உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
வில்லவன் தேவி(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 11 கம்பிலியை இன்னமும் காணோமே என்ற கவலை அதிகாலையில்தான் பில்லமனைப் பிடித்துக் கொண்டது. முதல் நாளிரவு முழுமைக்கும் அவனை எதிர்பார்ப்பதற்கில்லைதான். படவேட்டார் மகளைப் பிடித்தவன் சும்மா இருப்பானா? எத்தனைக் காலமாக இந்தத் திட்டத்தைத் தீட்டி அதை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாய், ஒரு தவசி எப்படி தன் தவத்தில் உறுதியாயிருப்பானோ அவ்வளவு உறுதியாக அல்லவா ஒரே நோக்கத்தில் இருந்திருக்கிறான்? தன்னைக் கம்பிலித்தேவன், அதாவது அசல் கம்பிலித்தேவ மகாராஜா ஏமாற்றிவிட்டது போல இவனையும் அல்லவா ஒரு காலத்தில் படவேட்டு ராஜ்யாதிபதி ஏமாற்றியிருக்கிறார். பழிக்குப்பழி வாங்குவது என்று இந்த உலகில் இன்றல்ல, நேற்றல்ல பிறந்த காலந்தொட்டே இருந்து வருகிற ஒரு தொத்து நோய்தான் என்றாலும் சம்பூவராயர் காளாஸ்திரியில் செய்தது அவரைப் பொறுத்த வரையில் வேண்டுமானால் நியாயமாயிருக்கலாம். ஆனால் இவன் வாழ்க்கையே அல்லவா அதனால் பாழாகிவிட்டது. அப்படி என்னதான் நடந்துவிட்டது? படைவேடு ராஜ்யம் மாதிரிதான் அந்த சத்தியவேடு ராஜ்யமும். அந்த நாட்டின் மன்னர் சத்தியராயர் மகள், அழகு என்றால் அவ்வளவு அழகு! எனவே இந்தப் புங்கனூர்க் கம்பிலி அவளை விரும்பியதில் அதிசயமில்லை. அவரோ போடா போ என்று தன் மகளைக் காளாஸ்திரி இளவரசனுக்கு மணம் முடித்துவிட்டார். விட்டேனா பார் என்று இவன் புறப்பட்டிருக்கிறான். புதுமணத் தம்பதிகள் உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொண்ட போது இவன் அவர்களைப் பிடித்துவிட்டான். சத்திய வீட்டார் படைவீட்டாரிடம் ஓடி வந்தார். ஏனென்றால் இவர் நாட்டெல்லையில் இங்கே எங்கோதான் இவன் அவர்களைப் பிடித்திருக்கிறான். சம்பூவராயர் படாத பாடுபட்டு இவனைப் பிடித்துச் சிறையில் போட்டு அவர்களை மீட்டு அனுப்பிவிட்டார். பாவம், ஆறு ஆண்டுகள் சிறை! பிறகு விடுதலை செய்துவிட்டார். என்றலும் படைவீட்டாரிடம் “என்னை நீங்கள் உயிருடன் விட்டது பெருந்தவறு. இது நாள் வரை சிறையிலிட்டதற்குப் பதில் கொன்றிருக்கலாம். நான் பழிக்குப்பழி வாங்குவதற்கு இடமளித்துவிட்டீர்கள்” என்று சவால் விட்டிருக்கிறான். “போடா போ!” என்று அலட்சியப்படுத்தி விரட்டி விட்டார். அதன் விளைவு அவருடைய மரணம், அழிவு. இப்போது நேற்றைய இரவில் அவர் மகளும் இவன் கையில் சிக்கிவிட்டாள். பில்லமன் அரண்மனைக்குத் தீ வைப்பது என்ற