10 அந்த வருஷம் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை வாபஸ் வாங்கினார். இயக்கம் இருந்தவரை சிறைக்குப் போகவும் அடிபடவும் நேர்ந்த தேசியவாதிகள் அனைவரும் இப்போது வெளியே இருந்ததால் - அவர்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு நிறைய வாய்ப்பிருந்தது. ஆன்மா பரிசுத்தமான இலட்சியத்தை நிரூபிக்கக் காந்திமகான் இருபத்தொரு நாள் கடுமையான உண்ணாவிரதம் இருந்தார். அந்தச் சமயங்களில் கிடைத்த ஹரிஜன், சுதந்திரச் சங்கு, காந்தி பத்திரிகைகளின் இதழ்களை ராஜாராமனும் நண்பர்களும் கண்களில் நீர் நெகிழ வாசித்தனர். காந்தியடிகள் சத்தியாக்கிரக ஆசிரமத்தைக் கலைத்த போதும், அரசியலிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்த போது, வேதனையடைந்த தேசபக்தர்கள் மீண்டும், அவர் கிராமக் கைத்தொழில்களில் அக்கறை காட்டித் தொடங்கிய குடிசைத் தொழில் திட்டத்தாலும், மற்றவற்றாலும் ஓரளவு நம்பிக்கை கொள்ள முடிந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் பிருகதீஸ்வரனோடு பம்பாய் காங்கிரசுக்குப் போய் விட்டு வந்திருந்தான் ராஜாராமன். காந்தியின் மன வேதனைகளும், சட்டமறுப்பு இயக்கம் தளர்ச்சி அடைந்ததும், சூழ்நிலைகளை விறுவிறுப்பில்லாமல் ஆக்கியிருந்தன. அந்த வேளையில் மத்திய அசெம்பிளி தேர்தலில் தேசபக்தர்களுக்கு அமோகமான வெற்றி கிடைத்ததால் மீண்டும் ஒரு புதிய உற்சாகம் பிறந்திருந்தது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை வில்லிங்டன் பிரபுவின் தாசர்களாக இருந்த தேசிய எதிரிகள் பலர் தேர்தலில் தோற்றது தேசபக்தர்களின் செல்வாக்கை அதிகமாக்கியது. தேர்தல் வேலைகளாலும், இணையற்ற வெற்றியாலும் தொண்டர்களிடையே மறுபடி விறுவிறுப்பு வந்திருந்தது. மிக முக்கியமான நிகழ்ச்சியாக மகாத்மாவின் தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணம் வாய்ந்தது. அகில இந்திய ஹரிஜன சேவா சங்கத்தாரின் ஏற்பாட்டுப்படி காந்திமகான் தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தார். அவர் மதுரைக்கு வந்த தினத்தன்று நல்ல மழை. முதலில் அவருக்காக ஏற்பாடு செய்த பெருங்கூட்டம் கலைக்கப்பட்டு, மறுநாள் வேறு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் வைத்தியநாதய்யர். மதுரைக்கு மாலை 6 மணிக்கு வருவதாக இருந்த மகாத்மா இரவு பத்தரை மணி வரை வர முடியாமல் போகவே மழையில் பிரயாணம் என்ன ஆயிற்றோ என்று கவலைப்பட்டுக் கூட்டத்தையும் கலைத்துவிட்டு வைத்தியநாதய்யர், சுப்பராமன், ராஜாராமன் எல்லாரும் திருமங்கலம் வரை எதிர் கொண்டு போய்ப் பார்த்தார்கள். காற்றும் மழையுமான அந்த தினத்தில் எதுவும் நினைத்தபடி நடக்கவில்லை. வைகையில் வெள்ளம் கோரமாயிருந்தது. மகாத்மா மதுரை வரும்போது அகாலமாகி விட்டது. ஜார்ஜ் ஜோசப் சார் திருமங்கலத்திலிருந்து கூடவே காந்தியோடு வந்தார். மகாத்மா காந்தி தேசபக்தர் சுப்பராமனின் பங்களாவில் தங்கினார். பெண்களோடு பெண்களாகப் போய், அவருடைய ஹரிஜன் நிதிக்குத் தன் நகைகளில் கணிசமான பகுதியைக் கொடுத்து விட்டு வந்தாள் மதுரம். தன்னிடம் கேட்காமல் தானாகவே அவள் இந்த நல்ல காரியத்தைச் செய்தது ராஜாராமனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ராஜாராமனும், நண்பர்களும் கூட ஒரு பெருந்தொகை திரட்டி ஹரிஜன நிதிக்காக மகாத்மாவிடம் கொடுத்தனர். அப்போது உடனிருந்த டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் திடீரென வாய் தடுமாறி, 'மிஸ்டர் ராஜாராமன்' - என்று கூப்பிடுவதற்குப் பதில் 'மிஸ்டர் காந்திராமன்' - என்று அவனைக் கூப்பிடவே, வைத்தியநாதய்யர் சிரித்துக் கொண்டே, "இப்படியே உன் பெயரை மாற்றிக் கொண்டு விடு! காந்தி மதுரைக்கு வந்ததற்கு அடையாளமாக நீ இதைச் செய்யச் சொல்லித்தான் மிஸ்டர் ராஜன் உனக்கு இப்படிப் பெயர் சூட்டுகிறார்!" - என்றார். ராஜாராமனுக்கு அவர் அப்படி அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. "அப்படியே செய்கிறேன்," என்று சிரித்துக் கொண்டே வைத்தியநாதய்யரிடம் பணிவாகக் கூறினான் அவன். வைத்தியநாதய்யர் ராஜாராமனை மிக உற்சாகமாக மகாத்மாவுக்கு அறிமுகப்படுத்தினார். மறுநாள் காலை