விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

24

     சிம்மநாதன் இந்த அரிய பந்த பாசப் பிரளயக் காட்சியை குழந்தை போலப் பார்த்து உள்ளங் கலங்கி நின்றான்.

     ‘சோழ நாட்டின் மூத்த இளவரசன் மும்முடியின் மனைவி அவள். அந்தச் சிறுபயல் மூத்த குழந்தை போலும். கையில்... அதோ கைமாறுகிறது... அத்தையின் கையில் அதாவது ராஜசுந்தரி கரங்களில் மாறிவிட்டது. குழந்தையை குழந்தை போன்ற குணத்தினளான சுந்தரி கொஞ்சுவதில் தெய்வீகம் ஒளிக்கிறது. ஆம். இப்போது சிம்மநாதன் மனம் இளவரசியைப் பொறுத்தவரை மாறிவிட்டது. அந்த மயக்கம், போதையூட்டும் கவர்ச்சியெல்லாம் மாறிவிட்டது. எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னர்தான் என்றாலும் அவன் தன்னை அண்ணனாகக் கருதி பாசம் காட்டுவது எவ்வளவு பெரியதொரு மதிப்பு... ‘கடவுளே! இந்த மதிப்புக்கு இனி துளியேனும் என் மனதில் ‘மறு’ உண்டாக அனுமதியாதே’ என்று வேண்டியபடி உலூகனைத் தேடிச் சென்றான்.

     அங்கே வெகுவாக ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான் உலூகன்.

     “என்ன உலூகா, தூங்குகிறாயா அல்லது...?” என்று கேட்டுக் கொண்டே அவன் எதிரே போய் நின்றதும் பதறி எழுந்த உலூகன், “தலைவரே... மிகவும் மோசமான கட்டம். முட்டத்துப் பெரியவரே இங்கு வருகிறார் நாளை” என்று கூறியதும் திடுக்கிட்ட அவன் “என்ன? அவரே இங்கு வருகிறாரா...? இதெல்லாம் என்ன உலூகா...? நம் நாட்டில் என்னதான் நடக்கிறது? நம்மை, இங்கு நாம் செய்ய வந்த காரியத்தைச் செய்யவிடமாட்டார்கள் போல் இருக்கிறதே...” என்று உறுமி விட்டு பதற்றத்துடன் அமர்ந்தான்.

     “ஆமாம். நிலைமை கட்டு மீறிவிட்டது. இங்கிருந்து போன கலைஞர்களில் அந்த மோஹினி என்ற பெண்ணை யாரோ கவர்ந்து போய்விட்டார்கள்” என்று கூறியதும் “அடக்கடவுளே! இதென்ன கொடுமை... நம் குருநாதர்...”

     “அவரும் கூட நாளை வந்தாலும் அதிசயமில்லை...”

     “என்ன? என்ன? அவரும் வருகிறாரா?”

     “ஆமாம் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், கங்கத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. நேசமித்திரன் நாட்டைவிட்டு ஓடிவிட்டானாம். அவன் வேங்கியில் இருக்கிறானாம். அங்கே யாரோ ஒரு அழகியாம். என்னவோ பேர் அவளுக்கு... அவள் அழகில் மயங்கிக் கிடக்கிறானாம். இந்த அழகில் வேங்கி சேனாதிபதி ஸ்ரீ வல்லபனும் அந்த கங்க அழகியைப் பிடிக்க முயற்சியாம். இதனால் நமது மன்னர் தனது நாட்டிலும், வேங்கி மன்னர் விஜயாதித்தியன் தமது நாட்டிலும் செய்வதறியாது திகைக்கிறார்களாம். நம் இராணுவத்தினரும் இதனால் பிளவுபட்டு நிற்கிறார்களாம். குருநாதர் தாம் ஏதோ செய்ய முயற்சித்தது மாறி இப்பொழுது வேறென்னவோ வெல்லாம் நடக்கிறதே என்று கவலை தாங்காது தவிக்கிறாராம். நாம் எதிர்பார்த்தது ஒன்று. நடப்பதெல்லாம் வேறொன்றாக இருந்தால்... யாருக்குத்தான் புத்தி பேதலிக்காது” என்று அவன் அங்கலாய்த்துக் கூறியதும், அவன் கூறுவது மிகச் சரி என்றே கருதிக் குமுறினான் சிம்மநாதன்.

