உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
வில்லவன் தேவி(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 5 திருவண்ணாமலை அன்றுவரை அமைதியாகத்தான் இருந்தது. பல்லாளராயன் ஏதோ நாம் துருக்கர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒத்துப்போனோமோ பிழைத்தோம்! நல்ல காலம் நமக்கு ஏதோ கொஞ்சம் இருந்ததால்தான் அந்தக் கம்பிலித்தேவனுடன் சேராமல் தப்பினோம்... என்ற நிம்மதியுடன் கடந்த பத்துப் பதினைந்து தினங்களாக நிம்மதியாயிருந்தான். தினசரி இருமுறை அண்ணாமலையாரைக் காலையிலும் மாலையிலும் கோயிலுக்குப் போய் தரிசித்து வந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆலய தரிசனத்துக்கென்று ஆசாரமாக உடைகளையுடுத்து தனது குடும்பத்தாருடன் ஆலயத்துக்கு நடந்தே சென்றான். பக்தி அடக்கத்துக்கு வழி காட்டியது! கொஞ்ச தூரம் சென்றவன், வலப்பக்கத்திலிருந்து ஏகப்பட்ட குதிரை வீரர்கள் வருவது கண்டு தனது காவலனை அனுப்பி யார் என்று அறிந்து வா என்று கூறி அனுப்பினான். ஆனால் இடது பக்கத்திலிருந்து இதே மாதிரி இன்னொரு கூட்டம் வந்ததும் சற்றே திகைத்தான். பல்லாள உபசேனாதிபதி சங்கரதேவன் எங்கிருந்தோ தனது உதவிகளுடன் பறந்தோடி வந்து வலப்புறக் கூட்டம் இடப் புறக்கூட்டம் இரண்டையும் மறித்தான். ஆனால் எதிர்த்திசையிலிருந்தும் ஒரு மாபெரும் கூட்டம் “பழிக்குப்பழி வாங்காமல் திரும்போம்!” என்ற கோஷத்துடன் வந்ததும் ‘சரி, பேராபத்து தேடி வருகிறது’ என்று ஊகித்துத் தன் குடும்பத்தாரைச் சட்டென்று பக்கத்திலிருந்த மாளிகைக்கு அனுப்பிவிட்டுத் தன் குதிரை மீது ஏறி முன்னே சென்றான். பல்லாளராயன் இன்று துருக்கர்களுடன் சந்தர்ப்பங்கருதிச் சேர்ந்திருந்தாலும் வீரத்தில் அப்படியொன்றும் குறைந்தவனில்லை. ஏனென்றால் அவன் ஒய்சளர் வமிசத்தில் வந்தவன். தென்னகத்தின் வல்லரசாயிருந்த ஒய்சளரின் முன்னைய வீரதீரப் பிரதாபங்களில் எஞ்சிய ஒரு பகுதி இவனிடமிருந்தது என்று கூறலாம்! “யாரைப் பழிக்குப் பழி வாங்க நீங்கள் இங்கே வந்தீர்கள்?” என்று பெரிய கூட்டத்தின் அருகில் போய் எடுப்பான குரலில் கேட்டதும் அவர்கள் சற்றே தயங்கிவிட்டு “துருக்கர்களை” என்று உரத்த குரலில் கூறினார்கள். உடன் பதில் எதுவும் பேசாது தமது குதிரையின் மீதமர்ந்தபடி பல்லாளர் ஒரு முறை நாலு திசையிலும் கம்பீரத்துடன் நோக்கினார். ஏறத்தாழ நாலாயிரம் பேர்களிருக்கும்! வலது பக்கக் கூட்டத்தை விலகிக் கொண்டு பதின்மர் முன்னே இடை வழிவிட்டு விலகிவர அந்த வழியில் வெண்புரவி மீது அமர்ந்து எடுப்பான தோற்றத்துடன், எதற்கும் அஞ்சாத செக்கச் சிவந்த விழிகளின் நிமிர்ந்த பார்வை, நீண்டு வளைந்த கம்பி மீசை, ஆறடிக்கும் மீறிய