11 தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் தலைமைக்கு அந்தத் தடவை சி.பி. சுப்பையாவும், காமராஜும் போட்டியிட்டார்கள். போட்டியில் சி.பி. சுப்பையாவுக்கு நூறு ஓட்டுக்களும் காமராஜுக்கு நூற்று மூன்று ஓட்டுக்களும் கிடைத்தன. காமராஜ் வெற்றி பெற்றார். தங்கள் பக்கத்து மனிதர் தலைமைப் பதவியை ஏற்க நேர்ந்ததில் ராஜாராமன், முத்திருளப்பன், குருசாமி எல்லாருக்கும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. "மதுரை மாகாண மகாநாட்டில் ஏற்பட்ட கட்சி கட்டும் மனப்பான்மை ஒவ்வொரு தலைவர் தேர்தலின் போதும் பெரிசாகிக் கொண்டே வருகிறதே என்று தான் கவலையாக இருக்கிறது. காங்கிரஸ் என்ற தேசிய மகாவிரதம் பங்கப் படக்கூடாதே என்று நான் பயப்படுகிறேன். காமராஜும் அப்பழுக்கற்ற தேசபக்தர். சி.பி. எஸ்ஸும் அப்பழுக்கற்ற தேசபக்தர். இருவரில் ஒருவரைப் போட்டியின்றி தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் என்ற சத்திய விரதத்தைச் சுதந்திரமடையும் முன்பு - இப்போதே தலைவர் தேர்தல்கள் எப்படி எப்படி எல்லாம் குலைக்க முயல்கின்றன பாரு!" என்று பிருகதீஸ்வரன் மட்டும் கொஞ்சம் மனங்கலங்கினார். தேர்தல் முடிந்ததுமே சி.பி. சுப்பையா பெயரைப் பிரேரேபித்திருந்த முத்துரங்க முதலியார் கமிட்டி உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக வந்த செய்தி இன்னும் வருத்தத்தை அளிப்பதாயிருந்தது. அந்தச் சமயம் சென்னை கார்ப்பரேஷன் மேயராயிருந்த சத்தியமூர்த்திக்கு இதைப் பற்றிக் கவலை தெரிவித்து, வருத்தத்தோடு ஒரு கடிதம் எழுதினான் ராஜாராமன். அதே கடிதத்தில் பிருகதீஸ்வரனும் கையெழுத்திட்டிருந்தார். யுத்த நிலைமை பற்றிப் பேசுவதற்காக அந்த வருடம் காந்தி வைஸ்ராயைச் சந்தித்தார். தனிப்பட்டவர் சத்தியாக்கிரகத்துக்கு அநுமதி கிடைத்திருந்ததால், தேசத் தொண்டர்கள் செயலாற்றுவதற்கு ஆர்வமாயிருந்தார்கள். அந்தச் சமயம் ஆசிரம வேலைகளுக்காக வெளியே தேசபக்தியுள்ள செல்வந்தர்களிடம் கூட உதவி கேட்க ஏற்ற சூழ்நிலை உடையதாக இல்லை. ராஜாராமன் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தான். மேலூர் நிலம் வீடு விற்றப் பணம் கொடுத்து வைத்திருந்ததில் பெரும் பகுதியை மதுரத்திடமிருந்து வாங்கி, வசூலான சிறு தொகையையும் சேர்த்து, நிரந்து மகாத்மாவின் ஹரிஜன நிதிக்காகக் கொடுத்தாயிற்று. அதைப் போல இரண்டு மடங்கு, வாசகசாலை, துண்டுப் பிரசுரம், முத்திருளப்பன் போன்றவர்களுக்கு உதவி, என்று மதுரமே இதற்குள் நிறைய அவள் கையை விட்டுச் செலவழித்திருக்க வேண்டுமென்று கணக்குப் பார்த்த போது புரிந்தது. அவன் பணமும் தவிர அதிகமாகவே கையிலிருந்து செலவழித்திருந்தாள் அவள். போதாதற்குப் பெரிய சொத்தாகிய மாந்தோப்பையும் இப்போது ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டாள். ஆசிரமக் கட்டிட ஏற்பாட்டுக்குப் பணமுடை பற்றிப் பிரஸ்தாபித்தாலும் மதுரம் ஏதாவது செய்வாள் என்றாலும், அவளுக்குச் சிரமம் தரக்கூடாது என்பதற்காக அதைப் பற்றியே அவன் அவளிடம் பேச்செடுக்க விரும்பவில்லை. வைத்தியநாதய்யர் நல்ல மனத்தோடு கொடுத்த ஐநூறு ரூபாய் மட்டும் கையில் இருந்தது. பணத்துக்கு ஒரு ஏற்பாடு செய்து ஆசிரம வேலையைப் பிருகதீஸ்வரனிடம் ஒப்படைத்து விட்டால் - தானும், முத்திருளப்பனும், தனி நபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கலாம் என்ற எண்ணம் ராஜாராமனுக்கு இருந்தது. ஆனால், பணத்திற்குத்தான் ஒரு வழியும் புரியவில்லை. அவர்கள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில் குருசாமி, தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கோர்ட்டுக்கு முன் மறியல் செய்து சிறை சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. தானும், முத்திருளப்பனும் தயங்கும்படி நேர்ந்ததற்காக ராஜாராமனுக்கு