உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 8 இளவரசி ராஜசுந்தரி எழிலரசி என்பதிலோ, கலையரசி என்பதிலோ யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அவள் மனம் தேவையான அளவுக்குப் பக்குவப்படாத அதாவது இன்னமும் சிறுமி என்ற மனநிலையே கொண்டவள் என்பதாக அவளுடைய சகோதரர்களுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி ஒரு கருத்துண்டு. ஆனால் இளவரசிக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அவள் ஒரு பட்டாம் பூச்சி மாதிரி. எப்போதும் விளையாட்டுத்தான். குறும்பும் குதூகலமும் நிறைந்த பேச்சும், களியாட்டங்களும் அதிகம். நாலு சகோதரர்களிடையே ஒருத்தியல்லவா? மும்முடி ஒருவனிடம்தான் அவளுக்குச் சற்று அச்சம். அவனும் கடல் கடந்து போய்விட்டான். சோழகங்கன், இவளுடன் குழந்தை போல் விளையாடுவான். வீரசோழன் அப்படி விளையாடா விட்டாலும், அவளுடைய கேலிகளை, குறும்புகளை, கிண்டல் பேச்சுக்களைப் பொறுத்துக் கொள்ளுவான். சோழ மன்னராயிருக்கும் விக்கிரமனோ, சகோதரர்களில் கடைக்குட்டியானதால் ராஜசுந்தரிக்கு மிகவும் செல்லம் கொடுக்கிறான் என்பது அரசகுலத்தாரின் கருத்து. இதில் உண்மையில்லாமலில்லை. தவிர நாளை இளைய தாயாரின் மகளைச் சீராக நடத்தவில்லை என்ற ஒரு கருத்து இதே சோழ குலத்திடையே எழக்கூடாதல்லவா? தவிர மன்னனான பிறகு மாறிவிட்டானே என்றும் தங்கை நினைத்துவிடக் கூடாது. எது எப்படிப் போனாலும் யார் எப்படியிருந்தாலும் ராஜசுந்தரி தன் போக்கிலிருந்து சற்றும் மாறிவிடவில்லை... தனது அரண்மனையில் ஒரு கூத்து நடத்த வேண்டும் என்று அவளுக்கு ஏன் தோன்றியது? நாள் தவறாமல் அவள் பல கூத்துக்களை பார்த்திருக்கிறாள். அவளே சூரியனார் கோயிலில் அடிக்கடி தனது குருநாதர் முன்னிலையில் நடனம் ஆடியும் இருக்கிறாள். நாளையும் ஆடலாம் தன் விருப்பம் போல. தவிர இதே கூத்துக்கலையரசி ஏழிசை வல்லபியின் ஆட்டத்தையும் தன்னந்தனியாகவே அனுப்பவித்துப் பார்த்திருக்கிறாள். அவளிடமே சில நூதன நுணுக்கங்களைப் பயின்றிருக்கிறாள். இத்தனையும் இருந்தும் அவள் தன் அரண்மனையில் ஆட வேண்டும். அதற்கு அனைவரும் கூட வேண்டும். அதைக் கண்டு தான் மகிழ வேண்டும். இதற்கெல்லாம் காரணம். ஆகா! நம் இளவரசி மிகவும் சிறந்த கலையரசி மட்டும் அல்ல, ரசிகையும் கூட என்று பலரும் பாராட்ட வேண்டும் என்ற தற்பெருமையும் இருக்குமோ என்று கூடச் சிலர் நினைத்ததுண்டு. ஆனால் வாய் திறக்கமாட்டார்கள் யாரும். ஏன்? மன்னன் விக்கிரமனே கூட தங்கையின் ஆசைக்கு எதிராகச் செயல்படமாட்டானே. ராஜசுந்தரி அன்று காலை முதலே பரபரப்புடன் இங்கும் அங்கும் ஓடினாள். சாத்தனார், அதாவது இவளுடைய தாய் வழிப் பாட்டனாரான பெரும் பிடவூர்ச் சாத்தனார் மகள் அதாவது இவளுடைய சிற்றன்னை மிக மிகச் சிறந்த இசை மேதை. அந்நாளைய இசை உலகம் அவளை தமிழிசை வாணி என்று போற்றியது. அவளிடம் இவள் பயின்றவள். முகரி யாழ் என்னும் அற்புத இசைக் கருவியில் அக்காலத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஒரு சிலரே. விரல்விட்டு எண்ணக்கூடிய இந்த ஒரு சிலரில் இந்தத் தமிழ்வாணியும் ஒருவர் ஆவர். பிடவூர்ச் சாத்தன் மகள் இசை நிகழ்ச்சி என்றால் அன்றைய சோழ நாடே ஆகா! என்று மகிழ்ந்து பரவசமடையும். இப்படிப்பட்ட சிற்றன்னையை அன்று இளவரசி ராஜசுந்தரி