அத்தியாயம் - 15

     ருஸ்தம்கானிடமிருந்து தூதுவனாக, வந்திருந்த முன்னாள் தஞ்சையின் மன்னனான செங்கமலதாஸிடம் நிலைமையை விளக்கிய சேதுபதி தன் நிலையையும் விளக்கி தன் முடிவையும் வெளியிட்டானல்லவா?

     அதைக் கேட்ட செங்கமலதாஸ் பேசாமல் இருந்தான்.

     “ஏகோஜிக்கும் மைசூர் படை வந்திருப்பது தெரிந்திருக்கிறது. ஆதலால் ஏகோஜி திருச்சியை இப்போது தாக்குவதாக இல்லையாம். திரும்பிப் போய் விடலாமா என்று யோசிப்பதாகக் கூடக் கேள்வி... ஒருக்கால் ருஸ்தம்கான் மதுரைக்கு ஓடி மைசூர்ப் படை திருச்சியை முற்றுகையிட்டால் ஏகோஜியும் மைசூர்ப் படையைத் திடீரெனத் தாக்கலாம். அப்போது மைசூர்ப் படை ஏகோஜியை முறியடித்து உங்களைத் தஞ்சை மன்னர் ஆக்கி விடலாம்... ஆதலால் ருஸ்தம்கான் ஓடினால் நீங்கள் மைசூர்ப் படைத் தலைவனிடம் தஞ்சம் புகுந்து திருச்சியை முற்றுகையிடும்படிக் கூறலாம். இதுதான் உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கூட.”

     “அப்போது தாங்கள் என்ன செய்வதாகத் திட்டம்?” என்று வினவினான் செங்கமலதாஸ்.

     “அப்போது நானும் ஏகோஜியின் படையுடன் மோதுகிறேன்.”

     “இது உறுதிதானே?”

     “முடிவான விஷயம்தான்.”

     “சரி, நான் வருகிறேன் சேதுபதி அவர்களே” என்ற செங்கமலதாஸ் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான்.

     அவன் போன பின்பு தான் கதலியை நன்றாகப் பார்த்தான் சேதுபதி.

     “கதலி... உன் உடல் நலன் எப்படி?”

     “நேற்று இரவுடன் சரி. காலை முதல் பழைய கதலிதான். உற்சாகமாக இருக்கிறேன்” என்ற கதலி அவனிடம் புன்னகையும் காட்டினாள்.

     “உன் காமாஸ்திரங்களை அப்புறமாக என்னிடம் பிரயோகிக்கலாம்... நான் முதலில் சில லிகிதங்களை எழுதி முடிக்க வேண்டும்” என்ற சேதுபதி ஒரு சிறிய பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு அதில் இருந்து இறகையும் லிகிதங்களையும் எடுத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தான்.

     கதலி ஒரு சுளுந்தையையும் அருகில் கொண்டு வைத்தாள்.

     நான்கு லிகிதங்களை எழுதி முடித்து அவற்றில் மதுரை மன்னரின் முத்திரையையும் பதித்த பின் சுருட்டிக் கட்டினான்.

     இரண்டு லிகிதங்களைத் தவிர மற்ற யாவற்றையும் பெட்டியில் போட்டு மூடி, கதலியிடம் தர, கதலி அதை ஒரு மூலையில் பள்ளத்தில் வைத்து மேலே மண்ணையும் போட்டு மூடினாள்.

     “கதலி.”

     “ம்.”

     “இங்கே வந்து உட்கார்.”

     உட்கார்ந்தாள்.

     “என்ன?”

     “நான் இப்பொழுது என் செயல் திட்டங்களை உன்னிடம் கூறப் போகிறேன்.”

     “ஏன் என்னிடம் கூற வேண்டும்?”

     “மந்திராலோசனை நடத்த வேண்டியது என் கடமை.”

     “மந்திரி பிரதானி படைத்தலைவர்களுடன் அல்லவா மந்திராலோசனை நடத்த வேண்டும்?”

     “நீதான் இப்போது என் மந்திரி பிரதானி, உபதளபதி எல்லாம்.”

     “வீணாக என்னையும் சோர்ந்து போகும்படிச் செய்யப் போகிறீர்கள்.”

     “மந்திராலோசனை நடத்தினால்தான் பிறரின் யோசனையும் கிடைக்கும்.”

     “என் யோசனை கிடைக்காது சேதுபதி அவர்களே.”