நாணமாயிருந்தது. பிருகதீஸ்வரன் நடுவே புதுக்கோட்டை போய் ஒரு வாரம் இருந்துவிட்டுத் திரும்பினார். வரும்போது அவர் ஒரு ஆயிரம் ரூபாய் ஆசிரமத்துக்காகக் கொண்டு வந்தார். ஆசிரமத்தின் அமைப்புப் பற்றியே அவர் சிந்தனை இருந்ததால், தனி நபர் சத்தியாக்கிரகத்தில் அவர் அக்கறை காட்டவில்லை. ராஜாராமனும், முத்திருளப்பனும் சத்தியாக்கிரகத்தை விட மனமின்றி, எப்படியும் அதில் ஈடுபடுவதென்று உறுதியாயிருந்தனர். அந்தத் துடிப்பை அவர்களால் அடக்க இயலவில்லை. "அம்மா நிலைமை மோசமாயிருக்கு! எப்ப என்ன நேருமோ? இனிமே பிழைப்பாள்னு எனக்கே தோணலை. இந்த நெலமையிலே என்னை அநாதையா விட்டுட்டு நீங்களும் ஜெயிலுக்குப் போயிடாதீங்கோ," - என்று மதுரம் ஒருநாள் சாயங்காலம் அவன் மட்டும் தனியாயிருந்த போது வந்து அழுதாள். அவளுக்கு ஆறுதலாகப் பேசி அனுப்பினான் அவன். அவளுடைய கவலையும், பயமும் அவனுக்குப் புரிந்தது.
ஆசிரம வேலையாகப் பணம் திரட்டும் சிரமங்களையும், பிறவற்றையும் மட்டும் அவன் கூடிய வரை அவளிடம் சொல்லாமலே தவிர்த்து விட்டான். ஆசிரம முயற்சிக்கு மட்டப்பாறை ஐயர் சிறிது பண உதவி செய்தார். வந்தேமாதரம் செட்டியார் என்ற பாலகிருஷ்ணன் செட்டியாரும், டி.கே. ராமாவும், திலகர் வாசகசாலையைத் தேடி வந்து ஆளுக்கு ஐம்பது ரூபாய் வீதம் நன்கொடை கொடுத்து விட்டுப் போனார்கள். பெரிய குளத்திற்கும், சிவகங்கைக்கும் வசூல் நோக்கத்தோடு சென்றால், டாக்டர் கோபாலசாமியைச் சேர்ந்தவர்களும், ஆர்.வி. சுவாமிநாதனும் ஏதாவது உதவிகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது ராஜாராமனுக்கு. ஆசிரமத்தில் ஹரிஜன முன்னேற்றம், பின் தங்கியவர் கல்வி முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வக்கீல் சோமசுந்தர பாரதியும் அவர் மாப்பிள்ளை கிருஷ்ணசாமி பாரதியும், அவர் மனைவி லட்சுமி பாரதியும் கருதினார்களென்று தெரிவித்தார்கள் நண்பர்கள். பிருகதீஸ்வரனும், ராஜாராமனும் ஆசிரம விஷயமாகப் பலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. சிலர் பண உதவிக்குப் பதில் கருத்துக்களை உதவி செய்ய முடிந்ததும் பயன்படவே செய்தது. பண உதவி செய்கிற நிலையில் எல்லோரும் இல்லை.
ஒருநாள் பிருகதீஸ்வரனும், ராஜாராமனும், வடக்கு மாசி வீதியில் வந்து தங்கியிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைச் சந்திக்கப் போயிருந்தனர். தேவருடன் சசிவர்ணத் தேவரும் இருந்தார். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டு சாயல்குடி விவேகாநந்தர் வாசக சாலையில் முதலாவது ஆண்டு விழாவில் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய வீரவுரை விவேகாநந்தரே நேரில் வந்து பேசுவது போல் அவ்வளவு சிறப்பாக இருந்ததென்று காமராஜும் சீநிவாசவரதனும் அடிக்கடி சிறைவாசத்தின் போது சக சத்யாக்கிரகிகளிடம் வியந்து கூறியதுண்டு. ராஜாராமனுக்கு இப்போது அது நினைவு வந்தது. தேவர் தமது கம்பீரமான தோற்றத்தோடு சத்திய ஆவேசம் நிறைந்த குரலில் அவர்களோடு உரையாடினார். உதவிகளுக்கும் வாக்களித்தார். பாரதா முத்துத் தேவர் குடும்பத்தினரையும் பார்க்கச் சொல்லி அவரே யோசனையும் கூறினார். தேவரைப் பார்த்தபின் மௌலானா சாகிப் மூலம் சில முஸ்லீம் தேசபக்தர்களையும் சந்தித்தார்கள் அவர்கள். இக்னேஷியஸ் முதலிய கிறிஸ்தவ சகோதரர்களும் முடிந்தவரை உதவினர். திருமங்கலத்தில் விசுவநாத தாஸோடு முன்பு எப்போதோ பல காங்கிரஸ் கூட்டங்களில் சந்தித்திருந்தவர்கள் சிலரும் இதற்காக முன் வந்து உதவினர். அப்போதே தனி நபர் சட்டமறுப்பில் யார் யார் முதல் அணியாக ஈடுபட்டுச் சிறை சென்றுவிட்டார்களோ அவர்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. எனவே, ஆசிரம முயற்சி போதுமான பண வசதியின்றித் தள்ளிப் போடப்பட்டது. தங்கள் நிதிக்குப் பணம் கேட்காததோடு, அப்போது கவர்னர் வசூலித்துக் கொண்டிருந்த யுத்த நிதியை