அகல் விளக்கு

1

     பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். நானும் அவனும் ஒரே வயது உள்ளவர்கள்; ஒரே உயரம் உள்ளவர்கள். அந்த வயதில் எடுத்த நிழற் படத்தைப் பார்த்தால் நான் கொஞ்சம் தசைப்பற்று உள்ளவனாக இருந்தது தெரிகிறது. சந்திரன் அப்படி இல்லை, இளங்கன்று போல் இருந்தான். கொழு கொழு என்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக இல்லாமல், அளவான வளர்ச்சியோடு இருந்தான். அப்படி இருப்பவர்கள் சுறுசுறுப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். சந்திரனைப் பொறுத்தவரையில் அது உண்மையாகவே இருந்தது. அவன் மிகச் சுறுசுறுப்பாக இருந்தான்; என் தாய் என்னைப் பார்த்து அடிக்கடி கூறுவது உண்டு. "நீ சோம்பேறி, இந்தக் குடும்பமே அப்படித்தான். சந்திரனைப் பார். எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறான்! அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழுந்தால் எந்தச் சோம்பேறிக்கும் சுறுசுறுப்பு வந்துவிடுமே. நீ நாள்தோறும் அவனோடு பழகுகிறாய்; உனக்கு ஒன்றும் வரவில்லையே!" என்பார். உடனே நான், "மெய்தான் அம்மா! பழகினால் வராது. நீ சொல்கிறபடி அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழ வேண்டும். அதற்கு வழி இல்லை. ஒன்று, நானாவது அவன் வீட்டுக்குப் போய், அவன் பக்கத்தில் படுத்திருந்து அவன் தூங்கி எழுவதற்கு முன் எழுந்து அவன் முகத்தில் விழிக்க வேண்டும். அல்லது அவனை இங்கே நம் வீட்டுக்கு வரவழைத்து உறங்கச் செய்து, எனக்குமுன் எழாதபடி செய்ய வேண்டும்" என்று சொல்லிச் சிரிப்பேன்.

     என் தாய் சொல்லியபடி உண்மையிலேயே சந்திரனுடைய முகத்தில் தனிக்களை இருந்தது. பால் வடியும முகம் என்பார்களே, அதை சந்திரனிடம் கண்டேன். பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் எடுத்த நிழற் படங்களில் சந்திரன் மிக மிக அழகாகத் தோன்றுவான். என் முகமோ, என் பார்வைக்கே அழகாக இருக்காது. அப்போது சந்திரனுக்கு வயது பதின்மூன்று இருக்கும். அந்த வயதில் அவனுடைய முகம் ஒரு பெண்ணின் முகம்போல் அவ்வளவு அழகாக இருந்தது. அவனுடைய தங்கை கற்பகத்தின் முகத்திற்கும் அவனுடைய முகத்திற்கும் வேறுபாடு தெரியாதபடி அவ்வளவு அழகு அவனுக்கு இருந்தது. இரண்டு ஆண்டு கழித்து மீசை கரிக்கோடு இட்டு வளர்ந்த பிறகுதான், சந்திரனுடைய முகத்தில் மாறுதல் தோன்றியது.

     அவன் நிறம் சிவப்பு, என் நிறமோ கறுப்பு. அந்த நிற வேறுபாட்டால் தான் அவன் அழகாகத் தோன்றினான் என்று அப்போதெல்லாம் எண்ணினேன். நாம் போற்றுகிற சிவப்புக்கும் தூற்றுகிற கறுப்புக்கும் அவ்வளவு வேறுபாடு இருப்பதாக ஐரோப்பியர் எண்ணுவதில்லை என்பதை வளர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன். நம் நாட்டுச் செம்மேனியர் கருமேனியர் ஆகிய இரு திறத்தாரையும் சேர்த்துக் கறுப்பர் என்று ஐரோப்பியர் குறிப்பிடுகிறார்கள். இது அந்த இளம் வயதில் எனக்குத் தெரியாது. ஆகையால், அவன் சிவப்பாகப் பிறந்தது அவனுடைய நல்வினை என்று எண்ணிப் பொறாமைப்பட்டேன். நான் என்ன தீமை செய்து கறுப்பாகப் பிறந்தேனோ என்று கவலையும் பட்டேன்.

