப்புறம்தான் தெரியுமா?” என்று பகர்ந்ததும் அவன் இளநகையுடன் “ஆமாம். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இனி எங்கள் எல்லாருக்குமே உன்னைக் கேலி செய்ய உரிமை இல்லை... எல்லாவற்றையும் அந்த வண்டையூரான் பறித்துக் கொண்டுவிட்டான். இனி அவன் வந்து என் கண்ணே என்பான். மூக்கே என்பான். பிறகு... அவன் திணறுவான் மேலே பேசத் தெரியாமல்.” ஆனால் அந்தக் குறும்புக்காரி தொடர்ந்து “தலையே என்பான், களி என்பான் மண் என்பான்... இந்தா என்பேன், வாங்கு என்பேன், கட்டு மூட்டையை என்பேன்... சரிதானே” என்று கோரணி பேசியதும் பூந்துறையார் “ஆகாகா...!” என்று மிக இரைந்து அடக்க முடியாமல் சிரித்தான். சிம்மநாதன் உடல் ஒருமுறை நடுங்கிவிட்டது இச்சிரிப்பினால்... ஆனால் ராஜசுந்தரி “எங்கள் பூந்துறை அண்ணனுக்கு மகிழ்ச்சி வந்தாலும் சரி, கோபம் வந்தாலும் சரி, இப்படித்தான் சிரிப்பார். இது சர்வசாதாரணம்” என்றாள் அவனுக்கு அச்சமேற்படாமல் தடுப்பது மாதிரி.. . “சிம்மநாதா, அவள் சொன்னது உண்மை. சரி சுந்தரி... நீ மாளிகைக்குப் போய் உன்னுடைய தாத்தாக்களைப் பார்த்துப் பேசு. அவர்கள் இங்கு திருமண வரிசைகள் பற்றி முடிவு செய்ய வந்திருக்கிறார்கள் அல்லவா... நீயும் ஒரு பெரிய ராணி இல்லையா... கலந்து பேசி... அதோ பார் உன்னுடைய பெரிய அண்ணி பொற்கொடி வந்துவிட்டாள்... பார்த்தாயா?” என்று கேட்டதும் அவள் திக்பிரமையுடன் அந்தப் பக்கம் பார்க்க சிவிகையிலிருந்து அவள் குழந்தையுடன் இறங்க, இன்னொரு பயலை யாரோ ஒரு அன்னியப் பெண் அவள் ஒருக்கால் தாதியாகவும் இருக்கலாம். எடுத்துக் கொண்டு பின்னே இறங்க... “அண்ணி... அண்ணி...!” என்று மிகப் பெரிதாக ஆர்வம் தாங்காது பாசம் பரவசமாகிய நிலையில் ராஜசுந்தரி ஓட, பொற்கொடி சற்றே நின்று “மெல்ல மெல்ல... சுந்தரி” என்று கனிவு கலந்து இழைந்த பெரும் பாசத்துடன் அணைக்கக் கையில் இருந்த குழந்தை வீல் என்று கத்த... “யார் இவள்?” என்று அந்தச் சிறுபயல் தன் அன்னையின் இடையைக் கட்டிக் கொண்டு குதலை மொழியில் கேட்க ஒரே அமர்க்களம். சிவிகையின் பக்கலிலேயே இவ்வளவும் என்றால்... பூந்துறை நாயகன் கண்களிலும் இரண்டொரு கண்ணீர்த் துளிகள். |