உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 7 விருந்தினர் அறையில் இருந்த தொண்டைமானை ஒரு இளம் பெண் “வாருங்கள்” என்று அழைத்துச் சென்று இன்னோர் மண்டபத்திற்குப் போய் ஒரு கதவைத் திறந்து அவனையும் உள்ளே போகச் செய்து தானும் புகுந்து கொண்டு கதவையும் மூடித் தாளிட்டாள் அல்லவா? அப்போது வெளியில் இருந்தும் நாதாங்கி மாட்டப்பட்டு பூட்டவும் படுவதை அறிந்தானல்லவா? அந்த அறையில் இருளில் இருவரும் இருந்தார்கள். ஆகவே அப்பெண் “இருங்கள் விளக்கைத் தூண்டி விடுகிறேன்” என்று இருளில் நகர அங்கே தொண்டைமானே நின்றிருந்தபடியால் அவன் மீது மோதி சாயவும் போனாள். அவளை உடனே சாயாமல் தாங்கிப் பிடித்துக் கொண்ட தொண்டைமான் அவளின் மார்பகம் தன் மேல் பட்டதாலும் குளிர்ச்சியான இளமைக் கைகளைப் பற்றியதாலும் அவளிடமிருந்து நறுமணம் வீசியதாலும் உணர்ச்சிகள் ஆட்டம் கண்டதால் அந்த அணைப்பிலிருந்து விடுபடவும் மனசின்றி, “மங்கையே... விளக்கை இப்போது பெரிதுபடுத்த வேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டான். “ஏன்?” என்று மெல்லக் கேட்டதன்றி “மெல்லப் பேசுங்க” என்றும் கேட்டுக் கொண்டாள் அவள். “ஏன் மெல்லப் பேச வேண்டும்?” “வெளியில் ஆட்கள் நடமாடுவார்கள்.” “நடமாடினால்?” “நடமாடினால் உங்கள் பேச்சைக் கேட்க நேரிடும்...” “நேரிட்டால்?” அவன் வேண்டுமென்றே தன்னை இன்னும் விடாமல் பேச்சை வளர்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவள் மனசுக்குள் நகைத்துக் கொண்டாள். “உங்களுக்கு ஆபத்து” என்று கூறவும் செய்தாள். “இந்த அறையை விடவா?” “இந்த அறையில் என்ன?” “வெளியேயும் கதவு பூட்டப்பட்டு விட்டது.” “ஆம்.” “நான் சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்.” “இது சிறையல்ல வீரரே, உங்களைப் பாதுகாக்கும் இடம்.” “என்னைப் பாதுகாக்கும் இடமா?” “ஆம் வீரரே.” “எப்படி?” “என் கைகளை விட்டு விட்டால் நான் விளக்கைப் பெரிதுபடுத்துவேன். பிறகு விளக்குவேன்.” அப்பொழுது தான் தொண்டைமானுக்கு தான் இன்னும் அவளின் கைகளைப் பற்றியபடி அணைத்தபடியே இருப்பது தெரிந்தது. அவளை விடுவித்தான். அவள் மெல்ல மெல்ல நடந்து சென்று இன்னோர் மூலையில் மிக மங்கலாக வைத்திருந்த விளக்கின் திரியை உயர்த்தி ஒளியையும் பரவவிட்டாள், அந்த அறையில். அவனைப் பார்த்தாள். ‘அருகில் வாருங்கள்’ என்பதாகச் சைகை செய்தாள். அவனும் அருகில் சென்றான். ஒரு பாயை எடுத்துக் கீழே விரித்துப் போட்டு அதில் அமரும்படிக் கேட்டுக் கொண்டாள். அவனும் அமர அவளும் அமர்ந்து கொண்டாள். “மங்கையே... என்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய்?” என்று