உயரம், குதிரை மீது அமர்ந்ததனால் இன்றும் உயரமாகக் காட்டிய நெடிய தோற்றத்துடன் வந்த பொம்மிடி திம்மப்பராயனைக் கண்டதும், பல்லாளராயர் திகைத்து “வாருங்கள் திம்மப்பரே... வாருங்கள். இதன்ன அதிசயம்! நீங்களே இந்த வயதில், இந்த நிலையில் இங்கு வருவதென்றால் அப்படி என்ன நடந்துவிட்டது?” என்று சற்றே பதறிய குரலை நிதானப்படுத்திக் கொண்டு கேட்டதும், அவர் “உம்! பல்லாளரே, தெரிந்தே கேட்கிறீரா? அல்லது நிகழ்ந்தது தெரியாமல்தான் கேட்கிறீர்களா?” என்று உணர்ச்சியுடன் ஆனால் அதே சமயம் உக்கிரத்துடன் கேட்டதும் பல்லாளர் உண்மையாகவே பதறிவிட்டார். “என்னதான் நடந்துவிட்டது!” இடப்புறமிருந்து எல்லாரையும் ஒதுக்கிவிட்டு முன்னவரைவிட வேகமாய் வந்த பயங்கரத் தோற்றத்தினரான இக்கேரி வீரப்ப நாயக்கரைக் கண்டதும் பல்லாளர் மேலும் பதறிவிட்டார். இவர்கள் போதாதென்று வடக்கேயிருந்து வந்த கூட்டத்திலிருந்து புத்தூர்த்தத்தன், அரசமுடிமண்டலத்து ஆமூர்ச் சோழகனும் வந்து நின்றதைக் கண்டு வெகுவாக ஆடிவிட்டார் பல்லாளன். “வீரபல்லாளரே, நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் தென்னகத்தில் வீரம் விளைத்த ஒய்சாளப் பரம்பரையினர். மறுப்பில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் துருக்கர் தீமை விளைவிக்காமலிருக்க அவர்களுடன் இழைந்து நிற்க ஒப்பினீர். நாங்கள் குறுக்கிடவில்லை. ஏனென்றால் கம்பிலித்தேவன் கயமையே உருவானவன். மோசக்கார நீசன். அவனை ஒதுக்கியது நியாயமே, மறுப்பில்லை. ஆனால் நேற்றிரவு நடந்த கொடுமைக்கு நீங்கள் என்ன பதில் கூறப்போகிறீர்?” என்று திம்மப்பன் கர்ண கடூரமான குரலில் இரைந்து கத்தியதும் பல்லாளன் ‘என்ன நடந்தது என்று இன்னமும் தெரியவில்லையே?’ என்று விழித்தார். ‘எங்கே மஹாமந்திரி பெத்தண்ணா? நேற்றிலிருந்து அவர் அரண்மனைப் பக்கமே வரவில்லை. சேனாபதியோ ஆற்காடு போனவர் இன்னும் திரும்பவில்லை.’ “திம்மப்பரே, நீங்கள் எல்லாரும் இப்படி திடீரென்று ஒரே கூட்டமாக வந்து என்னைக் கேட்டால்...” என்று வேறு வழியில்லாமல் ஏதோ உளறிக் கொட்டினார். “போசளபல்லாளரே! நீங்கள் எதுவுமே தெரியாத மாதிரி பேசினால், இங்கிருந்து முப்பது கல் தொலைவில் நிகழ்ந்துள்ள கொடுமை உங்களுக்குத் தெரியாது என்றால், அதை நாங்கள் நம்பத் தயாராயில்லை. இதுவரை பொறுத்தோம். இனி இயலாது. பழிக்குப் பழி வாங்குவோம். உலூபை மட்டுமல்ல, உங்களையும்தான். நாங்கள் அழிந்திடத் தயார். ஆனால் மானம் பெரிது. நீங்கள் முடிந்த முடிவாகக் கூறிவிடுங்கள். நேற்றைக்கு உங்கள் நண்பன் புரிந்துள்ள அக்கொடுமையை நீங்கள் எதிர்க்கப் போகிறீர்களா? அல்லது அந்தக் கொடியவன் பக்கம் துணை நின்று எங்களை