அத்தியாயம் - 14

     சேதுபதியுடன் சேர்ந்து திருச்சியை முறியடித்து அதைப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று உள்நோக்கமாக இருந்த ஏகோஜிக்கு இராமனாதபுரம் சேதுபதி ‘மைசூர் மன்னனின் படை வந்திருக்கிறது’ என்றதால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்கு முன் இன்னோர் அதிர்ச்சியையும் அளித்தானல்லவா?

     “அப்படியா...” என்று அதிர்ச்சியுடன் கேட்கவும் செய்தான் ஏகோஜி.

     “ஆம்.”

     “சாம்பாஜியின் படையா?”

     “ஆம்.”

     “செஞ்சிப் படையா?”

     “அதே தான்.”

     “சமயபுரத்திலா முகாமிட்டுள்ளது?”

     “அங்கேயேதான்.”

     ஏகோஜியின் முகம் வாடி விட்டதை உணர்ந்து கொண்டான் சேதுபதி.

     “ஏன் செஞ்சிப்படையும் வந்திருக்கிறது?” என்று வினவவும் செய்தான் சோர்ந்து போய்.

     “மைசூர்ப் படையை முறியடிக்க” என்ற சேதுபதி “மைசூரின் வளர்ச்சியைக் கண்டு சாம்பாஜி மன்னருக்கு ஏக வெறுப்பு. அதற்குப் பழி தீர்த்துக் கொள்ளவே அரசுமலை தலைமையில் படை வந்துள்ளது” என்று விளக்கினான்.

     “இதெல்லாம் இப்போதுதான் வந்த உங்களுக்கு எப்படித் தெரியும்?”

     “நான் முன்பே என் ஒற்றர்களை அனுப்பி அங்கங்கே என்ன நடக்கின்றன என்பதை அறிந்து வரும்படிச் செய்திருந்தேன்.”

     “நானும் என் ஒற்றர்களை அனுப்பி, தெரிந்து வரச் செய்கிறேன்.”

     “கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.”

     “நான் படை எடுத்து வந்தது வீண் தான் போலும்” என்றான் ஏகோஜி சலிப்புடன்.

     “அதெப்படிச் சொல்ல முடியும் ஏகோஜி அவர்களே! மைசூரான் திருச்சியைத் தாக்குவான். மைசூரானை உங்கள் உறவினர் சாம்பாஜியின் படை தாக்கும். ருஸ்தம்கானும் முறியடிக்கப்படுவான். அதன் பின்னர் நாமிருவரும் தாக்க வேண்டியதுதானே.”

     “அப்படியும் ஒரு யோசனை இருக்கிறதா?” என்று கேட்டான் ஏகோஜி.

     “அப்படித்தான் இனி நாம் செய்ய வேண்டும்... அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். தஞ்சைக்கு அருகிலேயே உங்கள் நாட்டிலேயே இருக்கிறீர்கள். உணவுப் பிரச்சினை ஏற்படாது. ஒரு திங்கள் இரு திங்கள் வரை காத்திருக்கலாமே.”

     “சரி... பார்ப்போம்.”

     “நீங்கள் அவசரப்பட்டு, திருச்சியை முற்றுகையிட்டு விடப் போகிறீர்களே என்று தான் எச்சரிக்க வந்தேன். யார் முதலில் முற்றுகையிட்டாலும் அவர்களுக்கு ஆபத்துதான்.”

     “ஆம்” என்று ஒப்புக் கொண்ட ஏகோஜி சேதுபதியை உணவை அங்கேயே முடித்துக் கொண்டு போகலாம் என்று அழைப்பும் விடுத்தான்.

     சேதுபதி நடுப்பகல் வரை ஏகோஜியிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு விருந்து உண்டபின் விடைபெற்றுக் கொண்டு ஏகோஜியும் தன் முக்கிய வீரர்களுடன் கொஞ்ச தூரம் வந்து வழி அனுப்ப சேதுபதி தன் புரவி மீது ஏறி மாலையில் தான் முகாமிட்டிருந்த கூடாரத்தையும் அடைந்தான்.

     உள்ளே கதலியுடன் பேசிக் கொண்டிருந்த இன்னொருவனைக் கண்டதும் வியப்பே அடைந்தான் சேதுபதி.

     அவனைக் கண்டதும் கதலி எழுந்திருக்கவே அவளுடன் பேசிக் கொண்டிருந்த செங்கமலதாஸும் எழுந்து கொண்டான்.

