உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
வில்லவன் தேவி(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 12 தாவுத்கான் தனது உதவிகளில் சிலரை அருகே அழைத்தான். கம்பிலியின் அறிவிப்பைக் கடகடவென்று அறிவித்தான். அவர்களில் ஒருவன் கேட்டான். “நம்மால் அந்தப் பெண்களைக் கொண்டு வந்துவிட முடியும். அப்படி அவர்கள் எப்படி உலூப்கான் ஆட்கள் இல்லை என்று நம்புவார்கள்?” என்று கேட்டதும் ‘பரவாயில்லை, தலைவனைக் காட்டிலும் உதவி புத்திசாலிதான்’ என்ற முடிவுக்கு வந்தான் கம்பிலி. “நம்பமாட்டார்கள். ஆனால் அதற்கொரு தந்திரம் செய்தாக வேண்டும்.” “இரண்டு காரணங்களை சொன்ன நீங்கள் மூன்றாவது காரணத்தைக் கூறவில்லையே?” “நல்லது. அதையும் கூறுகிறேன். நெட்டூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. கேள்விப்பட்டதுண்டா?” “உண்டு. வில்லவரையன் மகள் ஆளும் ஊர் அது.” “அந்த ஊருக்கு படவேட்டார் ஊருக்கு எந்தக் கதி ஏற்பட்டதோ அதே ஏற்பட வேண்டும். ஏனென்றால் அவள்தான் என்னை அடித்து, இந்தப் பெண்களிடம் என்னைப் பற்றி விபரீதம் கற்பித்து...” “அடேடே! கொஞ்சம் பொறுங்கள். நாங்கள் நிச்சயம் இந்த தீ வைப்பு வேலை, பெண் கொலை இரண்டையும் செய்ய முடியாது.” “நீங்கள் செய்ய வேண்டாம். நானும் என் ஆட்களும் செய்கிறோம். நீங்கள் எங்களைத் தடுக்க வருவோரை மட்டும்.” தாவுத்கானின் உதவியாளர் சொன்னான். “பரவாயில்லை பஹதூர். நாம் எட்ட நின்று குறுக்கிடுவோரைத் தடுப்போம்” என்றான். தாவுத்கான் தலையசைத்தான். கம்பிலியின் முகம் மலர்ந்தது. உலகம் பிறந்த நாள் தொட்டு ஒரு பழமொழி கடவுள் நல்லவர் பக்கம்தான் என்பதாக. இப்போது தனக்கும்தான் அவர் துணை செய்கிறார். இந்தத் தாவுத்கான் நிச்சயமாக அந்த வில்லவரையனைக் கொண்டு வர முடியுமா? முடியாது. நெட்டூர்ப் பகுதியில் ஒளிந்திருக்கிறான் என்றால் பழிவாங்கும் வேகம் தீ வைக்கச் செய்யும். அந்தக் காளி என்னை இருபதாண்டுகளுக்கு முன்னே கோடரியால் வெட்டினாள் அல்லவா. பழிகாரி. அவளையும் தீர்த்துக் கட்டிவிடலாம். ஆகக் கூடி நமக்கு அந்தப் பெண் கிடைப்பாள். நெட்டூர் அழியும், வில்லவரையக் கிழவன், பொடியன், அந்தத் தடிச்சி யாவரும் கூண்டோடு கைலாசம். போகட்டும். பிறகென்ன... நாம் தேவிக்கோட்டையானைச் சந்தித்துவிட்டால் நிம்மதி. கடவுள் நல்லவர்களுக்கு மட்டும் உதவி செய்து அத்துடன் நின்றுவிடுவதில்லை, வல்லவனுக்கும் உதவி செய்திடத் தயங்குவதில்லை. “சரி நண்பரே, நாம் அடுத்தபடி இப்போது என்ன செய்ய வேண்டும்?” “என்னுடைய குதிரை அந்தப் பக்கம் சுனைக்கு அருகில் இருக்கிறது. அதைக் கொண்டு வரச் சொல் முதலில். பிறகு நாம் இருவர், நால்வர், அறுவர், பதினான்மர் என்று பிரிந்து நாலாதிசையிலும் போய் பல்லாளர் ஆட்கள் எங்காவது இருக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும். இதற்கிடையே உலூப்கான் எங்கு இருக்கிறான் என்பதையும் அறிந்திட வேண்டும்.” “மூன்று நாட்களாக எவ்வளவோ முயற்சிக்கிறோம். அவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை.” “நீங்கள் யாவரும் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் உங்களையும் அவர்கள் பழி வாங்காமல் இருக்கமாட்டார்கள். புரிகிறதா?” “புரிகிறது. ஆனால் வேறு வழியும் புரியவில்லை!” “வேறு வழியில்லை. இங்கிருப்பவர்கள் யாவரும் தென்னகத்தார் என்று நீங்கள் கருதுகிற மாதிரி இங்கு நாங்கள் உங்கள் யாவரையுமே எதிரிகளாகக் கருதுகிறோம்.” “எதிரிகளாகவா! எங்களைக் கூடவா?” “நான் இல்லை அவர்கள். சரி, நாம் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் இன்றிரவுக்குள் நாம் எல்லாவற்றையுமே தீர்த்துவிட வேண்டுமில்லையா?” “தீர்த்திடுவதா? யாரையெல்லாம்!” “முதலில் புறப்படுவோம்” என்று கூறிவிட்டுத் தன் குதிரை மீது தாவிவிட்டான் அவன். கைகளால் கடிவாளம் பிடிக்காமல் அநாயாசமாகத் தளரவிடும் அதிசயத்தை அனைவரும் பார்த்து திடுக்கிட்டனர். முன்னே போட்ட திட்டப்படி நாலா திசையிலும் பரவியோடினர் தாவுத்கான் ஆட்கள். கம்பிலி குதிரை மீது ஏறிச் சிறிது தொலைவு வந்த பிறகுதான் தன் பக்கத்திலுள்ளவன் தாவுத்கான், இனி தன் கைப்பாவை என்ற முடிவில் உள்ளூரப் பெருமை கொண்டு நகர்ந்தான். நேற்றிரவு தன் தோள்களை வெட்டிய வாள் மும்முகமுள்ள