     அவனுடைய அழகுக்குக் காரணம் நிறம் மட்டும் அல்ல, அவனுடைய முகத்தில் இருந்த ஒரு பொலிவு பெரிய காரணம். அந்தப் பொலிவு அவனுடைய பெற்றோர்களின் நோயற்ற நல்வாழ்விலிருந்து அவன் பெற்ற செல்வம் எனலாம். பிற்காலத்தில் அவனுடைய பெற்றோர்களைப் பற்றியும் பாட்டனைப் பற்றியும் பிறர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவைகள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன. அவர்கள் ஊர்ப் பெரியதனக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்; காட்டிலும் மேட்டிலும் முரட்டு உழைப்பு உழைக்காமல் நிழலில் இருந்து அளவாக உண்டு அறிவாக வாழ்ந்தவர்கள்; உழுவித்து உண்பவராகையால், மென்மையான உடலுழைப்பு மட்டும் உடையவராய், உடலின் மென்மையும் ஒளியும் கெடாமல் காத்துக் கொண்டவர்கள். பாட்டனார் ஊர் மணியக்காரர். தகப்பனார் ஊர் மன்றத்துத் தலைவர்; நிலபுலத்தை மேற்பார்வை பார்த்தலே தொழிலாகக் கொண்டவர். தாயாரும் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்த அழகான அம்மையார். அதனால் அந்தக் குடும்பத்தில் எல்லோருமே அழகாக விளங்க முடிந்தது.

     என் குடும்பத்தை அப்படிப்பட்டதாகச் சொல்ல முடியாது. என் தாய்வழிப் பாட்டனார் உழுது பாடுபட்ட உழைப்பாளி, என் தந்தைவழிப் பாட்டனார் செல்வ நிலையில் வாழ்ந்தவர் என்றாலும், இளமையில் ஒழுங்காக வாழ்க்கை நடத்தாமல் குடியிலும் காமக் கொள்ளையிலும் ஈடுபட்டு, பொல்லாத நோய்க்கு ஆளானவர். ஆகையால் குடும்பத்தில் இருந்த அழகும் இழக்கப்படுவதற்குக் காரணம் ஆயிற்று. தவிர, குடும்பம் அவ்வப்போது உற்ற இடுக்கண்கள் பல. அதனால் உடலுக்கு ஏற்ற நல்லுணவு கொடுத்து மக்களை வளர்க்கும் வாய்ப்புப் போயிற்று. இளமையிலேயே அரைகுறை அழகுடன் பிறந்தவர்களைத் தக்க உணவின் மூலமாகவாவது திருத்தலாம். அதுவும் இல்லாமற் போகவே, இட்ட வித்திலும் குறை, வளர்த்த நிலத்திலும் குறை என்ற நிலைமை ஆயிற்று.

     இவ்வளவு உண்மைகளையும் உணரக்கூடிய அறிவு எனக்கு அந்த இளமைக்காலத்தில் இல்லை. பதின்மூன்று வயதுள்ள சிறுவனாக இருந்த எனக்கு இவ்வளவு பெரிய உண்மைகளை யாரேனும் சொல்லியிருந்தாலும் விளங்கி இருக்க முடியாது. அதனால், சந்திரனை என் தாய் பாராட்டிய போதும் ஏங்கினேன்; மற்றவர்கள் பாராட்டிய போதும் பொறாமைப்பட்டேன்.

     சந்திரன் சுறுசுறுப்பாக இருந்ததாக என் தாய் அடிக்கடி பாராட்டிக் கூறினார். உண்மையான காரணம் சுறுசுறுப்பு அல்ல; என்னுடன் படித்த வேறு சில மாணவர் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அவர்களும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தார்கள். அம்மாவிடம் அவர்களுக்குப் பழக்கம் உண்டு. அவர்களைப் பற்றி அம்மா பாராட்டிக் கூறியதே இல்லை. ஆகையால் சந்திரனுடைய அழகின் கவர்ச்சியே அம்மாவின் பாராட்டுக்குக் காரணம் என்று சொல்ல வேண்டும். அம்மாவுக்கு என்மேல் இருந்த அன்புக்குக் குறைவில்லை. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல், அழகு குறைவாக இருந்தாலும் சுறுசுறுப்புக் குறைவாக இருந்தாலும் என்னைத்தான் தம் உயிர் போல் கருதிக் காப்பாற்றினார்; அன்புமழை பொழிந்தார். சந்திரனுடைய இளமையழகு எவ்வளவு கவர்ச்சியாக இருந்தது, என் தாயின் மனத்தையும் அந்த அழகு எப்படிக் கவர்ந்தது என்பதைப் பிறகு நன்றாக உணர்ந்தேன்.

