விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

9

     மறுநாள் காலையில் சிம்மநாதன் எழுந்த போது அவனுடைய உற்ற தோழன் உலூகன் முகத்தில்தான் விழித்தான். போன காரியம் காயா பழமா என்று வாய்விட்டுக் கேட்காமல் அவன் முகத்தோற்றத்திலிருந்தே ஊகிக்க முயன்றான் அவன். அது வெற்றிக் களையா அல்லது தோல்விக் களையா என்று கூற முடியாவிட்டாலும் வியப்புக்களை என்று நிச்சயம் கூறிவிட முடிந்தது.

     “ஆமாம் தலைவரே, நான் அங்கு சென்ற போதும் சரி, முட்டத்து மடத்து அடியாரைச் சந்தித்த போதும் சரி எவரும் தொடரவில்லை. உடன் இருக்கவும் இல்லை. இதைவிட நாங்கள் பேசிய போது ஏதோ தனிக்காட்டினுள் எவர் கவனமும் தலையீடும் இல்லாதபடி சுயேச்சையாக இயங்குவது மாதிரி இருந்ததேயன்றி மாறாக அல்ல” என்று வியப்புடன் கூறியதும் சிம்மநாதனும் வியப்புற்றான்.

     ‘வீரசோழனின் வேவுக்காரப்படை, சோழகங்கனின் ஊடுருவிப் படையெல்லாம் மிகப் பயங்கரமானவை என்று நம் குருநாதர் எவ்வளவோ சொன்னாரே. இங்கு வந்தது முதல் எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கிறதேயன்றி எதிர்பார்த்த மாதிரி இல்லையே. கலிங்கத்திலிருந்து தாடிப்பெரியார் வந்து போனது கூட இந்தக் கண்காணிப்புப் படையினர் கவனத்தைக் கவரவில்லையே. கவனத்தைக் கவரவில்லையா அல்லது கவனிக்கவே அவர்கள் முயற்சிக்கவில்லையா. சோழ நாட்டின் மூன்று கண்கள் என்று கூறுவார்களே. இந்த மூன்று படைகளையும்... இப்போது அவை எப்படிச் செயல் இழந்து போய்விட்டது? அல்லது நம்மை ஏமாற்ற அவர்கள் யாவரும் செயலிழந்தவர்களாக நடிக்கிறார்களா?’

     உலூகன் மேலும் சொன்னான்.

     “நமது முட்டத்தடிகள் பல விஷயங்களைப் பேசினார். உங்களிடம் இங்கு எவ்வகையில் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் சொன்னார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக நீங்கள் அங்கு வருவது நலம் என்றார். ஏனெனில் நாம் சற்றும் எதிர்பாராத வகையில் இங்கு ஒரு மாபெரும் மண்டலாதிபதி நமக்கு உதவி செய்வார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெரும் வியப்புக்குரிய உதவிச் செய்தி” என்று அவன் கூறியதும் சிம்மநாதன் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்து... “என்ன... என்ன? ஒரு சோழ மண்டலாதிபதியா நமக்கு உதவியாக...? அதிசயமாயிருக்கிறதே!” என்று பதறினான்.

     “ஆமாம் தலைவரே. அவர் என்னிடம் இன்னும் பெயரைச் சொல்லவில்லை. அப்படி அவர் உஷாராக இருப்பதும் நல்லதுதான். ஆனால் தொண்டை மண்டலமே இதனால் சோழர்களுக்கு விரோதமாகக் கிளர்ந்தெழும் நிலைமை எழும் என்றார். தவிர சில தினங்களுக்கு முன்னால் குறங்கணிப் பகுதிவாழ் மக்கள் சோழர்களுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்துப் படாதுபாடு படுத்திவிட்டார்களாம். அது முதல் அங்கு கெடுபிடி அதிகமாகிவிட்டதாம். யாரோ வண்டையூர் தொண்டைமானாம். அவர் மகனாம் அவன். அப்பகுதி வாழ் மக்களை அடக்கிவிட்டான். அவன் பெயரைக் கேட்டாலே இப்போது அப்பகுதி மக்கள் நடுங்குகின்றனர்.”

