வில்லவன் தேவி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

13

     கம்பிலித்தேவனுக்கு அலாதியானதொரு தைரியம் உண்டாகிவிட்டது. தன்னுடைய பகடை தன் கையில் உயிருடன் இருக்கும் வரை எவரும் தன்னைத் தாக்கிட முடியாது. நூறாயிரம் பேர் வந்தாலும் குழந்தைக்காகத் தன்னை தாக்காமல் எட்டி நிற்பர். ஏன்? அவர்கள் தன்னை போன்றவர்கள் அல்ல, மனிதர்கள் என்று உறுதியாக நம்பினான்.

     “ஏ! செங்காணி, நீ மகாவீரன், தீரன் என்பதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. இதோ இந்தக் குழந்தை உயிருடன் உனக்கு வேண்டுமானால், உன் மனைவியும் உயிருடன் உன்னுடன் வரவேண்டுமானால் இதோ இந்தப் பெண் இருக்கிறாளே இவளை அழைத்துக் கொண்டு என் பின்னே வா! யார் தாக்க நினைத்தாலும் உண்மை நிலையை உள்ளபடி சொல்லி உன்னை, குழந்தையை, உன் மனைவியைக் காப்பாற்றிக் கொள். ஒரு மயிரிழை தப்பினாலும் இந்தக் குழந்தை...”

     “வேண்டாம் ஐயா! அதை ஒன்றும் செய்துவிடாதீர்கள். நான் உங்களுடன் வருகிறேன். மனப்பூர்வமாகச் சொல்கிறேன். எங்கள் படவேட்டார் குல நினைவாக எஞ்சி நிற்பது இது ஒன்றுதான். தயவு செய்து...”

     “ஏ! புவன சுந்தரி... நீ என்னுடன் தானாகவே வருகிறாயா? ஆகா! இதுதான் நான் இந்தக் காலத்தில் கேட்டிட்ட அமுதமான ஒரே சொல்... நல்லது! செங்காணி, முன்னே நட... பெண்ணே, எழுந்திரு” என்றான் கம்பிலி.

     “ஆனால் அக்காள் கிடக்கும் அலங்கோல நிலையில் ஐயோ! அவள் குழந்தை அவளிடம் விடாமல் நாம் மட்டும்...”

     மீண்டும் இளக்காரமாகச் சிரித்தான் கம்பிலி. “பெண்ணே! என்னைப் பைத்தியக்காரன் என்று நினைத்து இப்படிப் பேசுகிறாயா? குழந்தை என் கையில் இருக்கும் வரை தான் என் உயிர் என்னிடம்... அதாவது இந்த எல்லை தாண்டும் வரை. அதுவரை இந்தச் செங்காணி வருவான். குழந்தையை நாம் இருவரும் தோணியில் ஏறியதும் இவன் திரும்பிப் பெற முடியும்.”

     “தோணியா?” என்று குமுறினான் செங்காணி.

     “சும்மா இருடா முட்டாள் வீரனே! அதற்குள் துப்பு அறிய முயல்கிறாய் பார்! பேசாமல் நான் சொல்வதைக் கேள். என்னைத் தாக்கப் பல்லாளன் முயலலாம், அந்த வில்லவரையன் முயற்சிக்கலாம். ஏன், அவன் மகள் அந்தப் பேயாத்தாள் இருக்கிறாளே, அவளும் முயற்சித்தால் அதிசயமில்லை. ஆனால் இவர்கள் என் மீது கை வைத்தால், அல்லது தொலைவிலிருந்து தாக்கினாலும் சரி, எச்சரிக்கை. இதோ இந்தச் சிசு அப்பவே...”

     “ஐயோ! வேண்டாம் வேண்டாம், நீங்கள் எது சொன்னாலும் சரி. அப்படியே செய்கிறோம். செங்காணியாரே, ஆணையிடுங்கள் உங்கள் குழந்தை மீது. உங்கள் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை கொடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. கெஞ்சிக் கேட்கிறேன். குழந்தையைக் காத்து அக்காளையும் காத்தருளுங்கள். நீங்கள்தான் எங்கள் குல வழியில் உயிரோடு எஞ்சியிருக்கும் ஆண்மகன்...”

     செங்காணி உள்ளங் குமுறித் துடித்த போது... “ஐயோ! தெய்வமே! இதென்ன கொடுமை! இந்த அநியாயத்துக்கு...”

     “ஏய்! பெண்பிள்ளை மாதிரி புலம்புகிறாய் நீ! பெரிய வீரனாம்! அவள் ஒரு பெண். ஆனால் உண்மை நிலை புரிந்து புத்தி சொல்லுகிறாள். உம்... இந்தச் சிசுவின் மீது ஆணையிடு. தேவிக்கோட்டை துறையில் என்னையும் இவளையும் தோணியில் ஏற்றும் வரை என் உயிருக்கு நீ பொறுப்பு!” என்று கத்தினான்.

     செங்காணி தலையசைத்தான். பிறகு தன் மைத்துனியின் களங்கமற்ற முகத்தைப் பார்த்தான். அவள் அழகுக் கண்கள் சொரிந்திடும் நீரைப் பார்த்தான். அவனால் மேலும் பொறுக்க முடியவில்லை. “ஆணையிடுகிறேன்!” என்றான் அடுத்த கணமே!

     மீண்டும் ஒரு பயங்கரச் சிரிப்புடன் “நட முன்னே!” என்றான் கம்பிலி.

     குகையிலிருந்து முதலில் தன் இரு கரங்களையும் தூக்கிக் கொண்டு செங்காணி நடக்க, கம்பிலியின் வலப்புறம் புவன சுந்தரி விம்மி வெடித்தவாறு உடன்வர, கையில் குழந்தையை கம்சனைப் போலத் தாங்கியவாறு அலட்சியமாக வெளிப்பட்டான் கம்பிலித்தேவன்.

     குகைவாசலில் எத்தனை பேர்... மலை மீது எத்தனை பேர்... வில்லவரையன் விக்கித்து நின்றார். அவர் மகளோ அதுவரை மறைவிலே செயலற்று நின்றவள் சட்டெனக் குகைக்குள் போய்விட்டாள். தாவுத்தின் கழுத்தில் கத்தி வைத்தவாறு நிற்கும் ஆட்கள் அப்படியே நிற்கிறார்கள். யாவருக்கும் என்ன செய்வது என்று புரியாத பெருங் குழப்ப நிலை. என்றாலும் ஒருவர் கூடத் தாம் நின்ற இடத்திலிருந்து நகரவில்லை.

     பல்லாளர் தமது நண்பர்கள் மட்டுமின்றி பூசாரி, விஜயகுமாரன், வேட்டைக்காரர் குழு, மேலைமலைக் கணவாய் வழியாக அதிவேகமாகவே வந்தார். என்றாலும் இந்த விபரீதக் காட்சியைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டார்கள்.

