உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
வில்லவன் தேவி(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 6 பல்லாளராயனும் அவனுடைய பெருந்தலைக் குழுவும் படவேட்டிலிருந்த நேரத்தில்தான் நாம் முன்பு மலைக் குகையில் புதிதாக இந்த உலகை எட்டிப்பார்த்த ஒரு குழந்தையுடன் இருந்தோம். அது மட்டுமா? நாம் அங்கிருந்த போது பேரழகி புவன சுந்தரியும் இருந்தாள், கிழவர் வில்லவரையரும் இருந்தார். அவர் மகள் சித்தேசுவரியும் இருந்தாள். அவளுடைய சோக வரலாறையும் கேட்டோம். ஆனால் நாம் அவர்களை அந்தக் குகையிலேயே எவ்வளவு நேரம் விட்டுவிட்டிருக்க முடியும்! நேரம் ஓட ஓட அவர்கள் மனதிலும் ஏதோ ஒரு பீதியும் தோன்றியது. அன்றிரவுக்கும் அங்கு தங்கித்தான் ஆக வேண்டும் என்றால், நேற்றைப் போல் விஜயகுமார வில்லவரையன் இல்லை. நேற்றைப் போல் பதுங்கியிருக்க முடியாது. மகளை வெளியே வந்து பேசிடும்படி அழைத்தாரல்லவா கிழவர்? அப்போது அவள் சொன்னாள். “அப்ப அதுக மனசுக்கு ஒரு மாறுதல் வேணுமின்னு கடவுள் அது இதுன்னு பேசிக் காலமோட்டியாச்சு. இனிக்காலம் நமக்காக காத்திருக்காது. நெட்டூரு ஆளுக வருவாங்க, தேவிகாபுரம் ஆளுங்களும் அனேகமாக வரலாம். ஆனால் நமக்குப் பாதுகாப்பு போதாது. கம்பிலி ஆயிரம் பேரோடே வந்தா?” “வருவான். அவன் இது மாதிரி விஷயங்கள்லே ரொம்பவும் பிடிவாதக்காரன்...” “அட நீங்க ஒண்ணு. வெறியன்னு சொல்லுங்களேன். வருவான் அங்கே தீயைவச்சவன் இங்கே... ஆகவே நாமம் துரிதமா ஏதாச்சும் செஞ்சாகணும். உங்களுக்கு என்ன தோணுது?” “ஒண்ணும் தோணல்லை மகளே. வர வர மனசுதான் அடிச்சுக்குது. நீதான் எப்பவும் போல ஏதாவது சொல்லணும்” என்றார். “சரி, என் மனசுலே ஒரு யோசனை தோணுது. சொல்லட்டுமா?” “ம்... சொல்லு.” “நாம அந்தக் கம்பிலி இங்கே எங்கேயாவது இருக்கானான்னு போய்ச் சந்திச்சா?” என்று கூறியதும் கிழவர் “ஐயோ! இதென்ன விபரீத யோசனை?” “கேளுங்க பதறாமே. நம்ம தேவிகாபுரம் வேட அண்ணாச்சி அவனுக்கு வெளிப்படையா எதிரியில்லே.” “இப்போ இவன் அவனைப் பார்த்தா பொளந்து போடுவானே?” “பொறுத்துக் கேளுங்க. தேவிகாபுரம் அண்ணாச்சி இந்த மலைக்காடு எல்லாம் ஒரு சுத்துச் சுத்தி வராரு. குறுக்காலே அவன் தென்பட்டா. உங்களைத்தானேத் தேடி வரேம்பாரு. நம்பாமே முழிப்பான். இல்லே பக்கத்திலே ஆளுக இருக்கிற தைரியத்திலே மிரட்டுவான். சரி, நான் வந்த நோக்கம் வேறே. வில்லவரையர் மகள்கள் இருக்கிற இடம் தெரியும். ஒரு பை பொன் கொடுத்தா சொல்லுரேன்பாரு.” “பொன்னுக்குப் பதிலா ஆளைப்பிடிச்சு உள்ளே தள்ளிச் சித்திரவதை பண்ணினான்னா?” “அவன் காம வெறி பிடிச்சவன். அந்த மாதிரி ஆளுங்களுக்கு இந்த மாதிரி புத்திக்குப் பதிலா எங்கே அந்தக் குட்டி, அதைச் சொல்லுன்னுதான் கேக்கத் தோணும். தவிர இவுரு புலிவேட்டை ஆடறவரு. எனவே ஒரு மலைப் பேரைச் சொல்லி குகை பேரையும் குறிப்பா காண்பிச்சா... அப்புறம் குகைக்குள்ளே கம்பிலி.” “மகளே, நீ என்ன கனவு காண்கிறாயா? அவன் தனியா வந்து குகைக்குள்ளே சிக்குவான்னு நினைச்சிருக்கியா? அவன் இங்கெல்லாம் சுத்தினால் தனியாகவா சுத்துவான்?” “தெரியும் அப்பா. ஆனால் அவனுடைய காம வேட்டை ஒரு தனிப்பட்ட மனுசனை பிடிச்ச வெறியில்லையா? தேவிகாபுரம் வார்த்தையிலே நம்பிக்கை இருக்குதே! அது குகைக்கு இழுத்துப் போயிடும். புரியுதா?” “என்னவோ ஆத்தா? கொக்குத் தலைலே வெண்ணெய் வச்சுப் பிடிக்கிற கதை மாதிரி இருக்குதும்மா! பிறகு?” தேவிகாபுரம் கம்பிலியின் ஜென்ம விரோதி. எனவே அவுரு நம்ம கூட ஒத்துழைக்கிறாரா என்று பார்க்கணும்!” “அவன் நான் சொன்னதை மீறமாட்டான். இருந்தாலும் நீ நெருப்போடே விளையாடச் சொல்லுறியே...” “அவரு