     “ஓகோ! அப்படியா சங்கதி!” என்று சில நொடிகள் யோசித்தவன் ‘வண்டையூர்த் தொண்டைமான்... தொண்டை மான் என்றால் கலிங்கம் வென்ற கருணாகரத் தொண்டைமானுக்கு இவன்... ஏதோ மிக நெருங்கிய உறவு... ஆமாம்... நிரம்ப எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். நம்மை ஏற்கெனவே அவனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆதலால்தான் அவ்வாறு கேலியும் பேச்சும் மேற்கொண்டு வம்பு துவங்கியிருக்கிறான். உள்ளூர் யானை அயலூரில் பூனைதானே... எனவே காலங் கருதிக் காத்திருக்க வேண்டும்.’

     “பிறகென்ன சொன்னார் அடிகள்?”

     “வெள்ளை மயில் வந்து சேர்ந்துவிட்டது. கவலை வேண்டாம் என்றார்.”

     ஒரு பெருமூச்சுவிட்ட சிம்மநாதன் தொடர்ந்து “ரத்னகிரீடம் பற்றி கேட்டிருப்பாரே?” என்றான்.

     “ஆமாம். இரண்டுமுறை வற்புறுத்திச் சொன்னார். ‘நாம் திரும்பும் போது நிச்சயம் காணலாம். ஆனால் அதற்குப் பிறகு தனக்கு மட்டும் இங்கென்ன வேலை?’ என்று பரபரத்தார். திரும்பத் திரும்பக் கங்கபாடியைப் பற்றியே பேசினார்.”

     சிம்மநாதன் சிறிது நேரம் பேசாதிருந்தான். உலூகன் மேலும் அங்கு நடந்தவற்றையெல்லாம் தொடர்ந்து கூறினான். இடையே இவன் எதுவும் கேட்டுக் குறுக்கிடவில்லை.

     பிறகு சொன்னான். “நாம் இனி இங்குதான் வேகமாக இயங்க வேண்டும் உலூகா. நம்மை யாரும் கண்காணிக்கவில்லை, யாரும் சந்தேகிக்கவில்லை, தொடரவில்லை என்று அலட்சியமாக இருப்பதற்கில்லை. ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் நம்மை சுயேச்சையாகவிட்டு வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எனவே நிரம்பவும் நாம் உஷாராகச் செயல்பட வேண்டும். இன்னும் ஒரு நாழிகையில் ராஜமாளிகையிலிருந்து நமக்கு அழைப்பு வரும். எனவே நீ போய்க் குதிரைகளைத் தயார் செய். கம்பீரமாக இருக்கட்டும் அலங்காரமும் தோற்றமும்” என்று சொன்னதும், உலூகன் “இதோ அரை நாழிகையில் அனைத்தும் தயாராகிவிடும்” என்று கூறிவிட்டுச் சட்டென அப்பால் சென்றான்.

     பரபரவென்று செயல்பட்ட சிம்மநாதன் தன்னுடைய காலை நேர வேலைகள் யாவையும் முடித்துக் கொண்டு சோழ மன்னரைப் பேட்டி காணும் கடமைக்குத் தயாரானான். கங்க நாட்டாரின் வழக்கத்திலிருந்த நீண்ட கறுப்பு அங்கியை உடுத்து, பட்டு வேஷ்டி பீதாம்பரத்தை மாலையாகப் போட்டு, தலையில் அவர்களுக்கே விசேஷமான ஜடாமுடி போன்ற தலைப்பாகை அணிந்து நிலைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொண்ட போது அவனுக்கே “பேஷ்! பரவாயில்லை” என்று சொல்லிக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது.

     நாலு குதிரைகள் பூட்டிய மிக அழகான ஒரு சிறு தேர் போன்று வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. அதில் சோழ மெய்க்காவலர்களுக்கே உரிய ஆடையணிகளையும் நீண்ட வாளையும் தரித்த நாலுபேர்கள் முன்னும் பின்னுமாக இருந்தனர். வேவுகாரப்படையின் உபதலைவனான வேல்நம்பியின் தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. அவனுடைய அலங்காரம் வேவுகாரப் படையினருக்கே உரியது. வேகமும் விறுவிறுப்புமுள்ள மிடுக்கு நடையில் வந்த அவன் முறைப்படி சிம்மநாதனை வணங்க அவனும் பிரதி வணக்கம் செய்தான்.

     ஒருமுறை சிம்மநாதனை ஏற இறங்கப் பார்த்த வேல்நம்பி “நான் இப்போதுதான் முதல்முறையாக ஒரு கங்க நாட்டு உடைதரித்த வீரரை இப்பகுதியில் அதுவும் உங்கள் மூலம் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுப் புன்னகைத்தான்.

