உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
வில்லவன் தேவி(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 7 சம்பூவராயர் குடும்பத்துக்கு நேர்ந்த கதி கேட்டதும் தென்னகம் முழுமையுமே கொதித்தெழுந்தது என்று கூறலாம். எனவே எங்கு சென்றாலும் தனக்கு ஆபத்து கூடுவதை உணர்ந்தான் உலூப்கான். என்றாலும் தான் செய்யாத ஒரு காரியத்துக்காகத் தன்னைப் பழிவாங்க இவர்கள் புறப்பட்டிருக்கிறார்களே. இது எந்த விதத்தில் நியாயம்? தான் டில்லி பாதுஷா முகம்மது துக்ளக்கின் மகன் என்பது நாடறிந்த விஷயம். மாலிக்காபூர் அல்ல. எனவே ராஜவம்சத்தில் வந்த தான் இப்படிப்பட்ட அக்கிரமக் காரியங்களைச் செய்வது இயலாது என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. “என்றாலும் சம்பூவராயர் குடும்ப நாசம் மிகமிகக் கொடுமை. கயமையே உருவானவர்கள் கூடச் செய்யத் தகாத காரியம். அந்தப் பெண்கள் பாவம், அன்றலர்ந்த புஷ்பங்களைப் போலக் காட்சி தந்து சென்றதை நினைத்தாலே என் உடன்பிறந்த சகோதரிகள் இருவர் நினைவும் எழுகிறது. கொடுமையிலும் கொடுமை இது. ஒன்று மட்டும் நிச்சயம். படவேட்டரையர் பக்தி பூர்வமாக இருந்த நேரத்தில். ஒருவேளை அவர் ஆண்டவனைக் கேட்டு முடிந்த பிறகு கூட என் யோசனையை ஏற்றிருக்கலாம். ஆனால் அந்தப் புனிதமான நிலையில் அவர் கொல்லப்பட்டது, நிஷ்களங்கமான அவருடைய இரு பெண்களைக் கொன்றது, இதைச் செய்தது யாராயிருந்தாலும் அவரைப் பழிவாங்காமல் நான் அப்பால் நகரமாட்டேன். எல்லாம் வல்ல அல்லாவே வந்து இப்போது என் உயிரைக் கேட்டால் இந்தப் பழியைத் தீர்த்துவிட்டு வருகிறேன் என்றுதான் கூறுவேன். மீறி இழுத்தால் போராடுவேனேயன்றி விட்டுக் கொடுத்துவிட மாட்டேன். ஆகவே நான் இந்தக் கொடுமையைப் பொறுத்தவரை நிரபராதி என்பதை நீர் பல்லாளரிடம் விளக்கிட வேண்டும். நீர் சொன்னால் அவர் ஒப்புவார்” என்று கண்ணீர் சிந்தியபடி உலூப்கான் சொன்ன போது பல்லாளரின் பேரமைச்சர் போளுரு பெத்தண்ணா பதில் கூறாமல் நின்றார். தன்னை இவர்கள் அழைத்து வந்த முறை, தன்னை இப்போது கடந்த அறுபது நாழிகையாக வெளியே விடாமல் நிர்ப்பந்திக்கும் முறை இரண்டினாலும் அவருக்குக் கோபம்தான் என்றாலும் உலூப்கான் இவ்விஷயத்தில் நிரபராதிதான் என்று அவருடைய மந்திரி மூளை கூறிக் கொண்டிருந்தது. ஆயினும் நிரூபிப்பது எப்படி? நாடு முழுமையும் நாசகாலன் அவன்தான் என்று குமுறியெழுந்திருக்கும் போது தன்னுடைய தீனக்குரல் யார் காதில் விழும்? அசன்ஷா குறுக்கிட்டான் இடையே! “அமாத்தியரே, நாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க மூன்றே மூன்று சாட்சிகள்தான் உள்ளனர். படவேட்டம்மன் கோயில் பூசாரியார், தேவிகாபுரத்து வேட்டைக்காரத் தானப்பர், மூன்றாவது நாங்கள் எப்படியாவது பிடித்திட வேண்டும் என்ற வேகத்தில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் ஏகாந்த வில்லவராயர்” என்று கூறியதும் பெத்தண்ணா திடுக்கிட்டார். ‘இந்த மூவரும் நேர்மையாளர்கள்தான். சந்தேகமில்லை. ஆனால் வில்லவராயர் இவர்கள் கையில் சிக்கினாரா? சிக்கிய பிறகு தப்பினாரா? புரியவில்லையே! இது புதியதோர் சிக்கல். என்றாலும் இவர் மீது நமக்கு சந்தேகம் ஏற்படாமல் சஞ்சலமுண்டாகிறது?’ என்று பலபடச் சிந்தித்தவர் முடிவாகச் சொன்னார். “உலூப்கான், நீ சொல்லும் மூன்று பேரும் நேர்மையாளர்கள். அவர்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறமாட்டார்கள். ஆனால் என்னை நீங்கள் இங்கே வைத்திருந்தால் முடிவு காண்பதெப்படி? நான் பல்லாளரிடம் சென்றால்...” “இல்லை அமைச்சரே. பல்லாளரை எங்களுக்கு விரோதமாகத் திருப்பிட இதை எதிரிகள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். அதற்குள்ளாக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். முதலில் நீங்கள் பூசாரியை அல்லது வேட்டைக்கார தானப்பர், இல்லையேல் வில்லவரையர்...” “உங்களிடம் சிக்கிய வில்லவரையர் எப்படி?” “எங்களிடம் அவர் சிக்கவில்லை. அவருடைய பேரன் விஜயகுமாரன்தான் களத்தூரிலிருந்து வந்தான். நாங்கள் மைலம் பாதையில் வேட்டைக்காரருடன் பேசிவிட்டு நகர்ந்தோம். அப்போது இவன் அதிவேகமாக எதிரே வந்தவன் எங்களைப் பார்த்ததும் சட்டென வேறு பக்கம் திரும்பிப் போய்விட்டான். நாங்கள் விரட்டவில்லை. எங்கள் மனம் எல்லாம் படவேட்டரையரிடம் இருந்தது. ஏன் என்றால் அரை நாழிகை நேரம் கொடுத்து பிறகு நாங்கள் அவரிடம் செல்வதாக இருந்தோம். இதற்கிடையே தீ பற்றியது. நாங்கள் திடுக்கிட்டோம். சில நொடிகள் எங்கள் சந்தேகம் வல்லவரையனிடமே சென்றது. பிறகு அவன் வேறு புறம் அல்லவா சென்றான் எங்கள் கையில் சிக்கக் கூடாதென்று. எனவே அதை விடுத்து நாங்கள் காரணம் அறியத் திரும்பினோம். இதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. பூசாரி மட்டும் வந்து ‘நீங்கள் எங்காவது ஓடிவிடுங்கள். எங்கள் மன்னர் மாளிகைக்கு அவரைக் கொல்வதற்காகவே தீ வைத்தது நீங்கள்தான் என்று மக்கள் ஆத்திரத்துடன் உங்களைப் பிடிக்க வருகிறார்கள். நீங்கள் உங்கள் படை முகாமிட்ட இடம் போய்விடுங்கள்’ என்றார். ஐயோ! இது என்ன அநியாயம், நாங்கள் ஒரு பாவமும்...” “‘எனக்குத் தெரியும். என்றாலும் ஆத்திரக்காரர்களுக்குப் புத்தி மட்டு. தேவைப்படும் போது நானே உண்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்த வரை நிரபராதி என்பது எனக்குத் தெரியும்’ என்று சொல்லித் தப்பி ஓடச் சொன்னார். எங்களுக்கு வேறு வழியில்லை. நீங்கள் குறுக்கிட்டதால் உங்களைப் பிடித்துக் கொண்டோம் உடும்புப் பிடியாக” என்று உலூப்கான் கூறியதும் பெத்தண்ணா பதில் கூறவியலாது மவுனமாயிருந்தார். அஸன்ஷா