அத்தியாயம் - 16

     நடு இரவுக்கு மேல் வந்து சேர்ந்த சேதுபதியின் மறவர் படை ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து அவற்றில் படுத்து உறங்கியும் போனார்கள்.

     விடிந்த விட்ட போதுதான் மதுரை நாட்டின் இரண்டு பாளையக்காரர்களும் தங்கள் படையுடன் அங்கே வந்து சேர்ந்தனர். அந்த வீரர்களும் கூடாரங்கள் அமைத்து வந்த களைப்பு நீங்க உடனே படுத்துறங்கிப் போயினர்.

     இரண்டு பாளையக்காரர்களும் கூட சேதுபதியை எழுப்ப விரும்பாமல் ஒரு கூடாரத்தில் படுத்துறங்கினர்.

     சூரியன் உதயமாகி ஒரு நாழிகை சென்ற பின்னரே கண் விழித்த சேதுபதி காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நீராடி விட்டு கதலியுடன் உணவு உண்ட பின்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தபடி வெகு நேரம் யோசனையில் இருந்தான்.

     கதலி மட்டும் ஒரு புரவியின் மீது ஏறி சற்று தூரம் இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறு போய்விட்டுத் திரும்பினாள்.

     நடுப்பகல் சுமாருக்குத்தான் வீரர்கள் யாவரும் கண் விழித்து தங்கள் காரியங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.

     இரு பாளையக்காரர்களும் அப்போது தான் கண் விழித்து பின்பு நீராடினர். உணவும் வரவே உண்டனர். பின்னர் தான் சேதுபதியை சந்தித்தனர்.

     “வணக்கம் சேதுபதி அவர்களே” என்று கை குவித்தபடி வர “வாருங்கள் வாருங்கள்” என்று வரவேற்ற சேதுபதி இரு இருக்கைகளில் அவர்களை அமரச் செய்தான்.

     அவர்களுக்கு இருக்கும் சூழ்நிலைகளை விளக்கினான் சேதுபதி. பின் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளையும் விவரித்தான். தன் திட்டங்களையும் கூறினான்.

     இரண்டு பேரும் வியப்புடனும் பரபரப்புடனும் கேட்டுக் கொண்டும் இடையிடையே கேள்விகளை தொடுத்துக் கொண்டும் இருந்தனர்.

     விளக்கி விவரித்து முடித்ததும் சேதுபதி அவர்களிடம் கேட்டான்.

     “எவ்வளவு வீரர்களுடன் வந்திருக்கிறீர்கள்?”

     “எங்களுடையது மொத்தம் ஆறாயிரம் இருக்கும்” என்றான் ஒரு பாளையக்காரன்.

     “சின்னக் காட்டீரன் எவ்வளவு வீரர்களுடன் திண்டுக்கல்லில் தங்கியுள்ளார்?”

     “நான்காயிரம் இருக்கும்.”

     “நான்காயிரம் இருக்குமா?”

     “கிட்டத்தட்ட இருக்கும்.”

     அவர்களுடன் பேசிய பின் சேதுபதி குறிப்பிட்ட சில வீரர்களை வரவழைத்தான். அவர்கள் தளவாயின் நம்பிக்கையான மதுரை வீரர்கள்.

     அவர்களை இரு பிரிவுகளாகப் பிரித்தான். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவனை நியமித்தான். ருஸ்தம்கானுக்காக எழுதி வைத்திருந்த இரு லிகிதங்களையும் எடுத்து மன்னர் எழுதியதாக இருந்த லிகிதத்தை ஒரு பிரிவு தலைவனிடம் கொடுத்தான்.

     அந்த தலைவனிடமும் வீரர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கினான்.

     “நான் தான் இந்த லிகிதத்தைக் கொடுத்ததாகவோ இங்கிருந்து வந்ததாகவோ மறந்தும் சொல்லி விடக் கூடாது. மன்னர் கொடுத்ததாகவே சொல்ல வேண்டும். தளவாயின் முயற்சியால் மன்னர் விடுவிக்கப் பட்டதாகவும் ருஸ்தம்கானின் வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர் என்றும் கூற வேண்டும். ...நீங்கள் நடிப்பதில்தான் முக்கியமான காரியம் நடக்க வேண்டும். ருஸ்தம்கான் எப்படி அதட்டிக் கேட்டாலும் உங்களையே வெட்டிப் போடச் சொன்னாலும் வேறு எதையும் சொல்லவே கூடாது. நேற்று பிற்பகலில் புறப்பட்டதாகச் சொல்ல வேண்டும்.”

