அம்பலவாண தேசிகர்

அருளிய

உபாயநிட்டை வெண்பா

பாயிரம்

கற்றுடலற் றேஉயிரைக் கண்டருள்கொண் டேஅரனைப்
பெற்றனம்மெய் அம்பலவா ணன் பெருமை - உற்றநலப்
பண்பா வடுதுறைச்சீர் பன்னும் உபாயநிட்டை
வெண்பா உரையை விரும்பி.

நூல்

தொந்தித்த காயந் தொலைவதற்கு முன் உயிரைச்
ஐந்திதார்க் கறோ திடமாகும் - சிந்தித்த
தோலோ எலும்போ தொகுத்ததசை தானோஎன்று
ஆலோசித் தார்க்கறிவேயாம். 1

அங்கத்தை நோக்கி அதுத்த தசை தொல் எலும்பாம்
பங்கத்தைத் தீதென்னப் பார்ப்பாரேல் - சங்கத்தை
அற்றாரே பூரணமாய் ஆன அரன் தாளுண்ரப்
பெற்றாரே யில்லைப் பிறப்பு. 2

கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் நின்றதனு
எண்ணொன்றி நின்றங்கு இசையாவாம் - கண்ணொன்றி
நோக்குவதே ஆவியென நுண்ணறிவால் எவ்விடத்தும்
ஆக்குவதே ஆவிக்கு அணி. 3

கண்ணே ஒருபொருளைக் காணில் கலந்தொன்றாய்
எண்ணுவான் தன்னை இழந்ததுவாம் - கண்ணினால்
பூணும் ஒருவனையே பூணின் அவனாகக்
காணும் பொரியாகுங் கண். 4

ஊனும் உயிரும் ஒருங்கொப்ப நிற்பினும்
உனுயிரை நோக்கா ஒழுங்கனேஓ - ஊனைக்
கறித்தறிவை நோக்கிக் குறியா அறிவால்
பறித்தெறிவ தன்றோ பயன். 5

உயிரும் உடலும் ஒருங்கொப்ப நின்றாங்கு
உயிருடலை நோக்கி உறுமால் - உயிர்தான்
பிடிக்குங்கால் ஒன்றாய்ப் பிடிக்கும்பின் பேர்ந்து
விடுக்குங்கால் வேறாய் விடும். 6

அறிவாற் பிறியும் அறியாமை யாலும்
செறிவாம் தனுத்தெசிக்கத் தேரின் - பிறிவான்
மனமிடைய யாக்கை மனுவாம் கருவி
தனுமிடைய ஆவி தகும். 7

தன்னைத்தான் என்னான் தகுமுடலைத் தானென்பான்
பின்னற்றாற் செத்த பிணமென்பான் - முன்னத்தால்
சேட்டிக்கும் ஆவி செயற்படுவது அங்கமென
நாட்டுகையால் ஆவியென நாடு. 8

மருவும் தனுவதனை மாற்றுயிர்மேல் வைத்தல்
தெரியும் பொருளைத் தெருயத் - தெரியாத்
தனுவனைத்தும் நோக்கித் தகுமுயிரே தானா
வினையனைத்தும் நிற்கும் விரைந்து. 9

கருவி அனைத்தினையுங் காணுங் கருவக்கு
ஒருவன் இவனெனவும் ஒரா - மருவும்
கருவியே தானாய்க் கலந்தொன்றாய் நிற்கும்
மருவுமுயிர்க் குற்றதோர் மாண்பு. 10

புலமனைத்தும் நின்று பொருந்தியும்மற் றுன்னைத்
திலமளவுங் காணத் தெரியா - மலமனமே
அங்கமே பொய்யாய் அகன்றபோது ஆவிதான்
சங்கமே ஆகத் தகும். 11

ஒட்டி அறிவை உறுமுடலைப் பேதமென
வாட்டுயபேர்க்கு ஆவிவளமாகும் - மூட்டிக்கை
வித்தாரம் செய்து வெறும் பிணத்தைத் தானாக
வைத்தார்க்கு உயிர் ஏன்வரும். 12

மனவாக்குக் காயத்தை மன்னியபின் அல்லால்
தனியே அறியத் தகாதால் - மனவாக்குக்
காயத்துக் கெட்டாக் கருதியதோர் பூரணமாம்
மாயமே ஆவியென மன். 13

உறையுந் தனுவில் உறையும் உயிர்தன்
நிறைவை அறிந்தொருகால் நில்லா - அறையுமுடல்
சேட்டையல்லால் மற்றுயிரின் சீவகமே இல்லையெனக்
காட்டுகையால் ஆவியிலைக் காண். 14

சீவிக்குங் காயம் செடமாமால் சீவகத்தை
ஆவிக்கு நன்காய் அமைப்பதல்லால் - சீவிக்கும்
காயமே தானாய் கருதியவாறு எல்லாம் பொய்
மாயமே என்ன மதி. 15