கைப்பிடிவாள். இல்லையென்றால் இவன் எப்படித் தன்னைத் தாக்கியவன் வில்லவரையன் என்ற முடிவுக்கு வந்திருக்க முடியும்? ‘தன்னை நயவஞ்சகமாக அழைத்துச் சென்றவன் அந்த தேவிகாபுரத்தான். வாளால் வெட்டியவன் வில்லவரையன். பிறகு நடுநசியில் தான் மூர்ச்சை தெளிந்து எழுந்த போது, சுற்றும் முற்றும் யாருமில்லை. ஆனால் வேட்டைக்காரன் மட்டும் மூன்று மலை கூடும் சந்திப்பில் மறைந்து நின்றிருந்தான். எனவே அந்த முச்சந்தி மலைக்கப்பால் உள்ள மலையில்தான் பெரிய குகை ஒன்று அருவியின் எதிரே இருப்பதாக முன்னரே தன் ஆட்கள் கூறியுள்ளனர். எனவே அங்குதான் அவள் அந்தப் படைவேட்டான் மகள்கள் இருக்க வேண்டும்’ என்றெல்லாம் பலபட ஊகித்தவன் முன்னே குதிரையைத் தட்டிவிட்டதும் அந்த முச்சந்தி மலைக்குச் சற்றுத் தொலைவிலேயே நின்றான். மற்றவர்களும் குதிரைகளைப் பிடித்து இழுத்துச் சட்டென நின்றார்கள். “தாவுத், எனக்கு ஒரு பத்து தொப்பிகள் தேவை” என்றான் கம்பிலி. முதலில் ஒன்றும் புரியாமல் கோபத்துடன் பார்த்தான் தாவுத். துருக்கரிடம் தொப்பியைக் கொடு என்று கேட்பது மரியாதையில்லையே! ஆனால் மாற்றிக் கொள்வது உண்டு. மரியாதைக்காக, அதுவும் துருக்கருள்ளேதான். “என்ன நண்பரே கேட்டீர்?” என்று தாவூத்கான் கேட்ட கேள்வியில் கோபமும் இருந்தது, மிரட்டலும் இருந்தது. அதே சமயத்தில் ஏன் இப்படி ஒரு கேளிக்கை என்ற வியப்பும் இருந்தது! கம்பிலி புரிந்து கொண்டான் என்றாலும் அவனுக்குக் கிடைத்துள்ள இந்த எதிர்பாராத சந்தர்ப்பத்தை நழுவவிட தயாராயில்லை அவன். “தாவுத்கான், நான் முஸ்லீம்களை நன்கு அறிந்தவன். எனவே நான் தொப்பி கேட்டது கேலியாகவோ, கிண்டலாகவோ கேட்பதில்லை. ஒரு பத்து தொப்பிகள் அந்தக் குன்றின் உச்சியில் இரண்டு, இதோ இந்த மலையுச்சியில் நாலு, அதோ வலத்துப் பக்கமாக இருக்கிறதே, அந்தக் குட்டிமலையில் இரண்டு இப்படியாக வைக்கப்பட வேண்டும். பிறகு நீர்வீழ்ச்சிப் பாதையில் இருபது இருபத்தைந்து அடி உயரத்தில் உள்ள இரண்டு மூன்று பாதைகளில் ஒவ்வொன்றாக வைக்கப்பட வேண்டும்” என்று கூறியதும் தாவுத் மேலும் வியப்புற்று “ஏன் இப்படியெல்லாம் வெறும் தொப்பிகளை வைக்க வேண்டும்?” என்று சற்றே ஏளனமாகக் கேட்பதும் கம்பிலி “அப்படியானால் தொப்பிகளுக்குப் பதிலாக தலையை நீட்டுங்கள். நான் வேண்டாம் என்று கூறவில்லை” என்று அதே ஏளனத்துடன் பதில் தந்ததும் தாவுத்கான் ஆத்திரத்துடன் தன் வாள் மீது கை வைத்திட, “பகதூர், எனக்குப் புரிந்துவிட்டது. தொப்பிகளைப் பார்த்ததும் எதிரிகள் அங்கே வரலாம் அல்லது ஏதாவது கருவிகளைக் கொண்டு தாக்கலாம். அப்படித் தாக்கினால் நமக்கு யார் யார் எங்கெங்கு மறைந்து இருக்கிறார்கள் என்பது புரிந்துவிடும்” என்றான். “பலே பலே! ஹுசூர். உங்களுக்கு நல்ல மூளை!” என்றான் ஒருவன். கம்பிலிக்கு இந்தப் பாராட்டுத் தேவையில்லை. தொப்பிகள் வைக்கப்பட்டால் எட்டத்தில் இருந்து பார்ப்பவர்கள் வில்லவனாயிருந்தால் அம்புகள் தாக்கும். பல்லாளர் ஆட்கள் என்றால் வேல், ஈட்டி, வாள் தாக்கும். அவர்கள் இருந்திடும் திசையும் தெரியும். அதற்குத் தகுந்தபடி அடுத்த திட்டம். தொப்பிகளை எடுத்துக் கொண்டு நாலு திசையிலும் ஓடினார்கள் துருக்கத் துருப்பினர். இதே சமயம் கம்பிலியின் ஆட்களும் வந்து சேர்ந்தனர். அவர்கள் அருகில் வந்ததும் கம்பிலி சைகை மூலமே ‘ஏதாவது விசேஷமுண்டா?’ என்று கேட்க ‘உண்டு’ என்று தலையாட்டினார்கள் இரண்டொருவர். தாவுத்கான் ஆட்கள் தங்கள் தொப்பி வைக்கும் வேலையில் தீவிரமாயிருந்த சமயம் தன் ஆட்களிடம் பேசினான் கம்பிலி. “பல்லாளர் ஆட்கள் ஆயிரமாயிரமாகத் தெற்குத் திசையில் இங்கிருந்து ஐந்தாறு கல்லில் முகாமிட்டுள்ளனர். அருவிக்கரைப் பாறைகளின் எதிர்மலையின் அந்தப் பக்கம் ஒரு ஏழு நூறு பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நெட்டூரார் அல்லது செங்கத்தார். உலூப்கான் குழுவினர் எங்குமே தென்படவில்லை” என்று அவர்கள் சுருக்கமாகச் சொன்னதும் “சரி, அவர்கள் யாவரும் இங்கு நெருங்கிவரும் முன்னர் நம் வேலையை முடித்திட வேண்டும்” என்றான். இதற்குள் தொப்பிகள் மலையுச்சிகளில் ஏதோ சிவப்புப் புள்ளிகள் மாதிரி அமர்ந்துவிட்டன. கம்பிலிக்கு இந்தத் தொப்பி விவகாரம் நிச்சயமாக அவர்களுக்கு வைக்கப்படும் கண்ணிதான் என்ற மகிழ்ச்சியும் தன் சாமர்த்தியங் கண்டு