குறுக்கிட்டான். “அமைச்சரே... நேற்றிலிருந்து நாங்கள் உங்களை இங்கே வைத்திருந்தது தவறுதான். ஆனால் எங்கள் சுயநலம் இதைச் செய்யும்படி மாற்றிவிட்டது. இனி நீங்கள் செய்யும் எந்த முடிவுக்கும் அல்லது சொல்லும் எந்த யோசனைக்கும் நாங்கள் கட்டுப்படத் தயார்...” “சரி, நான் என்னாலானதைச் செய்கிறேன். படவேட்டரையருக்கு இந்தப் பகுதி மக்களிடமுள்ள செல்வாக்கு மகத்தானது. என்றாலும் நான் இயன்றதைச் செய்வேன் என்பது உறுதி” என்று கூறிவிட்டுத் தமது குதிரை மீது ஏறிப் பறந்தார் திருவண்ணாமலைக்கு. ஆனால் திருவண்ணாமலை போகும் முன்னரே நாலா திசையிலும் பரவி மூலைமுடுக்கெல்லாம் துருவித் துருவித் தேடும் ஆயிரக்கணக்கான துருப்புக்களைக் கண்டதும், ‘விஷயம் மிஞ்சிவிட்டது. இனி அதிக நேரம் உலூப்கான் துருப்புக்களின் மறைவிடம் மறைவாக இருக்காது. ஏனென்றால் செஞ்சி மலைகள் நெடுநேரம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது. பெரும்பாலான துருப்புக்கள் கொள்ளிடம் தாண்டி குடந்தையை நெருங்கி விட்டதென்றாலும், இவனிடம் இருக்கும் இரண்டாயிரம் பேர்கள் கதி...?’ எதிரே பல்லாளரின் உபசேனாதிபதி பாவாடைராயன் வந்து அமைச்சரை வணங்கி “உங்களை நாங்கள் எங்கெல்லாம் தேட முடியுமோ அங்கெல்லாம் தேடிவிட்டோம். ஆமூர்ச்சோழகரே போயிருக்கிறார் உங்களைத் தேடி. அரசர் தவிக்கிறார். யாருக்கும் எதுவும் புரியவில்லை” என்று புலம்பினான். உபசேனாபதி வயதானவர் நல்லவர் பாவம். எதற்காக இப்படி ஆடி ஓடி அலட்டிக் கொள்ளுகிறோம் என்று கூறிட மறந்துவிட்டார் அவர். “பரவாயில்லை பாவாடை. உடனே சோழகரை நான் பார்க்க வேண்டும். நம் அரசர் எங்கே இருக்கிறார்?” “அவரும் மற்றவர்களும் தத்தனூர் மலைப்பகுதி, சாத்தனூர் மலைப்பகுதி, செங்கம் காடுகளுக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கிறார்கள். நம் அரசர் என்னை அனுப்பினார். நீங்கள் வந்தால் உடனே அழைத்துக் கொண்டு வரும்படி.” “இதெல்லாம் ஏன் பாவாடை?” “அடேடே! நான் ஒரு முட்டாள். வயதாகிவிட்டதல்லவா. ஏன்? என்ன? என்று சொல்ல மறந்துவிட்டேன். நம்ம படவேட்டரையரை, அவர் மக்களை, மாளிகையை எல்லாவற்றையுமே தீயை வைத்து நாசமாக்கி விட்டான் அந்தத் துருக்கன். நம்பிக்கை மோசம் செய்துவிட்டான் அந்த உலூப்கான். பாவம் அந்தப் பெண்களில் ஒருத்தி பூரண கர்ப்பிணி. இன்னொருத்தி ரம்பை. உம்... எல்லாம் போச்சு. நம்முடன் நயவஞ்சகமாகப் பேசி அப்படி இப்படி என்று நம் மாமன்னரை வசியப்படுத்தி விட்டவன், அந்த படவேட்டரையரை... சத்தியமே உருவான சம்பூவராயரை...” “சரி பாவாடை! அது இருக்கட்டும். நம் மன்னருடன் யார் யார்...?” “அந்த முரட்டு இக்கேரி, குண்டு திம்மப்பர், கொம்பேரி மூக்கன் தத்தன், சோழகன்.” “சரி சரி. ஆக நாம் உலூப்கானுடன் நட்பாக இருப்பதை எதிர்த்தவர்கள் யாவரும் விசையை முடுக்கி