முடிவில் மாற்றமில்லை. ஏனென்றால் இப்பத்தான் உலூப் கத்திவிட்டுப்போனான். எனவே நாம் கோகுலாஷ்டமிக்கும் குலாம் காதருக்கும் முடிபோட்டுவிடலாம். ஆனால் இந்தப் பெண்கள் அரண்மனையிலிருந்து வெளியேறிய பிறகுதான் நாம் தீ வைக்க வேண்டும். ஏனெனில் அவர்களை குறிப்பாக அந்தச் சின்னக் குட்டியை... இப்போது பாவம் அந்தக் குட்டி! இந்தக் கரடியிடம் சிக்கிவிட்டது. கசக்கிப் பிழிந்திருப்பான். உம்... நமக்கென்ன வந்தது? தென்னகத்தில் ஏற்கெனவே கம்பிலி என்றால் கொடியவன் என்ற பேர். இப்போது தீ வைத்த கயவன் என்ற புகழ். இவற்றுக்குத் துணையாகக் கன்னியைக் கெடுத்த காதகன் என்ற விபரீதம். கிளம்பட்டும் இந்தத் தென்னாடு அவனை எதிர்த்து. நாம் வைத்த தீ பற்றி எரியட்டும். வடக்கேயிருந்து துக்ளக் தாக்குவான். இங்கேயிருந்து இவர்கள் போய்த் தாக்குவார்கள். “ஆகா! ஆகா! கம்பிலித்தேவா, உனக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. அழிவு உன்னைத் தேடி அதிவேகமாக வருகிறது. ஆகா!” “ஏய் பில்லமா? என்ன ஆகா... உனக்குத் திடீரென என்ன வந்துவிட்டது?” என்று ஒரு பயங்கர இடிக்குரல் அவன் காதில் விழுந்ததும் ‘அடக்கடவுளே! ஏதோ வேகத்தில் வாய்விட்டல்லவா உளறிவிட்டோம்’ என்ற கலக்கத்துடன் திரும்பியவன் எதிரே ரத்தப் போர்வையுடன் நின்றான் கம்பிலி. “ஓ! தேவா, நீங்களா இது... இது...?” என்று பதறி கதறியவன் தன்னை அவன் பார்க்கும் பயங்கரப் பார்வையைக் கண்டதும் மேலே வார்த்தைகள் பேச வராது சிலையாகிவிட்டான். “பில்லமா, நான் ஒழிந்துவிட்டேன் என்றா கொக்கரிக்கிறாய் நீ. எனக்கு அழிவு வந்தது என்ற ஆணவத்துடன் ஆர்ப்பரிக்கிறாயாடா நாயே. இதோ பார்” என்று தன் இரு கரங்களால் பிடித்த வாளுடன் அவன் மீது பாய்ந்து விட்டான். “ஐயோ! நான் உன்னை அல்ல. அந்த அசல் கம்பிலிக்கு அழிவு வந்துவிட்டது என்றுதான் கத்தினேன்” என்று வாய்விட்டுச் சொல்லவும் வாய்ப்பில்லை. அப்பால் ஓடவும் வழியில்லை. கையிலே வாளோ, வேறு ஆயுதமோ இல்லை. ஐயோ! கடவுளே! அவன் முகத்தில் விழுந்தது கம்பிலியின் வாள். அது முகத்துடன் நிற்கவில்லை, மார்பிலும்தான் வெட்டியது. ஒரு வார்த்தையும் பேசாது வேரை இழந்த மரம் போல் சாய்ந்துவிட்டான் வஞ்சகர்களில் ஒருவன் இன்னொரு வஞ்சனால். “பூ பூ!” என்று அலறிச் சிரித்தான் கம்பிலி. “பில்லமா, உன்னைத் தீர்த்துவிட்டேன். இனி அந்த வேட்டைக்காரன்தான். என்னை வஞ்சித்த நயவஞ்சகன் அந்தப் பொடிப் பயல்.” தன் கையிலிருந்த வாளையும் தன் இரு தோள்களையும் வெறிக்கப் பார்த்துக் கொண்டான். அந்தக் கரங்கள் முன் போல் இல்லை. இரு