புலியோடே விளையாடுவரில்லையா?” “புலியும் நெருப்பும் ஒண்ணா?” “இல்லேன்னா நமக்குள்ள இன்னொரு வழி. நாம இங்கே முடிஞ்ச வரை போராடிப் பார்ப்பதுதான். அவளை நாளைப் பொழுதுக்கும், ஏன் நாளன்னைக்குக் கூடத்தான் நகர்த்த முடியாது. பச்சைப் புள்ளைக்காரியை கொஞ்சம் அசைச்சாலும் ஏதாவது வில்லங்கமா முடியும்.” கிழவர் மவுனமானார். விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது என்று அதிசயித்த அவர் மகள் கூற்றிலிருக்கும் கருத்தினையும் நன்கு ஆராய்ந்தார். வேறு வழி. சற்று நேரத்துக்கெல்லாம் தேவிகாபுரத்து தானப்பன் வந்துவிட்டான் தனது தோழர்களுடன். வேடுவப் பெண்கள் ஏழெட்டுப் பேர் வந்து சேர்ந்தனர். “அம்மாடி! நீ நீர்வீழ்ச்சி பார்த்ததெல்லாம் போதும். உள்ளே வா!” என்றாள் சித்தேசுவரி. அவள் நீர் வீழ்ச்சியையா பார்த்தாள்? அந்த வேகமான அருவியில் அது நேரம் வரை விஜயகுமார வில்லவராயனை அல்லவா பார்த்தாள்! ‘அழகான பெயர், ஆண்மைத் தோற்றம், மிடுக்கு நடை. துடுக்குப் பேச்சு, பரபரப்பு, துடி துடிப்பு. உம் என்னைப் போலத்தான் அவரும்!’ என்று நினைத்துச் சிரித்ததும் “இதென்னடி பெண்ணே சிரிப்பு!” என்று அவள் கேட்டதும் “போங்க அத்தை, நாம்பள்ளாம் இங்கே நிம்மதியா இருக்கிறோம். நேற்றைக்கு இருந்த இருப்பு இன்று மாறிவிட்டது. ஆனால்...” “சரிதான். எங்க அவுரை மட்டும் காணோம்? எங்கே போய் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்று கவலைப்பட.. பேஷ்! அந்தத் தடியன் அப்படி என்ன?” “சும்மா இருங்கள் அத்தை” என்று அவள் வாயைப் பொத்திவிட்டு குகைக்குள்ளே நுழைந்தாள் குமரி. அங்கே அவளுடைய அக்காள் மட்டுமில்லை, அந்தப் புதிய சிசுவும் மெய்ம்மறந்து தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தை தூங்கும் போது சிரிக்கிறது. ஏதோ ஒரு அழகான மலர் விகசித்திடுவது போல இருக்கிறதே இந்தச் சிரிப்பு. இப்படி நினைத்ததும் அவளுக்கு ஏதேதோ மலர்களின் நினைவு வந்தது. ஆனால் அந்த மலர்களில் எல்லாம் திரும்பத் திரும்ப ஒரே ஒரு முகம்தான் தோன்றிக் கொண்டிருந்தது. ‘நேற்றிரவு முழுமையும் துக்கம், கவலை, காலிலும் உடலிலும் வேதனை. மனதில் மட்டும் போதாதென்று எல்லாவற்றிலும் வேதனை. இன்றிரவு வந்து கொண்டிருக்கிறது. அக்காள் நிம்மதியாகத் தூங்குகிறாள். அழகுச் சிசுவும் தூங்குகிறது. நானும்... நானும்...’ இப்படி நினைத்த சற்று நேரத்துக்கெல்லாம் அவளும் தூங்கிவிட்டாள். ***** தேவிகாபுரம் தானப்பன் புலி வேட்டையில் மட்டும் புலி இல்லை. மோப்பம் பிடிப்பதிலும் புலி. எப்படியென்றால் புலிக்குத் தெரியுமாம் மனித வாசனை. அது போல மனிதனாகிய தானப்பனுக்கும் நரவாசனை பிடிக்கத் தெரியும் போலும். இல்லாவிட்டால் எந்த இடத்தில் கம்பிலி இருப்பான் என்பதை மிகச்சரியாக உணர்ந்து அங்கே போய்த் தன் தோழர் பலருடன் முகாம் இடுவானா? இன்னும் இருள் வரவில்லை என்றாலும் மலைப்பகுதிகளில் சற்று முன்னதாகவே அஸ்தமன மயக்கம் பரவும் என்பார்கள். அதனால் கம்பிலி இன்னமும் வெளிப்படையாகப் புறப்படாவிட்டாலும் இலை மறைவு காய் மறைவான ஒரு இடத்தில் தன் நண்பர்கள் ஏராளம் பேர் பல நூறு என்று கூடக் கூறலாம், அவனைச் சுற்றி உட்காராமல் சற்றுத் தொலைவில் உட்கார்ந்திருந்தார்கள். அவன் அருகே பில்லமன் மட்டும்தான் இருந்தான். ஒரு குட்டிப் பாறைக்குப் பின்னாலிருந்து பார்த்தான் தானப்பன். தானிருக்கும் இடத்திலிருந்து அவனைப் பார்க்க முடியும். ஆனால் அவன் பேசுவதைக் கேட்க முடியாது. இப்பொழுதுதான் பொழுது சாய்ந்து கொண்டிருக்கிகிறது. இன்னும் குறைந்தபட்சம் ஆறேழு நாழிகைக்குப் பிறகுதான் இவன் கன்னி வேட்டைக்குப் புறப்படுவான். எனவே அதற்குள் பேச்சையும் இவன் கேட்க வேண்டும். பிறகு வேட்டைக்கும் உதவ வேண்டும். இன்று ஒரு இரவு தப்பினால் சரி. நாளை இரவு வேறு விஷயம். எனவே அருகே போவதெப்படி? ஒரு சிறு கூழாங்கல்லை எடுத்து எதிர் மலைச்சரிவில் விழும்படி எறிந்தான். அந்தக்கல் உச்சியிலிருந்து சடபுடவென்று ஒலியை எழுப்பிக் கொண்டு உருண்டு வந்ததும் அத்தனைபேர் பார்வையும், கம்பிலி, பில்லமன் பார்வையும் அங்கேதான். “பில்லமா... அங்கே எதிர்புறத்தில் யாரோ ஆள் அல்லது ஏதோ மிருகம் போயிருக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் கை தட்டினான். சற்றுத் தொலைவில் குழுமியிருந்தவர்களில் ஐந்தாறு பேர் ஓடி வந்தனர். அவர்களை எதிர்ப்புற உண்மையை அறிந்து வர விரட்டினான். ஆனால் இந்த சந்தடி சாக்கில் தேவிகாபுரத்து தானப்பன் கம்பிலியின் வெகு அருகே வந்து பதுங்கிவிட்டான் சரியானதோர் மறைவிடத்தில். “அது யாராயிருக்கும் என்று நீ நினைக்கிறாய் பில்லமா?” என்று கம்பிலி கேட்டதும், “ஒருவரும் இருக்காது. ஏதாவது பிராணி ஓடியிருக்கும். தவிர எதிர் மலைக்கு ஏறுபவன் பின் வழியாக ஒருக்காலும் வர முடியாது. செங்குத்தானது. எனவே ஆக முடியாத ஒன்று. இந்தப் புறமும் ஏறத்தாழ அப்படித்தான். ஆனால், சங்கத்திலிருந்து வேண்டுமானால் ஏறி வரலாம்...” “அங்கு நம் ஆட்கள் இருக்கிறார்களே!” “அங்கு மட்டுமில்லை, எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் இருக்கிறார்கள்.” “இருந்தாலும் நாம் இன்றிரவு எப்படியாவது நாம் வந்த வேலையை முடித்திட வேண்டும் பில்லமா. நாளை என்று தள்ளினால் நாம் பல ஆபத்துக்களை எதிர் நோக்க நேரிடும்!” “அது உண்மைதான். ஆனால் நம் முன்பு உள்ள பெரிய பிரச்னை நாம் பல்லாளரின் ஆட்களின் கண்களிலோ, இந்த உலூப்கான் வகையறாக்களிடமோ சிக்கிவிடக் கூடாது என்பதுதான்.” “உண்மைதான்.” “சாதாரணமாகச் சொல்லிவிட்டால் போதுமா? நம்முடைய ஆட்களுக்கே இன்னும் தெரியாத உண்மை மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால்...” “உன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது பில்லமா. அதாவது இந்தப் பகுதியில் மட்டும்தான் தெரியாது.” “பல்லாளர் பார்த்தால் நீங்கள் கம்பிலி இல்லை, போலி என்று சொன்னால். எதிரிகள் பாய்வதிருக்கட்டும். நம்ம ஆட்களே பாய்ந்து கிழித்துப் போடுவார்கள் நம்மை. அவர்களுக்குப் பொன்னாசை காட்டியிருக்கிறோம். இப்பவே இரண்டொருவர் இன்னும் எத்தனை நாள் இப்படி அலைந்து திரிந்து அவதிப்படுவது என்று பேசுகிறார்கள்.” “என் காதில் கூட விழுந்தது. ஆனால் நான் போலிக் கம்பிலி என்பது இவர்களில் எவருக்குத் தெரிந்தாலும் பேராபத்து. தவிர நாம் இந்தக் கன்னிவேட்டை ஆடுவதும் இவர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை.” “அதுவும் உண்மைதான். ஆனால் இந்தக் கன்னிவேட்டையைத் தவிர வேறு ஏதோ ஒரு இலட்சியம் உண்டு என்பதைச் சொல்ல முடியாதே.” “உண்மைதான். எந்த மலையென்றும் புரியவில்லை. குகையும் புரியவில்லை. நேற்று நாம் போன குகையில் இன்று அந்தப் பெண்கள் தங்கியிருக்கலாம். அங்கு இப்போது நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் இல்லை அந்தப் பெண்களைத் தவிர.” “நாம் அந்தப் பெண்ணைக் கொண்டு வந்துவிட்டால் படவேட்டர் ஒளித்து வைத்துள்ள புதையல் நிச்சயம் கிடைத்திடும்!” “எனக்கு அந்தப் பெண் புதையலில் பாதி கிடைத்திடடால் நான் சிங்கைக்குப் புறப்பட்டுவிடத் தயார். நீயோ பெண்டு பிள்ளையுள்ளவன். தவிர கம்பிலித்தேவனைப் பழிவாங்கும் கடமை வேறு இருக்கிறதே.” “ஆம் தேவரே. இப்பவே நாட்டிலே பாதி அவனை அயோக்கியன், மோசக்காரன், காமவெறி