விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

27

     கலை மாளிகையில் அப்போது வல்லபியைத் தவிர யாரும் இல்லை. வேலைக்காரி கூட இல்லை. தன்னந் தனியாக இருந்தாள் அவள். எனவே அவள் மனதில் ஆயிரமாயிரம் சிந்தனைகள் மாறி மாறித் தோன்றி அவளை ஒரு கலைமகள், அதுவும் ஒரு கூத்துப் பெண்ணாக இருந்ததாகவே உலகம் கருதுகிறது. இதுவும் ஒரு வேடம் என்று பலருக்குத் தெரியாது. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலருக்கே தெரியும்.

     தன் வாழ்க்கை எங்கு துவங்கி எங்கு முடிகிறது என்று ஆராய்ந்து பார்த்தாள். பல காலத்துக்கு முன்னர் அவள் மனம் ஓடியது.

     ஒரு வணிகக் கப்பல் ஐந்துறைத் தீவுகளில் வந்து நிற்கிறது. அதிலிருந்து நாலைந்து பேர் ஒரு அழகியைத் தூக்கி வருகின்றனர் கரைக்கு. தீவு வாசிகள் எலுமிச்சம்பழ நிற அழகி ஒருத்தியை எடுத்து வருபவர்களையோ கப்பலையோ பார்க்காமல் அவளையே பார்த்தனர்... ஏதேதோ பேசிக் கொண்டனர் புரியாத மொழியில். கப்பலோட்டி கைகளைப் பிசைந்தான்.

     “இங்கு யாருக்காவது தமிழ் தெரியுமா?” என்றான்.

     தொலைவில் நின்ற அந்தத் தீவுத் தலைவன் “நீங்கள் யார்? இந்தப் பெண்ணுக்கென்ன?” என்றான்.

     கப்பலோட்டி மகிழ்ந்து அவன் கைகளைப் பிடித்துக் கெஞ்சுந் தோரணையில் “ஐயா, இந்தப் பெண்ணை நீண்ட காலமாக எங்கள் கப்பலுக்குள் ஒளிந்திருந்த ஒரு பாம்பு கடித்துவிட்டது...” என்று மேலும் புலம்புவதற்குள் அவன் கடித்த இடத்தில் சட்டெனக் குனிந்து பற்களால் அந்தப் பகுதியை கடித்து ‘சர்’ என்று விஷத்தை உறிஞ்சினான்.

     ‘சிறிது கூட யோசிக்காமல் இவன் விஷத்தை உறிஞ்சுகிறானே’ என்று கப்பலோட்டியே பயந்துவிட்டான்.

     ஆனால் அவன் அந்த விஷத்தை பூமியில் ஒரு சிறு குழி செய்து அதில் துப்பி மண்ணைப் போட்டு மூடியதும் அந்தப் பெண் தூங்கியெழுந்தவள் மாதிரி கண்களை விழித்தப் பிறகு மெல்ல எழுந்திருக்க முயன்றாள்.

     “கப்பலோட்டி... இவள் கொஞ்ச காலம் இளைப்பாற வேண்டும். நீங்கள் யாவரும் நாலைந்து தினங்கள் தங்கிச் செல்லலாம்” என்று கூறிவிட்டுப் போய்விட்டான்.

     கப்பலோட்டி “ஒரு அதிசயமான தீவில் அதிசயமான மக்கள் அவர்களுக்கு ஒரு அதிசயமான ஆனால் மிக நல்ல தலைவன்...” என்று மகிழ்வுடன் முணுமுணுத்துவிட்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தவளைப் பார்த்து, “நீ பிழைத்து விட்டாய் நந்தினி. ஆனால் உன்னைப் பிழைப்பித்தவன் ஒரு தமிழன்” என்று வெறுப்புடன் கூறினான்.

     அவள் அதிசயத்துடன் “ஒரு தமிழனா? இங்கேயா?” என்று பதற்றத்துடன் கூறிவிட்டு “நரேசா, நாம் கலிங்கர்தான். அவன் எதிரிதான். ஆயினும் அவன் சோழனாக இருக்க முடியாது. இருந்தாலும் இந்த ஆபத்தில் என் உயிர் காத்தவன். நன்றி கூறாமல் செல்வது நியாயமல்ல, பண்பும் இல்லை” என்றாள்.