எதிர்க்கப் போகிறீர்களா?” என்று புத்தூர்த் தத்தநாதன் கேட்டதும் பல்லாளர் “அட! அண்ணாமலையானே! இதென்ன புது ஆபத்து” என்று குமுறியபடி “தத்தரே, உலூப் புதிதாகப் புரிந்த..” “நிறுத்துங்கள் பல்லாளரே. அவனைத் தாங்கிப் பேசும் நீங்கள் தென்னகத்தின் முதல் விரோதி. படவேட்டரையர் அவனை என்ன செய்துவிட்டார்? உங்களைப் போல அவர் அடிவருடத் தயாராயில்லை. அவ்வளவுதானே?” என்று இக்கேரி இடி போல முழங்கியதும் பல்லாளர் முகம் சிவந்துவிட்டது. ஆத்திரத்துடன் அவரைப் பார்த்து “இக்கேரி நாயக்கரே, உங்கள் பேச்சு தரம் கெட்டதாயிருக்கிறது. நான் யாரையும் கால் பிடிக்கவில்லை.” “தரம் கெட்ட கயவனுடன் உறவாடும் உங்கள் போக்கை நாங்கள் விரும்பவில்லை. உலூப்கான் செய்த இக்கொடுமைக்குத் துணை செய்தவர் நீங்கள்தான். படவேட்டரையர் தமது சுய மதிப்பை இழக்காதிருக்க முயன்றதில் என்ன தவறு! அவர் உங்களுடன் சண்டைக்கு வந்தாரா? அவர் நாட்டை இப்படி அழிப்பானேன்? கோட்டையை, எரிப்பானேன்? அவரைக் கொல்வானேன்? அபலைப் பெண்களை...” குதிரை மீது இருந்து பதற்றத்துடன் இறங்கினார் பல்லாளர். “தத்தரே, நிறுத்துங்கள் இதெல்லாம் என்ன? படவேட்டரையரை என்ன செய்தார்கள்? என்னதான் நடந்தது? இந்த அண்ணாமலையார் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நீங்கள் கூறுகிற எதுவுமே தெரியாது எனக்கு” என்று மிகவும் கலங்கிவிட்ட குரலில் பல்லாளர் மறுத்ததும் தத்தர் வியப்புடன், வெறுப்புடன், நம்பாத பாவனையுடன் அவரைப் பார்த்தார். திம்மப்பர் இப்போது குறுக்கிட்டார். “பல்லாளரே, நேற்றைக்குப் படவேட்டு ராஜ்யத்து மல்லிநாதச் சம்பூவராயரை, உங்கள் நண்பன் உலூப்கான் கொன்றது தெரியயாதா உமக்கு? பூசை அறையிலே இறைவனை வேண்டி தம்மை மறந்திருந்த அந்தக் தெய்வ சீலரை, மாளிகைக்குத் தீ வைத்துக் கொன்றுவிட்டான் பாவி!” “ஐயோ! இதென்ன கொடுமை!” என்று அலறிவிட்டார் பல்லாளன். “ஆச்சரியமான பதற்றம் இது பல்லாளரே. உங்களிடம்மிருந்து சென்றவன் அவன். நேராகப் படவேடு சென்றான் என்பது உமக்குத் தெரியும்! இருந்தும் நீங்கள் எதுவுமே...” “இல்லை திம்மப்பரே... இல்லவேயில்லை. எனக்குத் தெரியாது சோழகரே இது!” என்று பரிதாபமாகச் சொன்னார் பல்லாளர். “ஆமாம் பல்லாளரே. படுபாவி நம்மை ஏமாற்றிவிட்டான். படவேட்டாருடன் நேற்று காலை நான் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உலூப்கானுடன் சண்டையிடப் போவதில்லை. ஆனால் அவன் சொற்படி ஆடப்போவதுமில்லை என்று அழுத்தமாகக் கூறினார். தவிர பங்காளியான தேவிக்கோட்டையானுடன் நான் தினசரி மாரடிக்க வேண்டியிருக்கிறதே என்ற அவருடன் நீண்ட உரையாடினேன். பிறகு அவர் மகள் பெரியவள் பூரண கர்ப்பிணி. பொதுகைக்குப் போய்விட்டுத் தங்கையுடன் திரும்பிய