மகாத்மா ஒரு ஹரிஜனச் சேரிக்குச் சென்றார். மாலையில் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. மதுரையிலிருந்து அமராவதி புதூர் வரை ராஜாராமனும் மகாத்மாவோடு சென்றான்; அங்கே புதுக்கோட்டையிலிருந்து பிருகதீஸ்வரனும் வந்திருந்தார். இருவரும் மகாத்மாவின் சந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சில மாதங்கள், சுற்றுப்புற ஊர்களான சோழவந்தான், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பெரியகுளம், உத்தமபாளையம் என்று தேசியப் பணிகளுக்காக ராஜாராமனும் நண்பர்களும் அலைந்தனர். பெரியகுளமும், வத்தலக்குண்டும் தேசபக்தி உணர்வில் இயல்பாகவே நன்கு கனிந்திருந்தன. பி.எஸ். சங்கரன், முனகலா பட்டாபிராமையா முதலிய அப்பகுதித் தேச பக்தர்கள் அப்படிப்பட்ட சூழலை உண்டாக்கி வைத்திருந்தனர். ஆலயப் பிரவேசத்துக்காகவும் சில முயற்சிகள் நடந்தன. ஓராண்டுக் காலம் இந்தப் பணிகளில் கழிந்தது.
மதுரம் வீட்டிலேயே வீணை வாய்ப்பாட்டு வகுப்புக்கள் நடத்தத் தொடங்கியிருந்தாள். இடையிடையே கச்சேரிகளுக்கும் போய்விட்டு வந்தாள். தகப்பனார் காலமான கொஞ்ச நாளைக்குள்ளேயே நாகமங்கலத்தோடு அந்த வீட்டின் உறவுகள் விடுபட்டுப் போயின. போக்குவரவும் கூட இரு குடும்பங்களுக்கும் இடையே விட்டுப் போயிற்று. ஜமீன் குடும்பத்துக்கு இந்த உறவைக் காட்டிக் கொள்ளக் கூச்சமாயிருப்பதாகத் தெரிந்தது. தவிர ஜமீந்தாரின் உயிலில் மதுரத்தின் பெயருக்குத் தனியே சொத்து எழுதி வைத்திருந்தது வேறு மனஸ்தாபத்தை ஆழமாக்கி விட்டிருந்தது. குடும்பப் பெண்கள் பலர் ஒண்ணாம் நம்பர் சந்து தேடி வந்து படிக்கக் கூசினர். என்றாலும் ஆசைப்பட்டுத் தேடி வந்து கேட்டவர்களுக்கு மட்டுமே மதுரம் கற்பித்தாள். அப்படிப் படிக்க வருகிறவர்களிடம் அவள் காந்தியைப் பற்றியும், கதர் நூற்பது பற்றியும் கூட எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். சிலர் செவி சாய்க்காவிட்டாலும், பலர் அவள் பிரசாரத்தினாலும் மாறினர். ராஜாராமன் காங்கிரஸ் வேலைகளில் மிக உற்சாகமாக ஈடுபட்டான். மதுரம் தன் மேல் செலுத்திய அன்பையும், பக்தியையும் ஏற்று, அவன் தேசத்தின் மேலும் பொதுக் காரியங்களிலும் பக்தி சிரத்தை காண்பித்தான். பக்தி செய்யப்படுகிறவர்களால்தான் பக்தி செய்ய முடிகிறதென்ற நுணுக்கத்தை அவன் இப்போது அனுபவ பூர்வமாக உணர முடிந்தது. மக்கள் எல்லோரும் தன் மேல் பக்தி செலுத்தினால் அதை ஏற்கும் தலைவன் நாடு முழுவதின் மேலும் பக்தி செய்ய உற்சாகம் பிறக்கிறது. ஒரு பக்தியை ஏற்கும்போது தான் இன்னொரு பக்தி செய்ய ஆர்வம் பிறக்கிறது. மதுரம் அவனைப் பக்தி செய்தாள். அவன் தேசத்தை பக்தி செய்தான். அன்பில் கிடைக்கிற உற்சாகம் எத்தனை அன்புப் பெருக்கை வளர்க்க முடியும் என்பதற்கு அவர்கள் உதாரணமாயிருந்தனர். ஒருவர் அன்பு செய்தாலும், அன்பு செய்கிறவனும் செய்யப்படுகிறவனும் உலகில் இரகசியமாகவே ஒரு சுமுகமான வித்தைப் பயிர் செய்து வளர்த்து விட முடியும் போலிருக்கிறது. உலகில் இரகசியமாகவே பயிராகும் நல்லுணர்வுப் பயிர்களில் மிகப் பெரியது தூய அன்பு தான் என்று தோன்றியது. அடுத்த வருட ஆரம்பத்தில் அவன் காரைக்குடியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸுக்குப் போய்விட்டுத் திரும்பிய போது மதுரத்தின் தாய் தனபாக்கியம் தேக அசௌக்கியப்பட்டு படுத்த படுக்கையாயிருந்தாள். காரைக்குடிக்கு வந்திருந்த பிருகதீஸ்வரன் அவனோடு மதுரைக்கு வந்திருந்தார். காரைக்குடி காங்கிரஸில் தீரர் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜ் காரியதரிசியாகவும் வந்தது ராஜாராமன் உட்பட மதுரைச் சீமைத் தேச பக்தர்களுக்குப் பெரு மகிழ்ச்சியை உண்டாக்கியிருந்தது. மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக ஆசிரமம் அமைப்பதைப் பற்றி ஆலோசனைகளை மீண்டும் நினைவூட்டினார் பிருகதீஸ்வரன். அதைப் பற்றித் திட்டமிடவே அவரை மதுரைக்கு அழைத்து வந்திருந்தான் ராஜாராமன். மதுரத்தின் தாய் படுத்த படுக்கையாயிருக்கவே, அவர்கள் கவனம் ஆசிரம ஏற்பாடுகளில் செல்ல முடியாமல் இருந்தது. மகாத்மாவின் ஆசிபெற்று வைத்தியநாதய்யர் ஆலயப் பிரவேச ஏற்பாடுகளுக்காக அவன் போன்ற தொண்டர்களின் ஒத்துழைப்பை நாடினார். மீனாட்சி கோவிலில் அப்போதிருந்த டிரஸ்டி ஆர்.