அரண்மனைக்கு அழைத்து வந்துவிட்டாள். இதற்குப் பிறகுதான் எல்லாருக்கும் ராஜசுந்தரி இவளைப் பெருமைப்படுத்த, இவள் இசையை அனைவரும் கேட்டு மகிழ, கூத்தரசியின் கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறாள் என்பது தெரிந்தது. மாலை நகர்ந்துவிட்டது. அரச மாளிகை அமளி துமளிப்படலாயிற்று. இளவரசியின் அழைப்புக்கு இணங்கி வந்தவர்கள் ஏறத்தாழ இருநூறு பெருந்தலைவர்களும் அவர்களுடைய மனைவிமாரும், ஏன் குழந்தைகள் கூடத்தான். ஏனையோரைப் போல சிம்மநாதனும் மிகப்பிரமாதமான உடைகள் உடுத்து மிக எடுப்பான தோற்றத்துடன் வந்தான். வேல்நம்பி வணங்கி வரவேற்றான். வீரசோழன் சிரக்கம்பம் செய்து வரவேற்றான். பூந்துறையாரைக் காணோம். “மாமன்னர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார்” என்று இளவரசி அறிவித்ததும் கூட்டத்தில் ஒரு களிப்புக் கலந்த சலசலப்பு. மன்னர் தமது மெய்க்காப்பாளருடன் மண்டபத்தில் நுழைந்த போது அத்தனை பேரும் வணங்கி நின்றனர். இளம் வயது கம்பீரத் தோற்றமும், புன்னகை முகமும், எடுப்பான பார்வையும் கொண்ட ஏற்றமிகு விக்கிரம சோழ மன்னர் எல்லோருக்கும் ஒரு முறை சிரக்கம்பம் செய்துவிட்டுத் தமது இருக்கையில் அமர்ந்தும், நிகழ்ச்சிகள் அற்புதமான இசைப் பின்னணியுடன் துவங்கின. சிம்மநாதன் தனக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையிலிருந்து அரங்க மேடையை நன்கு பார்க்க முடிந்தது. இளவரசி மீண்டும் மேடையில் ஏறி “பிடவூர்ச் சாத்தனார் திருமகள் இசைத் தமிழ்வாணி அருள் பதம் பாடுவாள். தவிர இந்தக் கூத்து நிகழ்ச்சிக்கு அவர் பின்னணி பாடவும் இசைந்துள்ளார்” என்றதும் அனைவரும் கர ஒலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். ஆனால் சிம்மநாதன் கர ஒலியெழுப்ப மறந்துவிட்டான். ஏன்? தன்னையே ஒருகணம் மறந்துவிட்டான் அவன். ‘இளவரசி ராஜசுந்தரி தேவ அழகிகளான மேனகை ரம்பையெல்லாம் வந்து இவளிடம் அழகுப் பிச்சை வாங்க வேண்டும் என்று கூறத்தக்க அளவுக்கு இவ்வளவு அழகியா? இவள் உண்மையில் ஒரு மானிடப் பெண்ணா? அல்லது கந்தருவப் பெண்ணா!’ என்று வியந்த அந்தக் கங்க நாட்டுச் சிம்மன் தன்னைச் சற்று நேரம் மறந்ததில் வியப்பும் இல்லை, புதுமையும் இல்லை. “நீ ஒரு லட்சியத்துக்காகப் பிறந்தவன். எனவே பெண்ணாசை கூடவே கூடாது” என்று அவனுக்கு ராஜரத்ன விஜயகீர்த்தி பலமுறையும் எச்சரித்துள்ளார். தவிர இவனுக்கே பெண்கள் இலட்சியத்துக்கு இடையூறு செய்யக் கூடியவர்கள் என்றே நம்பியிருப்பவன். அதனாலேயே நாளது வரை அவன் பெண்களை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. தன்னுடைய நாட்டுப் பெண்கள் அழகிகள் என்பதிலும் அவர்களுக்கு இணை எந்த நாட்டிலும் இருக்க மாட்டார்கள் என்பதிலும் அவன் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாலும் தன் நாட்டு மகளிரைக் கூட அவன் நாளதுவரை விரும்பிப் பார்த்ததில்லை. இதன் காரணமாகவே இவனிடம் ராஜரத்ன விஜயகீர்த்திக்கு மிகவும் பிரியமும் நம்பிக்கையும் உண்டு. குழந்தைப் பருவத்திலிருந்தே இவனை அவர் பெண் வெறுக்கும் பிரம்மசாரியாக வளர்த்து விட்டதால் அவன் பெண்கள் இருக்குமிடத்திலோ, கலை கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திலோ, எட்டிக் கூடப் பார்க்க மாட்டான். ஆனால் இப்போது சோழ நாட்டுக்கு வந்தது முதல் தினந்தினம் கூத்தும் கும்மாளமுமாக இருப்பதால் இவனால் அவற்றிலிருந்து தப்ப முடியவில்லை. தவிர இன்று இளவரசியின் அழைப்பை நிராகரிப்பது என்பது அசாத்தியம். ஆகவே வந்தான். ஆனால் இங்கு வந்ததும் தன் மனம் இவ்வாறு ஒரே இடத்தில் அதுவும் ஒரு பெண்ணிடத்தில் போய் நிற்கும், நிலைத்திடும், தன்னையும் சூழலையும் மறக்கச் செய்திடும் என்று அவன் எதிர்பார்த்திருப்பானா? மேடையில் ஆடும் அழகியை யாரும் அழகி இல்லையென்று கூறிவிட முடியாது. ஆனால் அவள் சோழ இளவரசியின் முன்னர் ஒரு மின்மினிப்பூச்சி மாதிரிதான் என்று கூட எண்ணிவிட்டான் அவன். தான் இங்கு எதற்கு வந்தோம் என்பது கூட அவனுக்கு மறந்துவிட்டது. கூத்தைக் காணவந்தோம் என்பதை முற்றிலும் மறந்து சோழ இளவரசியைப் பார்க்க வந்ததாகவே, அவளை அப்படியே அள்ளி விழுங்கிவிடுவதற்கே வந்ததாக அவன் கண்கள் நினைத்தன போலும். இருந்தாற் போலிருந்து அவன் பக்கத்தில் இருந்தவர் அவன் மீது மோதிய மாதிரி ஒரு பிரமையோ என்னவோ. சட்டெனத் தன் கண்களைத் திருப்பினான் பக்கத்தில்... “மன்னிக்க வேண்டும். என் கை கொஞ்சம் நீளமானது. எனவே அது தங்கள் மீது இடித்துவிட்டது” என்று அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவன் கூறியதும் சிம்மநாதன் மன்னிப்பு ஒரு மாதிரியான கேலிமுறையில் வருவதாகத் தோன்றியது. “என்ன கை நீளமா?” என்று வெடுக்கெனக் கேட்டான். “ஆமாம். எனக்குக் கைநீளம் என்பது இங்கு கொஞ்சம் பிரபலமான விஷயம். ஆனால் கண்கள் உங்களுடையது மாதிரி கூர்மையானதல்ல” என்று அதே தொனியில் கூறியதும் தன்னை இடித்துக் காட்டுகிறான் ஆசாமி என்பதைப் புரிந்து கொண்டு பிசகிவிடாமல், “மூளை கூர்மையாக இருக்கும் என்று சொல்லுவார்கள்” என்றான் தனது குரலில் கிண்டல் தொனியை வெகுவாகக் கூட்டி. ஆனால் பக்கத்திலிருந்தவன் கோபக்காரனாயில்லாமல் குறும்புக்காரனாயிருந்ததால் சட்டென ஆத்திரங் கொள்ளாமல் “உண்மைதான், நீங்கள் மூளையுள்ளவர்களுக்கென்று கூறுவது. ஆனால் கண்களை ஒரே இடத்தில் குத்திட்டுப் பார்ப்பது உயிரற்ற பிரேதம்தான் என்று எனது பாட்டன் அடிக்கடி கூறுவார். கண்கள் இமைக்காமல் மூடாமல் திறக்காமல் ஒரே இடத்தில் குத்திட்டு நிற்பதென்றால் அந்த உயிரற்ற உடலுக்கு மூளை இருந்தென்ன? கூர்மையிருந்தென்ன? ஒரு பயனும் இல்லையே.” ‘சரி, வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறான் இவன்’ என்று நன்கு புரிந்தது சிம்மநாதனுக்கு. ஆனால் அடுத்தவன் “வளவள என்று ஏன் பேசுகிறீர்கள்... அவசியமான பேச்சானால் சற்று வெளியே சென்று பேசுவது தானே?” என்று தேள் கொட்டுவது மாதிரி பேசினான் குறுக்கே. குறும்புக்காரன் விடவில்லை. “நண்பரே, ஒரே இடத்தில் கண்கள் உற்றுப்பார்த்தால்... ஆடாமல் அசையாமல், சிமிட்டாமல் அந்தக் கண்கள் யாருடையதாயிருக்கும் என்பது எங்களுக்குள் ஒரு சிறு உரையாடல். அவ்வளவுதான்...” என்றான் சிரித்தபடி. “இது தெரியாதா? குறளி வித்தைக்காரனுக்கும், உயிரிழந்த பிணத்துக்கும்தான் அப்படியிருக்கும்? சற்று பேசாமலிருங்கள்” என்று அவன் கூறிவிட்டுக் கூத்தைக் கவனிக்கலானான். குறும்புக்காரன் இப்போது சிம்மநாதனிடம் மெதுவான குரலில் “நண்பர் புத்திசாலிதான்” என்றான். சிம்மநாதனுக்கு ஒரே ஆத்திரம். ‘எவனோ ஒருவன் தன் மாதிரி கூத்துப் பார்க்க