உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 10 சேதுபதியும், சின்னக்காட்டீரனும், கதலியும் பதட்டத்துடன் காத்திருக்க சேதுபதி மட்டும் ‘வந்திருப்பது யார் ஒற்றன்?’ என்று கேட்டான் அல்லவா? அதற்கு வணிகர் “தளவாயின் ஒற்றன் என்று கூறிக் கொண்டான்” என்றவர் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு அந்தப் பையையும் அவனிடம் கொடுத்தார். சேதுபதி உடனே கட்டுகளைப் பிரித்து, பையையும் பிரித்து உள்ளே இருப்பவற்றை வட்டப் பலகையில் கொட்டினான். அப்படி கொட்டப்பட்டவைகளில் ஒன்றைக் கண்டதும் கதலியைத் தவிர மூவருமே அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். அப்படி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது மதுரை மன்னனின் முத்திரை இலச்சினையே. “இது மன்னரின் முத்திரை இலச்சினை அல்லவா!” என்றார் வணிகர் பிரமையுடன். “ஆம்” என்றான் பாளையக்காரனும். “மன்னரின் லிகிதத்தில் பதிக்க வேண்டிய முத்திரை இலச்சினை” என்றார் மறுபடி வணிகர். சேதுபதி அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு, “நாங்கல் இதுபோல் இரண்டு மூன்று வைத்துக் கொள்வோம்” என்றவன் “பொறுங்கள்” என்று அடுத்ததாகச் சிதறிக் கிடந்த நான்கு லிகிதச் சுருள்களையும் சுட்டிக் காட்டினான். “அவையும் மன்னர் பயன்படுத்தும் பிரத்தியேக லிகிதச் சுருள்கள்” என்றான் சின்னக் காட்டீரன். “அது” என்று வேறு நிறத்தில் இருந்த இன்னோர் சுருளை சுட்டிக் காட்டி சேதுபதி கேட்க, “அது தளவாய் பயன்படுத்தும் லிகிதச் சுருள்” என்றார் வணிகர். அதை மட்டும் கையில் எடுத்துக் கொண்ட சேதுபதி அந்தி நேரம் தாண்டி இருட்டி விட்டபடியால், “கதலி, தீபத்தை அருகில் எடுத்து வந்து காட்டு” என்று உத்தரவிட்டான். கதலியும் தீபத்தை எடுத்து பெரிது படுத்தி சேதுபதியின் அருகில் வந்து பிடித்தபடி நிற்க சேதுபதியும் கட்டியிருந்த நூலைப் பிரித்து பின் லிகிதத்தையும் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அவன் படிக்கப் படிக்க அவன் முகத்தில் பரவிய உணர்ச்சிகளைக் கண்ட மற்ற மூவரும் நல்ல செய்தியாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். முழுவதும் படித்துவிட்டு நிமிர்ந்த சேதுபதி முதலில் கதலியைப் பார்த்து புன்னகை செய்தான். பின்பு அதே புன்னகையுடன் மற்ற இருவரையும் பார்த்தான். “என் தொண்டைமான் ருஸ்தம்கான் வீரர்களிடமிருந்து தப்பி அரண்மனையிலேயே ஓரிடத்தில் பதுங்கி இருக்கிறான்” என்று உற்சாகமாகக் கூறவும் செய்தான். “அப்படியா!” என்று மூவருமே ஏக காலத்தில் கேட்டனர். “ஆம்” என்ற சேதுபதி மஞ்சத்தில் அமர்ந்து கொண்டவன் மற்றவர்களையும் அமரும்படி