     “உம். செங்காணி, வாய்விட்டுப் பேசு. உன்னுடைய ஆணையை அறிவித்திடு. இரைந்த குரலில் அத்தனை பேர் காதிலும் விழும்படியாக. உம்...” என்று தன் வாளால் குத்தினான். அதே சமயம் குழந்தையின் கழுத்தில் இடக்கை இறுகியது.

     “ஐயோ! செங்காணியாரே, கத்துங்கள்” என்றாள் புவன சுந்தரி பதற்றம் தாங்காத குரலில்.

     “அன்பர்களே! நான் மகாபாவி” என்று சொன்னவன் அதற்கு மேல் பேச முடியாமல் திணறினான்.

     பூசாரி புரிந்து கொண்டார். அவர் மட்டுமில்லை. எல்லோருமே ஒரு சில நொடிகளில் உண்மை நிலையைப் புரிந்து கொண்டுவிட்டனர்.

     பல்லாளராயர் வீர பரம்பரையில் வந்த மன்னனில்லையா? ஒரு நொடியும் தாமதியாது அவர் தமது குதிரை மீதமர்ந்தபடி முன்னே வந்தார். கம்பீரமான அவருடைய பார்வைக்கு முன்னே கம்பிலி அவரை நிமிர்ந்து பார்க்கக் கூசினாலும், அசட்டுத் துணிச்சலைவிடத் தயாராயில்லை.

     ஆனாலும் “அவரை நெருங்காதே என்று சொல்” என்று செங்கணியாரைத் திரும்பக் குத்தினான்.

     அவர் சொல்லத்தான் முயன்றார்.

     “பல்லாளரே! அங்கேயே நில்லும்” என்றாள் புவன சுந்தரி தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இரைந்த குரலில்.

     ஆனால் அது துக்கத்தால் குழறியது. வலுவிழந்த கீச்சுக் குரலாகவே இருந்தது. எனினும் பல்லாளர் காதில் அந்தத் தீனக்குரலின் வேண்டுகோள் விழாமலில்லை.

     “குழந்தாய்! நீ சற்று மவுனமாக இருக்க முடியுமா? இவன் யார் என்று நான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

     கம்பிலி திடுக்கிட்டான். அவன் மட்டுமில்லை அங்கேயிருந்த பலரும் திடுக்கிட்டார்கள். கம்பிலி யார் என்று எதற்காகக் கேட்கிறார்.

     “கம்பிலி மகாராஜாவை அவதூறு பேசாதே!” என்று மிரட்டினான் கம்பிலி.

     பல்லாளன் காதில் இதுவும் விழுந்தது.

     “டேய்! போக்கிரிப் பயலே! என்னைப் பார்த்துப் பேசு. கம்பிலி மகாராஜா வேஷம் போட்டு ஊரை ஏமாற்றும் நீ யார்?” என்று இடி முழக்கம் போல் கர்ஜித்ததும் கம்பிலியே சில நொடிகள் ஆடிப்போனான். என்றாலும் தளர்ந்துவிடக் கூடாது. இந்த சமயம் தளர்ந்தால் இனி சந்தர்ப்பமே கிடைக்காது.

     “ஏ பெண்ணே! இந்தக் குழந்தை உயிர் வேண்டுமென்றால்...” என்று மேலே சொல்லாமல் நிறுத்தினான்.

     “பல்லாளரே! கெஞ்சிக் கேட்கிறேன். வயதில் நான் ரொம்பச் சின்னவள்தான். எனவே தங்கள் காலில் விழுவதில் தவறில்லை. தயவு செய்து எங்களைப் போகவிடுங்கள். தேவிக்கோட்டை வரை இந்தக் குழந்தையின் உயிர் யமன் கையில்.”

     “தேவிக்கோட்டையா?” என்று அவர் கேட்டதும் செங்காணி சற்றே தெளிவு பெற்றுவிட்டான்.

     “ஆமாம் பல்லாளரே! இவன் யாராயிருந்தாலும் சரி. இவனைத் தேவிக்கோட்டை வரை கொண்டு சென்று இவனையும் என் மைத்துனி புவன சுந்தரியையும் தோணியில் ஏற்றும் வரை இந்தக் குழந்தை பிணை, நான் பிணை. ஆணையிட்டிருக்கிறேன்” என்றான் விம்மியபடி.

     பல்லஈளர் பதறினாலும் நிதானித்தார்.

     ‘உன் குழந்தையைப் பற்றிக் கவலைப்படும் நீ, உன் மைத்துனி பற்றிப் பதறும் நீ, அவள் கதி பற்றி நினைக்கவில்லையே என்று கேட்க முடியாது. குழந்தை நேரிடையாகப் படவேட்டார குலமில்லாவிட்டாலும் அவர்கள் சம்பந்தமுள்ளது. அவர்கள் சந்ததியில் எஞ்சி நிற்கும் ஒரே ஜீவன்.’ எனவே பற்களைக் கடித்துக் கொண்டு நிதானித்தார்.

     என்றாலும் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கும் அத்தனை பேரையும் ஏமாற்றிவிட்டு இவனைப் போகவிடுவதும் தம் மதிப்புக்கு, நிலைக்கு இழுக்கு. எனவே கம்பிலியைப் பார்த்ததார்.

     “ஏய்! போலிப் பிசாசே! நீ மனிதப் பிறவியே அல்ல. எப்படியோ கடவுள் அயர்ந்திருந்த நேரத்தில் நீ தோன்றியிருக்க வேண்டும். பரவாயில்லை, அது தொலையட்டும். உன் கையிலிருக்கும் சிசு இந்த உலகத்தை எட்டிப் பார்த்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லையென்பது உனக்குத் தெரியும். இப்போது உன் கையிலிருக்கும் அச்சிசு தாய்ப் பாலில்லாது கதறும். பசிக் கொடுமையை அது தேவிக்கோட்டை வரை தாங்குமா? வழியில் அது மரணமுற்றால்...”

     புவன சுந்தரி அலறினாள்.

     “பல்லாளரே, மீண்டும் அப்படிச் சொல்லாதீர். அது...”

     “குழந்தாய், உன் கவலை புரிகிறது எனக்கு. ஆனால் வழியில் ஏதாமொன்று நடந்துவிட்டால் உன் அக்கா புருஷன் அதற்குப் பிறகு உயிருடன் இருப்பாரா? தன் உயிரை அவன் சும்மாவா விடுவான்? தன் குழந்தையின்... சொல்லத்தான் பிடிக்கவில்லை, ஆனால் இந்தப் போலிப் போக்கிரியை, ஒரே அடியில் கொன்று போடுவான். பிறகு... ஆகையால்தான் இந்தப் போலியின் நன்மையைத் உத்தேசித்தே நாம் இதை...”

     அவர் சற்றே நிறுத்தினார். ஏனென்றால் சிசு திடீரென்று கத்தத் தொடங்கிற்று.

     “அட சனியனே. அழாதே...” என்று கத்தினான் கயவன்.

     அது இன்னும் இரைந்து கத்தியது.

