அத்தியாயம் - 11

     இருட்டி ஒரு நாழிகை சென்றதும் மீனாட்சி அறைக்குள் நுழைந்து கதவையும் மூடித் தாள் போட்டாள்.

     தொண்டைமான் அமர்ந்தபடியே இருந்தான். அவள் பூட்டை, சாவியுடன் சுவரின் மாடத்தில் வைத்து விட்டு நீர்க் குவளையைக் கீழே வைத்து விட்டு புடவையைத் தளர்த்தி உணவுப் பொட்டலத்தையும் எடுத்துக் கீழே வைத்தாள். அமர்ந்து கொண்டாள் எதிரில்.

     “மீனா” என்ற தொண்டைமான் “இந்தச் சிறைவாசம் இத்தனை எத்தனை நாட்களுக்கு?” என்று வெறுப்புடன் கேட்கவும் செய்தான்.

     “ஏன்?”

     “இதை விட என் வாளுடன் நேரிடையாகவே மோதிப் பார்த்து விடுவது நல்லது என்று தோன்றுகிறது.”

     “தப்ப முடியாது வீரரே!”

     “அதனால் என்ன, என்னால் முடிந்த வரையில் எத்தனை பேரைக் கொல்ல முடியுமோ அத்தனை பேரைக் கொன்று போட்டு வீர மரணம் அடையலாம்.”

     “உங்கள் உயிரை அவ்வளவு எளிதாக மதிக்கவில்லையே தளவாய் அவர்கள்” என்ற மீனாட்சி “கவலைப்படாதீர்கள். காலையில் நீங்கள் இந்த அரண்மனையை விட்டுக் கிளம்பி விடுவீர்கள்” என்றும் சொன்னாள்.

     “உண்மையாகவா?”

     “ஆம்.”

     “எப்படி?”

     “அவசரப்படுகிறீர்களே. முதலில் இந்த உணவை உண்ணுங்கள்... பின்பு பேசலாம்.”

     “இரு மீனா... உடம்பெல்லாம் வியர்வை மிகுந்து என்னவோ போல் இருக்கிறது.”

     “நீராட இங்கே வசதி இல்லையே” என்றாள் விஷமமாக.

     “நீராட இல்லாவிட்டாலும் உடலைச் சுத்தம் செய்து கொள்வேன்.”

     “எப்படி?”

     “ஒரு துண்டு ஆடை இருக்கிறதா?”

     “ஓ...” என்ற மீனா. தன் மரப்பெட்டியில் இருந்து ஒரு கிழிந்த ஆடைத் துண்டை எடுத்துக் கொடுத்தாள்.

     தொண்டைமான் எழுந்து நின்று வாளுடன் கூடிய இடைக் கச்சையைக் கழற்றிக் கீழே போட்டான். பின்பு மேலங்கியைக் கழற்றிப் போட்டான்.

     அவனுடைய பரந்த மார்பையும் திண் தோள்களையும் பார்த்த மீனாட்சி அந்த வீரன் தனக்கே சொந்தமாகி விடக் கூடாதா என்றும் ஏங்கினாள்.

     தொண்டைமான் பின்பு கீழாடையையும் உருவிப் போட்டான். ஒரு துண்டு உடை மட்டுமே அவனுடலில் ஒட்டிக் கொண்டிருந்தது.

     “ச்சீ... வெட்கமாக இல்லையா உங்களுக்கு” என்று பார்த்துக் கொண்டே பொய்யாகக் கோபித்துக் கொண்டாள்.

     “வெட்கப்பட வேண்டியது நீதான்... திரும்பி அமர்ந்து கொள்.”

     “நான் வெட்கப்பட புதுமையாக எதுவும் இல்லை இந்த அறையில்.”

     “ஏன்?”

     “நேற்று இரவு நாம் கணவனும் மனைவியுமாக ஆகி விட்டோம்.”

     “அதனால்?”

     “வெட்கப்பட வேண்டிய தேவையும் இல்லை.”

     “நான் மட்டும் வெட்கப்பட வேண்டுமோ?”

     “சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.”

     தொண்டைமான் அவள் கொடுத்த துண்டு ஆடையில் குவளையில் இருந்து சிறிது நீர் விட்டு நனைத்துக் கொண்டான். முகத்தை, கழுத்தை, பிடரியை, கைகளை, மார்பை துடைத்துக் கொண்டான்.

     துண்டை இன்னும் சற்று நனைத்துக் கொண்டு தொடைகளை கரங்களையும் துடைத்துக் கொண்டான். பின்பு அவளைப் பார்த்தான்.

     “மீனா.”

     “ம்.”

     “முதுகைத் துடைத்து விடேன்.”

     “அதையும் நீங்களே செய்து கொள்ளக் கூடாதா?” என்று கேட்டாள் வேண்டுமென்றே.

     “நான் மட்டும் இருந்தால் துடைத்துக் கொண்டு விடுவேன்.”

     “ஓகோ.”

     “மனைவி அருகில் உள்ள போது அவள் துடைத்து விடுவதுதான் முறை.”