     “உன் யோசனை கிடைக்கா விட்டாலும் நான் சொல்லி வரும் போது என் செயல்பாட்டில் தவறு இருப்பினும் எனக்குப் புரியும்.”

     “விடமாட்டீர்கள்?”

     “ஊஹும்.”

     “சொல்லுங்கள்.”

     “இப்பொழுது மைசூர்ப் படையும் செஞ்சிப் படையும் வந்திருப்பது யாரால் தெரியுமா?”

     “தங்களால்தான்.”

     “இல்லை. மன்னரின் லிகிதங்களால்தான்.”

     “யோசனை தங்களுடையதுதானே.”

     “மைசூர் மன்னன் தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் படை எடுத்து அழித்து விடுவதாகவும் மன்னரின் லிகிதம் மைசூர்ப் படைத் தலைவனுக்குப் போய்ச் சேர்ந்தது.”

     “ம்.”

     “அவனே எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருக்கும் பொழுது அந்த லிகிதமும் போயிற்றென்றால் என்ன நடக்கும்?”

     “அதையே காரணமாகக் கொண்டு அவன் படை எடுத்து வருவான்.”

     “அப்படித்தான் வந்திருக்கிறான் குமரய்யாவும்.”

     “சரி.”

     “குமரய்யா படை எடுத்து வருவதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டு மன்னரின் லிகிதம் செஞ்சி மன்னனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. செஞ்சி மன்னன் சாம்பாஜியும் தெற்கே படையுடன் வருவதற்கு அதை ஒரு காரணமாகக் கொண்டு விட்டான். அப்படி உதவி செய்தால் திருச்சியின் ஒரு பகுதியைத் தான் அடையலாம் என்பது அவன் நோக்கம்.”

     “ம்.”

     “ஆதலால் அவனும் அரசுமலை தலைமையில் படையை அனுப்பி விட்டான்.”

     “வந்த உடனேயே திருச்சி கோட்டையில் மன்னர் இருப்பதாக எண்ணி ‘உதவிக்கு வந்துவிட்டேன்’ என்பதாக லிகிதம் அனுப்பி இருக்க மாட்டானா அரசுமலை. அதைக் கண்டால் ருஸ்தம்கான் குழம்ப மாட்டானா?”

     “கண்டிப்பாகக் குழம்புவான். தவிர செங்கமலதாஸ் மைசூர் படையைப் பற்றி போய்க் கூறுவான். இன்னும் குழம்புவான். தவிர நாளை மாலை என்னிடமிருந்து இரு லிகிதங்கள் ருஸ்தம்கானை அடையும்.”

     “யார் எழுதியதாகவோ?”

     “ஒன்று மன்னரே எழுதியதாக.”

     “எப்படி?”

     “ருஸ்தம்கானை புரவிப் படைத் தலைவன் பதவியில் இருந்து விலக்கி விட்டதாகவும் உடனே மதுரைக்கு வந்து சேர வேண்டும் என்று கட்டளையிடுவதாகவும்.”

     “இன்னொன்று?”

     “தளவாய் கோவிந்தப்பையா எழுதுவதாக.”

     “எப்படி?”

     “மதுரையில் என் படை சூழப் போவதாக.”

     “சரி.”

     “ருஸ்தம்கான் இன்னும் குழம்புவான். இங்கே மூன்று பக்கமும் இடி காத்திருக்கிறது... அங்கே மன்னர் தன் சிறையிலிருந்து எப்படித் தப்பினார் என்று... என் படை வேறு தொண்டைமான் தலைமையில் மதுரைக்கு வந்து சேரப் போகிறது என்று அச்சம். எனவே திருச்சியையும் மதுரை வீரர்களையும் எப்படியேனும் போகிறது என்று விட்டு விட்டு மதுரையை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்வோம் என்றும் மன்னரை மறுபடி சிறை வைக்க வேண்டுமென்றும் முடிவுக்கு வந்து தன் புரவிப் படையுடன் அல்லது மதுரைப் படையையும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டு புறப்பட்டு விடுவான்.”

     “பலே” என்ற கதலி, “எல்லாம் சரிதான்...” என்றவள், “பிறகு!” என்றும் கேட்டாள்.

     “இதுவரை சரிதானே?”

     “சரிதான்.”