     என் தாய் மட்டும் அல்ல, சந்திரனோடு பழகிய எல்லோருமே அப்படி இருந்தார்கள் என்று சொல்லலாம். ஒருநாள் சந்திரனும் நானும் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய போது, வழியில் நெல்லிக்காய் விற்பதைக் கண்டோம். ஓர் ஏழை சாலையோரத்தில் ஒரு கோணிப்பையின் மேல் நெல்லிக்காய்களைக் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தாள். காலணாவுக்கு எட்டுக்காய்கள் என்று விற்றுக்கொண்டிருந்தாள். தோப்பு நெல்லிக்காய்கள் சத்து மிகுந்தது என்று அதற்கு முந்திய வாரம் தான் வகுப்பில் ஆசிரியர் சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது. நெல்லிக்காய் வாங்கலாம் என்றேன். சரி என்று சந்திரனும் வந்தான். என் சட்டைப் பையிலிருந்து ஒரு காலணா எடுத்தேன். சந்திரனும் எடுத்து நீட்டினான். கூடைக்காரி என்னிடம் எட்டுக் காய்களை எடுத்துத் தந்தாள்; சந்திரனிடமும் அவ்வாறே கொடுத்தாள். பிறகு ‘கொசுறு’ என்றேன். என் கையில் ஒரு சின்னக் காயைக் கொடுத்தாள். சந்திரன் கேட்கவில்லை, அவனுடைய முகத்தைப் பார்த்தாள் கூடைக்காரி, உடனே தனியே ஒரு மூலையில் மூடி வைத்திருந்த காய்களிலிருந்து ஒரு நல்ல நெல்லிக்காயை - தேறிய காயைப் - பொறுக்கி எடுத்து "இந்தா! குழந்தை!" என்று சந்திரன் கையில் கொடுத்து, அவனுடைய முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். "உன்னைப் போல் எவ்வளவு அழகாக இருக்கிறது பார் இந்த நெல்லி" என்று பாராட்டும் மொழிந்தாள். "எனக்கும் அப்படி ஒன்று கொடு" என்றேன். "அய்யோ! விலை கட்டாது அப்பா!" என்றாள்.

     திரும்பி வந்தோம். என் வாய் காய்களைத் தின்பதில் ஈடுபட்டபோதிலும், சந்திரனுக்கு ஏற்பட்ட சிறப்பை நோக்கி மனம் வெட்கப்பட்டது. அவனைக் குழந்தை என்று அன்போடு அழைத்த கூடைக்காரி என்னை அப்பா பட்டியலில் சேர்த்து விட்டாள். கேட்டாலும் எனக்குக் கிடைக்கவில்லை. அவனுக்குக் கேளாமலே கிடைத்தது. அதுவும் அருமையான ஒன்று கிடைத்தது. இவற்றை எல்லாம் எண்ணி வெட்கப்பட்டேன்.

     மூன்றாம் வீட்டில் பாக்கியம் என்று ஓர் அம்மா இருந்தார். அவருடைய தம்பி பெட்ரோல் கடையில் கணக்கு எழுதுபவர். அந்த அம்மா இளமையிலேயே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை. அதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். குழந்தையாக இருந்த என்னோடும் என் தங்கையோடும் அன்பாகக் கொஞ்சுவார். ஆட்டங்களில் கலந்து கொள்வார். வீட்டில் ஏதாவது அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தால், எங்கள் அழுகுரல் கேட்டு விரைந்து வருவார். எங்களைத் தூக்கிக்கொண்டு கொஞ்சு மொழி பேசித் தேற்றுவார். வீட்டில் ஏதாவது தின்பண்டம் இருந்தால், மறக்காமல் எடுத்துக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுப்பார். எங்களுக்காகவே தின்பண்டங்கள் செய்து கொண்டு வருவார் என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். பாக்கியம் செல்லம் கொடுத்து என்னை கெடுத்து விட்டதாக அம்மா அடிக்கடி சொல்வது உண்டு.