     “ஐயனே! அதை ஒன்றும் செய்யாதீர்கள். தயவு செய்து ஒருமுறை அது தன் தாயிடம்... ஐயா!” கெஞ்சினாள் தன் குலமானம், சூழ்நிலை எல்லாவற்றையும் மறந்து.

     பல்லாளர் கண்கள் கூடக் கலங்கிவிட்டன இக்காட்சி கண்டு.

     ஆனால் கம்பிலி கலங்கவில்லை. எனினும் சிசுவின் கதறல் சகிக்க முடியவில்லை.

     “சரி, இதை ஒருமுறை... பிசாசு... பேய்... உம்...” என்று புலம்பிவிட்டு “சரி, ஏய் செங்காணி, திரும்பி நட குகைக்குள்ளே. உம்... ஏ பெண்ணே, நீயும் வா. உம்...”

     யந்திரம் போல அவர்கள் அவன் சொன்னபடி செய்தனர்.

     கொடியவன் குகைக்குள் திரும்பச் சென்ற போது அமரசுந்தரி மூர்ச்சை தெளியாத நிலையிலேயே கிடந்தாள்.

     குழந்தையை வாங்கி அக்காவிடம் விட புவன சுந்தரி முன்னே வந்ததும் “ஏ பெண்ணே, எல்லாமே ஒரே குழப்பமாயிருக்கிறது. இவர்கள் அத்தனை பேரும் என்னை விடமாட்டார்கள் உயிருடன். எனவே எழுப்பு உன் அக்காளை. அவளையும் நாம் அழைத்துப் போவதுதான் சரி.”

     செங்காணி விக்கித்து நின்றான். குழந்தையின் அழுகுரல் கேட்டோ என்னவோ தூங்கி எழுந்தவள் மாதிரி சட்டென்று எழுந்து விட்டாள் அமரசுந்தரி.

     கம்பிலிக்கு ஒவ்வொரு நொடியும் சித்திரவதையாகி விட்டது. சிந்தனையில் எத்தனையோ அச்சமூட்டும் நினைவலைகள். எல்லாரும் நம் எதிரிகளாகவே கூடிவிட்டார்கள். வில்லவனும் செத்துவிட்டான். எனவே இங்கிருந்து தப்புவது என்பது இந்த இரு சகோதரிகளிடம்தான். இவர்கள் உடன் வந்தால்தான். அதுவரை இந்தக் குழந்தை உயிருடன் இருந்தால்தான் சாதிக்க முடியும்.

     அவன் கழுத்தில் ஏதோ வழவழவென்று பட்டதும் கையைத் தூக்க முயன்றான். இயலவில்லை. ஆனால் செங்கணி ஏன் தன் கழுத்தை, தன்னை அப்படி வெறிக்கப் பார்க்கிறான்? என்று நிமிர்ந்தவன், ஒரு பாம்பு தன் கழுத்தில் இறங்குவதைக் கண்டதும், “ஓ!” என்று அலறி நகர்ந்தான்.

     பாம்பு இந்த ஒலி காரணமாகவோ என்னவோ கழுத்தைச் சுற்றிக் கொண்டுவிட்டதோ.

     “ஐயோ!” என்றான்.

     கழுத்தில் அரவம் சுற்றிய வேகம்... அது மலைப்பாம்பு போலும். அவன் கண்கள் பிதுங்கின. புவன சுந்தரி ஏதோ பயங்கரப் பேய் ஒன்றைக் கண்டவள் மாதிரி திடீரென்று ஒரு பெரும் கூச்சல் போட்டுச் சுருண்டு விழுந்தாள். ஆனால் அமரசுந்தரி திடீர் திடீரென்று மூர்ச்சை அடையும் அவள் மட்டும் அப்படி அடையாமல் தங்கையை ஆதரவுடன் தாங்கிக் கொண்டாள்.

     ஏன் பாம்பு கழுத்தினை இறுகச் சுற்றுகிறதேயன்றி இன்னும் தன்னைக் கடித்துக் குதறவில்லை என்று கம்பிலி திகைத்தாலும் இதுதான் மலைப்பாம்பின் இயல்பு போலும் என்று எண்ணித் தவித்தான்.

     திடீரென்று கழுத்து மேலும் அதிகமாக இறுக்குவதை உணர்ந்த அவன் ‘ஐயையோ! இதென்ன? தூக்கில் ஏற்றப்படுவதைப் போல, “ஓ...! உம்... முடியவில்லை.’ சத்தமிட கைகால்களை காற்று வாக்கில் ஆதாரம் அகப்படாது உதைத்துக் கொண்டு தொங்கியவனால் பேசவும் முடியவில்லை. ஏன்? மூச்சும் திணறத் தொடங்கியது. விழிகள் ஒரு மாதிரி... அடக்கடவுளே! என்னவென்றே புரியவில்லை. இதுவா உன் கருணை. இதுவா?

     கம்பிலி தன் உணர்வு இழந்துவிட்டான். நொடிகளில் அவன் உயிரற்றவன் போலானான்.

     அதுவரை ஏதோ ஒரு பயங்கரமான மந்திர தேவதையைக் கண்டு ஸ்தம்பித்துப் போன மாதிரி நின்ற செங்காணி திடீரென்று செயல்பட்டான். மேலே இருந்த பாம்பு தன் பிடியைத் தளர்த்தி ஆளைக் கீழே கொண்டு வந்தது. கழுத்தில் இறுக்கியிருந்த சுறுக்கு அவனால் சட்டென நீக்கப்பட்டதும் கம்பிலி கீழே கட்டை போல வீழ்ந்து கிடந்தான்.

     “செங்காணியாரே! இனி நான் கவனித்துக் கொள்ளுகிறேன் இவனை. முதலில் உங்கள் மனைவி, குழந்தை, மைத்துனியை அழைத்துக் கொண்டு வெளியே செல்லுங்கள்” என்று தன் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்ட சித்தேஸ்வரி வெகு நிதானக் குரலில் கூறியதும், ஏதோ யந்திரங்கள் இயங்குவது போல அவர்கள் செயல்பட்டார்கள்.

     குகையிலிருந்து வெளிப்பட்ட செங்காணி, அவர் கையில் உயிருடன் குழந்தை, தன் தங்கையைத் தாங்கியபடி அமரசுந்தரி ஆகியவர்களைக் கண்ட மக்கள், அடக்க முடியாத வியப்புடன் மகிழ்ச்சியுடன் பேராரவாரம் செய்தனர்.

     பூசாரிதான் முதலில் ஓடி வந்தார்.

     அவரைக் கண்டதும் அமரசுந்தரி தாழ்ந்து பணிந்துவிட்டு, “பூசாரியாரே, மனித மனதில் கருணையை இறைவன் ஏன் புகுத்தியுள்ளான் தெரியுமா? இந்தக் கருணையுள்ளம் காரணமாக மனிதப்பிறவி கூடச் சில சமயம் தெய்வீக நிலை பெற முடியும் என்பது கடவுளின் தீர்ப்பு என்று அடிக்கடி அப்பா கூறுவார். இந்த வேதவாக்கினைச் சிறு வயது முதல் எங்கள் இதயத்திலே பதிப்பித்துக் கொண்டுள்ள நாங்கள் குறிப்பாக நான் சில சமயம் தெய்வம் கூடத் தவறான தீர்ப்பு அளிக்கும் என்பதைக் கடந்த மூன்று நாழிகை நரக வேதனையில் கண்டுவிட்டேன். போதும்! என் ஜென்மத்துக்கும் இந்த அனுபவம் போதும் ஐயா!” என்று கூறிவிட்டு ‘ஓ...!’ என்று வாய்விட்டு அழுதுவிட்டாள்.