     “நாங்கள் எங்கள் நாட்டு மன்னரைக் காண இத்தகைய உடையணிந்தே செல்வோம்” என்றான் சிம்மநாதன். இச்சமயத்தில் முரசு முழக்கம் கேட்டது.

     “நல்லது, நாம் புறப்படலாம். மன்னர் தர்பாருக்குப் புறப்படுகிறார் என்று முழக்கம் அறிவிக்கிறது” என்று கூறினான் வேல்நம்பி.

     “நான் தயார். எனது ஊழியனும்...” என்று இழுத்ததும் “அவரும் தாராளமாக வரலாம்” என்றான் வேல்நம்பி.

     இவ்வளவு அழகான வண்டியில் சிம்மநாதன் இதுவரை ஏறியதேயில்லை. உலூகனுக்கோ இவ்வண்டியின் அழகு ஒன்றே போதுமே சோழர்களின் பெருமைக்கு என்று நினைத்து முடிப்பதற்குள் வண்டி அரண்மனை வாயிலை அடைந்துவிட்டது. மக்கள் சாரி சாரியாகப் போகிறார்கள். ஆனால் யார் இம்மாதிரி வண்டியில் போவது என்று யாராவது ஒருவர் சற்று ஆவல் காட்டிப் பார்க்கிறார்களா என்று உலூகன் சுற்றுமுற்றும் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டான்.

     மாமன்னர் தர்பாருக்குள் வந்துவிட்டார். உடன் மங்கல இசை எழுகிறது. மணிகள் ஒலிக்கின்றன. முரசங்கள் முழங்குகின்றன. தமது சிம்மாசனத்தை நோக்கி மன்னர் செல்ல பெருந்தலைகள், உடன் கூட்டத்தார், ஆட்சிக் குழுவினர், அரச குடும்பத்தினர் யாவரும் மிக ஒழுங்காக இருபுறத்திலும் அணிவகுப்பது போல நிற்க கட்டியங்காரன் சோழ மாமன்னனின் மெய்க்கீர்த்தியை வெகு தெளிவாகக் கம்பீரக் குரலில் வருணித்தான்.

     “திருமன்னிவளர, இருநிலமடந்தையும் போர்ச் செயப்பாவையும் சீர்த்தனிச் செல்வியும் தன் பெருந் தேவியராகி இன்புற நெடிதியல் ஊழியுள் இடைதுறை நாடும் தொடர்வன வேலிப்படர் வாணவாசியும் கொல்லமும் கலிங்கமும் கங்கபாடியும் கடிகைபாடியும் நுனம்பம்பாடியும், நண்ணற் கருமாண் மண்ணைக் கடம்பமும் இரட்டைபாடி ஏழரை இலக்கமும், சக்கரக் கோட்டம் சாந்திமத்தீவும், முதிர்படவல்லை மதுரை மண்டலம், நால்வளம் சூழ்ந்த நுளம்பமும், மாகணி தேசமும், தக்கண லாடமும் நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் அலைகடல் நடுவில் பலகலம் செலுத்தி சீர்விசயம் துறை நீர்ப்பண்ணையும் வண்டலையூரும், எழில் இலங்கையும், கடல் நாடுகளாம் கடாரம், சம்பா, காம்பூஜ நாடும் ஆழ்கடல் சூழ்ந்திடும் ஆயிரம் தீவுகள் மாயிருடிங்கம் மேவிடும் மாநக்கவாரமும் பன்னீராயிரம் தீவுகள் பழனமும் மாதமர்லிங்க நாகமும் நாவலர் தீவு நடுநாடனைத்தும் திண்டோள் வெற்றித் தண்டார் கொண்ட தன்னெழில்வளர் எல்லா யாண்டும் தொழுதக விளங்கும் எழுதகை மன்னன் கோப்பரகேசரி விக்கிரம சோழர் யாண்டும் வாழ்க! வாழ்க! வாழ்க...!”

     கட்டியங்காரன் இப்படிப் பாடி முடிக்கும் வரை அனைவரும் நின்று அடக்கமாகவும் மன்னருக்குரிய மதிப்புமளித்தவராய் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கியது கண்டான் எட்ட நின்ற சிம்மநாதன்.

     அடுத்து ஒரு மணி ஒலித்ததும் நகார் மூன்றுமுறை ‘தோம் தோம்’ என்று முழங்கியதும் மன்னர் மங்கலமான ஆசிகூறும் அறவோர்க்கும் ஏனையோர்க்கும் சிரக்கம்பம் செய்து சிம்மாசனத்தில் அமர்ந்த காட்சி சிம்மநாதனைக் கூட புல்லரிக்கச் செய்தது.