எதிர்த்துத் தேசபக்தர்கள் பிரசாரமும் தொடங்கினர். மறு வாரமே ராஜாராமனும், முத்திருளப்பனும், கலெக்டர் ஆபீஸ் முன்பு மறியல் செய்து கைதானார்கள். மதுரத்துக்கோ, பத்தருக்கோ, பிருகதீஸ்வரனுக்கோ தெரிந்தால் ஒருவேளை அவர்கள் தங்களைத் தடுக்கக் கூடும் என்று மறியல் விஷயத்தை அவர்கள் முன்கூட்டியே யாருக்கும் தெரியவிடவில்லை. இருவரும் கைதான பின்பே மற்றவர்களுக்கு அச்செய்தி தெரிந்தது. திருச்சி ஜெயிலில் கடுமையான 'குவாரன்டைன் பிளாக்' அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது அவர்களோடு திருச்சி சிறையில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்தார் வேதரத்தினம், வி.வி. கிரி, டி.எஸ். அவினாசிலிங்கம், சுப்பராயன், அனந்த சயனம், பக்தவத்சலம் போன்ற தலைவர்களும் இருந்தனர். அவன் திருச்சிக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பின், தனபாக்கியம் காலமாகிவிட்ட செய்தியைப் பிருகதீஸ்வரன் தந்தி மூலம் மதுரையிலிருந்து தெரிவித்தார். மதுரம் என்ன வேதனைப்படுவாள் என்பதை அவனால் கற்பனையே செய்ய முடியாமலிருந்தது. பிருகதீஸ்வரனும், பத்தரும் அவளுக்குத் துணையாயிருந்து ஆறுதல் கூறுவார்கள் என்றாலும், அவள் மனம் தான் இல்லாத தனிமையை எப்படி எப்படி உணரும் என்றெண்ணிய போது அவனுக்கு மிக மிக வேதனையாயிருந்தது. அவன், மதுரத்துக்குக் காண்பித்து ஆறுதல் கூறும்படி சிறையிலிருந்து பிருகதீஸ்வரனுக்கு உடனே ஒரு கடிதம் எழுதினான். எவ்வளவோ பரிவாகவும், கனிவாகவும் எழுதியும் கூட, அந்தக் கடிதமே தான் அப்போது அருகில் இல்லாத குறையைப் போக்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்குமென ராஜாராமனால் நம்ப முடியவில்லை. தான் முதலில் நினைத்திருந்ததற்கு மாறாகத் தனபாக்கியம் மிகமிக நல்ல மனமுள்ளவளாகப் பழகிய பின்பு இப்போது அவளுடைய மரணம் அவன் மனத்தைக் கலங்கச் செய்தது. ஜமீந்தாருடைய மரணத்துக்குப் பின்னே அவள் தளர்ந்து விட்டாள் என்று தோன்றினாலும், அவள் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்ந்திருந்தால் மதுரத்துக்குப் பெரிதும் ஆறுதலாயிருக்கும் எனத் தோன்றியது. "அம்மா நெலைமை மோசமாயிருக்கு. இனிமேல் பிழைப்பான்னு தோணலை. இந்த நெலைமையிலே நீங்களும் என்னை அநாதையா விட்டுவிட்டு ஜெயிலுக்குப் போயிடாதீங்கோ" - என்று மதுரம் ஒரு நாள் தன்னிடம் அழுதிருந்ததை இப்போது ஜெயிலில் நினைவு கூர்ந்தான் அவன். வயது ஆனபின் இறந்தாலும் தாயின் மரணம் எத்தனை மூத்த பின்பும் சகித்துக் கொள்ள முடியாதது. மதுரம் இதில் மிகவும் அதிர்ந்து போயிருந்தாள் - என்பது அவனுக்குப் புரிந்தது. "வீட்டிலேயே மங்கம்மாவும் மதுரத்தோட மாமாவும் இருக்காங்க. போதாததுக்குப் பிருகதீஸ்வரன் மதுரையிலேயே இருந்தார். பத்தர் வேறே ஆறுதல் சொல்வார்! நீ கவலைப்படாம இரு. நீ மனோதிடத்தை விட்டுடாம இருக்க வேண்டியது இப்ப முக்கியம்," - என்று சிறையில் உடனிருந்த முத்திருளப்பன் அவனிடம் கூறினார். அடுத்த மாதம் பிருகதீஸ்வரனும் பத்தரும் அவர்களைப் பார்த்துவிட்டுப் போகத் திருச்சி ஜெயிலுக்கு வந்திருந்தார்கள். மதுரம் அவர்களிடம் அவனுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பி இருந்தாள். கடிதத்தில் அம்மாவின் மரணத்துக்கு வருந்திக் கலங்கியிருந்ததோடு, அவன் உடல் நலனையும் விசாரித்திருந்தாள் அவள். நாகமங்கலம் ஜமீந்தாரிணியும், தனக்கு ஒரு விதத்தில் சகோதரர்கள் முறையுள்ள ஜமீந்தாரின் மக்களும் மனம் மாறிப் பெருந்தன்மையோடு அம்மாவின் மரணத்துக்குத் துக்கம் கேட்டுவிட்டுப் போக வந்திருந்ததையும் கடிதத்தில் அவனுக்கு மதுரம் எழுதியிருந்தாள். தான் விடுதலையாகி வரும்வரை மதுரையிலேயே தங்கி இருக்கும்படி பிருகதீஸ்வரனை வேண்டிக் கொண்டான் அவன். "நீயே என்னை ஊருக்குத் திரும்பிப்போ என்று சொன்னாலும் நான் இப்போ மதுரையிலிருந்து போக மாட்டேன் ராஜா! ஆசிரமக் கட்டிட