     “மகளே! கடவுளின் தீர்ப்பு பற்றி தீர்ப்புக் கூற நாம் யார்? என்றாலும் சில சமயம் நாம் பெரியவர்களின் வார்த்தைகளை மதித்திடாது செயல்படும் போதுதான் கடவுளின் தீர்ப்புக்கு விரோதமாகி விடுகிறது. பரவாயில்லை. பல்லாளரின் ராஜதந்திரம் முடிவில் மகத்தான ஒரு வெற்றியைச் சாதித்துவிட்டது. மிருகத்தின் மனதில் மனிதனின் கடைசி தினையளவு கருணையைப் புகுத்தி அவனை தன் பிடிவாத நிலையிலிருந்து தளரச் செய்துவிட்டார்.”

     “இல்லை பூசாரியாரே! உங்கள் படவேட்டம்மன்தான் இந்த அதிசயத்தைச் செய்தாள். நான் இல்லை.”

     “மன்னர்கள், மந்திரிகள் இங்கு கூடியுள்ள ஆயிரமாயிரவர், சேனாதிபதிகள், வீரர்கள் எல்லாம் செயலற்றுப் போகும்படி செய்துவிட்டான் அவன். ஆனால் தற்காலிகமாக அவனுக்கு ஒரு சந்தர்ப்பமளித்தாள் அன்னை ரேணுகாம்பாள். படவேட்டம்மன் தன் எல்லைக்குள் மட்டும் அல்ல, எல்லை தாண்டியுள்ள பகுதிகளில் மட்டுமல்ல, இந்த அகில புவனத்துக்கும் அன்பு காட்டிக் கருணை புரியும் புவனேஸ்வரியான ரேணுகாம்பாள் என்று தொண்டைமான் ஒரு காலத்தில் என்னிடம் சொன்னதுண்டு. அது இன்று உண்மையாகி விட்டதை என் அனுபவத்தில் கண்டுவிட்டேன்.”

     “என் நண்பரை என்னால் காக்க முடியவில்லை. ஆனால் என் அபிமான சகோதரிகளை அம்பாள் காப்பாற்றி விட்டாள். பூசாரியாரே, நீங்கள் இவர்களுடைய குலகுரு. எனவே இனி உங்கள் மூலம்தான் இவர்களுடைய அடுத்த நிலை பற்றிய தீர்ப்பு வெளிப்பட வேண்டும். நாங்கள் அதற்கு முழுமையாகக் கட்டுப்படத் தயார்.”

     இப்படி அவர் கூறியதும் ஏனையோரும் “கட்டுப்படுகிறோம்!” என்று முழங்கினர் ஒரே குரலில்.

     பூசாரி மட்டும் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. தன் மீது இத்தனை பேரும் சுமத்திடும் பெரும் பொறுப்பு சாதாரணமானதில்லை. இன்றும் நாளையும் என்றும் பேசப்பட்டு விவாதத்துக்குரியதாகக் கூடிய ஒரு தீர்ப்பாகவே இருக்கும். எனவே தாம் இதில் மிகமிக எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். இந்த எச்சரிக்கையுடன் தான் ஒரு நல்ல முடிவை வழங்கிட படவேட்டம்மைதான் வழி காட்ட வேண்டும் என்று நினைத்தபடி கையெடுத்துக் கும்பிட்டார்.

     வானத்தைப் பார்த்து அவர் கையெடுத்துக் கும்பிட்டது கண்ட அனைவரும் அந்நேரம் அதே போன்று பயபக்தியுடன் கும்பிட்டனர் என்றால், அது அவருக்குக் கொடுத்த பெரு மதிப்பாகும்.

     குகைவாசலில் ஒரு பெரு முழக்கம் கேட்டது. வானத்தை நோக்கிக் கும்பிட்டவர்கள் கவனம் சட்டென்று அங்கே திரும்பியது. கம்பிலித்தேவன் கட்டுண்டு கிடந்தான். ஆனால் அவன் முன் போல மூர்ச்சை ஆகிக் கிடக்கவில்லை.

     “ஓ!” என்று கத்தினான். அவன் அருகே தலைவிரி கோலமாக நின்றாள் நெட்டுர் ராணி சித்தேசுவரி. இல்லை, பயங்கரமான மகா காளியாகவே அவள் அத்தனை பேருக்கும் காட்சியளித்தாள். எனவே மீண்டும் அனைவர் கரங்களும் அவர்களையறியாமல் “ஆத்தா வணங்குகிறோம்” என்று மனதாரச் சொல்லி பணிவாக வணங்கினர்.

     கட்டுண்டு கிடந்தவன் எகிறி எகிறி உருண்டு புரண்டு கத்தினான், இல்லை கர்ஜித்தான் என்று கூடக் கூறலாம்.

     அமரசுந்தரி, அத்தை சித்தேசுவரி ஒரு பெண்ணாயிருந்தும் அதை மறந்து அவனைத் தூக்கிலிட முடிவு செய்ததும் அவளிடம் மன்றாடினாள். வெளியே பல்லாளராயர் கம்பிலியுடன் பேசிய காலை, குகைக்குள்ளே புகுந்த அத்தை, மூர்ச்சையாகிக் கிடந்த அமரசுந்தரியை சில நொடிகளில் தெளிவித்து விட்டாள். அமரசுந்தரி அத்தையிடம் தான் அவள் புத்திமதிப்படி நடக்காததை நினைத்து, தன் இரக்கமே தனக்குப் பழியானதை நினைத்து, தன் கணவன் தன்னை நாடிவந்தும் கூடத் தன்னை, தன் குழந்தையைத் தொடவும் இயலாத கொடுமை நிலையை நினைத்து, அத்தனைக்கும் தானேதான் காரணம் என்றும் தன்னால் வாழ வேண்டிய தங்கையும் இப்போது சாகப்போகிறாள், தான் பெற்ற குழந்தையும் சாக வேண்டுமென்றால் ஐயோ கொடுமையே! என்றெல்லாம் புலம்பினாள்.

     “நடந்தது நடந்துவிட்டது. இனி அடுத்தது பற்றி யோசி” என்று அத்தை சமாதானப்படுத்திவிட்டு “கம்பிலியை பழி வாங்குவேன்” என்றாள்.

     ஆனால் அமரசுந்தரி “தன் குழந்தை, தன் தங்கை இரு உயிர்களும் அவனிடம் சிக்கியிருக்கும் போது...”

