அகல் விளக்கு

11

     வேறு பொழுது போக்குஇல்லாமல், மற்றொரு நாளும் ஒத்திகை பார்க்கப் போயிருந்தேன். முந்திய ஒத்திகையை விட அது நன்றாக அமைந்திருந்தது. சந்திரனுடைய பேச்சும் நடிப்பும் எல்லாருடைய உள்ளத்தையும் கவர்ந்தன. பெண் நடிப்பில் அவனுக்கு ஒரு தனித்திறமை இருந்ததை முன்பே கண்டேன். அன்றைய ஒத்திகையின் போது கதைத் தலைவனாக நடிக்கும் மாணவன் வரவில்லை. ஒத்திகை நிறைவேறுவதற்காக யாரேனும் அந்தப் பகுதியைப் படிக்க வேண்டியிருந்தது. சந்திரனையே படிக்கும் படியாகச் சிலர் கேட்டுக்கொண்டார்கள். சந்திரன் இசைந்து படித்தான். அவன் படிக்கவில்லை தலைவனாகவே நடித்தான். அதிலும் அவன் சிறந்து விளங்கினான். சந்திரனுக்கு அந்தப் பகுதியையே கொடுத்திருக்கலாம் என்றும் அதற்கு உரிய மாணவனைவிடச் சந்திரனே நன்றாக நடிக்கிறான் என்றும் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். கதைத் தலைவனாகவும் தலைவியாகவும் அவன் ஒருவனே மாறி மாறி நடிக்க நேர்ந்தபோது எல்லாரும் வியக்கும்படியாக இருவகை நடிப்பிலும் திறமையாக விளங்கினான். என்னையும் அறியாமல் நானும் ஒருமுறை கைதட்டிப் போற்றி ஆரவாரம் செய்தேன்.

     ஒத்திகை முடிந்து வெளியே வந்தபோது ஒரு மாணவன் என்னைத் தொடர்ந்து வந்தான். "கல்லூரியில் சேர்ந்த பிறகு படிப்பைவிட இது போன்ற துறைகளில்தான் அக்கறை மிகுதியாகிறது" என்றான் அவன்.

     "உண்மைதான்" என்றேன் நான். அந்த வகையில் எனக்கும் அவனுக்கும் இருந்த கருத்து ஒற்றுமை, எங்களை நெருங்கி வரச்செய்தது. தனித்தனியே முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்த நாங்கள் பக்கம் பக்கத்தில் சேர்ந்து நடக்கத்தொடங்கினோம்.

     விடுதியின் கிழக்குப்பகுதியில் ஒரு சிமெண்டுத் திண்ணை இருந்தது. அங்கே அவன் உட்கார்ந்தான்; நானும் உட்கார்ந்தேன்.

     "பெற்றோர்கள் எவ்வளவோ துன்பப்பட்டுப் பணம் அனுப்புகிறார்கள். நாம் பொறுப்போடு படிக்க வேண்டாவா?" என்றான்.

     "ஆமாம்" என்றேன்.

     "அதில் எவ்வளவு பணத்தை வீண் செலவு செய்கிறார்கள்? புகைக்குடிக்கு எவ்வளவு பணம் செலவாகிறது தெரியுமா?"

     "அய்யோ! கணக்கே இல்லை. அது மேற்கு நாட்டுக்கு வேண்டுமானால் ஒரு வேளை பொருந்தலாம். அது குளிர்நாடு. அங்கும் பலர் அதை வெறுக்கிறார்களாம். இது வெப்பமானநாடு, இங்கே உடம்புக்குக் கெடுதி அல்லவா?"

     "ஆமாம்"

     "கவர்னர் மாளிகையில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு முறை தேநீர் தரப்பட்டதாம். சிற்றுண்டியும் தேநீரும் முடிந்த பிறகு சிகரெட்டுகளும் வழங்கப்பட்டனவாம்."

     "அப்படியா? உண்மையாகவா?"

     "மேற்கு நாட்டுப் பழக்க வழக்கங்களில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நம்மவர்கள் அப்படிச் சலித்து எடுப்பதே இல்லை. சலித்தாலும் மேலே நிற்கும் கப்பியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்."

     அப்போது என் கை கீழே அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த ஒரு செடியிலிருந்து ஓர் இலையைக் கிள்ளி மூக்கின் அருகே கொண்டுவந்தது. அது நாற்றமாக இருக்கவே, "சே!" என்று கீழே எறிந்து, அது என்ன செடி என்று பார்த்தேன்.