பிடித்தவன் என்று ஏசிப் பேசித் தூற்றிடும்படி போலியான உன்னை முன்வைத்தே செய்துவிட்டேன். இனி அவனை மக்கள் கழுவிலேற்றி அதில் அவன் துடி துடித்து அணு அணுவாகத் துன்பமுற்றுச் சாவதை நான் பார்க்க வேண்டும். பர்ஹானுத்தீனும் அப்படிதான் துடிக்க வேண்டும். என் திறமை முழுவதும் அவன் சேவையில் கழிந்தும் கூட, என் சொந்த வாழ்க்கையைக் கவனிக்காது அவனுக்காகாக நான் வாழ்ந்தும் கூட அவன் எனக்குத் துரோகம் செய்ததை நினைத்தால்...” “ஆத்திரப்படாதே பில்லமா, உனக்கும் ஒரு நாள் வரும். கம்பிலித்தேவனை நாம் பழி வாங்க முடியாவிட்டாலும் கடவுள் வாங்கி விடுவார்.” “கூடாது! நான்தான் அவனைப் பழி வாங்க வேண்டும். இன்று தென்னகம் முழுமையும் அவனை படுமோசக்கார பாவி என்று கூறுவதைப் போல வடநாடும் கூற வேண்டும். டில்லி பாதுஷாவை இவன் பர்ஹானுத்தினுடன் சேர்ந்து தாக்கச் சதி நடக்கிறது. இங்கு வேலை முடியட்டும். நானே அந்த டில்லி பாதுஷாவிடம் போய் உண்மையைக் கூறி பழி வாங்குகிறேன் பார்!” என்று கத்தினான் பில்லமன். “இங்கு யாரும் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை என்பது மட்டுமில்லை. ஏதடா! ஒரு பெரிய நாடு கம்பிலி தேசம். அந்நாட்டு அரசன் இப்படி ஒரு நாடோடி மாதிரி காட்டிலும் மேட்டிலும் சுற்றுவானா என்று யாருமே ஊகிக்கவில்லை. உண்மையான கம்பிலி பல்லாளனைப் பார்க்க வந்த போது கேவலம் ஒரு நாயை விரட்டுவது போல் அல்லவா விரட்டிவிட்டான்.” “அது உன்னை வைத்து நாம் பரப்பிய விபரீதங்களினால்தான். அவன் தன்னைப் பற்றிய உண்மைகளை விளக்கக்கூட இங்கு யாரும் இடந்தரவில்லை. எல்லாம் இந்தப் பில்லமன் சிருஷ்டித்த போலிக் கம்பிலியால்தான். இனி அசல் கம்பிலித்தேவன் தன்னை எந்தக் காரணம் கொண்டும் தென்னகத்தில் தரமான ஓர் அரசன் என்று காட்டிடவே முடியாது. இப்படிப் பழிவாங்கும் யோசனை எனக்கு எங்கே, எப்பொழுது தோன்றிற்று என்பது உனக்கு நினைவிருக்கிறதா தேவா?” கம்பிலி திடுக்கிட்டான். ‘இதுகாறும் தேவரே என்று கூறியது மாறி இப்போது தேவா என்று ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் ‘டே தேவாப் பயலே’ ஆகிவிட நேரும். அதற்குள் இங்கே இவனுக்கு முடிவு கட்ட வேண்டியதுதான்!’ என்று நினைத்துக் கொண்டே “நினைவில்லாமல் என்ன பில்லமா? புங்கனூர்க் காட்டுமாளிகையில் நீ என்னைச் சந்தித்த போது முதலிலேயே நீ எப்படி எங்கள் கம்பிலிராயன் மாதிரியே இருக்கிறாய் என்று அதிசயமாகக் கேட்டாய். நானும் பதிலுக்கு ‘ஆமாம், அந்தக் கம்பிலி எங்கே? நான் எங்கே? அவன் ஒரு பெரிய ராஜ்யாதிபதி. நான் இந்தப் புங்கனூர்க் காட்டுக்குள்ளே ஒரு சின்ன ராசா’ என்றேன். நீ உடனே ‘அந்தக் கம்பிலி மாதிரியே இருக்கும் உன்னை வைத்தே நான் அந்தக் கம்பிலியை ஆட்டிவைக்க. முடியும். ஆனால் நீ ஒப்புக்கொள்ள வேண்டுமே’ என்றாய். நானும் விட்டேனா. எனக்கு வேண்டியது அழகான பெண்கள், அலட்சியமாக இருக்கிற அளவுக்குப் பொற்காசுகள். ஊரான் நம்மைக் கண்டுவிட்டாப் போதும் என்று ஓடணும் என்றேன். நீ சரி, இதெல்லாம் முடியும் என்றாய்.” “முடிந்திருக்கிறதா இல்லையா?” “ஓரளவு முடிந்திருக்கிறது.” “பாக்கியும் முடிந்துவிடும். நீயும் சிங்கைக்கு சிங்காரியுடன் போய்விடலாம். தேவிக்கோட்டையான் தோணி தருவான். அவன் கிட்டேயும் நிறையப் பொன் இருக்கிறது.” “தெரியும். அதையும் விடுவானேன்.” “எனவே இனி நடத்தும் எதையும் துரிதமாக நடத்தியாகணும். ஏனென்றால் இந்நேரம் நாடு அமர்க்களப்படும். உலூப்கானை மக்கள் எதிர்த்தாலும் எதிர்க்கலாம். நமக்கு வரும் ஆபத்தோ மகா பயங்கரமாயிருக்கும். எனவே உஷாராகச் செயல்படனும். இன்னும் இரண்டு நாழியிலே நாம் புறப்படுவோம்.” “நம்மைப் போல