எம்.ஆர். ஸ்ரீநிவாசய்யங்கார்

இயற்றிய

நன்மதி வெண்பா

     இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்.

காப்பு

நீர்கொண்ட கொண்டல் நிகர்மாறன் றண்ணளியால்
சீர்கொண்ட வெண்பாவிற் செப்புவாம் - பேர்கொண்ட
சொன்மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை
நன்மதியே நாடி நயந்து. 1

நூல்

தருணமுத வாக்கேளிர் தாள்வணங்கு வோர்க்கு
வரமருளாத் தெய்வமன வாஞ்சை - பெரிதுறமேல்
ஊர்ந்தவுட னோடா வுழைப்புரவி நன்மதியே
ஓர்ந்தவ ரகற்றுவரென் றோது. 2

நாடுங்கால் வேதனத்தை நல்காப் புரவலன்றன்
மாடிருந்து தொண்டியற்றி வாழ்வதினும் - ஈடுபெறு
சீரணியா னேறுகொண்டு செய்ந்நிலத்தை நன்மதியே
ஏரினுழல் மேலாமென் றெண். 3

மிக்கவாக் கொண்டுபணி மேவேற்கோ யின்மணியம்
தக்கதெனக் கொள்ளேல் தகவில்லார் - பக்கல்
வருநட்பாற் றேனன் மதியேநீ செல்லேல்
அரிய வனத்தொன்றி யாய். 4

வாய்திறந்தோ ரின்சொல் வழங்காது மௌனியாய்
வாய்மகிபன் றன்மை வழுத்துங்கால் - நோய்கொள்
செவிகேளான் கண்விழியான் தேர்நன் மதியே
சவமவனென் றேதுணிந்து சாற்று. 5

கடன்கொண்டி டம்பமிகக் காட்டலுறு மூப்பின்
இடைநற் பருவமனை யெய்தல் - மடமைமிகும்
தீயர்தவம் குற்றமதைத் தேரா னரசாட்சி
தீயவென நன்மதியே செப்பு. 6

கடனளிப்பா னாயுணூல் கற்றவனெஞ் ஞான்றும்
இடைவறத்த லில்லாத யாறு - கடவுண்மறை
தேர்ந்துணர்ந்த வந்தணர்கள் சேர்நகரி னன்மதியே
சார்ந்திருக்கும் வாழ்வே தகும். 7

மருகன்ற னல்லியல்பு மங்கையரின் வாய்மை
மருண்மதியா யன்கவிசொல் மாட்சி - வரிகொளுமி
தன்னைக்குத் திக்கொள்ளுந் தண்டுலம்வெண் காகவினம்
இன்னவில நன்மதியே யெண். 8

அரியபசிக் காஞ்சோ றமுதுவருத் தாமற்
றருபவனே வள்ளறனைச் சாரும் - ஒருதுயரம்
தாங்கவல்லா னாண்டகையாந் தைரியவா னன்மதியே
ஓங்கு குலமணியென் றோது. 9

வருத்துபசி நீக்காவூண் மக்கட்பே றில்லா
ஒருத்தி யுடன்வாழ்ந் துழலும் - திருத்தமிலா
வாழ்வசத் தின்கறவை மாசுறுகி ணற்றுநீர்
தாழ்வென்று நன்மதியே சாற்று. 10

வழங்க வியன்றதே வான்கல்வி தெவ்வர்
முழங்கமர்க்கஞ் சாமையே மொய்ம்பு - செழுங்கவிசொல்
பாவலரை மெச்சுதலே பாண்டித்தி யம்குதர்க்கம்
மேவலிடர் நன்மதியே விள். 11

நன்னசையாய் விச்சை நவிலாவா யன்னையைக்கூஉய்
அன்னமெனக் கேளாத வன்னவாய் - பின்னோர்த்
தயவுடன்கூ வாதவாய் தாநன் மதியே
குயவன்மண் டொட்ட குழி. 12

தொத்துவார் வல்லுடும்பு சொல்வருட நூறிருக்கும்
பத்துநூ றாண்டுபெரும் பாம்பிருக்கும் - தத்தும்
திரைமடுவிற் பல்காலம் சேர்ந்திருக்கும் கொக்கு
புருடார்த்த நன்மதியே போற்று. 13

