உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 8 வணிகரிடம் அரண்மனை உள்ளே உள்ள நிலைமையினை விளக்கினான் சேதுபதி. “அஞ்ச வேண்டாம் வணிகரே. ருஸ்தம்கானை மதுரையை விட்டு விரட்டவே நான் இங்கே வந்திருக்கிறேன்” என்று ஆறுதலும் கூறினான். “லிகிதம் எழுதுவதற்கான இறகும், மையும் வேண்டும்... எடுத்து வாருங்கள்” என்று கேட்கவே வணிகரும் கீழே போனார். சேதுபதி சின்னக் காட்டீரனைப் பார்த்தான். “தஞ்சை அரசரான ஏகோஜிக்கு, படையுடன் திருச்சியைத் தாக்க வரும்படி செய்தி அனுப்பப் போகிறேன். அப்படி ஏகோஜி திருச்சியைத் தாக்கினால் ருஸ்தம்கான் மதுரையில் இருக்க மாட்டான். திருச்சிக்குப் போய்விடுவான். அவன் மறுபடி மதுரையை அடையும் வரை மன்னருக்கும் இளவரசருக்கும் ஆபத்தில்லை.” “திரும்பி வந்தால்?” “வரவே விடக் கூடாது. இதுவே என் திட்டம்... அவன் திருச்சிக்குப் போகு முன் உங்களையும் படை திரட்டிக் கொண்டு அங்கே வந்து சேரும்படி மன்னரின் பெயரால் ஓலை அனுப்புவான். நீங்களும் மற்ற இரண்டு பாளையக்காரர்களுமாகப் படை திரட்ட வேண்டும்.” “பிறகு?” “ருஸ்தம்கானுக்கு உதவியாக திருச்சிக்குப் போய்விடக் கூடாது... திண்டுக்கல் அருகே முகாமிட்டுக் காத்திருக்க வேண்டும்.” “காத்திருந்து...?” “அடுத்த நடவடிக்கைக்கு நானே உங்களை வந்து சந்திப்பேன். அல்லது ஓலை அனுப்புவேன்.” “மன்னரின் முத்திரை ஓலையை நான் மதிக்காமல் இருந்தால்... அதாவது உண்மையிலேயே மன்னர் உடல் நலம் இல்லாமல் இருந்து, தளவாயும் திருச்சிக்குப் போயிருந்தால்?...” என்றும் வினவினான் பாளையக்காரன். “பாளையக்காரரே” என்ற சேதுபதி அவனை உற்று நோக்கி, “நீங்கள் உங்கள் தந்தையார் இறந்து இப்போதுதான் பாளையக்காரர் ஆகியிருக்கிறீர்கள். வாலிப வயது. அனுபவம் ஏறவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் இங்கே என்னுடன் தங்கியிருந்து உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு போங்கள்” என்றும் கூறிவிட்டு தன் இடைக் கச்சையில் இருந்து எழுதப்படாத லிகிதத்தை எடுத்தான். பாளையக்காரன் குழம்பித்தான் போயிருந்தான். அவனுடைய அனுபவமின்மையால் தான் தொண்டைமான் சிக்கி விட்டான் என்பதையும் அவன் இன்னும் உணரவில்லை. அதையெல்லாம் சொல்லிக் குத்திக் காட்டி விட்டால் அவனுடைய உதவி கிடைக்காது என்பதாலும் அவனே ருஸ்தம்கானிடம் திரும்பவும் போய் எதையாவது உளறியும் வைத்தால் என்ன ஆவது என்றே யோசனை செய்தும் பேசாமலே இருந்தான் சேதுபதி. வணிகர் இறகும், மையும் எடுத்துக் கொண்டு அங்கே வந்தார். சேதுபதி உடனே வட்டப் பலகையில் லிகிதத்தை விரித்து வைத்துக் கொண்டான். வணிகரிடமிருந்து இறகையும் மையையும் வாங்கிக் கொண்டு கதலியை விட்டு தீபத்தை அருகில் பிடிக்கும்படிச் செய்து எழுத ஆரம்பித்தான் சேதுபதி. எழுதி முடித்ததும் தன் முத்திரையையும் பதித்தான். லிகிதத்தைச் சுருட்டி நூலால் கட்டினான். “பாளையக்காரரே! எனக்கொரு உதவி இப்போது செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டான். “சொல்லுங்கள்.” “இதை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். என் வீரர்களுடன் புறப்பட வேண்டும். இந்நகரின் எல்லைக்கு அப்பால் கொண்டுவிட்டு அவர்களிடம் இதை ஒப்படைத்து விட்டுத் திரும்ப வேண்டும்.” “கண்டிப்பாகச் செய்கிறேன்.” “உங்கள் வீரர்கள் யாவரையும் அனுப்பிவிட்டீர்களா?” “இல்லை. எல்லைக்கப்பால் ஒரு