அத்தியாயம் - 12

     இராமனாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மூன்று எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் இராமநாதபுரத்தின் மறவர் படை முகாமிட்டிருந்தது. பத்தாயிரம் புரவி வீரர்களும் பத்தாயிரம் காலாட் படையினரும் அடங்கிய படை அது.

     பெரிய கூடாரம் ஒன்றில் சேதுபதியும் ரெகுநாத தொண்டைமானும் மற்றும் உப தளபதிகளும் கதலியும் கூடியிருந்தனர். அவர்களுக்கு நடுவே ஒரு பலகை இருந்தது. அதில் கரித் துண்டால் புள்ளிகளும் கோடுகளும் அம்புக் குறிகளும் போட்டு முடித்த சேதுபதி மற்றவர்களை ஏறிட்டுப் பார்த்தான்.

     “இதோ பாருங்கள், இதுதான் திருச்சி. இந்தத் திருச்சிக் கோட்டையில் இப்போது ருஸ்தம்கான் தன்னுடைய ஒன்பதாயிரம் புரவி வீரர்களுடன் மற்றும் மதுரை படையுடன் இருக்கிறான். மதுரையின் அரண்மனையில் ருஸ்தம்கானின் மற்ற ஆயிரம் புரவி வீரர்கள் காவல் வீரர்களாக இருக்கின்றனர். மற்றும் மதுரை வீரர்களும் இருக்கின்றனர்” என்றவன் மற்றவர்கள் அதைக் கவனிக்கிறார்களா என்றும் நிமிர்ந்து பார்த்துக் கொண்டான்.

     “திருச்சியின் கிழக்கே பத்து கல் தொலைவில் ஏகோஜியின் படை முகாமிட்டுள்ளது. திருச்சியின் வடக்கே காவிரியைத் தாண்டி செஞ்சி மன்னன் படை அரசு மலையின் தலைமையில் முகாமிட்டுள்ளது. திருச்சியின் மேற்கே மைசூர்ப் படை தளபதி குமரய்யாவின் தலைமையில் முகாமிட்டுள்ளது... புரிகிறதா நிலைமை?” என்று சேதுபதி கேட்க உபதலைவர்கள் தலையாட்டினர். தொண்டைமான், “புரிகிறது சேதுபதி அவர்களே” என்று கூறினான்.

     “ஏகோஜியை நானே படையுடன் வரும்படி லிகிதம் அனுப்பி வரச் செய்தேன். மைசூர் படையும் செஞ்சிப்படையும் மன்னரின் முத்திரை பதித்த லிகிதங்களால் வருகின்றன. வந்து கொண்டேயிருக்கின்றன... இன்னும் இரண்டொரு தினங்களில் மேற்கேயும் வடக்கேயும் முகாமிட்டு விடும்” என்று நிறுத்திய சேதுபதி, தொண்டைமானைப் பார்த்து, “எப்படி என் திட்டம்” என்று கேட்கவும் செய்தான்.

     “ருஸ்தம்கான் திருச்சியையும், மதுரையையும் விட்டு விரட்டப்பட்டாலும் திருச்சிப் பகுதி மற்ற மூவராலும் கூறு போடப் படுவது மட்டும் உறுதி” என்றான் தொண்டைமான்.

     “அதைப் பின்னால் நான் கவனித்துக் கொள்கிறேன்... முதலில் நம்முடைய குறி ருஸ்தம்கான். அவனை விரட்ட வேண்டும். அல்லது அழிக்க வேண்டும்... இதோ பாருங்கள், ஏகோஜி படையுடன் வருகிறான் என்பதால்தான் ருஸ்தம்கான் தன் படையுடன் கூட திருச்சிக்குப் போய் இருக்கிறான். ஆனால் மற்ற இரு படைகளும் வருவதை இனிமேல்தான் அறியப் போகிறான். தஞ்சைப் படை மட்டும் என்றால் ருஸ்தம்கான் ஏகோஜியுடன் போரிடலாம். அல்லது சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். மூன்று படைகளும் சூளும் போது அவன் குழம்புவான். இறுதியாக தன் படை ஒன்பதாயிரத்துடனோ அல்லது மதுரைப் படையில் ஆயிரம் இரண்டாயிரம் சேர்த்துக் கொண்டோ திருச்சி எப்படி வேண்டுமானாலும் போகிறது என்று மதுரைக்குத் திரும்பி விடுவான்.”