     “ஒரே நாளில் முறை கொண்டாட ஆரம்பித்து விட்டீர்களா?”

     “மணம் என்பதே ஒரு நாள்தானே. அதன் பின் இறுதி வரை உறவுதானே.”

     அவன் எழுந்து துண்டை வாங்கிக் கொண்டு தேய்த்துவ் இட்டாள் அவன் முதுகை.

     பின்பு அவன் கீழாடையை மட்டும் உடுத்திக் கொண்டு “உன் நன்மைக்காகத் தான் இப்படித் துடைத்துக் கொண்டேன்” என்றான்.

     “என்னுடைய நன்மை இதில் என்னவோ.”

     “இதுதான்” என்றவன் அவளை இரு கைகளாலும் தூக்கிக் கொண்டான். அவளின் இதழில் தன் இதழ்களைப் பதித்தவன் கீழே அமர்ந்து கொண்டு அவளையும் தன் தொடைகளில் கிடத்திக் கொண்டான்.

     மீனாட்சி அந்த நேரம் மதிமயங்கி எங்கோ சஞ்சரிக்க ஆரம்பித்தான். தன் மலர்க் கரங்களால் அவனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டான்.

     “மீனா.”

     “ம்.”

     “முதலில் பேச்சு.”

     “ம்.”

     “பின்பு விளையாட்டு.”

     “ம்.”

     “பின்பு உணவு.”

     “பின்பு?”

     “உறக்கம்.”

     “உறங்க ஏது நேரம். உறங்கி விட்டால் நீங்கள் பின்பு தப்ப முடியாது.”

     “அப்படியா... சரி சொல்.”

     “எதை?”

     “நான் தப்ப வேண்டிய முறையை.”

     “உணவு?”

     “அதான் முதலிலேயே சொல்லி விட்டேனே.”

     “என்னவென்று?”

     “பேச்சு விளையாட்டு, உணவு, உறக்கம் என்று.”

     “உறங்கத்தான் இயலாது என்று சொல்லி விட்டேனே?”

     “சரி... மறுபடி விளையாடுவோம்.”

     “என்ன விளையாட்டோ?”

     “கணவன் மனைவி விளையாட்டுதான்.”

     அவள் கண்களை மூடிக் கொள்ள அந்த மூடிய விழிகளில் அவன் தன் வாய் இதழ்களை மாறி மாறிப் பதித்தான்.

     “சொல் மீனா.”

     அவள் கண்களைத் திறந்தாள்.

     “காலையில் ருஸ்தம்கானின் இரு மனைவிகளும், மகளும் மூடு வண்டியில் கிளம்புகிறார்கள்.”

     “எங்கே?”

     “திருச்சிக்கு.”

     “ஏன்?”

     “சில தினங்களில் ருஸ்தம்கானும் திருச்சிக்குப் போகிறான்.”

     “சரி.”

     “அந்த வண்டி அந்தப்புரத்தில் இருக்கிறது.”

     “சரி.”

     “நடுநிசிக்கு மேல் நாம் அங்கே செல்கிறோம்.”

     “சென்று?”

     “வண்டியின் உள்ளே இரு பக்கமும் உயரமான இருக்கைகள் உள்ளன.”

     “தெரியும்.”

     “காலடியில் திறந்து மூடக்கூடிய அமைப்பு உள்ளது. மூடிக்கு அடியில் அகலமான பெட்டி போன்ற அமைப்பு உள்ளது.”

     “அதற்குள் நான் பதுங்கி இருக்க வேண்டும்.”

     “ஆம்.”

     “காலையில் புறப்படும் போது திறந்து பார்க்க மாட்டார்களா?”

     “இரவே அதற்குள் ஆடை ஆபரணங்கள் வைக்கப்பட்டு விடும். ஏனெனில் சூர்ய உதயத்திற்குள் வண்டி புறப்பட்டு விடும்.”

     “ஓ...”

     “அந்த ஆடைகளை விலக்கி விட்டு தாங்கள் உள்ளே பதுங்கிக் கொள்கிறீர்கள்.”

     தொண்டைமான் அவளை மடியில் இருந்து இறக்கி அமரச் செய்தான். யோசித்தான்.

     “என்ன திடீர் யோசிப்பு?”

     “இதுவரை தளவாயின் திட்டங்கள் எல்லாம் சரிதான். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் ஏமாந்து விட்டார்.”

     “எப்படி?”

     “திடீரென்று பேகம்கள் கிளம்ப வேண்டிய அவசியம் என்ன? ஏன் சூர்ய உதயத்திற்கு முன்பே கிளம்ப வேண்டும். இதில் தான் ருஸ்தம்கானின் சூழ்ச்சியே உள்ளது.”

     “சூழ்ச்சியா.”

     “உள்ளே உள்ள நான் பிறர் உதவியால் தப்பிக்க அது ஒரு வழி என்பதால் தான் அப்படிச் செய்கிறான்... நீ சொல்கிறபடிச் செய்தால் நான் அழிவேன். தளவாயின் குட்டும் வெளிப்படும்... தளவாயும் மாட்டிக் கொள்வார்.”

