விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

7

     சிம்மநாதன் கங்கபாடியிலிருந்து இங்கு வந்திருக்கிறான் என்ற செய்தி அப்படி ஒன்றும் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றல்ல என்றாலும், கங்கர்கள் நால்வரை கடல் பயணத்திலும், இவனை இந்நாட்டிலும் என்றும் கேட்டதும் கண்டதும், ஆகக்கூடிக் கங்கர்கள் ஏதோ ஒரு சதியிலோ அல்லது மாறாகவோ ஈடுபட்டிருக்கிறார்கள் என்று ஊகிக்கும்படி செய்கிறதல்லவா? எனவே சற்று நிதானித்து யோசித்த ஆகவமல்லன் நீண்ட நெடுநேரம் பூந்துறை நாயகனுடன் இந்தப் புதிய நிலை பற்றி பேசி முடித்த பின்னர், மேற்கொண்டு இதனை நன்கு ஆராய்ந்து செயல்பட்டாக வேண்டுமென்ற முடிவுடன் விடைபெற்றுக் கொண்டனர்.

     நாம் மீண்டும் நமது பழைய நண்பரான சிம்மநாதனையும் இப்போது அவர் ராஜராஜ வீதியிலுள்ள கலைமாளிகையில் தங்கியுள்ள கூத்துக் கலையரசியுடன் உரையாடிக் கொண்டிருப்பதனால் நாமும் அங்கு கலந்து கொள்ளச் செல்லுவோம்.

     “தங்களைக் கடந்த மூன்று தினங்களாகச் சந்திக்கவே முடியவில்லை. என் தாய் தங்களைச் சந்திக்க வந்திருந்தாளாமே? மகளைப் பற்றி வெகுவாகக் குறைப்பட்டுப் பேசினாரோ?” என்று கேள்விகளை அவள் அடுக்கினாலும் சிம்மநாதன் அதிர்ச்சியுடன் “தாய் மகளைப் பற்றிய கவலைதான் படுவாளேயன்றி குறை கூறமாட்டாள்” என்றான்.

     வல்லபி சிறிது சிரித்துவிட்டு “என்னுடைய தாயார் நீண்டகாலம் இந்நாட்டுப் பிணைப்பினால் வெகுவாக மாறிவிட்டாள். தவிர அவள் மனம் சோழ நாட்டுக் கோவிற்பணிகளில் ஈடுபட்டுவிட்டது. எனவே அவள் எதையுமே தெய்வப் பணி மூலம் பார்க்கிறாளேயன்றி நம்மைப் போலக் கணிப்பதில்லை” என்றாள்.

     சிம்மநாதன் ஊன்றிக் கவனித்தான் அவளுடைய பேச்சை. அதில் ‘நம்மைப் போல’ என்று எழுகிறதே ஒரு சொல்.

     “என்னைப் பொறுத்தவரை அதாவது எங்கள் கங்கரைப் பொறுத்தவரை நாட்டின் கோயில்களை, தெய்வப் பணியை மகத்தான ஒன்றாகக் கருதுகிறோம். இந்தப் பணியே அவர்களை நாளதுவரை ஈடுபடும் வேலைகளில் துணை நிற்கிறது என்றும் நம்புகிறோம்.”

     “நானும் இதை மறுக்கவில்லை. ஆனால் இந்த ஒரு காரணத்தால் மட்டும் அவர்கள் செய்வதால் மட்டும் எல்லாமே நியாயமாகிவிடுமா? தங்களுடைய நாடு பிடிக்கும் ஆசைக்கு இதே தெய்வப் பணியைக் கூட அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்னும் போது நமக்கு அவர்களுடைய உண்மை மனோநிலை புரிகிறதல்லவா? இதைத்தான் நான் வெறுக்கிறேன்.”

     “நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புக்களைப் பற்றிப் பேச இந்த இடம் அவ்வளவு பொருத்தமானதா சகோதரி?” என்று வார்த்தைகளை அழுத்திக் கேட்டதும் அவள் சுற்று முற்றும் ஒரு தரம் பார்த்துவிட்டு “அச்சம் தேவையில்லை. நாம் இங்கு எதை வேண்டுமாயினும் பேசலாம். யாரும் கவனிக்கவோ உற்றுக் கேட்கவோ முடியாது.”

     “அப்படியானால் நான் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற விரும்புகிறேன். ஒரு அன்பான சகோதரன் கூறுகிறான் என்று அதை ஏற்றுக் கொள்வதுதான் உங்களுக்கும் நன்மை; எனக்கும் பெருமை” என்றான் சிம்மநாதன்.

     “அதென்னவோ?”