     நான் செய்யும் இடக்குக்காக அம்மா என்னை அடித்தால், நான் உடனே பாக்கியத்தின் வீட்டுக்கு ஓடிப் போவேனாம். பாக்கியம் என்னை வழியிலேயே பார்த்துத் தூக்கி கொண்டு வந்து, அம்மாவை அடிப்பது போல் பாசாங்கு செய்வாராம். அதனால் நான் சில சமயங்களில் அம்மாவை எதிர்த்துப் பேசி, "இரு இரு, பாக்கியம்மாவிடம் சொல்லப் போகிறேன்" என்று மிரட்டுவேனாம். இப்படியெல்லாம் என் குழந்தைப் பருவத்தில் ஈடுபட்டிருந்த பாக்கியம், நான் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கிய பிறகும் வரும்போதும் போகும் போதும் என்னைக் கண்டு என்னைத் தட்டிக் கொடுத்து அனுப்புவது உண்டு. வளர வளர, நான் போய்ப் பழகுவது குறைந்ததே தவிர. அந்த அம்மாவின் அன்பு குறைந்ததாகத் தெரியவில்லை. "வேலு முன் போல் குழந்தையாகவா இருக்கிறான்? என் மார்மேலும் தோள்மேலும் அழுது தூங்கியது அவனுக்கு நினைவிருக்குமா? எங்கள் வீட்டுத் தயிருக்கும் முறுக்குக்கும் ஆசைப்பட்டு என்னைத் தேடி வந்தது நினைவிருக்குமா? இப்போது பெரியவன் ஆகிவிட்டான். மீசை முளைக்கப் போகிறது. ஆனாலும் நான் மறக்கப்போவதில்லை. வேலுக்குப் பெண்டாட்டி வந்த பிறகு அவளிடமும் இவனுடைய கதையைச் சொல்லப் போகிறேன்" என்று என்னைப் பார்த்துச் சிரிப்பார். நானும் பதிலுக்குச் சிரிப்பது போல் நடித்து வெட்கப்படுவேன். நான் ஏழாம் வகுப்பில் படித்தபோது கொஞ்சம் உயரமாக வளர்ந்து விட்டேன். அந்தக் காலத்தில் பாக்கியம் என்னைப் பார்க்கும்போது புன்சிரிப்புக் கொள்வதோடு நின்றார். தட்டுவதும் பழைய கதையைச் சொல்லிச் சிரிப்பதும் இல்லை. அன்பு கைகளின் அளவில் வரவில்லை; கண்பார்வையளவிலும் புன்சிரிப்பின் அளவிலும் நின்றது. உள்ளத்தில் அன்பு இல்லாமற் போகவில்லை. வீட்டில் எனக்கென்று முறுக்கு முதலிய தின்பண்டங்கள் செய்யாவிட்டாலும், சில நாட்களில் ஏதேனும் சிறப்பான உணவு வகை செய்தால், ஒரு கிண்ணத்தில் வைத்து என் தாயிடம் கொடுத்து. "தம்பி சாப்பிடும்போது மறக்காமல் கொடு அம்மா" என்று சொல்லிவிட்டுப்போவார். அடுத்த ஆண்டில் சந்திரன் எங்கள் தெருவுக்குக் குடிவந்தான். அவன் என்னோடு நெருங்கிப் பழகியதும் அப்போதுதான். சந்திரனும் நானும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடம் போகும் போதும் வரும் போதும், பாக்கியம் எங்களைப் பார்த்துப் புன்முறுவல் கொள்வது உண்டு. வரவர, அந்த அன்பு எங்கள் இருவர் மேலும் பொதுவாக இருந்தது போய், சந்திரன் மேல் மிகுதியாக வளர்ந்தது. சில நாள் மாலையில் எங்கள் இருவரையும் அழைத்து உட்காரவைத்து பேசிக் கொண்டிருப்பார். அப்படிப் பேசும் போதும் சந்திரனைப் பார்த்தே மிகுதியாகப் பேசிக் கொண்டிருப்பார். நானே வலியக் கலந்து கொண்டு பேச வேண்டியிருக்கும். சில நாட்களில் சந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவார். அவனுடைய தலைமயிரை அடிக்கடிக் கோதுவார்; கன்னத்தைத் தட்டுவார்; கிள்ளுவார்; அவனுடைய கையை எடுத்துத் தன்கையில் வைத்து கொள்வார். அவ்வாறு செய்வன எல்லாம் என்னை அடியோடு புறக்கணிப்பன போல இருக்கும். வேறு யாராவது சந்திரனிடம் அவ்வாறு பழகினால் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் என்னைக் குழந்தைப் பருவம் முதல் பாராட்டிப் போற்றியவர் இப்படி என்னைப் புறக்கணித்து வேறொருவனைப் பாராட்டத் தொடங்கியது எனக்கு மிக்க வருத்தம் தந்தது.