நேரம். நான் புறப்பட்ட சற்று நேரத்தில் உலூப்கான் அசன்ஷாவுடன் படவேடு வந்திருக்கிறான். அவனுடைய படையினர், படைவீட்டாரின் ஆட்கள் யாவரையும் கோட்டைக்கு அப்பால் திருவக்கரைப் பாதையில் தடுத்து நிறுத்தி விட்டனர். உலூப்கான் தென்னகம் முழுமையும் தன் கீழ்வர வேண்டும் என்றும், தன்னை மேலாவாக அவர் அங்கீகரிப்பதுடன் தன்னை எதிர்ப்போருடன்தான் சண்டையிட நேரிட்டால் தனக்கு உதவி செய்திட உறுதி அளித்து உடன்படிக்கைக்கு வரவேண்டுமென்று கேட்டிருக்கிறான். நான் உன்னுடன் சண்டையிடத் தயாராயில்லை. ஆனால் வேறு எவ்வித நிபந்தனைக்கும் கட்டுப்பட இயலாது என்று கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு சிறிது நேரத்தில் படவேட்டர் கோட்டை தீக்கிரையானது. அவரும் கொல்லப்பட்டார். அவர் மகள்களும் தீயில் பொசுங்கி...” “ஐயோ! தெய்வமே! இதென்ன அநியாயம்? சோழகரே, இதெல்லாம்...” என்று அவர் நிலைகுலைந்து போய்க் கேட்டு முடிப்பதற்குள் “உண்மையா என்று கேட்கிறீர்களா பல்லாளரே? ஆண்பிள்ளையாயிருந்தால் எங்களுடன் வாருங்கள்” என்றான் அதுவரை நிதானமாய் பேசிய சோழகன். ஏனென்றால் இப்போது அவர் கேட்டது ‘நீ உண்மையைத்தான் சொல்லுகிறாயா?’ என்று கேட்பது போலல்லவா இருக்கிறது. “இதோ புறப்படுகிறேன் சோழகரே! நீர் சோழ வமிசத்தை சேர்ந்தவர். எனவே உம் வாயில் பொய் வராது” என்று தன் குதிரை மீது சிங்கமெனப் பாய்ந்து ஏறிவிட்டார் அவர். ‘அண்ணாமலையார் தரிசனம் அப்புறம், முதலில் நாம் நியாயத்தை தரிசித்தாக வேண்டும்’ என்று அவர் முன்னே சென்றதும் தத்தர் திகைத்தார். இக்கேரி திடுக்கிட்டார். திம்மப்பர் ‘அப்படியானால் உண்மையில் இதுவரை இவருக்குத் தெரியாமல்தான் இருந்திருக்குமோ?’ என்று சிந்திந்தபடியே தம் குதிரை மீது ஏறினார். “நண்பர்களே! உங்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை! நான் ஒய்சள வமிசத்தான். வாழ்வாங்கு வாழ்ந்த பரம்பரைதான். என்றாலும் வாரங்கல்லாரும் தேவகிரியாரும் பட்டபாடுகளை, நாட்டு மக்கள் பலரும் நாசம் ஆனதைக் கண்டதும், எங்கும் அழிவு, அழிவு என்ற ஓலத்தை இன்றல்ல, நேற்றல்ல, மாலிக்காபூர் முதல் முறை இங்கு வந்தானே அன்றிலிருந்து பலவகைக் கொடுமைகளை ஏனையோரை விட அதிகமாக அனுபவித்தவன் நான். ஒய்சாளருக்குச் சாவுமணி என்பதுதான் மாலிக்கின் முடிவு. யாதவராயரை நசுக்கிய பிறகு இங்குதான் தொடுத்தான் தன் நாசக்கணையை. ஆனால் விதிவசத்தால் அவன் திரும்பினான். அவன் திரும்பிய காலையில் வந்த போது செய்த நாசத்தைக் காட்டிலும் அதிகமாக நாசம் விளைந்தது. திரும்பி எழுவதற்கில்லை. நாசத்திற்குள்ளானதால் நிமிர முடியவில்லை. இந்த உலூப்கான் வந்துவிட்டான். இனியும் நாம் முரண்டு