விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

25

     வேங்கி நாட்டில் ஏற்பட்ட குழப்பத்துக்கு எப்படி ஒரு பரிகாரத்தை அதாவது சோழர் தலையீட்டை அந்நாட்டு மன்னர் எவ்வாறு வேண்டினாரோ அதே போல ஒரு பரிகாரத்தை கங்க மன்னரும் நாடத் துணிந்தார். எனினும் மக்கள் மனோநிலை அறிய வேண்டும் என்ற அவாவினைக் கொண்டு விஜயகீர்த்தியின் உதவியை இதற்காக நாடிய போது அவரும் கிராம, ஊர் நாட்டாட்சி உறுப்பினர்களைக் கலக்க அவர்கள் “பிரபுக்களின் கொடுமையும், சேனை வீரர்களின் கெடுபிடியும் இனியும் பொறுப்பதற்கில்லை. நாடு இப்போதுள்ள ஏழ்மையினால் இன்னொரு போர் ஏற்பட்டடால் தாங்காது. எனவே இனி சோழர் உதவியை உடனடியாக நாடுவோம்” என்று துணிந்து அறிவித்தனர்.

     விஜய கீர்த்திக்கு வேறு வழியின்றி மன்னனிடம் அறிவித்தார் மக்கள் தீர்ப்பை.

     “சரி, நீங்கள் இவ்வகையில் எப்படிச் செயல்பட்டாலும் என் ஒப்புதல் உண்டு” என்று மன்னர் அங்கீகரித்து விட்டார்.

     “இங்கேயே இருந்து தோல்விச் சுமையை சுமந்து தவிப்பதைவிட சோழ நாடு போனால்தான் என்ன? இதற்குள் சிம்மநாதன் தன்னுடைய இலட்சியப் பயணத்தை ஒரு முடிவுக்குக் கொணர்ந்திருக்க முடியாது. எனவே நாமே அங்கு போய் போதும் நம் லட்சியமெல்லாம், நாடு திரும்பி புதிய நிலைக்குத் தக்கபடி நாமும் ஒத்து வாழ்வோம் என்று அவனிடம் தெரிவித்துவிட்டால் மறுக்க மாட்டான்... சோழரும் நம்மிடம் கொண்டுள்ள மதிப்புக்கு பங்கமில்லை. இனி எக்காலத்தும் சோழருடன் நமக்கும் பகையில்லை என்று உறுதிப்படுத்திட வேண்டும். சரி, நீதிமார்க்கா, நான் இவர்களுடன் புறப்படுகிறேன். புறப்படும் முன்னர் மன்னரை வந்து பார்க்கிறேன்” என்று கூறியதும் நீதிமார்க்கன் வெகு மகிழ்ந்து புறப்பட்டான் அரண்மனைக்கு.

     விஜயநந்தினியும், மோகினியும் விஜயகீர்த்தியுடன் சோழ நாடு திரும்புவதென முடிவாயிற்று.

     “தயவு செய்து நாங்கள் சவுக்கியம் என்பதையும் எங்கள் கடமையை புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளோம் என்று நீங்கள் சோழரிடம் அறிவித்தால் போதும்” என்றான் கனகன். ஆமோதித்தான் விசயன்.

     விஜயகீர்த்தி இதை ஏற்ற பிறகு மன்னரைக் கண்டு விடைபெற்று உடனடியாகப் புறப்பட்டுவிட்டார். அன்று இரவு முழுமையும் பயணம் செய்த அவர் விடியற்காலை வேளையில் சோழ எல்லைக்குள் புகுந்துவிட்டார். இடையில் அவர் சுமுகமாகப் பேசாததால் மோகினியோ, நந்தினியோ, கலகலப்பாக பேசவுமில்லை. தங்களிடையே கூடப் பேசிக் கொள்ளவில்லை.

     சோழ நாடு வந்ததும் குரங்கணி முட்டத்துப் பெரியார் பூந்துறை போயிருக்கிறார் என்று அறிந்ததும் திடுக்கிட்ட அவர், தலைநகரில் இருவரையும் இறக்கிவிட்டுப் பூந்துறை நாயகனையாவது மன்னரையாவது காணவேண்டுமானால் பூந்துறைக்காவது போயாக வேண்டும் என்ற உண்மையை அறிந்து அங்கு சென்றார்.

     அவரை வரவேற்றவர் அங்கு சிம்மநாதன் மட்டுமில்லை. முட்டத்துப் பெரியாரும், விஜயகீர்த்தியின் நீண்ட நாளைய நண்பருமான காடவர்கோனும்தான். அவரைக் கண்டதும் இருவரும் அன்பணைப்பில் கட்டுண்ட காட்சி உருக்கமாயிருந்தது.

