வில்லவன் தேவி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

8

     விஜயகுமார வில்லவராயன் தான் எந்த வேலைக்குப் போகிறானோ அந்த வேலையில் ஒரு பகுதியை மட்டுமே ஒழுங்கு செய்ய முடிந்ததே தவிர முழுமையாக எதையும் செய்ய இயலவில்லை. என்றாலும் இன்னும் தாமதிப்பது சரியல்ல என்று தன் தாத்தா, அத்தை, படவேட்டரையர் மகள்கள் தாங்கிய மலைப்பகுதிக்குத் திரும்பிவிட்டான்! ஏனென்றால் அவனால் போன இடத்தில் வேலை முடியாததுடன் புவன சுந்தரி என்ற அதிசயப் பெண் அழகியின் தோற்றமும் அவன் மனத்திரையில் அடிக்கடி தோன்றி பழைய இடத்துக்குத் திரும்பத் தூண்டிவிட்டது.

     புதிய குதிரை அவன் சவாரி செய்தது. எனவே அது மலைப்பகுதியில் அதிவேகமாக ஓடியது. அவனும் வாலிபன். அதுவும் புதிதாகச் சவாரிக்கு வந்த குட்டி என்று கூடச் சொல்லலாம். ஆயினும் இரவு நேரம் நெருங்கிவிடத்தான் செய்தது.

     அநேகமாக இன்னும் நாலைந்து கல்கள்தான் இருக்கும் பழைய மலை! குதிரைக்குத் தாகம், இவனுக்கும் பசி. சுற்று முற்றும் பார்த்தான், ஏதாவது பழமரங்கள் இருக்கிறதா? அல்லது அருவி போகிறதா என்று.

     தொலைவில் ஏதோ இரு குதிரைகள் தென்படுகின்றன. அவற்றின் மீது... சட்டென்று தன் புரவியைத் திருப்பி அவன் இதுகாறும் சுற்றிப் பார்ப்பதற்காக நின்றிருந்த பாறையைவிட்டு இறங்கி பக்கத்துப் பள்ளம் ஒன்றில் மறைந்தான்.

     ‘அவர்கள் இங்குதானா வர வேண்டும்? சரி, நம்மைப் பார்த்துவிட்டு வருகிறார்கள் போலும்’ என்று எண்ணியவன் குதிரையைத் தட்டிவிட அது மீண்டும் துள்ளி ஓடலாயிற்று. சிறிது தொலைவே சென்றிருப்பான். ஒரு குகை மாதிரியான மலைவழி ஒன்று. சட்டென அதற்குள் நுழைந்தான். அந்த வழியில் மலையின் அடிப்பகுதியில் ஒன்றுக்கு மூன்றாகக் குகைகள் இருந்ததில் சட்டென ஒன்றில் புகுந்துவிட்டான் குதிரையுடன்.

     ஒரே இருட்டு. வெளியே பரவிய நிலவு குகைக்குள் எப்படி ஒளிவிடும்? எதிரே கல்லோ கட்டியோ இருப்பது கூடத் தெரியவில்லை. தட்டுத்தடுமாறிக் கொண்டு குதிரை மீதிருந்து இறங்கி நடந்தவன் காலில் ஏதோ ஒன்று முட்டியது. வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். மீண்டும் தன் காலால் அதைத் தட்டிப் பார்த்தான். ஒரு சிலை மாதிரி ஏதோ ஒரு உருவம். தொட்டுப் பார்த்தான் சிறிது அச்சத்துடன். நகரவில்லை.

     ‘எதற்காக இம்மாதிரி ஒரு பொம்மை இங்கு இருக்கிறது? யார் வைத்திருக்கக்கூடும்?’ அதை சுற்றி வந்தான். ஒரு பெரிய மூட்டை காலில் தட்டியது. அதையும் தொட்டுப் பார்த்தான். புலித் தோல்களைக் கொண்ட கட்டு அது.