பிடித்தால் உள்ளதும் அழியும். பிறகு ஒரு நூறாண்டு ஆனாலும் மக்கள் நிமிர முடியாது. நமக்கு எதிர்காலமே இல்லை என்று நன்றாக உணர்ந்த பிறகே நான் உலூப்கானுடன் நேசம் பூண்டேன். அவன் டில்லி பாதுஷாவின் மகன். எனவே, நல்ல ராஜரத்தம் ஓடுகிறது. எனவே நியாயமாக நடப்பான், சொன்ன வார்த்தைப் படி என்று நம்பினேன். ஆனால் நீங்கள் சொன்னதைக் கேட்ட உடன் நான் நம்பிக் கெட்டேன் என்றுதான் உறுதியாகிறது. இப்பவே சொல்லி விடுகிறேன். இந்தக் கொடுமையை அவன் செய்திருந்தால் நான்தான் முதலில் அவனைப் பழிவாங்குபவனாயிருப்பேன். இது சத்தியம்” என்று பல்லாளன் மற்ற அரசர்களைப் பார்த்து முழங்கியதும், அத்தனை பேரும் சற்று நேரம் சிலையாகவே ஸ்தம்பித்து நின்றுவிட்டனர். பிறகு திடீரென்று “பழிக்கு பழி! வஞ்சஞ்தீர்க்காமல் விடமாட்டோம். நம்பிக்கை மோசம் செய்த நாசகாரன் உலூப்கான் ஒழிக” என்று அத்தனை பேரும் வானமதிர முழங்கிட முதலில் மூவாயிரமாகப் புறப்பட்ட கூட்டம் போகப்போக அதிகரித்துவிட்டது. அன்னியூர் ஆதித்த சோழரும் தமது படைகளுடன் கூட்டத்தில் கலந்து கொண்டார். வளவனூர் நாட்டு மாவளவன், கோயிலூர் நம்பிராசன், வேட்டவலம் நாட்டரையர் சிங்கவரம் சேவுக நாதர், மயிலம் மாரப்பர் ஆகியவர்கள் தங்கள் படைகளுடன் வந்து இப்படைகளுடன் கலந்த போது முதல் மூவாயிரம் பின்னர் முப்பதாயிரமாகப் பெருகிவிட்டது. மக்கள் ஆங்காங்கு கூடிக் கூடிப் பேசினர். படவீட்டுச் சம்பூவரையர், அவருடைய மகள்கள் ஆகியோரை வடநாட்டுத் துருக்கர்கள் தீவைத்துக் கொன்றுவிட்டனர். இதுதான் பேச்சு. ‘படவேடு இன்று பத்துக்கல்கள்தான்! ஏன் நமது அமைச்சர் போளூர் பெத்தண்ணா நேற்றிரவும் வராமல் இன்று காலையும் வராமல்... ஒன்றும் புரியவில்லையே. அவர் இருந்தால் இதெல்லாம்...’ தன் குதிரை மீதிருந்தே திரும்பிப் பார்த்தார் பல்லாளன். “அப்பாடி! எவ்வளவு பெரிய கூட்டம். இத்தனை பேர்களும் இன்று சேர்ந்த மாதிரி அன்றே அந்த மாலிக்காபூர் வந்த போது சேர்ந்திருந்தால் தென்னாடு இன்று இக்கதிக்கு வந்திருக்குமா? ஆனால் இந்தக் கொடுமைச் செயல்... கர்ப்பிணியான அமரசுந்தரிகளோ... அழகே உருவான அந்தப் புவன சுந்தரியை... அடப்பாவி! தெய்வமே கதியென்று ஸ்ரீராமச்சந்திரேஸ்வர சுவாமியையும், குலதெய்வமான ரேணுகாம்பாளம்மனையும் எப்பவும் பூசிக்கும் உத்தமரை... பூசையில் இருந்த புனிதரை... அடப்பாவி! உனக்கு இது அடுக்குமா?” என்று வாய்விட்டுக் கத்திவிட்டார் அவர். கூட்டம் சலசலத்தது. அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி கொண்டனர். “இனி பயமில்லை. பல்லாளன் பழிவாங்கும் சிங்கமாகிவிட்டான். உலூப்கான் இனி தப்ப முடியாது.” திம்மப்பர் மட்டுமில்லை, எல்லாருமே