     “நான் முதலில் மன்னரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் காடவரே. அங்கே நாடு பற்றி எரிகிறது. பிறகுதான் மற்றவையெல்லாம்” என்று அவர் படபடப்புடன் கூறியதும், “ஏற்கனவே படைகள் கங்கம் சென்றுவிட்டன்” என்றான் சிம்மநாதன்.

     “அதெப்படி...!” என்று அதிசயித்தவர் “சோழர்கள் எப்பவும் இப்படித்தான். அதுவும் பூந்துறையான் படு அவசரக்காரன். நல்லது...” என்று சற்றே நிம்மதியுடன் “நீ சவுக்கியமாயிருக்கிறாயா...? உலூகா... நீயும்தான். பெரியவரே தர்மம் கூட சில சமயங்களில் தாழத்தான் வேண்டும் என்பதற்கு நம் முயற்சி ஒரு உதாரணம். ஒரு துளி ரத்தம் சிந்தாமல் முயன்று பார்த்தோம், பயனில்லை.”

     “நாம் கொண்ட லட்சியம் சரிதான் சுவாமி. ஆனால் மார்க்கம் சரியில்லை” என்றார் முட்டத்தார்.

     “நாம் முயற்சித்தோம் அவ்வளவுதான். ஆனால் இதெல்லாம் நம்முடன் இருப்பதே இப்போதைக்கு மிக மிக நல்லது.”

     “சுவாமி, ஏற்கெனவே பூந்துறையார் அறிவார்” என்று சிம்மநாதன் கூறியதும் அவர் “அடக் கஷ்டமே!” என்றார்.

     “ஆம். பாவம்தான் செய்ய இருந்தோம், தப்பினோம்” என்றான் சிம்மநாதன்.

     காடவர் மட்டும் “இப்படியே ராஜகுருவை வெளியில் வைத்துக் கொண்டு பேசினால் மன்னர் வருந்துவார்” என்று எச்சரித்ததும்,

     “அடேடே! வந்தவுடனேயே... அவருக்கு என் மரியாதையை செலுத்த மறந்துவிட்டேனே... புறப்படுவோம்” என்று பரபரத்தார்.

     ‘பரவாயில்லை, எண்பதாண்டிலும் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்’ என்றெண்ணிய காடவர் முன்னே செல்ல பின் தொடர்ந்தனர் மற்றவர்.

     மாமன்னர், அவர் அண்ணன் மும்முடி, பூந்துறை மூவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். ராஜகுருவைக் கண்டதும் மும்முடி முன்னே வந்து “கங்க நாட்டு குரு விஜயகீர்த்தியாரே... உங்கள் வருகை நல் வருகையாகட்டும்” என்று அன்புடன் வரவேற்றதும் அவர் பெரிதும் அதிர்ந்து போய் ‘இது என்ன அதிசயம்!’ என்று நிலைத்து நின்றார் சிலையாக.

     “வாரும் ராஜரத்னா... நீண்ட காலத்துக்குப் பிறகு நாம் சந்திக்கிறோம்” என்று மன்னர் அழைத்தும் சட்டெனத் தெளிந்து “கங்கதேவியின் அருளால் தங்களுக்குச் சகல மங்களங்களும் உண்டாவதாக” என்று வாழ்த்தினார். மன்னர் சிரக்கம்பம் செய்து அதனை ஏற்றார்.

     “மாமன்னரே நடந்ததை மறந்து...” என்று ஏதோ மிக்க வேதனையுடன் குன்றிப்போய் அவர் கூறத் துவங்கியதும் “தேவையற்றதை மறப்போம். வருவதை எதிர்நோக்குவோம். ஆனால் அதுவாவது நல்லதாக இருக்கட்டும் சுவாமி” என்றார் மன்னர்.

     இதற்குள் வீரசோழன் அதிவேகமாகப் பரியொன்றில் பறந்து வந்ததைப் பார்த்த பூந்துறை சட்டென்று அவர்களைவிட்டு அப்பால் நகர்ந்து விட்டான். இவர்களும் வெளியே வந்தனர். வெளிவந்தவுடனேயே சிம்மநாதன் “குருநாதரே, நீங்கள் சொன்னபடியே அணுவளவும் பிசகாமல்தான் நடந்து கொண்டேன்” என்றான்.

     “தெரியும் சிம்மா... விதியே நம்மை எதிர்த்தால் நாம் என்ன செய்ய முடியும்? அதன் வழி போக வேண்டியதுதானே. எனவே கவலையை விடு. கடமையைச் செய்... அதுவும் பூந்துறையாரைப் போலச் செயல்படு. அது உன்னைச் சிறப்புறச் செய்யும். உன் நாடு நலம் பெறச் செய்யும்... முடிவில் லட்சியமும் தானாகவே சாதனை பெறும்” என்று கூறினார்.