     “நீங்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வளர்ந்து சிறப்புப் பெற்று நலமாக மதிப்பாக இருக்கிறீர்கள். நாங்கள் அதாவது கங்கர்கள் சோழப் பாதுகாப்புடன் வம்பு செய்யும் அண்டை நாட்டின் தொல்லைகள் சிறிதும் இல்லாமல் எங்கள் விருப்பம் போலவே வாழ்ந்து வருகிறோம். எனவே நீங்களும் சரி, நானும் சரி, அவர்களிடம் அன்பு காட்ட வேண்டுமேயன்றி பகை கொள்ளக் கூடாது. இது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல. அலட்சியப்படுத்தி உதறி விட வேண்டாம். நாளுக்கு நாள் உங்கள் மனதில் பகையுணர்ச்சி வளருவதற்கு இடமளிக்கக் கூடாது. அதுவும் நீங்கள் ஒரு பெண். என்னைப் போன்ற ஒரு ஆண்மகன் கூட சூழ்நிலையைக் கருதி காலநிலைக் கேற்றாற் போல் வளைந்து கொடுத்து நேசக்கரத்தை நீட்டும் போது, ஏற்பதுதான் புத்திசாலித்தனம் என்று நினைக்கும் போது நீங்கள் வர்மம் பாராட்டி ஏதேதோ திட்டம் தீட்டுவது பேசுவது யாவும் நல்லதுமல்ல அவசியமும் அல்ல.

     தவிர நீங்கள் அடிக்கடி நம் சந்திப்பின் போதெல்லாம் இந்தப் பகையுணர்ச்சியை விளக்கிப் பேசுவதை ஒரு வழக்கமாகக் கொண்டு விட்டீர்களானால் எனக்கே அப்புறம் ஒருவேளை இதெல்லாம் உண்மைதனா அல்லது இந்தப் பெண் வேண்டுமென்றே இம்மாதிரி பகை நடிப்பைக் கையாண்டு நம்மை வெறி கொள்ளச் செய்கிறாளா என்ற சந்தேகத்தையும் கிளப்பிவிடும். எனவே நீங்கள் முதலில் இந்த நிலையை மாற்றி நேர்நிலைக்கு வாருங்கள். அப்புறம்தான் நாம் பரஸ்பரம் மனம்விட்டுப் பேச முடியும்” என்று அவன் மிகவும் தெளிவாக வார்த்தைகளைக் கையாண்டு அதைத் திறமையாகத் தொகுத்துப் பேசியதும் சிறிது நேரம் அவள் எதுவுமே பேசவில்லை. அவனும் யோசிக்கட்டும் என்று மவுனமாகவே இருந்தான்.

     பிறகு அவளே பேசினாள். “நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. எனவே என்னுடைய லட்சியமும் உங்களுக்குப் புரிவதற்கில்லை. நாம் இதுவரை பேசியதை மறந்து நீங்கள் உங்கள் போக்கிலும், நான் என் போக்கிலும் இனி செல்லுவதுதான் சரியாகும். எப்பொழுது என்னுடைய நிலையை நீங்கள் உங்களை ஏமாற்றுவதான ஒரு நடிப்பு என்று கருதத் தொடங்குகிறீர்களோ அப்பொழுது நீங்கள் இங்கு வந்துள்ள நோக்கமும் அதை என்னிடம் கூறும் முறையும் அப்படியே என்று நான் கொள்ள இடமுண்டு. எனவே நான் எங்கள் கலிங்கத்து குருவிடமிருந்து வந்துள்ள தூதுவனிடம் நீங்கள் இங்கு வந்திருப்பது உண்மைதான் என்றும் ஆனால் அவர் எதிர்பார்ப்பது போலவோ நான் விரும்புவது போலவோ உங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கில்லை என்று எழுதி அனுப்பிவிடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சட்டென எழுந்துவிட்டாள்.

     சிம்மநாதன் அயர்ந்து போய் அவளை வியப்பு கலந்த திகைப்புடன் ஏறிட்டு நோக்கினான். அவளோ இவன் பக்கமே திரும்பவில்லை.

     தனது திகைப்பை ஓரளவு கட்டுப்படுத்திக் கொண்ட அவன் “நீங்கள் என்ன திடீரென்று கலிங்கத்துப் பிரதான் பற்றிப் பேசுகிறீர்கள்? இதெல்லாம் என்ன...? திடீரென்று அவருடைய தூதுவன் வந்திருக்கிறான் என்றும் கூறுகிறீர்கள். அவர் எதற்காக யாரை அதுவும் இங்கேயே...”