     இந்த நிலையில் வேறொருவனாக இருந்தால் அவனை அடியோடு பகைத்துக் கைவிட்டிருப்பேன். ஆனால் சந்திரனை அவ்வாறு பகைக்க முடியவில்லை. அவன் பாக்கியத்தின் பாராட்டுச் சீராட்டுகளுக்கு மகிழ்ந்து என்னைப் புறக்கணிக்கவில்லை. மேன் மேலும் என்னிடம் அன்பு செலுத்தி வந்தான். என்னைப் பிரிந்து ஒரு வேளையும் அவன் பொழுது போக்கியதில்லை. அதனால் அவனுடைய நல்ல பண்பு என் மனத்தை அவனிடம் ஈர்த்து வைத்தது.

     நெல்லிக்காய் விற்றவளும் பாக்கியமும் மற்றப் பெண்களும் இவ்வாறு அன்பு செலுத்தியது பற்றி மனம் வருந்தியது ஒரு பக்கம் இருக்க, ஆண்களிலும் பலர் அவனிடம் அன்பு காட்டியதும் எனக்கு வருத்தமாக இருந்தது. சிற்றுண்டிக் கடையில் பரிமாறுபவன் முதல் பஸ் விடுபவன் வரையில், பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி வரையில் சந்திரனிடமே மிக்க அன்பு செலுத்தியதைக் கண்டேன். வந்த சில நாட்களுக்கெல்லாம் சிற்றுண்டிக் கடைக்காரன் அவனுக்கு நண்பன் போல் ஆகிவிட்டான். விளையாடும் இடத்திற்குச் சென்றாலும் அவனுக்கு ஆதரவு மிகுதியாகக் கிடைத்தது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களோ அவனிடத்தில் தனிநோக்கம் செலுத்தினர்; சந்திரனுடைய குற்றங்களும் அவரவர்களுக்குக் குணங்களாகவே தோன்றின போலும். போதாக் குறைக்கு அவனுடைய கையெழுத்தும் மிக நன்றாக அச்சுப் போல் அழகாக ஒழுங்காக இருந்தது. என் கையெழுத்துத் திருத்தமாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இல்லை. அதனாலும் அவனுக்குத் தேர்வுகளில் மிக்க எண்கள் கிடைத்து வந்தன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, ஆண்டுக்கு ஒருமுறை வந்து வகுப்பறையைச் சுற்றிவிட்டுச் செல்லும் கல்வியதிகாரியும் சந்திரனைத் திரும்பி நோக்கினார். வகுப்பறையிலிருந்து வெளியே சென்ற போது, சந்திரனுடைய தோள் மேல் கை வைத்துத் தட்டிக் கொடுத்து, வகுப்பு ஆசிரியரைப் பார்த்து, "இவன் படிப்பில் எப்படி இருக்கிறான்?" என்றார். "மிக நன்றாகப் படிக்கிறான்" என்று ஆசிரியர் மறுமொழி கூறியதும், "பார்த்தீர்களா? நான் அப்படித்தான் நினைத்தேன். பார்த்தாலேயே தெரிகிறது. குடும்பத்தார் நன்றாகப் படித்தவர்களாக இருக்க வேண்டும்" என்றார். "அப்படிக் காணோம்" என்று ஆசிரியர் சொன்னதைக் காதில் வாங்காமலே, சந்திரனை மறுபடியும் பார்த்துப் புன்முறுவல் பூத்துச் சென்றார்.