     ‘ஓ! அப்படியானால் இந்தக் குகை தேவிகாபுரம் தானப்பருடைய முகாம்’ என்று ஊகித்துச் சற்றே கலக்கம் நீங்கி நகர்ந்தவன் குகை வாசலில் “கம்பிலித்தேவரே, இனி நீங்கள் இறங்கலாம்” என்று ஒரு குரல் வந்ததும், ‘இது தேவிகாபுரத்தார் குரல்தான். அவருடன் வந்திருப்பவன் கம்பிலியா?’ என்று அதிர்ந்து போனவன் வெகுவாகக் கலங்கிவிட்டான்.

     நெறிமுறை தவறாதவர் தானப்பர் என்றுதான் இது வரை அவன் நினைத்திருந்தான். இப்போது அவருடன் இவன் இங்கு வருவதென்றால். திகைத்தான், ‘அவருமா இப்படி?’

     “கம்பிலித்தேவரே. உள்ளே இருவரும் இருக்கலாம். எனவே நீங்கள் இப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கேயே முடிவு செய்து கொண்டு பிறகு உள்ளே நுழையுங்கள்” என்றான்.

     விஜயகுமாரின் அதிர்ச்சி பெருகிவிட்டது. ‘இங்கு இருவர் என்றால் தன்னைத் தவிர வேறு யார்? இந்தப் பொம்மையை அவர்...’

     “நல்லது வேட்டைக்காரரே! தாங்கள் இந்த அளவுக்கு எனக்கு உதவி செய்வீர்கள் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனவே நான் தங்களுக்கு வெகுவாக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தப் பெண்களில் நான் பெரியவளிடம் எசகு பிசகாக நடக்கமாட்டேன். ஆனால் அந்தச் சின்னக் குட்டி...”

     “கம்பிலியாரே, அது சின்னப் பெண் மட்டும் இல்லை. செல்லப் பெண். என் மகள் புவன சுந்தரி. இந்த புவனத்துக்கே சுந்தரி என்று அவளுடைய அப்பா அடிக்கடி கூறுவார். எனவே அவளிடம் நீங்கள் நிரம்பவும் கண்யமாக உங்களிடம் பிரியமும் மதிப்பும் அவளாகக் கொள்ளும் படியான வகையில் நடந்து கொள்ளுங்கள். அவளுடைய அக்காள் குறுக்கிட்டால், அவளுக்குத் தீம்பு ஏதும் நேராது என்று உறுதி கொடுத்து இருவரையும் வெளியே கொண்டு வந்திடுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம், புரிகிறதா?”

     “நன்றாகப் புரிகிறது. நான் அவளிடம் மோகம் கொண்டதால் மிருகமாகிவிட்டேன் என்று நினைத்திட வேண்டாம். வேட்டைக்காரரே, அதற்கு நேரம் காலம் எல்லாம்...”

     எத்தனை நேரம்தான் விஜயனின் குதிரை இருட்டில் மூச்சைப் பிடித்துக் கொண்டு நிற்கும். ஒரு துள்ளு துள்ளியது தன் நிழலைக் கண்டு மிரண்டு.

     வேட்டைக்காரர் திடுக்கிட்டார்.

     கம்பிலியோ “அவர்கள் தங்கள் குதிரைகளுடனேயே உள்ளே ஒளிந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏனென்றால், நாங்கள் நேற்று அந்தப் பகுதியில் இவர்களைத் தேடி அலைந்தது இவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. ஆதலால்தான் இங்கே ஓடி வந்துவிட்டனர் என்று நினைக்கிறேன். நேற்று மட்டும் அந்தத் துருக்கன் குறுக்கிடாவிட்டால் இந்த புவன சுந்தரியை...”

     “அது இருக்கட்டும் கம்பிலி. நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். முதலில் பத்து அடிகள் நடந்து வலப்புறம் சற்றே திரும்பினால் ஒரு சிலை இருக்கும். அது நின்றபடி இருக்கும்.”

     “சிலையா? அது ஏது இந்தக் காட்டில்?”