     “இரு” என்ற சேதுபதி இரு லிகிதங்களை எடுத்துக் கொண்டு வெளியேறினான். சற்று நேரம் சென்று திரும்பி வந்து தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

     “இரு லிகிதங்களையும் இரண்டு பேருக்கும் அனுப்பி விட்டேன்.”

     “யார் யாருக்கு?”

     “மைசூர் படைத் தலைவனுக்கும், அரசு மலைக்கும்.”

     “என்னவென்று?”

     “நீயே படையுடன் வந்துவிட்டாயா, உன்னை நிர்மூலமாக்கி விடுகிறேன் என்று மன்னர் எழுதியதாக மைசூரானுக்கு.”

     “சரி.”

     “தவிர, திருச்சிக்கு இன்னும் சில தினங்களில் என் பெரும் படை வந்து சேரப் போவதாகவும் அங்கே வந்ததிகளைப் பரப்பி விடச் செய்திருக்கிறேன்.”

     “அதனால்?”

     “நாளை மறுநாள் காலை ருஸ்தம்கான் மதுரையிலிருந்து புறப்பட்டு விட செங்கமலதாஸ் மைசூரானை அடைந்து விட திருச்சிக் கோட்டையில் மன்னரும், தளவாயும், படைத்தலைவனும் இல்லாத நிலையப் புரிந்து கொண்டு மைசூரான் படையுடன் திருச்சியை முற்றுகையிடுவான்.”

     “அதனால் என்ன நன்மை?”

     “அரசுமலைக்கு இப்போது லிகிதம் அனுப்பினேன் அல்லவா... மைசூர்ப்படை முற்றுகையிட்டால் உடனே வந்து காக்கும்படியும், அப்படித் தாக்கினால் தானும் தாக்குவதாகவும் மன்னர் எழுதியிருப்பதாக.”

     “மைசூர்ப் படையையும் செஞ்சிப் படையையும் மோத விடுகிறீர்கள்.”

     “ஆமாம்.”

     “அதன் விளைவு?”

     “ஒன்று முறியடிக்கப்படும். ஒன்று வலிமை இழந்து விடும்.”

     “பலே.”

     “இன்று இரவோ... நாளை காலையோ நம் படையும் மதுரையின் பாளையக்காரர்களின் படையும் இங்கே வந்து சேரும்.”

     “சரி.”

     “இரு பாளையக்காரர்களையும் இரு படைத் தலைவர்களாக ஆக்கி அனுப்பி வைத்திருப்பதாகவும், அவர்களின் தலைமையில் எதிர்களைச் சமாளித்து திருச்சியைக் காப்பாற்றும்படி எழுதிய மன்னரின் லிகிதங்களுடன் அவர்களை திருச்சி கோட்டைக்குள் அனுப்பி விடுவேன்.”

     “நம் படையுமா?”

     “ஆம். நம் படையும் அவர்களுடன் போகும்.”

     “தாங்கள்?”

     “நாம் இங்கே இருந்தபடியே எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கப் போகிறோம்... நிலைமையை அனுசரித்து என் செயல்பாடு மேற்கொண்டு அமையும்.”

     “தஞ்சை மன்னர் ஏகோஜி என்ன செய்வார்?”

     “ஏகோஜிக்கு அவ்வளவு நெஞ்சுரம் கிடையாது. தவிர மன்னனாக இருந்து பழகி விட்டவன். மிகத் துணிச்சலாக எதிலும் இறங்க மாட்டான்” என்ற சேதுபதி, “நம் மந்திராலோசனை முடிந்தது” என்றான்.

     “இனி?”

     “நம் காதல் மந்திராலோசனை ஆரம்பம்.”

     “இதிலும் கூட உங்கள் திட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது.”

     “உன் திட்டப்படி இன்று செய்.”

     “பொல்லாதவர் நீங்கள்.”

     சேதுபதி உணவைக் கொண்டு வரச் சொல்லி இருவரும் உண்டனர்.

     பின்பு திரை மறைத்த பாதி கூடாரத்திற்குள் பஞ்சனையோ கட்டிலோ இல்லாமல் தரையின் மீது விரித்திருந்த விரிப்பிலேயே படுத்துக் கொண்டனர்.

     “கதலி.”

     “ம்.”

     “உன் திட்டம் என்னவோ?”

     “போங்கள், குறும்பு.”

     அவனுடைய கை மெல்ல அவளின் முதுகுப் பக்கம் சென்றது.