பித்தளைகாந தங்கியுலைப் பெய்துருக்கி வாத்திடினும்
நத்துபசும் பொன்னியல்பை நண்ணுமோ - சித்தம்
மயர்வுறுகீ ழோர்நன் மதியேமே தக்க
வியல்புளா ராத விலர். 14

புனலருந்து வாம்பரியைப் பொங்கு மதத்தால்
அனலுகுக்குங் கட்களிற்றை யாவின் - நினைவொடுசெல்
புங்கவத்தைக் கல்லாத புன்மதியை நன்மதியே
சங்கையின்றி நண்ண றவிர். 15

நன்றியற்றி னார்மகிழ நன்றாற்றல் விந்தையின்றால்
கொன்றன்ன வின்னா குறித்தியற்றும் - வன்றொழிலோர்
துன்புறுத்துங் காலத்தும் தூயவர்க ணன்மதியே
இன்புறுத்து வாரென் றிசை. 16

தூரிற் கரும்பினிதாய்த் தோன்றிமேல் வன்மைமிக்க
சீரிலாக் கண்கடொறுந் தீயதாய்ப் - பாரில்
முடிவி லுவர்ப்புறல்போல் முற்றுங் கயவர்
தொடர்பென்று நன்மதியே சொல். 17

எத்தருணத் தெம்மொழிக ளேற்குமோ வம்மொழிகள்
அத்தருணத் திற்புகன்று மந்நியர்தம் - சித்தமது
நோதலின்றித் தாநோவா நோன்மையன்றோ நன்மதியே
ஏதமிலாச் சான்றோ ரியல். 18

குற்றமே நாடுங் குணமிலிபாற் றொண்டுசெய
உற்றுழல லால முகுபகுவாய்ப் - புற்றரவப்
பையடியிற் றேரை படுத்தலென நன்மதியே
ஐயமின்றித் தெள்ள வறை. 19

ஏரிநிறை நீரா லெழிலுறுங்கா லத்தடத்தில்
ஆருந் தவளை யயுதமாம் - தாரணியில்
பொற்றிரளான் மேன்மை பொருந்துங்கா னன்மதியே
பற்றுடையே மென்பார் பலர். 20

பக்குவமில் காய்பறியேல் பந்துக்க ளைப்பழியேல்
தக்கபடை மண்டும் சமரின்மனம் - நெக்குவெரின்
இட்டகலே னன்மதியே யிங்கிதங்கூ றுங்குரவர்
கட்டளைமீ றேனீ கடந்து. 21

ஒருநகரிற் கோர்கணக்கன் ஓர்வழக்குத் தீர்ப்போன்
ஒருவனே யாகாம லூரின் - வருவழக்கம்
பன்முறையு மாறிற் பருவரலுற் றந்நகரம்
நன்மதியே வீயுமென நாட்டு. 22

உடன்பாடி லாமனையாள் ஒப்புரவில் மன்னன்
தொடர்புறுதி கொள்ளாத தோழன் - விடவுரியார்
என்றறியா தானே யிடைய னிடையனிடை
யன்றென்று நன்மதியே யாய். 23

பாவுகல மேற்சகடம் பண்டியின்மே லந்நாவாய்
மேவுதலு முண்டிதனை விள்ளுங்கால் - வீவில்
கலையார்ந்த நன்மதியே கைத்துடைமை யின்மை
நிலையாவென் றின்றே நினை. 24

வெந்திறன்மிக் கோனேனும் மென்மனையை யன்னவடன்
தந்தைமனை யிற்பலநா டங்கவிடல் - சந்தைக்
கடையில்விலை கூறியந்தக் காரிகையை விற்று
விடலென்று நன்மதியே விள். 25

தேசவிருஞ் செம்பொன்மணிச் சிங்கா தனத்துமிசை
ஏசவரு நாயதனை யேற்றியே - நேசமுடி
சூட்டுகினு மந்தச் சுணங்கன் குணங்கெடுமோ
தேட்டமுறு நன்மதியே செப்பு. 26

தவளைக்கு காலிறுதல் சர்ப்ப மதற்கு
நவையார் மிகுபிணிதா னண்ணல் - இவரும்
மனைதீயா ளாதல் வறுமையுறன் மூப்பில்
இனவினலே யாநன்மதி யே. 27