தோள்பட்டைகளும் சம்பந்தா சம்பந்தமின்றி தொங்கின. ரத்தக் காயம் மட்டுமில்லை, அந்த ரத்தம் கட்டிப்போய் அங்கே பயங்கரமான ரணத்தை உண்டாக்கி விட்டிருந்தன. இனி கரங்கள் இரண்டும் இணைந்தால் மட்டுமே ஏதேனும் செய்ய முடியும். ஒரு கரத்தால் எதுவுமே செய்ய இயலாது. இன்னும் சில காலத்தில் இரு கரங்களும் சக்தியற்றுப் போய்விடும். நொண்டி... ஆ! அன்று அந்தக் கிழப்பயல் என்னைச் சிறையில் போட்டான். இன்று இந்தப் பொடிப்பயல் கைகளை வெட்டிவிட்டான். விட்டேனா பார் அந்த வேட்டைக்காரனையும் பொடிப் பயலையும்.” பாய்ந்தான் வெளியே. முந்நூறு வீரர்கள் இந்தக் கோரமான கம்பிலியைக் கண்டதும் நடுங்கி விட்டனர். அவனுடைய தோற்றமும் நின்ற நிலையும் அவர்களை அசையாது நிற்கச் செய்துவிட்டது. “என்னை அழிக்க நினைத்த பில்லமன் இதோ பிணமாகக் கிடக்கிறான். இவன் வழி செல்ல எவன் தயார்? உம்! வாருங்கள் முன்னே!” என்று கத்தினான். சிறிது நேரம் எதுவுமே புரியாமல் நின்றார்கள். அவர்கள் ஏதோ பிசாசினைக் கண்டுவிட்ட மாதிரி கிலி பிடித்து நின்றனர். பிறகு அவன் காலடியில் கிடக்கும் பில்லமனைப் பார்த்தனர். அவ்வளவுதான். அவர்களில் பலர் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். சிலர் குதிரைகள் மீதும், சிலர் விட்டால் போதும் என்ற வேகத்துடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். எஞ்சி நின்றவர்கள் மிகமிகச் சிலரே. ஆனால் அவர்கள் மனம் பீதி காரணமாக என்ன செய்வது என்று புரியாமல் செயலற்றுப் போய் நின்றனர் என்பதுதான் சரி. “பில்லமன் துரோகி. பலி வாங்கிவிட்டேன். உங்களில் யார் துரோகி?” என்று அவன் எஞ்சி நின்றவர்களைக் கேட்டதும் அவர்கள் வாய் திறக்கவும் அஞ்சி நிலைகுலைந்து நின்றனர். “சரி, தைரியமும் துணிச்சலும் உள்ளவர்கள் என் கூட வாருங்கள். மற்றவர்கள் நாய்களைப் போல வாலைக் குழைத்துக் கொண்டு ஓடிவிடுங்கள், உம்!” என்று கர்ஜித்துவிட்டு தன் குதிரை மீது கடிவாளத்தைப் பிடிக்காமலே தாவி ஏறினான். இந்த அநாயாசமான பாய்ச்சலை, கைகளில் சக்தியிழந்த பிறகும் அவன் மேற்கொண்டது காண அவர்கள் பயமும் பீதியும் அதிகரித்துவிட ஏதோ யந்திரங்கள் போல் அவன் பின்னே சென்றனர். “நாம் முன்னூறு பேர்களாக வந்தோம் இங்கே. இப்போது அதில் ஒரு மடங்காகச் சுருங்கிவிட்டோம். பரவாயில்லை. புங்கனூர் போனதும் ஆளுக்கு ஐயாயிரம் பொன்கள்” என்றான் கம்பிலி. அவர்கள் இந்த அறிவிப்பைக் கேட்ட பிறகும் வாய் திறக்கவில்லை. மகிழ்ச்சியால் குதிக்கவில்லை. ஆனால் அச்சத்தால் பொம்மைகளைப் போல