     “மதுரைக்குத் திரும்பாமல் இருந்தால்?” என்று தொண்டைமான் வினவினான்.

     “நானே திரும்ப வைப்பேன்” என்று உறுதியாகச் சொல்லிய சேதுபதி மேலே விவரித்தான்.

     “அப்படித் திரும்பினால் முதல் அடி இங்கே விழ வேண்டும்” என்ற சேதுபதி திருச்சிக்குத் தெற்கே இருபது கல் தொலைவில் உள்ள இடத்தைச் சுட்டிக் காட்டினான்.

     “இங்கே அவனுடைய இறுதிப் பகுதியாகிய கால் பகுதியை மட்டும் தாக்கி அழிக்க வேண்டும்” என்ற சேதுபதி உப தலைவனாகிய சங்கிலித் தேவனைப் பார்த்து “இது உன் வேலை” என்றும் கூறினான்.

     “அப்படியே” என்ற சங்கிலித் தேவன் “ருஸ்தம்கான் மற்ற முக்கால் படையுடன் திருப்பித் தாக்கினால்...?” என்னும் கேள்வியை எழுப்பினான்.

     “தாக்க மாட்டான்” என்ற சேதுபதி, “அவனே பீதியுடன் திரும்பி ஓடுகிறான். எப்படித் தாக்குவான்?” என்று கேட்டுவிட்டு, “அப்படியே திருப்பித் தாக்கினாலும், உன் படை அழியும். ஆனால் அவனுடைய கால் பகுதி படையின் அழிவு திண்ணமல்லவா?” என்றும் கேட்டான்.

     “ஆம்” என்றான் சங்கிலித் தேவன்.

     “அப்படித் திருப்பித் தாக்காவிட்டால் கால் பகுதியை அழித்த நீ மறுபடி அவனைப் பின் தொடர வேண்டும்” என்று கூறிய சேதுபதி மறுபடி பலகையைப் பார்த்து, “அடுத்த இறுதி அடி இங்கே” என்று திண்டுக்கல் பகுதியைக் காட்டினான்.

     தொண்டைமானைப் பார்த்த சேதுபதி, “இதுதான் உன் இடம்” என்றான். பின்பு அவனே தொடர்ந்து, “இங்கே சின்னக் காட்டீரன் தான் சேகரித்த படையுடன் உன்னுடன் சேர்ந்து கொள்வான்” என்றும் கூறினான்.

     “ருஸ்தம்கானால் மறுபடி அந்த இடத்தை விட்டு மதுரை திரும்ப முடியாது” என்று உறுதி அளித்தான் தொண்டைமான்.

     “முடிந்தால் சிறைப்பிடி, இல்லையேல் கொன்று விடு.”

     “கண்டிப்பாக.”

     “உனக்கு உதவியாக சங்கிலித் தேவனும் பின்னாலேயே துரத்தி வந்தாலும் வரலாம்.”

     “அப்படி வரின் மிக்க நல்லதாகவும் போயிற்று.”

     “ருஸ்தம்கானை அழித்த பின்பு உடனே மதுரை பெருங்குன்றனார் வணிகருக்குச் செய்தி அனுப்புங்கள். அவர் அரண்மனையின் உள்ளே உள்ள - தளவாய்க்குச் செய்தி அனுப்புவார். பின்பு நீங்கள் எல்லோரும் மதுரை அரண்மனைக்குப் போய் விட வேண்டும்.”

     “சரி.”