முளரிபுன னீங்கின் முளரிமலர்க் கேள்வன்
ஒளிர்கரத்தாற் றீய்ந்திறுத லொப்பத் - தளர்வணுகித்
தந்தநிலை மாறிற் றமராலுந் துன்புறலில்
விந்தையென்னோ நன்மதியே விள். 28

நாட்டுகணக் கன்கணக்க னம்பி னிறப்பனைய
கேட்டையுறு வானதனாற் கேண்மையுடன் - தேட்டமுறுந்
தன்மரும மோர்கணக்கற் சாராவண் ணங்கணக்கன்
நன்மதியே வாழ்ந்திடுத னன்று. 29

மாகணக்கன் றன்னை மகிழ்விக்கா துண்டவூண்
தேகஞ்சே ராதிருசிற் றேய்க்குமெண்ணெய்ப் - பாகமின்றேல்
ஈசன் சகடு மிறையுநக ராதெனவீண்
பாசமிலா நன்மதியே பன். 30

சாந்த குணங்கணக்கற் சார்ந்தாலும் வன்றந்தப்
பாந்தள்தீண் டாதேனும் பல்புகர்மா - வாய்நதகடாம்
விட்டாலும் தேள்கொட்டா விட்டாலு நன்மதியே
கிட்டார்கள் மேதினியோர் கேள். 31

மேலியல்தே ரும்பருவ மேவுமுன மக்கட்குப்
பாலியவி வாகமதைப் பாலிப்பர் - காலமுற்று
முற்றாத காய்துவர்ப்பு மொய்க்குமன்றித் தீஞ்சுவையைப்
பற்றாது நன்மதியே பார். 32

செய்யதமிழ்த் தேர்ச்சிமிகச் சேராதான் சொல்செய்யுள்
செய்யுமிங்கி தந்தன்னைத் தேரான்பால் - செய்யுநட்பு
மேவியக லேன்மெய்யான் வில்லாண்மை நன்மதியே
பாவிக்கி லின்னனவீண் பார். 33

கொள்ளேல் கொடியோர்தங் கூட்டுறவு கொண்டபுகழ்
தள்ளேல் கடனளித்துச் சஞ்சலத்துக் - குள்ளாகேல்
என்புருக்கு மென்குதலை யேந்திழையார் நன்மதியே
அன்புளரென் றுன்னே லகத்து. 34

காதலொடில் வாழக் கருதா மதியிலியாம்
மாதுடனில் வாழ்க்கையுற வாஞ்சித்தல் - மாதுரியச்
சார மொழிகருப்பஞ் சக்கையினை நன்மதியே
ஊரெறும்பு மொய்த்திடலொக் கும். 35

காரணமில் லாநகையுங் காதலன்பா லன்பில்லா
நேரிழையும் பூரணமில் நெய்படுநற் - பூரிகளும்
பல்லியமில் லாமணமும் பாரினில்வீ ணாமெனவே
தொல்லியல்பார் நன்மதியே சொல். 36

நல்குமின்ப வில்லா ணவியப் புரைநாடிப்
பல்கலாஞ் செய்யேலப் பண்மொழியாள் - மல்குகண்ணீர்
வாரும்போ தம்போச மாதுன் மனையைவிட்டுப்
பேருமென்று நன்மதியே பேசு. 37

அன்புகுன்றா நாளி லருங்குறைசற் றேனுமெண்ணா
தன்புகுன் றத்தொடங்கு மற்றைமுதல் - இன்புடன்செய்
நற்றொழிலி லுந்தீய நாடுதல்கா ணன் மதியே
குற்றமுறுங் கீழோர் குணம். 38

சீர்த்தவியன் மேலோர் சிறியோரைத் தம்மொடுறச்
சேர்த்தலா னீக்கரிய தீங்குறுவர் - போர்த்துடலூன்
மேயலுறு வன்முகடு மேவுதலா னன்மதியே
பாயன்மிக மொத்துப் படும். 39

மெய்யழகி லைங்கணைகொள் வேளெனினு மான்றோர்சொல்
செய்யமுது நூலனைத்துந் தேர்ந்தாலும் - மையணிகண்
வேசையணு காமற்கை விட்டகல்வா ணன்மதியே
காசையளி யானைக் கடிந்து. 40

தகைசால்பண் பில்லாத் தனயனைப்பெற் றோன்றன்
அகிலகுண முங்கெட் டழியும் - நகுதரளம்
கக்குமிக்கு முற்றிக் கதிரீனி னன்மதியே
அக்கரும்பி னின்சா றறும். 41

