உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 17 திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பாதையில் இருபது கல் தொலைவில் சங்கிலித்தேவன் காத்திருந்தான். அவன் தேர்ந்தெடுத்திருந்த இடத்தில் வடக்கு தெற்காகச் செல்லும் திருச்சி மதுரை மலைப் பாதையில் கிழக்கு மேற்காக இரு குன்றுகள். அவற்றிலிருந்து இறக்கப் பாதைகள் மதுரையின்பிரதான பாதையை தொட்டன. சங்கிலித் தேவன் தன் புரவிப் படையை இரண்டாகப் பிரித்து இரு குன்றுகளின் மேலும் மறைவாக நிறுத்தியிருந்தான். தான் மேற்குக் குன்றில் இருந்து கொண்டான். இரு குன்றுகளின் உச்சியிலும் இரு வீரர்கள் நின்றபடி திருச்சிப் பாதையையே நோக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த நேரமும் மனிதர்களும் வந்தே விட்டனர். ருஸ்தம்கானின் புரவிப் படை வேகமாகவே வந்து கொண்டிருந்தது. உடனே குன்றின் உயரே நின்று கொண்டிருந்த இருவரும் “எதிரிகள் வருகிறார்கள்” என்று குரல் எழுப்பினார்கள். இரு பிரிவு வீரர்களும் தங்கள் புரவிகளில் தாவியேறி கடிவாளங்களை இழுத்துப் பிடித்தபடி கீழே பாய்ந்து செல்லத் தயாராக இருந்தனர். சற்று நேரத்தில் ருஸ்தம்கான் முன்னே செல்ல மற்ற வீரர்கள் மூன்று வரிசைகளாகப் பின்னே சென்று கொண்டிருந்தனர். எண்ணிக்கை அறுநூற்றைக் கடந்ததும் சங்கிலித்தேவன் முதலில் தன் வாளை மேலே உயர்த்திக் காட்டி ‘ஊய்’ என்று பலமாகக் குரல் எழுப்பிக் கொண்டே முதலில் தன் புரவியைத் தட்டி விட மற்றவர்களும் பின் தொடர்ந்தனர். அது போலவே எதிர் குன்றிலிருந்தும் புரவி வீரர்கள் மிக்க வேகத்துடன் இறங்கலாயினர். அடுத்த சற்று நேரத்தில் ருஸ்தம்கானின் கால் பகுதிக்கும் மேலான புரவி வீரர்களைத் தடுத்து விட்ட சேதுபதியின் மறவர் படை அவர்களுடன் போர் புரியவும் ஆரம்பித்தது. சங்கிலித்தேவன் வெகு உக்கிரமாக எதிரியின் வரிசையைப் பிளந்து முன்னேறிக் கொண்டிருந்தான். உடனே முன்னே போய்க் கொண்டிருந்த ருஸ்தம்கானின் வீரர்கள் நிற்க, அதைத் தொடர்ந்து முன்னே முன்னே என்று நின்று விட முதல் முன் வரிசை வீரர்களும் “படைத் தலைவரே... ஆபத்து ஆபத்து” என்று கூவி நிற்க ருஸ்தம்கானும் நின்று தன் பயங்கர விழிகளால் திரும்பிப் பார்த்தான். அதைத் தொடர்ந்து இறுதியில் என்ன நடக்கிறது என்று படிப்படியாகச் செய்தி பரவி ருஸ்தம்கானையும் எட்டியது. “ஆ” என்று அலறினான் ருஸ்தம்கான். மின்னல் வேகத்தில் அவன் ஒரு முடிவு எடுத்தான். “நிற்க வேண்டாம். தொடர்ந்து வாருங்கள்” என்ற ருஸ்தம்கான் மேலே தன் பயணத்தை இன்னும் வேகமாகவே முடிக்கிக் கொண்டான். திடீரென வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்ட ருஸ்தம்கான் வீரர்களும் புரிந்து கொண்டனர், தங்கள் முன் வீரர்கள் மேலே பயணத்தை தொடர்ந்து விட்டதை. அவர்களும் எதிரிகளை அழித்து விட்டோ அல்லது அவர்களிடமிருந்து தப்பியோ பிழைத்தவர்கள் தாங்களும் பயணத்தைத் தொடரவே