உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
வில்லவன் தேவி(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 14 சட்டென்று மாறிவிட்ட இந்த விபரீதச் சூழ்நிலை மீண்டும் எவ்வாறு மாறும் என்று அங்கு கூடியிருந்த ஆயிரமாயிரம் பேர்களின் நெஞ்சம் பதறிய நேரத்தை நாமும் சற்று நீளவிட்டு திடீரென்று எப்படி இங்கே வந்தார்கள் அந்த உலூப்கானும், அவனுடன் வந்து கட்டுப்போட்ட ஆளும்? மிகச் சுருக்கமாகவாவது இங்கு கூறினால்தான் தொடர்பு தெளிவாகப் புரியும். சற்றும் எதிர்பாராதவிதமாகச் சிறிதும் நியாயமின்றித்தான் பில்லமராயனைத் தாக்கிவிட்டான் கம்பிலி. ஆனால் அவன் செத்துவிட்டான் என்று நினைத்த கம்பிலி, தொலைந்தான் பயல் என்ற நிம்மதியும் கொண்டு விட்டான். ‘இனி தேவகோட்டையான்தான் இந்த முக்கூட்டுக் கொள்ளையரில் தனக்குப் பங்காளியாக இருப்பது. இந்தப் பில்லமனை ஒழித்துக் கட்டிய மாதிரி அவனையும் தீர்த்துக் கட்டிவிட வேண்டும். அப்பொழுதுதான் தனக்கே அத்தனைப் பொன்களும் வந்து சேரும். நெடுநாளாக விரும்பும் அந்தப் பெண், கொள்ளையில் ஏராளமாகக் குவிந்திருக்கும் பொன் ஆகியவையுடன் கடல் தாண்டிவிட்டால் அப்புறம் பூரண நிம்மதிதான். பிறகு எக்காலத்தும் எந்தத் தொல்லையும் எந்தத் திசையிலிருந்தும் தன்னை நாடமுடியாது’ என்றுதான் நினைத்தான் கம்பிலி. ஆனால் இவன் நினைத்து இறுமாந்தது போல அந்தப் பில்லமன் செத்துவிடவில்லை. பாவிக்குச் சதாயுள் என்ற பழமொழி அவன் விஷயத்தில் பலிதமாகிவிட்டது. பிணம் போலக் கிடந்தவனுக்கு நெடுநேரம் கழித்துத்தான் நினைவு வந்தது. மூர்ச்சை தெளிந்தவன் தாகத்தால் தவித்தான். ஆனால் அங்கு யாரும் இல்லையே. மெதுவாக எழுந்திருக்க முயன்றான். இயலவில்லை. முக்கி முனகித் தவித்தான் நெடுநேரம். வெறும் காசு பணத்துக்காகத்தானே தன் ஆட்கள் தன்னிடம் இருந்தார்கள். அன்போ பாசமோ கொண்டா அவனிடம் தங்கினார்கள்? இன்று கம்பிலி கை ஓங்கியதும் அவனிடம் போக வேண்டியதுதானே. எப்படியோ தட்டுத்தடுமாறி எழுந்தான். பக்கத்திலிருந்த கல்லில் சாய்ந்து கொண்டு கண்களைத் திறக்க முயன்றான். திறந்த கண்களில் கூட ரத்தத்துளிகள். கரத்தைத் தூக்கவும் சக்தியில்லை. இனி பிழைக்க முடியுமா? சுற்றும் முற்றும் பார்த்தான். தொலைவில் யாரோ போவது தெரிந்தது. குதிரைகளில் போகிறார்களா? அல்லது... புரியவில்லை. நாக்கு வறட்சி - உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு சற்றே நகர முயன்றான். இயலவில்லை. திரும்பத் தான் முன்பு சாய்ந்திருந்த கல்லிலேயே சாய முயன்றவனை ஏமாற்றிவிட்டு அந்தக் கல்தான் நகர்ந்தது. “அடக்கடவுளே! இந்தச் சாய்மான ஆதாரமும் போய்விட்டதா” என்று சலித்தபடி அப்படியே மல்லாந்து படுத்தான். கண்கள் வான மண்டலத்தைப் பார்க்கக் கூசின. எனவே கண்களை மூடினான். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கி விட்டான். ஏதோ ஒரு அரவம். இனம் புரியாத ஒலி. கண்கள் அச்சத்துடன் திறந்து பார்க்க முயன்றான். அருகே இரண்டு பேர்கள் நிற்பது தெரிந்தது. மெதுவாகத் “தண்ணீர்... தண்ணீர்” என்று முணுமுணுத்தான். உடனே தண்ணீர் அவன் வாயில் ஊற்றப்பட்டது. சிறிதே தெம்பும் தெளிவும் ஏற்பட்டது அவனுக்கு. இப்போது மலர மலரக் கண்களை விரித்து அவர்களை உற்று நோக்கினான். தன் மார்புக் காயங்களில் அவர்கள் ஏதோ மருந்து போடுகிறார்கள். நெற்றியிலும்தான். மெல்லத் தூக்கி உட்கார வைத்து உடலின் இதரப் பகுதிகளிலும் உள்ள காயங்களில் ஏதோ தடவுகிறார்கள். நெற்றியில் ஒரு பெரும் கட்டு. அது முச்காலே மூணு வீசம் முகத்தை மூடிவிட்டது. மார்பில் ஒரு விரிவான கட்டு. அடுத்தாற் போல் வயிற்றிலும் வலது கரத்திலுமுள்ள வெட்டுக் காயங்களில் மருந்து வைத்துக் கட்டுக்கள் போட்டனர். ‘யார் இவர்கள்? தன் மீது கூட கருணை காட்டும் அளவுக்கு நல்ல மனம் படைத்தவர்கள் என்றால் அவர்கள் யாராயிருக்க முடியும்? நம்மைக் கண்டாலே கொன்று போடும் நோக்கம்தானே உண்டாகும் யாருக்கும்!’ “ரஹ்மத், இவன் உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே?” “இல்லை இளவரசே. இவன் பிழைத்துக் கொள்ளுவான். ஆனால் நீண்ட காலமாகும்” என்ற பதில் மிகவும் அடக்கமாக வந்தது. குரலிலேயே ஊகித்துவிட்டான் பில்லமன் அவர்கள் யார் என்று. ‘அப்படியானால் தன் நிலை பேயிடமிருந்து தப்பிப் பிசாசிடம் சிக்கிக் கொண்ட கதைதானா? எவன் தன்னைக் கண்டதுமே கொன்று போடுவானோ அவனிடம்தான் சிக்கிவிட்டோம். என்றாலும் உடனே வெட்டாமல் ஏன் இம்மாதிரி சிகிச்சை செய்து தன் உயிரை மீட்பதில் அக்கறை காட்டுகிறான் அவன்?’ பில்லமன் திடுக்கிட்டான். ஆயினும் அசையக் கூட முடியாத நிலையில் உடல் இருந்தாலும் மனம் அப்படியில்லையே. அது பதறுகிறதே. “ஐயா!” என்று மிகுந்த நைந்த குரலில் அழைத்தான் தன் பக்கத்திலிருந்தவனை. அவன் சட்டெனத் தண்ணீரை அவன் வாயில் விட்டான். “ஐயா!” என்றான் மீண்டும். தண்ணீர்ப் பாத்திரத்தை மீண்டும்... “ரஹ்மத், அவன் தண்ணீர் கேட்கவில்லை. ஏதோ சொல்ல விரும்புகிறான் என்று நினைக்கிறேன்” என்று கம்பீரக் குரல் பேசியதும் ரஹ்மத் என்பவன் பில்லமன் அருகில் நெருக்கமாக உட்கார்ந்து “என்ன வேண்டும்?” என்று கேட்டான். “சாகும் நிலையிலிருக்கும் என்னைக் காப்பாற்றும் தெய்வமான நீங்கள் யார்?” என்று