     “நன்று சொன்னீர்... ஆம் இதுவே சரி” என்றார் முட்டத்துப் பெரியார்.

     ஆனால் தொலைவில் முட்டத்து ராஜாளியார் “சரி அல்ல...” என்று கர்ஜித்தது இவர்கள் காதில் விழுந்ததும். மாளிகை எதிரே இருந்த வேறு ஒரு வெட்டவெளியில் ராஜாளியார் தமது கருத்துப் பெருத்து உயர்ந்த திருமேனியை முறுக்கேற்றிய வண்ணம் பூந்துறையாரைப் பார்த்து இவ்வாறு இரைந்து சொன்னது கேட்டதும் ‘இதென்ன விபரீதம்...?’ என்று அனைவரும் அங்கே சென்றனர் வேகமாக.

     “குரங்கணி முட்டத்து ராஜாளியார் எதிரியின் மனதில் தமது தோற்றத்தினாலேயே திகிலை உண்டு பண்ணிவிடுவார். அப்புறம் அவன் எங்கே இவருடன் மல்லுக்கு நிற்பது...” என்று அடிக்கடி முன்னாள் மன்னர் குலோத்துங்கர் சொல்வதுண்டு. அதை மெய்ப்பிப்பது மாதிரி இருந்தது இப்போது அவருடைய தோற்றம்.

     மும்முடிச் சோழன், வீரசோழன், சோழகங்கன், காடவர் முத்தரையர், முனையரையர், பேரமைச்சர், ஆகிய எல்லாரும் சுற்றி நின்றாலும் அவர் குறியெல்லாம் பூந்துறையாரிடமே இருந்தது.

     மும்முடியைப் பார்த்துக் கேட்டார் ராஜாளியார்.

     “நீங்கள் சோழ நாட்டு முடியை ஏற்கா வண்ணம் செய்தவர் யார்? அப்பனுக்கும் மகனுக்கும் ஆகவொட்டாமல் செய்தது யார்? நீங்கள் என்ன நொண்டியா? முடமா? மக்கா, மட்டமா? உங்களுக்கென்ன குறை? அன்று என்னை வாய் திறக்கவிடாமல் செய்தவர் யார்? ஆத்தூர் மண்டலம், அரசூர் மண்டலம், வளத்தூர் மண்டலம் ஆகிய மூன்றும் முழுமூச்சாக எதிர்த்தோம்... உண்மையா இல்லையா காடவரே?” என்று அவர் கேட்டதும் ‘ஆம்’ என்று தலையசைத்தார்.

     “சோழ நாடு நலமாக வளமாக இருக்க வேண்டும் என்பதில் மற்றவர்களைவிட அல்ல என்றாலும் மற்றவர்களைப் போலவாவது எங்களுக்கு அக்கறையுண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா முத்தரையாரே... நீங்கள் சோழருக்கும் மூத்த குடிகள். தென்னகத்தை நெடுங்காலம் ஆண்ட பெருங்குடிகள். உங்கள் வீட்டில் ஒரு பெண் இல்லையா? விசயாலயர் எங்கே பெண் எடுத்தார்? ராசேந்திரன் எங்கே பெண்ணை எடுத்தார்? ஏன்... பழுவூரார் இன்று எரிமலை போல அடங்கி ஒதுங்கி நிற்கிறாரே. ஒரு காலத்தில் தமிழ் உலகமே நடுங்கியது அதன் பேரைக் கேட்டதும். பூதி விக்கிரமகேசரி ஒரே சமயத்தில் காஞ்சி முதல் குமரி வரை கர்ஜனை செய்தது. எங்கள் முப்பாட்டன் சிந்திய ரத்தத்தில் பயிரானது இந்தச் சோழர் குலம். முத்தரையர் இல்லையேல், ராஜாளியார் இல்லையேல், காடவரே நீங்களே கூறுங்கள். இந்தக் காவிரியில் கொள்ளை கொள்ளையாக ஓடிய செங்குருதி வெள்ளம் சோழர்களுக்காகப் பாய்ந்து வந்து நீத்த உயிர்கள் யாருடையது...? சொல்லுங்கள் காடவரே. கொள்ளிடத்துக் கரையிலே கூண்டுக்கிளி போல வீடு கட்டி வாழ்ந்தோம் நாங்கள். அப்போது பேராசைப்பட்டோமா? மாடமாளிகை அடுத்து அரைக்காதத்தில் உருவாயிற்று. அதைச் சமைக்கக் கல்லுடைத்தோம், சுண்ணம் கூட்டினோம். கல் நாட்ட ஒரு வீர உயிர் வேண்டும் என்ற போது எங்கள் பாட்டன் தம் உயிரே நல்லுயிர் என்று வாளை வீசி வீரமரணமுற்றது யாருக்காக? நியாயம் எல்லாருக்கும் பொது. அது ஒரு தனி மனிதன் சொத்தல்ல. அந்த நியாயம்தான் நமக்கு தேவை. சந்தர்ப்பத்துக்காக அதை நம் விருப்பம் போல திருப்புவதற்கில்லை.