     “இல்லை! எனக்குப் படவேட்டம்மன் ஒரு சந்தர்ப்பம் தருவாள்” என்று கூறியதும் அமரசுந்தரி “அப்படியானால் தான் குறுக்கிடவில்லையென்றும் என்ன இருந்தாலும் ஒரு பெண்மணி இத்தகைய சாகசச் செயல்களை செய்வதைத்தான் விரும்பவில்லையென்றாலும், தடுக்கவில்லை” என்றும் கூறினாள்.

     ஆனால் பல்லாளர் நெட்டூர் ராணி குகைக்குள் நுழைந்ததைக் கவனித்துவிட்டதால், அவனை அங்கு அனுப்ப ஒரு தந்திரம் செய்தார் என்பதும் அவரைத் தவிர வேறு யாரும் அறியவில்லை.

     இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இதோ காலடியில் கிடக்கிறான் கட்டுண்ட கரடியைப் போல். அத்தை சுருக்கிட்டுக் கொல்லவில்லை அவனை. அதுவரை அத்தை கருணையுள்ளம் படைத்தவள்தான் என்று நினைத்த அமரசுந்தரி ‘இனி என்ன, தங்களுக்கு ஆபத்து நீங்கியது. பல்லாளர் கம்பிலிக்கு உரிய தண்டனையை வழங்குவார்’ என்றுதான் நினைத்தாள்.

     எனினும் ஒவ்வொரு நொடி தாமதமும் சித்திரவதையாக அல்லவா இருக்கிறது. பூசாரி ஏன் இன்னமும் தயங்குகிறார்? என்று அவள் தவித்த போது புவன சுந்தரி தெளிந்து விட்டாள்.

     சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். சுற்று முற்றும் பார்த்துப் பரக்கப் பரக்க விழித்தாள்.

     ‘சே! இவ்வளவு பேர்களுக்கெதிரே தான் ஒரு குழந்தை மாதிரி அச்சத்தால் மூர்ச்சையாகி... சேச்சே!’ என்று தன்னைத் தானே குறைகூறிக் கொண்டு எழுந்தவள் எல்லாரும் கைகூப்பியபடி குகைவாயிலைப் பார்த்துக் கொண்டு நிற்பது கண்டு ஏன் இப்படி என்று நினைத்தபடி அந்தப் பக்கம் திரும்பியவள் மீண்டும் ஓவென்று அலறிவிட்டாள்.

     தலைவிரி கோலமாகப் பயங்கரத் தோற்றத்துடன் செக்கச் செவேல் என்று சிவந்த கண்களும், கையில் நீண்ட வாளும், கழுத்தில் பெரும் பாம்பு போல நெளிந்து சுருண்டிருக்கும் நீண்ட கயிறும், வெள்ளை ஆடையில் படிந்த மண் புழுதியால் ஏற்பட்ட செம்மண் பூச்சுடனும் நின்ற சித்தேஸ்வரியைக் கண்டுதான் அவள் அப்படி அலறி அடங்கினாள்.

     கட்டுண்டு மண்ணிலே உருண்டு கிடந்தவன் சொன்னான்.

     “பேடிகளைப் போல பெண் பிள்ளையை விட்டு என்னை வஞ்சித்தவர்களே! உங்களிலே ஒரு ஆண்பிள்ளை கூட இல்லையா?” என்று கத்தினான்.

     பல்லாளர் துணுக்குற்றார்.

     திம்மப்பர் “உம்” என்று உறுமினார்.

     வேட்டைக்காரன் பற்களைக் கடித்தான்.

     ஆயினும் ஏகாந்த வில்லவரையர் சற்றே முன்னே வந்து “பல்லாளரே, அவன் கேட்பது நியாயம்தான். ஒரு பெண் பிள்ளையால்தான் அவன் கட்டுண்டான். அவனை விடுவித்து...”

     “இல்லை வில்லவரே! அவன் பெண் வெறி பிடித்த பேயன். அறநெறி மறந்த அக்கிரமக்காரன். உத்தமர் குடி கெடுத்த உலுத்தன். மனிதர்களைத் தீவைத்துக் கொன்ற மாபாவி. தான் செய்த கொடுமையைப் பிறர் மீது சுமத்தி நம்மையெல்லாம் வஞ்சித்த போக்கிரி. கம்பிலி நாட்டுப் பெரு மன்னன் வேடமிட்டு நம் தமிழகத்தில் கொடுமைகளைப் புரிந்திட்ட கொடியவன். எனவே அவனுக்கு உரிய தண்டனை உண்மையான சர்ப்பத்தைவிட்டுக் கொல்லுவதுதான்” என்று அடுக்கு மொழியில் ஆத்திரத்துடன் அறிவித்ததும் யாரும் பேசவில்லை.

     “பாம்பைவிட்டுக் கொல்லத் தைரியமிருந்தால் செய்வதுதானே. அதற்குப் பதிலாக ஒரு பெண் பிள்ளையைவிட்டு தூக்குக் கயிறு போடுவது மட்டும் தூர்த்தர்கள் வேலையில்லையா?”

     “மூடு வாயை!” என்று கர்ஜித்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தவள் முதலில் புவன சுந்தரிதான். ஏனென்றால் அப்படிக் குரல் கொடுத்தவன் விஜயகுமார வில்லவரையன்தான்.

     “தாத்தா! நீங்கள் தயவு செய்து சற்று நகருங்கள். வேட்டைக்காரரே, அன்று நீங்கள்தான் இவனைக் கொல்ல வேண்டாம் என்று தடுத்தீர்கள். அதன் பலன்... பரவாயில்லை. எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?”

     “என்ன உதவி தம்பி?”

     “இவனுடைய கட்டுக்களை அவிழ்த்துவிடுங்கள். அத்தை கட்டிப்போட்டதால் நாம் எல்லாம் பெண்பிள்ளைகளாய் விட்டோம் அல்லவா? அந்தக் கேவலத்தை நீக்கிட, பல்லாளரே மற்ற பெரியவர்களே, எனக்கு அனுமதி தாருங்கள்” என்று பணிவாகவும் ஆனால் வார்த்தைகளை அழுத்தமாகவும் உச்சரித்துக் கூறியதும் பல்லாளர் “நல்லது. தானப்பரே, வில்லவன் வேண்டுகோள்படி செய்திடுங்கள்” என்றார்.

     பூசாரியாரைப் பார்த்தார் பல்லாளர்.

     “சரி, தம்பியின் சுய பொறுப்பு சம்பந்தப்பட்ட விஷயம் இது. எனவே படவேட்டம்மாளின் நோக்கம் என்று நம்பிச் செயல்படுங்கள்!” என்றார் பூசாரியும்.

     ஆனால் மாகாளி மாதிரி தலைவிரி கோலமாக நின்ற சித்தேஸ்வரி குகை வாயிலில் நின்ற நிலை பயங்கரமாயிருந்தாலும் வாய் திறக்கவில்லை.