     “கண்டிப்பாக அப்படியே நடந்து கொள்கிறோம் சேதுபதி அவர்களே.”

     “நீங்கள் புறப்படலாம்.”

     “உத்திரவு.”

     அவர்கள் புறப்பட்டுப் போனதும் இன்னோர் பிரிவு தலைவனிடம் தளவாய் எழுதப்பட்டதாக இருந்த லிகிதத்தைக் கொடுத்தான்.

     “இதை தளவாய் அவர்கள் உங்களிடம் கொடுத்து ருஸ்தம்கானிடம் கொடுக்கும்படிச் சொன்னதாகச் சொல்ல வேண்டும்... இதை உங்களிடம் தளவாய் கொடுக்கும் போது நீங்கள் அரண்மனையில் இல்லை. நீங்கள் வெளியில் உள்ள தளவாயின் ஆட்கள். தளவாய் உங்களைத் தேடி வந்து இதைக் கொடுத்து உடனே புறப்படும்படிக் கட்டளையிட்டதாகச் சொல்ல வேண்டும். மற்றபடி அரண்மனையில் நடந்த விஷயங்கள் உங்களுக்குத் தெரியாத மாதிரி நடந்து கொள்ள வேண்டும்... புரிகிறதா?”

     “புரிகிறது சேதுபதி அவர்களே. தளவாய் இதை எங்களிடம் கொடுத்து உடனே புறப்பட்டு விடச் செய்ததால் அரண்மனை விஷயம் எங்களுக்குத் தெரியாது.”

     “பலே... அப்படியேதான். இன்னும் ஒரு நாழிகை சென்று நீங்கள் புறப்படலாம்.”

     “உத்திரவு.”

     சேதுபதி தன் வீரர்களில் சிலரை அழைத்தான்.

     “நீங்கள் பொழுது புலருமுன்பே புறப்பட்டு நான் முன்பு குறிப்பிட்ட இடத்திற்குப் போய்க் காத்திருங்கள். ருஸ்தம்கான் படையுடன் புறப்பட்டு மதுரைப் பாதையில் போனால் உடனே என்னிடம் வந்து தெரிவிக்க வேண்டும்.”

     “உத்திரவு.”

     அவர்கள் சென்றதும் இரு பாளையக்காரர்களையும் தங்கள் கூடாரத்திற்குப் போகலாம் என்றும் விடை கொடுத்தான்.

     திருச்சி கோட்டைக்குள் இரவு ருஸ்தம்கான் துடித்தான், சினந்தான். முதலில் லிகிதம் கொண்டு வந்தவர்களைச் சிறையில் தள்ளி இருந்தான். ஏற்கெனவே குழம்பிப் போயிருந்த அவன் மேலும் குழம்பினான். முஸபர்கானையும் இன்னும் இரு உப தலைவர்களையும் கலந்து ஆலோசனை நடத்தினான்.

     எல்லோருக்குமே ஒன்று மட்டும் விளங்கியது. சேதுபதி ஏதோ சதி செய்து விட்டான் என்பது மட்டும்.

     மன்னரின் லிகிதத்தில் தளவாய் பற்றியோ சேதுபதியின் படை பற்றிய செய்திகளோ இல்லை.

     தளவாயின் லிகிதத்தில் மன்னரைப் பற்றிய செய்திகள் இல்லை.

     இங்கேயும் நிலைமை சரியில்லை. ஒரு பக்கம் மைசூர் படை. இன்னோர் பக்கம் செஞ்சிப் படை. மன்னருக்கு ஆதரவாக மூன்றாவதாகத் தஞ்சையின் படை.

     எல்லாவற்றையும் விட மதுரையின் நிலை என்ன என்பது தான் அவனின் கவலை.

     இறுதியாக மதுரையையாவது எப்படியும் பிடிப்பது. அதையாவது தக்க வைத்துக் கொள்வது. மன்னரை மறுபடியும் சிறை வைப்பது. அல்லது மன்னர், இளவரசன் இருவரையுமே கொன்று விட்டு தானே மதுரை மன்னன் என்று அறிவித்து விடுவது.

     இந்த முடிவுக்கு வந்து விட்டான் ருஸ்தம்கான்.

     முஸபர்கானையும் அவனுடன் நூறு வீரர்களை மட்டும் திருச்சியிலேயே விட்டுச் செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

     மதுரை வீரர்களிடம் தான் திரும்பி வரும் வரையில் முஸபர்கானை அவர்களின் படைத் தலைவனாக அறிவித்தான்.