     “நீங்கள் உண்மையையும் நம்பவில்லை, நடிப்பையும் எதிர்பார்க்கிறீர்கள். எனக்கு உங்களுடையதுதான் நடிப்பாகப்படுகிறது. இப்போது நான் என்னுடைய அந்தரங்க மனோநிலையை உங்களிடம் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியதற்கு ஒரே காரணம், எங்கள் பிரதான் உங்கள் ராஜகுருவுடன் கலந்த பிறகே உங்களை இங்கு அனுப்பியிருப்பதாக அனுப்பிய ஓலை கிடைத்தமையால்தான். இல்லாவிட்டால் மூன்றாம் மனிதரான உங்களிடம் சாதாரண பேச்சைக் கூட நான் வைத்துக் கொள்ள மாட்டேன். சரி சரி, இனி நாம் மேலும் ஏதாவது சுற்றி வளைத்துப் பேசிக் குட்டையைக் குழப்புவது பயனளிக்காது. நீங்கள் இங்கு வந்தமைக்கு நன்றி. நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டும்” என்று புறப்பட்டு விட்டதும் சிம்மநாதன் இதென்ன புதிய வில்லங்கம்? என்று கலங்கித் தயங்கி எழுந்தவன் “நான் இப்படிக் கேட்பதற்கு வருந்துகிறேன். நான் அந்த ஓலையைப் பார்க்க விரும்புகிறேன்” என்று மிகவும் நயமாக வேண்டியதும், “சிம்மநாதன் உன்னிடம் எந்த ஓலையை வேண்டுகிறான் நந்தினி?” என்று கேட்டுக் கொண்டே ஒருவர் உள்ளே நுழைந்ததைக் கண்டு அவர் யார் என்று பார்க்கத் திரும்பிய சிம்மநாதன் “நீங்களா? இங்கேயா?” என்று பதற்றம் தாங்காது பதறி எழுந்தபடி கேட்டுவிட்டு அப்படியே சிலையாக நின்றுவிட்டான்.

     வாய் திறவாது வணங்கினாள் வந்தவரை வல்லபி மிகப்பணிவாக.

     ஆனால், உள்ளே நுழைந்த அந்த நெட்டை மனிதர் “ஏன் அப்பா அப்படி அடித்த சிலை மாதிரி அசையாமல் நிற்கிறாய்? இவன் எங்கே இப்படி வந்தான் என்று வியந்து விட்டாயா? அல்லது...”

     சிம்மநாதன் என்ன இருந்தாலும் துணிச்சல்காரனில்லையா? எனவே சட்டென்று சுதாரித்துக் கொண்டு “மன்னிக்க வேண்டும் மஹாஸ்வாமி. நான் உண்மையில் அதிர்ச்சியடைந்து விட்டேன். அதுவும் நீங்கள் இங்கே வந்திருப்பது உண்மையா என்று இன்னமும் கூட எனக்குப் புரியவில்லை.”

     “அப்படியா? இதுவும் ஒரு வகையில் சரியான கருத்துத்தான். ஏன் என்றால் நீயும் நானும் இப்பொழுது போலியாக நடிக்கிறோம். அப்படி நடிப்பதால்தான் உண்மையாக இயங்குபவரைக் கூட நடிப்பதாகக் கூறத் தோன்றுகிறது. இல்லையா?” என்று கேட்டதும் சிம்மநாதன் கூனிக்குறுகி நிமிரத் திராணியின்றிக் குனிந்து விட்டான் பாவம்.

     “பரவாயில்லை நந்தினி. கங்க நாட்டின் மாவீரன் ரொம்பவும் பதறி விட்டான். அவன் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதையும் இலேசில் நம்பிவிடுதல் கூடாது என்று நினைப்பது சரியானதுதான். ஆனால் அதற்கும் வரம்புண்டு. காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல சந்தேகிகளுக்கு எதுவுமே சந்தேகம்தான். ஆனால் நம்ம சிம்மநாதனுக்கு அப்படி உண்டாகும் என்று தெரிந்திருந்தால் நான் உன்னை அவனிடம் கலந்து பேசும்படி உத்திரவிட்டிருக்க மாட்டேன். நல்லது சிம்மநாதன். இனி இந்த சோழ நாட்டில் நீ எப்படி செயல்பட வேண்டுமென்று வந்தாயோ அப்படிச் செயல்படுவதில் யாவரும் தலையிட மாட்டார்கள்” என்று கூறிவிட்டு “நந்தினி, நான் எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாயிருப்பவன்தான். என்றாலும் யானைக்கும் அடிசறுக்கும். இந்த சிம்மநாதன் விஷயத்தில் விஜயகீர்த்தியின் வார்த்தையை நம்பியதால் சற்றே தவறிவிட்டேன். போனது போகட்டும்.” என்று சலிப்புடன் கூறியபடி இருக்கையில் அமர்ந்தவர் இன்னும் அங்கு சிம்மநாதன் நிற்பதைக் கண்டு சற்றே கோபமுற்றவர் போல்,