மிகவும் சிரமப்பட்டுக் கேட்டான் பில்லமன். “பில்லமா! நீ சாகும் நிலையில் இருப்பதற்கு யார் காரணம்?” என்று அந்தக் கம்பீரக்குரல் கேட்டதும் “பாதுஷாவின் மகனே, மன்னிக்க வேண்டும். மனிதப் பிறவியில் மகா மோசமானவன் நான். எனவே என்னைப் போன்ற இன்னொரு நீசனால் இந்நிலைக்குள்ளானேன்.” “அவன் யார்?” “கம்பிலியாக நடிக்கும் கயவன்.” “நீதான் அவனைக் கம்பிலியாக நடிக்கச் செய்தவன்.” “உண்மைதான்! அதன் பலனை இன்று அனுபவிக்கிறேன்.” “உனக்கும் அவனுக்கும் என்ன தகராறு?” “ஒன்றுமில்லை. நான் தனியாக இருந்த போது நானாகவே பேசிக் கொண்டேன். அப்படிப் பேசியதில் அசல் கம்பிலி மகாராஜாவின் வாழ்க்கை முடிவதைக் காண விரும்புவதாகக் கத்தினேன். இவன் தாக்கிவிட்டான்.” “நீயும் மோசம். அவனும் மோசம். நீயோ உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பவன். அவனோ பெற்ற தாயையே மோசம் செய்யக் கூடியவன். உங்கள் இருவரில் அதிகம் கெடுமதி கொண்டவர்கள் யார் என்று எவராலும் கூற முடியாது, இல்லையா?” “ஆமாம். மறுக்காமல் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடந்த முப்பது நாழிகையில் ஏற்பட்டிருந்த நரக வேதனை கடந்த முப்பதாண்டு வாழ்க்கையை மறக்கச் செய்துவிட்டது இளவரசே!” “மெய்யாகவா?” “ஆமாம்! நான் இது வரை ஆண்டவன் பெயரைக் கூடக் கூறியதில்லை. இப்போது இதய பூர்வமாகக் கூறுகிறேன். அந்த ஆண்டவன் மீது ஆணையாகக் கூறுகிறேன் மாறிவிட்டேன்.” “மாறிவிட்டேன் என்றால்...?” “கம்பிலி ஒரு போலி. நான்தான் அவனை உலகுக்குக் கம்பிலியாகக் காட்டி இது நாள் வரை ஏமாற்றி வந்தவன் என்று மனமொப்பி அறிவித்திடத் தயார்.” “கம்பிலியும் நீயும் இப்படி உலகைப் போலி வேஷம் போட்டு மட்டும் தானா ஏமாற்றினீர்கள்?” “என்னைப் பொறுத்த வரை இதுதான் உண்மை. ஆனால் படவேட்டரையர் மாளிகைக்குத் தீ வைத்தான் அவன். நான் அதை நேரிடையாகச் செய்யவில்லை. என்றாலும் நான் அவனைத் தடுக்க முயன்றேன். பயனில்லை. அவர் மகளில் இளையவளை மட்டும் கவர்ந்து, மூத்தவளையும் அந்த அரசருடன் எரித்திடவே அவன் திட்டமிட்டான். ஆனால் நான் வெகுவாக வேண்டி அந்த இரு பெண்களும் வெளியேறும் வரை தீ வைப்பதைத் தடுத்தேன். “அவனுக்கு எப்படித் தீ வைக்கும் அவ்வளவு மோசமான ஒரு நினைவு உண்டாயிற்று?” “படவேட்டரையர் ஆறு ஆண்டு காலம் அவனைச் சிறையில் வைத்திருந்தார். பகையுணர்வும் வெறுப்புணர்வும் மூள இதுவே முதற்காரணம். பிறகு தேவிக்கோட்டையில் நாங்கள் கொள்ளைப் பொருள்களைச் சேர்க்கப் போன போது படவேட்டரையரை, ஒரு இசகு பிசகான சூழ்நிலையிலிருந்து அவன் தப்பும்படி செய்தான்.” “அது என்ன?” “அயல் நாட்டுத் திருட்டு கோஷ்டி