     “அது பற்றி நான் ஆராயும் போதுதான், அந்தப் படவேட்டையரின் மகள்கள் நுழைந்ததைப் பார்த்ததும் சட்டென மறைந்து அவர்கள் கண்களில் தென்படாமல் உங்களிடம் ஓடி வந்தேன். சரி, நேரம் ஆகிறது. நீங்கள் தாமதிக்க வேண்டாம். நேராக உள்ளே சென்று சிலையின் பின்புறம்...” என்று கூறியவர் மீண்டும், “நன்றாக கவனியுங்கள். உங்களுடைய நீண்டகால வாழ்க்கை..” என்று கூறி நிறுத்தினார் அவர்.

     “இதோ!” என்று உள்ளே போனவன் இருளில் நாலாபுறமும் கைகளால் துளாவிக் கொண்டு முன்னே செல்ல பொம்மை நின்ற இடத்தை நெருங்கி விட்டான். அதையும் தொட்டுப் பார்த்தான். மழமழவென்று அதன் கைகள் உடல் இருப்பதைத் தொடுவதன் மூலம் உணர்ந்தவன் “சரி சரி! ஏ குட்டி. வந்துவிடு இப்படி. உங்கக்காளை நான் ஒன்றும்... என்ன இது? நிழல் மாதிரி, புவன சுந்தரி.”

     “நடவெளியில்! உம்...” என்ற பயங்கர உறுமல் தொனி. அதற்கு முன்னே கம்பிலியின் மார்பில் ஒரு கத்தியின் முனை பதிந்தது!

     “இதென்ன ஆண் குரல், வேட்டைக்காரரே...” என்று கத்தியவன் வயிற்றில் ஒரு குத்துவிழ “ஐயோடி!” என்று கீழே சாய்ந்தான்.

     ஒரு நொடியும் அவனுக்குச் சந்தர்ப்பம் தராமல் கால்களைப் பிடித்துத் தரதரவென்று வெளியே இழுத்து வந்தான் விஜயகுமாரன்.

     தேவிகாபுரத்தார் திகைத்தார் என்றாலும் மகிழ்ந்தார். “பேஷ்! கம்பிலி வேஷம் போட்டு உலகை ஏமாற்றும் கயவா. உன்னைக் கண்டதும் பெண் ஆணாக மாறி விட்டாளா?” என்று கேட்டுவிட்டு இடி இடியெனச் சிரித்தார்.

     எப்படியோ எழுந்திருக்க முயன்ற கம்பிலியிடம், “எடு உன் வாளை. வாய் திறக்கும் முன் வீசு உன் வாளை! என்று விஜயன் எச்சரித்ததும் தன் வாளை எடுத்து அவன் மீது ஒரேடியாகப் பாய்ந்தான்.

     ஆனால் சட்டென ஒரு புறம் லாவகமாக நகர்ந்த அவன் “இதோ ஒன்று...” என்று கூறியபடி கம்பிலியின் வலது தோளில் ஒரு வீச்சு வீசினான்.

     “ஐயய்யோ!” என்று அலறினான்.

     “அழாதே! பெண் வெறி பிடித்த பேயே. வீசு உன் வாளை” என்று அவன் மீது சிங்கம் எனப் பாய்ந்தான் வில்லவன்.

     கம்பிலி நிதானிப்பதற்குள் “இதோ இரண்டு!” என்று அவனுடைய இடது தோளில் தன் வாளைச் செருகுனான் வில்லவன்.

     “வில்லவா! இத்துடன் நிறுத்து. இரு கைகளும் இவனுக்கு உதவாது. நாங்கள் போட்ட திட்டம் வேறு. ஆனால் இங்கு நடந்தது வேறொன்றாகிவிட்டது. பரவாயில்லை. நடந்தவரை நல்லதுதான். எனினும்...” என்று அவர் கூறி முடிக்கு முன்னர் விஜயகுமாரன் மீது சரேல் என்று பாய்ந்துவிட்டான் கம்பிலி.