அந்த உலூப்கானும் இங்கேதானே சுற்றுகிறான்...?” “அது நேற்று. இன்று இருக்க முடியாது. காரணம் அவனுக்கு இந்த மலைகளைப் பற்றி தெரியாது. ஏதோ குருட்டடியா வந்தான். இப்போது இந்தப் பகுதியில் எங்குமேயில்லை. நம்ம ஆட்கள் இண்டு இடுக்கு விடாமல் அலசிவிட்டார்கள்.” “அதனால்தானே அந்தப் பெண் அருவியிலே நீராடியது நம் ஆட்களுக்குத் தெரிந்தது.” “ஆமாம்! ஆனால் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா? அல்லது துணைக்கு யாராவது உண்டா என்று ஆராயாமல் வந்துவிட்டார்கள்.” “யாரும் இதற்குள் வந்திருக்க முடியாது. இன்னும் அறுபது நாழிகை கூட முடியவில்லையே நாம் அவர்கள் மாளிகைக்குத் தீ வைத்து.” “அந்தத் தீ வைப்பு யோசனை உன்னுடைய சொந்தத் திட்டம். அது மட்டுமில்லை. அந்தத் திட்டத்தைக் கொண்டு நீ உலூப்கானைச் சிக்க வைத்து ஊரார் அவனுக்கு எதிரியா மாற வைத்த தந்திரம் அபாரம்! அசல் கம்பிலி கெட்டான்!” என்று பில்லமன் சொன்னதும் கம்பிலி “நம்மைப் பொறுத்த வரை இவன்தானே இந்தப் போரில் நமக்கு அறிமுகமாயிருக்கிறான்!” என்று பயங்கரமாகச் சிரித்தான். எதிர்ப்புறம் போன ஆட்கள் ஓடோடி வந்தார்கள். “ஒரு கரடிக் கூட்டம் சென்றது” என்றார்கள். “நல்லது நீங்கள் போகலாம்” என்று உத்திரவிட்ட கம்பிலி “இந்தக் கரடி வேட்டை கஷ்டமா?” என்று கேட்டான் திடுதிப்பென்று. “அது தெரிய வேண்டுமானால் தேவிகாபுரம் தானப்பனிடம் போக வேண்டும்.” “ஆமாம், நாலைந்து தடவை நாம் அந்த ஆளைச் சந்தித்திருக்கிறோம். அவன் யார் பக்கம்?” “அவனா? தன் பக்கம். அதாவது சுயநலம். புலி வேட்டை ஆடி புலித்தோல் வித்து அதிலே ஆண் தோல் என்றால் ஒரு விலை. ஆசாமி வேட்டையிலே கெட்டிக்காரன், அதாவது புலிவேட்டை, பணவேட்டை இரண்டிலேயும்தான்!” “நம்ம கிட்டே ஏன் அந்த ஆள் இன்னும் ஒட்டிக் கொள்ளவில்லை?” “சந்தர்ப்பம் இல்லை” என்று கூறியதும் இவர்களுக்குப் பின்னால் கசமுச என்று ஒலி எழுந்ததும் பில்லமன் சட்டென எழுந்தான். வேகமாக உச்சி மீது ஏறி கீழே நோக்கினான். தானப்பன் நாலு பேர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். “தேவரே. இப்படி வாரும்!” என்று பில்லமன் அழைத்ததும் வேகமாய் வந்தவன் கீழே தானப்பன் பேசிவிட்டு நாலு ஆட்களையும் அனுப்புவதைப் பார்த்தான். அவர்கள் சட்டெனக் குதிரை மீது ஏறிப் பறந்தனர். தானப்பன் ஏதோ நிம்மதி கண்டவன போல தனியாக ஒரு கல் மீது சாய்ந்தபடி உட்கார்ந்தான். இருவரும் இறங்கி அவன் பின்னால் போய் நின்றனர். பிறகு பில்லமன் சைகை செய்யக் கம்பிலி “உம்..” என்று ஒரு கனைப்பு களைத்து அங்கு நிலவிய அமைதியைக் கலைத்தான். சட்டென்று அருகேயிருந்த ஈட்டியை எடுத்துப் புலி போல எகிறிப் பின்னால் பாய்ந்தான் தானப்பன். “ஐயோ!” என்று அலறிவிட்டான் கம்பிலி. பில்லமனுக்கு சில நொடிகள் ஒன்றுமே புரியவில்லை. “அடேடே! நீங்களா? நான் ஏதோ புலியாக்கும் என்று பாய்ந்தேன். உம்முடைய நல்லகாலம் கம்பிலித்தேவரே. நீங்கள் இரட்டை விதத்தில் அதிர்ஷ்டசாலி” என்று கூறிவிட்டு ஈட்டியைக் கீழே போட்ட பிறகுதான் கம்பிலிக்குப் போன உயிர் திரும்பி வந்தது. “இரட்டை அதிர்ஷ்டசாலி என்றால்...?” “இந்த ஈட்டிக்குப் பலியாகி, இரையாகாமலிருந்தது முதலாவது. அடுத்தது நான் உங்களை எங்கெங்கோ தேடினேன். எதிர்பாராமல் இங்கு இருக்கிறீர். இது ஒரு அதிர்ஷ்டமில்லையா?” “யாருக்கு?” என்று குறுக்கே புகுந்தான் பில்லமன். “உங்களுக்கு இல்லை, மகாராஜா கம்பிலித்தேவருக்கு” என்று அழுத்தமாகக் கூறினான் தானப்பன். கம்பிலி திடுக்கிட்டான். பில்லமனும்தான். என்றாலும், “எப்படி அவர் அதிர்ஷ்டசாலி?