உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 26 குரங்கணி முட்டத்து ராஜாளியார் சோழர் குலத்தின் பெருமையில் குன்றிமணியளவும் குன்றா உறுதி கொண்ட குலத்தினர் என்பதில் சந்தேகமேயில்லை. எனவேதான் ஏனைய பெருந்தலைகள் அவருடைய கெடுபிடி வம்புகளை எதிர்க்காமல் தளர்ந்து நின்றார்கள். ஆனால் மாமன்னர் பிரகடனம் அவர் கைக்கு வந்ததும் அதைத் தமது ஓலை நாயகத்தைவிட்டுப் படிக்க சொன்னார். இன்னும் அவரால் எழுந்து நடமாட முடியவில்லையாயினும், முந்தின நாளைப் போல அவ்வளவு மோசமான நிலையில் இல்லை அவர் உடம்பு. “ஆள் அசாதாரணமான பலசாலிதான். அதெப்படி எஃகு மனுஷன் மாதிரி என்னை எதிர்த்து அசையாது நிற்க முடிந்தது அவனால்... அதுவும் இந்த ராஜாளியின் மோதலைத் தாங்க இந்தச் சோழ நாட்டில் ஒரு பிராணியும் இல்லை என்ற நிலையைப் பொய்யாக்கி விட்டானே அவன். ஒருவேளை ராஜேந்திர சோழர் இருந்தார் என்றால் நம்பலாம். குலோத்துங்கர் இருந்தார் என்பது நமக்கே நேரில் தெரிந்த உண்மை. எங்கேயிருந்தோ அவருக்கு மெய்க்காவலாக வந்த இவன் இன்று சோழ நாட்டையே தன் விருப்பப்படி ஆட்டி வைப்பதென்றால்...” நேற்று அவர் பூந்துறையாரிடம் மோதிய மோதலாக உடலில் வெளிப்படையாகக் காயங்கள் இல்லாவிட்டாலும், உள்ளூர எலும்புகள் சரியாயிருக்கின்றனவா என்ற சந்தேகம் இன்னும் அவருக்கு தீர்ந்தபாடில்லை. எனினும் மன்னர் தமது பிரகடனத்தை ஒரு மெய்யுதவி மூலம் அனுப்பியுள்ளார் என்றறிந்ததும் எழுந்தவர் ஓலைநாயகத்தைப் பார்த்தார். “சோழ சாம்ராஜ்யப் பேரரசர் பரராஜகேசரி விக்கிர சோழ திரிபுவன சக்கரவர்த்திகள் இப்பிரகடனத்தின் மூலம் சோழர் குலத்தின் நலமே தம் நலமாகக் கருதும் தமிழ்நாட்டுப் பெருங்குடிமக்களுக்கு அறிவித்துக் கொள்வது யாதெனில், இன்று சோழப் பெருநாட்டின் பேரமைச்சருக்கு ஈடாக மதிக்கப் பெற்று பேரரசரின் உடன் கூட்டம், ஆட்சிக்குழு இரண்டிலும் முதற் பதவி வகிப்பவராகிய பூந்துறை நாட்டு மண்டலாதிபதியான வீர பராக்கிரம சோழரைப் பற்றிய உண்மை விவரங்கள் நாளது வரை காலஞ் சென்ற மாமன்னர் குலோத்துங்கர் விருப்பப்படியும், தற்போதுள்ள பூந்துறையார் விருப்பப்படியும் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெருந்தலைகள் பலரும் இம்மர்மங்கள் வெளியாவதில் இனியும் தாமதமேற்படுவதை விரும்பவில்லை. தவிர பூந்துறையாரிடம் வற்புறுத்தி அனுமதி பெற்று அவர் பற்றிய உண்மைகளைப் பகிரங்கப்படுத்த மாமன்னர் இப்பிரகடனம் மூலம் உறுதிப்படுத்துகிறார். “பூந்துறை நாயகனான வீரபராக்கிரம சோழர் காலஞ் சென்ற மாமன்னர் குலோத்துங்க சோழருக்கும், அவருடைய முன்னாள் மனைவி சம்பா நாட்டுப் பொன்னகர்ச் செல்வி அவர்களுக்கும் பிறந்த