     என் செயலைக் கவனித்த அவன், "அய்யோ! அதையா முகர்ந்தாய்? கெட்டநாற்றமாக இருக்கும். சீமைச்செடி அது. ஜிரேனியம் என்று பெயர். பக்கத்தில் உள்ளது மெகர்த்தா. பூவைப் பறித்து முகர்ந்து பார் அதுவும் அப்படித்தான் இருக்கும்.

     அப்படியே எடுத்து முகர்ந்தேன். அவன் சொன்னது சரியாக இருந்தது.

     அந்த மாணவன் உடனே என்னை நோக்கி, "உலகம் இப்படித்தான்; தெரிந்துகொள். இங்கே இருப்பவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்தப் பூக்களைப் போல் அழகான தோற்றத்தோடு வகை வகையான உடையலங்காரங்களோடு இருப்பார்கள். அவர்களைத் தொலைவில் இருந்து கண்ணால் பார்த்துத்தான் மகிழவேண்டும். இந்தப் பூக்களில் எத்தனை நிறம், எத்தனை அழகு! பாரய்யா. இப்படித்தான் அவர்களும் நெருங்கிப் பழகினால், பொறுக்கமுடியாது. உடனே வெறுப்புக் கொள்வாய்" என்றான்.

     இதைக்கேட்ட எனக்குப் பெருங்காஞ்சி ஏரிக்கரையில் நான் ஆராய்ந்து உணர்ந்த அரளிப்பூவும் துளசிச் செடியும் நினைவுக்கு வந்தன. இவ்வளவு கருத்து ஒற்றுமை உடைய இந்த இளைஞனோடு பழக வேண்டும், நட்புக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்.

     "பெயர் என்ன?" என்று கேட்டேன்.

     "மாலன்"

     "எந்த வகுப்பு"

     "இண்டர்"

     "நான் பார்த்ததில்லையே, நானும் அதே வகுப்பு. பெயர் வேலய்யன்."

     "நீயும் அதே வகுப்பா?"

     "ஆமாம். ஏ பிரிவு. நீ எந்தப் பிரிவு?"

     "சி."

     "அதனால்தான் பழக வாய்ப்பு இல்லை. பார்த்திருப்பதாக நினைவு வருகிறது. ஆனால் தெரிந்துகொள்ளவில்லை. ஊர்?"

     "சோழசிங்கபுரத்துக்குப் பக்கத்தில்........"

     உணவுக்காக விடுதி மணி அடித்தது. உணவுக் கூடத்திற்கு நேரே சென்றோம். சென்றபோது நான் இருந்த அறையைச் சுட்டிக்காட்டிச் சென்றேன். மாலனும் தன் அறை வலப்பக்கக் கோடி என்று முதல் மாடியைச் சுட்டிக்காட்டினான்.

     மறுநாள் காலையில் சிற்றுண்டி முடிந்தபிறகு இருந்த ஓய்வு நேரத்தில் மாலனுடைய அறைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று அந்தப் பக்கமாக நடந்தேன். மாலன் ஏதோ எழுதிக்கொண்டிருந்ததைக் கண்டேன். படிப்பில் மிகுந்த அக்கறை உடையவன் என்று எண்ணினேன். நான் வந்து சன்னல் பக்கம் நின்றதையும் கவனிக்காமல் அவன் எழுதிக்கொண்டிருந்தான். கதவை விரலால் மெல்லத் தட்டினேன். எழுந்து வந்து திறந்து வரவேற்றான். "என்ன பாடம் எழுதுகிறாய்? நான் பார்க்கலாமா?" என்றேன்.

     "இது வேறு. இதை ஏன் நீ பார்க்கவேண்டும்?" என்று அதை மறைக்கத் தொடங்கினான்.

     "நீ நன்மை கருதித்தானே செய்கிறாய்? நானும் பார்த்தால் நல்லது. கற்றுக்கொள்வேன் அல்லவா?"

     "இது பாடம் அல்ல. பாடமாக இருந்தால் காட்டுவேன்."

     "சரி விருப்பம் இல்லாவிட்டால் வேண்டா சும்மா வந்தேன்" என்று உட்கார்ந்தேன்.

     சிறிது நேரத்தில் மாலன் மனம் மாறி, "சரி பார். உனக்கு ஏன் வருத்தம்?" என்று காட்டினான்.