     “வணக்கம் சேதுபதி அவர்களே!” என்ற செங்கமலதாஸ் பணிந்தே நிமிர்ந்தான்.

     செங்கமலதாஸின் முகத்தில் இன்னும் ராஜ களை இருந்ததைக் கண்டு கொண்ட சேதுபதி அவனுடைய பரிதாப நிலையையும் எண்ணிப் பார்த்து வருத்தமே அடைந்தான்.

     “முன்னாள் தஞ்சை மன்னரின் திடீர் விஜயம் என்ன காரணமோ?” என்று கேட்ட சேதுபதி தன் ஆஸனத்தில் அமர்ந்து கொண்டவன் மற்ற இருவரையும் அமரச் செய்தான்.

     மதுரை சொக்கநாதரின் ஆசைக்கு ஏற்பட்ட தடையால் பலியான முன்னாள் தஞ்சை மன்னராஜ விஜயராகவ நாயக்கரின் பேரன் தான் இந்த செங்கமலதாஸ்.

     மன்னர் பலியான போது சிறுவனாக இருந்த செங்கமலதாஸ் ஒரு வணிகரால் நாகைப்பட்டிணம் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டான். வணிகர் வீட்டில் வளர்ந்ததால் ராஜரீக விஷயங்களிலும் வீர தீர பயிற்சிகளிலும் ராஜ தந்திர முறைகளிலும் பயிற்சி அளிக்கப்படாத சாதாரண வாலிபனாக வளர்ந்தான்.

     மதுரை சொக்க நாதரின் பிரதிநிதியாக தஞ்சையை ஆண்ட அழகிரி அமைச்சர் வெங்கண்ணாவை மதிக்காததால், வெங்கண்ணா நாகையில் செங்கமலதாஸ் வளர்ந்து வருவதை அறிந்து அங்கே சென்று அவனையும் வணிகரையும் அழைத்துச் சென்று பீஜப்பூர் சுல்தானிடம் அடைக்கலம் புகுந்தான்.

     சுல்தானும் செங்கமலதாஸைத் தனக்குக் கட்டுப்பட்டவனாக, கப்பம் செலுத்த்பவனாக தஞ்சை அரியணையில் அமர்த்த விரும்பி ஷாஜிக்குப் பின் தன் படைத் தலைவனாக இருந்த ஏகோஜியின் தலைமையில் பெரும் படையை அனுப்பி வைத்தான்.

     ஏகோஜியும் அழகிரியைத் துரத்தி விட்டு செங்கமலதாஸை அரியணையேற்றினான். ஆனால் உடனே திரும்பிச் செல்லாமல் கும்பகோணத்திலேயே தன் படையுடன் தங்கி இருந்தான் ஏகோஜி.

     செங்கமலதாஸும் பெரும் அறிவாளியும் சூழ்ச்சிகள் நிறைந்தவனுமான வெங்கண்ணாவை அமைச்சர் ஆக்காமல் தனக்கு உதவி செய்து காப்பாற்றிய வணிகரையே அமைச்சர் ஆக்கினான்.

     இதற்கு, அவனுடைய ராஜ தந்திர அனுபவமின்மையே காரணம்.

     இதனால் வெகுண்ட வெங்கண்ணா ஏகோஜியைத் தூண்டி செங்கமலதாஸைத் துரத்தி விட்டு அவனையே மன்னன் ஆகும்படிச் சொன்னான்.

     அதே சமயம் சுல்தானும் இறக்கவே சுதந்திரமாகி விட்ட ஏகோஜியும் செங்கமலதாஸை எளிதாக விரட்டி விட்டு, தானே தஞ்சையின் அரியணையும் ஏறி விட்டான்.

     “ருஸ்தம்கான் அவர்களின் தூதுவனாகத் தங்களிடம் வந்துள்ளேன்.”

     “ஓ... அவனிடம் அடைக்கலம் புகுந்தாகி விட்டதா?” என்று ஏளனமாகவே கேட்டான் சேதுபதி.

     “முன்பு தங்களிடம் தஞ்சம் புகுந்தேன். தாங்கள் உதவி செய்ய மறுத்து விட்டீர்கள்” என்று துன்பத்துடனே கூறினான் செங்கமலதாஸ்.

     “எந்த சேதுபதிக்கும் நாடு பிடிக்கும் ஆசை இதுவரை ஏற்பட்டதில்லை நண்பனே. இது வரையிலும் அப்படித்தான். ஆனால் எங்கள் நாட்டில் படை எடுத்தால் எங்களைக் காத்துக் கொண்டு விரட்டி விடுவோம். தவிர ஏகோஜி தஞ்சையில் ஆழமாகக் காலை ஊன்றி விட்டான்.”