     வேட்டைக்காரன் கம்பிலியை நெருங்கிக் கட்டுக்களை அறுத்து விடுவித்தான் அவனை. கம்பிலி எல்லோரையும் ஏதோ புழுவைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டே எழுந்தான். அவன் கைகளில் கட்டப்பட்டிருந்த கட்டுகளின் இறுக்கம், கழுத்தில் கயிறு இறுகிய போதுண்டான வலி, ரத்த ஓட்டமே நின்றுவிட்ட மாதிரி...

     “ஆ!” என்று ஒரு பயங்கர அலறல் அவனிடமிருந்து புறப்பட்டதும் அங்கு குழுமியிருந்தவர்களில் சிலர் பதறி விட்டனர். எல்லோருமாகத் தங்கள் வாளையும் உருவினர். மீண்டும் ஒருமுறை அவன் கத்தியது கர்ஜனை போன்றிருந்தது. தொடர்ந்து ஆர்ப்பாட்டமாக சினத்துடன் இடையே தன் கைகளில், கால்களில் உணர்ச்சி கூடி முறுக்கேறும் வண்ணமாக மடக்கி, நீட்டி, சொடுக்கி, உதறிவிட்டு “உம்” என்று பெரிதாகக் கரடி உறுமுவதைப் போல உறுமினான்.

     “பல்லாளராயரே! தென்னகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்த மாபெரும் ராஜ குடும்பத்தில் வந்த பல்லாளர்களில் நீங்கள் மூன்றாவது தலைமுறை இல்லையா? ஆம்! அன்று வீரம் முழுமையாக இருந்தது. அடுத்த பரம்பரையில் பாதியாகக் குறைந்தது. உங்கள் தலைமுறையில் அறவே அது உங்களிடம் இல்லை” என்று கூறியதும் பல்லாளர் ஏதோ பதில் கூறுவதற்குள்ளாக “மூடு வாயை” என்று வில்லவரையர் கத்தினார்.

     “ஏன் மூட வேண்டும் வில்லவரே! உங்களைப் போல நான் துருக்கனுக்குப் பயந்தோடும் பரதேசியா? இல்லை துருக்கனுக்கு வால் பிடிக்கும் ராஜ பரம்பரையா? உண்மையைச் சொன்னால் வாயை மூடு என்று ஊளையிடுவதேன் கிழட்டு...”

     “பல்லாளரே! இவன் வாய்த்துடுக்கை நாம் இப்படியே விடுவதற்கில்லை!” என்றார் திம்மப்பர்.

     இடி இடியென்று சிரித்தான் ஆத்திரத்துடன் கம்பிலி மீண்டும்.

     “ஆந்திரத்தின் மண்ணில் துங்கபத்திரை ஓடுகிறது. ஆந்திர மக்கள் இடையே வீரம் ஓடுகிறது என்ற பழமொழியை மறந்து போய் அரவத்துக்கு (தமிழ்) வால் பிடிக்க வந்த திம்மப்பரே. பொம்மிடியில் மண் இல்லை பொதிகள் உண்டு உம் தொப்பையைப் போல! அங்கே கிடக்காமல்...”

     “வாயை மூடப்போகிறாயா இல்லையா?” என்று கத்தினான் இக்கேரி.

     “ஓகோ! கொம்பேறி மூக்கனான இக்கேரியா? பேஷ், பேஷ்! நீ என்னை வாயை மூடச் சொல்வதற்கா இங்கு ஓடி வந்தாய்? ரொம்ப ரொம்பப் பேஷ்” என்றான்.

     ஆனால் விஜயகுமாரன் வாய் திறவாமல் அவன் அருகில் வந்து நின்றான்.

     “எதைக் கொண்டு உன் உயிரை முடித்துக் கொள்ளப் போகிறாய்? வாளா, ஈட்டியா, வில்லா அல்லது வெறும் கைகளா?” என்று கர்ஜித்தான்.

     “இருட்டிலே திருட்டுத்தனமாக வாள் வீச்சில் தோள் வெட்டிய தீரன் நீதானா? ஏ பொடிப் பயலே, இங்குள்ள பேடிகளில் நீதான் வயதில் இளையவன். எனவே நீ ஏன் இதற்குள் சாக நினைக்கிறாய்?”

     “உளறாதே உலுத்தா. எது தேவை?”

     மீண்டும் சிரித்தான் கர்ண கடூரமாக.

     “ஏ பொடிப் பயலே, வீண் வார்த்தைகளை ஏன் அள்ளி வீசுகிறாய்? இத்தனை பேர்களும் உனக்குத் துணையாக நிற்கும் தைரியத்தில் ஏதேதோ பேசினால். உன்னை நான் ஒரே வீச்சில் வெட்டிப்போட முடியும். ஆனால் நீ செத்த அடுத்த கணமே இந்த ஆயிரக் கணக்கான ஆடுகள் என் மீது பாய்ந்து ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கித் தின்னும் பிணந்தின்னிக் கூட்டம். இதுதான் உண்மை! மாறாக ஏன் இந்த நாடகம்?” என்று கேட்டதும் செங்காணியால் இந்த ஏச்சினைத் தாங்க இயலவில்லை.

     “தம்பி! நீ இப்படித் தள்ளி நில். நீ தயங்கும் ஒவ்வொரு நொடியும் இவனுடைய விஷநாக்கு வினை நாக்காக வளர்கிறது” என்று சொன்னபடி பாய்ந்து வந்தான்.

     மீண்டும் ஒரு முறை சிரித்தான் கம்பிலி பயங்கரமாக.

     “பெற்ற குழந்தையையும், உற்ற மைத்துனியும் உயிருக்கு மன்றாடும் போது எங்கேப்பா இந்த வீரம் போச்சு! கேவலம் ஒரு பெண் பிள்ளையைக் கொண்டு என்னைக் கண்ணி வைத்துப் பிடித்த உங்களுக்கு வீரம் வேறாக்கும். வெட்கக்கேடு.”

     “பல்லாளரே, நான் கெட்டவனா நல்லவனா என்று ஆராய்ந்துத் தீர்ப்புக் கூறும் உரிமையோ தகுதியோ இங்கு யாருக்கும் இல்லை. சரிக்குச் சரி என்று என்னுடன் போரிட ஒரு ஆளை அனுப்பிப் பின்னால் ஆயிரமாயிரமாக அணிவகுத்து நிற்கும் உங்களிடம் நான் பிச்சை கேட்கச் போவதில்லை! ஆனால் ஒரு நிபந்தனை போடுகிறேன்” என்று, கத்திவிட்டு எல்லோரையும் ஒரு முறை அலட்சியமாகப் பார்த்தான்.

     பல்லாளர் இவ்வளவு கொடியவனாக, எதற்குமே தளராத ஒரு மிருகமாக இருக்கிறானே இவன் என்ற வெறுப்பில் “நீ இருக்கும் நிலையில் உன்னால் எப்படி இம்மாதிரியெல்லாம் பேச முடிகிறது?” என்று கேட்டார்.

     “இதுதான் எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். நான் கற்பனையில் காலமோட்டும் சத்திய வாக்கியன் அல்ல. காரியத்தில் கண்ணாயிருக்கும் சுயநலவாதி. புரிகிறதா காரணம்...”