தன்னையே மெச்சிக் கொள்ளும் மமதையும் கூட தலையெடுத்துவிட்டது. குகை வாயில் மகா நாட்டினர் அதாவது பெரிய வில்லவரையர், அவர் மகள் சித்தேசுவரி, விஜயகுமார வில்லவரையன் ஆகிய மூவரும் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தத் தொப்பி நிலைப்புப் பணி நடைபெற்றது. விஜயன் மலை உச்சிகளை நாடி அமர்ந்த தொப்பிகளைப் பார்த்து ஏது திடீரென்று சிவப்புப் புள்ளி என்று ஆராயந்தான். பிறகு வேறு மலையைப் பார்த்தான் தன்னிச்சையாக. அங்கும் இப்படி நாலைந்து. “பேஷ்! தாத்தா, நம்மை வெளிக்கொணர எதிரிகள் யாரோ ஒரு பழைய தந்திரத்தைப் புரிகிறார்கள்!” என்றான் மலை உச்சியைக் காட்டி. சட்டென்று கிழவரும், சித்தேஸ்வரியும் மலைகளை நோக்க “ஆமாம் தம்பி, நாம் இங்கேயிருந்து பதறிப்போய் அம்புகளை விட்டால் அவுங்களுக்கு நம்மை நாமே காட்டிக் கொடுத்திடுவோமின்னு ஒரு நப்பாசைதான். சரி, அது கிடக்குது விடும். இந்தத் தொப்பி முஸல்மான்களுடைய தில்லையா?” “ஆமாம் தாத்தா.” “யார் இந்த மாதிரி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் கூட்டம். உலூப்கான் இல்லே. நம்மைத் தேடிக்கிட்டு திரியறானே, அந்த அவன் பேரு என்ன?” “தாவுத்கான் தாத்தா.” “சரி, அந்த உலூபா? இல்லே தாவுதா?” என்று நாம் யோசிக்க வேண்டாமா?” “நிச்சயமா அது உலூப்கானாயிருக்க முடியாது. இப்ப அவனைத் தேடி நாலா திசையிலும்...” “சரி, அப்படியானால் நம்ம ஆளா?” “இருக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது.” “அதோ பாரு. ஓ! ஒரு தொப்பி காலி. இரண்டு மூன்றும் காலி. தம்பி அந்தத் தெக்கு மலைலே வச்சதெல்லாம் காலி. அப்படியானால்...” என்று பதற்றத்துடன் அத்தை ஏதோ கூறவும் விஜயன், “அத்தை, வேட்டைக்காரரும் செங்காணியாரும்தான் நம்மைப் போல் அவ்வளவு தொலைவிலே இருக்கிறதைக் குறிதவறாமே விசி அடிப்பாங்க.” “நம்ம நெட்டூரு ஆளுங்க...” “நம்மகிட்டேருந்து உத்திரவு வராமே அவுங்க எதுவுமே செய்யமாட்டாங்க.” “அப்படியானால் செங்காணியார் இப்போ திடுதிப்புன்னு வந்திட முடியாது. வேட்டைக்காரருதான்...” “அதோ கணவாய் வழியா இரண்டு பேர்கள் வாராங்களே குதிரைகளில்.” “வேட்டைக்காரரு ஒருத்தர். இன்னொருத்தர்...” விஜயன் விழித்தான். சித்தேசுவரியோ ‘எதிரிகள், குறிப்பாகத் தொப்பித் தந்திரக் கண்கள் எப்படி இவர்களை மட்டும் இங்கே விட்டார்கள். ஒருவேளை இவர்களைத் தொடர்ந்து அவர்கள்... சரி, இனி உஷாராகிவிட வேண்டும்’ என்று முடிவு செய்தவள் தங்களை நோக்கி அதிவேகமாக வந்தவர்களை “ஓ! நம்ம படைவீட்டு ராஜ்யத்தின் ரேணுகாம்பாளம்மன் கோயில் பூசாரியில்லே!” “ஐயா பூசாரி அய்யா, வணக்கம்!” என்றாள் சித்தம்மாள் மிக அடக்க ஒடுக்கத்துடன். நிதானமாக இறங்கிய பூசாரி அருகில் சென்று “ஓ! ராணி வீராத்தாளா? ஆசி. அன்பு ஆசிகள் அம்மா. விதி ரொம்பவும் குரூரமாக உன் வாழ்க்கையிலே முன்னே விளையாடிச்சில்ல. இப்ப இந்த படவேட்டார் மேலேயே பாய்ஞ்சிடிச்சும்மா அந்த விதி” என்று பதற்றத்துடன் கூறிவிட்டு “வில்லவரே!” என்றார் பூசாரி. “உத்தரவாகட்டும் பூசாரி ஐயா!” என்றார் பெரிய வில்லவரையர் மிகவும் பணிவாக. இதுவரை வாய் திறவாது இருந்த வேட்டைக்காரர், “எங்கள் கூட வந்து பல்லாளருடன் பேச வேண்டும் என்று அழைக்க வந்திருக்கிறார்கள்” என்று கூறியதும் எல்லோரும் பதறியெழுந்துவிட்டனர். ஆனால் இவர்கள் பதிலை எதிர்பாராமல் குகைக்குள்ளே போய்விட்டார் பூசாரியார். திடீரென்று குகைக்குள் வந்த பூசாரி பொன்னப்பரைக் கண்ட அமரசுந்தரியும் புவன சுந்தரியும் சில நொடிகள் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்து “ஓ...!” வென்று வாய்விட்டு அழுதுவிட்டனர். பூசாரி எதுவும் பேசாமல், தம் கண்களில் மீறி வரும் கண்ணீர்த் திவலையை துடைத்துவிட்டு, “குழந்தைகளே, மனங்குமுறி அடக்காமல் வாய்விட்டு அழுவது நல்லதுதான். ஏனென்றால் இனி உங்களுக்குத் தந்தை என்ற உயிர்த் தெய்வத்தின் துணையில்லை. அருபியான அம்பாள்தான் துணை. தைரியமாக இருங்கள்.” “அப்பா...?” “காரியம் முடிந்துவிட்டது. ஈமக் கடன்களை நிறைவேற்றியவன் பல்லாளன்.” “என்ன?