     “அதனால் தான் ருஸ்தம்கானிடம் தஞ்சம் புகுந்தேன்.”

     “தப்பில்லை...” என்ற சேதுபதி, “தூதின் விஷயம் என்னவோ?” என்று கேட்டான்.

     “தங்களின் உதவியை ருஸ்தம்கான் எதிர்பார்க்கிறார். தங்களுக்கும் லிகிதம் அனுப்பியுள்ளாராம்” என்ற செங்கமலதாஸ், “தாங்கள் படையுடன் இங்கே வரப் போவதை அறிந்தே என்னை இங்கே அனுப்பினார்” என்றும் விளக்கினான்.

     “நானும் மதுரை மன்னருக்கு உதவி செய்யவே இங்கே வந்துள்ளேன் என்று அழுத்தமாகவே கூறிய சேதுபதி, “ஆனால் சூழ்நிலையையும் ஆராய்கிறேன்” என்றான்.

     “ஏகோஜி படையுடன் வந்திருப்பதைத் தானே சொல்கிறீர்கள். தாங்களும் சேர்ந்தால் அவனை எளிதில் முறியடித்து விடலாம் என்பது ருஸ்தம்கானின் விருப்பம்.”

     “நான் ஏகோஜியைச் சொல்ல வில்லை.”

     “பின்னே?”

     “மைசூர்ப் படையும் மேற்குப் பக்கமாக முகாமிட்டுள்ளது திருச்சியைத் தாக்க.”

     “அப்படியா?” என்ற செங்கமலதாஸ். “இதை நான் அறியவில்லையே” என்றான் வியப்புடன்.

     “நீங்கள் அறியாததில் வியப்பே இல்லை” என்று குத்தலாகவே சொல்லிய சேதுபதி, “ருஸ்தம்கானும் அறிந்து கொள்ளாதது தான் வியப்பு” என்றவன், “ருஸ்தம்கானின் பார்வையும் கவனமும் ஒற்று அறிதலும் இந்தப் பக்கங்களில் தான் இருக்கின்றனவே தவிர மேற்குப் பக்கம் இல்லை” என்றும் இடக்காகச் சொன்னான்.

     செங்கமலதாஸின் உற்சாகம் சிதைந்து போயிற்று. “மைசூர்ப் படையும் வந்து விட்டதா?” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

     “ஆம், மைசூர்ப் படைதான். பெரும் படை. எதை சமாளிக்கப் போகிறீர்கள்?” என்றும் வினவினான் சேதுபதி.

     செங்கமலதாஸ் பேசாமலே இருந்தான்.

     “முன்னாள் தஞ்சை மன்னரே” என்று விளித்த சேதுபதி, “நான் கூறுவதை தயவு செய்து கேட்டுக் கொள்ளுங்கள். ருஸ்தம்கானிடம் விஷயத்தை தெரிவித்து விட்டு பின்பு நீங்கள் மைசூர்ப் படையின் தளபதி குமரய்யாவிடம் போய் தஞ்சம் புகுந்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது” என்று அறிவுரை பகர்ந்தான்.

     “ஏன்?”

     “மைசூரின் படை பெரும் படை. தவிர திருச்சியின் பலவீனங்கள் அறிந்த ஒருவன் குமரய்யாவுக்குத் தேவை.”

     “என்னை அடுத்துக் கெடுக்கச் சொல்கிறீர்களா?”

     “அடுத்துக் கெடுக்கும்படி சொல்லவில்லை. ருஸ்தம்கானே இரு படைக்கும் அஞ்சி மதுரையை நோக்கி ஓடப் போகிறான். அந்த நேரம் பார்த்து நீங்கள் குமரய்யாவின் பக்கம் சேர்ந்து உடனே திருச்சியைத் தாக்கும்படிச் சொல்லுங்கள்.”

     “ருஸ்தம்கான் திருச்சியை விட்டு அகலாதிருந்தால்?”

     “நீங்களும் மைசூரானிடம் தஞ்சம் புக வேண்டியதில்லை” என்ற சேதுபதி, “நான் இப்போது என் படையுடன் சேர்ந்து சிக்கிக் கொள்ளத் தயாராக இல்லை” என்றும், “நிலைமையை அனுசரித்து பின்பு முடிவு எடுப்பதாகவும் ருஸ்தம்கானிடம் தெரிவித்து விடுங்கள்” என்றும் தன் முடிவை வெளியிட்டான்.