செய்தனர். இரண்டு நாழிகை நேரத்தில் அந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்தது. ருஸ்தம்கானின் மூவாயிரம் வீரர்கள் அழிந்தனர். ஐநூறுக்கும் மேலானவர்கள் தப்பித்து மேற்கொண்டு சென்று விட்டனர். ஐநூறு வீரர்கள் புரவியை இழந்து சுற்று முற்றும் பாதைகளில் ஓடி மறைந்து விட்டனர். சங்கிலித் தேவனின் விரர்கள் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் தேறினர். உடனே சங்கிலித் தேவன் தேறியவர்களை இரு வரிசைகளாகப் பிரித்து தானும் தன் புரவியில் தாவி ஏறிக் கொண்டு மேற்கொண்டு ருஸ்தம்கானை சந்திக்கப் புறப்பட்டான். திருச்சிக் கோட்டையின் முன்னால் இரு பாளையக்காரர்களும் தங்கள் படையுடன் நிற்க அவர்களை அடையாளம் கண்டு கொண்ட காவல் வீரர்கள் கதவுகளைத் திறந்து விட பாளையக்காரர்கள் வீரர்களுடன் உள்ளே நுழைந்தனர். உடனே கதவுகளும் சார்த்தப்பட்டன. இரு பாளையக்காரர்களும் கோட்டையின் அதிகாரியிடமும் முக்கியமான மதுரை வீரர்களிடமும் லிகிதத்தைக் கொடுத்துப் படிக்கச் செய்தனர். அவர்களிடம், ருஸ்தம்கானால் மன்னர் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கூறினார்கள். இப்போது மன்னர் விடுதலையாகி சுதந்திரமான அதிகாரத்துடன் லிகிதம் எழுதி அனுப்பியதாகவும் கூறினர். உடனே அவர்கள் எல்லோருமாக ஒரு முடிவு எடுத்து முஸபர்கானையும் அவன் வீரர்களையும் பிடித்து வரச் செய்து விசாரணை செய்தனர். முஸபர்கான் நிலைமையை உணர்ந்து உண்மையை ஒப்புக் கொண்டான். உடனே அவர்களைச் சிறையில் அடைக்கச் செய்தனர். கோட்டைக்குள் உள்ள வீரர்களுக்கு அந்த இரு பாளையக்காரர்களையும் இரு சம படைத் தலைவர்களாக அறிவித்தனர். ருஸ்தம்கான் தன் படையுடன் வெளியேறியதை அறிந்த மைசூர் படைத் தளபதி குமரய்யா கோட்டையை முற்றுகையிட தன் படையை நகரும்படிக் கட்டளையிட்டான். படையும் நகர்ந்தது. மைசூர்ப் படை முற்றுகையிட நகர்வதை அறிந்த அரசு மலையின் ஒற்றர்கள் விரைந்து சென்று அரசு மலையிடம் தெரிவித்தனர். அரசு மலை உடனே தன் உப தலைவர்களைக் கூட்டி மந்திராலோசனை நடத்த ஆரம்பித்தான். தன் படையின் இறுதிப் பகுதி முறியடிக்கப்பட்டும் அதை லட்சியம் செய்யாமல் மதுரை ஒன்றையே குறியாகக் கொண்ட ருஸ்தம்கான் மேற்கொண்டு தன் பயணத்தை இன்னும் முடுக்கிக் கொண்டானல்லவா? மாலை நேரத்தில் ருஸ்தம்கானும் வீரர்களும் திண்டுக்கல்லின் எல்லையை மிதித்த போது எதிரே புரவிப் படை ஒன்று வேகமாக நெருங்கி வருவதையும் கண்டனர். அதே சமயம் படையின் நடுப்பகுதியில் இருந்தவர்கள் தங்களுக்கு இரு பக்கமிருந்தும் அகல வரிசையில் புரவி வீரர்கள் தங்களை நெருங்குவதையும் கண்டனர். அதே சமயம் படையின் இறுதிப் பகுதியில் இருந்தவர்கள் பின்புறத்திலிருந்து புரவிப் படை வரும் ஒலிகளையும் கேட்டனர். ஆம். ருஸ்தம்கானின் படையை நான்கு புறங்களிலிருந்தும் நெருங்கிக் கொண்டிருந்தனர் தொண்டைமான் தலைமையிலான படையினரும் கன்னிவாடி