ஒன்று கடல் ஓடி வந்து படவேட்டுக் கோயிலில் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து அங்கு நுழையவும் செய்தார்கள். ஆனால் படவேட்டார் அவர்களைப் பிடித்துவிட்டார்கள். பூசாரியார் அவர்களைக் கொலை செய்ய வேண்டாம் என்றும் தெய்வம் தண்டிக்கும் என்றும் விடச் சொன்னார். அரசரும் இணங்கினார். ஆனால் அவர்கள் தோணியில் ஏறுகிறார்களா என்று கவனிக்க அவரே தேவிக்கோட்டைத் துறைக்கு வந்தார். நாங்களும் இருந்தோம். ஆனால் கடல் கொள்ளையர் வேறு பலர் அங்கு கூடி இவரைக் கவர்ந்து கொலை செய்ய முயன்றனர். ஏதோ ஒரு நல்ல நினைவில் கம்பிலியும் தேவிக்கோட்டையாரும் இவருக்கு ஏதும் நேராமல் தடுத்துவிட்டனர். இச்செயலுக்காக தன்னுடைய நன்றியைத் தெரிவித்த படவேட்டார் இவன் பொன்னையும் பொருளையும் கொள்ளையடிப்பவன் தானேயென்று பொன் கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால் இவன் நாடியது அவர் மகளை; அவர் ஏசி விரட்டிவிட்டார். இவனுக்குத் துணை போன தேவிக்கோட்டையாரையும் விரட்டிவிட்டார். அன்று வளரத் துவங்கிய பகை நாளடைவில் வளர்ந்து தீ வைப்பில் வந்து முடிந்தது.” “படவேட்டு ராஜா யாரையும் அவமதிக்கும் குணமுடையவரல்லவே?” “உண்மை, ஆனால் இந்தக் கம்பிலி எவ்வளவு கேவலமானவன் என்பது அவருக்கு எத்தனையோ காலமாகத் தெரியும். சத்தி வேட்டார் மகள் வாழ்வைக் கெடுக்கத் துணிந்தான். ஏற்கெனவே எத்தனையோ உத்தமிகள்... அதெல்லாம் இவருக்கு நன்கு தெரியும். இவரிடமே கைதாகி சிறைப்பட்டவன். எனவே, இனி நான் நல்லவனாயிருக்கிறேன். உங்கள் மகளைக் கொடுங்கள் என்று கேட்டால் அதை அவர் ஏற்பாரா? இவர் கூட அந்தத் தேவிக்கோட்டை வீரசோழகன். எங்கள் யாவரிலுமே கொடிய மனம் படைத்தவன். அவன் கொள்ளிடமும் கடலும் கூடும் இடத்தில் தனது கடல் துறையை மட்டுமின்றி, அவன் செய்யும் முறைகேடான செயல்களின் தலைமை நிலையமாகவும் அதைக் கொண்டிருக்கிறான். பொன்னையும், பெண்களையும், கொள்ளையடிக்கிறான். அவனை எதிர்ப்பவர்களை...” “தெரியும். ஏதோ முதலைப் பண்ணையாமே... அங்கு தூக்கியெறிந்துவிடுகிறானாம்...” “ஆமாம், அந்தக் கோரமான செய்கையை நம் பார்த்தால் குலை நடுங்கிப் போகும். அசுர மனம் படைத்தவர்களே ஆடிப்போவர் அந்தக் கொடுமையைக் கண்டு! அந்தப் பாவி ஆமூர் அமிர்தலிங்கச் சோழகரின் சொந்தப் பங்காளி. அவரையே தினம் பொழுது விடிந்தால் பாடாய்ப் படுத்துவான். படவேட்டார் அவனிடம் ‘நீ நேர்மையாக இருந்தால் நானே உனக்கு நண்பனாயிருப்பேன்’ என்றார். அவனோ ‘முதலைகள் மனிதர்களைக் கொன்று தின்னும் கோரத்தைக் காண்பதில் உள்ள மகிழ்ச்சி இதனால் ஏற்படுமா?’ என்று கேலி செய்தான்.” “அடக் கடவுளே!” “ஆமாம்! கடவுள் கூட அவன் மனதை மாற்ற இயலாத அளவுக்குக் கொடியவன், கம்பிலியின் நண்பன்.” “உனக்கும்தான் நண்பன்!” “உண்மை இளவரசே! இல்லையென்று கூறவில்லை. நான் இனி பிழைப்பது என்பது குதிரைக் கொம்பு. அதற்குள் இயன்ற வரை சில நல்ல செயல்களைச் செய்துவிட்டுச் சாகவே விரும்புகிறேன்.” “அந்த நல்ல செயல்கள் எவை?” “முதலில் நீங்கள் படவேட்டார் மாளிகையை தீ வைத்து அழித்திடவில்லை. கம்பிலி வைத்தான், நான் துணையாக இருந்தேன் என்பதை உலகுக்கு அறிவிப்பது.” “காலங் கடந்த ஞானோதயம்! என்றாலும் உண்மையை அறிவிக்க உண்டான மனமாற்றத்தை வரவேற்கிறேன். இரண்டாவது...?” “கம்பிலித்தேவன் என்னும் இவன் என்னால் உருவாக்கபட்ட போலிக் கம்பிலிதான். புங்கனூர்க் காட்டுக்குள் இவன் ஒரு குட்டிக் காட்டு ராசா. அவ்வளவுதான். இவன் தொழில் பெண்களை வேட்டையாடுவது. ஏமாளிகளைக் கொள்ளையடிப்பது. ஆனால் நான்தான் அந்த மகாராஜாவின் மேல் வஞ்சந்தீர்க்கும் மனப்பான்மையில் இந்த விஷ நாகத்தை உருவாக்கினேன் என்று உலகுக்கு அறிவிப்பது.” “மூன்றாவது?” “நான் இது வரை செய்த கொடிய குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து விட்டேன். வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான் என்பதை அறிந்த முடிவுடன் எங்கள் மகாராஜாவிடம் போய் காலில் விழுந்து நான் போலி மகாராஜாவால் சாக இருந்ததற்கு பதிலாக உண்மையான உங்கள் கரத்தால் சாவதற்கே வந்தேன் என்று அறிவித்து அவர் காலடியில் சாவது.” “பேஷ்! பேஷ்! பில்லமராயரே. சாகுந் தறுவாயிலாவது நீங்கள் சற்றுத் திருந்தி நற்புத்தியுடன் பேசுகிறீர். ஆனால் உங்களுடைய அந்தப் போலி செத்த பின்னர் கூடத் திருந்த மாட்டான் என்பது புரிந்துவிட்டது.” “உண்மைதான் இளவரசே!” “நல்லது, நீ உண்மையாகவே மனம் மாறியவன் என்றால்...” “முதலில் நான் பல்லாளரை சந்தித்தாக வேண்டும். அவரிடம் நிகழ்ந்த அத்தனை உண்மைகளையும் கூற வேண்டும். படவேட்டார் மாளிகை எரிப்புக்கும் உங்களுக்கும் லவேலேசமும் சம்பந்தமில்லை என்பதை என் வாயாலேயே நிரூபித்திட வேண்டும்.” “உன் எண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னால் இங்கிருந்து நகர முடியாது. நகர்ந்தால் செத்துப் போவாய்.” “இல்லை இளவரசே. என் வாழ்நாளில் இந்த ஒரு நற்பணியாவது செய்ததாக இருக்கட்டும். ஏன் என்றால் தங்களைப் பழி வாங்கவென்று பல்லாளர் தலைமையில் ஆயிரமாயிரம் பேர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். எங்கே எங்கே என்று ஒரே ஆத்திர உணர்வுடன் அவர்கள் காடுகளிலும் மலைகளிலும் தேடி அலைவதால் ஏற்பட்டுள்ள ஆத்திரம், சோர்வு, வேகம் எல்லாம் அவர்களுடைய