     “கடவுளே!” என்றார் வில்லவரையர்.

     “நீங்கள் இத்தனை ஆயிரம் பேர்கள் இருக்கும் போது அவர் வேறு எதற்கு வில்லவரையக் கிழவா?” என்று கூறிவிட்டுக் கடகடவெனச் சிரித்தான்.

     பூசாரி கூடப் பொறுமையிழந்து விட்டார்.

     “சரி, உன்னுடைய நிபந்தனைதான் என்ன?” என்று கேட்டார் நிதானமாக.

     அமரசுந்தரிக்கு இப்பொழுதுதான் மனம் சற்றே நிம்மதி கொண்டது.

     புவன சுந்தரிக்கோ இது வரை, அச்சத்தால் அதாவது எங்கே விஜயன் அவனுடன் மோதி... என்று பயந்தாலோ அந்த அம்சம் சற்றே குறைந்து மூச்சுவிட முடிந்தது.

     பூசாரிக்கு இந்த நாட்டில் உள்ள செல்வாக்கு எவ்வளவு என்று கம்பிலிக்குத் தெரியும். எனவேதான் ஏதாவது ஒரு துரும்பு இங்கு உதவுமென்றால் அது இந்தப் பூசாரிதான் என்ற ஒரே முடிவில் இவரை நாம் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும், அதற்குத் தம் பேசினால்தான் பலன் ஏற்படும் என்றும் ஊகித்தான்.

     “ஐயா பூசாரியாரே! நீங்கள் புனித ஆத்மா, தெய்வ தாசர். எனவே உங்களையே நான் கேட்கிறேன். இத்தனை பேரும் ஓநாய்கள் போல இரை தேடிக் காத்திருக்கும் போது நான் தப்ப முடியுமா? அதற்கு வாய்ப்புண்டா?”

     “நான் தெய்வசேவையில் ஈடுபட்டவன். எனவே என்னிடம் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதற்கில்லை. இவர்கள் உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறார்கள், உன் வேண்டுகோளுக்கு இணங்கி. நீ இதுவரை செய்த விபரீதங்கள் போதும். இப்போதாவது இங்குள்ளவர்களிடம் நியாயமாகப் போர் செய்ய அனுமதிக்கிறோம்” என்றார்.

     “வெற்றியடைந்தாலும் சரி, தோல்வி கண்டாலும் சரி, என் உயிர் எனக்குச் சொந்தமில்லையே பூசாரியாரே.”

     பூசாரியார் திடுக்கிட்டார்! பல்லாளரும்தான்!

     “மனிதனாகவே இருக்கத் தகுதியற்ற இவனை நாம் உயிருடன் விடுவதா? கூடாது கூடாது?” என்று கத்தினார்கள் அத்தனை பேர்களும்.

     “பார்த்தீர்களா பூசாரியாரே! பிறகு நான் சண்டையிடுவானேன், வெற்றி பெறுவானேன், பிறகு சாவானேன்? அந்த வம்பெல்லாம் தேவையில்லை. இப்பொழுதே கொன்று போட்டுவிடுங்கள். இதோ என் கழுத்தை நீட்டிவிட்டேன். தரும நியாயமறிந்த பூசாரியான நீங்களே இதைச் செய்தாலும்...”

     “சிவ சிவ!” என்று கூறிக் காதுகளைப் பொத்திக் கொண்டார் அவர்.

     கம்பிலி கெட்டிக்காரனில்லையா?

     “சரி! அவரையே அழையுங்கள், எனக்கு மறுப்பில்லை” என்றான்.

     “எவரை அழைப்பது?”

     “இப்பொழுது ஏதோ பேர் சொன்னீர்களே. அவரைத்தான் கூப்பிடுங்களேன். என்னை வெட்ட நீங்கள் இல்லயென்றால் அவர்தான்.”

     “நிறுத்தப்பா உன் உளறலை! நான் சிவ சிவா என்று கடவுள் திருநாமத்தையல்லவா செபித்தேன்” என்றார் பூசாரி.

     “ஓகோ! அவரையே அழைத்தீர்களா? அதுவும் சரிதான். உங்களுக்குப் பதில் அவரே வந்து வெட்டட்டுமே. எனக்கு ஆட்சேபனையில்லை. முப்பதாயிரம் பேர்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போலப் பாய்ந்து பிடுங்குவதற்குப் பதில் நீங்களோ அல்லது நீங்கள் கூறும் அந்த சிவ சிவக் கடவுளோ வந்து நடத்துவதை நான் ஏற்கிறேன்!” என்றான் கேலியும் கிண்டலும் அதே சமயம் ஏளனமும் வெறுப்பும் நிறைந்திட்ட குரலில்.

     பூசாரிக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே நன்றாகப் புரிந்தது தன்னைக் கொல்லாமல் உயிருடன் விடவேண்டுமென்று கோருகிறான் அவன். சே! இந்த விஷப்பூச்சியை உயிருடன் இனியும் நடமாடவிட்டால் நாடும், நாட்டு மக்களும் நாசமாகிவிடுவது திண்ணம் என்றுதான் நினைத்தனர். ஆனால் சாத்தான் வேதம் ஓதுவது போல இவன் இப்போது நியாயம் பேசுகிறானே. இதுவரை உயிருடன் விட்டதால்தானே.

     “ஏ போலி வேஷப் போக்கிரியே. உன்னை அறை கூவி அழைத்தவனுடன் நீ விரும்பும் முறையில் சண்டையிடு. கெலித்தால் உனக்கு உயிர்ப்பிச்சை. ஆனால் ஆயுள் தண்டனை. தோற்றால், நீ உலூப்கானிடம் ஒப்படைக்கப்படுவாய். இதுதான் என் முடிவு. என்றாலும் இம்முடிவும் பூசாரியார் அங்கீகாரத்துக்குட்பட்டதுதான்” என்றார் பல்லாளர் சலிப்புற்ற குரலில்.

     “பேஷ்! வென்றாலும் தோற்றாலும் தண்டனை மரணம்தான் இல்லையா? இது ரொம்ப ரொம்ப நியாயம்தான். பூசாரியாரே, தெய்வ தாசரான உங்களுக்கு இது...” என்று நயமாக இழுத்தான்.

     “நியாயமாகத் தோன்றவில்லை” என்றார் அவர்.

     இந்த இடத்தில் தனக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைச் சற்றே திறமையாகக் கையாள வேண்டும் என்று மிகவும் தந்திரமாகச் சொற்களை கையாளத் துவங்கினான் கம்பிலி.