     “ஐந்து ஆண்டுகளுக்கு முன்னே நான் சொன்னதைத்தான் இன்றும் சொல்லுகிறேன். முதல் தவறு முடிசூட்டுதலில் துவங்கி இன்று மன்னருக்குப் பெண் எடுப்பதில் அது விசுவரூபம் எடுத்திருக்கிறது. எல்லாரும் வந்திருக்கிறோம். என் வழக்கைக் கூறிவிட்டேன். தீர்ப்பு எப்படியிருப்பினும் நான் மாறப்போவதில்லை. அதற்குரிய எத்தகைய தண்டனையை வேண்டுமானாலும் ஏற்கத் தயார்” என்று முழக்கம் செய்ததும் பெருந்தலைகள் குறிப்பாக முதியவரான பெரும்பிடுகு முத்தரையர் செய்வதறியாது திகைத்தனர்.

     கொடும்பாளூரர் எப்போதுமே சட்டென்று ஒரு முடிவுக்கு வருபவர். அவரும் வாயடைத்து நின்றார். யாரும் வெளிப்படையாக அவரை எதிர்க்கவில்லை. எனவே மூத்த இளவரசன் மும்முடியே முன்னே வந்தான் பதில் கூற.

     “முட்டத்து ராஜாளியாரே, நீங்கள் செய்த முழக்கம் சரியா தவறா என்று நான் கூறப் போவதில்லை. தவிர முத்தரையர் குலம் மூத்தகுடியில்லையென்றோ ராஜாளியார் ரத்தம் சோழருக்காகச் சிந்தவில்லையென்றோ எந்த முட்டாளும் கூறமாட்டான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மூன்று குறைகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவரை விளக்குகிறேன். ஏற்பதோ எறிவதோ பெரியோர் பொறுப்பு” என்று கூறிவிட்டு தன்னைச் சுற்றி நிற்பவர்களைப் பார்த்தான்.

     முன்கோபி, மூர்க்கன், துடுக்குக்காரன் என்று பெயரெடுத்த மும்முடி இல்லை அவன். கடந்த ஐந்தாண்டுக் கால கடல் ஓடிய அனுபவம் காரணமாகப் பக்குவம் பெற்ற பண்பாளனாகப் பேசினான்.

     “பட்டத்துக்குரிய மூத்தவன் முடிசூடவில்லை என்ற வாதம், நான் அதை ஏற்கத் தயாராக இல்லை என்ற முதல் முடிவுதான் காரணமேயன்றி வேறெதுவுமில்லை. இதைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவன் ஒரு அன்னியன், சாவகன். ராஜாளியார் தவறான கருத்தை தவறான இடத்தில் தொடுப்பது முழுத்தவறு. அதற்கெல்லாம் பணிந்து விடமாட்டான் இந்த மும்முடி என்பதை அவர் மறந்துவிட்டார். மூன்றாவதாக இன்றைய மன்னர் மணம் சம்பந்தமான பிரச்னை. முதலில் இதற்கு என்னிடம்தான் ஒப்புதல் பெறப்பட்டது.”

     “ஆ...! உங்களிடமா? அதெப்படி சாத்தியம்? நீங்கள் கடலோடியிருந்தீர்கள்.”

     “உண்மை. அங்கு கடல்நாடுடையார் ஆகவமல்லர் வந்து எழுத்து மூலமாக ஒப்புதல் பெற்று இன்று அது ஆவணத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறது. எமது தந்தையார் காலத்தில் ஏற்பட்ட உறவை உறுதிப்படுத்திக் கொள்ளவே இந்த சம்பந்தத்தை உருவாக்கினோம். எனவே இதில் யாரும் கசப்படைவதற்கில்லை. தவிர அரசகுல உறவு என்றில்லாமல் எங்கள் சகோதரி ராஜசுந்தரியை வண்டையூர்த் தொண்டைமான் மகனுக்குக் கொடுக்க உறுதிப்படுத்தியுள்ளோம்...”

     “ஆ...! உண்மையாகவா...?”

     “ஆமாம் ராஜாளியாரே. இவன் இன்று வடமண்டல மகாசேனாதிபதியாக வேங்கி சென்றிருக்கிறான்.”

