அருணகிரி நாதர்

அருளிய

திருப்புகழ்

... தொடர்ச்சி -2 ...

பாடல் 21 - திருச்செந்தூர்

ராகம் - .........; தாளம் - ...... ;

தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா ...... தனதான

அங்கை மென்குழ லாய்வார் போலே
சந்தி நின்றய லோடே போவா
ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ

அன்று வந்தொரு நாள்நீர் போனீர்
பின்பு கண்டறி யோநா மீதே
அன்று மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா

எங்க ளந்தரம் வேறா ரோர்வார்
பண்டு தந்தது போதா தோமே
லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா

திங்கு நின்றதென் வீடே வா஡ண
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே

மங்கு லின்புறு வானாய் வானு஡
டன்ற ரும்பிய காலாய் நீள்கால்
மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய்

வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்ப ரம்புனை பாராய் பாரேழ்
மண்ட லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய்

உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனே

ஒண்த டம்பொழில் நநடுர் கேர்டுர்
செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே. 21

பாடல் 22 - திருச்செந்தூர்

ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் (7) (கண்ட ஜாதி ரூபகம்)
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2

தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் ...... குணமாள

அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் ...... தணியாத

சிந்தையு மவிழ்ந்தழிந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்

குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான

சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே. 22

பாடல் 23 - திருச்செந்தூர்

ராகம் - கல்யாணி; தாளம் - அங்கதாளம் (9) (கண்ட ஜாதி த்ருபுடை)
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2

தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான

அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை

அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே

எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா

திடுக்கடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ

குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக்

குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ

திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா

திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே. 23

பாடல் 24 - திருச்செந்தூர்

ராகம் - .........; தாளம் - ...... ;

தந்தத் தனனத் தந்தத் தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா

அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக் ...... கணையாலே

அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்
தந்திப் பொழுதிற் ...... பிறையாலே

எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக் கலவித் ...... துயரானாள்

என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற் ...... றிடலாமோ

கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக் ...... கினியோனே

கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே

செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா

செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப் ...... பெருமாளே. 24

பாடல் 25 - திருச்செந்தூர்

ராகம் - புன்னாக வராளி; தாளம் - அங்கதாளம் (24)
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தனதனன தான தானன தனதனன தான தானன
தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான

அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபிநவ விசால பூரண
அம்பொற் கும்பத் ...... தனமோதி

அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய
அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி

இருணிறைய மோதி மாலிகை சருவி யுறவான வேளையி
லிழைகலைய மாத ரார்வழி
யின்புற் றன்புற் ...... றழியாநீள்

இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி னாதி யாகிய
சங்கத் துங்கக் ...... குழையாளர்

தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு
துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும்

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித் ...... தருள்மாயன்

திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர
செந்திற் கந்தப் ...... பெருமாளே. 25

பாடல் 26 - திருச்செந்தூர்

ராகம் - கமாஸ்; தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)

தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத் ...... தனதானா

அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்
டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென்

றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பெற்
றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே

பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த் தண்டைப்
பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும்

பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற் ...... றருளாயோ

தவநெறி குன்றாப் பண்பிற்
றுறவின ருந்தோற் றஞ்சத்
தனிமல ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி

தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச்

சிவவடி வங்காட் டுஞ்சற்
குருபர தென்பாற் சங்கத்
திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும்

தினகர திண்டேர்ச் சண்டப்
பரியிட றுங்கோட் டிஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே. 26

பாடல் 27 - திருச்செந்தூர்

ராகம் - .... ; தாளம் - ....;

தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான

அளக பாரம லைந்துகு லைந்திட
வதனம் வேர்வுது லங்கிந லங்கிட
அவச மோகம் விளைந்துத ளைந்திட ...... அணைமீதே

அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து
அதர பானம ருந்திம டுங்கிற ...... முலைமேல்வீழ்ந்

துளமும் வேறுப டும்படி ஒன்றிடு
மகளிர் தோதக இன்பின்மு யங்குதல்
ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத்

துருகு ஞானப ரம்பர தந்திர
அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி
உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே

இளகி டாவளர் சந்தன குங்கும
களப பூரண கொங்கைந லம்புனை
இரதி வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும்

இனது றாதெதிர் இந்திரன் அண்டரும்
ஹரஹ ராசிவ சங்கர சங்கர
எனமி காவரு நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலா

வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி
படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்
மகர வாரிக டைந்தநெ டும்புயல் ...... மருகோனே

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே. 27

பாடல் 28 - திருச்செந்தூர்

ராகம் - காம்போதி ; தாளம் - கண்டசாபு (2 1/2)

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதானா

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக ...... அகலாதே

அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை ...... யழையாதே

செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர ...... மருள்வாயே

சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே

நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி

நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே

மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு ...... மிளையோனே

மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே. 28

பாடல் 29 - திருச்செந்தூர்

ராகம் - காபி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2

தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன ...... தனதான

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு
துவட்பஞ் சானத டாகம்வி டாமட
அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார்

அருக்கன் போலொளி வீசிய மாமர
கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்
அழுத்தும் பாவியை யாவி யிடேறிட ...... நெறிபாரா

வினைச்சண் டாளனை வீணணை நீணிதி
தனைக்கண் டானவ மானநிர் மூடனை
விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே

விகற்பங் கூறிடு மோகவி காரனை
அறத்தின் பாலொழு காதமு தேவியை
விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ

முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே

முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
திரைக்கங் காநதி தாதகி கூவிள
முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே

தினைச்செங் கானக வேடுவ ரானவர்
திகைத்தந் தோவென வேகணி யாகிய
திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா

சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே. 29

பாடல் 30 - திருச்செந்தூர்

ராகம் - மோகனம்; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த
தனதன தனந்த தந்த ...... தனதான

அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅடி பின்தொ டர்ந்து ...... பிணநாறும்

அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு
மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி

மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர

மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ

தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா

ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரிவலம் வந்த செம்பொன் ...... மயில்வீரா

இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
இறைவகுக கந்த என்று ...... மிளையோனே

எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு
மிமையவரை யஞ்ச லென்ற ...... பெருமாளே. 30

பாடல் 31 - திருச்செந்தூர்

ராகம் - ஹூஸேனி; தாளம் - அங்கதாளம் (9)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தனதனன தனன தந்தத் ...... தனதான

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே

கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே. 31

பாடல் 32 - திருச்செந்தூர்

ராகம் - .... ; தாளம் - .... ;

தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன
தனதன தனந்த தந்தன ...... தனதான

இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
இணைசிலைநெ ரிந்தெ ழுந்திட ...... அணைமீதே

இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திட
இதழமுத ருந்த சிங்கியின் ...... மனமாய

முருகொடுக லந்த சந்தனஅளருபடு குங்கு மங்கமழ்
முலைமுகடு கொண்டெ ழுந்தொறு ...... முருகார

முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு
முகடியுந லம்பி றந்திட ...... அருள்வாயே

எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு
மிதழியொட ணிந்த சங்கரர் ...... களிகூரும்

இமவரைத ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி
யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி ...... பெருவாழ்வே

அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
ளணிமணிச தங்கை கொஞ்சிட ...... மயில்மேலே

அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம்
அலைபொருத செந்தில் தங்கிய ...... பெருமாளே. 32

பாடல் 33 - திருச்செந்தூர்

ராகம் - .... ; தாளம் - ......... ;

தனதன தனன தனத்தத் தாத்தன
தனதன தனன தனத்தத் தாத்தன
தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான

இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு
மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு
மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு ...... மைந்தரோடே

இலைபிள வதனை நடித்துக் கேட்கவு
மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு
மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு ...... மெங்கள்வீடே

வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்
விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்
வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு ...... நிந்தையாலே

வனைமனை புகுதி லடித்துப் போக்கவு
மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
வசைவிட நினது பதத்தைப் போற்றுவ ...... தெந்தநாளோ

குருமணி வயிர மிழித்துக் கோட்டிய
கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய
குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநநருர்

குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி
குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா

முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை
விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய
முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே

முளையிள மதியை யெடுத்துச் சாத்திய
சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர
முறையருள் முருக தவத்தைக் காப்பவர் ...... தம்பிரானே. 33

பாடல் 34 - திருச்செந்தூர்

ராகம் - கீரவாணி; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தனதனன தந்த தானதன
தனதனன தந்த தானதன
தனதனன தந்த தானதன ...... தந்ததான

உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய்

உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடையொ துங்கு பீளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய்

மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய்

வனமழியு மங்கை மாதர்களின்
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமது ...... சிந்தியேனோ

இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல்

இருவிழிது யின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ர சேகரனும்
இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும்

முதல்வசுக மைந்த பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
மகிழ்முலைசு ரந்த பாலமுத ...... முண்டவேளே

முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே. 34

பாடல் 35 - திருச்செந்தூர்

ராகம் - ...... ; தாளம் - ......... ;

தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன ...... தனதான

உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே

உரைக்கும் வீரிகள் கோளர வாமென
வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ

அருக்கன் போலொளி வீசிய மாமுடி
யணைத்துந் தானழ காய்நல மேதர
அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே

அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய்

இருக்குங் காரண மீறிய வேதமும்
இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி

இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா

திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
துதிக்குந் தாளுடைய நாயக னாகிய
செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே

செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே. 35

பாடல் 36 - திருச்செந்தூர்

ராகம் - வலஜி / பந்துவராளி; தாளம் - ஆதி (எடுப்பு - 3/4 இடம்)

தானன தானன தானன தானன
தானன தானன ...... தனதானா

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை ...... அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை ...... யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது ...... மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி ...... லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு ...... பெருமாளே. 36

பாடல் 37 - திருச்செந்தூர்

ராகம் - பிலஹரி; தாளம் - ஆதி - 2 களை

தானா தந்தத் தானா தந்தத்
தானா தந்தத் ...... தனதானா

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் ...... டுயிர்சோர

ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் ...... டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் ...... குலையாதே

கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் ...... கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் ...... தொளையாடீ

சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவா றெந்தைக் ...... கினியோனே

தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் ...... பெருமாளே. 37

பாடல் 38 - திருச்செந்தூர்

ராகம் - மனோலயம் (மத்யமஸ்ருதி); தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்ட நடை (35)
/4/4/4 0 - நடை தக தகிட

தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே

வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ

பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை ...... பெருமாளே. 38

பாடல் 39 - திருச்செந்தூர்

ராகம் - காவடிச்சிந்து; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த
தந்ததன தந்த தந்த ...... தனதான

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும்

கண்டுவளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே

பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும்

பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய்

வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் ...... மிக்முழ்கி

வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா

திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே

சென்றசுரர் அஞ்சவென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே. 39

பாடல் 40 - திருச்செந்தூர்

ராகம் - ஆனந்த பைரவி (மத்யம ஸ்ருதி); தாளம் - அங்கதாளம் (7 1/2) தகிட-1 1/2, தாதக-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான

கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
சொலவொ ணாதம டந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய்

களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்தசு கந்தரு
கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே

அமல மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே

அறியு மாறுபெ றும்படி அன்பினின்
இனிய நாதசி லம்புபு லம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்

குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி

குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்

மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக ஜானன விம்பனொர் அம்புலி
மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாது நெருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே. 40


திருப்புகழ் : 1 2