வேலையை ஆரம்பிச்சாச்சு. சுப்பையாக் கொத்தனார் வானம் தோண்டிக் கட்டு வேலை தொடங்கிவிட்டார்." "பணம்...?" "வசூலாகி கையிலே இருந்ததோட - வேற பணமும் கொஞ்சம் கிடைச்சது..." "கிடைச்சுதுன்னா... எப்படி?" "மதுரம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாள்! உங்கிட்டச் சொன்னா, நீ கோவிச்சுப்பியோன்னுதான் சொல்லத் தயங்கினேன்..." "நீங்க செய்தது எனக்குப் பிடிக்கலை சார்! மாந்தோப்பை எழுதி வாங்கினோம். அதுக்கு முன்னாடியே வாசகசாலைக்கும் எங்களுக்கும், ஹரிஜன நிதி, ஆலயப் பிரவேச நிதின்னு மதுரம் நிறையச் செய்தாச்சு. இன்னமும் அவளையே சிரமப்படுத்தினா எப்படி? அது நல்லாவா இருக்கு?" "இதை அவ சிரமமா எடுத்துண்டால்தானே? 'இது தான் என் சந்தோஷம்! நீங்க ஆசிரம வேலையைத் தொடங்குங்கோ'ன்னு மதுரமே எங்கிட்ட வந்து கெஞ்சினா, நான் என்ன செய்ய முடியும் ராஜா?" "இதுக்குப் பயந்துதான் நான் அவகிட்ட ஆசிரம வேலை பற்றி பணக் கஷ்டத்தைச் சொல்லாமலே வைத்திருந்தேன்." "நான் மட்டும் சொன்னேனா என்ன! 'ஏன் ஆசிரம வேலை நின்னிருக்கு?'ன்னு மதுரமாகவே எங்கிட்ட வந்து கேட்டு உதவறபோது, வாங்கிக்காமல் வேறென்ன செய்ய முடியும்? தவிர நீ நினைக்கிற மாதிரி நாம் இனிமே மதுரத்தை அந்நியமா நினைக்க வேண்டியதில்லை என்று அபிப்பிராயப்படுகிறேன் நான். நீ மட்டும் இதுக்கு ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியலே ராஜா?" "....." அவருடைய கேள்விக்கு ராஜாராமனால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அன்று அவன் மதுரத்துக்கு ஒரு கடிதம் எழுதி அவரிடம் கொடுத்திருந்தான். அதில் அவள் செயலைப் பாராட்டி வியந்து எழுதியிருந்தான். என்றாலும் மனத்துக்குள் கவலையாகத்தான் இருந்தது. அதற்குப் பின் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்துப் பத்தர் மட்டும் தனியே அவர்களைப் பார்க்க வந்து விட்டுச் சென்றார். மதுரம் அவரிடம் நிறையத் தகவல்கள் சொல்லி அனுப்பியிருந்தாள். அவனும் பதிலுக்கு அவளிடம் சொல்லுமாறு நிறைய ஆறுதல் கூறி அனுப்பினான். முத்திருளப்பனும் அவனும் விடுதலை ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் பத்தர் வந்த போது ஆசிரம வேலை முடிந்து, பிருகதீஸ்வரன் ஹரிஜனக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடமும், சர்க்கா-நெசவுப் பிரிவும் அங்கே தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார். அன்றே - அந்த விநாடியே - ஆசிரமத்துக்குப் போய்ப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது அவர்களுக்கு. முத்திருளப்பனும் ராஜாராமனும் அன்றிலிருந்து நாட்களை எண்ணினார்கள். கைதாகிய நாளிலிருந்து சரியாக ஒன்பதாவது மாதம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகி மதுரை போய் அவன் மதுரத்தைக் காணச் சென்ற போது, அவள் வீட்டு முன் கூடத்தில் ஏற்கனவே மாட்டியிருந்த நாகமங்கலத்தாரின் பெரிய படத்தருகே இப்போது தனபாக்கியத்தின் படமும் இணையாக மாட்டப் பட்டிருப்பதைக் கண்டான். மதுரத்துக்கு அவனைப் பார்த்ததும் அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. "அம்மா போயிட்டா!" என்று சிறு குழந்தையாக அப்போதுதான் புதிதாக அதை உணர்ந்தவள் போன்று அவனிடம் கதறினாள். மனம் திறந்து பிறக்கும் சோகம் இதயத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு முன் தவிர்க்கப் பட முடிவதில்லை என்பதை அவள் நிலையிலிருந்து அவன் நன்றாக உணர்ந்தான். முத்திருளப்பன் முறைப்படி அவளிடம் துஷ்டி கேட்டார். பிருகதீஸ்வரன் வாசகசாலையில் இல்லை. அவர் ஆசிரமத்திலேயே வசிக்கத் தொடங்கி சில வாரங்களுக்கு மேல் ஆவதாக, மதுரமும் பத்தரும் தெரிவித்தார்கள். "நீங்களும் அங்கே போய் ஆசிரமத்திலேயே தங்கி விடக்கூடாது. இங்கே தான் இருக்கணும். இல்லாட்டா நான் இந்தத் தனிமையில் உருகிச் செத்தே போவேன்," என்று