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு தன் அதிர்ச்சியை மாற்ற முயன்றான் பில்லமன். தேவிகாபுரத்தான் தந்திரசாலியில்லையா? இருவரும்தான் அவர்கள் உரையாடலைக் கேட்டிருப்பேனோ என்று சந்தேகம் கொண்டு விட்டார்கள். இதன் விளைவு இங்கேயே தன்னைத் தீர்த்துக் கட்டிவிட்டால் என்ன என்பதுதான் நினைவு. “என்னுடைய தோழர்கள் எழுநூற்றுவர் உடன் வந்திருக்கிறார்கள்” என்று அவன் சாதாரணமாகக் கூறியதும் “ஓ!” என்று நினைவில் கலக்கத்தைக் கொண்டு நீட்டினான் கம்பிலி. “ஐந்தாறு புலிகள் நடமாட்டமும்...” “அடேடே! நாங்கள் பார்க்கவில்லையே” என்று அச்சத்துடன் படபடத்தார்கள் இருவரும். “எப்படி உங்களால் பார்க்க முடியும்? எங்கேயோ கம்பிலியிலிருந்து இங்கே கன்னிவேட்டையாட வந்த உங்களுக்குப் புலியா தென்படும். படவேட்டார் ஒரு பெரிய தவறு செய்தார். அதன் பலனை அவர் அனுபவித்து விட்டார். நல்லகாலம் உலூப்கான் குறுக்கிட்டானோ. நீர் பிழைத்தீர்” என்று சர்வசாதாரணமாக கூறிவிட்டு இடக்கரம் தூக்கி முன் கையால் நெற்றியில் மூடி கண்களைச் சுருக்கித் தொலைவில் நோக்கினான். ஆனால் பீதியால் பீடிக்கப்பட்ட இருவரையும் அவன் ஓரக் கண்கள் அதே சமயம் நோக்காமலில்லை. பில்லமன், கம்பிலியை வெறிக்கப் பார்த்தான். அவனோ பீதியால் பெரிதும் தாக்கப்பட்டவனாய் “நீங்கள் என்னதான் சொல்லுகிறீர்கள் வேட்டைக்காரரே?” என்று நலிந்த குரலில் கேட்டான் நடுக்கத்தை மறைத்து. “அங்கே பல்லாளரும் முப்பதாயிரம் பேரும் கிராமம் கிராமமாகத் தெருத்தெருவாக வீடு வீடாகத் தேடுகிறார்கள் வெறி பிடித்த ஓநாய்கள் ஆடுகளைத் தேடுவது போல...” “யாரை?” என்று கம்பிலி கேட்டதும் அவன் குரல் செத்துவிட்டது! “உங்களை...” என்று அவன் சொல்லிச் சற்றே நிறுத்தியதும் கம்பிலி “ஐயோ!” என்று உளறிவிட்டான். தேவிகாபுரம் வாய்விட்டுச் சிரித்துவிட்டு “நான் சொல்லி முடிப்பதற்குள் பதறிப் பயந்து விட்டீர்களே. நீங்கள் என்ன தவறு செய்து விட்டீர்கள்... இப்படிப் பயப்பட? உங்களை அல்ல.. உலூப்கானை என்று நான் சொல்லி முடிப்பதற்குள்... இருந்தாலும் நீங்கள் இப்படி பயப்படலாகாது. தேவிக்கோட்டையார் என்னிடம் சொன்னதைப் பார்த்தால்...” “தேவிக்கோட்டையாரா?” என்று பில்லமன குறுக்கிட்டதும் சற்றே சினமுற்றவன் மாதிரி தானப்பன் “ஐயா கம்பிலித்தேவரே, நீங்கள் கம்பிலி நாட்டுக்கு ராஜாவாயிருக்கலாம். ஆனால் இந்தக் காடுமலை தேவிகாபுரத்துக்கு நான் ராசா. எனவே தமாஷாக்கூட என்கிட்டே கேலி பேசுவதைப் பொறுக்க முடியாது. அதோ பாருங்கள்” என்றதும் குதிரைகள் மீது ஏராளமானவர்கள் நாலா திசையிலிருந்து பள்ளத்தாக்குப் பகுதியில் ஓடி வருவதைக் கண்டு கம்பிலியும், பில்லமனும் பெரிதும் பயந்து விட்டார்கள். ஆனால் தானப்பன் தன் கைகளால் ஏதோ மும்முறை சைகை செய்ததும் அவர்கள் வந்த வழியே திருப்பிச் சென்றுவிட்டனர். கம்பிலிக்கும் பில்லமனுக்கும் மீண்டும் ஒரு தரம் போன உயிர் திரும்பி வந்தது. “தேவிக்கோட்டை சோழகன்தான் என்னிடம் வந்தார். பல்லாளர் கூட்டம் பற்றிச் சொன்னார். எப்படியாவது உம்மைச் சந்தித்து எச்சரிக்கும்படி சொல்லி இதோ இந்த நூறு வராகன்களையும் கொடுத்தார்” என்று கூறி தான் தன் இடையிலிருந்து பையைத் தூக்கிப் போட்டதும் இருவரும் விழித்து நின்றனர். “பிறகு உம்மிடம் தனியாகச் சொல்லும்படி அதாவது படவேட்டார் மகள் பற்றிய விஷயம் - தெரிவித்தார். அந்தப் பெண்கள் இரவில் இங்கு தங்கிய குகையிலிருந்து இன்று மதியம் வேறு ஒரு இடத்துக்குப் போய்விட்டார்கள்.” “எங்கே... எங்கே? எப்படிப் போனார்கள்? என்னுடைய ஆட்கள் அறிவியல்லையே!” “உங்கள் ஆட்களைக் கொண்டு அதோ அந்த மடுவில் போடுங்கள். நாங்கள் எத்தனை பேர் வந்திருக்கிறோம் என்று