     இதைச் சற்றும் எதிர்பாராத வில்லவன் பின்னுக்குப் போய் விழுந்துவிட்டான். அவன் கையிலிருந்த வாள் கை நழுவி எங்கோ போய் விழுந்துவிட்டது. கீழே மல்லாந்து விழுந்த குமாரன் எழுவதற்குள் அவனை ஒரே அமுக்காக அமுக்கி விட்டான் கம்பிலி.

     இருட்டில் ஒரு நிதானமும் புரியாமல் தான் என்ன செய்ய முடியும் என்று அதிர்ந்து போய்விட்டார் தானப்பர். என்றாலும் அவருக்கு ஒரு யோசனை பளிச்சென்று தோன்றியது. சட்டென்று புலித்தோல் மூட்டைக் கட்டைப் பிரித்தார். இதற்குள் தன் மீது இருந்தவன் கைகளை குமாரன் பிடித்து முறுக்க அவன் மிகப் பயங்கரமாக அலறி எழுந்து விட்டான். அடுத்த வினாடியே அவன் தலையில் ஒரு புலித்தோல் விரிப்பு விழுந்ததும், உடன் அதைச் சுருட்டியதும் தன் வலி தாங்காது துடித்த அவனுக்கு என்ன ஏது என்று புரியவில்லை.

     “வில்லவா! இனியும் நாம் இவனைக் கொல்ல வேண்டாம். இவனால் இங்கிருந்து சிறிதும் நகர முடியாது. நாம் புறப்படலாம்” என்று முன்னே நகர்ந்ததும் விஜயன் தொடர்ந்தான். என்ன இருந்தாலும் கம்பிலியை உயிருடன்விட்டுச் செல்ல விருப்பமில்லை அவனுக்கு. ஆயினும் நேருக்கு நேர் சண்டையிடாமல் அவனைக் கொள்வதற்கும் விருப்பமில்லையே!

     வெளியே வந்ததும் தங்கள் குதிரைகளின் மேல் இருவரும் ஏறிக் கொண்டனர்.

     “தேவிகாபுரத்தாரே, என்னை நீங்கள் முதலில் மன்னித்திட வேண்டும்” என்றான் குமாரன்.

     அவர் திகைத்துப் போய் “ஏன் தம்பி? நீ என்ன செய்துவிட்டாய்? நல்லகாலமாக நீ வந்தாய். அது நல்லதுதானே” என்றார்.

     “இல்லை, உங்களை முதலில் நான் சந்தேகித்துவிட்டேன். உங்களையும் அவனையும் பார்த்ததும் நான்...”

     “பரவாயில்லை தம்பி. சூழ்நிலை காரணமாக நமக்கு சில சமயம் இப்படித்தான். நான், உன்னுடைய தாத்தா, அவர் மகள் சித்தேசுவரி மூன்று பேரும் சேர்ந்து போட்ட திட்டப்படி இவனை இங்கு கொணர்ந்தேன். இந்த இரவு இவனை இங்கு இருத்திவிட்டால் இவனால் அவர்களுக்கு, அதாவது புவன சுந்தரி, அமரசுந்தரிக்கு ஆபத்து நேராது என்று எண்ணினோம். ஏனென்றால் அமரசுந்தரி இன்று நாளையும் அப்பால் நகர முடியாது. அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருக்கிறாள் தம்பி.”

     “ஆ! உண்மையாகவா? இந்தப் பாவிகளின் கொடுமையால் அவர்கள், பாவம்! அரண்மனையில் ஆனந்த சூழ்நிலையில் பிறந்து சீராட வேண்டிய சிசு இப்படி நட்ட நடுகானகத்தில் மலைக்குகையில் ஒளிந்து மறைந்து. சேச்சே! கடவுள் ரொம்பவும் மோசம் வேட்டைக்காரரே.”