பழி தீர்க்கும் வேதத்தைக் கொலை வெறியாக மாற்றிவிட்டது என்றாலும் அதிசயமில்லை. எனவே இப்போதே என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள். உண்மையைக் கூறும் வரை இந்த உயிர் என் உடலுக்குள் நிலைத்திருக்கும். அதை விடவும் மாட்டேன்!” என தேம்பிய குரலில் கூறியதும் உலூப்கான் ரஹ்மத் அலியைக் கலந்து ‘சரி, எப்படியிருந்தாலும் இவன் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம்தான் தன்னைப் பற்றிய உண்மையைத் தரணி அறிந்திட முடியும். வெறியுடன் திரியும் அவர்கள் நெறியுடன் திரும்புவர்’ என்று முடிவு செய்தான். குதிரை மீது அவன் வெகு எச்சரிக்கையுடன் அமர்த்தப்பட்டான். இரு புறத்திலும் ஆட்கள் மிகக் கவனமாக இருக்க உலூப்கான் அவனுடன், பல்லாளரும் அவர் நண்பர்கள் குழுமியுள்ள இடம் சென்றனர். கம்பிலி தவிப்பதையோ, துடிப்பதையோ யாருமே கவனிக்கவில்லை. சித்தேஸ்வரி மெதுவாக நடந்து வந்தாள். அவளுடைய வீர விழிப் பார்வையில் கருணைக்குப் பதில் இருந்தது என்ன? நடையில் இருந்த அலாதியானதொரு கம்பீரம் தெய்வீக நடையாய் அல்லவா எடுத்துக் காட்டியது. துஷ்டர்களைப் பழி வாங்குவதில், இஷ்டர்களைக் காப்பதில் படவேட்டம்மன் இன்றல்ல நேற்றல்ல, காலம் காலமாய் அருள் புரிந்து வருகிறாள் அல்லவா! அவளேதான் இப்படி சித்தேஸ்வரி உருவில் வருகிறாளோ... மனிதர்களிலே பரம நீசனான கம்பிலியை அவள் கைகளாலேயே பழி வாங்க வேண்டுமென்பதுதான் தெய்வத்தின் தீர்ப்பா... ஆனால் அதிக நேரம் இது பற்றி யாருமே சிந்தித்து ஆராயும் முன் அங்கே படவேட்டம்மனே வந்துவிட்டதாகக் கருதி தங்களையே மறந்த தெய்வீகச் சூழ்நிலையில் தங்களை ஈடுபாடுத்திக் கொண்டு விட்டனர். ஆடி ஓடி அலண்டு அடங்கிக் கடைசியில் ஒரு மூலையில் கிடந்தான் அண்மைக் காலம் வரை பயங்கரமான பேயனாக ஆடி ஆர்ப்பரித்த கம்பிலி. “பல்லாள மகாராயரே, நாம் தெய்வத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவர்கள்” என்று பணிவுடன் கூறிய பூசாரி பொன்னப்பர் “அம்மா படவேட்டம்மா! இந்தக் குழந்தைகளின் தாய் தந்தையாகவும், ஜீவரட்சகியாகவும் இருந்து மங்கலமான நற்செயல்களை நடத்தவிருக்கும் நீ, இந்தக் கொடியவனின் உயிரை இழக்கச் செய்வதன் மூலம்...” “இல்லை, இவன் இனி சாகப் போவதில்லை. இதற்கு முன் கையிழந்தான். இப்போது காலையும் இழந்துவிட்டான். இனி உருளுவான். ஆமாம், நடக்கவும் முடியாது. பார்க்கவும் முடியாது. அதோ கிடக்கும் அவனைப் பாருங்கள். அவன் கண்கள்... இனி அவை அவனுக்குத் தெரியாது. எந்தக் கண்களால் அவன் காமவெறியனாகி, கன்னி வேட்டையாடி, ஊரையும் உலகையும் ஏமாற்றி