     ஆயினும் இப்படி ஒன்றன் பின் ஒன்றாக அங்கு நிகழ்ச்சிகள் மின்னல் வேகத்தில் இயங்குகிறதென்றால் இயற்கையாக ஏற்பட்டதா? அல்லது தூண்டி விடப்பட்டதா? ஒரு சாதாரணக் கூத்துப் பெண்ணை முன்னிட்டு நேசமித்திரன் புத்தி கெடுவானேன்?

     இப்போது இலட்சியம் என்னாவது? ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடிய ஒரு பெருந்திட்டத்துடன் இங்கு வந்து அதைப் பொருத்தமான நேரத்தில், செயல்படுத்தி சுதந்திர கங்கபாடி என்னும் சாதனையுடன் திரும்பிச் செல்ல இங்கு வந்திருக்கும் நோக்கம் பூர்த்தியாகவே வழியில்லையா...

     சிம்மநாதன் சோகத்துடன் சிந்தித்தான். எண்பதாண்டுகள் எதற்கு வாழ்ந்தாரோ குருநாதர் அது நிறைவேறப் போவதில்லையா? தனது நாடு சுதந்திர வாழ்வு பெறுவதைக் கெடுக்க தனது நாட்டாரே குறுக்கே நின்றால் யாரைக் குற்றம் கூற முடியும்? இப்படிக் கவலைப்பட்ட அவனிடம் “பூந்துறை நாயகர் இங்கு வருகிறார்” என்றான் உலூகன்.

     திடுக்கிட்டுப்போன சிம்மநாதன் வாயிற்புறம் ஓடிவந்து “வாருங்கள்” என்றான்.

     “பரவாயில்லை... அதோ அந்து மரத்தடியில் உள்ள மேடை பெரிது. சாய்மானம் உள்ளது, அப்படி உட்காருவோம். உலூகா நீயும் வா” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்ததும் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது அவனுக்கு.

     ஆபத்து எங்கெங்கோ இருப்பதாக பேசிக் கொண்டிருந்தோம். இப்போது அது நம் தலைக்கே வந்துவிட்டது என்று பதறியபடி தயக்கத்துடன் சென்றான் பின்னே.

     “சுற்றி வளைத்துப் பேசும் பழக்கம் எனக்கு எப்போதும் இல்லை...” என்று பீடிகை போட்டவர் அடுத்து “சிம்மநாதா, நீ கங்கபாடியிலிருந்து இங்கு வந்தது ஏன் என்று எனக்குத் தெரியும்” என்றார் சர்வசாதாரணமாக.

     அவனோ “ஐயோ...!” என்று கத்திவிட்டான்.

     “இம்மாதிரி இனி சத்தம் தேவையில்லை. விஜயகீர்த்தி நோக்கம் தவறில்லை. ஆனால் அதற்கு வகுத்த திட்டம் தவறு. சோழர்கள் தூங்குவார்கள் என்று நினைத்ததும் தவறு. நீ புறப்படும் முன் வகுத்த திட்டமும் தெரியும். புறப்பட்டது முதல் என் ஆட்கள் உன்னை நாளது வரை இப்பொழுது கூடக் கண்காணிக்கிறார்கள். எனவே நான் அலட்சியமாக இருப்பதாகக் கருதியது தவறு. முட்டத்துப் பெரியார் ராஜாளியாரை வெள்ளை மயில் என்று குறிப்பிட்டு அவரைத் தாங்கிவரத் தேவையில்லை” என்று கூறியதும் மீண்டும் ஒரு “ஐயோ...!” அவனையும் அறியாமல் வந்தது.