     “நடப்பது நடக்கட்டும் தம்பி. அதை நாம் தடுத்திட முடியாது. இப்போது நாம் சற்றுத் தொலைவில் பிரிந்தாக வேண்டும். நீ அங்கு உன் தாத்தாவிடம் போக வேண்டும். நான் இங்கே மறைவில் நின்று. கம்பிலியைக் கவனித்திட வேண்டும். புலித்தோலைப் போட்டு மூடிக்கட்டினாலும் அவன் விடாக்கண்டன். அவன் திரும்பவும் பில்லமனிடத்துக்குப் போய்விட்டால் அது மிகவும் ஆபத்து. நாம் ஒரு நொடி கூட இந்தப் பெண்களை...”

     “நீங்கள் ஏன் அவனை உயிருடன் விட்டு வரும்படி சொன்னீர்கள்?”

     “அவன் ஒரு போலி தம்பி. உண்மையான கம்பிலி இல்லை அவன்” என்று அவர் கூறியதும் பதறிப் போன விஜயகுமாரன் “என்ன? அவன் போலியா?” என்று அதிவேகமாகக் கேட்டான்.

     “ஆம் தம்பி. நான் முன்னெல்லாம் பலமுறை யோசித்ததுண்டு. கம்பிலி நாட்டு மகாராஜனான அந்தக் கம்பிலி, இப்படி ஒரு நாடோடி மாதிரி காட்டிலும், மேட்டிலும் அலைந்து திரிந்து கன்னிவேட்டை ஆடுவானா என்று. அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. இவன் உண்மையான கம்பிலியில்லை. இவன் அந்தப் பில்லமாராயனின் சிருஷ்டி! அவன் அசல் கம்பிலியிடம் இருந்தான். ஏதோ ஒருவகையில் தாங்க முடியாத பகையைக் கொண்டிருக்கிறான். அவனை ஒரேயடியாக வஞ்சந்தீர்க்க இவனை உருவாக்கியிருக்கிறான். தென்னகத்தில் இந்தப் போலி கம்பிலி எடுத்த கெட்ட பெயரால்தான் நம்முடைய பல்லாளர் கூட, அவனை, அதாவது அசல் கம்பிலியை விரட்டியிருக்கிறார்.”

     “அப்படியா? இதைக் கேட்கவே ஆச்சரியமாயிருக்கிறதே! இப்படியெல்லாம் கூடவா பழி வாங்க நினைப்பார்கள்?”

     “வஞ்சந் தீர்ப்பவனின் சுயநலம்! நேர்மையற்ற நோக்கம் இரண்டும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டிவிடும் என்பதற்கு இவர்கள் உதாரணம். சரி, நீ புறப்படு. நான் காலை வரை இங்கிருந்துவிட்டுப் பிறகு அங்கு வந்து சேருகிறேன். அது வரை நிரம்பவும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். உங்களுக்குத் தெரியாததல்ல. என்றாலும் என் மனதில் பட்டதையும் கூறிட வேண்டுமல்லவா?”

     “நல்லது வேட்டைக்காரரே. நண்பனைக் காணோமே என்று பில்லமன் தன் ஆட்களுடன் வந்தால்?”

     “நான் இங்கு இருப்பேன் காலை வரை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆயினும் நீ போகும் போது யாரும் அறியாமல் போவது நல்லது. புரிகிறதா?”

     “நன்றாகப் புரிகிறது. புறப்படுகிறேன்.”

     “நல்லது தம்பி.”

     விஜயகுமார வில்லவரையன் மிகவும் எச்சரிக்கையாகத்தான் சென்றான். அவன் தன் தாத்தா இருத்த மலைக்குகை - எதிரேதான். அருவி அடையாளமாயிற்றே! தவிர இன்று பனி மூட்டமில்லாததால் நிலவும் தலைகாட்டியிருக்கிறதே. குதிரையின் குளம்படி சத்தம் கூட ஒலிக்காமல் அவ்வளவு மெதுவாக நடத்தினான் குதிரையை.