     “பூசாரியாரே! நீங்கள் தெய்வத் தொண்டராகவே வாழ்நாள் முழுமையும் இருப்பதால் கேவல உணர்ச்சியுள்ள மனிதர்களின் மனோ நிலைமை அறிய முடியாது. இவர்கள் அத்தனை பேரும், இந்த பெரிய பல்லாளரையும் உள்ளிட்டுத்தான், என்னைத் தீர்த்துக் கட்டவே விரும்புகிறார்கள். இந்தப் பொடியன் கூட நான் சண்டையிடுவது வெற்றியில் முடிந்தால் ஆயுள் தண்டனை. தோல்வியில் முடிந்தால் அவன் கையாலேயே சாவு. அதை விட்டு நாடு கடத்துதல் என்று கூறுவதெல்லாம் வெறும் பேச்சு. விரட்டிவிட்டு நாயைக் கல்லால் அடித்துக் கொல்லுவது போல.”

     பூசாரியார் மீண்டும் காதுகளைப் பொத்திக் கொண்டார். ஆனால் இவ்வளவு அமர்க்களத்தில் அமைச்சர் பெத்தண்ணா ஒருவர்தான் அவன் எதற்காகவோ காலங் கடத்தும் தந்திரத்தைக் கையாளுகிறான் என்பதை ஊகித்துக் கொண்டு தம் அருகே சோழகரை அழைத்தார்.

     இந்தச் சமயம் மலை மீதிருந்தவர்கள் ஏதோ பெரியதொரு கூச்சல் போட்டதும் சட்டென அனைவரின் கவனமும், விஜயகுமார வில்லவன் கவனம்கூட அங்கே ஒரு நொடி சென்றதும் கம்பிலி கண்மூடிக் கண் திறப்பதற்குள் அமரசுந்தரி, புவன சுந்தரி இருவருக்கிடையே வந்து நின்றுவிட்டான். அவர்கள் என்ன ஏது என்று கூடப் புரிந்து கொள்ள இயலவில்லை.

     விஜயகுமார வில்லவன் சட்டெனத் திரும்பியதும் இம்மாறுதலைக் கண்டு வெகுவாக அதிர்ந்து போனான். அவன் மட்டுமில்லை. அண்மையிலிருந்த பலரும் கம்பிலியின் இந்தத் தந்திரம் கண்டு திடுக்கிட்டுப் போயினர்.

     “பூசாரியாரே! இனி நீங்கள்தான் தீர்ப்புக் கூற வேண்டும். இந்த இருவரும்தான் என் உயிருக்குக் காப்பு. இவர்கள் உயிருடன் உங்களிடம் திரும்ப வேண்டுமானால் என் உயிர் நான் விரும்புமிடம் வரை நிலைக்க வேண்டும். நீங்கள் கடவுள் தொண்டர். நானோ மனிதனை அறிந்தவன். எனவே இப்போதைக்கு இதைத் தவிர வேறு வாய்ப்பு எதுவும் எனக்கு இல்லை.”

     பூசாரியார் அவனை மிகவும் வெறுப்புடன் பார்த்தார்.

     “இவ்வளவு நடந்த பிறகும் உனக்கு உன் உயிர் மீது, மிகக் கேவலமான வாழ்க்கையை மேற்கொண்டுள்ள உனக்கு உயிர் ஆசை விடவில்லையே!”

     “ஆமாம் பூசாரியாரே! நான் முதலிலேயே கூறிவிட்டேன். நான் மற்றவர்களைப் போல சாதாரண மனிதன் என்று. நீங்கள் தெய்வத் தொண்டர். ஆதலால் எங்களைப் போன்ற நர மனிதர்கள் நிலைமை அறிய மாட்டீர்கள்.”

     ஆனால் இவர்கள் பேச்சில் பல்லாளர் கவனமில்லை, ஏன்? பலருடைய கவனமும் மேலேயிருந்து வந்து கொண்டிருக்கும் துருக்க வீரர்கள் கோஷ்டியொன்றின் மீது. அவர்களுக் கிடையே உச்சந்தலை முதல் உடல் முழுமையும் கட்டுகள் போட்ட ஒருவன் அவர்களுக் கிடையே குதிரை மீது அமர்ந்திருந்ததையும் பார்த்தனர்.

     அந்தக் கோஷ்டித் தலைவனாக வந்தவன் வேறு யாருமில்லை. இங்கு கூடியுள்ள ஆயிரமாயிரம் பேர்களும் யாரை ஆத்திரத்துடன், வர்மத்துடன் வேட்டையாடுகிறார்களோ அந்த உலூப்கான்தான். ஆனால் அவன் பக்கத்தில் உரு தெரியாமல் கட்டுப்போட்டு வருவதால் யார் என்று திகைத்தனர்.

     உலூப்கான் கம்பீரத்துடன்தான் அமர்ந்திருந்தான் தன் குதிரை மீது. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் முகம் தெரியாவிட்டாலும் அவன் கண்கள் இங்கே நடப்பதைக் கவனிக்காமலில்லை. கம்பிலியின் மனதில் ஏதோ திடீரென்று ஒரு அதிர்ச்சி நினைவு. ஏதோ பெரும் ஆபத்து தனக்கு ஏற்படும் அறிகுறிதான் அதோ வரும் உலூப்கானும் அந்தக் கட்டுப்போட்ட ஆளும் என்று அவன் உள்மனம் எச்சரித்தது. கூட்டத்தில் கவனம் அங்கே வருபவர்களிடம் ஊன்றி நிற்கும் இச்சமயத்தை நழுவவிட்டால்...

     ஒரு நொடி தாமதிப்பதும் ஆபத்து.

     சட்டென அமரசுந்தரியின் கையில் இருந்த குழந்தையைப் பிடுங்க யத்தனித்தவன் தோளை ஓங்கிக் குத்திவிட்டாள் புவனி.

     “ஐயோ..!” என்று அலறி அவள் பக்கம் ஆக்ரோஷத்துடன் திரும்பியவன் கழுத்தில் மீண்டும் சுருக்கு வந்து விழுந்துவிட்டதும் அது தரதரவென்று அவனை இழுத்துத் தள்ளியதும், தொடர்ந்து பயங்கரமான அலறல் ஒன்று எழுந்ததும், “ஆ...! அதோ பத்ரகாளி. அம்மா காளி” என்று கூடியிருந்த அத்தனை பேரும் ஒரே குரலில் பயங்கரத்துடன் கத்தித் தங்கள் கண்களை மூடி ஆனால் கும்பிட்ட கைகளைக் கீழே இறக்காமல் அப்படியே மெய்ம்மறந்து நின்றதும் அதி ஆச்சரியமாக மட்டும் அல்ல, அற்புதக் காட்சியாகவும் இருந்தது.

     தன் அருகே வந்து மரியாதை வணக்கம் செய்த உலூப்கானைக் கைலாகு கொடுத்து வரவேற்ற பல்லாளரும் குகை வாயிலில் நிற்கும் அந்தப் பயங்கர வீராத்தாளை மரியாதையாக நோக்கி வணக்கமும் செலுத்தினார்.

     ஆனால் செக்காடுவது போல இழுக்கப்பட்டு பூமியில் சுழன்று சுழன்று உருண்டு அலறிய கம்பிலியை, கதறு கதறு என்று கதறி தாங்க முடியாத தன் வேதனையையும் வலியையும் வெளிப்படுத்தினான்.