தலையாட்டி வைத்தார்கள். “அதோ அந்த அருவி இருக்கிறதே அதன் எதிரே உள்ள குட்டைமலையில்தான் அந்தக் குகை இருக்கிறது. நாம் அந்த மலைக்குத்தான் போகிறோம். ஆனால் மிகவும் எச்சரிக்கையுடன்! தைரியமிழந்து நம்மை நாமே காட்டிக் கொடுத்துவிடக் கூடாது. சரி, உங்களில் யாருக்குக் காயத்துக்கு பச்சிலையோ, கட்டவோ...” என்று மட்டும் சொல்லிவிட்டு மேலே முடிக்காமல் நிறுத்தினான். “எனக்குத் தெரியும்” என்று இரண்டு பேர்கள் முன்னே வந்தனர். “இந்தத் தோள்பட்டை வெட்டைக் கவனித்துச் சிகிச்சை செய்யுங்கள். உம்...” என்று வலி தாங்காது உறுமினான். ஒருவன் ஓடினான் பச்சிலைக்காக. இன்னொருவன் கிடைத்த துணிகளைப் பரபரவென்று கிழித்துப் போட்டான். அடுத்த சில நொடிகளில் இரு தோள்பட்டைகளிலும் கட்டு போட்டனர். ஆனால் அவனால் ஒரு சிறிதும் அந்தக் கைகளைக் அசைக்க முடியவில்லை. என்றாலும் முன் போல் கொடுமையான வலியும் வேதனையும் இல்லை. இயன்றவரை தாக்குப்பிடித்துப் பார்க்கலாம். அவன் தொலைவிலிருந்து காட்டிய அருவியும் மலையும் அங்கிருந்து அருகிலிருப்பது மாதிரி தோன்றினாலும் அங்கே போக ஐந்தாறு மலைகளையும் பயங்கரமான காடுகளையும் தாண்டிச் செல்ல வேண்டுமென்பதை நேற்றைய அனுபவம் அவர்களுக்கெல்லாம் நன்கு விளங்கியுள்ளது. உண்மைதான் என்றாலும் இப்போது வாய் திறக்க வழியில்லை. கம்பிலியின் மனதில் ஆயிரமாயிரம் யோசனைகள். ‘இந்த இருபது முப்பது பேர்களும் இவனிடம் உள்ள அபிமானத்தால் எஞ்சியவர்களில்லை. அச்சத்தால், கலக்கத்தால், வெறுப்பால் நின்றவர்களேயன்றி மாறாக இல்லை என்று சொன்னாலும் தவறில்லை. எனவே இவர்களிடம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் இவர்களை இயன்ற வரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’ அவர்களில் ஒருவனை அழைத்தான். “நீ முன்னே போய் மிக எச்சரிக்கையாகத் துப்பறிந்து வா. யார் யார் எங்கிருக்கிறார்கள்? எவர் வந்திருக்கிறார்கள்? படைகளோ அல்லது ஆட்களோ அல்லது ஒன்றுமேயில்லாத சூன்ய நிலையிலோ எப்படித்தான் இருக்கிறது என்பதைக் கவனித்து அறிந்து எங்களை அதோ அந்தப் பச்சைப்பசேல் என்று வர்ணமாயிருக்கிறது பார், அந்த மலையில் வந்து உரைத்திடு” என்று உத்தரவிட்டான். அவன் பறந்தான். இன்னொருவனை அழைத்தான். “நீ இதோ இந்த தென் திசை சென்று யார் யார் வருகிறார்கள் அல்லது போகிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பதை ஊன்றி நோக்கி உண்மை நிலை அறிந்துவா” என்று கூறியதும் அவனும் வேகமாய் புறப்பட்டுவிட்டான். மற்றவர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு “நாங்கள் வடபகுதி சென்று வருகிறோம். அதுவரை எச்சரிக்கையாகப் போய்க் கொண்டிருங்கள்” என்று கூறிவிட்டுத் தன் குதிரையைத் திருப்பிவிட்டான் மூன்றாமவன் பின் தொடர்ந்து வர. இரு குதிரைகளும் கனவேகமாக இயங்கின. இரண்டு மூன்று கல்கள்தான் தாண்டியிருப்பார்கள். ஒரு நீளமான குன்றின் மீது ஏதோ சிவப்புப் புள்ளிகள் இருப்பது மாதிரி காணப்பட்டதும், சட்டென்று உஷாராகிவிட்ட கம்பிலி “நீ இந்தப் பக்கமாகப்போ. நான் மறுபக்கமாக வருகிறேன். மிகவும் எச்சரிக்கையாகச் செல். ஏதேனும் சந்தேகம் உண்டானால் என்ன இங்கே வந்து சந்தித்துப் பேசிய பிறகு முடிவு செய்யலாம்” என்று கூறியதும் அவன் நகர்ந்தான் பரபரப்புடன். அவன் போனதும் மலை மீதே தன் பார்வையைச் செலுத்தினான் கம்பிலி. பிறகு குதிரையை மிக மெதுவாக நடத்தி மலையை ஒட்டியிருந்த காட்டுக்குள் சென்றான். நின்று நிதானமாகச் சென்றவனுக்கு நல்ல துணையாகப் பெரிய பெரிய மரங்கள் பாதுகாப்பு தந்தன. ஒரு இடத்தில் குதிரையை நிறுத்திவிட்டுக் குன்றின் மீது மெதுவாக ஏறினான். மேலே ஏதோ நிழல்கள் நகர்ந்ததும் சட்டெனக் குப்புறப் படுத்துவிட்டான். மேலே இருவர் ஏதோ பாஷையில் பேசியதும் ‘ஓ! இவர்கள் துருக்கர்கள். அப்படியானால் உலூப்கான் இங்கேதான் எங்கோ இருக்கிறான். எனவே மேலே போவதென்றால் ஆபத்து. என்ன செய்யலாம்?’ படுத்தபடியே யோசித்தான். மீண்டும் அவர்கள் பேசியது இவன் காதில் விழுந்தது. உருது பாஷையை நன்கறிந்தவன் ஆதலால் அதை ஊன்றிக் கவனித்தான். “என்னடாது கரீம்? நாம் கேவலம் இந்தக் கிழவனையும் அந்தப் பொடியனையும் எப்பொழுதுதான் பிடித்துத் தொலைக்கப் போகிறோம்? நம்ம தலைவர் தாவுத்கானோ அவர்களைப் பிடித்துக் கழுவில் ஏற்றினாலன்றி திரும்புவதில்லை என்றார். அவர்களோ இங்கேயே எங்கோ சுற்றி வந்தும் நம்மிடம் சிக்காமல்...” “வேறு வழியில்லையே ரஹீம்! நம்ம தலைவரின் பழிக்குப் பழி உணர்ச்சி நமக்கும் உள்ளதுதானே! அந்த வில்லவனின் மகன் நம் காபூருக்குச் செய்த துரோகம் சாதாரணமானதா?” “அது தேச பக்தி என்றல்லவா இந்தக் காபீர்கள் கூறுகிறார்கள்...” “நமக்கென்ன அதைப் பற்றி? இன்று மாலிக்காபூர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை நாம் செய்ய வேண்டுமல்லவா?” “நான் இல்லையென்று கூறவில்லை. இந்த உலூப் நமக்குச் சிறிது உதவினால்...” “அதெப்படி? நம் விஷயம் நமது சொந்தப் பிரச்னை. அவர் வந்திருப்பதோ நாட்டுப் பிரச்னை. எனவே அதையும் இதையும் கலப்பதற்கில்லை. தவிர நமக்கு அசென்ஷா