     இன்னும் கூப்பிடு தூரம்தான் இருக்கும். விரலின்றி ஒரு அம்பு பறந்து வந்து அவனுக்குச் சற்றுத் தள்ளி விழுந்தது! சிரித்துக் கொண்டான். ‘அத்தை அசாதாரணமான எச்சரிக்கையுள்ளவள்!’

     மேலும் நடந்தான். மீண்டும் அம்பு அவன் இடப்புறத்தில் வந்து விழுந்தது. தயங்காமல் நடந்தான். அடுத்த அம்பு ஏறத்தாழ அவன் காலடியிலேயே வந்து விழுந்தது என்றாலும் தவறில்லை. ஆனால் விஜயன் தயங்காமல் தொடர்ந்து நடந்தான் முன்னே. நாலாவது முறையாக அம்பு அவனை நோக்கி வரவில்லை. அவனும் இனிவராது என்ற தைரியத்துடன் குகையை நெருங்கிவிட்டான்.

     “தம்பி, நீதானே?”

     “ஆமாம் தாத்தா! இங்கு ஒன்றும் விசேஷம் இல்லையே?” என்று அவன் நிதானமாகக் கேட்டதும் “இதுவரை ஒன்றுமில்லை தம்பி. படவேட்டரையருக்கு ஒரு பேரன் பிறந்திருக்கிறான். ஆனால்...”

     “தெரியும் தாத்தா.”

     “எப்படி?”

     “வழியில் வேட்டைக்காரரைச் சந்தித்தேன்.”

     “தேவிகாபுரத்தாரையா?” என்று கேட்டுக் கொண்டே அத்தை சித்தேசுவரி வெளியே வந்துவிட்டாள்.

     “ஆமாம் அத்தை. வரும் வழியில் பார்த்தேன்” என்று கூறிவிட்டுக் குதிரையை ஒருபுறம் கட்டினான்.

     யார் வந்திருப்பது என்று அறியும் ஆவலும் பரபரப்பும் புவன சுந்தரியையும் வெளியே வரச் செய்தது. அவளுடைய அக்காள் அவள் குழந்தை இரண்டு பேருமே ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். எனவே தைரியமாக வந்தாள் வெளியே. என்றாலும் வில்லவரையர் சித்தேசுவரி, வந்திருப்பவன்... ‘ஓ! அவர்தான்..’ சட்டென நாணம் உண்டாகிவிட்டது அவளுக்கு. அப்படியே நின்றுவிட்டாள்.

     “நீ எங்கே அவரைப் பார்த்தாய்! அவருக்கு நாங்கள் வேறு வேலையல்லவா கொடுத்திருந்தோம்.”

     “ஆமாம் அத்தை. அந்த வேலையில் நானும் கொஞ்சம் பங்கு பெற்றேன். உங்கள் திட்டமும் இதுவரை கச்சிதமாகத்தான் நடைபெற்றது. அனேகமாக இன்றிரவு அவன் தொல்லை இருக்காது.”

     “அனேகமாக என்றால்?”

     “கம்பிலி இன்னும் சாகவில்லை. என்றாலும் இரு கைகளும் இன்னும் சில காலத்துக்குப் பயன்படாது. வேட்டைக்காரர் அவனைக் கொன்றுவிட வேண்டாம் என்று சொன்னதால் விட்டுவிட்டோம்.”

     “ஏன் விட்டுவிட்டீர்கள்? குகைக்குள் கட்டிப்போட்டு விடுவதுதானே?”

     “அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் அவனுடைய நண்பன் பில்லமன் பொழுது புலரும் வரை பொறுமையாயிருக்க முடியுமா? சந்தேகம் தோன்றி தொடர்ந்து வந்தால்... அல்லது இரவில் தேடினால்? எனவே ஒரு முக்கியமான இடத்தில் வேட்டைக்காரர் தங்கியுள்ளார். அவர் காலையில் இங்கு வருவார்.”

     “சரி தம்பி, நீ கை கால்களைக் கழுவிக் கொண்டு வா! ஏதாவது சாப்பிடலாம்” என்றாள் அத்தை.