கன்னியருள் ளன்புங் கடுக்கட் செவிநட்பும்
அந்நியவில் லக்கிழத்தி யாசையும் - துன்னரையன்
நம்ப மனங்கொளலு நன்மதியே யின்னிரத
நிம்பமும்பொய் யென்றே நினை. 42

மகிபுகழு மாண்டகையை வாழ்மனையாள் கண்டால்
அகனமர்ந்தின் சொல்லா னழைக்கும் - புகழ்வாய்
நடைப்பெருமை யில்லானை நன்மதியே நோக்கின்
நடைப்பிணமென் றெள்ளி நகும். 43

கடந்த நினைந்துருகேற் காரிகையா ரன்பு
மிடைந்தவரென் றெண்ணேன் மிலைந்த - வடந்திகழ்தோள்
பூவலரந் தப்புரத்துப் பூவையரை நன்மதியே
மேவமனங் கொள்ளேல் விழைந்து. 44

எறும்பார்ந் தியற்று மிரும்புற்றுப் பிண்ணா
வுறும்பாந்த ளார்வாத லொப்ப - வறும்பாழ்
மதிகேடன் பொன்னன் மதியேபா ராள்பூ
பதிசெயிர்த்து வவ்வப் படும். 45

உறவனரல் லாரு முறவுடையே மென்று
செறிவொடுறச் சூழ்வாங்ஙன் சேரின் - பெறவரிதாய்த்
தேடுமருஞ் செல்வஞ் சிதறுண்டு நன்மதியே
ஒடுமென்று நெஞ்சி லுணர். 46

செங்கைக் கணியீகை தேர்வேந்தர்க் கம்பணியாம்
பங்கமறப் பொய்யாமை பத்தினியாம் - மங்கைக்கு
மான முயரிழையாம் மன்னீதி நன்மதியே
மானவர்க்குப் பூணா மதி. 47

ஆய்ந்தோய்நது செய்யா தவசாத்தி னாற்றுதலால்
வாய்ந்தகரு மஞ்சிதைந்து மாயுமே - ஆய்ந்தோய்ந்து
செய்யிற் சிதைந்ததுநற் சீர்த்தியுற்று நன்மதியே
கையிலுறு மென்றே கருது. 48

தன்னுளடங் காச்சினமே சத்துருவாந் தன்பொறையே
தன்னரணாந் தன்றயையே சார்கிளையாந் - தன்னுடைமை
நன்றென்று வந்திடலே நன்மதியே வான்றுறக்கம்
கன்றுமன மேவனர கம். 49

தன்னகரார் வான்றவனைத் தன்புதல்வன் வாலறிவைத்
தன்னரிவைப் பேரழகைத் தன்முன்றில் - துன்னரிய
வோடதியை யுள்ளத் துவகையொடு நன்மதியே
நாடமனங் கொள்ளார் நரர். 50

தானருஞ்செல் வந்துய்த்த றக்கமக வான்பதவி
தானிழிமி டிக்ககடலிற் றாழ்தல்புவி - யீனமுறல்
தன்மரண மூழி தனக்கினியாள் விண்ணரம்பை
நன்மதியே யீ துண்மை நம்பு. 51

தமரில்லாத் தானத்துந் தம்மன்ப ரில்லா
வமையத்து மேதிலர்சே ராங்கும் - சுமையின்றிச்
சங்கைகொளு மவ்விடத்துந் தாஞ்சேற னன்மதியே
இங்கிதந்தேர்ந் தோர்க்கமைதி யின்று. 52

வெள்ளிலையுண் ணாவாயும் மென்மணஞ்செய் நாதனுடன்
உள்ளமிணங் காதா ளுடன்வாழ்வும் - கள்ளொழுகும்
அங்கமலம் விணடலரா வாவியுட னன்மதியே
திங்களில காவிரவுந் தீது. 53

வாளுரகத் திற்கு வலியதலை யிற்கடுவாம்
தேளிற்கு வாலில்விடஞ் சேருமே - கோளர்களாம்
தீயுருவார் கீழ்கட்குத் தேகமெலாம் வெங்காளம்
ஏயுமென நன்மதியே யெண். 54