     “எனக்குப் புரியவில்லை.”

     “நானே தப்பித்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு உதவி செய்வாயா. அது போதும்.”

     “என்ன செய்ய வேண்டும்?”

     “பேகம்கள் உள்ள அறைக்கு யாரும் அறியாமல் நான் நுழைய இடம் இருக்கிறதா?”

     “ஏன்?... அங்கே போய் விளையாட வேண்டுமா?” என்று மீனா வேடிக்கையாகக் கேட்டு நகைத்தாள்.

     “நகைக்க இது நேரமல்ல... நாம் இருவருமே தப்பிக்கலாம்.”

     “இருவருமா?”

     “ஆம்... என்னுடன் வர விருப்பம் தானே உனக்கு.”

     “கண்டிப்பாக.”

     “இதோ பார்... வண்டி புறப்பட்டதும் நாம் அந்தப்புர அறையில் நுழைந்து விடுவோம்.”

     “ருஸ்தம்கான் இருப்பானே.”

     “நான் நினைக்கிறபடி அப்போது வாயிலில் வண்டியை மறைக்க அங்கே சென்று விடுவான்.”

     “நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்.”

     “ஆம்... அப்படித்தான். தொலைவில் இருந்து மறைவிடத்திலிருந்து நாம் வண்டி புறப்படுவதைப் பார்க்கலாம் அல்லவா.”

     “ம்.”

     தொண்டைமான் நினைத்தபடியே சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்பு புரவிகள் பூட்டப்பட்டு வண்டியும் யாரும் ஏறாமலேயே புறப்பட்டது.

     அரண்மனையின் முன்புறம் வாயில் அருகே ருஸ்தம்கானும், வீரர்களும் காத்திருந்தனர். வண்டி நிறுத்தப்பட்டு கதவைத் திறக்க உள்ளே யாருமில்லை. பின்பு வீரர்களால் உள்ளே மூடியையும் திறந்து அடிப் பெட்டியும் ஆராயப்பட்டது. யாருமே இல்லை.

     ருஸ்தம்கானின் முகம் சுருங்கி எரிச்சலுடன் வண்டியை உள்ளேயே திரும்பக் கட்டளையிட்டு விட்டு அந்தப்புரம் நோக்கி நடக்க வீரர்களும் கலைந்தனர்.

     அந்தப்புரம் அடைந்த போதுதான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

     ருஸ்தம்கானின் இரு மனைவிகளின் கைகளையும் தன் ஒரு கையால் பிடித்தபடி வலது கை வாளால் அவர்களின் வயிற்றுப் பகுதிகளைத் தடவியபடியே நின்றிருந்த தொண்டைமானை அவன் சந்தித்தான்.

     “ருஸ்தம்கான், என் உயிர் தேவை என்றால் உன் மனைவிகளின் உயிர் பறி போய்விடும். உன் மனைவிகளின் உயிர் வேண்டுமென்றால் என் உயிர் பிழைக்கட்டும். அந்த மூடு வண்டியை இங்கே கொண்டு வரச் செய். உண்மையான வீரன் சொன்ன சொல் தவற மாட்டான். நான் வெளியேறித் தப்பியதும் இவர்களுடன் வண்டியும் திரும்பும். உடனே கட்டளையிடு. உன் வீரர்களுக்குத் தெரிந்தால் உனக்குத் தான் பெருத்த அவமானம்... அவர்கள் அறிவதற்குள் வண்டி கிளம்பட்டும்.”

     ருஸ்தம்கானின் கை உடைவாளில் சென்றது. “தொடாதே... இவர்கள் பிணமாவார்கள். பின்பு உன்னுடனும் நான் மோதும்படி நேரிடும்... உன் வாளை விட என் வாள் வேகம் உள்ளது...” என்று கொடூரமாகப் பார்த்தான் தொண்டைமான்.

     தொண்டைமானின் பின்னால் நின்றிருந்த மீனாட்சி ஓடிச் சென்று அப்போதுதான் வந்து நின்ற வண்டியையும் அங்கே ஓட்டி வரச் செய்தாள்.

     இரண்டு மனைவிகளையும் வண்டியில் தள்ளிவிட்டு தானும் ஏறிக் கொண்ட தொண்டைமான், “ருஸ்தம்கான்... வண்டி கிளம்பக் கட்டளையிடு. பின்பு வாயில் பக்கம் போய் அரண்மனை வாயிலையும் திறக்கும்படிக் கட்டளையிடு...” என்று அவன் மீனாட்சியைப் பார்க்க அவளும் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

     “சீக்கிரம் ருஸ்தம்கான்... பொழுது விடியப் போகிறது. வீரர்கள் கண்டு கொள்ளுமுன் கட்டளையிடு.”

     “வண்டி கிளம்பட்டும்.”

     ருஸ்தம்கானின் தாடி துடித்து ரத்தம் கொதித்தாலும் வேறு வழியின்றிக் கட்டளையிட்டான். பின்பு அவனே வாயில் பக்கம் ஓடிச் சென்று அதன் கதவுகளையும் திறந்து விடும்படிக் கட்டளையிட்டான்.