     கப்பலோட்டி “அவன் நம்மை இங்கு நாலைந்து நாட்கள் வரை தங்கச் சொன்னான். உன் உடல் தேறணுமாம்” என்று கூறிவிட்டு விசித்திரமான அந்தத் தீவு மக்களைப் பார்த்தான்.

     அவள் அந்த ஐந்தாறு நாளும் தீவைச் சுற்றினாள். அந்தத் தலைவனை அடிக்கடி பார்த்தாள், பேசினாள், பழகினாள். ஆனால் அவன் மனதில் ஒரு பெண்ணுக்கு இடமில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். எனினும் அவனிடம் மனம்விட்டுப் பழகினாள். தன் ஊர் கலிங்கம் என்றாள் சோழரைப் பழிவாங்க திட்டம் போடுவதாகக் கூறினாள். பிறகு அவன் சொன்னதையும் கவனமாகக் கேட்டாள்.

     சோழர்கள் பற்றி அவனும் பேசினான்.

     “கலிங்கத்தை அவர்கள் வென்றார்களே அன்றி அடிமைப்படுத்தவில்லை. எனவே கலிங்கர் வம்பு செய்யாமல் இருந்தால் சோழரும் சும்மாயிருப்பரே” என்றான்.

     அவன் மீது அவள் கொண்ட அன்பு வளர்ந்தது. அவனோ தன் வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு இடமில்லை என்று அழுத்தமாகக் கூறியதும், “பறிபோன பொருள்கள் எதுவானாலும் திருப்பி விடலாம். ஆனால் இதயம் அப்படியல்ல, திரும்பாது” என்றாள்.

     ஐந்துறைத் தீவைவிட்டு அவள் புறப்படும் நாள் அவள் சொன்னாள். “என் நன்றியைப் பிரதிபலிக்கும் நாள் வந்தால் எனக்கு நிம்மதியுண்டென்று.”

     அவன் சொன்னான், “ஒரு நாள் வராமற் போகாது. நாம் மீண்டும் சந்திப்போம். நீ கலிங்கப் பெண்ணாக இருப்பதில் தவறில்லை. ஆனால் வஞ்சந்தீர்க்கும் வஞ்சகியாக இல்லாமல், நன்மை செய்யும் நல்லவளாக என்னைச் சந்தித்தால் உன்னிடமிருந்து நான் நன்றியறிதலைச் செயல் மூலம் பெறுகிறேன்” என்றான்.

     அவளும் “நீங்கள் விரும்பும் போது நான் உங்களவள். அதாவது தவறான கருத்தில் அல்ல, நன்றி செலுத்தும் வகையில்” என்றாள்.

     ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விஜயநந்தினி என்னும் பெண், சோழ மாவீரன் உதவியாக மாறிவிட்டாள். இப்போது... அவள் மடியில் பூந்துறை நாயகன் பற்றி பேரரசன் விடுத்திருந்த பிரகடனமும் கிடந்தது.

     வாசலில் வந்து நின்ற குதிரையிலிருந்து இறங்கியவன் பூந்துறை நாயகன்தான்.

     ஓடோடிச் சென்று வரவேற்றாள் அவனை.