     “அப்படியா? இது உண்மையில் ஒரு மதிப்பான பாராட்டத்தக்க ஏற்பாடே...”

     “ஆம். இதுவும் பூந்துறையார் ஏற்பாடுதான்.”

     “உம்...” என்று உறுமினார் ராஜாளியார்.

     “இப்போது சொல்லுங்கள் ராஜாளியாரே. நாங்கள் யாரை அலட்சியம் செய்து விட்டோம்? எவரைக் கேவலப் படுத்தினோம்? நீங்கள் எங்களுக்குச் சரியான சமயத்தில் உதவாமல் ஒதுங்கியிருந்ததைக் கூடப் பொருட்படுத்தாதிருந்தோம். நானே பழைய மும்முடியாயிருந்தால் நிலைமை வேறாயிருக்கும்” என்று கூறிச் சிரித்தான். ராஜாளியார் பதில் பேசவில்லை.

     காடவர் இதுதான் சமயம் என்று இடையே புகுந்து “எனக்கு ஒரு யோசனை. மனிதன் பண்பட வேண்டுமானால் சிறிது காலம் கடல் ஓடினால் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். நீ என்ன கூறுகிறாய்?” என்று நேரடியாகவே கேட்டதும் ‘ஐயோ! வந்தது ஆபத்து. மும்முடி பாயப் போகிறான்’ என்று எல்லாரும் சற்று விலகி அதற்கு இடமும் அளித்தார்கள்.

     ஆனால் அவன் பகபகவென்று சிரித்துவிட்டு “பாட்டா, நீங்கள் எவ்வளவு தூண்டினாலும் சீண்டினாலும் பழைய மும்முடி புத்துயிர் பெறமாட்டான். அது நிச்சயம். அடுத்து ஒரு யோசனை சொன்னீர்களே. அது உண்மையிலேயே மிகவும் நல்லதொரு யோசனை. நிச்சயம் யோசித்துச் செயல்படுத்த முயற்சிக்கலாம். ஏனென்றால் நடுக்கடலில் வானமும் பூமியும் ஒரே நீராக நீலமயமாக இயற்கையின் முழுப் பொருளையும் சிறப்பையும் சக்தியையும் நமக்கு எடுத்துக் காட்டிவிடுகிறது. எனவே அது உண்மையிலேயே ஒரு பெரிய தெய்வீகமான இயற்கைப் பல்கலைக் கழகம் என்று கூடக் கூறிவிடலாம். அதில் படிப்பது பயிற்சி பெறுவது ஒரு தனி அனுபவத்தை வாழ்க்கையின் அடிப்படையான அனுபவத்தைக் கொடுக்கிறது என்று கூறிவிடலாம்” என்றதும் மற்றவர்கள் தலையாட்டினர்.

     “கடல்நாடுடையார் மிகவும் அனுபவசாலியாக விளங்கியதற்கு இது... அதாவது இந்தக் கடல் ஓடும் பழக்கம் ஒரு பெருங்காரணம் என்பதை நானே அனுபவப் பூர்வமாக இப்போதுதான் அறிய முடிந்தது. அது கிடக்கட்டும் ராஜாளியாரே, நமது வழக்கு முடிந்துவிட்டதல்லவா?”

     “வழக்கு மாறவில்லை. ஏனெனில் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை” என்று அவர் மறுத்ததும் அவன் ‘இதென்ன புதிய பிரச்சனை?’ என்று விழித்துவிட்டு சற்றே நின்றான் செயலற்று.

     இதுகாறும் சற்று எட்ட நின்றிருந்த வீரசோழன் இப்பொழுது முன்னே வந்து “ராஜாளியாரே, நீங்கள் மனதில் எதெதையோ கற்பனை செய்து என்னவெல்லாமோ பேசுவது உங்கள் குலகவுரவத்துக்கு உகந்ததல்ல. மும்முடி சொல்ல வேண்டிய அனைத்தையும் கூறிவிட்டான். அதை ஒதுக்கிவிட்டு நீங்கள் மீண்டும்...”

     “இல்லை இளவரசே. நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறியதையே இன்றும் இன்னும் வலுவாகக் கூறுகிறேன். சோழர் குலம் சோழ நாட்டுப் பெருங்குடிகளுக்கு, மக்களுக்குத்தான் கடமைப்பட்டுள்ளது. எனவே அன்னியர் தலையீட்டை ஏற்க அவர்களுக்கு உரிமையில்லை.”

     “ராஜாளி, நீ பேசுவது சரியல்ல. இது ஒரு குடும்ப விஷயம். பூந்துறையார் இன்று...” என்று குறுக்கிட்டார் காடவர்கோன்.