மதுரம் ராஜாராமனிடம் முறையிட்டாள். அவன் அவள் வேண்டுகோளை மறுக்கும் சக்தியற்றவனாக இருந்தான். அடிமையாகிற சமர்ப்பண சுபாவத்துடனும், அடிமையாக்கி விடுகிற பிரியத்துடனும் எதிரே நிற்கும் அந்த சௌந்தரியவதியிடமிருந்து மீள முடியாமல் தவித்தான் ராஜாராமன். முத்திருளப்பன் ரயிலிலிருந்து இறங்கி நேரே வடக்குச் சித்திரை வீதிக்கே வந்திருந்தாராகையினால், ராஜாராமனிடமும், மதுரத்திடமும் சொல்லிக் கொண்டு பகல் சாப்பாட்டுக்குப் பின் தம் வீட்டுக்குப் போனார். முத்திருளப்பன் போன பின் தனியே அவனிடம் ஏதோ பேச வந்தவர் போல் மேலே வந்த பத்தர், தம் பேச்சை எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாத மாதிரி தயங்கித் தயங்கி நின்றார். அவருடைய குறிப்புப் புரிந்து ராஜாராமனே அவரைக் கேட்டான். "என்ன சமாசாரம் பத்தரே? சொல்ல வந்ததைச் சொல்லுங்களேன்..." "ஒண்ணுமில்லீங்க தம்பி..." "சும்மா சொல்லுங்க..." "பெரியம்மாவும் போயாச்சு. இனிமே நீங்க தான் 'அதை' ஆதரவா கவனிச்சுக்கணும்..." "....." அவருடைய வேண்டுகோள் மிகவும் கனிவாயிருந்தது. மதுரத்தைக் கவனித்துக் கொள்ளும்படி அவர் தனக்குச் சிபாரிசு செய்வதைக் கேட்டு உள்ளூறச் சிரிப்பாயிருந்தாலும் அவருடைய அந்தரங்கமான பாசவுணர்வு அவனை வியக்கச் செய்தது. நிஜமான அன்பு என்பது மனிதர்களை மீண்டும் மீண்டும் குழந்தைகளாக்குவதை அவன் கவனித்தான். தன் சொந்த மகளைப் பற்றி அக்கறைப்படுவது போல் பத்தர் மதுரத்திடம் அக்கறை காட்டினார். ஆசிரமம் தொடங்கி நடந்து கொண்டிருந்தாலும், அவன் வாசகசாலையிலேயே தங்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்க வேண்டுமென்றும் அவரே கேட்டுக் கொண்டார். "இதை மதுரமே எங்கிட்டச் சொல்லியாச்சு." "அது எனக்கும் தெரியும் தம்பீ! ஆனா, நீங்க அந்த வேண்டுகோளைப் புரிஞ்சுக்கணும்கிறதை நானும் ஞாபகப்படுத்த ஆசைப்படறேன்..." "சரி! இந்த விஷயத்திலே மட்டும் உங்க ரெண்டு பேர் வார்த்தையையும் நான் தட்டலை, இப்பத் திருப்தி தானே உமக்கு?" பத்தரின் முகம் மலர்ந்தது. அன்றிரவு மதுரத்தைக் கொஞ்ச நேரம் வீணை வாசிக்கச் சொல்லி வேண்டினான் ராஜாராமன். "அம்மா போனதிலிருந்து நான் வாத்தியத்தைத் தொடலே! நீங்களே ஆசைப்பட்டுக் கேட்கிறபோது நான் மாட்டேங்கப்படாது. இதோ வாசிக்கிறேன்." "வேண்டாம்னு இருந்தா நான் வற்புறுத்தலே மதுரம். எனக்காக அதை மாத்திக்க வேண்டாம்..." "இல்லே! உங்களுக்கில்லாததுன்னு எதுவும் கிடையாது எங்கிட்ட. நான் இதிலே வாசிக்கறதே உங்களைத்தான். வாசிக்கிற ராகம் எல்லாமே நீங்க தான் எனக்கு..." "நீ வாசிக்காட்டாலும் நான் எங்கேயிருந்தாலும் எப்படி இருந்தாலும், எனக்கு உன் குரல் தான் கேட்கிறது மதுரம்! போன தடவை ஜெயில்லே இருந்தப்ப உன்னை நினைச்சு, ஒரு கவி கூடக் கட்டினேன்..." "நீங்க எங்கிட்ட இதுவரை சொல்லவே இல்லியே! எங்கே, அதை முழுக்கச் சொல்லுங்கோ கேட்கலாம்..." "இப்ப எனக்கே சரியா நினைவு இல்லையே! இரு... அதை மறுபடி நெனைச்சுச் சரிப்பார்த்துக்கிறேன்..." "வேடிக்கைதான்! பாட்டு எழுதினவருக்கே அது நினைவில்லையா, என்ன? பாட்டை மறந்த மாதிரி என்னையும் ஒருநாள் மறந்துடப் போறீங்க!" "தப்பு! அது மட்டும் என்னால் முடியவே முடியாது. பாட்டுத்தான் மறந்ததே ஒழிய அர்த்தம் மறக்கலே. பாட்டும் கொஞ்சம் கொஞ்சமா இப்ப நினைவு வந்திடும். மறக்காது..." "யோசிச்சுப் பாருங்கோ..." "இதோ ஞாபகம் வரது, சொல்றேன் கேளு..." பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக நினைத்து அவளுக்குச் சொன்னான் அவன்.