பல்லாளரா! பெரியவரே...” என்று அமரசுந்தரி பதறிவிட்டாள். “ஆமாம், குழந்தைகளே. பல்லாளன்தான் உலூப்கானைப் பழிவாங்கிட படவேட்டாரின் சடலத்தின் மீது ஆணையிட்டிருக்கிறான்.” “ஆனால் அவன் இல்லை தீ வைத்தது. தந்தையைக் கொன்றது என்று இவர்கள்..” புவன சுந்தரிதான் இதைச் சொன்னாள். எனினும் பூசாரியின் நிலையைப் பார்த்துவிட்டு மவுனமானாள். “குழந்தைகளே, உலூப்கான் எந்தப் பாவத்தையும் செய்தவனில்லை. கம்பிலிதான் இந்த அக்கிரமத்தைச் செய்த அயோக்கியன். என்றாலும் நாம் உண்மையை விளக்குவதற்குள் நாடெங்கும் உலூப்கான்தான் செய்தான் என்று வதந்தி பரவி விபரீதமாகிவிட்டது. எனவே நமக்கு ஒரு பெரும் பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைச் சரிவர நிறைவேற்ற படவேட்டரையர் தெய்வமாக வந்திருக்கும் இந்தச் சிசுவின் சாட்சியாகத் துணைபுரியட்டும்” என்று சொன்னவர் தொடர்ந்து, “அமரசுந்தரி, இந்தச் சிசு படவேட்டார் பேரன். செங்காணியார் மகன். மாளிகைக்குப் பதிலாக முருகனைப் போல காட்டிலே பிறந்தவன். குகையிலே பிறந்த இவன் புலித்தோலில் படுத்திருக்கிறான். செம்மையான வருங்காலம். எனவே இதோ ரேணுகாம்பாள் சொல்லுகிறாள். இவன் பெயர் செங்கணிச் சம்பூவப்புலி வேட்டராயன் என்பதாகும்.” என்று கூறிவிட்டுத் தம் மடியிலிருந்து திருநீறு எடுத்துக் குழந்தை மீது தெளித்துவிட்டு, அவர்களுக்கும் கொடுத்தார். அக்காளும் தங்கையும் திருநீறணிந்து பூசாரியைப் பணிவுடன் நமஸ்கரித்து எழுந்தார்கள். அந்த நாளில் மாபெரும் மன்னர்களானாலும் சரி, சிற்றரசர்களானாலும் சரி, தங்கள் குல குருமார்களுக்கும், ஆலயப் பூசாரிமார்களுக்கும் மிகவும் மதிப்பு அளித்து வந்தித்து வழிபடும் பரம்பரைப் பழக்கம் இருந்தது. தவிர சில அரசகுடும்பங்களுக்கு பூசாரியார்களே குருவாகவும் இருந்ததுண்டு. பூசாரி பொன்னப்பர் இந்த வகையைச் சேர்ந்தவர். படவேட்டார் குடும்பத்துக்கு இவர் பரம்பரை அரச குருவும் ஆலயப் பூசாரியாகவும் இருந்தவர். எனவே அந்த நாட்டில், நாட்டு மக்களிடத்தில் அவருக்கிருந்த மதிப்புக்கு வரம்பேயில்லை. “பூசாரியாரே, தந்தையுமில்லை, என் கணவரும் இல்லை. இனி எங்கள் கதி என்னவென்றே தெரியவில்லை. எனினும் நீங்களும் படவேட்டம்மனும் எங்களைக் கைவிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. நான் கணவரிடம் இந்தக் குழந்தையையும், இவளை ஒருவனிடத்தில் ஒப்படைக்கும் வரையிலும் உயிர்வாழ்வது அவசியமாகிறது.” “அமரசுந்தரி, தெய்வத்தைப் பூரணமாக நம்பினால் என்றுமே ஆபத்தில்லை என்பது உறுதி. செங்காணியார் நீ நினைப்பது போல் எங்கேயும் போய்விடவில்லை.” “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் பூசாரியாரே...!” “நீ பச்சைப் புள்ளைக்காரி. எனவே பதற்றப்படக் கூடாது. செங்கணியர் சீக்கிரமே...” “எப்ப பூசாரியாரே? அவர் நலமாயிருக்கிறாரா? எதிரிகள் அவரைச் சித்திரவதை செய்யாமல் விட்டார்களா?” “கொஞ்சம் பொறுமையாக இரு குழந்தாய். முதலில் நாம் உலூப்கான் நிரபராதி என்பதை நிரூபித்திட வேண்டும். இரண்டாவது வில்லவரையர்களை தாவுத்கான் கோஷ்டி பிடிக்காமலிருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மூன்றாவதாகக் கம்பிலிக்கு உரிய தண்டனையை வழங்கிட இறைவனிடம் முடிவை விட்டிட வேண்டும். பிறகு செங்காணியார் உன்னிடம் வருவார். நீங்கள் செங்கம் போகலாம். புவன சுந்தரிக்கும் அவள் மனம் போல மாங்கல்யம் கிடைக்கும்” என்றார் பூசாரியார். புவன சுந்தரிக்கு இந்தக் கடைசி வார்த்தைகளைக் கேட்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் ஆனந்த அதிர்ச்சியடைந்து விட்டாள். வேட்டைக்காரர் தாம் பல்லாளரை சந்தித்தது, அவர் அமைச்சரைக் கலந்து செய்த முடிவு, பூசாரியாருடன் மேற்கொண்ட திட்டம், கம்பிலியை சாகடிக்காமல் தடுத்தது ஏன்? என்ற விவரங்களையெல்லாம் வில்லவரையர், சித்தேஸ்வரி, விஜய வில்லவனிடத்தில் விளக்கி முடித்ததும் அத்தையம்மாள் மட்டும் “என்ன இருந்தாலும் வேட்டைக்காரரே! நீங்கள் அந்தக் கம்பிலியை உயிருடன் விட்டது பெரிய விஷப்பரீட்சை என்பதுதான் என் கருத்து” என்றாள் மனம் நொந்தவளாக. “உண்மை சகோதரி. ஆனால் அவன் பற்றிய மர்மங்கள் தெரிந்தால் நீங்கள் இவ்வாறு கருதமாட்டீர்கள்” என்றான் தானப்பன். “அத்தை, அவன் அசல் கம்பிலி ராஜா இல்லை. ஒரு போலி வேஷக்காரன்” என்று விஜயகுமாரன் சட்டெனக் கூறியதும் அவள் திடுக்கிட்டாள். கிழவர் வில்லவரும் திகைத்துவிட்டு “தம்பி! இது பெரியவங்க விசயம். நீ என்னவோ திடுதிப்பென்று...” “இல்லை