வந்தவன் தன்னை, அதாவது தான் இளவரசியையே பார்த்துக் கொண்டிருப்பதை உற்று நோக்குவதாவது... போதாதற்கு அதைக் காட்டி கேலி செய்வதாவது மட்டும் மரியாதை இல்லாமல். சோழர்களில் சிலர் இப்படி இருப்பவர் போலிருக்கிறது. இதை இப்படியேவிட்டால் இவன் தன்னை பயங்கொள்ளி என்று நினைத்து மேலும் சீண்டுவான்’ என்று நினைத்து “நான் இங்கு வந்தது கூத்தினைப் பார்க்க. வம்பு செய்யவல்ல. அது உமக்குத் தேவையானால் வெளியே சென்றதும் கவனிக்கலாம்” என்று கூறிவிட்டு மீண்டும் அரங்க மேடையை நோக்கலானான் இத்துடன் விவாதம் முடிந்துவிட்டதென்ற பாவனையில். எனினும் அவன் பார்வை இளவரசி இருந்த இடத்தையே நாடியது. எனவே குறும்புக்காரன் விடத் தயாராயில்லை. “மேடையில் கூத்து நடக்கும் பகுதி சற்று வலது பக்கமாக. இடது பக்கமுள்ளது பின்னணி இசைக்குழுதான்” என்றான் மீண்டும் அவன் வாயைப் பிடுங்க. சிம்மநாதன் இப்போது உண்மையில் கோபக்காரனாகிவிட்டான். “நீங்கள் வேண்டுமென்று என்னுடன் வம்பு செய்யத் துடிக்கிறீர். இங்கே தேவையில்லை. வாரும் வெளியே” என்று எழுந்ததும் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ஆக எல்லாப் பக்கத்திலிருந்தும் “அமைதி... அமைதி ஆட்டத்தைப் பாருங்கள். பேசாதீர்கள்” என்று சரமாரியாகக் குறுக்கிட்டதும் சிம்மநாதன் உட்கார்ந்து விட்டான். குறும்புக்காரன் “இதுவும் போதாதகால பலன்தான்” என்றான். சிம்மநாதனுக்கு அங்கேயே அவன் மண்டையைப் பிளந்து விடலாமா என்ற ஆத்திரம். ஆனால் இங்கு என்ன செய்ய முடியும். யாருக்குப் போதாத காலம் என்கிறான் இந்த மூடன் என்று அடுத்தபடி ஆராயவும் செய்தான். ஊர் புதிது, ஆள் புதிது எனவே எச்சரிக்கை... கோபம் பாவம் சண்டாளம் என்றாரே குருநாதர்... சற்றே நிதானித்தான். வீண் வம்புக்கு இழுக்கும் இவன் பக்கம் பலமில்லாமல் ஏதாவது ஒரு பிடியில்லாமல் இப்படி வம்பு செய்யத் துணிந்திருக்க மாட்டான். எனவே குருநாதரின் எச்சரிக்கையைக் கட்டாயம் இப்போது கடைப்பிடித்தாக வேண்டும்.. ஆமாம். இச்சமயம் யாரோ சரசரவென்று தன் பின்னால் வந்து தொடுவது போன்ற உணர்வு ஏற்பட்டுத் திரும்பிய போது “இளவரசர் வீரசோழன் தங்களை அழைத்து வரும்படி உத்தரவு” என்று குரல் கேட்டதும்... “இப்பவா? அல்லது...” என்று சிம்மநாதன் கேட்டதும் “இப்பவேதான்” என்று பதில் வந்தது. சட்டென எழுந்தான். குறும்புக்காரன் “சற்று நேரம் குத்திட்டுப் பார்க்கும் கண்களுக்கு ஓய்வு போலும்” என்றதும் அவனை வெறுப்புடன் பார்த்துவிட்டு, தன்னை அழைத்தவனுடன் வெளியே வந்தான். ‘கூத்தின் உச்சகட்டம் இப்போது துவங்கும். ஏன் திடீரென்று வீரசோழன் அழைக்க வேண்டும்? அதுவும் ஒரு நொடி தாமதமும் இல்லாமல்’ என்று யோசித்தபடி பின் தொடர்ந்தான் அவனை. “வாரும் சிம்மநாதரே. தங்களை எங்கள் இசைத் தமிழ் வாணி சந்திக்க விரும்பினார். அதற்காகவே அழைத்தேன். ஏனெனில் இப்போது இடைவேளையாதலால்” என்று கூறிவிட்டு அரங்கத்தின் பின் பகுதி சென்றான். சிம்மநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை. இதென்ன புதிய சிக்கல்? யார் அந்த தமிழ் வாணி... அவளுக்கு என்னை எப்படித் தெரியும்... சற்று நேரம் கூத்தினை... இல்லை இல்லை இளவரசியைப் பார்க்கலாமென்றால் அங்கே ஒரு வம்பன், இங்கே ஒரு கிழவி... இதெல்லாம்...’ “இப்படி வாரும் சிம்மநாதரே. இவர்தான் எங்கள் பெரும்பிடவூர்ச் சாத்தனார் திருமகள் இசைத்தமிழ் வாணி என்னும் கலைமகள். இவர் கங்கபாடியிலிருந்து வந்துள்ள நல்லெண்ணத் தூதுவர் சிம்மநாதன்...” ஒரு பேரிளம் பெண் அல்ல, வயது முதிர்ந்தவளும் அல்ல. ஆனால் இவளன்றோ பெண்களில் ஒரு ரத்னம் என்று கூறும்படியான தோற்றத்துடன் நின்ற தமிழ்வாணியைக் கண்டு தன்னையறியாமலே கையெடுத்துக் கும்பிட்டான் சிம்மநாதன். இதற்குள் வல்லபியின் தாய் அங்கு வர அவளுக்கும் வணக்கம் சொன்னான். “நீ கங்க நாட்டான் என்றதும் நான் பார்க்க வேண்டுமென்று விரும்பியது ஏன் தெரியுமா?” என்று தமிழ்வாணி கேட்டதும் சிம்மநாதன் பதில் கூறாது பணிவாக அவளை நோக்கினான். “உங்கள் நாட்டு மன்னர் உதயாதித்தியவர்மர் பற்றி உனக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன்” என்று அவள் கூறியதும் துணுக்குற்றுப் பார்த்தான் நிமிர்ந்து. “நான் அவரை, அவர்தம் முதிய பிராயத்தில் பார்த்திருக்கிறேன்” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு நிறுத்தினான் மேலே எதுவும் கூறாமல். ஆனால் தமிழ்வாணி தயக்கமின்றி பேசினாள். “அவருடைய இதயங்கவர்ந்த ராணியைக் காலமெலாம் அவருக்காகவே வாழ்ந்த லச்சவிதேவியை, நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவரே இந்நாட்டுக்கு வந்திருந்தார். அவர் பேரழகி மட்டும் இல்லை. பெரும் இசைவாணி. உண்மையிலேயே அவர் அந்த நாளின் ஏழிசை வல்லபி என்று கூறலாம். அவருடைய இசையில் மயங்கித்தான் உதயாதித்திய மன்னர் தம்மையே மறந்து கிடந்தார் என்று கூறுவதுண்டு. அவருடைய இசைப் புலமையைப் பரிமளிக்கச் செய்தது அவருடைய சுநாதமான குரலும், இசையில் அவருக்குள்ள எல்லையற்ற ஈடுபாடுமேயாகும். இம்மூன்றும் ஒருவருக்குப் பூரணமாக இருக்குமாகில் அவர் இசைத் தெய்வமாகவே மாறிவிடுகிறார் என்றும் கூறிவிடலாம். தெய்வமானவரிடம் யார்தான் மயங்காதிருக்க முடியும்?” சிறிது நேரம் அவள் எதுவும் சொல்லவில்லையாயினும் எதிரே ஒரு பரவச உணர்ச்சியில் அவர் திளைக்கிறார் என்றே, அது காரணமாகவே ஏதோ சொல்ல நினைக்கிறார். ஆனால் அது நிச்சயமாகக் கலிங்க மன்னர் உதயேந்திரவர்மர் பற்றியதல்ல. அவரை இழிவுபடுத்திப் பேசுவதாகவும் இருக்காது என்று நினைத்து சற்றே நிம்மதியுடன் பொறுமையாக இருந்தான் அவன். “உதயாதித்தியர் பற்றி எவ்வளவோ என்னென்னவோ சொன்னாலும் ஒன்று மட்டும் உண்மை. லச்சவிதேவியின் சிறப்பை அன்றே அறிந்து பாராட்டிப் பாதுகாத்த பெருமை அவரையே சேரும். ஒருவரிடம் நாம் அதிகமான அன்பைச் செலுத்தும் போது அவர்களுக்கு நாம் அடிமையாகி விட்டதாக கூறுவது இயல்பேயாகும். இதனால் உதயாதித்தியருக்கு எவ்வித அவமதிப்புமில்லை. ஒரு உண்மைக் கலையரசிக்கு உறுதுணையாயிருந்தமையைப் பெற்றவராவார் அவர்” என்று தமிழ்வாணி கூறியதும் சிம்மநாதன் உண்மையிலேயே பெருமை கொண்டான். ஏனெனில் அவனுடைய நாட்டிலேயே உதயாதித்தியவர்மனைப் பற்றிக் கூறப்பட்டதெல்லாம், அவர் நாட்டை மறந்து ஒரு நங்கையின் அடிமையாகி விட்டார். இது கேவலம். மக்களையும் நாட்டையும் மறந்து விட்ட மன்னர் நம்மை ஆளும் தகுதி பெற்றவர் அல்ல என்று குறுநில மன்னர்கள் பலர் மக்களின் ஒரு சிலரின் ஆதரவு பெற்று கலகம் விளைத்ததுண்டு. ஆனால் உதயாதித்தரை இவர்களால் நாட்டிலிருந்தோ, ஆளும் உரிமையிலிருந்தோ ஆட்சி பீடத்திலிருந்தோ அகற்ற