     “இப்பொழுது ராஜாளியார் எம்மிடம் பத்திரமாக இருக்கிறார். எனவே இருவரும் நாற்பது ஆண்டுகளாக உப்பிட்ட சோழ நாட்டுக்கெதிராக செயல்படத் துணிந்தது வெறுக்கத் தக்கது. ஆனால் உங்கள் சுதந்திர உணர்ச்சியை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். கங்கபாடியை நாங்கள் எங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளது உண்மை. காரணம் சாளுக்கியர்களுக்கும் எமக்கும் இடையே உள்ள நாடு எங்களதாக இருக்கட்டுமென்றுதான். ஆனால் உங்களை நாங்கள் சுரண்டவில்லை. அடிமையாகக் கருதி ஆட்டி வைக்கவில்லை. உங்கள் பிரபுக்கள் கூறுவது மாதிரி நாங்கள் கங்கபாடியை நாசம் செய்ய முயன்றதில்லை. நீங்கள் ஆயுதங்களைக் கலிங்கத்தின் மூலம் கொண்டு வந்திருப்பது பெருங் குற்றம். இப்போது அது எங்கள் வசமாகிவிட்டது. வேங்கியுடன் எங்களுக்குள்ள உறவு நெடுங்காலமாக இருப்பதாகும். ஸ்ரீவல்லபன் அசகாய சூரன். சந்தேகமில்லை. கலிங்க பீமனையே ஒரு கை பார்த்தவன். ஈட்டிப் போரில் அவனுக்கு ஈடாக இந்நாட்டில் எவருமில்லை என்கிறார்கள்.”

     “ஆம் அது உண்மைதான். அவன் மஹா பயங்கர ஈட்டிக்காரன்தான்.”

     “அதையும் பார்த்துவிடலாம். கலிங்கம் எப்போதும் எங்கள் கூட வம்பு செய்வதுதான். ஆனால் வேங்கி அப்படியல்ல. மன்னரும் மக்களும் எங்கள் உதவியை என்றும் ஏற்பவர்கள். கங்க நாடும் அப்படித்தான். ஒரு நான்கு பிரபுக்கள் பெரிய மனிதர்கள் போல நடித்து மக்களைத் தூண்டிவிட்டு வெளிநாட்டு ஆயுதங்களையும் கொடுத்தால் போதுமா? ஒரு நாழியாவது எங்களுடன் தாக்குப் பிடிக்க முடியுமா? உங்கள் மன்னர் நல்லவர். ஆனால் பயந்தவர். உங்கள் குருநாதர் மேதை, தேசபக்தர். ஆனால் தப்பு வழியில் சாதனை காண விரும்புகிறார்...

     “கடந்த ஆண்டில் முட்டத்துப் பெரியவர் அங்கு வந்த போதுதான் நீங்கள் மூவரும் சேர்ந்து இங்கு நீ செயல்படுந் திட்டம் தயாரிக்கப் பெற்று அது பிறகு ஒரு லட்சியமாகவிட்டது. அந்த லட்சியம்தான் என்ன?” என்று கேட்ட பூந்துறையார் “நானே சொல்லுகிறேன். பூந்துறையானையும், மாமன்னரையும் இணைத்துப் பிடித்து ஒரு இடத்தில் அடக்கி வைத்துக் கங்கபாடியின் சுதந்திரத்தை உறுதிசெய்து எழுதித் தாருங்கள். இல்லையேல் நாங்கள் இருவரும் உன்னால் எங்கு வைக்கப்படுகிறோமோ அங்கு தீப்பற்றியெறியும். இதற்கு உலூகான் பேருதவி புரிவான்.”

     “ஓ...! கடவுளே!” என்று பயங்கரமாகக் கத்திவிட்டான் சிம்மநாதன்.

     உலூகனோ மீண்டும் மயங்கி விட்டானோ என்னவோ... அப்படியே உட்கார்ந்துவிட்டான் தரை மீது.

     “கடவுள் அப்படியொன்றும் அடிக்கடி வரக்கூடியவரில்லை சிம்மநாதா. எங்கள் நம்பிக்கையை நீ பெற இரண்டு மூன்று மாதமானாலும் பரவாயில்லை. எப்படியாவது பெறவேண்டும். பிறகு உறுதிமொழிப் பத்திரத்தைப் பெற வேண்டும். ராஜாளியார் என்னும் வெள்ளி மயில் உன் கூட வந்துவிடும். இதுதானே நீங்கள் போட்ட திட்டம்? இது ரொம்பவும் பழைய திட்டம். பயனில்லை. நீ அன்பு காட்டினால் நாங்கள் இருவரும் ஓர் இடத்தில் சேருவது இணைவது சாத்தியமே. ஆனால் அதுவரை நாங்கள் ஏமாந்து எல்லாவற்றுக்கும் தலையாட்டுவோம் என்று எதிர்பார்த்து வந்ததுதான் தவறு. உன்னை இதற்காக அனுப்பி வைத்தது தவறு. நாளை சோழப் படைகள் புறப்படுகின்றன உங்கள் நாட்டுக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் இன்னும் அது பற்றி முடிவு செய்யவில்லை. கங்க நாட்டு மக்கள் அப்படி விரும்பும் வரை அனுப்பமாட்டேன் என்பது உறுதி. உன்னுடைய ராஜகுரு நல்ல புத்திசாலியாயிருந்தும் இந்த அடுத்துக் கெடுக்கும் தந்திரத்தைக் கையாண்டது பற்றி மிகவும் வருந்துகிறேன். எங்கள் நல்லெண்ணத்தைக் கொண்டே எங்களை வஞ்சிப்பது என்பது யார் செய்யக்கூடிய காரியம்?