பெரியவரே, தம்பி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவன் இதைத் தன் வாயாலேயே உலகுக்கு அறிவித்திட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவனை உயிருடன் விடும்படி தம்பியிடம் சொன்னேன்” என்றார் தானப்பன். வில்லவரையர் பதறிவிட்டார். சித்தேஸ்வரியோ வெகுவாக வியப்புற்று அவரை மாறி மாறிப் பார்த்தாள். “வில்லவரே, இது பெரிய கதை. தவிர இவன் இந்த வேஷம் போட்டு இந்தப் பகுதியில் நாடகங்களை நீண்ட காலமாக நடத்துவதற்குப் பல காரணங்கள். அவற்றில் ஒன்று நம்ம படவேட்டு ராசாவும் உண்டு” என்று கூறியதும் வில்லவரையர் பதறிப்போய் சற்றே சினத்துடன் “ஏ! தானப்பா, நீ உன் நிதானத்தில்தானே பேசுகிறாய்?” என்று கேட்டார். வேட்டைக்காரன் நைந்த குரலில் “ஆமாம், வில்லவரே. தங்களிடம் பேசும் போது நிதானம் மட்டுமில்லை, பணிவும் பயமும் கொண்டுதான் பேசுவேன். நேரம் வரும் போது பல அதிசயங்கள் வெளியாகும். சரி, நாம் இப்போது பல்லாளர் கூட்டத்தைச் சந்தித்திடப் போக வேண்டும். தாமதம் கூடாது ஒவ்வொரு நொடி தாமதமும் நியாயத்தை அழித்துவிடும்” என்று எழுந்தான். குகையிலிருந்து வெளியே வந்த பூசாரியைக் கண்டதும் மற்றவர்களும் எழுந்தார்கள். “வில்லவரே, நான், உங்கள் பேரன், வேட்டைக்காரன் மூவரும் இங்கிருந்து புறப்படுகிறோம். மாலையில் திரும்புவோம். அதுவரை நீங்கள் வெகு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நெட்டூர் ஆட்கள், வேட்டைக்காரர் ஆட்கள் நாலாதிசையிலும் காவல் புரிகிறார்கள். யாராயிருந்தாலும் மிக வேண்டியவரானாலும், இங்கே தமது உயிர் இருக்கும் வரை விடமாட்டார்கள். முத்தப்பன் அசாதாரண பிடிவாதக்காரன். அவன்தான் இந்தக் காவலர் கோஷ்டித் தலைவன். எனவே அச்சமில்லாமல் இருங்கள்” என்று கூறியதும் யாரும் குறுக்கே பேசவில்லை. பூசாரியார் பேச்சுக்கு எதிர் பேசும் காலம் இல்லையே அது! அடுத்த சில நொடிகளில் அவர்கள் மூவரும் வெளியேறுவதைக் கிழவர், சித்தேஸ்வரி மட்டுமில்லை, குகைக்குள்ளிருந்த சகோதரிகளும், எதிர் மலைகளில் சந்து பொந்துகளிலிருந்து கம்பிலி கோஷ்டியினரும் கவனித்தனர். கம்பிலிக்கு ஒரே சந்தோஷம். இப்போது அங்கு அந்தப் பெண்களுக்குக் காவல்கள் இல்லை. எனவே நாம் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு தனது திட்டத்தை தாவுத்கானிடம் கூறிட நினைத்தான். “இதுதான் தக்க சமயம். ஆண்கள் மூவர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்கள். நீங்கள் என்னுடைய இரண்டு ஆட்களைப் பின் கட்டாகக் கட்டி பரபரவென்று தள்ளிக் கொண்டு போக வேண்டும். நாம் தொப்பிகளை வைத்த போது தங்கியிருந்தவர்கள், அதாவது நம்ம தொப்பிகளை அம்புவிட்டுத் தாக்கியவர்கள் போய்விட்டதால் நீங்கள் அச்சமில்லாமல் இந்த இருவரையும் அடி அடி என்று சவுக்கால் அடித்து...” “ஐயோ!” என்று பதறினார்கள் முன்னே வந்த இரு கம்பிலி உதவிகள். “பயப்படாதீர், இருவரும் சும்மா அடிப்பது போல் நீங்கள் வலி தாளாது அலறுவது போல...” “தாவுத், திரும்பத் திரும்ப எங்கள் எஜமான் தீ வைக்கவில்லை என்பதைக் கண்டவர்கள் இவர்கள் இருவரும் என அந்தப் பெண்கள் எதிரில் விளக்கிடுங்கள். ஏனென்றால் உங்களை எங்கள் உலூப்கான் கொன்று விட்டதாக வதந்தி. தீயை வைத்து நாசம் செய்துவிட்டார் என்ற கையாலாகாத கபோதிகள் கூறுகிறார்கள். அது முழுப் பொய். இதோ அவர்கள் இருவரும் உயிருடன். புரிகிறதா? சத்தியத்தைக் கூறுங்கள். என்று குகைவாயிலில் ஆர்ப்பரித்துவிட்டு அந்தப் பெண்கள் வெளியே வந்தால், நல்ல காலம், நீங்கள் இங்கே இருந்தது எங்களுக்குப் பேருதவி. எங்கள் தலைவர் உலூப் சத்தியமாக எந்த அக்கிரமத்தையும் செய்யவில்லை. தீயை வைத்தது படவேட்டாரைக் கொன்றது அவர் இல்லை. தயவு செய்து இந்த உண்மையை நீங்கள் இருவரும் நீங்கள் சாகவில்லை என்பதையும் நிரூபிக்க அதோ மலையடிவாரத்தில் உள்ள பல்லாளரிடம் போய்ச் சொல்லிவிட்டால் போதும். ஏனென்றால் எங்கள் தலைவரை அவர் பிடித்து வைத்திருக்கிறார் அங்கே. தயவு செய்து நீங்கள் கருணையே உருவான பெண்களான படவேட்டார் மகள்களான நீங்கள் என்று குழைவுடன் கெஞ்சுங்கள்... புரிகிறதா? நீலமலையிலுள்ள சின்னக்குகை. நினைவிருக்கட்டும்...” “சரி, சரி, அந்த வில்லவரையன் மகன்... பெண்கள் வெளியே வந்து நம்மிடம் சிக்கினால் தானே ஓடி வந்திடுவார்கள் அந்த