     “உங்கள் பேத்தியின் கணவன் என்ற உறவில் உள்ள உரிமையை நான் மறுக்கவில்லை காடவரே. ஆனால் காலங் காலமாக இருக்கும் பிரமாதிராயர் குலம், வேட்டரையர், நீங்கள் இல்லையா இன்றைய மன்னருக்கு ஆலோசனை கூற... வீரர்களான சகோதரர்கள் இல்லையா?”

     “இல்லையென்று யார் சொன்னது. நாங்கள் எல்லாரும் இப்போதைக்குப் பூந்துறையார் எல்லாவற்றையும் செய்து உதவட்டும் என்று அனுமதித்திருக்கிறோம், அவ்வளவுதான்” என்றார் பெரும்பிடுகு.

     “ஐயா பெரும்பிடுகு, நீங்கள் வயதில் மூத்தவர். உறவில் அறிவில் அனுபவத்தில் பெருமையில் எல்லாவற்றிலுமே மூத்தவர். ஆனால் நான் இதற்காக நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்று ஒப்புக்கொண்டு விடுவதற்கில்லை” என்று சொன்னதும் அவரும் ‘சரி, இவனை யாரும் மாற்ற முடியாது’ என்று முடிவு செய்து மவுனமானார்.

     சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. இடையே அரண்மனைக்குள்ளிருந்து மன்னரும், பூந்துறையாரும் வெளியே வந்ததும் இரு புரவிகள் தயாராகக் கொண்டு வந்து நிறுத்தப் பெற்றது.

     மாமன்னர் கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்துவிட்டு அங்கு வந்ததும் அனைவரும் மரியாதையாக ஒதுங்கி நிற்க ராஜாளியாரைப் பார்த்து “நலமா ராஜாளியாரே?” என்று கேட்டதும் சட்டென அவர் முறைப்படி வணங்கி “நலம்தான். இறைவன் தங்களுக்கு நலம் அருள்வாராக” என்றார் யந்திரம் போல.

     விக்கிரமன் ராஜாளியாரின் நிலையைப் புரிந்து கொண்டவன் போலத் தன் அண்ணனை நோக்கி “நானும் பூந்துறையாரும் புகலூர் சென்று திரும்புகிறோம்” என்று கூறிவிட்டு அனைவருக்கும் தலையசைப்பின் மூலம் விடைபெற்றுத் திரும்பியவர் செவியில் “ஒரு விஷயம் மாமன்னரே” என்ற குரல் கேட்டதும் சட்டென்று பார்த்தார் ராஜாளியாரை.

     “இங்கு எங்களுக்குள் ஒரு பெரும் பிரச்னை. சோழ மன்னன் அன்னியன் ஆலோசனைகளை ஏற்பதைக் காட்டிலும் ஒரு சோழன் பேச்சினை ஏற்பதே பொருத்தம் என்பது என் கட்சி. அதற்கு உங்கள் கருத்து தேவை” என்றார் துணிச்சலாக.

     மன்னர் திகைத்தார். மற்றவர்களும்தான்.

     “நாம் எல்லாருடைய யோசனையையும் கேட்டு முடிவாக நம் மனச்சாட்சி கூறுகிறபடிதான் நடப்போம் என்பதை அனுபவப் பழமான நீங்கள் அறிந்ததுதானே” என்றான் மிக நிதானமாக.

     “ஆமாம்... இது ஐந்தாண்டுகளுக்கு முன்வரை. இப்போதில்லை. அன்று பேரரசி இருந்தார் தன் மகனுக்காக. இன்று யாரும் இல்லை.”

     “ஏன் இல்லை... எங்கள் அண்ணன்மார், நீங்கள் மற்றும்...”

     “எல்லாரும் மூலையில் ஒதுக்கப்பட்டு விட்டனர். இனியும் இந்த நிலைமை நீடிப்பதற்கில்லை. ஒரு அன்னியன் அவர் என்னதான் காடவர் குலப்பெண்ணை மணந்திருந்தாலும்...”

     “நிறுத்துங்கள் ராஜாளியாரே. நீங்கள் இனியும் இப்படி விஷம் கக்கினால் என்னால் பொறுக்க முடியாது” என்று கர்ஜித்தபடி முன்னே வந்து அவர் தோள் மீது கைவைத்தான் மும்முடி.

     அவர் திடுக்கிட்டார். தன் மீது கை வைத்தது யார்? தான் காலமெல்லாம் ஆதரித்து நிற்கும் சோழராயிற்றே.

     “அவர் நீங்கள் நினைப்பது போல் அன்னியர் அல்ல. எங்கள் அளவுக்குச் சோழர்தான் அவரும்” என்று அவன் முழங்கியதும் ராஜாளியார் திடுக்கிட்டு அவனை வெறிக்கப் பார்த்தார்.