     அவளைக் கனிவுடன் பார்த்தான். பிறகு ஒரு இருக்கையில் அமர்ந்து “விஜயநந்தினி, நீ உன்னுடைய நன்றிக்கடனைச் செலுத்திவிட்டாய். அதுவும் மிகச் சிறப்பாக. எங்கள் நன்றி. கலிங்கத்தின் சார்பில் பழிவாங்க வந்தவள் நீ. அதைக் கைவிட்டு நாளது வரை எனக்காக இந்நாட்டுக்காக, உன்னாலியன்றவரை அற்புதமான முறையில் சேவை செய்துவிட்டாய். நாங்கள் உனக்கு கட்டமைப் பட்டவர்களாகி விட்டோம். இப்போது நீ உன்னுடைய நாட்டுக்குப் போகிறாய். ஆனால் எங்கள் சேனைகள் மீண்டும் அங்கே எழுந்த போர் வெறியை அடக்கி விட்டன. வேங்கியும் கங்கமும் போல அங்கு மக்கள் அழைத்துத்தான் சென்றோம். உங்களுடைய பரப்பிரும்மானந்த பிரதான் ஓடிவிட்டார் எங்கோ... நீ மீண்டும் அங்கே எங்களைப் பழி வாங்கும் நோக்கத்துடன்தான் செல்லப் போகிறாயா?” என்று மிகவும் நயமாகக் கேட்டதும் அவள் “பூந்துறையாரே, என்னை நீங்கள் மனப்பூர்வமாக மன்னித்துவிடுங்கள். நான் இனி வஞ்சந்தீர்க்க விரும்பும் வஞ்சகப் பெண் அல்ல. உங்களால் புடமிடப்பட்டு பரிசுத்தமானவள் நான். அன்றொரு நாள் நீங்கள் பரப்பிரும்மானந்தர் மாதிரி வேடமிட்டதையும் சிம்மநாதனையே ஏமாற்றியதையும் நான் மறப்பதற்கில்லை. யுத்தம் நடந்தால் ரத்தம் சிந்தி உயிர்கள் நாசம் ஏற்படும் என்று அதை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு விலக்கிவிட முயலும் உங்கள் நோக்கம் மிக உயர்ந்தது. அத்தகைய நோக்கம் உங்களுக்கு இருப்பது மட்டும் இல்லை, என்னைப் போன்ற ஒரு அழகி உங்களைக் கவர்ந்திட முடியாத அளவுக்கு மனத்திடமும், உறுதியும், பண்பும் கொண்ட உங்களை வழிபடுகிறேன். இனி என் தாயுடன் நானும் இந்த நாட்டில் ஒரு தெய்வீக அடியாளாக இருந்து தெய்வத் தொண்டு புரியவே விரும்புகிறேன் அமைதியுண்டா?” என்று தழுதழுக்கும் குரலில் கேட்டதும் அவன்கூட கண் கலங்கிவிட்டான்.

     “விஜயநந்தினி, நீ என்னுடைய அன்புச் சகோதரி. உன்னுடைய நியாயமான கோரிக்கை எதுவும் இங்கு நிறைவேற்றப்படும். இது உறுதி” என்று கூறிவிட்டு எழுந்தவன். “நீ ஆலய சேவை போகும் முன்னர் மாமன்னர் திருமணம் நடைபெறுகிறது. ராஜசுந்தரியும் திருமணம் செய்து கொள்ளுகிறாள். அவ்விரண்டு விழாக்களிலும் உன்னுடைய கூத்து அமோகமாக நடைபெற வேண்டும். புரிகிறதா? அடுத்து மும்முடியின் மகன் குமார குலோத்துங்கன் பட்டத்திளவரசாக முடிசூட்டப்படுகிறான். அன்றும் நீ வந்து நிகழ்ச்சி நடத்தி எங்களை மகிழ்வுக்குள்ளாக்க வேண்டும். சரி... புறப்படுகிறேன். நம்முடைய கடுங்கோன் தங்கை பூங்கொடியை இன்று மாவலிராயன் திருமணம் செய்து கொள்ளுகிறான். அதற்கு நாங்கள் செல்லுகிறோம்.”

     “என்னையும்தான் அவள் நேரில் வந்து அழைத்திருக்கிறாள். நான் விரைவில் வருகிறேன்” என்றாள்.

     “நல்லது. நாம் திருமணங்கள் நடக்கும் இடங்களிலேயே சந்திப்பதுகூட சற்று மகிழ்ச்சியூட்டக் கூடிய மாறுதல்தானே?” என்றான் அவன்.

     அவள் பதில் கூறவில்லை. ஆனால் அவன் தொலைதூரம் போகும்வரை உன்னிப்பாகப் பார்த்தாள். பிறகு கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டு “போயும் போயும் உன் துரதிர்ஷ்ட வாழ்க்கைக்கு இத்தகைய ஆசைகள் கொள்ள ஏது உரிமை” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

     ஆனால் சுவரில் இருந்த கவுளி என்னவோ பேசியது. அவள் திடுக்கிட்டாள்.

     ‘பெண்ணே! உன் வாழ்க்கை இப்படியே வறண்டுவிடாது. அங்கும் ஜீவ ஊற்று ஒருநாள் தோன்றும்...’ என்றெல்லாம் அந்தக் கவுளி பேசியது போலும்.

     புன்னகையழகி விஜயநந்தினி மீண்டும் பழைய பேரழகுப் பெட்டகமாக, துள்ளிக் குதிக்கும் புள்ளிமானாக, கண்டவர் மயங்கித் தங்களை மறந்திடச் செய்யும் கனவுக் கன்னிகையாகச் சிங்காரித்துக் கொண்டு சிவிகையில் ஏறினாள்.

முற்றும்.