முடியவில்லை. என்ன குறை கண்டாலும் அவரே எங்கள் மன்னர் என்று ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அவரை ஆதரித்தனர் மக்கள். அதாவது அவர் அந்திம காலம் வரை. “நீங்கள் சொல்வது உண்மை அம்மணி. எங்கள் உதயாதித்தியர் பற்றிய அவதூறுகளை எங்களவர்களே பரப்பிவிட்டு அவலப்படுத்தினர்” என்று மனம் நொந்து கூறினான் சிம்மநாதன். ஆனால் அவள் அதைக் கவனிக்காதது போல “உதயாதித்தியர் எங்கள் நாடு வந்திருந்த போது நான் சிறுமி. எங்கள் தந்தை மகாகவியாய் இசை வல்லுனருமாயிருந்ததால்தான் லச்சவிதேவி எங்கள் அரண்மனையிலேயே ஒரு மண்டலம் தங்கியிருந்தாள். எனக்கு அந்த இசைத்தேவியே ‘லஹிரி’ என்னும் அற்புதமானதொரு ராகத்தைக் கற்றுக் கொடுத்தார். சுமார் முப்பது நாட்கள் ஆயிற்று நான் இந்த ராகத்தைப் பயில. அவ்வம்மணி தனக்கே இது பயில நெடுங் காலமாயிற்று என்று கூறினார். நான் பயின்றதும் இந்த ராகத்திற்கேற்ப என் தந்தை ஒரு பாடலையும் இயற்றினார். எங்கள் பேரரசர் முன்னே நான் இந்த அற்புதமான ராகத்தில் இயற்றப்பட்ட அரிய பாடலைப் பாடி அவர்களுடைய ஆஹாகாரத்தைப் பெற்ற பாக்கியத்தை இன்றளவும் மறந்ததில்லை. இந்தப் பெருமை நிச்சயமாக அந்த லச்சவிதேவியைச் சேர்ந்ததேயாகும்” என்று ஏதோ கனவை விளக்குவது போல அவர் கூறியதும் சிம்மநாதன் மகிழ்வுடன் கேட்டாலும் அதெல்லாம் எதற்கிப்போது என்று நினைக்காமலுமில்லை. “நீங்கள் இப்படியெல்லாம் பாடல் என்றும் இசையென்றும் அதிலேயே மயங்கிக் கிடந்த போது நாட்டிலே நிம்மதியிருந்தது, மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் சின்னம்மா. மன்னர்களும் போரையும் அழிவையும் மறந்திருந்தார்கள். ஆனால் கலை காலத்துக்கும் வாழ்க்கைக்கும் அழகு செய்கிறது என்பதை மறந்ததும் போரும் அழிவும்தான் உண்டாகிவிடுகிறது” என்று ஒரு சிறு விளக்கம் கூறியபடி அங்கு இளவரசி ராஜசுந்தரி வந்ததும் அனைவரும் அப்பக்கம் திரும்ப சிம்மநாதனோ அவள் மீது வைத்த கண் வாங்காது பார்த்து நின்றான். “மகளே, இவர் கங்க நாட்டிலிருந்து மாமன்னரை பேட்டி காண வந்துள்ள நல்லெண்ணத் தூதர் சிம்மநாதன். இவள் என் அக்காள் மகள் இளவரசி ராஜசுந்தரி” என்று தமிழ்வாணி அறிமுகம் செய்து வைத்ததும் இளவரசி அவனைச் சற்றே ஊன்றிப் பார்க்க அவனும் தான் அரச குமாரிக்கு வணங்க வேண்டுமென்பதை மறந்து அப்படியே பார்த்தான். அவனுடைய இந்தப் பார்வை இளவரசியை என்ன செய்ததோ புரியவில்லை. சட்டென சிரக்கம்பம் செய்ததும் அடடே! மறந்துவிட்டோம் போலிருக்கிறது என்று நினைவு பெற்று வணங்கினான் முறைப்படி சிம்மநாதன். அவளும் வணங்குவது போலச் சற்றே கையசைக்க... இடைநேரம் முடிந்ததை அறிவிக்க மணிகள் ஒலித்தன. “சரி சிம்மநாதா, மீண்டும் நாம் சந்திப்போம்” என்று தமிழ்வாணி சொல்லிவிட்டுத் திரும்பியதும் இளவரசி மீண்டும் அவனை ஒரு முறை பார்த்ததும் அவன் இந்த உலகிலேயே இல்லாத ஒரு நிலையைச் சில கணங்கள் செய்துவிட்டன. ஆமாம். அந்தச் சில கணங்கள்தான். அவன் அடியோடு மறந்து அப்படியே அசையாச் சிலையாக நின்றுவிட்டான் என்று கூறலாம். வீரசோழன், “நீங்கள் உங்கள் இருக்கைக்குச் செல்லலாம். ஒரு மெய்யுதவி அழைத்துப் போவான்” என்று கூறியதும்தான் அவனுக்கு இப்பூவுலக நினைவு வந்தது. சட்டெனப் புறப்பட்டுவிட்டான் அவன். கூத்தின் இடைவேளையில் இவனுக்கும் ஒரு