அத்தியாயம் - 9

     காலையில் கண் விழித்த மீனாட்சி மேலேயிருந்த சாளரத்தைப் பார்த்து பொழுது விடிந்து விட்டதை அறிந்து முதல் நாள் நிகழ்ச்சிகளை ஞாபகம் கொண்டு தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த தொண்டைமானைப் பார்த்தாள். வலிமை வாய்ந்த உடலையும் முகத்தில் காணப்பட்ட வாலிபத்தையும் பார்த்தவள் இரவில் அவன் படுத்திய பாட்டையும் நினைத்தாள். ‘பொல்லாத வாலிபர் இவர்’ என்னும் மகிழ்ச்சியால் பூரித்து சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டும் இருந்தாள்.

     அலங்கோலமாகிவிட்ட தன் ஆடைகளை எழுந்து சரிப்படுத்திக் கொண்டவள் தன் உடல் அதிகமாக வலிபட்டுப் போய்ப் பெரும் அசதி ஏற்பட்டிருப்பதையும் உணர்ந்து கொண்டாள்.

     இருப்பினும் தான் நீராடி விட்டு அதன் பின் செய்ய வேண்டிய பணிகளை எண்ணிக் கொண்டாள். முதலில் தான் நீராடி விட்டு வந்து அவனை எழுப்பலாமா என்று கருதினாள். மறுபடி தற்செயலாக சாளரத்தை நோக்கிய பின்பு உஷாராகி அவன் வலிமையான உடலை அசைத்து காதில் கிள்ளி எழுப்பினாள்.

     கண் விழித்த தொண்டைமானும் அவளைப் பார்த்து விட்டு முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகளை சில கணங்களில் எண்ணிப் பார்த்து சரேலென எழுந்து அமர்ந்தான்.

     மேலே இருந்த அந்த ஒரே சாளரத்தைச் சுட்டிக் காட்டிய அவள், “அதன் வழியாக நாம் இப்போது உள்ள இடத்தை யாரேனும் பார்க்க முடியும்... அந்தச் சாளரத்தின் பக்கமாகவே கீழே படுத்து உறங்குங்கள். சீக்கிரம்” என்று எச்சரிக்க தொண்டைமானும் எழுந்து அந்தப் பக்கம் போய் நின்று கொண்டான்.

     அவளும் பாயை எடுத்துப் போய் அங்கே விரித்துப் போட்டு, “படுங்கள்” என்றாள்.

     “இனி நான் படுக்க மாட்டேன்.”

     “அமர்ந்திருங்கள்... நான் நீராடி விட்டு என் பணியைக் கவனிக்க வேண்டும்... நடுப்பகல் தான் வருவேன்... உணவும் அப்போதுதான்... செய்தியும் கொண்டு வருவேன்.”

     “சிறைத் தண்டனையை விடக் கொடுமையாக இருக்கும் போலிருக்கிறதே” என்றான் தொண்டைமான்.

     “இங்கே வந்து சிக்கி விட்டீர்கள். தப்பும் வரை இப்படித்தான்” என்ற மீனாட்சி, தான் வழக்கமாக நடமாடும் வாயிற் கதவைத் திறந்து எட்டிப் பார்த்து விட்டு பின் சரேலென வெளியேறிக் கதவை மூடிப் பூட்டிக் கொண்டு சென்று விட்டாள்.

     இரவு ஏற்பட்ட இன்பங்களை எண்ணிப் பார்த்த தொண்டைமான் பகலில் இப்படித் துன்பப்பட்டாலும் இரவிலாவது இன்பம் கிடைக்குமே எனவும் நினைத்துப் பார்த்தபடி மறுபடி பாயில் சாய்ந்து கொண்டான்.

     நடுப்பகலில் கதவைத் திறந்து அறைக்குள் நுழைந்த மீனாட்சி உடனே கதவையும் மூடித் தாள் போட்டாள். கையில் கொண்டு வந்திருந்த குவளையுடன் சாளரத்தின் கீழே பார்க்கத் தொண்டைமான் அமர்ந்திருந்தான்.

     அவனருகில் போய் அமர்ந்து கொண்ட மீனாட்சி, “சிங்கத்தைக் கூண்டிலடைத்த மாதிரி இருக்கிறீர்கள்” என்றாள்.