வஞ்சிப்பதில் மகிழ்ச்சி கண்டானோ அந்தக் கண்கள்...” என்று சொல்லிக் கொண்டே சித்தேஸ்வரி அவனை நெருங்கிய போது யாரும் அவள் இருந்த பக்கம், அவன் கிடந்த நிலை எதையுமே பார்க்க அஞ்சி மறுபடியும் திரும்பித் தங்கள் கண்களை மூடிக் கொண்டுவிட்டனர். ***** படவேட்டு ராஜ்யத்தில் அன்று நிகழ்ந்த அமர்க்களம் மகிழ்ச்சிகரமானது. நேற்று வரை நாட்டிலே நிலவிய கொடுமை நிலை, கோர வினைகள் யாவும் அகன்று, அன்னை ரேணுகாம்பாளம்மன் கோயிலில் கூடியிருந்த கூட்டத்தைக் கண்டால், அவை நிகழ்ந்திடாத கனவுகளாகவே தோன்றின. மன்னர், குடிமக்கள் என்ற வேற்றுமை எதுவுமில்லாத சர்வசமரச சந்தோஷமான சூழ்நிலையில் பல்லாளர் முதல் வில்லாளர் வரை இருந்தனர். ஆம்! பல்லாளருக்கு ஒரு விதத்தில் இரட்டைச் சந்தோஷம் என்றால் வில்லவருக்குப் பல விதத்திலும் சந்தோஷம். பல்லாளருக்கு உலூப்கான் குற்றமற்றவன் என்றறிந்த பிறகு நல்லகாலமாகப் பழிவாங்கும் வேகத்தில் அவனை ஒன்றும் செய்யாமல் இருந்தோமே என்ற நிம்மதிதான் மகிழ்ச்சிக்கு முதல் காரணம். இரண்டாவது புவன சுந்தரிக்குத் தான் அபிமான சகோதரன் என்ற உறவுமுறையில் அவளை விஜயகுமார வில்லவரையனுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பினை, பூசாரியாரும் மற்றவரும் தன்னிடம் ஒப்படைத்திருப்பதால் உண்டான பெருமிதம். ஆனால் உலூப்கான் இந்தத் திருமண நிகழ்ச்சிக்காகவே தாமதிக்கிறான் என்பதை அவர் அறிவார். அவனுடன் கட்டுப்போட்டு வந்தவன் வேறு யாரும் அல்ல, நீண்ட காலமாகக் கம்பிலிக்கு உதவிய பில்லமன்தான். தன்னால் கொல்லப்பட்டுவிட்டான் என்று கம்பிலி நினைத்திருந்த அதே பில்லமன்தான் என்று அறிந்திருந்தாலும் அவன் நிலைமைக்கு அவர் வெகுவாக வருந்தினார். உலூப்கான் நிதானமாகவே சொன்னான்: “நான் விரைவில் எங்கள் நாடு திரும்புவதற்குக் காரணம் மகாராஜா கம்பிலித்தேவர் சாகர் நாட்டுத் தலைவருடன் இணைந்து எங்களை எதிர்த்துப் போரிட முடிவு செய்துவிட்டார். அதுமட்டுமல்ல, அவர் வேகமாக முன்னேறவும் செய்கிறார் என்றும் தகவல். தற்போது என் தந்தையே அவரை நேரடியாக எதிர்த்திட டில்லியிலிருந்து புறப்பட்டு விட்டார் என்றும் செய்தி வந்திருக்கிறது. எனவே கடமை என்னை அழைக்கிறது” என்றான். பல்லாளர் அவனுடைய நிலையை ஆமோதித்தார். “தென்னகம் துருக்கர்களின் ஆதிக்கத்துக்குப் பூரணமாக உட்படுவதென்பது அவ்வளவு சுலபமாக நடக்கக் கூடியதல்ல. இரண்டாவதாக வடநாடு போல ஆந்திரா, கர்நாடக ராஜ்யங்களிலும் துருக்கர் ஊடுருவி நிலைத்திட வாய்ப்பு ஏற்படுகிறதென்றால் அங்கு சிதறிக் கிடக்கும் சிற்றரசர்களே காரணம். எனினும் இங்கும் இப்போது ஒன்றி நிற்கும் சூழ்நிலை