இப்படி நினைத்தனர். எங்கே நான் ஒத்துழைக்கமாட்டேன் என்று பின் வாங்குவானோ என்று நினைத்தவர்கள், இனி அவனே விடமாட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்! ஆரூர் அமிர்தலிங்கச் சோழகர் படவேட்டு நாட்டின் அடுத்த நாட்டுக்கார் ஆனாலும், அவருக்குப் பிரச்னையெல்லாம் தேவிக்கோட்டை வீரசோழகனிடமிருந்துதான். கொள்ளிடமும் கடலும் கூடும் பகுதிதான் இந்தத் தேவிக்கோட்டை. கடலூர் அருகே கெடிலம் எல்லையில், பாடலியின் முன்னணியில், பொதுகைக்குப் பின்னே நிலைத்திருந்த இந்தப் பகுதியைக் கொள்ளையர், மோசக்காரர், கள்ளத்தோணிக் கடலோடிகள் போன்றோருக்கு அடைக்கலமளித்துப் பொன்னும் மணியும் குவித்துக் குபேரனாக வாழ்ந்தவன் அவன். நாணயமற்ற அரசியலை சூதாடித்தனமான வாழ்க்கையை மேற்கொண்ட இவன் அந்தப் பகுதி மன்னர்கள், மக்கள் அனைவருக்குமே கொடுமைகள் பல புரிந்த கொடுங்கோலனாக இருந்தான். அமிர்தலிங்கச் சோழகன் தந்தையும் இவன் தந்தையும் உடன் பிறந்தவர்கள் என்றாலும் குண விசேஷங்களில் இருவரும் நேர்மாறானவர்கள். பண்டைப் பெருமையையும், தமிழ்ப் பண்பையும் கடைபிடித்த ஆமூர்ச் சோழகன் இந்தத் தேவிக்கோட்டையனிடமிருந்து ஒதுங்கி விட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்குள்ளே அநாவசியமான சண்டை சச்சரவுகள். உலூப்கான் இப்பகுதி வந்ததும் எப்படியோ அவனுடன் சிலர் பொற்குவியலைக் காட்டி முயன்றார்கள். சினேகமாகி விட்டான். அவனும் இவன் கடல் துறை நாடன் ஆதலால் தனக்குச் சமயத்தில் உதவுவான் என்று ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டான். என்றாலும் உலூப்கான் ஒருவேளை இந்த தேவிக்கோட்டையானிடமே போய்த் தங்கியிருந்தால்... இப்படி ஒரு நினைவு எழுந்ததும் பல்லாளர் அருகே செல்லத் தன் குதிரையை விரட்டினான். சோழகன் தன் அருகே வந்ததும் பல்லாளன் மிகமெதுவாக “என்னுடைய மஹாமந்திரி நேற்று மாலையிலிருந்து என்னைச் சந்திக்கவில்லை. ஆற்காட்டுக்குப் போன சேனாதிக்கு இந்த விஷயம் தெரியாது. எனவே உமது ஆட்கள் இருவரை உடன் அனுப்பி அவர்களிடம் விஷயம் அறிவிக்க ஏற்பாடு செய்தால் பெரிதும் உபகரமாயிருக்கும்” என்று நயமாகச் சொன்னதும் “சரி, அப்படியே செய்கிறேன்!” என்று கூறி நகர்ந்து விட்டான். பிறகு பல்லாளன் எல்லாரையும் பார்த்து “நாம் படவேட்டு எல்லையை நெருங்கி விட்டோம். என்னிடம் உலூப்கான் மூன்று தினங்களுக்கு முன் சொன்ன திட்டப்படி அவன் இந்நேரம் திருச்சியில் இருக்க வேண்டும். ஆனால் நிகழ்ச்சிகளின் மாறுதல்படி பார்த்தால் அவன் திட்டப்படி நடக்கவில்லை என்று தெளிவாகிறது. எனவே படையினர் யாவரும் இங்கேயே இருக்கட்டும். நாம் ஒரு பத்துப் பனிரெண்டு பேர்கள் மட்டும் எல்லை