     ஆனால் தன் நாணத்தைக் கூட ஒதுக்கிவிட்டு ஆவல் தாங்காது ஓடி வந்துவிட்டாள் புவனி.

     “அத்தை, அவர் மேலெல்லாம் ரத்தம்” என்று சொன்னதும் கிழவர் அவனை உற்றுப் பார்த்தார். அத்தையும்தான்...

     ‘நாம் பக்கத்தில் இருந்து நமக்குத் தெரியாத இது, எப்படி எட்டத்தில் இருந்த அவளுக்குத் தெரிந்தது?’ என்று வியப்புற்ற அத்தை, “என்ன தம்பி இது? என்ன நடந்தது வழியில்? நீ நடந்ததையெல்லாம் சொல்லாமல்...”

     “ஒன்றும் பிரமாதமாக நடக்கவில்லை அத்தை. அந்தக் கம்பிலியை நான் கொன்றிருக்க முடியும். ஆனால் வேட்டைக்காரர் தடுத்துவிட்டார். அவ்வளவுதான். மற்றபடி என் மீது ஒரு சிறு காயம் கூட இல்லை. இதோ வந்துவிடுகிறேன்” என்று பரபரப்புடன் கூறிவிட்டு அருவியை நோக்கிப் போய்விட்டான்.

     அத்தை தன் தந்தையைப் பார்த்து, “அப்பா, இந்தப் பொண்ணு ரொம்ப அழகு மட்டுமில்லை, கூர்மையான பார்வையும் உடையவள்” என்று சொல்லிவிட்டுச் சிரித்ததும் “போங்க அத்தை” என்று நாணிக் கோணி சற்றே அப்பால் நடந்தாள்.

     நிலவின் குளுமையும் இலேசான குளிரும்தான். நேற்றைப் போல வானம் மேகத்தால் மூடியிருக்கவில்லை. பனிப்படலம் எங்கும் திரையிட்டிருக்கவில்லை.

     புவன சுந்தரி அருவிக்கு எதிர்ப்புறமாக ஒரு சிறு பாறையின் மறைவில் கட்டப்பட்டிருந்த குதிரைகள் அருகே சென்றாள். அவற்றுக்குத் தாகம் பசியெல்லாம் இருக்காதா? இது வரை ஏதாவது போட்டார்களோ இல்லையோ. எனவே அத்தையிடம் திரும்பி வந்தாள்.

     “அப்பா, இனி நீங்கள் கண் விழிக்க வேண்டாம். நேற்றைக்கு பட்டபாடு போதும். இன்று படுத்துத் தூங்குங்கள். நான் விழித்திருக்கிறேன் முடிந்த வரை. பிறகு விஜயன் இருப்பான்” என்றாள்.

     கிழவருக்கும் மிகவும் சோர்வாக இருந்ததால் “சரி மகளே!” என்று எழுந்து நடந்ததும் எதிரிலே வந்த புவன சுந்தரியைப் பார்த்து நின்றார்.

     “புரவிகளுக்குத் தானியம், தண்ணீர்...” என்று அவள் இழுத்ததும் கிழவர் இலேசாகச் சிரித்துவிட்டு “நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னேதான் போட்டேன் எல்லாம். நீ அதிக நேரம் கண் விழிக்காமல் குகைக்குள் போய்ப் படுத்துக் கொள்ளம்மா!” என்று கூறி நகர்ந்தார்.

     “இந்தா புவனி, இப்படி வந்து உட்காரு!” என்று அத்தை அழைத்ததும் அடக்கமாக வந்து அமர்ந்தாள் அவள் அண்டை.

     இலேசாக அவள் தலையைத் தடவிக் கொடுத்த அத்தை ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு “காலம்தான் எத்தனை விதமா கோலம் செய்யுது பாரு!” என்று கூறியதும் புவன சுந்தரி ‘சரி, அத்தை ஏதோ சொல்லப் போகிறாள்’ என்று கேட்கத் தயாரானாள்.