நாடோடிகள். அப்புறம் அவர்கள் உங்கள் கைகளில்...” இரு ஆட்களைக் கொண்டு தாவுத் அவர்களை விரட்டியபடி குகைக்குச் சென்றான் குதிரை மீது. இருவரும் நன்றாகவே நடித்தார்கள்! அடி தாங்காது அலறினார்கள். குகையின் எல்லைக் காவலுக்குப் பதுங்கியிருந்தவன் அவர்கள் குகை வாசலுக்குத் திரும்பும் பாதை தாண்டியதும் வேறுபுறமாகச் சென்று வில்லவரையரிடம் வருபவர் பற்றி விளக்கினான். சித்தேஸ்வரி திடுக்கிட்டாள். “அப்பா! நீங்கள் வெளியே வரவேண்டாம். இதில் ஏதோ பெரிய சூது இருக்கிறது” என்றாள். கிழவரும் தலையசைத்தார் தம் வாளை உருவியபடி. அமரசுந்தரியும் புவன சுந்தரியும் “ஐயோ பாவம் அத்தை. இப்படி அடித்துக் கொல்லுகிறானே அந்தத் துலுக்கன் நம் ஊர் ஆட்களை.” என்று பதறினார்கள். சித்தேஸ்வரி இருவரையும் குகைக்குள்ளிருந்து தலை நீட்டக் கூடாது. நம்மை இவர்கள் சந்திக்குமுன் நான் மூன்று முறை சங்கு முழக்கம் செய்வேன். உடன் நமது ஆட்கள் மறைந்திருக்கும் இடங்களிலிருந்து வெளிப்படுவார்கள்...” என சொல்வதற்குள் “ஐயையோ... எங்கள் படவேட்டு ராஜ்ய ராணிகளே, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்” என்று அடி வாங்கியவன் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்ததும் அமரசுந்தரி சட்டென எழுந்து அத்தையையும் மீறி வெளியே வந்துவிட்டாள். “யார் நீங்கள்?” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் அவர்கள் இருவரும் அவள் காலில் விழுந்து விட்டார்கள். இதற்குள் உள்ளேயிருந்து புவன சுந்தரியும் ஓடி வந்துவிட்டாள். “நீங்கள் என்ன மனிதர்கள்தானா? ஏன் இவர்களை...?” என்று ஆத்திரமும் இரக்கமும் இணைந்து பரபரத்த குரலில் அமரசுந்தரி கேட்டு முடிப்பதற்குள் “அங்கே எங்கள் தலைவர் ஒருவர் ஒரு குற்றமும் புரியாதிருந்தும் சித்திரவதை செய்யப்படுகிறாரே” என்றான் தாவுத். “உங்கள் தலைவரா? யார் அவர்?” “உலூப்கான்! பல்லாளர் கையில் சிக்கிவிட்டார். நியாயமில்லாமல் அவர் சித்திரவதைப் படுகிறார். படவேட்டாரை நாசம் செய்தவன் எவனோ! நீங்கள் உயிருடன் இருந்தும் உங்களையும் கொன்றுவிட்டதாக அந்தப் பல்லாளர், சோழகர், எல்லோரும் அதோ அங்கே அந்த நீலமலைக்குகையில் எங்கள் தலைவரை அடைத்துத் தீ வைத்திட...” “அட அநியாயமே! திரும்பவும் ஒரு தீ வைப்பா? எங்களைத் தீவைத்து நாசப்படுத்தியதற்குப் பதில் தீ வைத்தால் நாசம் நலமாகிவிடுமா என்ன?” “அதோ பாருங்கள் புகையை...” “ஆமாம் அக்கா... அத்தை, அதோ பாருங்கள் புகை, திரள் திரளாக...” “படவேட்டார் தெய்வம் தாயே! நாங்கள் இருவரும் ஒரு பாவமும் அறியாதவர்கள். ஆனால், உலூப்கான் தீவைக்கப்பட்ட சமயத்தில் எங்கள் அருகே, திருவக்கரையில் இருந்தான். அவன் ஆட்களும்... இதோ இவர்களும்.” “அத்தை, இது அநியாயம். உண்மை இன்னமும் தெளிவாகாத நிலையில் இனி பொறுக்க முடியாது” என்று சட்டெனக் குகைக்குள் சென்று தன் குழந்தையை எடுத்துக் கொண்டு அமரசுந்தரி வெளியே புறப்பட்டதும் வில்லவரையர் “மகளே, ஏதோ திடுதிப்பென்று இதெல்லாம் நிகழ்வதைப் பார்த்தால்...” “இல்லை தாத்தா... அவர்கள் நம்ம படவேட்டு மக்களைக் கொல்லுகிறார்கள். அங்கே உலூப்கான் குகைக்குள் அடைக்கப்பட்டு தீயிலெரிகிறான்.” இதுவரை நிகழ்ச்சிகளின் வேகம் கண்டு மந்திரத்தால் கட்டுண்டவள் போல் நின்ற அத்தை, “சரி மகளே, புறப்படுவோம். அப்பா, விதி அழைக்கிறது. நாம் அதைத் தடுத்திட முடியாது” என்று நடந்தாள் முன்னே. தாவுத் தடுமாறிவிட்டான். குகையில் இரண்டு பெண்கள் மட்டும்தான். வேறு யாரும் இல்லையென்றான் கம்பிலி. இங்கே ஒரு பேய் மாதிரி ஒருத்தியும் ஒரு கிழவன் பார்ப்பதற்கு வில்லவரையர் மாதிரித் தெரிக்கிறான். என்றாலும் நொண்டுகிறான். தலை முண்டாசு முகத்தை மறைத்திருக்கிறது. பிறகு பார்க்கலாம் இவன் விஷயத்தை. இப்பொழுது நீங்கள் வரக்கூடாது பெண்கள் மட்டும்தான் என்று சொன்னால் இவர்கள் சந்தேகிப்பார்கள். புவன சுந்தரிக்கும் அமரசுந்தரிக்கும் நீலமலைதான் குறியாயிருந்தது. எனவே அவர்கள் சூழ்நிலையைக் கவனிக்கவில்லை. நெட்டூர் வீரர்களும், தேவிகாபுரத்து வேடுவர்களும் இவர்கள் பாதையில் பதுங்கிப் பதுங்கித் தொடர கிழவரும் அத்தையும் கவனித்தனர். என்றாலும் முதல் கணவாய் தாண்டி இரண்டாம் கணவாயில் திரும்பியதும்... ‘இங்கே இருக்கிறேன் என்றாரே கம்பிலி... காணோமே. ஒருவேளை...?’ தாவுத் தவித்தான். ஒருவன், குள்ளமான தோற்றத்தினன் பதுங்கிப் பதுங்கி வந்தான் தாவுதை நோக்கி. அவனைப் பார்த்ததும் ஒருகணம் அதிர்ந்து நின்றாள் அத்தை. கிழவரும்தான். அவன் தாவுதை நெருங்கினான். வாளை உருவிய அவன் “யார் நீ?” என்று கேட்டான் அவன் அருகே வந்ததும். குள்ளமானவன் சொன்னான் ரகசியக் குரலில். “தலைவர், நீலமலைக் குகையில் காத்திருக்கிறார்.” தாவுத் சற்றே நிம்மதியுடன் இரண்டாம் கணவாய் தாண்டி நீலமலை அருகே வந்ததும் “இனி நாங்கள் தேவை இல்லை. எங்களைப் பார்த்தால் அவர்கள் அந்தக் கணமே கொன்று போடுவார்கள். நீங்கள் மட்டும் போங்கள். பல்லாளர் அந்தக் குகைக்குள்...” என்று சொல்லுவதற்குள் அமரசுந்தரி அத்திசையில் வேகமாய் நடக்க, தங்கையும் தொடர்ந்தாள். “ஏ... தாவுத்கான், வாளைக் கீழே போடு!” என்ற வேகமான உத்தரவு. ஒரு கர்ஜனை போன்று முழங்கியவாறு பின்னாலிருந்து அதாவது வில்லவரையக் கிழவரிடமிருந்து வந்ததும் “என்ன?” என்று பெரும் வேகத்துடன் உறுமலுடன் தன் இடைவாளை வெளியே எடுக்கத் திரும்பியவன் முதுகு, தோள். கழுத்து எல்லா இடத்திலும் பல வாள்கள் குத்தி நின்றன. தாவுத்கான் மீது மட்டுமல்ல, அவனுடன் வந்த நால்வரும்தான் இந்த நிலைக்குள்ளாயினர். கட்டுண்டு உதை வாங்கியவர்கள் இனி நாம் செத்தோம் என்று முடிவு செய்துவிட்டார்கள். தாவுத்கானைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த வில்லவரையர் “ஏ! தாவுத்கான், நாம் நீண்ட காலத்துக்கு முன்னரே சந்தித்திருக்க வேண்டியவர்கள். ஆனால் நீ தேடி நான் அகப்படவில்லை. நான் உன்னைத் தேடவில்லை. நீயாகவே அகப்பட்டு விட்டாய்! ஒருமுறை சுற்றிலும் பார். பிறகு நாலா திசையிலும் பார். அதற்கு அப்புறம் மேலே எல்லாம் பார். ஆண்டவன் எந்த உருவில் எவ்வாறு இருப்பார் என்பதைப் பார்!” என்று கிழவர் வேகமாகவும் ஆனால் அதே சமயம் தத்துவார்த்தத்தையும் இணைத்த மாதிரி சொன்னதும் தாவுத் திடுக்கிட்டான். சுற்றிலும் பார்த்தான். நெட்டூர் வீரர்கள். பிறகு நாலா திசையிலும் பார்த்தான். ஆயிரக் கணக்கான துருப்புகள். மேலேயும் பார்த்தான். வேடுவர்கள் பலர் கைகளில் விஷக்கணைகளைப் பொருத்திய வில்களைத் தாங்கி ‘உம்’ என்று ஒரே உத்திரவுக்குக் காத்திருப்பதைப் போன்று மிகவும் எச்சரிக்கையுடன் நின்றனர். தாவுத்கானை கிலி பிடித்துக் கொண்டது. வேட்டையாட வந்தவன் வேட்டைக்கே பலியானால்! “அரே சைத்தான்! ஏ கம்பிலிப் பிசாசே!” என்று கத்தினான் பைத்தியம் பிடித்தவனைப் போல். ஆனால் அவன் எங்கே இருக்கிறான். நீலமலைக்குகை வாசலில் ஒரு குட்டிப் பாறைக்குப் பின்னே கனகுஷியாகக் காத்திருக்கிறான் அக்காவையும் தங்கையையும் எதிர்பார்த்து. ‘ஆகா! எவ்வளவு காலம்! எவ்வளவு கஷ்டம்! எத்தனையெத்தனை தந்திரங்கள். அதோ வந்துவிட்டார்கள். நம் வீரர்கள் புகையை நிறையத்தான் கிளப்பி விட்டார்கள்’ என்ற மகிழ்ச்சியில் குகைக்குள் லபக்கென்று நுழைந்து விட்டான் கருணையே வடிவமான படவேட்டாரின் மகள்கள் அதிவேகமாக வந்துவிட்டனர். இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத போது உலூப்கானை தீயில் எரிப்பது சரியா? அப்படியே இவன் நம் மாளிகைக்குத் தீ வைத்தவன் என்று நிரூபணமானாலும் திரும்ப அதே குற்றத்தை அவனை தீயில் போடுவது நியாயமாகுமா? மனிதத்தன்மைக்குப் புறம்பானதில்லையா? புகைந்தது... என்னால் இங்கு... ஏகப்பட்ட வீர்ரகள் இருக்க வேண்டும். ஏன் அப்படியில்லை? நாம் இப்படி திடுதிப்பென்று வந்துவிட்டோமே என்று சிறிதும் நினைக்காமல் அவள் தங்கையிடம் “புவனி, ஒரே அமைதியாக இருப்பதைப் பார்த்தால் நாம் வருவதற்கு முன்னரே... த்சுத்சு... அநியாயம்” என்று பொருமினாள் மூத்தவள். “ஆமாம் அக்கா. இந்த அத்தை ஒரு பெண்ணாயிருந்தும்கூட கருணை காட்டாமல்...” “இல்லை புவனி, அத்தை இளமையில் பட்ட கஷ்டங்கள் அவரை இப்படி...” “அக்கா, குகைக்குள் கவனி” என்று பரபரத்தாள் தங்கை. ஏதோ ஒரே களேபரமான அடிதடி மாதிரி... “மகளே, நில்லு நில்லு!” என்று கதறிக் கொண்டே ஓடி வருகிறாள் பின்னே வந்த சித்தேஸ்வரி. ஆனால் அமரசுந்தரி “உள்ளே நடக்கும் கொடுமையை நாம் இங்கே நின்று வேடிக்கை பார்ப்பதா?” என்று சொல்லிக் கொண்ட