     ‘மும்முடியா இப்படிப் பேசுவது?’

     “தேவையில்லாத விவரங்களைத் தயவு செய்து இப்போது சொல்லி எனக்காக அனுதாபத்தையோ அன்பையோ அவரிடமிருந்து வரவழைக்க வேண்டாம் மும்முடி” என்று கூறிக் கொண்டே பூந்துறையார் வந்ததும் கூட்டத்தினர் நடுங்கிவிட்டனர்.

     “இனி சமரசத்துக்கு வழியில்லை. ராஜாளியார் தமது வரம்பை மீறிவிட்டார். எனவே வருவதை அவர் அனுபவித்தே தீரவேண்டும்” என்று முணுமுணுத்தான் வீரசோழன்.

     தன் எதிரே சிங்கம் போல் வந்து நின்ற பூந்துறையானைக் கண்டதும் ராஜாளியாரும் வெகுண்டெழுந்த வேங்கை போலக் கிளர்ந்தெழுந்து நின்றார்.

     காடவர்கோன் இதைக் கண்டதும் இனியும் சும்மா இருப்பின் இருவரும் மோதுவர். ராஜாளியை இழப்பதால் சோழ நாட்டில் இன்னும் பூந்துறையான் மேல் ஆத்திரம் கூடுமே அன்றி குறையாது. எனவே “வாரும் முத்தரையரே, நீங்கள்தான் எங்களில் மூத்தவர். இவர்களிடையே நாம் நிற்போம். நம் இருவரையும் இவர்கள் தீர்த்த பிறகுதான் தங்களுக்குள் மோத வேண்டும்” என்று முன்னே நடக்க முத்தரையரும் அவரைத் தொடர்ந்து குறுக்கே நின்றுவிட்டார்.

     ராஜாளியார் இருந்தாற்போலிருந்து “ஓகோ!” என்று ஆங்காரத்துடன் சிரித்துவிட்டு “ப்ளா... பளா...! பெண்பிள்ளை கூட வீரமாகப் புலியை விரட்டிப் போராடும் நாடு இது. ஒரு ஆண்பிள்ளை சிங்கத்துக்கு உயிர்ப்பிச்சை கொடுக்க இரண்டு மாபெருந்தலைகள் முன்வந்து நிற்கின்ற கேவலத்தை என்னவென்பது?” என்று எள்ளி நகையாடியதும் “காடவரே, தள்ளுங்கள் சற்று அப்பால். மாமா முத்தரையரே உங்களையும்தான்” என்று புலி போலப் பாய்ந்தான் மும்முடி ராஜாளியார் மீது.

     ஆனால் அசையவில்லை. தன்னைத் தாக்க வந்த சோழனையும் எதிர்க்கவில்லை.

     “நாங்கள் ரத்தஞ்சிந்தி வளர்த்த பரம்பரை இது. எனவே இளவரசே நீங்கள் கொன்றாலும் சரி, நான் உங்கள் மீது கை வைக்கமாட்டேன்” என்று இரு கைகளையும் மார்பு மீது கட்டிக் கொண்டு அவர் கம்பீரமாக நின்றதும் அவனும் திகைத்து அப்பால் நகர்ந்தான்.

     மீண்டும் வாய்விட்டுச் சிரித்தார் ராஜாளியார். அது சிங்க கர்ஜனையாகவே இருந்தது.

     பூந்துறையான் சற்று முன்னே வந்து “தயவுசெய்து எல்லோரும் அப்பால் நகர்ந்து நில்லுங்கள். அவர் இந்த அன்னியனை என்னவெல்லாம் செய்து கொள்ள விரும்புகிறாரோ அதையெல்லாம் செய்து கொள்ளட்டும், தயவு செய்யுங்கள்” என்று உள்ளூரக் குமுறும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவர் எதிரே போய் சர்வசாதாரணமாக நின்றான்.

     “ராஜாளி, என் பேச்சைக் கேள். நீ பூந்துறையானுடன் பொருதி உயிரை இழப்பதை நான், நாங்கள், இந்தச் சோழ நாடு அனைத்தும் விரும்பவில்லை” என்றார்.

     “சோழ குலமும் விரும்பவில்லை” என்றார் மாமன்னர்.

     மீண்டும் பயங்கரமாகச் சிரித்த ராஜாளியர் “நான் செத்துவிடுவேன் என்றால் அது இந்த அன்னியன் மூலம் இல்லை... எங்கே கரித்தடியா... வீரமிருந்தால் நீ வா... உம்” என்றார்.

     அவன் நகரவில்லை. சிரித்த மாதிரியே இருந்தது அவன் முகம் சற்றும் மாறாமல்.