     ஆட்சிக்குழுவினர் அனைவரும், உடன் கூட்டத்தினர் ஒன்பதின்மரும், மகாமண்டலாதிபதிகள் பதினெண்மரும் இருபுறமும் வரிசையாக அமர்ந்தனர்.

     “மாமன்னர் முதலில் அரசு சம்பந்தமான வேலைகளைக் கவனித்த பின்னர் தங்களை அழைப்பார். அதுவரை இம்மண்டபத்தில் அமர்ந்திரும்” என்று வீரசோழன் கூறிச்சென்றபடி அங்கு அமர்ந்தபடியே தர்பாரில் நிகழ்வனவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

     “திருவாய்க் கேள்வி அழைக்கப்படுகிறார்” என்றதும் முதிய பிராயத்தினர் சிம்மாசனத்துக்குச் சற்று எட்டவே பணிவுடன் நின்று கைகளில் ஓலையும் எழுத்தாணியும் வைத்திருக்கிறார். வேந்தர் ஏதோ ஒன்றைப் படிக்கும்படி ஆணையிட அதனைப் படிக்கிறார் அவர். பிறகு மன்னர் அதற்குப் பதில் கூறியதும் அதையும் ஓலையில் எழுதிக் கொள்ளுகிறார்.

     பிறகு அவர் தொடர்ந்து பல விண்ணப்பங்களைப் படித்ததும் மன்னர் தமது அமைச்சர் பரமாதிராயரையும், பிரதம ஆலோசகர் பூந்துறை நாயகனையும் கலந்து பேசிப் பதில் தருகிறார்.

     இப்போது அவையினரை உன்னிப்பாக நோக்கினான் சிம்மநாதன்.. வலது பக்க முதல் வரிசையில் முதலாவதாக அமர்ந்திருந்தவர் பூந்துறை நாயகர்தான். அடுத்து வீரசோழன், சோழகங்கன், காடவர்கோன், வேட்டரையர் முத்தரையர், மழவரையர், முனையரையர், கோவரையர், தொண்டைமான், பல்லவரையன், எதிர் வரிசையில் தலைமை அமைச்சர் பிரமாதிராயர், மூவேந்த வேளார் மலையமான், அதிகமான், காடுவெட்டியார், அத்துமல்லன், ஆகவமல்லன், ரணமல்லன் ஆகியோரும் பக்கவாட்டில் ஆட்சிக்குழுவினரும் எதிர் வரிசையில் மண்டலாதிபதிகளும் அமர்ந்திருந்ததைக் கண்ட அவன் தனக்குத் தெரிந்த முகங்கள் ஏதாவதுண்டா என்று ஆராயாமலில்லை.

     அரசாங்க சம்பந்தமான வேலைகள் முடிந்தன. அடுத்து திருக்காளத்தி நாட்டு சம்புவராய யாதவராயர் மாமன்னரை பேட்டி காண வருகிறார் என்று அறிவிக்கப்பட்டதும், முதிய பிராயமுடைய அம்மன்னர் இருபது வீரர்கள் புடைசூழ வந்து விக்கிரமனுடன் அவர் அருகாமையில் அமர்ந்து கால் நாழிகை நேரம் அளவாவினார்.

     அவர் விடைபெற்றதும் “கங்க நாட்டு நல்லெண்ணத் தூதுவராக இங்கு வந்துள்ள ராஜரத்ன விஜயகீர்த்தியவர்களின் பிரதம சீடர் சிம்மநாதன் மாமன்னரைப் பேட்டி காண அழைக்கப்படுகிறார்” என்று அறிவிக்கப்பட்டதும் சட்டெனப் பரபரப்புடன் எழுந்தான் அவன்.

     மீண்டும் அவன் பக்கத்தில் வேல்நம்பி வந்து நிற்க அவனுடன் அவை நோக்கி நடந்தான். உள்ளூர ஏதோ மனதில் சற்று அச்சம் ஏற்படினும் அதைக் கூடியவரை வெளியில் காட்டிக் கொள்ளாது கம்பீரமாகவே நடந்தான் மாமன்னரை நோக்கி.

     அவன் கையில் ஒரு அழகான தந்தப் பேழை இருந்தது. அதை அவன் இரு கரங்களிலும் தாங்கி நடந்த முறையே அனைவரும் கவனிக்கத் தக்கதாயிருந்தது. மன்னர் அருகில் வந்ததும் மீண்டும் வணங்க வேண்டுமல்லவா? கையில் பேழை இருக்கிறதே.