இடத்தில் காத்திருக்கும்படிக் கட்டளையிட்டிருக்கிறேன்.” “அப்படியானால் அவர்களில் இருவரை உங்களுடன் திரும்ப அழைத்துக் கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்டு வாருங்கள்.” “அப்படியே” என்ற சின்னக் காட்டீரன் அதை வாங்கித் தன் அங்கியில் மறைத்துக் கொண்டான். மறுபடி வணிகரை விட்டு தன் வீரர்களை மேலே வரவழைத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டான். “இவர் உங்களை நகரின் எல்லைக்கப்பால் கொண்டு விடுவார். நீங்கள் நம் எல்லையை அடைந்து பின்பு புதுக்கோட்டை வழியாகத் தஞ்சை சென்று தஞ்சை மன்னரிடம் இதைச் சேர்க்க வேண்டும். நம் பகுதியில் இன்னும் சிலரையும் உடன் அழைத்துக் கொள்ளுங்கள்...” என்ற சேதுபதி யோசித்து விட்டு, “இரு வீரர்களை இங்கே அனுப்பி வையுங்கள். நானிங்கு இல்லாவிட்டால் திரும்பி விடட்டும்” என்றும் கூறினான். “உத்திரவு.” இருவரும் வணங்கினார்கள். “பாளையக்காரரே... நீங்கள் புறப்படலாம்” என்ற சேதுபதி வணிகரிடம் “வணிகரே... புரவிகளைத் தயார் படுத்தச் செய்துவிட்டு வாருங்கள்” என்றான். சற்று நேரத்தில் புரவிகளில் அவர்கள் மூவரும் புறப்பட்டுச் செல்வதை சேதுபதியும் கதலியும் சட்டங்களின் இடைவெளி வழியே பார்த்தனர். வணிகரும் மேலே வந்தார். “வணிகரே... பாளையக்காரர் அனேகமாக நடுநிசியில் திரும்பி வருவார்.” “எப்போது வந்தாலும் வரவேற்கிறேன்.” “கீழே அவருக்கு அறை ஒதுக்க முடியுமா?” “தாராளமாக... செய்கிறேன்.” “நன்றி வணிகரே.” வணிகர் கீழே போக சேதுபதி கதவை மூடித் தாள் போட்டான். சேதுபதி மஞ்சத்தில் அமர்ந்து கதலியைப் பார்த்தான். “அண்ணனுக்கு ஆபத்து ஏற்படுமா சேதுபதி அவர்களே” என்று கதலி கவலையுடன் கேட்டபடி எதிரே இருக்கையில் அமர்ந்து கொண்டாள். “நாம் இங்கே இருப்பது கூட ஆபத்தான நிலைமைதான் கதலி” என்ற சேதுபதி “வீரர்களின் வாழ்க்கையில் எந்த நேரமும் ஆபத்துதான்... நீயும் ஒரு வீராங்கனை. நினைவு கொள்” என்றே சற்று அலட்சியமாகவும் கூறினான். “அதில்லை சேதுபதி அவர்களே... அண்ணன் போரில் மடிந்தால் நான் கவலைப்பட மாட்டேன். அது ஒரு வீரனின் உண்மைச் சாவு. எதிரிகளால் சிறை செய்யப்பட்டு கொல்லப்படுவதைத்தான் விரும்பவில்லை. “தொண்டைமானுக்கு இப்போது ஏதும் ஆபத்து வராது என்றுதான் என் உள் மனம் கூறுகிறது... கொல்லப்படாமல் சிறையில் வைக்கப்படலாம்... நாளை பரிசுடன் வெளியேயும் வரலாம்... வெறும் யூகத்திலேயே கவலைப் படக்கூடாது... நாளை தெரியும். நீ அமைதியுடன் படுத்துக் கொள்.” “உறக்கம் வராதே.” “அப்படியானால் என் மஞ்சத்திற்கு வா.” கதலிக்கு உண்மையாகவே கோபம் ஏற்பட்டது. “நான் என்ன மன நிலையில் இருக்கிறேன் என்பது தங்களுக்குப் புரியுமா?” “புரியும்.” “புரிந்துமா சரசமாடக் கூப்பிடுகிறீர்கள்?” “எப்படிப்பட்ட ஆபத்தான நிலையிலும் இன்பத்தையும் அனுபவிப்பவே உண்மை வீரன்... வீராங்கனை.” “இரும்பு நெஞ்சம் உங்களுக்கு.” “நானும் உன் மன நிலையில் தான் இருக்கிறேன் கதலி... குழப்பமான மன நிலையைப் போக்கிக் கொள்ளத்தான் உன்னை அழைக்கிறேன் இதய ராணியே.” “பேசாமல் உறங்குங்கள்” என்று தன் மஞ்சம் போய்ப் படுத்தவள், வெகு நேரம் சென்று கவலையை மறக்க சேதுபதி சொல்லிய வழிதான் சரி என்று தோன்றி மெல்ல சேதுபதியின் மஞ்சத்தில் வந்து சாய்ந்தாள். அவளின் இடையை இரும்புக் கரம் அணைத்துக் கொண்டது. |