     ஷெர்கன் லோடி இரண்டாயிரம் புரவி வீரர்களை அனுப்பியிருந்தான். தன்னுடைய பத்தாயிரம் புரவி வீரர்களுடன் ஷெர்கானின் இரண்டாயிரம் புரவி வீரர்களை மட்டும் அழைத்துக் கொண்டு மறுநாள் காலை மதுரைக்குப் புறப்படுவதாகவும் முடிவு செய்து விட்டான்.

     மறுநாள் காலையில் பொழுது புலர்ந்த பின்பு கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டு ருஸ்தம்கானின் படை புறப்பட்டது. ருஸ்தம்கான் தன் கரும்புரவியில் நடுவில் சென்றான்.

     படை வெளியேறியதும் கதவுகள் சாத்தப்பட்டன. சற்று நேரம் சென்று இடைக்கதவு திறக்கப்பட்டு செங்கமலதாஸும் வெளியேறினான்.

     ருஸ்தம்கானின் படை புறப்பட்டுச் சென்றதும் அதைக் கண்ட சேதுபதியின் வீரர்கள் சேதுபதியிடம் கூற விரைந்தனர்.

     மைசூர் படைத் தளபதி குமரய்யாவின் ஒற்றர்களும் அதைக் கண்டு தளபதியிடம் தெரிவிக்க விரைந்தனர்.

     செய்தி அறிந்த சேதுபதி ஒரு லிகிதம் எழுதி மன்னரின் முத்திரையைப் பதித்து இரு பாளையக்காரர்களையும் அழைத்து ஒருவனிடம் அளித்தான்.

     “மன்னர் ருஸ்தம்கானை படைத்தலைவன் பதவியிலிருந்து நீக்கி விட்டு உங்கள் இருவரையுமே படைத் தலைவர்களாக்கி இருப்பதாகவும் அவரிடமிருந்து மறு லிகிதம் கிடைக்கும் வரை நீங்கள் இருவருமே திருச்சியைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளைச் செய்யும்படி அதிகாரம் வழங்கியிருப்பதாகவும் எழுதி இருக்கிறேன். உங்களைக் கண்டதும் உள்ளே விட்டு விடுவார்கள். ருஸ்தம்கான் தனக்குப் பதிலாக வேறு யாரையேனும் தலைவனாக்கி விட்டுச் சென்றிருப்பான். நீங்கள் மதுரை வீரர்களிடம் முதலில் இந்த லிகிதத்தைக் காட்டுங்கள், பின்பு கோட்டையில் உள்ள ருஸ்தம்கானின் வீரர்களை அழித்து விடுங்கள். அடிக்கடி என்னிடம் தொடர்பு கொண்டிருங்கள். நான் இங்கே இருந்தபடியே கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறேன்.”

     பாளையக்காரர்கள் தங்கள் புரவி வீரர்களுடனும் சேதுபதியின் காலாட் படையுடனும் புறப்பட்டனர்.

     கூடாரத்திற்குத் திரும்பிய சேதுபதி கதலியின் தோள்களை தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டான் மகிழ்ச்சியுடன்.

     “கதலி! என் திட்டத்தின் ஒரு பாதி நிறைவேறி விட்டது. ருஸ்தம்கான் தன் படையுடன் அழிவான். மதுரை காப்பாற்றப்பட்டு விட்டது. மன்னரும் இளவரசரும் காப்பாற்றப்பட்டு விட்டனர்” என்றான்.

     அவளும் அவனின் கழுத்தைத் தன் மென் கரங்களால் வளைத்துக் கொண்டாள்.

     “மறு பாதியும் திட்டமிட்டபடி நடக்கும்” என்றாள்.

     “நடக்கலாம்... உடனே அல்ல... ஒரு திங்கள் இரு திங்கள் காலம் பிடிக்கும்.”

     “அவ்வளவு காலம் பிடிக்குமா என்ன?”

     “ஆம்... இது சாதாரண விஷயம் அல்ல. வந்திருக்கும் அரசுமலையும் சாதாரண மனிதன் அல்லன். பிடிவாதமும் வீரமும் அதிகம் உள்ளவன்” என்றவன், “கதலி! நாம் இருவரும் புறப்பட்டு அழகான தனியிடம் போய் விட்டு வருவோம்... வா... என் மகிழ்ச்சியை இன்று உன்னோடு கொண்டாட வேண்டும்” என்றான்.

     “முரட்டுத்தனமாக இந்த மலரைக் கசக்கி விடாதீர்கள்.”

     “மலரா?... வீரம் செறிந்த உடலல்லவா இது.”

     இருவரும் வெளியே வந்து புரவிகளில் ஏறிச் சென்றனர்.