ஆவியென வேறோபொய் யாக்கையே தானாக
மேவியதே அன்றோ விளம்புங்கால் - ஒவியம்போல்
நீக்கித் தனுவை நிகழறிவைப் பூரனமாய்
ஊக்குவதே ஆவிக்கு ஒழுங்கு. 16

ஒன்றித் தனுவை உறுமதனைப் பேதமெனக்
கொன்றுயிரை வாங்கல் குணமாகும் - நன்றிதனக்கு
உற்றார் தமக்கே உறும்புத்தி ஒவ்வாமல்
அற்றார் தமக்கேத மாம். 17

சோதித்தத் காயத் துடக்கற்றால் தொல்லைமலம்
சேதித்த தாகுமெனச் செப்புநூல் - பேதித்த
ஆவியே தானாய் அடையும் அரனடியும்
மேவியே நிற்கும் விரைந்து. 18

அளந்துடலை நோக்கி அறிவின்வாள் பூட்டிப்
பிளந்ததனை ஆங்கே பிரித்து - வளர்ந்ததனைச்
சுட்டா நிராமயமாய்த் தோன்றாத இன்பமதாய்
எட்டாத பூரணமென்று எண். 19

அறியும் அறிவே அறிவுஅறிய நிற்கும்
பொறியும் பொருளும் பொருந்தச் - செறியுமரன்
காட்டியவா றென்னக் கருதி அறிவதனை
ஈட்டியவா றன்றோ இயல்பு. 20

வாக்குமனக் காயம் மருவா அறிவுபொய்
யாக்கையின்பால் உற்றங்கு அகப்பட்டால் - நீக்கித்
தெரிசித்துத் தன்னைத் திகழ்பரத்தோடு ஒன்றாய்ப்
பரிசித்தல் அன்றோ பயன். 21

அறிவால் பலகாலும் ஆராய்ந்து பார்த்துப்
பிறியாத் தனுவைப் பிரித்துக் - குறியாம்
அறிவோடு அறிவாய் அடங்குவதே முத்தி
நெறியாகும் என்ன நினை. 22

சேமப் படுத்திமலஞ் சிற்றுயிரைத் தன்னெறியில்
காமப் படுத்தியொன்றுங் காட்டாதால் - தீமை
விளையுந் தனுவினுக்கு வேறாய் அறிவோடு
அனையுமே லாமாம் விபு. 23

தன்னைத்தான் என்னா தகுமுடலைத் தானென்னச்
சொன்னத்தால் தீதனைத்துந் தோற்றீயதால் - தன்னை
அறியுமாறு எவ்வாறு அகன்றவுடல் தன்னைப்
பிறியுமா றாமாற் பெறும். 24

அகமோ புறமோ அகம்புறமோ ஆவி
செகமொ தனுவினுக்குத் தேரின் - இகமே
பிறியாத் தனுவைப் பிறத்தறிவை நோக்கில்
அறிவாய் அகம்புறமே யாம். 25

அகமேல் தனுவோடு அழியும் அகத்தின்
புறமே பொறிவழியில் சேரா - அரனோடு
அத்துவித மாமால் அரன்நிறைவோடு ஒன்றாக
ஒத்ததுவாய் நிற்குமென ஓர். 26

யானென்ற காயம் எனதென்றால் யானென்னும்
தானிற்கச் செய்யத் தகுமன்றோ - ஊனின்று
பற்றறவே விட்டறிவாய்ப் பார்க்கில் நிரா தாரமாய்
உற்றதுவே யாகுமென ஓர். 27

எங்கும் இருக்கும் இசைந்ததனு வோடிசைந்து
தங்கி அறியத் தகுவதாம் - மங்குமுட்ல்
சேதித்தா ரன்றோ திருவருளோடு அத்துவிதம்
சாதித்தார் எனனத் தகும். 28

பேதித்துக் காயத்தைப் பின்னமற எவ்விடத்தும்
சாதித்தால் முத்தித் தகைமையாம் - சேதித்த
அங்கத்தால் செய்ததவம் அத்தனையும் முத்திபத
சங்கத்தால் ஆகத் தகும். 29

பொறியனைத்தும் ஒன்றைப் புணராமற்(று) ஆவி
அறிவனைத்தும் நோக்கி அணையும் - பொறியனைத்தும்
ஆற்றார்க்கே அத்துவிதம் ஆகுமாம் நற்றவத்தைப்
பெற்றார்க்கே முத்திபதப் பேறு. 30

சாக்கிரத்தோ(டு) அஞ்சவத்தை தானாவர் தம்முடப்பை
நீக்கியபே ரன்றோ நினையுங்கால் - தூக்கும்
சரியாதி மூன்றில் தகும்பதத்தில் நிற்போர்ப்
பிரியா உடல்பிரியாப் பேர். 31