     “ஏன் சிம்மநாதா நீ இன்னும் போகவில்லை? ஒருவேளை உன்னுடைய சோழ பக்தி காரணமாக நந்தினியையும் என்னையும் எதிரிகள் என்று அவர்களிடம் பிடித்துக் கொடுப்பதாக உத்தேசமா?” என்று கேட்டதும்-

     “ஐயோ ஸ்வாமி! இதென்ன அபாண்டம்? நான்... என்னையா நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டது? எதிர்ப்பிலே அதன் நிழலிலே வளர்ந்த என்னையா நீங்கள்... நீங்கள் நந்தினி என்று அழைக்கும் இவளைப் பற்றி நான் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் சட்டென நம்பிவிட முடியுமா? அதுவும் என்னைப் போன்ற ஒருவன் ஒரு குறிப்பிட்ட லட்சியத்துடன் வந்திருப்பவன் எந்த ஒரு சக்தியையும், உயிரையும் சூழ்நிலையையும் சட்டென நம்பிவிட முடியுமா? அல்லது நம்பத்தான் செய்யலாமா? நீங்களும் ராஜரத்னாவும் எனக்கு அளித்துள்ள பயிற்சி இப்படிச் சட்டென எதையும் முடிவு செய்வதற்கா? சற்று நிதானியுங்கள். நிதானித்துக் கேளுங்கள்.

     “ஒரு வழிப்போக்கர் சத்திரத்தில் சந்திக்கிறோம். இவளோ கூத்தழகி, நானோ ஒரு தூதுவன். இவள் அந்தரங்கமாகவே தன் மனநிலையை வெளியிடுகிறாள். அது சத்திரம் என்பதை மறப்பதற்கில்லை. அடுத்தாற் போல இங்கு, இந்நகரத்தில் அரசன் முதல் ஆண்டி வரை இவளை எங்கள் ஏழிசைவல்லபி என்று ஏற்றிப் போற்றுகிறார்கள். கூத்து கும்மாளம் என்றாலே ஒதுங்கி வெறுத்திடும் காடவர் முனையரையர் கூட அருகே வந்து ஆசி கூறுகிறார்கள். சோழர்களின் முதுகெலும்பு என்னும் அயல் நாட்டுக் கரிமூஞ்சிகூட இவளைப் பார்த்து சிரக்கம்பம் செய்கிறான் என்றால்... ஏன் ஸ்வாமி நீங்கள் கூட இப்படி என்னை வெறுத்துப் பார்க்கிறீர்கள். தயவு செய்து இதையெல்லாம் கவனிக்காமல், இவள் தாய் நேற்று வந்தது தானாகவே தானா அல்லது அனுப்பப்பட்டா என்று ஆராயமலே அவசரப்படலாமா? பகைமகள் நான் என்றாள். சரி, உம்மை நம்பி யாவும் கூறுகிறேன் என்றாள் சரி. என் மீது உங்களுக்கு நம்பிக்கையுண்டாக அந்த ஓலை என்று காட்டினாளா?”

     “அதைக் காட்டுவாள் இப்போது... நந்தினி...!” என்று அவர் அழைத்ததும் அவன், “தேவையில்லை ஸ்வாமி. நீங்களே வந்துவிட்ட பிறகு அது மதிப்பற்றுப் போய்விட்டது. இனி என் சந்தேகம், அவநம்பிக்கை, ஆராய்ச்சி எல்லாம் துகளாகி விட்டது. வல்லபியை அதாவது உங்கள் நந்தினியை முற்றிலும் நம்புகிறேன். இதோ இந்த வாள் மீது, எங்கள் குருநாதர் மீது, உங்களுக்கு ஆணையிட்டு உறுதி தருகிறேன் போதுமா?” என்று பரவசமுற்ற குரலில் அதிவேகமாகக் கேட்டதும் வந்த பெரியவர் “பளா... பளா... இப்போதுதான் நான் உண்மையான சிம்மநாதனைக் கண்டேன். நல்லது... மிக்க மகிழ்ச்சி” என்று ஒரு முறை கூறி வாய்விட்டுச் சிரித்தார்.

     அப்பாடி! அந்த சிரிப்பு ஒன்றே போதுமே பரப்பிரும்ம பிரதானுடைய பெருமைக்கு. அதில் இருந்த ஆத்திரம், வேகம், வெறி எல்லாம் சுற்றியுள்ள சுவரைக்கூட வெறிகொள்ளச் செய்திடுமே.

     “நல்லது நந்தினி. இனிக் கவலையில்லை. சிம்மநாதர் கலிங்கத்திலிருந்து நமது லிகிதம் ஒன்றைத் தாங்கி நாலு உபசேனாதிபதிகள் வந்து சோழ மன்னரையும், அவருடைய அந்தக் கரி... அதுதான் நீ என்னவோ கூறினாயே...”