     அதற்கு அடுத்த வாரத்தில் வரலாற்று வகுப்பில் ஆசிரியர் திருமலைநாயக்கன் வரலாற்றைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது, அதை விட்டுவிட்டுப் பொதுவாக மனிதப் பண்பைப் பேசத் தொடங்கி எங்கெங்கோ சென்றார். இடையில் வடிவழகையும் நிறத்தையும் பார்த்து ஓர் ஆளை விரும்புவதோ வெறுப்பதோ தவறு என்றார். டாக்டர் ஜான்சன் என்ற ஆங்கிலப் புலவரின் தோற்றம் வெறுக்கத்தக்கது என்றும், ஆனால் அவருடைய உள்ளத்தின் அழகைக் கண்டே பாஸ்வெல் முதலான அறிஞர் பலர் அவரை எந்நேரமும் சூழ்ந்து நட்புக் கொண்டு மகிழ்ந்தார்கள் என்றும் கூறினார். அம்பு நேரானது யாழ் வளைவானது. ஆனாலும் யாழையே எல்லாரும் விரும்புகிறார்கள் என்று சொல்லி ஒரு குறளையும் மேற்கோளாகக் காட்டினார். உடலின் அழகைவிட உள்ளத்தின் அழகே போற்றத்தக்கது என்றும், வடிவ அமைப்பைவிட அறிவின் நுட்பமே பாராட்டத் தக்கது என்றும் முடித்தார். கல்வியதிகாரியின் பாராட்டுக்குக் காரணம் என் நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து ஆசிரியரிடம் குறிப்பிடலாம் என்று எண்ணினேன். ஆனாலும் வாய் திறக்காமல் இருந்தேன். அந்த நினைவோ என்னைவிட்டு நீங்கவில்லை. அதிலேயே சுழன்று கொண்டிருந்தேன். வரலாற்று ஆசிரியரோ மக்கட்பண்பை விட்டுத் திருமலைநாயக்கனின் தொண்டுகளை விளக்கிக் கொண்டிருந்தார். இடையே என் முகத்தைப் பார்த்துப் பாடத்தைக் கவனிக்காமலிருந்ததை உணர்ந்தார் போலும், "வேலய்யன்!" என்றார். நான் அலறி எழுந்தேன். "நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? எங்கே எந்த சினிமாவைப் பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்றார். நான் திகைத்தேன்; விழித்தேன். "ஏன்'பா இப்படிக் காசைச் செலவழித்துப் படிக்க வருகிறீர்கள்? இங்கே வந்து சினிமா நட்சத்திரங்களைப் பற்றிக் கனவு காண்கிறீர்கள்?" என்றார். "இல்லை அய்யா!" என்றேன். "எப்படியாவது கெட்டுத் தொலையுங்கள்" என்று எனக்கு ஒரு பொதுவான சாபம் கொடுத்துவிட்டுச் சந்திரனை நோக்கிக் கேட்டார். அவன் திருமலைநாயக்கன் தொண்டுகளை ஒன்றுவிடாமல் கூறி முடித்து, ஆசிரியரின் பாராட்டுகளைக் குறைவில்லாமல் பெற்றான்.

     வகுப்பை விட்டு வெளியே வந்ததும், "வேலு, உனக்கு என்ன கவலை? ஏன் பாடத்தைக் கவனிக்கவில்லை?" என்று சந்திரன் கேட்டான்; என் தோள்மேல் கை போட்டவாறு அன்போடு கேட்டான். அதனால் நானும் மறைக்காமல் உண்மையைச் சொன்னேன். சந்திரன் ஒரு பெருமூச்சு விட்டு, "அது நடந்து ஒரு வாரம் ஆச்சே! இன்னும் மறக்காமல் மனத்தில் வைத்திருந்து இவ்வளவு கவலைப் படலாமா? அந்தக் கல்வியதிகாரி என்னுடைய சிவப்புத் தோலைக் கண்டு மயங்கித்தான் அவ்வாறு சொல்லிவிட்டுப் போனார். ஆசிரியரும் அதற்கு ஏற்றாற் போல் தாளம் போட்டார். விட்டுத்தள்ளு" என்று சொல்லி என் தோள்களைப் பற்றிக் குலுக்கினான்.

     "இன்றைக்கு ஆசிரியரிடம் சாபமும் கிடைத்தது" என்று வருந்தினேன்.

     "ஆசிரியர்கள் என்ன; முனிவர்களா? முனிவர்களே இப்போது வந்து, சாபம் கொடுத்தால் பலிக்குமா? ஆசிரியரின் சாபத்துக்கு வருந்தலாமா? அம்மா திட்டவில்லையா? ‘நாசமாய்ப் போ, பாழாய்ப்போ’ என்று எத்தனை தாய்மார்கள் வைகிறார்கள். அவை பலிக்குமா? உண்மையாகத் தம் பிள்ளைகள் கெட்டுப்போக வேண்டும் என்றா வைகிறார்கள்? இல்லவே இல்லை, ஆசிரியர்களும் இப்படித்தான்" என்று சொல்லி என்னைத் தேற்றினான்.