எஸ். நாயுடு அதற்கு மிகவும் ஒத்துழைத்தார். ஏறக்குறைய அதே சமயம் காந்திமகான் வார்தா சேவாசிரமம் அமைக்கும் முயற்சியில் இருப்பதை அறிந்து தங்கள் முயற்சிக்குச் சுபசூசகமாக நண்பர்கள் அதைக் கொண்டனர். ஏற்கெனவே ராஜாராமனும் பிருகதீஸ்வரனும், ராமசொக்கலிங்கத்தின் விருந்தினராக அமராவதி புதூரில் மகாத்மா வந்து தங்கியிருந்தபோது, இதுபற்றிக் கூறி அவருடைய ஆசியைப் பெற்றிருந்தனர். இப்போது அதைச் செய்ய ஏற்ற தருணம் வந்துவிட்டதாகப் பிருகதீஸ்வரன் கருதினார். சட்டசபை முனிசிபல் தேர்தல்களில் ஈடுபட்டுப் பதவியை அடைவதை விட இப்படிப் பணிகளில் இறங்குவது நாட்டுக்கு நல்லதென்று பிருகதீஸ்வரன் கருதினார். ஜில்லா போர்டு தேர்தல்கள், சட்டசபைத் தேர்தல்களைவிட மகாத்மாவின் சமூக சீர்த்திருத்த லட்சியங்களே இருவரையும் கவர்ந்தன. அடுத்தடுத்துத் தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்த பாபு ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு ஆகியவர்களிடம் இது பற்றிக் கூறி யோசனை கேட்டார்கள் அவர்கள். அவர்களுடைய ஆசியும் கிடைத்தது. லக்னோ காங்கிரஸுக்குப் போகாத குறை நேருவைத் தமிழ்நாட்டில் சந்தித்ததில் தீர்ந்தது போலிருந்தது அவர்களுக்கு. ஒவ்வொரு முறையும் தேர்தல், தலைவர் பதவி போட்டி எல்லாம் ஏற்படக் காங்கிரஸ் இயக்கத்தில் குழுமனப்பான்மை மெல்ல மெல்ல வளருவது அவர்களுக்குக் கவலையளித்தது. மதுரை, காரைக்குடி, வேலூர், வத்தலக்குண்டு ஆகிய இடங்களில் ஒவ்வொரு தலைவர் தேர்தலிலும் இயக்கத்தின் சகோதர பாவமுள்ள தொண்டர்கள் பிரிவதும், கட்சி கட்டுவதும் கண்டு, "ஐயோ! இந்த ஒற்றுமைக் குறைவு பெரிதாகி நாட்டின் எதிர் காலத்தைப் பாதிக்கக் கூடாதே" என்று அவர்கள் கவலைப்பட்டார்கள். ஹரிபுரா காங்கிரஸில் சுபாஷ் பாபு மகாசபைத் தலைமையைப் பெற்றார். அசெம்பிளி தேர்தலில் விருதுபட்டி தேசத் தொண்டரும் நண்பரும் அயராத ஊழியரும் ஆகிய காமராஜ் நாடார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது ராஜாராமனுக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளித்தது. முதல் முதலாகச் சட்டசபை அமைத்த போது ராஜாஜி மந்திரி சபையில் சத்தியமூர்த்தி மந்திரியாக இடம் பெறாதது அந்த மகிழ்ச்சியை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது. ஆனால், அந்த மந்திரி சபை ஆலயப் பிரவேசச் சட்டம் கொண்டு வந்தது உடனடி உதவியாக அமைந்தது. சேலம் ஜில்லாவில் மதுவிலக்கும் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. மாபெரும் தேசிய விரதத்தைப் போலவும், பல கோடி மக்களின் நோன்பைப் போலவும் தொடங்கப்பட்ட காங்கிரஸில், போட்டிகளும் பகைகளும் இலேசாகத் தெரிவதையே பொறுக்க முடியாமல் கலங்கினார்கள் அவர்கள். இந்த தேசிய மகாவிரதம் நாளைய உலகில் வெறும் கட்சியாகி விடக்கூடாதே என அவர்கள் கவலைப்பட்டார்கள். 1933-ல் திரிபுரா காங்கிரஸில் பட்டாபி தோற்று, சுபாஷ் ஜெயித்தது காந்தியடிகளுக்கு வருத்தத்தை அளிக்கவே தலைமை தாங்கிவிட்டுப் பின் சுபாஷ் ராஜிநாமா செய்தார். ராஜாராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி பிருகதீஸ்வரன் மதுரையிலேயே தொடர்ந்து சிறிது காலம் தங்கினார். 1939-ல் இரண்டாவது உலக மகாயுத்தம் தொடங்கியபோது, காங்கிரஸ் மந்திரி சபை பதவிகளை விட்டு வெளியேறியது. அந்த வருஷம் சுபாஷ் மதுரை வந்திருந்தார். வைஸ்ராய் இந்திய விடுதலையைக் கவனிக்க மறுத்ததால், வார்தாவில் கூடிய காங்கிரஸ் தனிப்பட்டவர் சட்ட மறுப்புக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்தது. முதல் சத்தியாக்கிரகியாக வினோபாபாவேயைத் தேர்ந்தெடுக்க முடிவு ஆயிற்று. அப்போது முதல் பிருகதீஸ்வரனும் ராஜாராமனும் ஆசார்ய வினோபாபாவேயுடன் கடிதத் தொடர்பு கொண்டனர். ஆசிரம அமைப்புப் பற்றியும் அவரிடம் யோசனைகள் கேட்டனர். அவரும் விரிவாக எல்லாம் எழுதியிருந்தார். மதுரையிலேயே தங்கி ஆசிரம அமைப்பு வேலைகளைக் கவனித்த பிருகதீஸ்வரன் ஒரு நாள் ராஜாராமனையும் மதுரத்தையும் வைத்துக் கொண்டு சிரித்தபடியே ஒரு யோசனை கூறினார். "நீங்கள் ரெண்டு