இடையீடு. அது கிடைத்த வகையும் உண்டாக்கிய அனுபவமும் மகத்தானது, மறக்க முடியாதது. இந்தச் சில கணங்களேகூட அவன் வாழ்க்கையில் ஏதாவது மாறுதலையுண்டாக்கி விடுமோ? இளவரசி அருகில் வந்தாள். இன்ப உலகமே இவனை நாடிவந்த மாதிரி ஒரு எழுச்சி. அவள் பேசினாள். இந்த உலகமே அவன் ஒருவன்தான் அங்கிருக்கிறான். நான் உனக்காக இருக்கிறேன் என்ற மாதிரி ஒரு கிளர்ச்சி. சிரக்கம்பம் செய்தாள், புன்னகைத்தாள்... இது இரண்டும் போதுமே. எதற்குத் தனியாக உனக்கு ஒரு வாழ்க்கையும் உலகமும் என்று கேட்பது மாதிரி. பிறகு அரசகுமாரிக்கே உரிய அந்தஸ்தான முறையில் வணங்கினாள், வணக்கத்தை ஏற்றாள். அப்புறமும் ஒரு நொடி ஊன்றி நோக்கினாள். ஆஹா! இதுவன்றோ அனைத்தும் என்று அந்தப் பார்வையே அறிவித்ததே... அப்படியானால்... ஏன் இந்தத் தூது என்ற பேரில் ஒரு மோசமான நோக்கத்தை லட்சியம் என்ற பேரில் நல்ல மனிதத் தன்மையை இழந்து கொடுமையை நிறைவேற்றப் பயணம் ஏன்? அவள் சொன்னாள் வெகு அழகாக! “இசையிலும் பாட்டிலும் மயங்கிக் கிடந்த போது நாட்டில் நிம்மதியிருந்தது. மக்கள் நலமாக வாழ்ந்தனர். மன்னர்கள் போரையும் அழிவையும் மறந்திருந்தனர். கலை காலத்துக்கு அழகு செய்கிறது. அதை மறந்ததும்...” ஒரு சிறு பெண் வாயிலிருந்து எப்பேர்க்கொத்த உன்னதக் கருத்துள்ள சொற்கள். பெரியோர்கள் சொன்னவைதான். என்றாலும் இளம் பெண் ஒரு பேரழகி இதைப் பொருத்தமான காலத்தில் சொன்னது எவ்வளவு விவேகமானது! ஆம். அவள் பேரழகி மட்டுமல்ல. விவேகியும் கூட. ஒரே இடத்தில் அழகும் அறிவும் கூடுவது என்பது அசாத்தியம். இந்தச் சோழ இளவரசியிடம் அழகு, அறிவு, கலையார்வம், இங்கிதம் அனைத்துமே கூடியிருக்கிறது. இவளை... இத்தகைய சுந்தரியை... சகலகலாவல்லியை... சட்டெனச் சுதாரித்துக் கொண்டான் அவன். ஏனெனில் கூத்து முடியும் தருணம். அனைவரும் எழுந்திருக்கிறார்கள். தன்னை மறந்த சிந்தனையில் இப்படியே உட்கார்ந்திருந்தால்... கலை மண்டபத்திலிருந்து அனைவரும் வெளிவருகின்றனர். சிம்மநாதனுக்கு அங்கிருந்து நகரவே மனமில்லை. போதைப் பொருளை உட்கொண்டவனைப் போல நடையில் கூட ஒரு தடுமாற்றத்தை உண்டுபண்ணிவிட்டது அவனுடைய மனநிலை. நாளதுவரை அவன் பெண், பொன், குடி எதிலும் நாட்டம் செலுத்தியதுமில்லை. இனியும் அவற்றின் பக்கம் போகக்கூடாது என்றுதான் உறுதி பூண்டிருந்தான். ஆனால் இந்த இளவரசி ராஜசுந்தரி ‘பெண்’ பற்றிய விஷயத்தில் அதாவது வேறு எந்த ஒரு பெண்ணையும் அல்ல, தன் ஒருத்தியையே அவன் விரும்பியாக வேண்டும், தனக்காக ஏங்க வேண்டும், தன்னையே கூட மறந்துவிட வேண்டும் என்ற ஒரு நிலையைக் கடந்த ஆறு நாழிகை நேரத்துக்குள் செய்துவிட்டாளே அவள். நீண்ட ஒரு பெருமூச்சுவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான். நிலாக்காலமல்லவாதலால் எங்கும் இருள் கப்பியிருந்தது. தன்னுடைய பாதுகாப்புக்கு நிச்சயமாக ஒரு ஆளையோ அல்லது மெய்யுதவியையோ அனுப்புவான் வீரசோழன் என்று நினைத்த மாத்திரத்திலேயே ஒருவன் வந்து நின்றான். “தங்களுடன் துணை செல்ல எனக்கு உத்தரவு” என்று அவன் பணிவாக அறிவித்ததும் நடந்தான் முன்னே அலட்சியம் செய்யாமல். அவன் பின்தொடர, ராஜவீதி தாண்டி தான் இருக்கும் வீதியில் திருப்புமுனையைச் சேர்ந்தவன் பின்னே, படபடவென்று சத்தமெழுப்பிக் கொண்டு இரு குதிரைகள் வேகமாக வந்து சட்டென நின்றன. சிம்மநாதனுக்குத் துணைவந்தவன் சட்டெனத் திரும்பிப் பார்த்துவிட்டு நேராக நிமிர்ந்து விரைப்பாக நின்று வணக்கம் செலுத்தினான் திடீரென்று நின்றவர்களுக்கு. ‘யார் இவர்கள்? இவர்களைக் கண்டதும் இவன் பயந்து பணிவுடன் வணங்குவானேன்?’ என்று யோசித்தவன் காதில் “யார் இவர் வேலா?” என்று அதிகாரத்தொனியில் குதிரைகள் ஒன்றின் மீது இருந்த ஒருவன் கேட்டதும் “கங்க நாட்டு நல்லெண்ணத் தூதுவராக வந்துள்ள சிம்மநாதன் என்பவர் இளவரசே!” என்று மிகவும் அடக்கமாகக் கூறியதும் “ஓகோ! சரி... ஜாக்கிரதையாகப் போய்ச் சேர்த்துத் திரும்பி என்னை வந்து நகர எல்லையில் பார்” என்று கூறியதும் “உத்தரவு!” என்று அதே அடக்கத்துடன் பதில் அளித்தான் வேலன் என்பவன். சட்டென அந்தக் குதிரை புறப்பட்டு விட்டது. ஆனால் உடன் இருந்த குதிரை வீரன் “நானும் அங்கு இருப்பேன் வேலா. உன்னுடைய கண்கள் நாலா திசையிலும் சுழலாமல் ஒரே இடத்தில் குத்திட்டு நிற்கும்படி செய்து கொள்ளாதே, புரிகிறதா?” என்று மற்றொரு குதிரையில் இருந்தவன் வேடிக்கையாக எச்சரித்ததும் சிம்மநாதன் திடுக்கிட்டான். ஆனால் வேலன் மீண்டும் பணிவுடன் “உத்தரவு மண்டலாதிபதி அவர்களே!” என்று கூறியதும்.. ஒரு அலட்சியச் சிரிப்புடன் முன்னே செல்லும் குதிரை வீரனைப் பின்பற்றிச் சென்றான் குறும்பாகப் பேசியவன். சிம்மநாதன் மீண்டும் கோபத்துக்குள்ளானாலும் சற்றே நிதானித்து “முதலில் சென்றவர்தான் இளவரசர் சோழகங்கனா?” என்றதும் “ஆமாம், அவருக்குப் பின்னே சென்றவர் மகாமண்டலாதிபதி வண்டையூர்த் தொண்டைமான் மகன் வீரபராந்தக வயிரவத்தொண்டைமான்” என்றதும் “ஓகோ! அப்படியா?” என்று மிக நிதானமாகவும் அதே சமயம் ‘இதுதானா அந்த வெட்டிப் பேச்சுக்கு இடமளித்திருக்கிறது’ என்றும் எண்ணினான். ‘சோழகங்கனுக்குத் தான் வேண்டியவன் என்ற எண்ணமே அவனை இம்மாதிரி தற்பெருமையும் திமிரும் கொள்ளச் செய்துள்ளது என்றால் அதை உடனடியாகக் கத்தரித்துவிட வேண்டியது. அப்படியில்லை இன்னும் பெரிய இடத்தில் இவனுக்குச் செல்வாக்கு உண்டு என்றால் அவசரப்பட்டுவிடக் கூடாது. ராஜதந்திர முறையில் கிள்ளியெறியப் பார்க்க வேண்டும்’ என்றும் நினைத்தான். ‘ஆனால் இவனை இப்படியே விட்டுவிட்டால் நமக்கு இங்கே மதிப்பு திடீரென்று குறையவும் இடமுண்டு. இப்போதைய நிலையில் அரண்மனையிலும் சரி, சோழ ஆட்சி பீடத்திலும் சரி, இதர பெருந்தலைகளிடமும் சரி, தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் நிச்சயமாக உருவாக வேண்டும். எனவே அந்த நோக்கத்தில் செயல்பட்டால்தான் இலட்சியத்தை நோக்கிச் செல்லுவதில் இங்கு சூழ்நிலை ஒத்து வரும். இதற்கு மாறாக இருக்குமானால் நமக்கும் பயனில்லை, நமது லட்சியமும் சாதிக்கப்படாது...’ மாளிகை வாயிலில் இருந்த காவலன் வணங்க, வேலனும் வணங்கித் திரும்பினான். இரவு நேரம் ஆகிவிட்டதால் சொற்ப ஆகாரமே உட்கொண்டுவிட்டு சமையற்காரனை அனுப்பியவன், தன் அறைக்குள் நுழைந்ததும் தூக்கமும் இதோ வந்து கொண்டிருக்கிறேன் என்று அவனை எச்சரித்தது ஒரு கொட்டாவி மூலம். சற்றுநேரம் ஏதேதோ சிந்தித்தபடி அறைக்குள்ளேயே உலாவியவன் மேலும் சிந்திக்காமல் தடுத்த தூக்கத்தை விலக்க முடியாமல் மஞ்சத்தில் படுத்தான். உடன் தூங்கிவிட்டான் என்றாலும் அவன் அன்று கண்டதெல்லாம் இளவரசி பற்றிய கனவே. |