வீரச் செம்மல்...” “என்னது... என்னது?” என்று பதறியெழுந்தார் ராஜாளியார். “மீண்டும் படியும் ஐயா” என்று பதறிப் போய்க் கத்தினார். பயந்து விட்ட ஓலைநாயகம் மீண்டும் அதையே படித்துவிட்டு “சாவகர்கள் சம்பா நாட்டை அழித்த பின்னர் அந்நாட்டிலிருந்து வெளியேறிய பொன்னகர்ச் செல்வி, அவளுடைய தந்தை, தாய், பாட்டன் முதலியவர்களை எப்படியாவது பிடித்துக் கொல்ல வேண்டுமென்று முயன்றனர். ஆனால் இவர்கள் அவர்கள் கையில் சிக்கவில்லை. எனினும், மீண்டும் இவர்களை நம் மாமன்னர் சந்திக்க இயலவில்லை. காலம் ஓடியது. பொன்னகர்ச் செல்வி வயது வந்த தமது மகனிடம் தன் கணவரின் வாளையும், சின்னத்தையும் கொடுத்து சோழ நலமே தனது நலமாக்க கருத வேண்டும் என்ற உறுதியை மகனிடமிருந்து பெற்றுக் கொண்டு உயிர்த் தியாகம் செய்து கொண்டாள். பொன்னகர்ச் செல்வி என்னும் நம் மாமன்னரின் அன்பு மனையாள் பெற்ற அருந்தவச் செல்வனான வாலிபன் வீரவர்மன் தாய் வழியிலும் மிகப் பிரபலமான பத்திராவர்ம மகாராஜாவின் வழி வந்தவன். எனவே சாவகர் மீண்டும் எங்கே அந்தச் சம்பா தலையெடுத்துவிடுமோ, தாம்பூஜம் புத்துயிர் பெற்றிடுமோவெனப் பயந்து எப்படியாவது இந்த வீரவர்மனை ஒழித்துக் கட்ட முனைந்தனர். எனினும் சீனக்கடலோடிகள் மூலம் உயிர் தப்பி சோழ நாடு சேர்ந்துவிட்ட வீரவர்மன் கடல்நாடுடையார் ஆதரவில் இருக்கும் போது மன்னர் உண்மையறிந்தார். ஆயினும் பகிரங்கப் படுத்தவில்லை. பேரரசி அம்மங்காதேவி இதை விரும்பவில்லை. சாவகப் பிரதிநிதியாக வந்தவன் இவரை இருமுறை கொல்ல முயன்றான். இயலவில்லை. பிறகு நம் மாமன்னரையே தாக்கி அவர் இறந்தால் பழியை இவன் மீது போடவும் முயன்றனர். அதுவும் இயலவில்லை. ஆனால் விஷக்கணைகளால் தாக்குண்ட வீரவர்மன் கடலில் எறியப்பட்டான். ஆயினும் கடல்நாடுடையார் முன் யோசனை காரணமாக குற்றுயிரும் குலையுயிருமாக இவர் பூந்துறைத் தீவுகள் ஒன்றில் மதுராந்தக மூவேந்த வேளார், பல்லவராயர் மூலமாக (இவர்கள் அப்போது நங்கவரம் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தனர்) பாதுகாக்கப்பட்டு உயிர் திரும்பியது, பிழைத்தது உண்மை. ஆனால் உடலில் தங்கிய கருநாக விஷம் காரணமாகவோ என்னவோ கரிவர்மனாக மாறிவிட்டார். பிறகு மீண்டும் சோழ நாட்டுக்கு ஆபத்து, சோழ மாமன்னருக்குச் சாவகர்களால் ஆபத்து என்று அறிந்ததும், ஆபத்துதவியாக வந்து குதித்தவர் நம்மை ஊடுருவி வந்த எதிரிகளை விரட்டி அழிப்பதில் பெரும் துணிச்சலுடன் செயல்பட்டார். மன்னர் இவர் முன்பே இறந்துவிட்டார் என்று நினைத்திருந்தார். பேரரசி அம்மங்காதேவியும் அவ்வாறே நம்பியிருந்தார். ஆனால் அப்படியில்லாமல் இவர் உயிருடன் திரும்பியதும் சோழ நாட்டுரிமைப் பங்காளி வந்துவிட்டானே என்றும் கூட மனதில் மருட்சி கொண்டனர். எனினும் கரிவர்மர் தமக்குத் தேவை சோழர் நலமேயன்றி சோழர் பட்டமோ, முடியோ, நாடோ அல்ல என்று ஆணையிட்டு அறிவித்ததும் மாமன்னர் அயர்ந்து விட்டார். பிறகு நடந்தது இப்போதைய மக்கள் யாவருக்கும் தெரியும். மூத்த மகன் மும்முடி கடல் நாடு சென்றார். மற்ற இரு சோழ இளவரசர்களும் உடன் கூட்டமும், ஆட்சிக் குழுவும், நாட்டு மக்களும் என்னைப் பட்டமேற்கச் செய்தனர். ஏற்றோம். எனினும் எமது நிபந்தனை ஒன்றையும் எல்லாரும் மனமுவந்து (உண்மையறியாத ஒரு சிலர்- ராஜாளியார் போன்றவர்கள்) ஏற்றனர். அதாவது பூந்துறை நாட்டு வீர பராக்கிரம சோழர் எம்முடைய முதல் ஆலோசகராகவும் செயலாற்றும் சக்தியாகவும் இருப்பர் என்று முடிவு செய்ததை யாரும் இன்று வரை எதிர்க்கவில்லை. எனவே இப்போது எல்லோருடைய கருத்துக்கும் இணங்க நாம் இப்பிரகடனம் மூலம் வெளியிட்ட உண்மைகளை அறிந்து கொள்ளும் பெருங்குடியினர், பெருந்தலைகள் யாவரும் இனி ஒரு அணுவளவும் பூந்துறையாருக்கு அவமதிப்பூட்டும் படியான சொற்களைக் கூறவோ, செய்கைகளைச் செய்யவோ மாட்டோம் என்று உறுதி கொள்ளும்படி இப்பிரகடனம் கோருகிறது. மீறி நடக்குமாயின் அது அரசரையே அவமதித்ததற் கொப்பாகும் என்பதையும் இப்பிரகடனம் அறிவிக்கிறது.” ஓலைநாயகம் தமது நடுங்கும் குரலில் இதைப் படித்து முடித்ததும் ராஜாளியார் நீண்டதொரு பெருமூச்சுவிட்டார். பிறகு நிதானமாக “ஏனய்யா ஓலைநாயகம், நான் ஏன் அப்படி மூர்க்கனானேன்? உண்மை எதுவும் தெரியாததனால்தானே?” என்று கேட்டார். “ஆமாம். ஆனால் அரசர் அரச குலம் சம்பந்தப்பட்ட பெரும் ரகசியம் ஒன்று...” என்று கூறி சற்றே தயங்கினார். “ஆமாம். நான் சற்று நிதானித்துக் காடவரையோ வேறு யாரையோ நாடிப் புரிந்து கொள்ள முயன்றிருந்தால் இன்று நான் இவ்வளவு ‘அன்பனாக’ மாறியிருக்க வேண்டியதில்லையல்லவா?” “அதுவும் சரிதான். ஆனால்...” “சரி சரி... நீர் பக்கமேளம் வாசியும், ‘ஐயா ஆமாம்... ஆனால் என்று...’ போய்... ஒரு சிவிகையைக் கொண்டு வரச்சொல்லும். மன்னரிடமும், பூந்துறையாரிடமும் மனம்விட்டுப் பேசி மன்றாடிவிட்டு வந்தால்தான் நிம்மதியுண்டாகும்” என்றார். ஓலை நாயகம் தம்மை இத்துடன் விட்டால் போதும் என்று ஓடினார். சிவிகை வந்ததும் மிக்கச் சிரமத்துடன் அதில் அமர்ந்த ராஜாளியார் மனம் ஒரு நிலையில்லாமல் பலவகையிலும் ஓடியது. ஆனால் தனக்கு உரிமையிருந்தும் தேவையில்லை என்று உதவும் தியாகம் அதுவும் இப்பேர்க்கொத்த உரிமையை... அவரால் மேலே சிந்திக்கவும் இயலவில்லை. அப்படிப்பட்ட தியாகியையா நாம் கேவலப்படுத்தி விட்டோம் என்று உள்ளூரக் குமைந்து போனார் பாவம்! |