பேரும் வார்த்தாவுக்குப் போய் மகாத்மாவின் ஆசி பெற்று கலியாணம் செய்து கொண்டால் என்ன?" இதைக் கேட்டு மதுரம் தலைகுனிந்தாள்; சிறிது நேரத்தில் சிரித்துக் கொண்டே படியேறி மொட்டை மாடி வழியே வீட்டிற்கும் ஓடிவிட்டாள். ராஜாராமன் பதில் சொல்லாமல் இருந்தான். பிருகதீஸ்வரன் விடவில்லை, மீண்டும் தொடர்ந்தார். "விளையாட்டுக்குச் சொல்லலை ராஜா! நிஜமாகவே தான் சொல்றேன்..." "நானும் குருசாமியும் இன்னும் நாலைந்து சத்தியாக்கிரகிகளும் சுதந்திரம் கிடைக்கிறவரை கலியாணத்தைப் பற்றி நினைக்கிறதில்லேன்னு மீனாட்சியம்மன் கோவிலில் சத்தியம் பண்ணியிருக்கோம். பத்து வருஷத்துக்கு முன்னே நான் இண்டர் முதல் வருஷத்தில் படித்துக் கொண்டிருந்த போது அந்த சத்தியத்தைப் பண்ணினோம். இந்த நிமிஷம் வரை எங்களில் ஒருவரும் அந்தச் சத்தியத்தை மிறவில்லை..." "அப்படியானால் உனக்குக் கல்யாணம் ஆகறதுக்காகவாவது தேசம் சீக்கிரம் விடுதலையடையணும்னு நான் மீனாட்சியம்மனைப் பிராத்திச்சுக்கிறதைத் தவிர வேறே வழி இல்லை." "சத்தியம் பண்ணிட்டோம்! அதைக் காப்பாத்தியாகணும்..." "நான் மறுக்கலியே! சீக்கிரம் சுதந்திரம் கிடைக்கணும்னுதானே சொன்னேன்..." "சுதந்திரம் கிடைக்கிற விஷயத்திலாவது உங்க பிரார்த்தனை பலிக்கணும் சார்!" "பலிச்சா ஒண்ணு மட்டும் பலிக்காது ராஜா! ரெண்டு பிரார்த்தனையும் சேர்ந்துதான் பலிக்கும்! நீ ரொம்ப பாக்கியசாலி அப்பா! இந்தப் பெண் மதுரம் இருக்கே! இதைப் போல ஒரு சுகுணவதியை நான் பார்த்ததே இல்லை. கடவுளின் படைப்பில் மிக உத்தமமான ஜாதி ஏதாவது தனியாக இருக்குமானால், அதில் இவளுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன் நான்." "உங்கள் ஆசீர்வாதம்..." என்றான் ராஜாராமன். அவன் முகம் அப்போது மிகவும் மந்தகாசமாக இருந்தது. இதழ்களில் அபூர்வமாகப் புன்சிரிப்பும் தெரிந்தது. மதுரையிலிருந்து நாகமங்கலத்துக்குப் போகிற வழியில் மதுரத்துக்குச் சொந்தமான ஜமீந்தார் எழுதி வைத்த ஒரு பெரிய தோட்டம் இருந்தது. மாமரங்களும், நெல்லி மரங்களும், தென்னைக் கூட்டமுமாக இருந்த அந்த இருபத்தைந்து ஏக்கர் பரப்புள்ள தோட்டத்தின் நடுவே ஒரு தாமரைக் குளமும், மிகப் பரந்த விழுதுகளோடு படர்ந்து பெருங் குடை போல் பழங்காலத்து ஆலமரம் ஒன்றும் இருந்தன. அதை ஆசிரமத்துக்குத் தந்துவிடுவதாக மதுரம் சொல்லிக் கொண்டிருந்தாள். தனபாக்கியத்தின் சம்மதம் பெறச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிருகதீஸ்வரனுக்கு அந்த ஆலமரமும் குளக்கரையும் ரொம்பப் பிடித்திருந்தது. அடிக்கடி அதை வியந்து பேசிக் கொண்டிருந்தார். "ஒரு காலத்தில் ஆலமரத்தடிகளில் வளர்ந்த தத்துவங்கள் தான் இன்று பாரதம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இந்த இடத்தைப் பார்த்ததும் எனக்கு வேத காலத்துத் தபோவனங்களை நினைக்கத் தோன்றுகிறது" என்றார் பிருகதீஸ்வரன். "இந்த இடத்தில் ஒரு நாளந்தா சர்வகலாசாலையையே உண்டாக்கி விடலாம்" என்று அடிக்கடி புகழ்வது அவர் வழக்கமாயிருந்தது. "எங்கம்மாவைக் கேக்கணும்கிறதே இல்லை! அவ படுத்த படுக்கையாயிட்டா. இன்னமே பொழச்சா கடவுள் புண்ணியம்தான். உங்களுக்கு அந்த இடம் பிடிச்சிருந்தா நானே பத்திரம் எழுதி சாஸனம் பண்ணிக் கொடுத்துடறேனே," என்று மதுரம் ஆர்வமாகச் சொன்னாலும் பிருகதீஸ்வரன் அப்படிச் செய்யத் தயங்கினார். இதற்குள் தனபாக்கியமே ஒரு நாள் பிருகதீஸ்வரனைக் கூப்பிட்டனுப்பிப் பேசினாள். ரத்தினவேல் பத்தரும் கூட இருந்தார். அப்போது, "மங்கம்மா எல்லாம் சொன்னா! நான் சாகறதுக்குள்ள அந்த வாசகசாலைப் பிள்ளையாண்டானிடம் மதுரத்தைக் கையைப் பிடிச்சு ஒப்படைச்சுடணும். கலியாணம்னு நான் வற்புறுத்தலை. எம் பொண்ணை ஒப்படைச்சுக் 'காப்பாத்து அப்பா!' ன்னு சொல்லிட்டாக் கூட அப்புறம் நிம்மதியா மூச்சை விடுவேன்." தனபாக்கியம் இதைத் தன்னைக் கூப்பிட்டு ஏன் சொல்கிறாள் என்று முதலில் பிருகதீஸ்வரன் தயங்கினார். "தம்பிக்குத் துணையா கூட இருக்கிறவங்களிலே நீங்க தான் வயசு மூத்தவங்க. அதான் பெரியம்மா உங்களைக் கூப்பிட்டுச் சொல்றாங்க. தப்பா நினைக்காதீங்க ஐயா," என்று பத்தர் அதை விளக்கினார். அது தான் சமயமென்று, "இந்தக் கல்யாணத்தை நான் முடிச்சு