விட்டார்கள். இல்லையா?” “நீங்கள் ஊகித்தது ரொம்பச் சரி.” “இதற்கு ஊகம் வேறு வேண்டுமாக்கும். சரி... சரி, நம்மைச் சுற்றி ஏகப்பட்ட வீரர்கள். நீங்கள் புறப்படுங்கள். நான் அரசர் இருக்குமிடம்...” “யாருக்குத் தெரியும்?” “சேனாபதி எங்கே?” “ஆற்காடு போனவர் இன்னும் திரும்பவில்லை” என்றார் பாவாடைராயன். அமைச்சர் சோழகனை முதலில் சந்தித்து அவருடன் சேர்ந்து தன் அரசரைப் பார்ப்பதே சரி என்ற முடிவுக்கு வந்து அண்ணாமலைச் சாலைக்குத் திரும்பினார். நல்லகாலம்! சோழகன் இவரைக் கண்டதும் ஓடோடி வந்தார். அவரைக் கண்டதும் “சோழகரே, நீங்கள் எனக்காக அலைவதும், அரசர் கோஷ்டி அந்தத் துருக்கனைத் தேடி அலைவதும் அதிசயமாயிருக்கிறது. எல்லாம் கால வித்தியாசம். சரி, நாம் பல்லாளரிடம் போவோம்” என்று குதிரையைத் திருப்பியதும் அவரும் திரும்பினார். “என்ன கொடுமை செய்துவிட்டான் அந்த உலூப்கான்! பெரிய அரசனின் மகன்...” என்று அவர் ஏதோ சொல்லத் துவங்கியதும் “சோழகரே, உலூப் தீ வைத்ததை நீங்கள் பார்த்தீர்களா?” என்று சட்டெனக் கேட்டதும் அவர் பதறிவிட்டார். “இதென்ன அமைச்சரே இப்படிக் கேட்டால்...?” அவர் வியப்புடன் பார்த்தார் அமைச்சர் பெத்தண்ணாவை. “நம்மவர்களில் யார் நேரில் பார்த்தது?” என்று அமைச்சர் திரும்பக் கேட்டதும் சோழகர் “அதெப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்? யாராவது பார்த்திருந்தால் அந்த உலூபை உயிருடன் விட்டிருப்பார்களா?” “அப்படியானால் யாரும் பார்க்காமல் எப்படி அவன் மீது குற்றம் சாட்ட முடிந்தது?” என்று அமைச்சர் கேட்டதும் சோழகன் திணறினார். ‘இதென்ன இவர் இப்படியெல்லாம் பேசுகிறார். எதுவுமே புரியவில்லையே!’ “ஐயோ அமைச்சர் பிரானே, நான் ஒரு குட்டி நாட்டு ராஜா. அவ்வளவுதான். எனக்குப் பொழுது விடிந்து பொழுது போனால் அந்தப் பங்காளி தேவிக்கோட்டையானைச் சமாளிக்கவே நேரம் போதவில்லை. ஆனால் நான் அவர் மாளிகை எரியும் நேரத்துக்கு ஏழெட்டு நாழிகைக்கு முன்பே படவேட்டரையருடன் உரையாடினேன்!” “என்ன சொன்னார்?” “ஒன்றும் பெரிதாக இல்லை. உலூப்கான் தன்னைச் சந்திக்க மதியத்துக்குள் வருவான் என்றார். பிறகு அவன் என்ன வற்புறுத்தினாலும் அவன் கூட நான் எந்த ஒப்பந்தமும் செய்ய இசைய மாட்டேன். ஆனால் அவனுடன் சண்டையிடவும் போவதில்லை என்றார். நான் மட்டும் பல்லாளர் அந்தப் பக்கம் நீங்கள் இந்தப் பக்கம். எனவே நீங்கள் எங்களுக்கெல்லாம் முதன்மை. ஆக நீங்கள் செய்யும் எந்த முடிவும் உங்களை மட்டும் இல்லாமல் எங்கள் எல்லாரையும் பாதிக்கும் என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார்.” “உலூப்கானைப் பார்த்தீர்களா?” “பார்த்தேன். படவேட்டரையர்தான் தொண்டை நாட்டின் தெற்கு மண்டலத்தில் உள்ள நாடுகளின் தலைவர். அவர் வழிதான் எங்கள் வழி என்று