இல்லை. ஒருக்கால் விஜயநகரத்தின் அரசர்கள் வலுப்பெற்று இங்கு கூடத் தமது அரசாட்சியைப் பரப்பிட விரும்பினார்களானால் அனேகமாக வெற்றி கிடைக்கலாம் அவர்களுக்கு என்று நான் நினைக்கிறேன். ஏன்? எனக்கே வலுவிருந்தால் கூட இப்போதைய சூழ்நிலையில் நான் சோழ பாண்டிய கேரள நாடுகளில் பரவி நிலைக்க முடியும். வலுவில்லை. மனமும் இல்லை. என்றாலும் ஒரு இந்து என்ற முறையில் நான் கம்பிலி நாட்டுக் கம்பிலி தேவமகாராஜா வெற்றியடைய வேண்டுமென்றே விரும்புகிறேன். ஆயினும் டில்லியின் அதாவது உங்கள் வலிமை வெகுவாக அதிகரித்துவிட்டது. எனவே எதையும் உறுதியாகச் சொல்லிட முடியவில்லை” என்றார். உலூப்கான் புரிந்து கொண்டான் அவர் நிலையை. “நல்லது பல்லாளரே! நீங்கள் முதல் தரமான ராஜதந்திரி. மக்கள் எவ்வளவுக்குச் சிரமப்படாமல் இருக்க முடியுமோ அவ்வளவுக்கு அரசர் நிதானிக்க வேண்டுமென்ற கருத்துள்ளவர். எனவே அந்த உயர் நோக்கங்கொண்ட உங்களுக்கு என் வணக்கத்தைக் கூறி இந்தத் திருமண நிகழ்ச்சி முடிந்ததும் விடைபெற்றுக் கொள்ளுகிறேன்” என்று கோரியதும் அவரும் மறுக்கவில்லை. இங்கு மட்டும்தானா மறுப்பில்லாத ஒற்றுமை மனோபாவம்! அங்கே திருமண மண்டபத்தில் விஜயகுமாரன் தனது வீரத்தைக் காட்ட கம்பிலி கொடுத்த சந்தர்ப்பம் வீணாகி விட்டாலும் அவனை ஒரேயடியில் வீழ்த்திவிட்ட தனது காதலி புவன சுந்தரியை உரிமையாகப் பாராட்டும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு இன்பப் பரபரப்பில் தவித்தான். அவளோ ‘இன்னும் ஏன் தாமதிக்கிறார்கள் இந்த பூசாரியாரும் மற்ற பெரியவர்களும் திருமணம் நிகழ்வதில் தீவிரம் காட்டாமல்?’ என்று தவித்தாள். படவேட்டம்மன் ஆலயமணிகள் கணகணவென்று முழங்கின. மேளதாளங்களும் முழங்கி மங்கல நாண் பூட்டும் நேரத்தைச் சுட்டிக்காட்டின. பல்லாளர் முன்னே வந்தார். பூசாரிகள் மங்கல நாணை எடுத்து அம்மன் காலடியில் வைத்து வணங்கினர். “தம்பி! அதை எடுத்து இந்தப் படவேட்டுச் செல்வியின் கழுத்தில் பூட்டு” என்றார் பூசாரி. தாங்க முடியாத மகிழ்ச்சியாலும் சந்தர்ப்பங் கருதி கூடிவிட்ட நாணத்தாலும் நாணிக்கோணித் தன் சங்குக் கழுத்தை இளவலிடம் அடைக்கலமளித்தவள் கண்கள் அவனை ஏறெடுத்துப் பார்க்கா விட்டாலும் ஓரக்கண்களால் பார்த்திடத் தயங்கவில்லை. அவனும் இந்தப் பார்வையிலேயே தன்னை மறந்து மங்கல நாணை மூன்று முடிச்சுகளுக்கு மேலேயே... கண்ணோடு கண் நோக்கி அவற்றூடே கருத்தும் கலந்திட்ட பிறகு அவர்கள் இருவரும் ஒருவராகிவிட்ட நிலையில் நாம் அநாவசியமாக அங்கு இருப்பது அத்துமீறிய செய்கை என்பதால் ‘வாழ்க!’ என்று கூறிவிட்டு விடைபெறுவோம். முற்றும் |