     “அயல் நாட்டுக் கரிமூஞ்சி” என்றாள் வல்லபி குறுக்கிட்டு.

     “ஆமாம் அந்தக் கோரக் கரிமூஞ்சியையும் சந்தித்துக் கொடுத்து விட்டார்கள். நான் வந்தது போவது யாரும் அறியாத ஒன்று. நாளை திரும்புகிறோம் நாங்கள். விஜயகீர்த்தியின் யோசனைப்படி நீ இங்கிருந்து...”

     “நாலுமாத காலம் தங்கலாம்” என்றார் அவர்.

     “நல்லது. அதற்குள் என்னென்ன செய்ய வேண்டுமோ... அவற்றை முடித்துவிட்டு... குறிப்பாக முட்டத்துப் பகுதியிலும், சேர நாட்டிலும்... சரி சரி... நீ மறந்தால் அல்லவா நான் நினைவூட்ட.. சரி, உனக்கு தேவையான உதவிகளை நந்தினி செய்வாள். நீங்கள் இருவரும் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையேல் கலிங்கமும், கங்கமும்...”

     “நன்றாகப் புரிகிறது ஸ்வாமி.”

     “நல்லது சிம்மநாதா. இனி நீங்கள் இருவரும் பரஸ்பரம்...”

     “நிச்சயமாக ஸ்வாமி. இனி நிச்சயமாகவே நான் அண்ணன், அவள் தங்கை. நாங்கள் இருவரும் கலிங்கம், கங்க மக்களின் சுதந்திர உணர்ச்சியின் பிரதிநிதிகளாக இங்கு...”

     “பேஷ்! அதுதான் எனக்கு எங்களுக்கு அதாவது எனக்கும், விஜயகீர்த்திக்கும் தேவையேயன்றி வேறு எதுவும் இல்லை...”

     இதற்குள் பாலும் பழமும் தாங்கிய இரு தங்கத் தட்டுக்களை உதவிப் பெண்மணி எடுத்து வைக்க கிடைப்பதை விடுவானேன்? என்று பெரியவர் ஒரு பழத்தைச் சுவைக்க சிம்மநாதனும் ஒன்றை உரித்தான்.

     சூழ்நிலை சற்றே தெளிவுற்றுக் கலகலப்பேற்பட்டது. தாடிப் பெரியவர் ஒரு முறை வல்லபியைப் பார்த்து, “இவ்வளவு பெரிய மாளிகையில் ஏன் ஒளியே இல்லாமல் இருட்டாயிருக்கிறது? இன்னும் மாலையின் சாயை வரவில்லை. இப்போதே இங்கு இருட்டாயிருக்கிறதே” என்றவர் “சரி சிம்மநாதா, அடுத்தபடி உன் திட்டம் என்ன?” என்று பேச்சை மாற்றிக் கேட்டதும் ஒரு நொடி தயங்கிய அவன் “நாளை மன்னரைப் பேட்டி காணும் அனுமதியைப் பூந்துறை நாயகன் வழங்கியுள்ளார். காலைப் பொழுது பத்து நாழிகை அளவில், அத்தாணி மண்டபத்தில் நான் அவரைக் காண உத்தரவு.”

     “ஓகோ! நீ மட்டும்தானா?”

     “உலூகனும் வருவதில் மறுப்பில்லை.”

     “நாயகனை நீ நேரிலேயே சந்தித்துப் பேசினாயா சிம்மநாதா?”

     “ஆமாம்.. ஆசாமி அப்படி ஒன்றும் தோற்றம் பயங்கரமாக இல்லை. ஆனால் அட்டைக் கரியென்பார்களே... அதைவிட...”

     “நீதான் ஏற்கனவே அவனுக்கு கரிமூஞ்சி என்று விருதளித்து விட்டாயே” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.

     “நேரில் பேசும் போது அவன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசினாலும் நிதானமாகவே பேசுகிறான். நம்மைத் தூக்கி எறிவது போலப் பேசாமல், எச்சரிப்பது போலப் பேசுகிறான். ஊடுருவிப் பார்க்கும் விழிகள்... அவை சற்றுப் பயங்கரமானவைதான்.”

     “ஓகோ! நல்லது சிம்மநாதா. மீண்டும் சந்திக்கும் போது எச்சரிக்கையாகவே இரு. நீ சொல்வதைப் பார்த்தால் என்னுடைய இந்த எச்சரிக்கையும் அவசியமாகிறது இல்லையா?”

     “ஆம் ஸ்வாமி. ஒரு சந்தேகம், கேட்பதற்கு மன்னிக்க வேண்டும். திடீரென்று நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? உங்கள் ஓலையுடன் தளபதிகள் நால்வர் வந்தாலே போதாதா?”