கேட்டான் தொண்டைமான். “தாங்கள் ஏன் வந்தீர்கள்?” “நீ அழைத்ததால்...” “நான் அழைத்தால் உடனே வந்து விடுவதா?” “நீ இளமங்கையாக இருந்து அழைத்ததால் வந்தேன்.” “ஓகோ... கிழவியாக இருந்து அழைத்திருந்தால்?” “வந்திருக்க மாட்டேன்.” “இளமங்கையிடம் அப்படியென்ன விசேடமோ?” “இளமங்கை அழைத்தால் ஒன்று பெரும் சொர்க்கத்தைக் காட்டுவதாக அமையும்.” “ஓகோ... அனுபவமோ?” “இருக்கலாம்.” “இன்னொன்று?” “பெரும் ஆபத்தில் சிக்க வைப்பதாக இருக்கலாம்.” “இதுவும் அனுபவமோ?” “உண்டு.” “என்னுடன் எதை எண்ணி வந்தீர்கள்?” “இரண்டையுமே எண்ணி...” அவள் நகைத்தாள். “ஏன் நகைக்கிறாய்?” “தாங்கள் புத்திசாலி.” “அப்படியா?” “ஆம்... இல்லாவிட்டால் என்னுடன் வந்திருக்க மாட்டீர்கள்.” “வந்திராவிட்டால்?” “உங்களை வெட்டிப் போட்டிருப்பார்கள் ருஸ்தம்கானின் வீரர்கள்.” “ருஸ்தம்கானா... என்ன விளையாடுகிறாயா?” என்று சினத்துடன் கேட்டான் தொண்டைமான். “விளையாடவா இங்கே அழைத்து வந்தேன்?” “ஏன் என்னை வெட்டிப் போட வேண்டும்?” “அவனுடைய வீரர்களை நீங்கள் வெட்டிப் போட்டீர்கள் அல்லவா?” அப்போதுதான் தொண்டைமானுக்கு மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. “உனக்கெப்படித் தெரியும்?” “எனக்கே தெரிந்திருக்கிறது” என்றாள் விஷமமாக. தொண்டைமான் பெரிதும் யோசனை செய்தான். தப்பியோடி வந்துவிட்ட சில வீரர்கள் இங்கே தன்னை அடையாளம் கண்டு கொண்டு ருஸ்தம்கானிடம் தெரிவித்திருப்பார்கள் என்பதை அப்போதுதான் உணர்ந்து பார்த்தான். “உடனே ஏன் அதைச் செய்யவில்லை” என்றும் கேட்டான் தொண்டைமான். “ருஸ்தம் கானுக்கும் அவன் வீரர்களுக்கும் அது தொழுகை நேரம்.” “ஓ... அப்படியா” என்றவன் “அதனால்தான் நீயும் யார் கண்ணிலும் படாமல் என்னை இங்கே அழைத்து வந்து விட்டாயா?” எனவும் கேட்டான். “ஆம்” என்று தலையை ஆட்டினாள். “உன் பெயர் என்ன?” “மீனாட்சி... மீனா.” “மீனா, உன்னை இப்படிச் செய்யும்படிப் பணித்தது இந்த அரண்மனையில் யார்?” “அதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமோ?” “ஆம் மீனா.” “தளவாய் அவர்கள்” என்று அவன் செவியருகே மெல்ல ஓதினாள். “இங்கேயா இருக்கிறார்.” “ஆம்... மன்னரைப் போல் தம் அறையில் சிறையாக... ஆனால் அவருக்கு இங்கேயும் வெளியேயும் நடப்பதெல்லாம் தெரிந்து கொண்டே இருக்கின்றன.” “தளவாயின் ஆட்களில் நீயும் ஒருத்தி?” “ஆம்.” “வெளியேயும் ஏன் கதவு பூட்டப்பட்டது?” “இந்த அறையின் வாசல் எனக்கு இப்படித்தான்” என்று எதிர்ப்பக்கத்தைக் காட்டினாள். பின்பு அவளே “நீங்கள் வந்த பாதை பூட்டப்பட்டே இருக்கும்... திறந்திருப்பதை ருஸ்தம்கான் அறிந்தால் அவனுடைய தேடல் இங்கேயும் இருக்கும்” எனவும் விளக்கினாள். “ருஸ்தம்கான் என்னைப் பற்றி