வைக்கிறேன். ஆனா அதுக்குப் பதிலா நீங்க ஓர் உபகாரம் பண்ணனுமே பெரியம்மா!" என்று சிரித்துக் கொண்டே மாந்தோப்பு நிலத்தைப் பற்றி ஆரம்பித்தார் பிருகதீஸ்வரன். அவள் கூறிய பெருந்தன்மையான பதில் அவரை வியப்பில் ஆழ்த்தியது. "தாராளமா எடுத்துக்குங்க. சந்தோஷத்தோட பத்திரம் எழுதித் தரச் சொல்றேன்" என்றாள் தனபாக்கியம். ராஜாராமனின் சபதம் நிறைவேற வேண்டியதைப் பற்றியும் பிருகதீஸ்வரன் அவளிடம் கூறினார் அதற்கும் அவள் சம்மதித்தாள். தனபாக்கியத்துக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை அவருக்கு. "ஏதோ நீங்க பெரியவங்க வாக்குக் கொடுத்தாச் சரிதான். எங்க சாதித் தொழில்லே விட இஷ்டமில்லே. நானும் அப்படி வாழலே. ஜமீந்தார் கௌரவமா என்னை வச்சிருந்தார். கௌரவமாப் பெத்தேன்; வளர்த்தேன். மறுபடி இந்த நரகத்திலே போய் விழுந்துடாமே கௌரவமா ஒருத்தன் கையிலே ஒப்படைச்சுட்டுச் சாகணும். 'நாகமங்கலம் ஜமீந்தாருக்குப் பொறந்த பொண்ணு ஒண்ணாம் நம்பர்ச் சந்துலே தொழில் பண்றா'ன்னு அவப்பேர் வரப்பிடாது. நீங்க பாத்துக்கணும். மகராசனா இருப்பீங்க ஐயா." "நீங்க சொன்னாக்கூட உங்க பெண் அப்பிடி ஆக மாட்டா அம்மா! கவலைப்படாதீங்கோ! நானே ராஜாராமனுக்குச் சொல்லியிருக்கேன். அவன் கோவில்லே சத்தியம் பண்ணியிருக்காட்டா, நானே திருவேடகம் கோவிலுக்கோ வார்தா ஆசிரமத்துக்கோ கூப்பிட்டுக் கொண்டு போய் நாளைக்கே ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வச்சுடுவேன்," என்றார் பிருகதீஸ்வரன். அவள் குச்சி குச்சியாகத் தளர்ந்த விரல்களைக் கூப்பி அவரை வணங்கினாள். அதற்கு மேல் பேச அவளுக்குச் சக்தியில்லை. அவர் விடைபெற்றுக் கொண்டு, பத்தரோடு புறப்பட்டார். பவித்ரமான மனித இதயங்கள் எங்கெங்கோ இப்படி இருளில் இருப்பதாகத் தோன்றியது அவருக்கு. தனபாக்கியம் இத்தனை மிருதுவான சுபாவமுடையவளாக இருப்பாளென்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. அன்றிரவு ராஜாராமனையும், பிருகதீஸ்வரனையும், பத்தரையும், முத்திருளப்பனையும் தன் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டனுப்பியிருந்தாள் தனபாக்கியம். இதை மங்கம்மா வந்து பத்தரிடம் சொல்லி, பத்தர் மேலே வந்து பிருகதீஸ்வரனிடம் தெரிவித்தார். இரவு அங்கே போனதும் பிருகதீஸ்வரன் தனபாக்கியத்திடம், "என்ன பெரியம்மா, நிச்சயதார்த்த விருந்து வக்கிறீங்க போலிருக்கே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். தனபாக்கியமும் முகம் மலர்ந்தாள். வீடு முழுவதும் மட்டிப் பால் வாசனை கமகமத்தது. அவர்கள் எல்லோரும் போகும்போது மதுரம் தனபாக்கியத்தின் கட்டிலருகே கீழே ஜமுக்காளத்தில் அமர்ந்து, வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். பிருகதீஸ்வரனோடு ராஜாராமனைப் பார்த்ததும் பதறி எழுந்து நிற்க முயன்றவனைக் கையமர்த்தி உட்கார்ந்து வாசிக்கும்படி சொன்னான் அவன். அவர்களும் ஜமுக்காளத்தில் உட்கார்ந்தார்கள். மதுரத்தின் முகத்தில் மணப்பெண்ணின் கவர்ச்சி பொலிந்தது. கூந்தலில் பூக்கள் மணந்தன. "எப்போ முதல் முதலா நீ நூத்த சிட்டத்தோட இவன் கதர்க்கடைக்குப் புடவை வாங்க வந்தானோ, அப்பவே தெரியுமே எனக்கு?" - என்று முத்திருளப்பன் அவளைக் கேலி செய்தார். பிரமாதமாக விருந்து சமைத்திருந்தாள் மங்கம்மாக் கிழவி. விருந்து முடிந்து - மதுரம் சிறிது நேரம் பாடினாள். விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது, "எங்களைப் போலவே பாரத தேசம் சீக்கிரமாக அந்நியர்களிடமிருந்து விடுதலை அடைஞ்சு சுதந்திரம் பெறணும்னு நீங்களும் பிரார்த்திச்சுக்குங்கோ அம்மா. அப்பத்தான் உங்க பெண்ணுக்குக் கலியாணமும் சீக்கிரம் ஆகும்" - என்று படுக்கையில் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருந்த தனபாக்கியத்திடம் சொல்லிவிட்டு வந்தார் பிருகதீஸ்வரன். மறுநாள் அதிகாலையில் ராஜாராமன், பிருகதீஸ்வரன், முத்திருளப்பன் மூவரும் ஆசிரமம் அமைய இருந்த அந்த மாந்தோப்புக்குச் சென்றார்கள். பர்ண சாலைகள் மாதிரி முக்கால் அடி கனத்துக்குச் சம்பங்கோரை வேய்ந்து குடிசைகளாகக் கட்டிடங்களை அமைப்பது - எளிமையைக் காட்டுவதோடு செலவிலும் சிக்கனத்தை