     “போதும். ஆனால் குரங்கணி முட்டத்தார் மடத்தில் உள்ள அடிகளார் உடன் வரும்படி ஆளை அனுப்பினார். வந்தேன். தலைநகரில் உள்ள வல்லபியையும் உன்னையும் கண்டு திரும்புவதுதான் இங்கு வந்த நோக்கம். அதுவும் முடிந்தது. ஏன் இப்படிப் பார்க்கிறாய் சிம்மநாதா? இங்கு என்னை யாருக்கும் தெரியாது. நான் இதுவரை பகிரங்கமாகச் சோழ நாடு வந்ததேயில்லை. எனவே அந்த அச்சம் தேவையில்லை. எனினும் ஓலை கொண்டு வந்துள்ள தளபதிகள் ஏற்கெனவே இங்கு பலருக்கு அறிமுகமானவர்கள். இங்கு நான் ஒரு கொங்கு நாட்டுப் பூசாரியாக கடந்த மூன்று தினங்களாக முட்டத்தில் நடமாடினேன். இப்போது அதே பூசாரியாகத்தான் நகருகிறேன். நல்லது சிம்மநாதா... நாம் விடைபெறுவோம்” என்றதும் சரி, இனி தனக்கு இங்கு வேலையில்லை என்று எழுந்துவிட்டான் அவன்.

     ஆனால் “நாளை மறுதினம் நாம் மீண்டும் சந்திக்கிறோம். மறுப்பில்லையே?” என்று வல்லபி கேட்டதும் “நிச்சயமாக மறுப்பில்லை. இனி துளியும் என் பக்கத்தில் சந்தேகம் தலை நீட்டாது” என்றான் சிம்மநாதன்.

     சிம்மநாதன் அவருக்கு வணங்கிவிட்டு வெளியே வந்ததும் திரும்பவும் அவன் மனதில் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் தலையெடுத்தன. மூன்று நான்கு தினங்களுக்கு முன்னர் பயண சத்திரத்தில்தான் மேன்மாடத்தில் வல்லபியுடன் பேசி முடித்துவிட்டு இறங்கிய பொழுது ஒரு தாடிப் பெரியார் சத்திரம் நோக்கி நாலு பேர்களுடன் வருவதைக் கண்ட ஒரு நிகழ்ச்சி இப்போது நினைவில் வந்தது அவனுக்கு.

     ‘ஒருவேளை இவர்தான் அன்று மேலே சென்று வல்லபியுடன் பேசினாரோ? இருக்கலாம். அப்பவே பார்த்திருந்தால் இந்தத் தரும சங்கடமான நிலைமை இன்று எனக்கு ஏற்பட்டிராது. யாருக்கு என்னைப் பற்றி நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமோ அவரிடமே, நான் சந்தேகத்தைக் கிளப்பிவிடும் பேர்வழியாக மாறினால்...’

     மனம் நொந்து கலைமாளிகையிலிருந்து புறப்பட்டு நடுவீதி சென்றவன் காதில் “சீன வணிகர்கள் சீக்கிரத்திலேயே இந்நாட்டுக்கு வருகிறார்களாம்... நாம் உறையூர் போக வேண்டும்” என்று ஒருவன் இன்னொருவனுடன் சொல்ல “இந்த முறையாவது நாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்காமல் பேரம் செய்ய வேண்டும்” என்று பதிலுக்கு மற்றவன் சொன்னான்.

     ‘ஓகோ! சீனர்கள் வருகிறார்கள் என்றால் நம்மவர்கள் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும். குறிப்பாக யாங்சிங் வணிகர்களின் வழித்துணையாக வந்தானானால் நாம் நினைத்தது நிச்சயம் நடக்கும்.

     இப்படி நினைத்தவன் மனம் சற்றே மகிழ்ந்த காரணத்தாலோ என்னவோ முகமும் சற்றே மலர்ந்தது. அதுகாறும் மனதில் ஊடாடிய பீதி நினைவுகள் சற்றே விலகி, ‘இனி சம்பவங்கள் துரிதமாக நிகழும் என்பதற்கான சூசகங்கள் காணப்படுகின்றன... நாளை உலூகன் திரும்பி வந்தால் மேலும் சில விஷயங்கள் நிச்சயமாகப் புலனாகும். எனவே நமது இலட்சியம் நெருங்கி வருகிறது என்பதில் இனி சந்தேகப்பட வேண்டியதில்லை.’

     என்றாலும் அவனால் தாடிப் பெரியாரின் திடீர் விஜயமும் தமது விஜயத்துக்கான காரணங்களைக் கூறிய முறையும் அவனுக்கு இன்னமும் கூட ஏதோ ஒரு கிலேசத்தையோ அல்லது குழப்பத்தையோ உண்டாக்காமல் இல்லை. கலிங்கமே கண்டு நடுங்கும் அவ்வளவு பெரியவர் இங்கு ஒரு சாதாரண வேலைக்காகத் திடீரென்று வருவது அவ்வளவு எளிதா?