தாண்டிச் செல்லுவோம். எதற்கும் ஆயத்தமாயிருங்கள். நாங்கள் தாமதித்தால்...” “நல்ல யோசனை” என்றார் திம்மப்பர். “மறுப்பில்லை” என்றான் தத்தன். “நமக்கும்தான்” என்றார் இக்கேரி. அடுத்து மற்ற பெருந்தலைகளும் ஒப்பியதும் பதினெட்டு குறுநில மன்னர்களும் படவேட்டுக்குள் அதிவேகமாகச் சென்றனர். ஊர் சென்றதுமே புரிந்துவிட்டது. எங்கும் தீ. எல்லாமே சாம்பல். மாடமாளிகை கூடகோபுரம் எல்லாமே பாழ். ‘பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்ற படவேட்டு மாளிகை எங்கே?’ பல்லாளன் கண்கள் மட்டுமில்லை. உள்ளமே அழுதது. ரத்தக் கண்ணீர் வடிந்தது. ‘இது என்ன கொடுமை. கேவலம் கொள்ளையடிக்கும் கயவர்கள் கூட இப்படி அழித்திட மாட்டார்களே.’ கொட்டகைகளில் குதிரைகள் இறந்து கிடந்தன. மக்கள் பலர் செத்தும் சாகாத கொடுமை. இவர்களைக் கண்டதும் பிணங்கள் எடுத்திடலாம் என்று வெளியே வந்தவர்கள் “ஐயையோ! பாவிகள் திரும்ப வருகிறார்கள்!” என்று கூக்குரலிட்டு ஓடும் பரிதாபம். தெருவிலே சாம்பலான சாமான்கள், துணிமணிகள். எங்கும் பிண நாற்றம். பொசுக்கல் துர்கந்தம். ஆங்காங்கு பல மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. ‘ஐயகோ! என்ன கொடுமை இது...’ பல்லாளன் அரண்மனைக்கெதிரே இறங்கினான். பிரும்மாண்டமான அந்த அழகு மாளிகை, சிற்பபுரி என்று மாலிக்கபூரால் குறிப்பிடப்பட்ட மாளிகை இன்று... எவரும் வாய திறக்கவில்லை. ஆனால் கண்கள் நீர் வடித்தன. மனம் உலகை வெறுத்தது, உலூபை வெறுத்தது. பற்கள் நறநறவென்று கடித்துக் கொண்டன. ‘ஆ!’ என்ற ஆத்திர உறுமல் கிளம்பியது. மிகப் பெரிய கதவுகள் பாதி எரிந்தும் கருகியும்.. பெரிய கூடம் நிறைய ஏகப்பட்ட இடிபாடுகள். பூசை அறை தரையோடு தரையாக. பல்லாளன் முன்னே சென்றார். இறந்து கிடந்தவரின் கால்கள் மட்டும்தான் வெளியே தெரிந்தன. “நேற்றிலிருந்து... அடக்கடவுளே! இது இப்படியும் ஒரு கொடுமையா...?” நெருங்கினான். மற்றவர்களும் உதவினார்கள். கற்கள், இடிபாடுகள் மெல்ல மெல்ல அகற்றப்பட்டன. கோவென்று கதறிவிட்டார் பல்லாளர். திம்மப்பன் முன் வந்து சமாதானப்படுத்த முயன்றார். நீண்ட தரையில் நீண்டு கிடந்தார் படவேட்டராயரான மகாராஜா மல்லிநாதச் சம்பூவராயர். “ராயரே!” என்ற குரலெடுத்து அலறினார். அடுத்த நொடியே மயங்கிச் சாய்ந்து விட்டான். திம்மப்பன் தாங்கினார், தத்தர் தாங்கினார். இக்கோரியும் பொம்மிடியும் கூடத்தான். நல்லகாலம் சோழகர் இங்கு இல்லை. இருந்திருந்தால் அவரும் இப்படித்தானே சோகித்திருப்பார்? திம்மப்பர், “நாம் பல்லாளரை இங்கு கொண்டு வந்ததே தவறு. அவரும் இவரும் அன்யோன்ய நண்பர்கள் மட்டுமில்லை. உறவினரும் கூட” என்றார். மற்றவர்கள் தலையசைத்து பல்லாளராயரை