செய்தான். “தொண்டைமான் நாளையோ நாளை மறுநாளோ வெளியே வரலாம்.” “யார் தெரிவித்திருப்பது?” என்று பாளையக்காரன் கேட்டான். “தளவாய் கோவிந்தப்பைய்யா அவர்கள்.” “அப்படியென்றால்...” “அவரும் தம் அறையிலேயே சிறையாக வைக்கப்பட்டிருக்கிறார்” என்ற சேதுபதி பாளையக்காரனைக் கேள்விக் குறியுடன் பார்த்தான். “திருச்சிக்குச் சென்றிருக்கவில்லை?” “இல்லை.” “அப்படியிருந்தும் இப்படியெல்லாம் செய்ய அவர்களால் முடிகிறது.” “ஆம்.” “மன்னரால் இப்படிச் செய்ய முடியவில்லை.” “இல்லை” என்ற சேதுபதி “மன்னரின் நிலைமையை நாம் உணர வேண்டும்” என்றான். “எந்த நிலையை?” “அவருக்கு முன்பே ஒரு முறை சித்தம் கலங்கி விட்டிருந்ததை.” “ஆம்... அறிவேன் அதை.” “பழைய தஞ்சை மன்னர் விஜயரங்க சொக்கநாதர் தம் மகளை உங்கள் மன்னருக்கு மண முடித்துத் தர மறுத்தார்.” “ஆம்.” “உங்கள் மன்னரோ அவளை மிக விரும்பினார்.” “ஆம்.” “அதனால் பெரும் படையுடன் தஞ்சையுடன் போர் செய்தார். தோல்வியுற்ற தஞ்சை மன்னர் தம் மனைவி மகளுடன் தீக்குளித்தார்.” “ஆம்.” “பின்பு உங்கள் மன்னர் தம் தம்பி அழகிரியைத் தஞ்சை அரசராக்கினார். அப்போது பீஜப்பூர் சுல்தான் ஏகோஜி தலைமையில் படையை அனுப்பினான். ஏகோஜி அழகிரியை துரத்தி விட்டு விஜயரங்க மன்னரின் பேரன் செங்கமலதாஸை அரசன் ஆக்கினார். அப்போது பீஜப்பூர் சுல்தான் இறக்கவே கும்பகோணத்தில் படையுடன் தங்கியிருந்த ஏகோஜி சுதந்திரமடைந்து திறமையற்ற செங்கமலதாஸைத் துரத்தி விட்டு தாமே தஞ்சையின் மன்னர் ஆனார்.” “தெரியும்.” “உங்கள் மன்னர் அந்தப் பெண்ணின் நினைவாகவே இருந்து சித்தம் கலங்கிப் போனார். அதைப் பயன்படுத்தி அழகிரி, மன்னரையே - தம் அண்ணனையே சிறையில் அடைத்து மன்னர் ஆனார்.” “தெரிந்த கதையை இப்பொழுது வீணாக ஏன் ஞாபக மூட்டுகிறீர்கள்?” “பொறுங்கள். ருஸ்தம்கான் வெறும் புரவிப் படைத் தலைவனாக மட்டும் இருந்தான்... நான் நினைக்கிறேன், தளவாய்தான் ருஸ்தம்கானைத் தூண்டிவிட்டு உதவி செய்து அவனுடைய உதவியால் அழகிரியை துரத்தி விட்டார் என்று.” “இருக்கலாம்.” “மன்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மறுபடியும் மன்னர் ஆனதும் பழையபடித் தெளிந்த சித்தம் உள்ளவராக இருந்திருந்தால் தன் விருப்பப்படி தன் இயல்புப்படி நாட்டை ஆண்டிருக்க வேண்டும்... ஆனால் நிலைமை அப்படியில்லை. அவர் இன்னமும் பழைய மாதிரியே சித்தம் கலங்கி இருக்க வேண்டும். சிறையில் இருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.” சின்னக் காட்டீரன் யோசிக்கத் தொடங்கினான். “அதைப் பயன்படுத்தியே ருஸ்தம்கான் மன்னரைத் தம் அறையிலேயே சிறைப்படுத்தி விட்டு நாட்டை ஆள ஆரம்பித்து விட்டான். தளவாய் எங்கே தடையாக இருப்பாரோ என்று அவரையும் தம் அறையிலேயே சிறையாக வைத்து விட்டான். மன்னருக்குச் சித்தம் சரியாக இல்லாததால் ருஸ்தம்கான் சொன்னபடிச் செய்கிறார். ஆனால் தளவாய் அப்படியல்ல. அவருக்கு அரண்மனையிலேயே நூறு செவிகள் உண்டு. நூறு பார்வைகள் உண்டு. நூறு கைகள் உண்டு. அதனால் தளவாய் தம் அறையிலிருந்தபடியே செயல்படுகிறார்.” “சரியாகச் சொன்னீர்கள்” என்று பாராட்டவும் செய்தார் வணிகர். பாளையக்காரனும் யோசனையிலிருந்து விடுபட்டு ஒப்புக் கொண்டான். “தொண்டைமான் வந்திருப்பதிலிருந்தே என்னுடைய தொடர்பும் உண்டு என்று உணர்ந்து தொண்டைமான் மூலமாக நான் இங்கே இருக்கிறேன் என்று உணர்ந்து எப்படியோ இதையெல்லாம் அனுப்பியுள்ளார் தளவாய் அவர்கள்.” “என்னிடமும் தொண்டைமானிடமும் சேர்த்தே ‘நான் வணிகர் தெருவில் இருப்பேன்’ என்றீர்கள். என் வரவை நோக்கி வீரனையும் வெளியில் நிறுத்தியிருந்தீர்கள். தொண்டைமான் இந்த மாளிகையை அறிய மாட்டார். தளவாய் மட்டும் தன் ஒற்றனை எப்படிச் சரியாக இங்கே அனுப்பி வைத்தார்?” என்று கேட்ட பாளையக்காரன் சேதுபதியைக் கேள்விக் குறியுடன் நோக்கினான். “இந்த வீதியில் உள்ள வணிகர்களிலேயே அடிக்கடி இராமேஸ்வரம் வருபவர் இவர்தான்” என்று வணிகரைச் சுட்டிக் காட்டிய சேதுபதி, “இவர் இராமனாந்தபுரமும் வந்து என் அரண்மனையில் தங்கி இருக்கிறார். முன்பு இவர் மூலமாக தளவாய்க்கும் ஒரு மூலிகை கொடுத்து அனுப்பியிருக்கிறேன். ஆதலால் நான் இங்கேதான் தங்கியிருப்பேன் என்பதை அறிய அவருக்கு சிரமமே ஏற்பட்டிருக்காது.” “சேதுபதி அவர்களே” என்ற பாளையக்காரன் “தாங்களும் அபாரத் திறமையுள்ளவர்தான்” என்று பாராட்டவும் செய்தான். “இதோ மன்னரின் முத்திரையும் லிகிதங்களும் உள்ளன. இவற்றை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய கட்டாயமும் அவசியமும் காலமும் ஏற்பட்டு விட்டது என்றுதான் அனுப்பியிருக்கிறார்” என்ற சேதுபதி, “ஆம்... பயன்படுத்தத்தான் போகிறேன். இந்த ருஸ்தம்கானை விரட்டத்தான் போகிறேன்” என்று சபதம் செய்தான். “அதற்கு என்னுடைய முழு ஒத்துழைப்பும் உண்டு. இது உறுதி” என்று பாளையக்காரனும் பிரமாணம் செய்தான். “நீங்களும் இதைப் படியுங்கள்” என்று தளவாயின் லிகிதத்தைப் பாளையக்காரனிடம் கொடுத்துப் படிக்கச் செய்து விட்டு வணிகரிடம், “வணிகரே! அந்த ஒற்றனை உடனே அனுப்பி விட்டு வாருங்கள்” என்று வணிகரை அனுப்பினான். சேதுபதி கதலியை நோக்க அவளும் உற்சாகமாக அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள். “மகிழ்ச்சிதானே கதலி?” “என் முகத்தைப் பார்த்தாலே தெரியவில்லையா?” என்று பதிலுக்குக் கேட்டாள் அந்த இளமான். |