முடிவு செய்தது தளவாய் அவர்களுக்கு எப்படித் தெரியும்?” “அவருக்கும் இங்கே ஒற்றர்கள் உண்டு.” “சரி இப்போது ருஸ்தம்கான் வீரர்கள் என்னைத் தேடமாட்டார்களா?” “கண்டிப்பாக, தேடிக் கொண்டிருப்பார்கள்.” அப்போது உண்மையிலேயே விருந்தினர் மாளிகை முழுவதையும் அலசிக் கொண்டிருந்தனர் வீரர்கள். விருந்தினர் மாளிகையில் தொண்டைமான் இல்லை என்பதைக் கேள்விப்பட்ட ருஸ்தம்கான் துடித்தான்; சீறினான். எங்கும் தேடிப் பார்க்கும்படிக் கட்டளையிட்டான். அவனே புறப்பட்டு அரண்மனை வாயிலை அடைந்தான். தொண்டைமானை அடையாளம் காட்டிய இரு வீரர்களும் அங்கே இருந்தனர். “தொண்டைமான் பாளையக்காரர்களுடன் வெளியேறி விட்டானா?” “இல்லை தலைவர் அவர்களே... நாங்கள் தான் இங்கே பார்த்துக் கொண்டிருந்தோமே... கண்டிப்பாக இல்லை.” “அரண்மனைக்குள் நுழையும்போது எத்தனை பேர் இருந்தார்கள்?” “இளவரசருடன் சேர்த்து நூற்றுப் பதினைந்து பேர்” என்ற ஒரு காவலன், “வெளியேறும் போது நூற்றுப் பதின்மூன்றுதான்” எனவும் பணிவுடன் கூறினான். “அப்படியானால்...” என்று கர்ஜித்த ருஸ்தம்கான் “உள்ளேதான் இருக்கிறான்... கதவை மூடுங்கள்” என்று உத்தரவிட்டவன் உள்ளே சென்றான். தொண்டைமான் அந்த இளம் மங்கையிடம் கேட்டான். “நான் எப்படி தப்பித்து வெளியே செல்வது?” என்று. “தங்களை இங்கே அழைத்து வரும்படிச் செய்தவருக்கு அதுவும் தெரியாதா என்ன... கட்டளை வரும்” என்ற இளம் பெண் மேற்கொண்டு ஏதோ சொல்ல முற்படும் போது வெளியே வீரர்கள் ஓடுவதும் ஒருவன், பூட்டை ஆட்டிப் பார்த்துவிட்டுப் போவதும் கேட்டன. “இது யார் அறை?” என்று மெல்ல அவள் செவியருகே கேட்டான் தொண்டைமான். “என் அறை.” “நீ அந்தப்புரப் பெண்ணா?” “பணி மகள்.” “நீ உணவு உண்ணப் போக வேண்டாமா?” “நம் இருவருக்கும் தேவையான உணவை மாலையே கொண்டு வந்து விட்டேன்.” “நல்ல முன் ஏற்பாடுதான்.” “தளவாயின் கட்டளைப்படிதான்.” விளக்கின் திரியை இழுத்து மிகச் சிறியதாக்கிய மீனாட்சி “தாங்கள் படுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் மெல்ல. “நீ?” “உட்கார்ந்து காத்திருப்பேன்.” “எதுவரை?” “நடு நிசி வரை.” “பிறகு?” “உணவு உண்ணலாம்.” “எனக்கு உணவே தேவையில்லை இப்போது.” “ஏன்?” “அதுதான் நீ இருக்கிறாயே” என்ற தொண்டைமான் அவள் கையைப் பற்றி தன்னிடம் இழுத்தான். “இந்த நிலையிலும் நீங்கள் திகில் அடையாமல்... இப்படி...” என்று சிணுங்கினாள் மீனாட்சி. “வீரர்களுக்கு எந்த நேரமும் ஆபத்துதான்.” “அதனால் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றீர்களாக்கும்” என்ற மீனாட்சி அவன் கைகள் நுழைந்த பாகங்களில் ஏற்பட்ட இன்ப உணர்வில் பேச்சற்றுப் போனாள். |