     “பேழையை நீ வாங்கிக்கொள் வேல்நம்பி” என்று கம்பீரக் குரலில் உத்தரவு பிறந்தது பூந்துறை நாயகரிடமிருந்தது. சட்டென முன்வந்து அதனைப் பெற்றான்.

     சிம்மநாதன் தங்கள் நாட்டு முறைப்படி தாழ்ந்து வணங்கிவிட்டு, இடையிலிருந்த வாளினை எடுத்து அதை மேலே நோக்கித் தூக்கிவிட்டுப் பிறகு சட்டெனக் கீழே மண்டியிட்டு கத்திப் பிடியை நெற்றியில் ஒற்றிக் கொண்டு எழுந்து சட்டென இடையிற் செருகி மீண்டும் வணங்கினான்.

     இந்த அரிய வணங்குமுறை அவையினரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது போலும். வயதில் மூத்தவரும், தமது தொண்ணூறு வயதுக்குள் போர்கள் பலவற்றில் வாட்களால் பன்னூறு விழுப்புண்களைப் பெற்று வாகை சூடிய விடேல்விடு விழுப்பேரடி சேந்தன் மாறமுத்தரையர் “பளா... பளா...!” என்று தம்மையும் மறந்து பாராட்டு ஒலி எழுப்பினார்.

     மன்னர் முகமலர்ச்சியுடன் அவர் பக்கம் திரும்பி தலையை அசைத்துவிட்டு “நல்லது கங்க வீரனே! உன்னுடைய வணக்கத்தை மனமுவந்து ஏற்கிறோம். நீ எம்மைக் காணவந்ததற்கு, அதுவும் கங்கபாடியிலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து வந்தமைக்கு மகிழ்ச்சி. உன்னை இங்கு நல்லெண்ணத் தூதுவராக அனுப்பிய உங்கள் அரசர், அமைச்சர், குருநாதர், மக்கள் அனைவருக்கும் எம் நன்றியை அறிவிக்கவும். நீ இப்போது ஈண்டு வந்த நோக்கம்...” என்று மேலே பேசாமல் சற்றே நிறுத்தியதும்,

     சிம்மநாதன் மிகவும் நயமாக “குவலயபுரத்தின் ஆதிகால வைரமொன்று எங்கள் ராஜகுரு ராஜரத்ன விஜயகீர்த்தியவர்களுக்கு எதிர்பாராத விதமாகக் கிடைத்தது. அதை அணிபவர்களுக்குச் சர்வமங்கலமும் உண்டாகும். நீண்ட ஆயுளும், நெடிய புகழும், வெற்றி வாகையும் வரம்பிலா நலங்களும் கிடைக்கப் பெறும் என்பது எங்கள் நம்பிக்கை. கங்காதேவியின் அருள் பெற்ற வைரக்கல் இது என்பதாக வரலாறுண்டு. எனவே தங்களுடைய முடிசூட்டு விழாவுக்கே இதைத் தங்களிடம் வந்து சேர்க்க முயற்சித்தோம். கால நிலை சரியில்லை. பிறகு சிறிது காலத்தில் தங்கள் தந்தையார் அமரர் ஆகிவிட்டார். இங்கைப் போல அங்கும் நாங்கள் ஆறு திங்கள் துக்கம் அனுபவித்தோமாதலால் அக்காலத்திலும் இயலவில்லை. இப்போதுதான் எங்கள் நீண்டகால ஆசை நிறைவேறும் காலம் வந்தது. எனக்கு நீண்ட காலமாகச் சோழ நாட்டைப் பார்க்க வேண்டும், பார்த்து இங்கிருந்து பல நல்ல விஷயங்களை அறிந்து அவற்றை எங்கள் நாட்டிலும் செயல்முறைப்படுத்த வேண்டும் என்ற அவாவும் உண்டு. எனவே இந்தப் பரிசிலைக் கொண்டு தரும் பொறுப்பினை எங்கள், குருநாதர், மன்னர், மந்திரி பிரதானிகள், மக்கள் ஆதரவுடன் அளித்துள்ளனர். இந்த அரிய பரிசிலை நீங்கள் மனமுவந்து ஏற்று கங்கர்களின் பேராவலையும் அவர்களுக்குத் தங்களிடமுள்ள பெருமதிப்பினையும் நினைவுபடுத்தும் நல்லதோர் சின்னமாக இக்காணிக்கையை ஏற்கும்படி விநயமுடன் வேண்டுகிறேன்” என்று கூறித் தன் பக்கத்தில் நின்ற வேல்நம்பியிடமிருந்து பேழையைப் பெற்று மாமன்னரிடம் நீட்டினான்.