உண்டாக்கும் என்றார் பிருகதீஸ்வரன். ஆலமரமும் தாமரைப் பூக்குளமும் அப்படியே இருக்க வேண்டுமென்றும் கூடியவரை பச்சை மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முடிந்தால் மரங்களை மேலே விட்டு விட்டு அடிமரம் கட்டிடத்திற்குள் தூண் போல் அப்படியே இருக்கும்படியாகவே சார்ப்பை நெருக்கிக் கூரை வேய்ந்துவிட வேண்டும் என்றும் கூட அவர் அபிப்பிராயப்பட்டார். ஒரு சிறு மரத்தை வெட்டுவதைக் கூட அவர் விரும்பவில்லை. மாந்தோப்பின் தென்புறச் சரிவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, நெடுந்தூரம் ஓடையாகவே வந்து பின்பு வைகையில் கலந்துவிடும் ஒரு பெரிய கால்வாய் பாய்ந்து கொண்டிருந்தது. அந்த ஓடைக்குப் 'பன்னீர் ஓடை' என்பதாகத் தோட்டத்துக் காவல் ஆள் பெயர் கூறினான். தோட்டத்திற்குள் இருந்து ஓடைக்குள் இறங்க இரண்டு மூன்று இடங்களில் ஜமீந்தாரே எப்போதோ கச்சிதமான படிகளைக் கட்டிவிட்டிருந்தார். தோட்டத்துக்குள்ளேயும் இரண்டு மூன்று இடங்களில் பெரிய பெரிய இறங்கு கிணறுகள் இருந்தன. கிணற்றின் தண்ணீர் கரும்பாக இனித்தது. எதிர்க்கரையில் ஓடையில் மறுபுறமாக ஒரு கரடு இருந்தது. அதை மலையென்றும் சொல்ல முடியாது. பெரிய மரங்கள் அடர்ந்திருக்கவில்லை என்றாலும், அந்தக் கரடு ஏதோ காட்டுச் செடிக் கொடிகளால் மண் தெரியாதபடி பசுமையாயிருந்தது. சிறிய மலை போன்ற கரடும் அடுத்து ஓடையும், அதையடுத்து மாந்தோப்புமாக அந்த இடம் அற்புதமான இயற்கை அழகு கொழிப்பதாகத் தோன்றியது. சர்க்கா நூற்பது, கதர் நெய்வது, தவிர முதலில் ஓர் ஆரம்பப் பள்ளி நடத்தவும், பின்பு படிப்படியாக உயர்தரப் பள்ளி, கிராமீயக் கலாசாலை ஆகியவற்றை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். படிப்பறிவில்லாத ஏழைகளுக்கும் படிக்க வசதியற்ற நாட்டுப் புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அறிவு புகட்டுவது ஆசிரமத்தின் முக்கிய நோக்கமாக அமைய வேண்டும் என்று கருதினார் பிருகதீஸ்வரன். மதுரை திரும்பியதும் ஆசிரமத்துக்குப் பெயர் வைப்பது பற்றி யோசித்தார்கள். மூத்தவரும் அநுபவஸ்தரும் ஆகிய வைத்தியநாதய்யரிடம் போய்க் கேட்கலாம் என்றான் ராஜாராமன். அவர்கள் வைத்தியநாதய்யரைச் சந்திக்கச் சென்றார்கள். அப்போது மதுரை வந்திருந்த மட்டப்பாறை வெங்கட்ராமய்யரையும் சந்திக்கச் சொல்லி அவர்களுக்கு அவர் கூறினார். ஆசிரமத்தின் பெயர் சம்பந்தமாக யோசனை கேட்டபோது, "சத்தியம் - தன்னைத் திருத்த உதவுவது. சேவை - பிறரைச் சுகம் காணச் செய்ய உதவுவது. இந்த இரண்டுமே காந்தீய மகாவிரதங்கள். சத்தியமும், சேவையும் உள்ளங்கையும் புறங்கையும் போல் சேர்ந்திருக்க வேண்டும். உங்கள் ஆசிரமத்துக்குச் 'சத்திய சேவாசிரமம்' என்று பெயர் வைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்" - என்றார் வைத்தியநாதய்யர். அந்தப் பெயர் அவர்களுக்கும் பிடித்திருந்தது. பெயரைச் சொல்லிவிட்டு அவர்கள் கேட்காமலேயே ஆசிரமத்துக்காக வைத்துக் கொள்ளும்படி ஐநூறு ரூபாய் பணமும் கொடுத்தார் வைத்தியநாதய்யர். ராஜாராமன் தயங்கினான். "பெரியவர் ஆசிர்வாதம் போலக் கொடுக்கிறார், வாங்கிக் கொள்," என்றார் பிருகதீஸ்வரன். ராஜாரமன் வைத்தியநாதய்யரை வணங்கிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டான். "தீர்க்காயுசா இருந்து நாட்டுக்குத் தொண்டு செய்," என்று அவனை வாழ்த்தினார் அவர். அப்புறம் தொடர்ந்து இக்னேஷியஸ், சுப்பராமன் ஆகியோரையும் போய்ப் பார்த்தார்கள். பிருகதீஸ்வரனும் முத்திருளப்பனும் கட்டிட வேலையில் பழக்கமுள்ளவரும், கொஞ்சம் சுதேசி மனப்பான்மை உள்ளவருமான கொத்தனார் ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றார்கள். ரத்தினவேல் பத்தர் சுண்ணாம்புக்காரத் தெருவில் இருக்கும் சுப்பையாக் கொத்தனார் என்பவரைத் தேடிக் கூப்பிட்டுக் கொண்டு வந்தார். சுப்பையாக் கொத்தனார் கதர் கட்டியிருந்தது அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாய் இருந்தது. வானம் தோண்டித் தரை மட்டம் வரை கல்கட்டு, அப்புறம் செங்கல், கூரைச் சார்புடன் ஆறு, தனித் தனிக் கட்டிடங்கள், ஒரு பிரேயர் ஹால், ஆலமரத்தைச் சுற்றி வட்டமாக மேடை