தலைமறையப் பொற்குவையைத் தந்தாலு மன்பு
நிலைபெறா தாங்கணிகை நெஞ்சில் - விலைமாது
மத்தகத்த டித்தாணை வைத்தாலு நன்மதியே
சித்தமக ளங்கமிலை தேர். 55

சிரமார்ந்த குஞ்சிமிகச் சிக்குற்று நாறி
யுரவாகம் போர்க்கு முடுக்கை - பெருமாசு
கொண்டுசீர் குன்றிற் குலமாது நன்மதியே
கொண்டவற்ப ழிக்குமெனக் கூறு. 56

கானீண்ட சோலையிற்பல் கந்தமலர்ச் சாறெடுத்துத்
தேனீச்செய் தேன்பிறரைச் சேரலைப்போற் - றானீதல்
உண்ணலின்றிக் கூட்டும்பொன் னோடுங்கா ணன்மதியே
மண்ணின்மன் கையில் வறிது. 57

வன்புறங்கூற் றாலுய்யும் வஞ்சகர்சொற் கேட்டரசன்
மன்பதைக்கின் னாவியற்றல் வண்மையொடு - பொன்பொழிந்து
மட்டலருங் கற்பகத்தை வன்னியிற்றீய்க் குங்கரிக்கா
வெட்டலென நன்மதியே விள். 58

பாழிநிதி கட்குப் பதியாங் குபேரன்றன்
றோழ னெனவிருந்துஞ் சோமேசன் - ஏழமையாய்
அம்பலியி ரந்துண்டா னாதலா னன்மதியே
தம்பொருட மக்குதவி சாற்று. 59

தீரர்க்கி யற்றுதவி தெங்கிளநீ ருண்ணிறையும்
சார மதற்குச் சமமாகும் - பாரில்
பெருமை மிகப்பிறங்கப் பேசரிய வின்பம்
தருமென்று நன்மதியே சாற்று. 60

அரியவழிச் செல்லே லாய்ந்ததுணை யின்றி
யரகத்தி லன்ன மருந்தேல் - உரிமைபிறர்க்
குள்ளபொருள் கொள்ளே லொன்னாரு நன்மதியே
துள்ளவன்சொற் கூறே றுணிந்து. 61

ஆயங்கொள் வானை யருங்கவறா டாகுலனை
மாயஞ்செய் தட்டானை வாணிபனைத் - தீய
நடக்கை விலைமாதை நன்மதியே நம்பேல்
இடக்கரனை நீயென்று மே. 62

இன்மொழியாற் றீம்பா லெவருமருந் தார்சினத்து
வன்மொழியால் வெவ்விடமும் வாய்க்கொள்வார் - இன்மொழிதான்
ஐயோ பயனிலதா மாதலா னன்மதியே
வெய்யோர்க்கு வன்சொல் விளம்பு. 63

மெய்ம்மை நெறிநிருபன் மீறி யொழுகுதல்வெங்
கைம்மைப்பெண் வீட்டிலதி காரமுறல் - பொய்ம்மையொன்றே
மேயகணக் கன்சுகுண மேவலிவை நன்மதியே
தீய பயக்குமெனச் செப்பு. 64

செறிபொருள்சே ரம்பனுவ றீஞ்சுவையார் கீதம்
அறிவிலிக்கி சைக்க வணுகல் - உறுமொலிகொள்
காதில்செவி டன்பாற்போய்க் கம்பெடுத்துப் பம்பம்மென்
றூதலென நன்மதியே யோது. 65

நகையேற்றாய் தந்தை நரபதிபால் வீணே
நகையேற் பிறன்மனையை நண்ணி - நகையேல்
அவையினவை யேன்மறைதேர் அந்தணரை யின்ன
நவையிலா நன்மதியே நன்று. 66

புனலுயிர்க்கா தாரமாம் பொற்பாரா தாரம்
வனமதுர மென்மொழிக்கு வாயாம் - மனிதர்க்கு
மானைவிழி யார்மணியாம் மாந்தர்க்கு நன்மதியே
தானை யணியெனவே சாற்று. 67

இகலாகா தியாவரொடு மின்னலுற்ற பின்னர்
அகமலைத லாகா தவையில் - பகச்சொல்லல்
தக்கதன்று தன்னெஞ்சைத் தையலர்பா னன்மதியே
சிக்கவிட லாகாது தேர். 68