     “இதற்கு மாறாக எங்கள் நல்லெண்ணத்தை நீ பெற்றால் உங்கள் நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்று உரிமையுடன் கேட்கவும் முடியுமே? அப்படிக் கொடுக்க இயலாது என்றால் உன் நாட்டு மக்களை எங்கள் ஆட்சிக்கெதிராக ரத்தக்கறை ஏற்படுத்தாமல் அறப்போர் நடத்தச் செய்யலாம். நிராயுதபாணிகள் மேல் நாங்கள் போர் நடத்த இயலுமா? உங்கள் மக்கள் மாறாக எங்கள் மேலாதிக்கத்தையே விரும்புகிறார்கள் என்றால் நீங்கள் எப்படியாவது போங்கள் என்று உங்களுடைய அந்தப் பிரபுக்களிடம் விட்டுவரலாமா? கூடாது. முடியவும் முடியாது.

     “அந்தப் பிரபுக்கள் ராவணர்கள் என்றால் மக்கள் சார்பில் நீயோ அல்லது விஜயகீர்த்தியோ விபீஷணராவதையே விரும்புகிறேன். நீயும் விபீஷணன் செய்தது சரி என்று ஒப்புகிறாய்...

     “நன்றாகச் சிந்தனை செய். நீ இளைஞன். உங்கள் குருநாதர் முதிய பிராயத்தினர். உனக்கு எதிர்காலம் இருக்கிறது. சோழர்களுடன் உனக்கு உறவு முறை ஏற்படவும் வாய்ப்புண்டு. தேவையில்லை. நான் கங்கனாகவே இருக்கிறேன் என்று நீ உறுதியாயிருப்பினும் அதில் தவறில்லை. அதை நான் வரவேற்கவே செய்வேன்.

     “ஆனால் மனம்விட்டு அனைத்தையும் நான் உன்னிடம். கூறியதற்கு ஒரே காரணம் நீ என் மனத்துக்குப் பிடித்தவனாக கூடியவரை மனோதிடம் உள்ளவனாகவே இருக்கிறாய். இது போதும். நாளடைவில் நீ பண்பட்டவனாக நிலைத்திட... புரிகிறதா? எனவே தனியாக சந்தித்துக் கூற வேண்டியவற்றையெல்லாம் கூறிவிட்டேன். நாளை முட்டத்துப் பெரியவர் வருவார். ராஜாளியாரும் நானும் வேறொரு இடத்தில் வேறு முறையில் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. வாய்ப்பு இருந்தால் நீங்களும் அங்கு இருக்கலாம்” என்று கூறிவிட்டுச் சட்டென்று எழுந்தவர் சிம்மநாதன் சகலமும் பறிகொடுத்தவன் மாதிரி நிற்பதைக் கண்டு “கள்ளமில்லையேல் கவலையில்லை, உள்ளம் தெளிவாயிருந்தால்... என்று அடிக்கடி பேரரசி அம்மங்காதேவி கூறுவதுண்டு. உனக்கு அதை நினைவூட்ட விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு, “நாளை மீண்டும் சந்திப்போம்” என்று அறிவித்து அப்பால் சென்றுவிட்டார்.