எடுத்துப்போய் ஒரு தூண் ஓரமாகச் சாய்த்து அமர்த்திட. இன்னொருவன் நீர் கொண்டு தெளித்திட. சற்றே தெளிந்தார் அவர். மலர மலர விழித்தார் மற்றவர்களை பார்த்து. இதற்கிடையே மற்றவர்கள் சம்பூவராயரை வெளியே கொணர்ந்து விட்டார்கள். பல்லாளர் நிதானமாக எழுந்தார். “திம்மப்பரே. ஒரு மாமலை விழுந்துவிட்டது. முறையாக அல்ல. முறை கெட்ட வகையாக. இவருக்கு ஒரு மகன் இல்லை. இரண்டே மகள்கள் அவர்கள்...” “எங்கும் தேடினோம். அவர்களுடைய உடல்களைக் காணோம்.” “காணோமா?” “ஆமாம்! சமையல்காரன் கிடக்கிறான். ஒரு கிழவி கிடக்கிறாள். இன்னும் ஒருவர்.” “அப்படியானால் அந்தப் பெண்கள்...?” “அதுதான் ஆச்சரியமாயிருக்கிறது. ஒருவேளை உயிர் பிழைத்திருப்பார்களோ?” “இருக்கலாம்” என்று ஒரு குரல் வந்ததும் பல்லாளன் திரும்பிப் பார்த்தார். அங்கே ரேணுகாம்பாளம்மன் கோயில் பூசாரி நின்றிருந்தார். “ஐயா பூசாரியாரே! வாருங்கள். நான்...” “தெரிகிறது பல்லாளரையரே. நீங்கள்தான் உலூப்கானுடன் இந்தக் கொடுமைக்கு...” “நீங்களா இப்படி நினைப்பது?” “நான் இல்லை... தேவிக்கோட்டை வீரசோழகன், மணிக்குடி இளநாகன், பனங்காட்டூர் பெருமாளன்.” “பேஷ். இவர்கள் யாவரும் எனக்கு விரோதிகள் மட்டுமில்லை, கம்பிலித்தேவனின் எடுபிடிகள்.” “தெரியும்.” “ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “நீங்கள் குற்றமற்றவர்.” “பிழைத்தேன். பெரியவரே... இனி அந்தப் பெண்களை நாம் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்பித்தான்...” “செயல்பட வேண்டும்! ஆத்தாள் என்னை நம்பச் சொல்லுகிறாள்.” “ஆத்தாள் என்றால்...” “ரேணுகாம்பாளம்மன்.” “ஓ! நல்லது பெரியவரே. மகாராஜாதிராஜ படவேட்டயைச் சம்பூவராய மல்லிநாதரை...” “இனி அவரை நாம் புதைத்து நடுகல்லை இடவேண்டியதுதான். அவருக்கு நீங்கள் அபிமான மகனாயிருந்து இக்கடமையைச் செய்யுங்கள்.” “தெய்வமிட்ட கட்டளை இது பெரியவரே. காத்திருக்கிறேன்.” “தென்னகம் இன்று பல்லாளன் துருக்கருக்குக் கால் பிடிக்கும் ஐந்தாம் படை என்று கூறும் போது இவர்...” “எனக்குத் தெரியும் போசளரே. இவர் நேற்று காலை கூட மக்கள் அழிவது, நாடு அழிவது, நம் கோயில்கள் அழிவது என்ற நிலைக்கு நம்மை இலக்காக்காமல் நன்மையே செய்திருக்கிறார் பல்லாளர். எனவே இதை நாம் ஆ! ஊ! என்று பாராட்டுவதற்கில்லையானாலும் தீமையில் ஒரு நன்மை என்று நான் கருதுகிறேன்” என்றார். “உண்மை! தீமையில் சிறிது நன்மை. ஆனால் இப்போது அது விஷமாகிவிட்டது பெரியவரே. நான் விஷத்தை அமுதம் என்று நம்பி முட்டளாகிவிட்டேன்.” “காலம்தான் இதை முடிவு செய்ய முடியும் பல்லாளரே” என்று பெரியவர் கூறியதும், அவரை வியப்புடன் நோக்கினார் பல்லாளன். ஆனால் அவர் மேலே பேசவில்லை. |