கூறினேன். அவன் அப்படியொன்றும் தடலடியாகவோ, மிரட்டியோ பேசவில்லை.” “உங்ககிட்டே பேசாதவன் அவர் கிட்டே அத்துமீறி பேசியிருப்பானா?” “நிச்சயம் பேசமாட்டான். என்ன இருந்தாலும் அவன் பேச்சிலே ஒரு பெரிய மனிதத்தன்மை இருக்கிறது!” “ஆனால் அவன் திருட்டுப்பயல் மாதிரி தீயை வைக்கும் நாலாந்தர மனுஷனா மாறியது எப்படி?” என்று அமைச்சர் கேட்டதும் சோழகர் பதறிவிட்டார். ‘அமைச்சர் ஏன் இப்படிப் பேசுகிறார்? ஒருவேளை யாரோ சொன்னதைக் கொண்டு நாம் நம்பியது தவறு என்பதாக நினைக்கிறாரா?’ “ஆனால் அமைச்சரே, அவன் தீ வச்சதை நம்மவர் யாரும் நேரில் பார்க்கவில்லை” என்று மட்டும் கூறினார். “இதைப் பல்லாளரிடம் சொன்னீர்களா?” “இல்லை. அவருடன் தனித்துப் பேசவே சந்தர்ப்பம் கிட்டவில்லை.” “பொதுப்படச் சொல்ல...” “யாருமே இடந்தரவில்லை. தவிர ஆத்திரம் அதிகம் ஆக ஆக என்னாலே கூட எதையும் நிதானமாகச் சிந்திக்க முடியவில்லை.” “நம்மவர்களிடையே துருப்புக்கள் எத்தனை பேர் இருக்கும்?” “ஒரு முப்பதாயிரமாவது இருக்கும்.” “சரி, நாளை வரை நம் கையில் அந்த உலூப் சிக்காமல் போய் வடக்கேயிருந்து அவனுடைய படை வீரர்கள் அதற்குள் பல்லாயிரமாக... இல்லை, மூன்று லட்சம் பேர்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஐந்து லட்சம் என்று..” “அடக்கடவுளே! இதென்ன நீங்கள் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்? அவன் எப்படி அகப்படாமல் போவான்? இங்கே எங்கோதானே அவன் பதுங்கிக் கொண்டிருக்கிறான்?” “அதெப்படி நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்?” “பின்னே அவன் குற்றவாளி இல்லையென்றால் வெளியே நம்மிடையே இருக்க வேண்டியதுதானே?” “இதென்ன கேள்வி சோழகரே? நாம் எல்லாம் அவன்தான் குற்றவாளி என்று முடிவு செய்து விட்டோம். கண்டவுடனேயே கொல்லுவோம் என்று சவால் விட்டுக் கிளம்பியிருக்கிறோம். இந்த அழகில் அவன் நம் எதிரே வந்தானானால் நம்மில் யார் நிதானிப்போம்? மிக்க நிதானஸ்தரான நீங்களே கூட ஆத்திரத்தில் எதையும் சிந்திக்க மறந்துவிட்டேன் என்னும் போது மற்றவர்கள் அதுவும் இக்கேரியும், தத்தனும், சாமுண்டனும் ஒரு நொடியாவது பொறுப்பரா?” என்று பெத்தண்ணா கேட்டதும் சோழகர் மெய்யாகவே வெலவெலத்துப் போனார். ‘அமைச்சர் இப்படியெல்லாம் குறுக்குக் கேள்விகள் போடுகிறார் என்றால் ஏதோ விஷயம் இருக்க வேண்டும். அநாவசியமாகப் பேசுபவரல்ல அவர். நியாயத்தை அழுத்தமாகச் சொல்லுவதில் உறுதியானவர். எனவே உலுப்கான் தீ வைக்கும் தீவட்டிக் கொள்ளைக்காரன் போன்றவன் அல்ல என்று எண்ணுகிறார் போலும்.’ சோழகர் சட்டெனத் திரும்பி “ஐயோ அமைச்சரே, இது வரை பல்லாளர் உள்ளிட்டு எவராலும் எதுவுமே தெளிவாகச் செயல்பட முடியவில்லை. ஒரே ஒரு நல்ல காரியம்தான் நடந்தது. அதுவும் பூசாரி கட்டிக் கொண்ட புண்ணியம்” என்றார். “எந்தப் பூசாரி?” “நம்ம படவேட்டார் கோயில் பூசாரி. அவர்தான் காலஞ்சென்ற படவேட்டாருக்கு அபிமான புதல்வனாக பல்லாளர் இருந்து அந்திமக்கிரியைகளை செய்யும்படி கோரினார். இவரும் மனப்பூர்வமாக ஏற்றார்.” “அவர் வேறு ஏதாவது சொன்னாரா?” “நான் அந்தச் சமயம் அங்கு இல்லை. உங்களைக் கண்டுபிடிக்கும்படியான பணி எனக்குக் கிடைத்தது. அதனால்...” “சரி சோழகரே, நான் மூக்கைச் சுற்றி வளைக்கப் பிரியப்படாதவன். இந்தக் கேவலமான காரியத்தை உலூப் செய்தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இதை யாரோ செய்து அவன் மீது நம் வன்மத்தை திருப்பி விட்டிருக்கிறார்கள். நான் பல்லாளர் சுயநலத்துக்கோ என்னுடைய பெருமைக்கோ உலூப்கானைக் காத்திட எண்ணுவதாக இதற்குப் பொருள் கொள்ள வேண்டாம். நாம் உலூப்கான் நிரபராதியா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க மூன்று புள்ளிகளைக் சந்திக்க வேண்டும். ஒருவர் பூசாரி, இரண்டாவது வில்லவராயரும் விஜயகுமாரனும், மூன்றாவது தேவிகாபுரம் தானப்பன். எனவே நாம் பூசாரியை அழைத்து வர ஒரு ஆளை அனுப்பிவிட்டுப் பல்லாளரிடம் போவோம். பிறகு பெருந்தலைவர்களை அழைத்துக் கொண்டு தேவிகாபுரம் போவது அல்லது நெட்டூர் செல்வது என்பதுதான் என் திட்டம்.” “அப்படியானால் நீங்கள் உலூப்கான் இவ்விஷயத்தில் நிரபராதி என்று நம்புகிறீர்கள். இல்லையா?” “ஆமாம். முக்காலே மூணுவீசம் அல்ல, முழுசாகவே நம்புகிறேன். ஆனால் அதை உறுதிப்படுத்திய பிறகுதான் முடிந்த முடிவாக நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள முடியும்!” என்று அமைச்சர் கூறியதும் சோழகர் சிறிது நேரம் எதுவுமே பேசவில்லை. பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவர் போல மெதுவாக, “அமைச்சரே, இரண்டு தினங்களுக்கு முன்னால் கம்பிலித்தேவன் தேவிக்கோட்டைக்கு வந்ததாக ஒரு செய்தி என் காதில் விழுந்தது. நான் இது கேட்டதும் ஆனானப்பட்ட டில்லி பாதுஷாவையே எதிர்த்து நிற்கும் கம்பிலியாவது இங்கேயாவது வரவாவது. அப்படி வந்து இந்த அற்பமான இடத்தில் தங்குவதாவது என்று வீண் வதந்தி என்று ஒதுக்கி விட்டேன். இது பற்றி நீங்கள் ஏதாவது ஊகிக்க முடிகிறதா? அல்லது விஷயம் ஏதாவது கேள்வியுண்டா?” “கம்பிலித்தேவர் நிச்சயமாக இப்பகுதி வரமாட்டார். அவர் ஒரு மாதத்துக்கு முன்னர் எங்கள் அரசரிடம் வந்தார். ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். டில்லி பாதுஷாவை எதிர்க்கலாம் என்றார். இவர் ஒப்பவில்லை. அவர் திரும்பிப் போய் விட்டார். அதற்குப் பிறகு அவர் இங்கு வர நியாயமில்லை. ஆனால் அவரிடம் நீண்ட காலம் பணியாற்றிய பில்லமராயன் அவரிடமிருந்து விலகிவிட்டான் என்பது எனக்கு வந்த செய்தி. சரி, இது பற்றிப் பிறகு யோசிக்கலாம். நாம் புறப்படலாம்” என்றதும் சோழகன் குதிரையைத் தட்டிவிட்டான் செங்கம் நோக்கி. |