     “சிரிக்கிறாயா? இதோ... இதை வாங்கிக்கொள்” என்று பாய்ந்தார் அவன் மீது...

     “ஐயோ...!” என்றலறி வீழ்ந்தார்.

     மீண்டும் எழுந்தார். “பாவி! ஏதோ இரும்புத் தடியால்...” மீண்டும் பாய்ந்தார் முன்னைவிடக் கோரமாக. ஆனால் “ஐயையோ!” என்று அலறி அப்பால் போய் வீழ்ந்தார். அவ்வளவுதான். மீண்டும் எழவில்லை அவன் மீது பாய.

     “தயவு செய்து எவரும் தவறாக நினைக்கக் கூடாது. எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்குப் பொறுத்தேன். அவர் மேலும் மேலும் கேவலமாகப் பேசினார். எனவே நான் நின்றேன் வலுவாக. என்னுடைய முழங்கையில்தான் அவர் மூன்று முறை பாய்ந்தார். அதன் பலன் இதுதான். இன்னும் ஒரு நாழிகையில் அவர் தெளிந்தெழுவார்... நாம் புறப்படலாமா?”

     அவன் மன்னரை எதுவுமே நடக்காதது போலப் பார்த்தான். மன்னரும் இந்த நிகழ்ச்சியால் சற்று அயர்ந்து விட்டதால் “சற்றுப் பொறுத்துப் புறப்படுவோம்” என்று கூறிவிட்டுக் கீழே கிடந்த ராஜாளியைச் சுமந்து செல்லும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

     சட்டென கரிவர்மன் அப்பால் செல்ல, காடவர் சற்று நகர்ந்து நின்று “விக்கிரமா, நான் இப்போது சொல்லப் போவது நம் குடும்ப சம்பந்தமானது. அதனால்தான் உன்னுடைய பெயர் சொல்லி அழைக்கிறேன். நம்முடைய இந்தப் பூந்துறை மர்மம் இனியும் நீடிப்பது நியாயமில்லை. வீரபராக்கிரமனே நீயும் இதை மறுக்காதே. உடன் மாமன்னர் பெயரில் உன்னைப் பற்றிய உண்மை வெளியாகட்டும்” என்றார்.

     யாரும் மறுக்கவில்லை.

     மாமன்னர் சட்டெனத் துணிந்து “இனியும் ஊகம், தயக்கம் எல்லாம் நீண்டு கொண்டே போனால் என்றைக்குமே நாம் எந்த முடிவுக்கும் வரமாட்டோம். பிறகு ராஜாளியார் என்ன, ஒரு சாதாரண சோழப் பிரஜை கூட இப்படி எடுத்தெறிந்து பேசலாம். பூந்துறையாரை அவமதித்தால் அது நமக்கு, நம் குடும்பத்துக்குப் பேரவமானம். எனவே பேரமைச்சர் அவர்களே, இன்னும் சிறிது நேரத்தில் நாம் பெருந்தலைவர்கள் யாவரும் அறியும் வண்ணம் ஒரு பிரகடனம் அனுப்புவோம்” என்று கூறியதும் அவர் “அப்படியே” என்றார்.

     மும்முடி மகிழ்வுற்றான். அவர் மட்டுமில்லை, எல்லோருமே ஏதோ பெரிய கவலை நாட்டைப் பிடித்த ‘வம்பு’ உடனடியாக நீங்கிவிடும் என்று மகிழ்ந்தனர்.

     “வீரசோழா, நீ பொறுமையில் தருமர் என்றால் உன் தம்பி அதற்கு மேல் இருக்கிறான். காலம் மாறும் போது நாமும் மாறித் தொலைக்க வேண்டாமா? நாம் மர்மம் அது இது என்று தாமதித்தால் அப்புறம் பாரதக் கதையில் வரும் கர்ணன் நிலைமை பூந்துறையானுக்கும் வந்துவிடும். புரிகிறதா? நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது” என்று தம்பிகளின் தோள் மீது கைபோட்டுக் கொண்டு மும்முடி நகர்ந்ததும் மாமன்னர் “பாட்டா, சில சமயங்களில் இந்த ராஜபதவி என்னை நம் குடும்பத்திலேயே அன்னியன் ஆக்கிவிடுகிறது. அண்ணன் மும்முடி புதிய மனிதனாகத் திரும்பியிருப்பதை, அவருடன் கலந்து மகிழ நான் விரும்பினால் பதவி எங்களைப் பிரித்து விடுகிறது” என்று சொன்னதும் காடவரும் பிடவூராரும் ‘பாவம்! இப்படியும் ஒரு குறை. மன்னனாயிருந்தாலும் அவனும் மனிதன்தானே’ என்று எண்ணினர்.