கொண்டமனை யாளிடத்தும் கொற்றவன் றன்பாலும்
அண்டர்தொழுந் தேவிடத்து மான்மாவைக் - கண்ட
குருவிடத்து நன்மதியே கொஞ்சுமகார் பாலும்
தருகையுறை யோடணுகல் சால்பு. 69

தொண்டியற்ற லிற்பணிப்பெண் தூயவுரு வத்தரம்பை
பண்டைமந்தி ரத்தமைச்சு பற்றுடனே - உண்டி
உதவலிற்றா யானவளே யொண்மனையா ளென்றே
இதமாக நன்மதியே யெண். 70

பிறன்மனைக்குக் கூடப் பிறந்தாரை யொப்பப்
பிறர்பொருள்வவ் வாதவரைப் பேணிப் - பிறர்தம்மைப்
போற்றநடந் தொன்னார் புழுங்கினா னன்மதியே
சீற்றமுறு வாரான்றோர் தேர்ந்து. 71

பிறர்க்குரியா ணாடேல் பிறர்பொருளை வவ்வேல்
பிறருதவி நோக்கிப் பிழையேல் - செறிசெல்வம்
போயபின்சுற் றத்தகத்திற் புக்குழலே னன்மதியே
தீயகுழுச் சேரே றெளிந்து. 72

வீட்டுமனு நற்பருவ மெல்லியலார் பாலிருப்பின்
நாட்டுபுகழ் குன்றி நவையுறுவன் - கோட்டமிலா
நங்கை யருந்ததியு நன்மதியே யாடவர்கள்
அங்குழுப்புக் காற்சீ ரறும். 73

பிறனையுன்னும் பேதையோரீஇப் பீதியலாக் கையாள்
அறநீக்கி மாற்றமெதி ராடும் - அறிவில்லாக்
கான்முளைக டிந்துபல கான்மனையைச் சாராத
நோன்மைநன்று நன்மதியே நோக்கு. 74

பிறர்க்குன் னசைவிள்ளேற் பிறரில்லத் தென்றும்
வறிதுறே லந்நியன்மேல் வாஞ்சை - யுறுமனையைச்
சேரவுன்னே னன்மதியே தீயவிடக் காம்புரவி
யூரமனங் கொள்ளே லுணர்ந்து. 75

பருவவே ளாண்மைவிடேற் பார்த்திபர்க ணேசம்
திரமெனவுட் பூரியேற் சேர்ந்த - வரவைமிகத்
தர்ப்பமுறு மாறுவிடேல் தங்கரிய தானத்தே
நிற்பவுன்னே னன்மதியே நீ. 76

பற்றுலக்கிப் பின்னருந்தும் பாகிலைநல் லெண்ணெய்மூழ்
கற்றைநாட் கண்டுயில லையமறக் - கற்ற
புலமைமிகு நன்மதியே போதமிகு வாரோ
டிலகல் விலையரிதென் றெண். 77

பாடறியா தான்பாற் பணிசெய்த லும்விரும்பி
நாடலிலா நட்பதனை நாடலும் - நீடு
நிதிக்காகச் செய்நட்பு நீணன் மதியே
நதிக்கெதிர்த்து நீந்தலென நாட்டு. 78

பாலார்ந்த நன்னீரப் பால்போ லிருப்பினும்பால்
மேலாங் குணம்போம் விதம்போல - மாலார்ந்த
துன்மதியின் கூட்டுறவு துன்புறுத்தும் வாய்மையினை
நன்மதியே யோர்ந்து நவில். 79

கயவர்க்கு நேர்துன்பங் காதலித்துத் தீர்ப்போர்
துயருறுவ ரென்ற றுணிபாம் - உயரனலிற்
பட்டுவருந் துந்தேளைப் பாலிப்போர் தம்மையது
கொட்டுமென்று நன்மதியே கூறு. 80

செய்யவே வாக்கருமஞ் செய்யலுள்ள மொவ்வாத
தையன் மணமரசன் றானறியாச் - செய்யபணி
வேண்டியழை யாவதுவை வீடுறலொவ் வாக்கேண்மை
ஈண்டிவையா கா நன்மதி யே. 81