     ‘சே...! மீண்டும் சந்தேகித்தால், இது நம்முடன் பிறந்த வியாதியாக அல்லவா மாறிவிட்டது. ஏதோ வெகு முக்கியமானதொரு வேலையாக அவர் அவசரம் அவசரமாக அடியாரால் அழைக்கப்பட்டுள்ளார். வந்தார், திரும்புகிறார். அவ்வளவுதான். நாளை அந்த வேலையின் பயன் தெரியும் போது விஜயத்தின் விவரமும் தெரியும். அடியாருக்கு இந்நாட்டில் இருக்கும் மதிப்பு மட்டும் சாதாரணமானதா? மாமன்னன் கூட அவர் பேரைக் கேட்டதும் சற்று பயபக்தியுடன் சிரக்கம்பம் செய்கிறான். அவருடைய அறங்காவலன் மாதிரி ராஜாளியார் என்னும் பயங்கரப் பெயருடைய அதிபதி இருக்கிறார். அங்கு ஏதோ நடக்கிறது. பாடலித்துறை, பரிதித்துறை இரண்டும் அண்மையில் இருப்பதால் குரங்கணிமடம், இதுவும் கடற்றுறையிலிருந்து அரைக் காதங்கூட இல்லையே. எனவே தாடிப்பெரியார் வந்தது, சீக்கிரமே வரும் சீனர் பற்றிய செய்தி.. எல்லாவற்றிற்கும் ஏதோ இணைப்பு... முக்கியத்துவம் இருக்கத்தான் வேண்டும்’ என்று நினைத்தபடி தன் மாளிகையுள் நுழைந்தான்.

     அவன் மாளிகையில் நுழையுங்காலை, அவனுடைய மாளிகைக் காவலர்களில் ஒருவன் பணிவாக முன்னே வந்து “தங்களைச் சந்திப்பதற்காக அரண்மனையிலிருந்து மெய்யுதவி ஒருவர் வந்திருக்கிறார். அவரை நடுக்கூடத்தில் இருக்கையில் மதிப்புடன் அமர்த்தியுள்ளோம்” என்றான்.

     சிம்மநாதன் திடுக்கிட்டான்.

     ‘நாளைதானே தனக்கு அனுமதி. இன்று என்ன வந்திருக்கிறது?’ என்று வியந்து பரபரப்புடன் நடுக் கூடத்தையடைந்ததும் அங்கே வேல்நம்பியின் உதவி மாயன் இருந்தான்.

     “அரண்மனையிலிருந்து தங்களுக்கு ஒரு அழைப்பினைக் கொண்டு வந்துள்ளேன். இளவரசி ராஜசுந்தரி தமது சொந்த அரங்க மேடையில் கூத்தழகி ஏழிசைவல்லபியைக் கூத்தொன்று நடத்துமாறு ஏற்பாடு செய்திருக்கிறார். நகரின் பெரியோர் அனைவருக்கும், அயல் நாட்டுத் தூதுவர்களுக்கும் அழைப்புவிடுக்கும்படி எங்களுக்கு உத்திரவாயிற்று. எங்கள் தலைவர் வீரசோழர் தங்களுக்கும் அழைப்பு அளித்து வருமாறு உத்தரவிட்டுள்ளதால் நான்...” என்று அவன் கூறியபடி ஒரு அழைப்பினைக் கொடுத்ததும், அதைப் பெற்று “நல்லது அன்பரே! நிச்சயமாக வருகிறேன். உங்கள் தலைவருக்கும், இளவரசிக்கும் ஏனைய பெரியோருக்கும் என் பணிவு கலந்த நன்றியையும் தெரிவியுங்கள்” என்றான் சிம்மநாதன்.

     “நல்லது வருகிறேன்” என்று அவன் விடைபெற்றுச் சென்றதும் சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தான் சிம்மநாதன். பிறகு தன் அறைக்குள் சென்று அதது அந்தந்த இடத்தில் இருக்கிறதா கலையாமல், மாறாமல் என்று ஆராய்ந்தான்.

     ‘இளவரசி ராஜசுந்தரியின் பிரத்தியேக நிகழ்ச்சிக்கு நமக்கு அழைப்பு. எதுவுமே முன்னேற்றமில்லையே கடந்த இரு தினங்களாக என்று நாம் சலித்தது போக, இப்போது இன்று ஒரு பகலிலேயே நிகழ்ச்சிகள் அதிவேகமாக நடைபெறுகின்றனவே. தூங்கியவர்கள் விழித்துக் கொண்டார்களா? அல்லது நம்மைவிட்டுப் பிடிப்பவர்கள் ஆள் எப்படித்தான் நடந்து கொள்ளுகிறான் என்று ஆராய இந்த ஏற்பாடா?’ என்றெல்லாம் நினைத்தபடி அறைக்குள் அங்குமிங்குமாக உலாவினான்.