சின்னக்காட்டீரன் தலைமையிலான படையினரும். எதிரே வந்து கொண்டிருந்த புரவிப் படையின் முன்னால் தொண்டைமானும் சின்னக் காட்டீரனும் கையில் உருவிய வாளுடன் மூர்க்கமாக வந்து கொண்டிருந்தனர். ருஸ்தம்கானும் நிலைமையை உணர்ந்து தன் பெரிய வாளை உருவி உயரே உயர்த்திக் காட்ட அவன் வீரர்களும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். எதிரே வரும் படை அருகில் நெருங்கு முன் கிடைத்த சில வினாடிகளில் தான் பல வழிகளிலும் சூழ்ச்சிகளால் பிரிக்கப்பட்டு இப்போது இறுதிக் கட்டத்திற்கும் வந்திருப்பதை உணர்ந்து கொண்டான் ருஸ்தம்கான். தன்னுடைய பயங்கரமான எதிரியாகிய தொண்டைமானுடன் சின்னக் காட்டீரனும் சேர்ந்து வருவதையும் கண்டவன் இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்றும் வியந்து இத்தனைக்கும் காரணம் தளவாய் கோவிந்தப்பையாவாகத்தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டவன் தளவாயைச் சிறையாக வைக்காமல் கொன்றே போட்டிருக்க வேண்டும் என்றும் நினைத்தான். அதுதான் அவனுடைய கடைசி நினைப்பாக இருந்தது. அதன் பின் எதிரிகளின் தாக்குதலில் மூழ்கிப் போனான் ருஸ்தம்கான். தொண்டைமானும் அவனும் மோதிக் கொண்டார்கள். சின்னக் காட்டீரன் முன்னேற ஆரம்பித்தான். இரு படைகளிலும் எண்ணிக்கை சமமாகவே இருந்ததால் போர் கடுமையாகவே இருந்தது. ஆனாலும் ருஸ்தம்கானின் படை நாற்புறமிருந்தும் எதிரிகளால் சூழப்பட்டதாலும் நீண்ட பயணத்தால் களைப்படைந்து விட்டதாலும் அழிவில் ருஸ்தம்கானின் வீரர்கள் அதிகமாகிப் போனார்கள். இரண்டு நாழிகைப் போருக்குப் பின் பின்னால் வந்து கொண்டிருந்த சங்கிலித் தேவனின் படையும் சேர்ந்து கொண்டது. இருட்டும் நேரத்திற்குள் ருஸ்தம்கானின் பெரும் படையினர் அழிந்து விட்டனர். மற்றவர்கள் சரணடைய ஆரம்பித்தனர். ஆனால் தொண்டைமானும் ருஸ்தம்கானும் மட்டும் இன்னும் மூர்க்கமாகவே போரிட்டுக் கொண்டிருந்தனர். தொண்டைமானை எப்படியும் கொன்று விட வேண்டும் என்று தன் சக்தி முழுவதையும் பயன்படுத்திப் போரிட்டுக் கொண்டிருந்தான் ருஸ்தம்கான். ருஸ்தம்கானைக் கொல்லாமல் உயிருடன் சிறைப் பிடிக்க வேண்டும் என்பதாலேயே போக்குக் காட்டிக் கொண்டிருந்தான் தொண்டைமான். சின்னக் காட்டீரன் தொண்டைமானுக்கு உதவ வர தொண்டைமான் ஜாடையினால் தடுத்து விட்டுத் தானே போரிட்டு இறுதியாகத் தன் வாளால் அவனின் வாளையும் முறுக்கி தன் முழு பலத்தால் சுழற்றி அடிக்க இருவர் கையில் இருந்த வாட்களும் தொலைவில் போய் விழுந்தன. சூழ்ந்திருந்த தொண்டைமானின் வீரர்கள் உடனே ருஸ்தம்கானைச் சிறை செய்தனர். ருஸ்தம்கானின் இரண்டாயிரம் வீரர்கள் சிறை செய்யப் பட்டிருந்தனர். மற்றவர்கள் வீர மரணம் எய்தியிருந்தனர். தொண்டைமானின் இரண்டாயிரம் வீரர்களும் சின்னக் காட்டீரனின் இரண்டாயிரம் வீரர்களும் வீர மரணம் எய்தி இருந்தனர். இறந்தவர்களை அகற்றி விட்டு இரவு ஒரு கிராமத்தில் முகாமிட்டனர். |