வில்லவராயனைப் பொறுத்த வரையில் நீ எது வேண்டுமானாலும் செய்து கொள் என்று நம் தலைவருக்கு அனுமதி வழங்கியிருக்கிறார். இது ஒரு பெரிய உதவியில்லையா?” “அது சரி ரஹீம், இத்தனை நாட்களாக அவர்கள் எங்குதான் ஒளிந்திருக்க முடியும்?” “அது தெரிந்து விட்டால் நீயும் நானும் இங்கே ஏனப்பா இப்படி தவித்துக் கொண்டிருக்கிறோம்...” “எனக்குத் தெரியும்” என்று அவர்களுடைய மொழியில் ஒரு வேகமான அறிவிப்பு வந்ததும் அந்த இரு துருக்க வீரர்களும் கைகளில் வாள்களை எடுத்து “யார் அது? வா இப்படி எதிரே. உம்...” என்று உறுமியதும் கம்பிலி ‘கடகட’வென்று சிரித்துவிட்டு எழுந்து உட்கார்ந்தவுடன் இருவரும் அவன் அருகில் ஓடினர். “நான் தாவுத்கானைப் பார்க்க வேண்டும். உடனே போய்ச் சொல்லுங்கள்!” என்று அதே வேகத்துடன் அதே பாஷையில் கத்தியதும் இருவரும் சற்று தயங்கினர். “நம்ம பாஷை பேசும் இவன் நிச்சயமாகத் தமிழன் இல்ல. ஆனால்...” “நமக்கென்ன ரஹீம்? நாம் இவன் கேட்கிறபடி தலைவரிடம்...” “மரியாதையாகப் பேசு! யாரைப் பார்த்து இவன் என்று முறை கேடாகப் பேசுகிறாய்?” என்று கம்பிலி கேட்டதும் உண்மையில் இருவரும் கலங்கி விட்டனர். ‘சரி, இவன் யாரோ ஒரு பெரிய ஆசாமிதான், சந்தேகமில்லை’ என்று முடிவு செய்து “சரி ஹுசூர், எங்கள் தலைவரிடம் போகலாம். வாருங்கள்!” என்றான் கரீம். “நல்லது. நாம் வீண் பேச்சுப் பேசும் ஒவ்வொரு நொடியும் நமக்கு எதிரானவையாகும்!” என்று மதிப்பாகக் கூறிவிட்டு அவன் நடந்ததும் அவர்கள் ‘ஏன் இவனுடைய இரு தோள்களும் இவ்வாறு கட்டுக்கள் போடப்பட்டுள்ளன’ என்று வியந்து திகைத்தாலும் ‘நமக்கேன் வம்பு’ என்று நினைத்து அவனுடன் ஓடினர். தாவுத்கான் ஒரு திண்டின் மீது சாய்ந்தபடி ஊக்கா குடித்துக் கொண்டிருந்தான். கம்பிலி அவன் எதிரே போன போது வியப்பும் சற்றே சினமும் கொண்ட பார்வையை கம்பிலி மீது செலுத்திய தாவுத் “யார் நீ? இங்கு எப்படி வந்தாய்?” என்று கேட்டான். கம்பிலி சற்றும் தயங்காமல் “பேஷ்! நீ காண்பிக்கும் மரியாதை மிகவும் நன்றாயிருக்கிறது. உலுப்கானைப் போல உன் உதிரத்தில் ராஜரத்தம் ஓடினால் நீ இப்படிப் பேசுவாயா?” என்று உருது பாஷையில் கேட்டதும் பதறிப்போன தாவுக்கான் சட்டென்று எழுந்து “நீ... நீங்கள் எங்களுடைய பாஷை பேசுகிறீர்களே? யார் நீங்கள்?” “கம்பிலித்தேவன் தெரியுமா?” என்று கேட்டதும் வெகுவாகப் பதறிவிட்டான் அவன். எப்பவோ ஓரிருமுறைகள் பார்த்திருக்கிறான். ஆனால் இவன் அவனாக இருக்க முடியாதே. தோற்றம் அவன் மாதிரியிருந்தாலும். ஒருவேளை அவன் அண்ணனாகவோ தம்பியாகவோ இருந்தால்... நிதானித்து “கம்பிலித்தேவரைத் தெரியும். ஆனால் அவருக்கு ஒரு சகோதரர் உண்டு என்று தெரியாது” என்றான். ‘அட முட்டாள்! நீயாகவே எனக்கு எடுத்துக் கொடுக்கிறாயே!’ “ஆமாம். உனக்குத் தெரிந்திருக்க முடியாது. ஏன் என்றால் நான் முதல் தடவை மாலிக் இந்தப் பகுதி வந்த போதே அவனுடன் சமரசமாகப் போகலாம் என்றேன். என் அண்ணன் அந்த முட்டாள், தேவகிரியான் பேச்சைக் கேட்டு என்னை விரட்டி விட்டான். அன்றே தென்னகம் வந்துவிட்டேன். மாலிக்கை வேலூரில் சந்தித்தேன். ஆனால் அவருக்கு இந்த வில்லவராயன் செய்த துரோகம் அறிந்ததும்...” “அப்படியானால் நீங்கள் எங்கள் நண்பர். அல்லா அனைவரையும் காப்பாராக. எங்கே கை கொடுங்கள் இப்படி” என்றான் தன் கரங்களை நீட்டியபடி தாவுத்கான். “இயலாது தாவுத். இதோ இரு தோள்களையும் பார்த்தாயா? நேற்றிரவு இந்தத் தோள்கள் வில்லவனால் வெட்டப்பட்டு...” “என்ன? வில்லவனாலா? இங்கேயா...? யார் அங்கே...? எல்லோரையும் எழுப்புங்கள். புறப்படுவோம். உம்!” என்று கத்தி அமர்க்களப்படுத்தினான் தாவுத்கான். கம்பிலி சிரித்தான் ஏளனமாக. “ஏன் ஹுசூர் இந்தச் சிரிப்பு?” “இந்தக் கரங்களை இப்படி வெட்டிவிட்டானே? அதன் நிலை என்ன? எங்கே எப்போது என்றெல்லாம் கேட்காமல் இம்மாதிரி ஆர்ப்பாட்டம் செய்கிறாயே. இதனால் என்ன லாபம்?” என்று கேலிக் குரலில் கேட்டதும் தாங்க முடியாத சினத்துடன் தாவுத்கான் விழித்துப் பார்த்தான் அவனை. ஆனால் ஏனோ ஆத்திரத்தை வெளிப்படையாகக் காட்டிட முடியவில்லை. “ஹுசூர், நீங்கள் சொல்வதைப் புரியும்படியாகக் கூறுங்கள்.” “உன்னுடைய ஆட்களைப் புறப்படு என்றாயே? எங்கு? எதற்காக?” “அந்த வில்லவராயனைப் பிடிக்க.” “அவன் எங்கே இருக்கிறான்?” “நீங்கள் சொன்னீர்களே...” “என்ன சொன்னேன்?” “தோள்களை வெட்டியவன் அவன்தான் என்று இப்பத்தானே சொன்னீர்கள்!” “ஆமாம்! அதனால்?” “பிடித்துவிட வேண்டியதுதானே?” “அவன் இருக்குமிடம் தெரியாமலா?” “நீங்கள் சொல்லுங்கள்!” “எப்படிச் சொல்ல முடியும்? நான் அடிபட்டு வருவது, நீ அவனை பிடிப்பது என்றால்...” “புரியவில்லை!” “புரியாது உனக்கு. ஏனென்றால் உனக்கு சிந்தித்திடும் சக்தி குறைவு. இப்போது உங்களையெல்லாம் பல்லாளர் ஆட்கள் தேடுகிறார்கள் தெரியுமா?” “இல்லை... உலூப்கானைத் தேடுகிறார்கள்.” “அப்படியா? உங்கள் ஆட்களுக்கும் உலூப்கான் ஆட்களுக்கும் என்னப்பா வேற்றுமை?” “ஒன்றுமில்லை. நாங்கள் யாவரும் இஸ்லாமானவர்கள்.” “நீங்களும் தொப்பி போட்டவர்கள். அவர்கள் மாதிரியே