     ‘பூந்துறை நாயகனோ அல்லது வீரசோழனோ தூண்டித்தான் இளவரசி இந்த அழைப்பை விடுத்திருக்க முடியும். ஆனால் பெரிய நாட்டுத் தூதுவனில்லை. சோழர் தம் அடிச்சுவட்டைப் பின் பற்றி வாழும் ஒரு சிறு நாட்டின் நல்லெண்ணத் தூதுவன்தான். நேரிடை அரச தூதுவன் கூட இல்லை. ஆனால் ஏனையோரைப் போல் தனக்கும் மதிப்பு என்றால்... சிந்திக்காமலிருப்பதெப்படி?’

     கடகடவென்று வீதியில் ஏதோ ஒலி கிளம்பி தொடர்ந்து குதிரைக் குளம்படி சத்தம் வந்து, அது தன் வீட்டு வாசலிலேயே பட்டென நின்றதும் பலகணி வழியே எட்டிப் பார்த்தான் அவன்.

     இரண்டு குதிரை வீரர்கள் இறங்கினார்கள். தொடர்ந்து ஒரு சிவிகை வந்தது. அதிலிருந்து இளம் பெண், அரச குலத்தினள் போன்ற அலங்கார ஜோடனை, சிங்காரத் தேர் ஒன்று நடந்து வருவது போன்று தெரிந்தது. நளின ஆலயத்தின் நடுவேயிருக்கும் அழகு மண்டபத்திலிருந்து ஒரு பேரழகுச் சிலையொன்று உயிர் பெற்று வந்தது போன்ற பிரமை...

     அவள் அறை முன் வந்து ஒயிலாகப் பார்த்து பிறகு கிள்ளைக் குரலில் “எங்கள் இளவரசியின் சொந்த உதவிப் பெண் நான். தங்களை நேரில் எங்கள் இளவரசி சோழகுலவல்லி ராஜசுந்தரியின் சார்பில் இன்று இரவு பொன்மண்டபத்தில் நடைபெறும் அற்புதமான கூத்து நிகழ்ச்சிக்குத் தாங்களும் விஜயம் செய்ய வேண்டும் என்று வேண்டவே வந்தோம்” என்று அவள் பண்புடன் பகர்ந்ததும், சிம்மநாதனும் அதே பண்புடன் “நல்லது. சற்று நேரத்துக்கு முன் மெய்யுதவி மாயன் வந்தார் அழைப்பைக் கொண்டு... நிச்சயம் வருகிறேன்” என்றான்.

     “அவர் வந்தது அனுமதி வழங்கவும், உங்கள் வருகை உறுதிதானா என்று அறியவும்தான். என் வருகை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நேர் அழைப்பு. இளவரசி கொடுத்த ஓலையில் உங்கள் பெயரும் இருந்தது. வந்தோம். அவசியம் வருகை புரிந்து கவுரவிக்க வேண்டும்” என்று மீண்டும் வணங்கினாள் மங்கை நல்லாள்.

     தலையசைத்தான் சிம்மநாதன்.

     அவர்கள் சென்றதும், ‘இந்தச் சோழ நாட்டார் என்னென்னவோ விந்தைகள் புரிகிறார்கள். பூனையை யானையாக்குகிறார்கள். ஒன்றுமில்லாத, உப்புப்பெறாத விஷயத்தைப் பெரிது படுத்தி விட்டு மிகப்பெரிய பிரச்னையை அலட்சியமாகத் தூக்கியெறிந்து விடுகிறார்கள். ஒரு விநாடியாவது அவர்களில் எவராவது கலிங்கத்திலிருந்து ஒரு ஓலை வருகிறது. கங்கபாடியிலிருந்து ஒரு தூதுவன் வருகிறான்... ஏன் இம்மாதிரி தொடர்ந்து வருகிறார்கள்... அப்படி என்ன நடந்துவிட்டது என்று சிறிதளவாவது சிந்தித்திருந்தால் இது நேரம் உஷாராகியிருக்க மாட்டார்களா? அல்லது நாங்கள் உஷாராகத்தான் இருக்கிறோம், ஆனால் உங்களைத்தான் திசை திருப்புகிறோம் இம்மாதிரி சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி என்று எக்களிக்கிறார்களா? பின்னதுதான் உண்மையாக இருக்க முடியும். சோழர்கள் ஏமாளிகள் அல்ல.’