குகைக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்திடவும் தங்கையும் தயங்கவில்லை. “நிறுத்துங்கள்! அவர் குற்றமற்றவர். ஆண்டவன் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். அவர் குற்றமற்றவர்!” ஆவேசத்துடன் மோதிக் கொண்டவர்களிடம் நெருங்கிக் கத்தினாள். சண்டை அதிவேகமாக உருவாகிவிட்ட நேரத்தில் இப்படிக் கத்தினால்... சண்டையிட்டவர்களில் ஒருவன் தயங்கினான் இரண்டொரு விநாடிகள். அதன் விளைவு... சண்டையில் சிக்கிய ஒருவன் முன்னே புலி போலப் பாய்ந்து அமரசுந்தரியின் தோளிலிருந்த குழந்தையைப் பிடுங்கிக் கொண்டான். “ஐயோ! என் குழந்தை..” அலறினாள் அவள். “ஆகாகா! இனி என் அருகே வந்தால்!” என்று குழந்தையைப் பிடுங்கியவன் கத்தியதும் “அடாடா! நீ இப்படி வந்து காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!” என்று சண்டையிட்டவர்களில் இன்னொருவன் மனம் நொந்து கத்தினான். அமரசுந்தரி நெஞ்சம் பதறி துடித்துவிட்டாள். “இந்தக் குரல்... இந்தக் குரல்... புவனி...” “அக்கா... வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் அக்கா...” “புவனி... இந்தக் குரல்...” “ஆமாம் அமரசுந்தரி... நான்தான்...” “புவனி, அவர் அவர் என் கணவர்.” “ஓஹோ! ஏய் செங்காணி. நீயா எனக்கு முன்னே குகைக்குள் புகுந்தாய்? உம், சரி, யார் என் அருகில் வந்தாலும் இந்த சிசு நெஞ்சு முறிக்கப்படும். போடு கத்தியைக் கீழே...” “ஐயோ! என் குழந்தை. செங்காணியாரே, நான் மகாபாவி. அது நம்ம குழந்தை. அது... அது...” சோர்ந்து விழுந்து விட்டாள். “அக்கா..!” என்று ஓடினாள் தங்கை அவள் அருகில். அமரசுந்தரி தன் நினைவிழந்து விட்டாள். “டேய் செங்காணி... வாளைக் கீழே போடு. உம்!” தன் வாழ்நாளில் எந்த ஒரு ஆபத்திலும் கண்ணீர் சிந்தாத அம்மாவீரன் தன் மனைவியின் கருணை காரணமாகக் கண்ணீர் சிந்தியபடி வாளைக் கீழே போட்டான். “அத்தை... அக்கா...” என்று அலறினாள் புவன சுந்தரி. “அத்தையா? அவள் யார்? ஏய் செங்காணி, வா இப்படி. இன்னும் ஒரு நொடி உன் மனைவி தாமதித்திருந்தால் நான் பரலோகம் போயிருப்பேன்! நல்ல காலம், கடவுள் என் பக்கம் பார்த்தாயா... இப்படி வா. இங்கே முன்னே நில். உம்... உன் மனைவியைத் தொடர்ந்து யார் வந்திருந்தாலும் அவர்களை அப்பால் ஓடிவிடச் சொல்லு. தயங்காதே. இல்லையேல் இந்தக் கொல்லு கொலைக்கஞ்சாத கம்பிலி இந்தச் சிசுவின் மென்னியைத் திருகி...” “ஐயோ! கடவுளே!” என்று அலறினாள் புவன சுந்தரி. ‘அத்தை ஏன் இன்னும் வரவில்லை? பின்னாலே ஓடிவந்தவள் என்ன ஆனாள்? உள்ளே வரப் பயந்துவிட்டாளோ? அல்லது அவளையும் எதிரிகள்...’ “ஐயா! அது எங்கள் குலச்செல்வம். நீங்கள் அந்த உயிரையும் பறித்து விடாதீர்கள். தயவு செய்யுங்கள்... கருணை காட்டுங்கள்” என்று கதறினாள் புவன சுந்தரி. “ஆகாகா!” என்று ஆங்காரமாகச் சிரித்தான் கம்பிலி. “தயவு, கருணை இதெல்லாம் கம்பிலிக்கு சொந்தமில்லை சுந்தரி... ஆனால்...” செங்காணி விதியை நொந்து குமைந்து விட்டான். எப்படியெல்லாமோ பாடுபட்டுத் தப்பி வந்தவன், இப்பேர்க்கொத்த சிக்கலில் தானாகவே வந்து விழுந்தானே அயோக்கிய சிகாமணி என்று மனநிம்மதியுடன் அந்தக் கம்பிலியை சாடி ஒரே அடியில் உயிர் நீக்கிட இருந்த நேரத்திலா தன் மனைவி வரவேண்டும்? தனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறான் என்று அறிந்த மாத்திரத்தில் மாமனார் செத்தார், அவர் மாளிகை நாசம், ஆனால் மகள்கள் தப்பினர் என்று அறிந்த போது அடைந்த அதிர்ச்சி, கவலையெல்லாம் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்வியுற்ற மாத்திரத்திலேயே மறந்து விட்டதே! தன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றுதான் ஓடோடி வந்தான் அவன். ஆனால் இவ்வழியில் வந்ததும் குகைக்குப் பின்னர் பதுங்கியிருந்த கம்பிலியை மட்டுமின்றி ஏகப்பட்ட துருக்கர்கள் அங்கு போவதைப் பார்த்து, அவர்கள் போகட்டும், பின்பு வெளிவரலாம். முதலில் குழந்தையைப் பார்க்க வேண்டும், அப்புறம்தான் மற்றவை என்று அதில் நுழைந்து விட்டான். ஆனால் பாறைக்குப் பின்னர் பதுங்கியவன் கம்பிலித்தேவன் என்று அவன் அறியாதது மட்டுமில்லை. அவனைப் பழி வாங்கிடும் நேரத்தில் தன் மனைவியே வந்து தடுத்தால். இப்பொழுது அவன் பேராவலுடன் பார்க்க வந்த குழந்தையும் அல்லவா உயிருக்கு மன்றாடுகிறது? தெய்வமே! இதென்ன சோதனை என்ற பரிதாபத்துடன் கம்பிலியின் அருகே பதறியபடி நின்றான். |