அளவிறிரு விற்குயிரோ ராயிழைபே ரூர்க்கு
வளவணிக னின்னுயிராம் வாய்த்த - களமத்தின்
ஆருயிர்நீ ரும்பற் கருந்துதிக்கை சீவனா
வாருமென நன்மதியே யாய். 82

வலியபுலிப் பால்கொணர்ந்து வைத்தாலு மீரல்
உலையவரிந் தங்கை யுதவித் -தலையுயரம்
நற்பொற் றிரள்குவித்து நல்கிடினும் நன்மதியே
அற்பொன்றாள் வேசை யவள். 83

விதிப்பயனன் றாங்காலம் வெங்கா னடைந்தும்
மதிப்புடைய பல்பொருளும் வாய்க்கும் - விதிப்பயன்றான்
தீதுறுங்காற் செம்பொற் றிடருறினு நன்மதியே
ஏது முறலரிதென் றெண். 84

பாங்கர்ப் பகைஞனுறின் பண்டிராய சம்பார்த்தோன்
ஓங்கதிகா ரத்துவரி னூர்க்குடிகள் - தீங்கியற்றும்
வெங்குறளை கூறுவரேல் மிக்கதுயர் நன்மதியே
அங்கணக்கற் சாருமென லாம். 85

பொன்கொதுவை வைத்திடுதல் போர்முகத்து நில்லாது
பின்கொடுத்த லாவணத்திற் பேதமையாய் - மின்கனகம்
வீண்செலவு செய்தல் வெறுக்கையில் லாவறியன்
கேண்மைகொள னன்மதியே கேடு. 86

மாவெந் திறலுள்ளேம் மண்டலத்தி யாமென்றே
யேவ ருடனு மிகல்கொள்ளேல் - தீவிடங்கால்
புற்றரவு நன்மதியே பூவுலகிற் பொன்றும்பல்
சிற்றெறும்பு மொய்க்கச் சிதைந்து. 87

விரிதிசைசூழ் பாராளும் வேந்த னருகிற்
பிரதானி யின்மை பெரியோர் - கருதித்
துதிக்கைபெறு நன்மதியே துன்னுமத வேழம்
துதிக்கையின்றி நிற்றலெனச் சொல். 88

நல்லவமைச் சாரரசு நானிலத்தின் மேன்மையுறும்
நல்லமைச்சில் லாநாடு நன்மதியே - வல்ல
வியந்திரங் கீல்கழல விற்றுகுதல் போல
பயனற் றழியுமெனப் பன். 89

சொல்லியமாற் றத்துயிராந் தூய்மைபெறு வாய்மை
மெல்லியற்குச் சீவன் மிகுமானம் - அல்லலிலாக்
கூட்டுநவார் நன்மதியே கோட்டைக் குயிர்வீரர்
சீட்டிற் கெழுத்தெனவே செப்பு. 90

பெருமானி யூக்கமற்றுப் பேதைமையார் கீழின்
அருகிருந் துய்ய வணுகிச் - சிரமமுறல்
நாழி புனலுக்கு ணன்மதியே கைம்மாவின்
பாழிமெய்ம்ம றைத்தலெனப் பன்னு. 91

அம்முகமன் கூறா வரசனிடந் தொண்டுசெயின்
இம்மையம்மை யில்லையெங்ங னென்னிலோ - கம்மும்
இருணிறையு மில்லி லிருகைத் தடவித்
திரியலென நன்மதியே தேர். 92

மெய்யுறுதி காட்டியதன் மேற்பொய்த் திடமுயலேல்
செய்யவா தாரமாய்ச் சேர்கிளைஞர் - நையவசை
சொல்லேற் சினவாசற் றொண்டியற்றேல் பாதகரூர்
செல்லேனீ நன்மதியே தேர்ந்து. 93

உருவிற் பெரியனினு மொண்ணயங்கை சோரா
நானே பெரியனென்பர் நல்லோர் - பெருமைமிகு
மாகன் மலைநிகரு மத்தகய நன்மதியே
பாகற் கடங்குமிது பார். 94

சேதகமார் மண்ணுழவு செய்யேற்றீ வற்கடத்தில்
ஓது முறவினரில் லுற்றழுங்கேல் - ஏதிலர்க்குன்
உண்மருமம் விள்ளே லுயர்படையை நன்மதியே
திண்மையிலார்க் கீயே றெளிந்து. 95