என்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. சில மரச் சாமான்களும், மேஜை, நாற்காலிகளும், கைராட்டினங்களும், நெசவுச் சாதனங்களும், தறிகளும், தேனீ வளர்க்கும் மரக்கூடுகளும் கூடத் தேவைப்பட்டன. ஆசிரமத்தின் சிக்கனமான தேவைகளுக்கே எல்லாமாகச் சேர்ந்து இருபதாயிரம் ரூபாய் வரை வேண்டியிருக்கும் போலிருந்தது. அப்போது போத்தனூரில் அவிநாசிலிங்கம் செட்டியார் நடத்தி வந்த ராமகிருஷ்ண வித்தியாலயத்தை முன் மாதிரியாகக் கொள்ளுமாறு நண்பர்கள் சிலர் யோசனை கூறினர். அடுத்த வெள்ளிக்கிழமையே தாமதமின்றி மாந்தோப்பை ஆசிரமத்துக்காகப் பத்திரம் பதிந்து சாஸனம் செய்து கொடுத்துவிட்டாள் மதுரம். வீட்டுக்கு வரவழைத்து பிருகதீஸ்வரன் முன்னிலையில் மதுரமே ராஜாராமனிடம் அதைக் கொடுத்தாள். அடக்க ஒடுக்கமாக அவனைப் பாதங்களில் சாஷ்டாங்கமாக வணங்கி, எழுந்து அந்தப் பத்திரத்தை மதுரம் கொடுத்த விதம் பிருகதீஸ்வரன் இதயத்தை நெகிழ வைத்தது. "இதே தெருவில் உன்னையொத்த வயதிலுள்ள பெண்கள் எப்படி எப்படி எல்லாம் சொத்துச் சேர்க்கலாம் என்று அலைந்து கொண்டிருக்கும்போது, நீ உன்னுடைய சொத்துக்களைப் பவித்திரமான காரியங்களுக்காக ஒவ்வொன்றாய்த் தியாகம் செய்து கொண்டிருக்கிறாய் அம்மா! கடவுள் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார். மீனாட்சி கிருபையால் உனக்குச் சகல ஐஸ்வரியமும் பெருகும்," என்றார் பிருகதீஸ்வரன். மதுரம் அவரையும் வணங்கி எழுந்து, அடக்கமாகக் குனிந்த தலைநிமிராமல் நின்றாள். 'என்னுடைய சகல ஐஸ்வரியமும் இவர்தான்' என்று ராஜாராமனைச் சுட்டிக்காட்டிச் சொல்லிவிடத் தவிப்பது போல அவளது இதழ்கள் துடிதுடித்தன. மன்மதனின் ஆசை நிறைந்த விழிகளின் சிவப்பைப் போல சிவந்திருந்த அந்த இதழ்களில் நாணி மறையும் புன்னகை ஒன்று ஒரு சீராக எரியும் குத்துவிளக்கின் ஒளியைப் போல் நிரந்தரமாக ஒளிர்ந்து கொண்டிருப்பதாக ராஜாராமனுக்குத் தோன்றியது. எல்லாப் பற்களும் தெரியும்படி அவள் அரட்டையாகச் சிரித்து, அவன் பார்த்ததேயில்லை. விலை மதிப்பற்ற வெண் முத்துக்களைப் பாதுகாப்பது போல் பற்கள் தெரியாத இங்கிதச் சிரிப்பே அவள் அலங்காரமாயிருந்து வருவதை அவன் அவ்வப்போது கவனித்திருக்கிறான். பத்திரம் பதிவாகிக் கிடைத்த தினத்தன்றும் அவர்கள் அங்கேயே சாப்பிட வேண்டுமென்று தனபாக்கியம் பிடிவாதம் செய்தாள். அதையும் அவர்கள் மறுக்க முடியவில்லை. மறுநாள் காலை பிருகதீஸ்வரனும், சுப்பையாக் கொத்தனாரும், முத்திருளப்பனும், கட்டிட அளவு வேலைகளுக்காக மாந்தோட்டத்துக்குப் போயிருந்தார்கள். ராஜாராமனுக்குக் காலையிலிருந்து இலேசான ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. முந்திய முறை மாந்தோப்புக்குப் போன போது, ஓடையில் புதுத் தண்ணீரில் குளித்தது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல், நீர் கோத்துக் கொண்டு விட்டது. அவன் வாசகசாலையிலேயே படுத்துக் கொண்டிருந்தான். மதுரம் அவன் நெற்றியில் போடுவதற்காகச் சாம்பிராணிப் பற்று அரைத்து, கொதிக்க வைத்துக் கொண்டு வந்தாள். "பிருகதீஸ்வரன் இங்கே வந்து தங்கினப்புறம், நீ எங்கிட்டப் பேசறதையே விட்டாச்சு இல்லையா மதுரம்?" "பேசாட்டா என்ன? அதான் விடிஞ்சு எழுந்திருந்தா நாள் தவறாம, 'தெலியலேது ராமா'ன்னு கதறிண்டிருக்கேனே; அது உங்க காதிலே விழறதோ இல்லையோ?" -கேட்டுக்கொண்டே சுடச்சுட நெற்றியில் பத்தைப் போட வந்தவளிடமிருந்து விலகி உட்கார்ந்தான் அவன். வளையணிந்த தந்தக்கை பின் வாங்கியது. "ஏன்? நான் போடப்படாதா?" "இப்படி வச்சுடு; நானே எடுத்துப் போட்டுக்கறேன்." "முடியாது! நீங்களே உங்க நெத்தியிலேயும் தலையிலேயும் போட்டுக்க வசதியாயிருக்காது. எனக்கே இப்படி வேளையிலே அம்மாவோ, மங்கம்மாவோதான் போட்டு விடுவாங்க. பத்து வேறே கொதியாகக் கொதிக்கிறது. சூடு தாங்காது உங்க கைக்கு..." அதைக் கேட்டு ராஜாராமன் சிரித்தான். "என் கை தாங்காத சூட்டை உன் கை தாங்க முடியும் போலேருக்கு?" -பதில் சொல்லமுடியாமல் இதழ்கள் பிரியாத அந்தப் புன்னகையோடு தலைகுனிந்தாள் மதுரம். "தேசம் சுதந்திரமடையறவரை 'எந்தப் பெண்ணின் கையும் இந்த சரீரத்தில் படவிடுவதில்லை' என்று சத்தியம் பண்ணியிருக்கேனாக்கும்..." "சேவை