     அவரே அதைக் கரம் நீட்டிப் பெற்றதும் அவை கர ஒலி எழுப்பியது.

     மீண்டும் ஒருமுறை முத்தரையர், “பளா... பளா! கங்க வீரன் அடக்கத்துடன் ஆற்றிய அரிய உரை பாராட்டதற்குரியது” என்று கூறினார்.

     இரண்டு முறைகள் இந்தக் கிழவன் எதிர்பாராத பாராட்டை எடுத்து வீசுகிறாரே என்று அவையினரின் சிலர் நினைத்தாலும் பலர் அவனுடைய விநயமான பேச்சையும், அடக்கமான நடத்தையையும் பாராட்டாமலில்லை. மன்னர் ஒருமுறை அனைவரையும் பார்த்தார். பிறகு அவர் முகம் சற்று அதிகமாகவே மலர்ந்த மாதிரி ஒரு மாற்றம்.

     “கங்க நாட்டின் அன்புப் பரிசிலை நாம் மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றியுடன் ஏற்கிறோம். ஏற்கெனவே கங்கபாடி நம்முடைய சகோதர நாடு. அந்நாட்டு மக்கள் நம் சகோதரர்கள். எனவே சகோதர நாட்டு மக்கள் நம்மிடம் அன்பு கொண்டு அரிய பரிசை தங்கள் நாட்டு வீரன் சிம்மநாதன் மூலம் அனுப்பியது கண்டு நாம் வெகுவாகப் பாராட்டுவதுடன் இவரை இன்னும் ஆறு திங்கள் இந்நாட்டில் தங்கி எல்லாப் பகுதிகளையும் சுற்றிவர பார்த்து அனுபவிக்க, நம்முடனேயே நம்மவராகத் தங்கிச் செல்லும்படி உத்தரவிடுவது என்று கூறுவதற்குப் பதிலாக வற்புறுத்துகிறேன் என்று கூறுவதே இங்கிதமாயிருக்கும்” என்று சொன்னதும் மீண்டும் “பளா... பளா...!” என்று சற்று இரைந்தே மகிழ்ச்சியொலி எழுப்பினார் முத்தரையர். அவையினரும் இந்த மகிழ்ச்சியொலியில் கலந்து கொண்டனர்.

     “நீ உன்னுடைய இருக்கையில் அமரலாம்” என்று மன்னர் கூறியதும் சிம்மநாதன் பூந்துறை நாயகனுக்குப் பின் வரிசையில் போடப்பட்ட ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

     இதுகாறும் வெறும் பளா பளா மட்டும் கூறிய முத்தரையர் தமது இருக்கையிலிருந்து எழுந்து நின்று “மாமன்னர் நானாகப் பேசுவதற்கு மன்னித்தருள வேண்டும். கங்கபாடியிலிருந்து வந்துள்ள நல்லெண்ணத் தூதுவன் இளைஞனானாலும் கண்யமாகவும் மன்னருக்குத் திருப்தி தரும் வகையிலும் நடந்து கொண்டு தனது நாட்டுக்கு நன்மதிப்பு பெற்றதை இந்த அவை பாராட்ட வேண்டும்” என்று சொன்னதும் மன்னர் தலையசைக்க அனைவரும் கர ஒலி எழுப்பினார்கள்.

     முத்தரையர் அத்துடன் விடவில்லை.

     “மாமன்னர் கங்கபாடியின் நல்லெண்ணப் பிரதிநிதிக்கு அன்பு காட்டி மதித்துப் பாராட்டியதற்கு இந்த அவை, சோழ நாட்டு மக்கள் கங்க மக்களுக்குப் பாராட்டு அளித்ததாகவே கருதி பெருமையுடன் மிக்க மகிழ்ச்சியுறுகிறது” என்று கூறியதும் வானமுகட்டை எட்டுமளவுக்குக் கோஷமும் கர ஒலியும் எழுந்தது.

     “கங்க நாட்டான் இங்கு சோழ நாட்டானாக வாழ இந்த ஆறு திங்கள் போதும். இத்தகைய அனுமதியளித்ததற்கும் மன்னருக்கு மிக்க நன்றி என் சொந்த முறையில்” என்றதும் மீண்டும் கர ஒலி எழுந்தது.