     அவர் போன பிறகு தலைவனும் ஊழியனும் தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து விட்டனர். அவர்கள் அப்புறம் சிந்தித்தார்களா இல்லையா என்று கூறுவதற்கில்லை. ஆனால் உலூகன் மட்டும் சற்று நேரம் கழித்து “தலைவரே, நாம் பூந்துறை நாயகனைப் புரிந்து கொண்ட விதமே தவறு. அவரைப் போல் ஒரு மனித உள்ளம் படைத்த உத்தமரை நான் சந்தித்ததேயில்லை என்று இப்போது உறுதியாகக் கூறுகிறேன்” என்று விளக்கியதும் சிம்மநாதன் மறுத்துக் கூறவில்லை.

     எப்படி மறுத்துக் கூற முடியும்? இதே கருத்தைத்தானே அவனும் கொண்டுள்ளான்.

     பூந்துறை நாயகன் வருகையை எதிர்பார்த்து வீரசோழனும் சோழகங்கனும் முன் வாசலில் உட்கார்ந்திருந்தனர்.

     “ஆமாம். சொல்ல வேண்டியதனைத்தையும் சொல்லிவிட்டேன். இனி அவன் பாடு, அவனுடைய குருநாதர் பாடு. ஆனால் இன்று ராஜாளியார் சிக்கியதையடுத்து முட்டத்துச் சாமியார் நம் பக்கம் திரும்பினாலும் அதிசயமில்லை.”

     “நம்முடைய இந்த புத்திமதிகளைச் சிம்மநாதன் ஏற்கவிட்டால்...”

     “இல்லை... இல்லை சோழகங்கா... எப்படியாவது அவனை மாற்றியாக வேண்டும். இளம் வயது. வீரமும் நல்ல புத்திசாலித்தனமும், சுறுசுறுப்பும் தன்னடக்கமும் நிறைந்த அவன் ஒரு பயனுமற்றவனாகி விடக் கூடாது” என்றான்.

     வீரசோழனும் இதை ஆமோதித்து “சீராகச் சிந்திக்கும் திறனுள்ளவனுக்கும் எல்லாமே நேராக அமையும் என்பது அனுபவம். பார்க்கலாம்” என்று எழுந்தான்.

     “நாளை அதிகாலை நேரத்திலேயே மும்முடியும் சோழகுலவல்லியும், சிங்கள மன்னனும் வந்துவிடுவர். எனவே இன்னும் யார் வரவேண்டுமோ... நீங்கள் சோழர் குலத்துக்குகந்தவர்கள் எவர் என்று நினைக்கிறீர்களோ, அவர்களை நாளை வரவழைத்திடுதல் நலம் என்று கருதுகிறேன் வீரசோழா. பின்பு நம்மை அழைக்கவில்லை என்று யாரும்...”

     “குறைகூறாமல் பார்த்துக் கொள்ளுகிறோம். வேளிர் தலைவர்களும் நாளை வருகிறார்கள். நரசிங்க முனியரையனை இதர எல்லாப் பெருந்தலைகளிடமும் அனுப்பியிருக்கிறேன்” என்றான் சோழகங்கன்.

     “நல்லது. அவரவர் விடுதிக்குச் செல்வோம்” என்று கூறிவிட்டுக் கரிவர்மன் நகர்ந்ததும் வீரசோழன் “நாளை மும்முடி வந்தால், அவனுடன் ஆரம்ப முதல் இறுதி வரை நீ இரு. முன் போல் இல்லை அவன். என்றாலும் நாம் இச்சமயத்தில் எந்தக் காரணம் கொண்டும் பூந்துறையாரை சிறிதளவும் வருத்துவதற்கில்லை” என்றான் வீரசோழன்.

     “அவன் பழையனவற்றை மறந்து புது ஆளாக வந்தால் மிகவும் நல்லது என்று மகிழ்வுறுவோம். மாறாக இருந்தால் தானே சங்கடமெல்லாம்? எனினும் மும்முடியைப் பற்றி நாம் முன்கூட்டியே எதுவும் தீர்மானித்து விட முடியாது. அடுத்தாற் போல ராஜாளியார் விஷயத்திலும் கவனம் தேவை. அவன் தந்திரங்களை கரிவர்மன் அறிந்தவரல்ல. இதுவரை நாமே எதையும் அறிந்தோமில்லையே” என்று வீரசோழன் கூறியதும் சோழகங்கன் தலையசைத்தான்.

     ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னை... ஒன்று போனால் மற்றொன்று...’ என்று நினைத்தபடி அப்பால் சென்றான் சோழகங்கனும்.