சாலிவிளை யாவூருந் தார்வேந்தில் லாவூருங்
கோலரசன் வாழாத கோவிலும் - மேலாந்
துணையின்றிச் சென்னெறியுந் தூநன் மதியே
பிணமெரியு மீமமெனப் பேசு. 96

ஓகையொடு நாதன்பா லுள்ளன்பில் லாளோடு
தாக முடன்கணவன் றான்வாழ்தல் - மோகமுடன்
வாய்த்தகற் சாணையினில் வாரியின்றிச் சந்தின்முறி
தேய்த்தலென நன்மதியே செப்பு. 97

ஆருரையுங் கேட்டலா மவ்வாறு கேட்டவற்றைத்
தீரவா ராய்ந்து தெளிந்திடலாம் - நேருற்றுக்
கண்டுமறி யாநிருபன் காசினியி னன்மதியே
துண்டரிக்க வாயனெனச் சொல். 98

பாகிலையுண் ணாவாயும் பண்பார்முன் னூலனைத்தும்
மாகுரவர் பாலோதா வாயுமிசை - மோகமுறத்
தேம்பலின்றிப் பாடாவாய் சீர்மைபெறு நன்மதியே
சாம்ப லிடுமுழையாய்ச் சாற்று. 99

பல்லார்செல் பாதையிற்புற் பற்றாது பற்றிடினும்
புல்லார்ந்தி டாதிறுதல் போலவே - வில்லார்
நுதல்விலைமா தன்புகொள்ளாள் கொண்டாலு நொய்தாய்ச்
சிதையுமென நன்மதியே செப்பு. 100

விலைமா திடுமாணை வேளாள னட்பு
பலபணிசெய் தட்டான் பழக்கம் - மலைவாய்க்
கனவினிற்காண் செல்வம்பல் காலமுறு மென்று
மனநம்ப னன்மதியே வம்பு. 101

நன்மையுறாக் கல்வி நவையி லபிநயத்தின்
தன்மை யிசையிரதந் தான்செறியாப் - புன்மைமிகு
பாடன் மனக்கிளர்ச்சி பற்றாப் பழக்கமவை
தேடலில்சொன் னன்மதியே தீது. 102

அதிக சரச மருவருப்புக் கேது
அதிகவின்பந் துன்பமே யாக்கும் - மிதமின்றி
யோங்கி வளர லொடிதற்காந் தாழ்மையுறல்
ஓங்கலென நன்மதியே யோது. 103

மேலணுகாப் புன்னெஞ்சார் வீணனைப் பஞ்சமனை
ஞாலமதிற் றட்டானை நாவிதனைச் - சீல
முறுமிதராக் கொண்மகிப னோங்குதலில் செங்கோல்
இறுமென்று நன்மதியே யெண். 104

மங்கையர்பால் வாதாடேல் மாண்ட வியன்குணங்கள்
பங்கமுறக் கைவிடேற் பாலருடன் - சங்கையின்றித்
தொந்தமுற நட்டவர்பாற் சொற்பழகே லாளிறையை
நிந்தைசெய்யே னன்மதியே நீ. 105

திருவுறுநற் காலமுறிற் றெங்கினிள நீருண்
மருவுபுனற் போன்று வருமால் - திருவறுங்கால்
வீயுங்கா ணன்மதியே வெங்கண் மதமாவின்
வாயுறுவி ளங்கனியின் மாய்ந்து. 106

மதியொருவன் மேல்வைத்த மங்கையின்மே லன்பாய்
மதியிலியோர் தூர்த்தன் வறிதே - நிதமணுகும்
பூசைப் பகுவாய்ப் புகுங்கிள்ளை பஞ்சரத்திற்
பேசலுண்டோ நன்மதியே பேசு. 107

மைந்தன் றனக்குதித்த வாய்மைசெவி யுற்றவந்நாள்
தந்தை யுறுமகிழ்ச்சி தான்சிறிதாம் - மைந்தனுல
கெங்கும் புகழ்படைத்தா னென்னுமொழி கேட்டுவகை
பொங்குமென நன்மதியே போற்று. 108

ஈனமுறு சாதி யெனினுங்காற் காசுக்கும்
தானுதவா னாம்வீணன் றானெனினும் - மானமிலா
வேசை மகனெனினு மேதினியி னன்மதியே
காசுடையா னேபெரியன் காண். 109

நன்மதி வெண்பா முற்றிற்று