     "எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே" என்று சொல்லிக்கொண்டே அதைப்பார்த்தேன். ஒரு ரிஷியின் பெயரைச் சொல்லி, அவருடைய பெயரைப் பதினேழு முறை வாழ்த்தியிருந்தது. அதன் கீழே இதைப் பார்ப்பவர்கள் இதைப் போல் ஐந்து எழுதித் தமக்குத் தெரிந்த ஐந்து பேருக்கு அனுப்பவேண்டும் என்றும், அவ்வாறு இருபத்துநான்கு மணிநேரத்தில் தபாலில் அனுப்பிவைத்தால் இந்த ரிஷிகுல வட்டத்துக்கு உதவிசெய்த புண்ணியம் உண்டாகும் என்றும், அதனால் எண்ணிய காரியம் கைகூடும் என்றும் குறித்திருந்தது. அவ்வாறு செய்யத் தவறுகிறவர்களை இந்த வட்டத்தை நிறுத்திய பாவம் சேரும் என்றும், அவர்களுக்கு இரண்டு நாட்களில், அல்லது இரண்டு வாரத்தில், அல்லது இரண்டு மாதத்தில் தீமை ஏற்படும் என்றும் தொடர்ந்து குறித்திருந்தது. இந்தக் குறிப்புக்களையும் வாழ்த்துக்களோடு சேர்த்து அனுப்பவேண்டும் என்றும் எழுதியிருந்தது. அதைப் படித்தவுடனே கிழித்துப்போடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் அவ்வாறு செய்யாமல், "இதை உனக்கு அனுப்பியவர் யார்?" என்று கேட்டேன்.

     "யாரோ தெரியாது. பெயர் எழுதத் தேவை இல்லை."

     "கவலைப்படாதே. கிழித்துப்போடு. உனக்கு ஏன் இந்த மூடநம்பிக்கை?"

     "அய்யோ! அப்படிச் சொல்லாதே யார் கண்டார்கள்? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?"

     நான் சிரித்தேன் "இப்படி ரிஷி தன் பெயரால் ஒரு வட்டம் ஏற்படுத்த விரும்புவாரா? அதற்காக இப்படி அவாவும் அச்சமும் ஊட்டி மருட்டுவாரா? அப்படி மிரட்டி நம்மிடம் வேலை வாங்குகிறவர் உத்தமராக இருக்கமுடியுமா? அவர் சொன்னபடி சாபம் பலிக்குமா? வெறும் பித்தலாட்டம்."

     மாலன் உண்மையாகவே பயந்து போனான். "அப்படிப் பழிக்கவே கூடாது. பெரிய தவறு அது. உனக்குத் தெரியாது" என்றான்.

     "எப்படியாவது போ. எனக்கு ஒன்றும் அனுப்பி விடாதே. ஒருவேளை அனுப்பினாலும் நான் கிழித்துத்தான் போடுவேன். அதற்கு மதிப்புக் கொடுக்கவேமாட்டேன்."

     மாலன் என் வாய்மேல் கைவைத்துத் தடுத்து, "பழிக்க வேண்டா" என்று கேட்டுக்கொண்டான்.

     "இதனால் என்ன நன்மை எதிர்பார்க்கிறாய்?"

     "நமக்கு இப்போது வேண்டியது என்ன? தேர்வில் வெற்றி, நல்ல எண்கள், அறிவுவளர்ச்சி; இவைகள்தான்."

     "இவைகளுக்காக இப்படிக் காலத்தை வீணாக்குவதைவிடப் பாடங்களையே படித்து எழுதுவது நல்லதல்லவா!" என்றேன்.

     "உனக்கு தெரியாது. நான் எஸ். எஸ். எல். சி படிக்கும் போது இப்படி இரண்டு வந்தன. நான் தவறாமல் எழுதி அனுப்பினேன். என்னுடன் படித்தவன் ஒருவன் உன்னைப்போல் பழித்து பேசிக் கைவிட்டான். அவன் என்ன ஆனான் தெரியுமா? தேர்வில் வெற்றிபெறவில்லை."

     "படித்திருக்கமாட்டான்; அதனால் வெற்றி பெறவில்லை."

     "சரி. உன் விருப்பம். இந்தப் பேச்சை விட்டுவிடு" என்று வேறு பேச்சுத் தொடங்கினான். "நீ என்ன குறிப்புகள் படிக்கிறாய்? யாருடைய உரை வாங்கினாய்?" என்று கேட்டான்.

     "இன்னும் வாங்கவில்லை."

     "அப்படியானால் பாடப் புத்தகங்களையா படித்துக்கொண்டிருக்கிறாய்?"

     "ஆமாம்."

     "உனக்கு யாரும் சொல்லவில்லையா?"

     "எதைப்பற்றி?"

     "பாடப் புத்தகங்களை ஒரு மூலையில் வைத்துவிட்டு குறிப்புகள் வாங்கி படித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியுமாம்."

     "குறுக்குவழி இது."