     “மீனா” என்ற தொண்டைமான், “காலையில் சாளரத்தின் வழியாக எதிரே தெரிந்த வெயிலில் ஒரு மனித முகத்தையும் கண்டேன்” என்றான்.

     மீனா உடனே தன் மார்பில் கையை வைத்துக் கொண்டாள். “ஐயோ” என்றாள். “நான் நினைத்தது நல்லதாகப் போயிற்று” என்றும் சொல்லிக் கொண்டாள்.

     “மூலைப் பக்கமாகப் போய் வாயைக் கொப்பளித்து, முகம் கழுவி வாருங்கள்.”

     தொண்டைமான் குவளையை எடுத்துப் போய் அப்படியே செய்து விட்டு வந்தான்.

     இறுகக் கட்டியிருந்த புடவையைத் தளர்த்திக் கொண்ட மீனாட்சி இடுப்பில் ஒட்டிக் கொண்டிருந்த வாழையிலைப் பொட்டலத்தை எடுத்தாள். அதை விரித்தாள்.

     “உண்ணுங்கள்” என்றாள்.

     அவன் தின்றூ முடித்தான். நீரும் பருகினான்.

     “நீங்கள் மட்டும் தனித்து இந்த நகரத்திற்கு வந்திருக்க முடியாது என்றும், வேறு யாரோ ஒருவரும் வந்து நகரத்தின் ஓரிடத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் தளவாய் நம்புகிறார்... உண்மைதானே?”

     வியப்படைந்த தொண்டைமான் “ஆம்” என்றான்.

     “அவர் இராமநாதபுரம் சேதுபதியாகவும் இருக்கலாம் என்பது அவரின் நம்பிக்கை... சரிதானா?”

     தளவாய் என்ன மாய மனிதரா என்று ஆச்சர்யப்பட்ட தொண்டைமான் “அதுதான் தெரிந்திருக்கிறதே. என்னை ஏன் கேட்க வேண்டும்?” என்றான்.

     “அவர் தங்கியுள்ள இடம் தான் தெரிய வேண்டுமாம்.”

     “வணிகர் தெரு என்றுதான் தெரியும். யார் வீடு என்று தெரியாது.”

     “அது போதும்” என்ற மீனாட்சி, “நான் உடனே போயாக வேண்டும். இருட்டிய பின் தான் வருவேன்” என்று கூறிவிட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறிக் கதவையும் மூடிப் பூட்டிக் கொண்டாள்.

     மாலை நேரமாகி விட்டபடியால் பிற்பகலில் அரண்மனைக்குள் தயிர், மோர், பால், வெண்ணெய் பானைகளுடன் சென்றவர்களும் பூக்கூடைகளுடன் சென்றவர்களும் திரும்பிக் கொண்டிருந்தனர்.

     ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாயிலிலும் இறுதியாக முன் வாயிலிலும் தங்கள் தங்கள் கூடையையோ, பாத்திரத்தையோ கவிழ்த்துக் காட்டிக் கொண்டே வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

     கடைசியாக வந்த பூக்கூடைக்காரி முன் வாயில் காவலர்கள் முன்பும் கூடையைக் கவிழ்த்து கீழே போட்டு விட்டு பின் எடுத்து அவர்களிடம் காட்டி விட்டு கூடையைத் தலையில் கவிழ்த்து பின்பக்கமாகத் தொங்க விட்டபடி வெளியேறி நடக்க ஆரம்பித்தாள்.

     ஒரு வீதியில் அவள் செல்லும் போது அங்கே அவளுக்காகத் தயாராக நின்றிருந்த ஒருவன் தன் கையில் வைத்திருந்த கூடையை அவளிடம் கொடுத்து விட்டு அவள் தலையில் கவிழ்த்திருந்த கூடையைத் தான் எடுத்துக் கொண்டான்.

     “உங்க கூடைல பூக்கொண்டு போறப்பல்லாம் அதிகமாகவே காசு கிடைக்குதுங்க... நன்றிங்க... வர்றேன்.” அவள் தன் கூடையை இப்போது தலையில் கவிழ்த்துக் கொண்டு சந்தைப் பக்கம் நடந்தாள்.