"எல்லையிலாத தோர் காட்டிடை - நள் இருள் என்றும் ஒளி என்றும் சொல்ல ஒணாத தோர் மயக்கத்தே - இளஞ் சோகக் குயில்ஒன் றிசைக்கிறது - அதன் சோகம் முழுதும் புரியுதிலை சுவடு முழுதும் தெரியுதிலை தொல்லைப் பழங் காலமுதலாய் - எனைத் தேடி அலையும் குரல் சொல்லைக் குழைத் தாளுங்குரல் - ஒரு சோகம் முதிர்ந்து முதிர்ந்தூறிப் பல்லாயிர மூழிகள் தொடர்ந்து பாடிப் பசித்த குயிலின் குரல்..." "பிரமாதமாக வந்திருக்கிறது! பசித்த குரல் என்று சொல்லியிருக்கிறீர்களே; அது என்னுடைய குரல் தான்..." வீணை வாசித்த பின் - இந்தப் பாடலைத் தானே பாடிப் பார்க்கும் ஆசையை அவனிடம் வெளியிட்டாள் அவள். "உன் இஷ்டம். ஒரு வேளை உன் குரலினிமையினால் இதுவும் ஒரு மகா காவியமாகி விடலாம். பாடேன்," என்றான் ராஜாராமன். அவன் சொன்னதே பலித்தது. தன் குரலினிமையால் அந்தப் பாடலை அவள் ஒரு மகா காவியமாகவே ஆக்கிக் காட்டினாள். 'பாடிப் பசித்த குயிலின் குரல்' - என்று கடைசி வரியை அவள் முடித்த போது - ஆத்மாவுக்கே பசிப்பது போல் ஒரு இனிய சோகத்தைப் பரவச் செய்தது அவள் சங்கீதம். அன்றே அந்தப் பாடலைத் தன் நாட்குறிப்பில் நினைவாக எழுதிக் கொண்டான் ராஜாராமன். மறுநாள் காலை அவனும், முத்திருளப்பனும் ஆசிரமத்துக்குச் சென்று பிருகதீஸ்வரனைச் சந்தித்தார்கள். அந்த மாந்தோப்பு இப்போது ஓரளவு மாறிக் காட்சியளித்தது. மாந்தோப்பை ஒட்டியிருந்த கிராமத்தார்களுக்குக் கூட 'அங்கே யாரோ காந்திக்காரங்க பள்ளிக்கூடம் நடத்தறாங்க' - என்பது போல் ஆசிரமத்தின் பெருமை பரவியிருந்தது. மாமரங்களின் இடையே பர்ணசாலைகள் போல் கூரைச் சார்ப்புக்கள் தெரிந்தன. தாமரைக் குளத்தருகே மேடையில் பிருகதீஸ்வரன் மாணவர்களை அணிவகுக்கச் செய்து, 'வெள்ளைத் தாமரைப் பூவில்' என்ற பாரதியின் பிரார்த்தனை கீதத்துடன் பிரேயர் வகுப்பைத் தொடங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்திருந்தார்கள். பிருகதீஸ்வரன் அவர்களை நெஞ்சாரத் தழுவி வரவேற்றார். மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். தங்கள் நினைவிலும் கனவிலும் மட்டுமே இருந்த சத்திய சேவாசிரமம் உருவாகி விட்டதைக் கண்டபோது ராஜாராமனுக்குப் பூரிப்பாயிருந்தது. சுதேசிக் கல்வி அங்கே எப்படி எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் என்று பிருகதீஸ்வரனே காந்தீயக் கோட்பாடுகளை வைத்து ஒரு திட்டம் வகுத்திருந்தார். அவரைத் தவிர வேறு இரண்டு மூன்று தேசபக்தர்களும் ஆசிரமவாசிகளாகி இருந்தார்கள். ஆசிரமத்தின் தேவைகளுக்கான உணவுப் பொருள்கள் அங்கேயே பயிரிடப்பட்டன. நாலைந்து பசுக்கள், தேன் கூடுகளை வளர்க்கும் தேனீப் பண்ணை எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைத்து, உணவு தயாரித்தார்கள். ஒரே பந்தியாக அமர்ந்து, கட்டுப்பாட்டோடு சுத்தமாக உண்டார்கள். உணவுப் பந்தியே ஒரு பிரார்த்தனைக் கூடம் போலச் சிந்தாமல் சிதறாமல், துப்புரவாக இருந்தது. ஒரே சீரான கதர் உடையுடன் ஆசிரமத்துப் பிள்ளைகளையும், மற்றவர்களையும் பார்க்கும் போது ஒரு சத்திய இயக்கத்தை நோன்பாக அங்கீகரித்துக் கொண்டவர்களைப் பார்ப்பது போல் பெருமிதமாக இருந்தது. அன்று பகலில் ராஜாராமனும், முத்திருளப்பனும் அங்கேயே நீராடி ஆசிரமத்துப் பந்தியிலேயே பகல் உணவு கொண்டார்கள். "ஆசிரம வேலைகளுக்காக மதுரத்துக்கிட்டப் பணம் வாங்கினதே இப்படி ஒரு சத்திய விரதத்தை நாள் கடத்தாமே தொடங்கறதுக்காகத்தான். அதுக்காக நீ என்னை மன்னிக்கணும்," என்றார் பிருகதீஸ்வரன். "அப்படிச் சொல்லாதீங்க. நீங்க செய்திருக்கிறது பெரிய சாதனை. நான் ஏதோ, எப்பவோ சொன்னதை நீங்க மனசிலே வைச்சுக்கப்படாது, சார்..." என்றான் ராஜாராமன். முத்திருளப்பன் மறுநாளிலிருந்து ஆசிரமத்தின் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று பிருகதீஸ்வரன், ராஜாராமன் இருவருமே அவரை வேண்டினார்கள். அவர்கள் சொல்லுமுன் தாமாகவே அந்த முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிவித்தார் அவர். அன்று மாலையில் ஓடக்கரையில் உட்கார்ந்து சூரியாஸ்தமனத்தின் அழகை இரசித்துக் கொண்டே நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆசிரமத்தின் எதிர்காலம், அதன் நிதி