     "ஓ ஓ! நாம் என்ன இப்போது நேர் வழியிலா படிக்கிறோம்! நமக்கு ஆசிரியர்கள் நேர் வழியிலா கற்றுக் கொடுக்கிறார்கள்? ஆங்கில நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆங்கில மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் வாயிலாகவே விஞ்ஞானம் வரலாறு முதலான பாடங்களைக் கற்பிக்கிறார்கள். அதை அப்படியே இங்கே கண்மூடிப் பின்பற்றுகிறார்கள். நம் மூளைக்கு நேர்வழி தமிழ். அதைவிட்டு ஆசிரியர்கள் ஆங்கிலத்தில்தானே கற்றுக் கொடுக்கிறார்கள்? இப்படிக் கற்பிக்கும் வழி தவறாக இருக்கும்போது, நாம் கற்கும் வழியும் தவறாகத்தான் இருக்கும். ஆகையால் குறுக்கு வழிப்பயிற்சி தான் வெற்றி பெறும்" என்று அலமாரியைத் திறந்து தன்னிடம் இருந்த குறிப்புக்களைக் காட்டினான்.

     கால் தேர்வில் எனக்கு நிறைய எண்கள் வரவில்லை. பாடுபட்டுத்தான் படித்தேன். ஆயினும் எதிர்பார்த்த பயன் இல்லை. காரணம் அவன் சொன்னதாகவே இருக்கவேண்டும் என்று எண்ணினேன். இனிப் பாடப் புத்தகங்களோடு குறிப்புகளையும் சேர்த்துப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் எதிர்பார்த்த பயனும் பிறகு கண்டேன்.

     ஆனால் இப்படிக் குறுக்குவழி காண்பதில் மாலன் வல்லவனாக விளங்கினான். படிக்கும் முறையில் மட்டும் அல்லாமல், மற்ற வகைகளிலும் அவன் குறுக்கு வழியே நாடினான் என்பதை நாளடைவில் உணர்ந்தேன்.

     ஒரு நாள் மாலையில் நானும் அவனுமாகச் சேர்ந்து கடற்கரைக்குச் சென்றபோது வழியில் சாலையோரமாக ஒருவன், "இஷ்ட சித்தி குளிகை" என்று கூவிக்கொண்டிருந்தான். உடனே மாலன் அவனிடம் பயபக்தியோடு சென்று அதைப் பற்றிய விளக்கம் எல்லாம் கேட்டான். மாதத்தின் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் புறப்படும் நேரத்தில் நன்றாகக் குளித்து விட்டுக் கிழக்குப் பார்த்து நின்றபடியே வலக்கையில் இந்தக் குளிகையைக் கட்டிக்கொண்டால் எண்ணிய காரியம் எல்லாம் கைகூடும் என்று அவன் இன்னும் என்னென்னவோ சேர்த்துச் சொன்னான். அதன் விலை பத்தணா பத்துப் பைசா என்றான். மாலன் அந்த விலை கொடுத்து உடனே வாங்கினான். தடுத்தும் பயன்படாது என்று உணர்ந்து நான் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

     பல வகையில் கருத்து ஒற்றுமை உடைய நண்பன் ஒருவனைக் கண்டுபிடித்ததாக முதலில் மகிழ்ந்தேன். ஆனால் வரவர இவைபோன்ற சில வகைகளில் கருத்து வேறுபாடு மிகுந்து வருவது கண்டேன். அவனோ ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்தக் குறுக்கு வழிகளை நாடியதால், அவனைத் திருத்துவதும் எளிதாக இல்லை. உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது மாணவர்களிடையே இவ்வளவு வேறுபாடுகளைக் கண்டதில்லை. வளர்ந்து கல்லூரிக்கு வந்தபின், பலவகையில் வேறுபாடுகள் இருத்தலை உணர்ந்தேன். சந்திரனைத் திருத்த முடியவில்லை; மாலனைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆகவே முழுதும் கருத்து ஒற்றுமை எதிர்பார்ப்பதில் பயன் இல்லை என்று கற்றுக்கொண்டேன். அதுவே வாழ்க்கையைப் பற்றிய முதல் பாடமாக இருந்தது எனலாம்.

     சந்திரனுக்கும் மாலனுக்கும் ஒரு வகையில் வேறுபாடு கண்டேன். சந்திரன் புறம்பான வழிகளில் ஈடுபட்டுப் படிப்புக்கு உரிய கடமைகளைப் புறக்கணித்தான். மாலனோ படிப்புக்காகவே பலவகைக் குறுக்கு வழிகளை நாடினான். ஆகவே மாலனோடு பழகுவதால் படிப்புக் கெடாது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.