கண்டுபிடித்திடச் சொல்லுங்கள். இதோ இந்தப் பையிலுள்ள பொன் காசுகள் அவர்களுக்கு.” பில்லமன் திடுக்கிட்டான். ஆனால் கம்பிலியோ ஆடிப் போய் விட்டான். தான் படாதபாடுபட்டுத் தேடி வந்த அந்த அழகி கை நழுவிவிட்டால்... “ஐயா வேட்டைக்காரரே, -தயவு செய்து அந்த...” என்று அவன் கெஞ்சி முடிப்பதற்குள். “ஓ!” என்று ஒரு பெரும் ஓலம். கேட்டதும், “சரி, யாரோ புலிக்கு இரையாகிவிட்டார்கள்!” என்று தானப்பன் சாதாரணமாகச் சொன்னதும் “ஓ! ஓ!” என்ற ஓலம் பெரிதாகிவிட்டது. அந்த ஒலி வளர வளர இவர்கள் பயமும் கூடியது. ஒருவேளை தன் ஆட்கள்... பில்லமன் மேலே உச்சியில் ஏறி மறுபக்கம் பார்த்த போது... ‘ஐயோ! புலி தன் ஆட்களைத்தான்...’ கண்களை மூடிக் கொண்டுவிட்டான் பயம் தாங்காமல். கம்பிலி ஓடி வந்தான் மேலே. ஆனால் இவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் தேவிகாபுரத்தான் தடதடவென்று மறுபக்கம் ஓடி, மலைப்பாதையில் அதிவேகமாக இறங்கி பூமியில் நின்று ஏதோ ஒரு மாதிரி முழக்கமிட, ஒரு ஆளை அடித்துப் போட்டுவிட்டு இன்னொரு ஆள் மீது பாய்ந்த புலி சட்டென அவனை விட்டுவிட்டு இவன் மீது கனவேகமாகப் பாய்ந்தது. அடுத்த நொடி கொடும் புலியும் மனிதனும் கட்டிப் புரண்டார்கள். மிகப் பயங்கரமான அந்தப் போரைக் காண பில்லமன் உடல் நடுங்கியது. கம்பிலிக்கோ இப்படியும் ஒரு துணிச்சலான ஆளா? என்று நினைத்து அதே சமயம் இந்த மனிதன் செத்துவிட்டால் அந்தப் பெண்கள் பதுங்கிய இடம்... “அடக்கடவுளே!” மனிதனும் புலியும் கட்டிப் புரண்டார்கள். பூமியின் மேட்டிலும் பள்ளத்திலும் கல்லிலும் முள்ளிலும் உருண்டு புரண்டு கோரமாகப் போராடும் காட்சி ஒவ்வொரு நொடியும் இவர்களின் குலையை நடுங்க வைத்தது. தங்களுடைய வாழ்நாளில் இது போன்ற ஒரு கோர யுத்தத்தை அவர்கள் கண்டதுமில்லை, ஒரு புலியுடன் மனிதன் போராடி வெற்றி பெற முடியும் என்பதை நம்பியதுமில்லை. ஏனென்றால் புலி ஒரு மூலையில் கிடந்தது. தானப்பன் மேலெல்லாம் ரத்தம் வழிந்தோட அலட்சியமாக நடந்து வருவதைக் கண்டு இன்னும் அதிகரித்த பீதியால் இனம்புரியாத அதிர்ச்சி நிலையில் அதிசயமாகப் பார்த்து நின்றார்கள் இருவரும். “ஐயா கம்பிலி!” என்று தானப்பன் விளித்ததும் அவன் ஆசாமியைப் பார்க்கவே பயந்து பதறியபடி “உம்” என்றான். ரத்தத்தைக் கைகளால் சுண்டிவிட்ட தானப்பன் “நான் அதோ அந்த அருவியில் நீராடி வருவதற்குள் ஒரு முடிவுக்கு வாருங்கள். வில்லவன் உங்களுக்குப் படவேட்டனியர் மகள் இருக்கும் இடத்தைக் காட்டத் தயார். ஏனென்றால் தேவிக்கோட்டையார் நம் நண்பர். ஆனால் ஆயிரம் பொன்கள் கைமாற வேண்டும். தம்பிடி குறையாது” என்று கூறிவிட்டுப் பரபரவென்று அருவியே நோக்கிப் போய்விட்டான். அவன் போன பிறகு தான் பில்லமன் நிம்மதிப் பெருமூச்சுவிட்டான். ஆனால் கம்பிலியோ ஆயிரம் பொன்கள் அல்ல, இரண்டாயிரம் வேண்டுமானாலும் தரத்தயார் என்ற நிலையில் “இப்பொழுது நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆபத்து கூடுகிறது. நிலவு நன்றாகக் காய்கிறது. நேற்று போல இன்னும் பனி மூட்டம் பரவவில்லை. நாம் எதிர்பார்த்த நேரமும் வந்துவிட்டது. எனவே சட்டென முடிவு செய்ய வேண்டும்.” “உண்மை தேவரே! ஆனால் இவன் நம்பக் கூடியவனா என்பது உறுதியாக வேண்டாமா?” “இன்னும் என்ன ருசு வேண்டும்?” “நம் ஆட்களைப் பழைய குகைக்கு அனுப்புவேன். அவர்கள் உறுதிப்படுத்தினால் நம்புவோம்.” “நல்லது மாறாக, இருந்தால்...?” “நாம் அதோ கிடக்கும் புலிக்குப் பக்கத்தில் இவனை அடித்துப் போட்டுவிட்டு நம் வேலையை நம் திட்டப்படி செய்வோம்.” “மறுப்பில்லை. ஆனால் அவன் திரும்புவதற்குள்...” “பார்க்கலாம்” என்று