வசதிகளைப் பெருக்குவது, அதை ஒரு காந்திய மகாவித்யாலயமாக மாற்றும் இலட்சியம், எல்லாவற்றையும் பற்றி அந்தரங்க சுத்தியோடு மனம் விட்டு உரையாடினார்கள் நண்பர்கள். முத்திருளப்பனும், ராஜாராமனும் அன்றிரவு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டு, மறுநாள் காலை மதுரைக்குத் திரும்பினர். அடுத்த நாள் மீண்டும் முத்திருளப்பன் தொடர்ந்து ஆசிரமத்தில் பணிபுரிய அங்கேயே வந்துவிட வேண்டும் என்றும், வாசகசாலை, இயக்க வேலைகள் எல்லாவற்றையும் ராஜாராமனிடமும் குருசாமியிடமும் விட்டுவிட வேண்டும் என்று புறப்படும்போது பிருகதீஸ்வரன் வற்புறுத்திச் சொல்லியிருந்தார். முத்திருளப்பனும் அதற்கு மகிழ்ச்சியோடு இணங்கிவிட்டுத்தான் புறப்பட்டார். ஆனால், குருசாமிக்கும் இயக்க வேலையை விட ஆசிரம வாசமே பிடிப்பதாகத் தெரிந்தது. அன்று மதுரையில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி பரவி எல்லாரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது. சிறையில் இருந்த காமராஜ் விருதுபட்டி முனிசிபல் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சிறையில் உள்ள ஒருவரையே விசுவாசத்தோடு தேர்ந்தெடுத்திருந்த காரியம் தேச பக்தர்களுக்கு உற்சாகம் அளிப்பதாயிருந்தது. ஆசிரமத்திலிருந்து திரும்பிய தினத்தன்று பகலில், மதுரத்தினிடம் நீண்ட நேரம் ஆசிரமம் அமைந்திருக்கும் பெருமைகளையே சொல்லிச் சொல்லி வியந்து கொண்டிருந்தான். "இந்த ஆசிரமத்தை இப்படி ஏற்பாடு பண்ணியிருக்காட்டா அவருக்குப் பைத்தியமே பிடிச்சிருக்கும்; அவ்வளவு உற்சாகமாக அலைஞ்சார் பிருகதீஸ்வரன். அந்த உற்சாகத்துக்காகவே, எல்லா நகையையும் வித்துப் பணம் கொடுக்கணும்னு தோணித்து எனக்கு..." என்றாள் மதுரம். அப்போது அவளைப் பார்த்த அவன், அவள் மூக்கில் பேஸரி, கால்களில் கொலுசுகள், கைகளில் தங்க வளைகள், காதில் வைரத்தோடு எதுவுமே இல்லாமல் மூளியாயிருப்பதை முதல் முறையாகக் கூர்ந்து கவனித்தான்... தான் வந்த முதல் தினத்தன்று அம்மாவின் மறைவிற்குத் துக்கம் கொண்டாடுவதற்காக அவள் ஒன்றும் போட்டுக் கொள்ளாமல் கழற்றி வைத்திருப்பதாக அவன் நினைத்திருந்தான். இப்போது தான், அவ்வளவு நகையும் பணமாக மாறி, ஆசிரமமாகியிருப்பது புரிந்தது. மேலும் பேசியதில் நகை விற்ற பணம் போதாதென்று வீட்டையும் அடமானம் வைத்துப் பெரும் தொகை வாங்கியிருப்பது தெரிந்தது. அவன் அதற்காக அவளைக் கடிந்து கொண்டான். அவளோ நிஷ்களங்கமாகப் புன்னகை பூத்தாள். "பணத்துக்கு என்ன? நாளைக்கே கச்சேரிக்குன்னு கிளம்பிட்டா சம்பாதிக்கலாம்... பணம் என்னிக்கும் கிடைக்கும். நல்ல மனுஷாளும், நல்ல காரியமும் தான் எப்பவும் கிடைக்கமாட்டா... நல்ல மனுஷாளும், நல்ல காரியமும் எதிர்ப்படற போதே பணத்தைச் செலவழிச்சுட்டா அதைப் போல நிம்மதி வேறே இல்லை," என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு மறுமொழி கூறினாள் அவள். பெரிய பெரிய தியாகங்களைப் பண்ணிவிட்டு, அவை தியாகம் என்ற நினைவே இல்லாமல் அவன் முன் பேதமையோடு சிரித்துக் கொண்டு நின்றாள் மதுரம். 'இந்தப் பேதைக்கு எப்படி நன்றி சொல்லுவது?' என்று தெரியாமல் மலைத்து நின்றான் ராஜாராமன். முத்திருளப்பன் அடுத்த நாளிலிருந்து சத்திய சேவாசிரமத்தின் ஆசிரியர்களில் ஒருவராகி விட்டார். குருசாமி தையல்மிஷினோடு ஆசிரமத்திற்குப் போய்விட விருப்பம் தெரிவித்தான். ஆசிரமத்திலேயே சர்க்கா நூற்றல், நெசவு எல்லாம் இருந்ததால், உடைகள் தைக்கக் கொள்ள ஒருவர் வேண்டுமென்று பிருகதீஸ்வரன் சொல்லிச் சொல்லித் தன்னையறியாமலே அவனுக்கும் அந்த ஆவலை வளர்த்து விட்டார். ராஜாராமன் வாசகசாலையோடும், நகர காங்கிரஸ் கமிட்டி வேலைகளோடும், தனித்து விடப்பட்டது போன்ற உணர்ச்சியை அடைந்தான். அவனுடைய உலகம் திடீரென்று சின்னஞ் சிறியதாகிவிட்டது போலிருந்தது. பத்தர் முன்போல் அதிகம் கடைக்கு வருவதில்லை. வயதாகி