பெத்தருக்கே காயமெனப் பேசிச் சமயநெறி
மித்தருக்கே இன்றாய் மொழியுமால் - சத்தியமே
மந்திரமே தேகமென மன்னியதும் ஆவிக்குப்
பெந்தமே யாமால் பிழை. 32

அத்துவா ஆறின் அமைந்ததாம் மந்திரத்தைச்
சித்தத் தயலாய்த் தெசித்ததாம் - முத்தர்
நிருமலமே தானாய் நிகழைவமே யாமால்
ஒருமலமும் இல்லையென ஓர். 33

காயம் உயிரென்னக் கருதுங்கால் பேத்தமாம்
தோயுங்கால் ஒன்றாகத் தோற்றுமால் - காய
நடையொருகால் ஆவி நடையொருகா லாகத்
தடையெடுத்து நிற்கத் தகும். 34

ஊனாய்த் திரிந்தங் குழலுமொரு கால்மனுவே
தானாய்த் திரியத் தகுமொருகால் - கோனாகும்
நேயமே தானாக நிற்குமொரு காலுயிர்
காயமேல் உற்ற கடன். 35

ஆகம் திரியாமெய் ஆவிஅல்லால் அங்கத்துப்
போகம் திரியாப் பொறியல்லால் - மோகநிலை
ஆவியே சென்றங்(கு) அடையுமேல் எவ்விடத்தும்
தாவியவை யாகத் தகும். 36

ஆவி தனுவை அடையுங்கால் ஆவியற
மேவித் தனுவாய் விளங்குமால் - ஆவியினை
அக்கையெ சென்றங்(கு) அடையுமேல் ஆக்கையறத்
தாககுமது வாகத் தகும். 37

பூணுந் தனுவே பொறிக்கிடமாம் பொய்யிதெனக்
காணுமவர்க்(கு) அவ்வாறே காண்பதுவாம் - வீணும்
தனதாகி நிற்கும் தகுதியோர் தங்கள்
மனதாகி நிற்கும் மதி. 38

மலமடைய மாயா தனுவிளையும் அந்த
மலமிடையக் காய மனுவாம் - நலமுடைய
ஆக்கையறக் காயம் அருள்தனுவாம் ஓர்தனுவில்
தாக்கியமெய் பாவகத்தால் தான். 39

ஆகமற்ற தாலடைவ(து) ஆகும் அரனாலுமல
பாகமுற்றால் மந்திரத்தின் பண்பாகும் - தேக
மனுவால் துறந்தறிவின் மன்னுமரன் ஞானத்
தனுவாகும் என்னத் தகும். 40

ஆவி தியானத்(து) அடங்காவாம் ஆங்கரனைத்
தாவி மனமுஞ் சருவாவாம் - மேவும்
உடலகலத் தோற்றும் உயிரால் உயிரின்
கடனகலத் தோற்றுமரன் காண். 41

அங்கத்தார்க் காகும் அரிய தியானமலப்
பங்கத்தை மாற்றுதற்குப் பாங்காகும் - துங்க
கருமி தொழிலோடுங் காண்பான் மெய்ஞ் ஞானத்
தருனியுறும் ஞானநூல் தான். 42

கருமி தியானங் கருதியதும் ஞானத்
தருமிநூல் ஓதும் தருக்கும் - தெரியுங்கால்
சாலோக மாதிப் பதநோக்குஞ் சற்குருவால்
நூலோது வார்க்கறிவே நோக்கு. 43

நாட்டமற்றான் ஆங்கவன் போல் நாட்டமற்றார்க் கேமதியைக்
காட்டியதும் உண்டோஅக் கண்ணுடையான் - நாட்டமற
வந்தார்க்குக் காட்ட வழக்குண்டோ ஞானத்தை
நந்தா தவர்க்குரைக்க நன்று. 44

நாட்டம் இருவருக்கும் நண்ணுமென வெண்மதியைக்
காட்டாமல் தானே கருதுமரன் - நாட்டம்
பிரிந்தான் மெய்த் தோற்றத்துப் பின்னொருகால் பெற்றுத்
தெரிந்தான் தெரிவே(து) உரை. 45

சீவிக்குந் காயம் சிவனலவே என்னுமலப்
பாவிகட்கிந் நூலைப் பகரற்க - மேவும்
உயிரே செயலர் றொடுங்கும்போ தீசன்
செயலென்பார்க் கேயுரைக்கச் செய். 46

உபாயநிட்டை வெண்பா முற்றிற்று

உபாயநிட்டை வெண்பா உரைத்தான்நாற் பத்தா(று)
அபாயநிட்டை வாராமல் ஆர்க்கும் - உபாயநிட்டை
வெண்பாவால் ஆவடு தண்டுறையை வெகினர்க்கு
நண்பாகும் அம்பலவா ணன்.