     “ருஸ்தம்கான் மூன்று பாளையக்காரர்களுக்கும் செய்தியும் கட்டளையும் அனுப்பியிருப்பான் - படை திரட்டித் திருச்சிக்கு வரும்படி. ...ஆனால் சின்னக் காட்டீரன் தன் படையுடன் திண்டுக்கல்லில் தங்கி விடுவான். மற்ற இரண்டு பாளையக்காரர்களும் தங்கள் படையுடன் என்னிடம் சேர்ந்து விடுவார்கள்... நான் திருச்சியைக் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் மதுரையைக் கவனிக்கப் போகிறீர்கள்” என்ற சேதுபதி மற்றவர்களைப் பார்த்து “நீங்கள் யாரேனும் வேறு திட்டம் உதித்தால் தெரிவிக்கலாம்” என்றும் கேட்டுக் கொண்டான்.

     “இல்லை” என்றனர் மற்ற மூவரும் ஓரே சமயத்தில்.

     “தொண்டைமான்... நீ ஐயாயிரம் புரவி வீரர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள். மீதியை சங்கிலித் தேவன் ஏற்கட்டும். எனக்கு நூறு புரவி வீரர்களும் காலாட் படைகளும் போதும்” என்ற சேதுபதி இன்னோர் உப தலைவனாகிய வடுகனாத தேவனைப் பார்த்து, “நீ காலாட் படையுடன் புதுக்கோட்டை வழியாக மெல்ல வா... நானும் கதலியும் நூறு புரவி வீரர்களுடன் முன்னே செல்கிறோம்” என்று கட்டளையிட்டான். “எல்லோரும் அவரவர் கூடாரத்திற்குச் செல்லலாம். காலையில் புறப்பட ஆயத்தமாக இருங்கள்” என்றும் கட்டளையிட்டான்.

     உப தலைவர்களும் தொண்டைமானும் வெளியேற, சேதுபதியும் கதலியும் மட்டும் இருந்தனர்.

     அதுவரை பேசாமல் இருந்த கதலி, “சேதுபதி அவர்களே, கிராம வாழ்க்கை நிம்மதியானது என்று இப்போது உணருகின்றேன். நகரத்தில் அதுவும் அரசு சம்பந்தப்பட்ட மனிதர்கள் சூழ்ச்சி, சதித்திட்டம், படை, போர் என்றே காலம் கழிக்கிறீர்கள்” என்று வெறுத்துக் கூறினான்.

     “ஆம். இதுதான் அரச வாழ்க்கை. இதில் நிம்மதியும் சுகமும் குறைவு. அச்சமும் ஆபத்துகளும் அதிகம். அதனால்தான் மன்னர்களும் வீரர்களும் கிடைக்கும் ஓய்வு நேரத்தை வீணாக்காமல் சுக போகங்களில் திளைக்கிறார்கள்” என்ற சேதுபதி, “நீ என் அருகில் இருப்பதால்தான் போர்க்களமும் எனக்கு சுகபோகமாக இருக்கிறது” என்று அவளை அணைத்துக் கொண்டான்.

     தன் கூடாரத்திற்குள் நுழைந்த தொண்டைமான் தனக்காகக் காத்திருந்த மீனாட்சியை அலாக்காகத் தூக்கிக் கொண்டவன், “உணவு உண்டாயா?” என்று கேட்டான்.

     “இல்லை.”

     “சரி. நாம் சேர்ந்தே உணவு உண்ணலாம்” என்றவன் அவளைத் தன் மார்புடன் அணைத்து, இதழோடு இதழ் பதித்து விட்டு, உணவு இருந்த தட்டுகள் முன்பு அவளை இறக்கி அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டு ஒரு கவளம் உணவு எடுத்து அவளின் வாயில் ஊட்டியும் விட்டான்.

     அப்போது அங்கே நுழைந்த சேதுபதி அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, ‘என் தளபதி என்னைப் போலவே இருக்கிறான்’ என்று எண்ணி உடனே அங்கிருந்து வெளியேறவும் செய்தான்.