விட்டதால் மகனிடமும் வேலையாட்களிடமும் கில்ட் கடையை விட்டுவிட்டு, காலையில் ஓடுகால் ஸ்நானம், வடக்கு மாசி வீதி ராமாயணச் சாவடியில் சனிக்கிழமை பஜனை, ராமாயணம் கேட்பது - என்று மாறிப் போய்விட்டார். எப்போதாவது அவனையும் மதுரத்தையும் பார்த்துப் பேச வருவதைத் தவிரச் சித்திரை வீதியில் அவரைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. அந்த வருடம் சித்திரையில் தம்முடைய இரண்டாவது பெண்ணுக்குக் கலியாணம் கட்டிக் கொடுத்துவிட வேறு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் பத்தர். ராஜாராமன் பெரும்பாலான நேரத்தைக் கமிட்டி ஆபீஸிலும் மீதி நேரத்தை வாசகசாலையிலும் கழிக்க நேர்ந்தது. இதற்கிடையே தனபாக்கியம் காலமாகி ஆறுமாதத்துக்கு மேலாகியிருந்ததால் மதுரம் கச்சேரிகளுக்கு மீண்டும் போய்வரத் தொடங்கியிருந்தாள். இந்தக் கச்சேரிகளுக்குத் தேடி வருகிற தனவந்தர்களிடம் பேசி முடிப்பதை அவன் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டாள் அவள். அதனால் அந்த வேலை வேறு ராஜாராமனிடம் வந்து சேர்ந்தது. கச்சேரி கேட்டு அவள் வீட்டுக்கு வருகிறவர்களை வாசகசாலைக்கு அனுப்பினாள் அவள். அவன் ஒப்புக் கொண்டு சம்மதித்தால் தான் அவள் அந்தக் கச்சேரிக்குப் போவாள். அவனுக்குப் பிரியமில்லை, பிடிக்கவில்லை என்றால், அவள் அந்த இடத்துக்குப் போவதில்லை. மாமா செவிடு என்பதாலும் மங்கம்மாவுக்குப் பேசி முடிவு செய்யத் தெரியாது என்பதாலும் அவனை வேண்டி இந்த ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள் அவள். ராஜாராமனும் மறுக்காமல் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. ஓரளவு சந்தோஷத்துடனேயே அவளுக்காக அதைச் செய்தான் அவன். பத்தரின் இரண்டாவது பெண் கலியாணத்துக்காக அவரிடம் கொடுக்கச் சொல்லி, ஒரு ஐந்நூறு ரூபாயை அவனிடம் கொடுத்தாள் மதுரம். "நீயே கொடேன் மதுரம்! பத்தரை வரச் சொல்றேன்" என்றான் அவன். "அது முறையில்லே! நீங்கதான் கொடுக்கணும். நானும் வேணா கொடுக்கறப்போ உங்ககூட இருக்கேன்" என்றாள் அவள். அவள் மனம் புரிந்து சிரித்துக் கொண்டே அதற்குச் அம்மதித்தான் அவன். பத்தர் மகள் கலியாணத்திலும், சித்திரா பௌர்ணமித் திருவிழா, ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் - எல்லாவற்றிலுமாக ஒரு மாதம் கலகலப்பாயிருந்தது. அந்த மாதமும் அடுத்த முகூர்த்த நாட்கள் உள்ள மாதங்களுமாக மதுரத்துக்கு நிறையக் கச்சேரிகள் இருந்தன. எவ்வளவு பணம் வந்தாலும், வீட்டுச் செலவு, உடன் வாசிக்க வருபவர்கள் பணம் போக ஒரு பகுதியை ஆசிரமத்துக்குக் கொடுத்து வந்தாள் அவள். கடனுக்கும் வட்டி கொடுக்க வேண்டியிருந்தது. "தேசம் விடுதலை அடைகிறவரை பிரம்மச்சாரியாயிருக்க ஆசைப்பட்டவனை உன்னைத் தொடாமலே நீ குடும்பஸ்தனாக்கிவிட்டாய் மதுரம்? நீ பண்ணினது உனக்கே நல்லாயிருக்கா?" - என்று ஒரு நாள் அவளிடம் வேடிக்கையாகக் கேட்டான் ராஜாராமன். அவள் சிரித்தாள். "உங்க சத்தியத்துக்கு நான் துணையிருக்கிறேனே தவிர அதைப் பங்கப்படுத்தணும்னு நெனைக்கக்கூட இல்லே." "ஆனாலும், உனக்கு நெஞ்சழுத்தம் அதிகம்..." "உங்களுக்கு மட்டும் எப்பிடியாம்? -இதைக் கேட்கும் போது அவள் முகம் மிக மிக அழகாயிருந்ததை ராஜாராமன் கவனித்தான். தினம் மாலையில் கமிட்டி அலுவலகத்துக்குப் போவது அந்நாட்களில் அவனது வழக்கமாயிருந்தது. அப்படிப் போயிருந்த ஒரு நாளில் - விருதுப்பட்டி காமராஜ் விடுதலையாகி வந்து, தான் சிறையிலிருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்ட முனிசிபல் சேர்மன் பதவியை ஒரே ஒரு நாள் வகித்த பின், ராஜிநாமா செய்துவிட்ட சமாசாரம் வந்தது. எல்லோருக்கும் வியப்பை அளித்த செய்தியாயிருந்தது அது. பதவியை விடத் தேசபக்தி பெரிதென்றெண்ணிய அந்த மனப்பான்மையைக் கொண்டாடி, நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டான் அவன். |