     அந்த ஒருவன் தன் வீட்டிற்கு விரைந்து சென்று உள்ளே போய்க் கூடையின் உள்ளே அடியில் குறுவாளால் சில கட்டுகளை அறுத்தான். மேலே இருந்த கூடையின் அடிப் பகுதியைப் போலவே ஒரு மூங்கில் தட்டை எடுக்க அடியில் சில பொருட்கள் இருந்தன.

     முதலில் ஓலை நறுக்கை மட்டும் எடுத்து அதில் எழுதியிருந்ததைப் படித்தான். அதைச் சுக்கலாகக் கிழித்துப் போட்டான்.

     பின்பு அடியில் இருந்த பொருள்களைப் பார்த்தான். அவற்றைத் தொடவே அவன் உடல் நடுங்கியது. இருந்தாலும் ஒவ்வொன்றாக எடுத்துத் தன் சுருக்குப் பையை எடுத்து அதில் போட்டுக் கொண்டான். கட்டினான். மடியில் வைத்துக் கட்டிக் கொண்டான்.

     தன் துணைவியிடம் கூறிவிட்டு வெளியே புறப்பட்டான். வணிகர் வீதியை எட்டினான். பெருங்குன்றனார் மாளிகை எங்கே இருக்கிறது என்று கேட்டு அறிந்து கொண்டு அங்கே போனான்.

     சற்று நேரம் முன்னால் நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மாளிகையின் பணியாளன் ஒருவன் வெளியே வர, அவனை நெருங்கினான் அந்த ஒருவன்.

     “எஜமானர் இருக்கிறார்களா?”

     “ஏன்?”

     “ஒரு முக்கியச் செய்தி.”

     பணியாளன் உள்ளே போக, சற்று நேரத்தில் வணிகரே முற்றத்திற்கு வர அந்த மனிதனும் மேலேறி “வணக்கம்” என்று பணிந்தான்.

     “என்ன செய்தி... யார் நீ?”

     “உள்ளே போய்ப் பேச வேண்டிய செய்தி வணிகர் அவர்களே.”

     அவனை உடனே அவர் தம் அறைக்கு அழைத்துப் போனார்.

     “என்ன செய்தி?”

     “தங்கள் மாளிகையில் புது விருந்தினர் தங்கியிருக்கிறாரா?” என்று அவன் கேட்க வணிகரின் முகம் மாறியது.

     அந்த முக மாற்றத்தைப் புரிந்து கொண்ட அந்த மனிதன், “அஞ்ச வேண்டாம்... நான் உதவி செய்யத்தான் வந்திருக்கிறேன்” என்று கூறினான்.

     அதனால் சற்றே துணிவு அடைந்த வணிகர், “தங்கியிருக்கிறார்” என்றார்.

     “சேதுபதி அவர்களா?”

     திடுக்கிட்டுப் போன வணிகர் தம் குறுவாளைச் சரேலென உருவிக் கொண்டார்.

     “நான் தளவாயின் ஒற்றன்... என்னை நம்பலாம். பதட்டப் படாதீர்கள்” என்ற அந்த மனிதன் சேதுபதி அங்கேதான் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு தன் மடியில் இருந்த பையை எடுத்து, “இதை சேதுபதி அவர்களிடம் சேர்ப்பித்து விடுங்கள்... ஐயம் இருப்பின் என்னை இதே அறையிலேயே வைத்துப் பூட்டி விட்டுப் பின்பு வாருங்கள்” என்று பையை நீட்டினான். அதைத் தயக்கத்துடன் வாங்கிக் கொண்ட வணிகர் பூட்டுச் சாவியையும் எடுத்துக் கொண்டு வெளியேறி கதவையும் சாற்றிப் பூட்டிக் கொண்டார்.

     பின்பு மேலேறிப் போய் அறையில் நுழைய அங்கே பதட்டத்துடன் நின்றிருந்தனர் சேதுபதியும், கதலியும், சின்ன காட்டீரனும்.

     “அவன் யார் ஒற்றன்?” என்று வினவவும் செய்தான் சேதுபதி.