செய்கிறவர்களைத் தடுப்பதற்கு எந்தச் சத்தியத்துக்கும் உரிமையில்லே...!" -இதற்கு அவன் பதில் சொல்ல முடியவில்லை. மீண்டும் அவளுடைய நளினமான கோமள மென் விரல்கள் அவன் நெற்றியை அணுகியபோது அவன் தடுக்கவில்லை. வெண்ணெய் திரண்டது போன்ற அந்த மிருதுவான வளைக்கரம் நெற்றியில் பட்டபோது இதமாயிருந்தது. பற்றும் கூடக் குளிர்ந்திருப்பது போல் உணர்ந்தான் அவன். பற்றுப் போட்டு முடிந்ததும் சிரித்துக் கொண்டே அவனை அவள் ஒரு கேள்வி கேட்டாள்: "உங்களை ஒண்ணு கேக்கணும் எனக்கு..." "கேளேன். வரங்கள் எதையும் கொடுக்கும் சக்தி இல்லாத சாதாரணத் தேசத் தொண்டன் நான்... நான் கொடுக்க முடியாத பெரிய வரமாகப் பார்த்து நீ கேட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை மதுரம்!" அவள் புன்னகை பூத்தாள். "அது ஏன் அப்படிச் சொல்லணும் நீங்க? 'எந்தப் பெண்ணும்' என்னைத் தொட முடியாதுன்னீங்களே! உங்களை என்னைத் தவிர வேறொருத்தியும் தொடக் கூடாதுன்னு நான் கதறிக் கதறிப் பாடறதைக் கேட்டும், நீங்க அப்படிச் சொல்லியிருக்கப்படாது. எத்தனை தினங்கள் என் பூக்களால் உங்களுடைய இந்த அழகிய பாதங்களை அர்ச்சித்து, பக்தியை அச்சாரம் கொடுத்திருக்கேன்? அப்படியிருந்தும் நீங்க இது மாதிரிப் பேசலாமா? 'நீ அதுவரை தொட முடியாது'ன்னு மட்டும் தான் நீங்க சொல்லணும்! இன்னொருத்தர் தொடறதுங்கற பிரஸ்தாபமும் கூடவே கூடாது." "தப்புத்தான்! வாய் தவறிச் சொல்லிவிட்டேன் மதுரம். ஆனா, நீ மட்டும் 'சூடு தாங்கற சக்தி உன் கைக்கு மட்டும்தான் உண்டு' என்பது போலப் பேசலாமா?" "அதுலே என்ன தப்பு? சேவை செய்யறவங்களுக்குச் சூடு தெரியாது. பக்தி சிரத்தையோட மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கிறவர்களுக்குக் கால் சுடறதில்லையே?" "ஏதேது? உங்கிட்டப் பேசி ஜெயிக்க முடியாது போலிருக்கே?" "இருக்கலாம்! ஆனா, உங்களை ஜெயிக்கிற நோக்கம் எனக்கு ஒரு நாளும் கிடையாது! என் தவமே உங்களுக்காக சகலத்தையும் தோற்கணும்கிறதுதான்..." -இப்போதும் பதில் பேச முடியாமல் மெய்சிலிர்த்துப் போய் இருந்தான் அவன். பற்று உறைந்து முகமும் நெஞ்சும் வேர்த்துக் கொட்டியது. சிரிக்காமல், அந்த வாக்கியங்களை ஒவ்வொரு வார்த்தையாக, அவள் நிதானமாய்க் கூறிய போது, அவள் கண்களில் ஈரம் பளபளப்பதை அவன் கவனித்தான். இப்படி ஒரு பிறவியைப் பலமுறை அவளுக்காகவே - அவளுடைய சேவைக்காகவே - அடைய வேண்டும் போல, அந்த வாக்கியங்களால் இந்த விநாடியில் அவனைத் தவிக்கச் செய்தாள் மதுரம். அவள் பற்றுக் கொதித்துக் கொண்டு வந்த கரண்டியோடு எழுந்து போன பின்பும், நீண்ட நேரம் அந்தத் தவிப்பிலேயே இருந்தான் அவன். படியேறித் திரும்பிச் சென்ற போது கருநாகமாகச் சுழன்ற அவள் பூச்சூடிய கூந்தல் பின்னல், வீணையாய் இயங்கிய சரீர நளினம், நிருத்தியமாக நடந்த நடையின் அழகு, சுகந்தமாய்ச் சுழன்ற நறுமணங்கள், எல்லாம் 'நாங்கள் உனக்குச் சொந்தம்' - 'நாங்கள் உனக்குச் சொந்தம்' - என்று அவனை நோக்கி மௌனமாகத் தவிப்பது போலிருந்தது. இவ்வளவு பெரிய தாபத்தை அவன் இதற்கு முன் எப்போதுமே உணர்ந்ததில்லை. சிறையில் பாடிய கவிதை நினைவு வந்தது. மதுரம் சொல்லியபடி பூண்டு, மிளகு, தேசாவரம் எல்லாம் சேர்த்துப் பகல் உணவில் பத்தியமாக ஒரு ரசம் வைத்திருந்தாள் மங்கம்மா. அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்ட போது ஜுரத்துக்கு அது மாற்றாக இருந்தது. அவன் அன்று பகலில் நன்றாக அயர்ந்து தூங்கினான். மாலை அவன் கண் விழித்தபோது பக்கத்து மாடியில் மதுரம் வீணை வகுப்பு நடத்திக் கொண்டிருப்பதை அநுமானிக்க முடிந்தது. சாயங்காலத் தபாலில் வந்த கடிதங்கள் மேஜை மேல் இருந்தன. அவற்றில் ஒரு கடிதம் தமிழ்நாடு மாகாண காங்கிரஸின் அடுத்த கூட்டம் பற்றியும், தலைவர் தேர்தல் பற்றியும் கூறியது. இன்னொரு கடிதம் சென்னையிலிருந்து, தலைவர் தேர்தலில் என்ன மாதிரி யாரை ஆதரிக்க வேண்டும் என்பது பற்றிச் சென்னை போயிருந்த மதுரைத் தேச பக்தர் ஒருவர் எழுதியது. அவற்றை அவன் படிக்கத் தொடங்கியபோதே பிருகதீஸ்வரனும், முத்திருளப்பனும், சுப்பையாக் கொத்தனாரும் திரும்பி வந்தார்கள். கடிதங்களைப் பிருகதீஸ்வரனிடம் கொடுத்தான் அவன். |