ஆடை, அணி, ஆயுதங்கள்.” “ஆமாம்! நாங்கள் மகம்மதியர்களாயிருக்கும் போது எங்களுக்குள்ளே ஏது காபீர்களைப் போல வேற்றுமை?” “எனவேதான் நீ கூறும் அந்தக் காபீர்கள், உலூப்கான் ஆட்களும் சரி, உன் ஆட்களும் சரி, யாராயிருந்தாலும் பிடித்து ஒரேயடியாக நாசம் செய்துவிடப் புறப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறியதும் தாவுத்கான் திடுக்கிட்டான். இதில் உள்ள நியாயம் அவனுக்குப் புரிந்தது. சந்தேகத்துடன் “அப்படியானால்...?” “ஆனாலும் இல்லை. ஆகாவிட்டாலும் இல்லை. நான் உங்களை ஆதரித்துப் பேசியதால்தான் அந்த வில்லவராயர்கள் என் மீது பாய்ந்து இம்மாதிரி செய்துவிட்டார்கள்.” “என்றாலும் எங்களுக்கு இதில் சம்பந்தமேயில்லை. தவிர உலூப்கானும் இது மாதிரி தீவைப்பது, பெண் பிடிப்பது எல்லாம் செய்யக் கூடியவர் இல்லை. நீங்கள் சொன்னது போல அவர் உடலில் ராஜரத்தம் ஓடுகிறது. அவர் ஒரு நாணயமுள்ள முஸல்மான்! கன்னி வேட்டையாடும் காமவெறியர் அல்ல!” என்று கூறியதும் சில நொடிகள் தவித்தான் கம்பிலி. பிறகு எப்படியோ சுதாரித்துக் கொண்டு “இதோ பார் தாவுத்! நான் உன்னிடம் வந்தது மூன்று காரணங்களுக்காக. ஒன்று அந்த வில்லவராயர்களை உன்னிடம் பிடித்துக் கொடுப்பது அல்லது நானே பழி வாங்குவது. இரண்டாவது உலூப்கான் தீவைத்துக் கொன்ற அந்தப் படைவீட்டு ராசர் மகள்கள்...” “தயவு செய்து மீண்டும் அவரை இத்தகைய கேவலச் செயலைச் செய்தாகக் கூறாதீர்கள்!” “சரி, சொல்லவில்லை. ஆனால் அந்த ராசா மகள்கள் இருவரும் இங்கே இந்த மலைக்காட்டில் இருக்கிறார்கள்.” “ஓ! அப்படியா? நல்ல காலம் அவர்கள் சாகவில்லை. அல்லா கருணையுள்ளவர்.” “அவர் கருணையுள்ளவர்தான் என்றால், நீயும் ஒரு உண்மையான முஸல்மான்தான் என்றால், அந்த இரு பெண்களையும் எப்படியாவது காத்திட நீ உதவி செய்திட வேண்டும்.” “நிச்சயம் செய்கிறேன்! அந்தப் படைவீட்டார் எங்கள் பகைவரான வில்லவராயருக்கு நண்பர். என்றாலும் நான் அதை மறந்து இந்த அபலைப் பெண்கள் மீது வர்மங்கொள்ளாது காத்திட உதவி செய்கிறேன். தவிர உங்களைப் போல அவர்களும் இந்துக்கள். எனவே நீங்கள் உதவிட முன் வந்தது உத்தமமான குணம்தான்!” என்று உற்சாகமூட்டினான். கம்பிலி உள்ளுக்குள் குன்றிப் போனாலும் சட்டென்று “அந்தப் பெண்களைக் கவர்ந்திட இந்த வில்லவராயார் முனைந்துள்ளனர்” என்றான். “அரே அல்லா. நாம் விடக் கூடாது.” “எனவே அந்தப் பெண்களை நீங்கள் என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்திட்டால் நான் அந்த வில்லவராயரைப் பிடித்துத்தரத் தயார்!” என்றான் கம்பிலி. |