கூறிவிட்டுத் தன் கைகளைத் தட்டினான். ஓடி வந்த இரு ஆட்களை விவரம் கூறி அனுப்பினான். அவர்கள் போவதை அருவிக் குளியல் போது கவனித்த தானப்பன் சிரித்துக் கொண்டான். குகை வாசலில் ஏகப்பட்ட வேடுவர்கள் ஓடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்ததைக் கண்ட கம்பிலி ஆட்கள் உஷாராகவே மறைந்து மறைந்து சென்றனர். “யாரடா அது?” என்ற குரல் கேட்டதும் கம்பிலி ஆட்கள் நடுங்கிவிட்டனர். “நாங்கள்... நாங்கள்...” என்று ஏதோ உளறினார்கள். “சரி... சரி. நீங்கள் இந்த நேரத்தில் இங்கே வந்தது சரியல்ல. நாங்கள்ளாம் ஒரு பூசை போடறோம். குறி கேக்கப் போறோம். இங்கே மதியத்திலே இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்களைக் காணவில்லை திடீரென்று. மந்திரவாதி வந்திருக்காரு. குறி சொல்லி அந்தப் பெண்கள் இருக்குமிடம்...” அங்கே ஏகச் சத்தம். இதுதான் சந்தடி சாக்கு என்று இருவரும் திரும்பி ஓடி வந்தனர். “அங்கு குகையில் காலையில் கண்ட அந்தப் பெண் இப்போதில்லை!” என்று ஆட்கள் கூறியதும் மேலே வந்து சேர்ந்தான் தேவிகாபுரம் தானப்பன். “என்ன கம்பிலித்தேவரே, முடிவுக்கு வந்தீர்களா? இல்லாவிட்டால் ஒன்று செய்யுங்கள். உங்கள் ஆட்களைப் பழைய குகைக்கு அனுப்பி சோதிக்கச் சொல்லுங்கள். பிறகு முடிவுக்கு வாருங்கள்!” என்றான். பில்லமன் சட்டென்று “சேச்சே! உங்கள் வார்த்தையை நம்பாமல் நாங்கள் சந்தேகப்படுவதா? நீங்கள் வேட்டைக்காரர், நாணயம் தவறாதவர், தேவிக்கோட்டையான் அத்யந்த நண்பர். அது போதும்!” “சரி, அப்படியானால் கிளம்புங்கள் எல்லாரும்” என்றான் தானப்பன். பில்லமன் சற்றே நிதானித்தான். கம்பிலியோ “எல்லாரும் எதற்கு?” என்றான் பரபரப்புடன். “ஏன் கம்பிலியாரே, உமது நண்பர்கள் உடன் வருவது உமக்குப் பாதுகாப்புதானே. நான் என்ன இருந்தாலும் புதிய நண்பன்தானே?” பில்லமன் துணிந்து விட்டான். “தேவையில்லை வேட்டைக்காரரே. இது கம்பிலித்தேவரின் சொந்த விஷயம். மிகவும் அந்தரங்கமாக நிகழ வேண்டியது. எனவே எல்லாரும் கூட்டம் போடக் கூடாது” என்றான். “அப்படியானால் அவருக்குத் துணையாக இரண்டு மூன்று பேரை அனுப்புங்கள். இருட்டு வேளை. நடுநிசிவரை இருக்க வேண்டும் என்று ஆசை உண்டானாலும்...” என்று கூறிச் சிரித்ததும் கம்பிலி தவித்துப் போனான். “நான் அவளை இப்பொழுது எதுவும் செய்யப் போவதில்லை. உடன் அழைத்துச் செல்லுவதைத் தவிர.” “சரி. அப்படியானால் தேவிக்கோட்டையார் சொன்னது உண்மைதான்.” “என்ன சொன்னார்?” “உங்கள் பெண்ணை, முறையாக எனக்கு மணம் முடித்து வைத்தால் போதும் என்று நீங்கள் படவேட்டரையரிடம் சொன்னீர்களாம். நாற்பத்ததைந்து கடந்து போயும் காம வெறி பிடித்த கயவனான உனக்கு ஒரு நாய் கூடத் தகுதியில்லை. போ வெளியே? என்றாராம்.” கம்பிலி பற்களை நறநறவென்று ஆத்திரத்துடன் கடித்தான், என்றாலும் பேசவில்லை. “தேவிக்கோட்டையாரும் ‘படவேட்டாரே, கம்பிலி ஒரு பெரிய நாட்டின் பெரிய ராஜா. தேடி வரும் அதிர்ஷ்டத்தை விடாதீர்கள் என்றாராம்.’ அவர் ஆத்திரத்துடன் ‘நீயும் ஒரு நாசகாலன்’ என்றாராம். ‘சரி, அப்படியானால் இனி உமக்கு நாசகாலம்தான்’ என்று கூறிவிட்டுத் திரும்பினாராம்.” “இதெல்லாம் முழுக்க முழுக்க உண்மைதான். ஆனால் நாங்கள் இருக்கும் சூழ்நிலை காரணமாக சந்தேகம் கொண்ட மாதிரி...” “இதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்னுடைய குறியே வேறு. சரி சரி. நேரமாகிறது, எங்கே உங்கள் ஆட்கள்?” என்று அவசரப்படுத்தினான் தேவிகாபுரம். “யாரும் தேவையில்லை. நீங்கள் எங்களுக்கு இன்னொரு தேவிக்கோட்டையார்தான். தேவரே, இவருடன் போய் வெற்றியுடன் வாருங்கள் திரும்பி!” என்றான் பில்லமன். |