13 பத்தரின் மகன் ராமையாவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாராமன் ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது சாயங்காலமாகிவிட்டது. சில வளர்ச்சிகளும் மாறுதல்களும் காலப்போக்கில் நேர்ந்திருந்தன. ஆசிரமம் இருந்த மாந்தோப்புக்கு அருகிலிருந்த கிராமத்தின் ஒரு புறமாகச் சென்ற மெயின் ரோடிலிருந்து ஆசிரமத்துக்குள் செல்ல இரண்டு பர்லாங் தூரத்துக்கு முன்பு ஒற்றையடிப் பாதைதான் உண்டு. இப்போது அந்த இரண்டு பர்லாங் தூரத்துக்கும் செம்மண் சாலை போடப்பட்டிருந்ததை ராஜாராமன் கவனித்தான். பிருகதீஸ்வரனும் நண்பர்களும் அவனைப் பார்த்த போது அவனிருந்த கோலம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. "என்ன ராஜா இது? ஏன் இப்படி எலும்புந் தோலுமா ஆயிட்டே? ஜெயில்லே உடம்பு சௌகரியமில்லாம இருந்தியா?" "உடம்பு, மனசு எல்லாம் தான் சரியில்லே. ஒருத்தரிட்ட இருந்தும் கடிதாசு இல்லே. நானும் ஒருத்தருக்கும் கடிதாசு போட முடியலே. பார்க்கவும் முடியலே. அதனாலேயே தவிச்சுப் போனேன்..." "நான் உனக்கு ரெண்டு மூணு கடிதாசு போட்டேனே, ராஜா. பத்தர் காலமானது பற்றி, மதுரத்தோட அசௌக்கியம் பற்றி, ஆசிரம நிலைமை பற்றி எல்லாம் எழுதியிருந்தேனே?..." "ஜெயில்லே 'சென்சார்' ரொம்பக் கடுமை. ஸ்காட்னு ஒரு கிராதகன் அமராவதியிலே ஜெயில் அதிகாரியா இருந்தான். யாருக்கும் கடிதம் வரவும் விடலை. யாரும் கடிதம் போடவும் விடலை. எங்களுக்கு உலகமே தெரியாதபடி பண்ணிப்பிட்டான். நாடு கடத்தி ஏதோ தீவுலே கொண்டு போய் வச்ச மாதிரி இருந்தது." "சொல்ல முடியாத கஷ்டமா இருந்திருக்கும். ரெண்டரை வருஷத்துக்கு மேலே நரக வேதனை அநுபவிச்சிருப்பே. இங்கே எங்களுக்கெல்லாம் சதா உன்னைப் பற்றித்தான் நெனைப்பு. நாங்க மனசுனாலே தான் உன்னை நெனைச்சுக் கவலைப்பட்டோம். மதுரமோ மனசு, உடம்பு எல்லாமே உருகித் தவிச்சுத் தவிச்சு மாஞ்சுது. இப்பிடி ஒரு பிரியம் வச்சுத் தவிக்கிற மனித ஜன்மத்தை உலகத்திலே பார்க்கவே முடியாது. மாந்தோப்பை ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுத்தப்பவும் சிரிச்சிக்கிட்டே கொடுத்தது. நீ தனிப்பட்டவர் சத்தியாக்கிரகத்திலே ஜெயிலுக்குப் போயிருந்தப்ப வீட்டை அடமானம் வச்சு ஆசிரமச் செலவுக்குப் பணம் கொடுத்தப்பவும் சிரிச்சுக்கிட்டே கொடுத்தது. கடைசியா, வீடு ஜப்திக்கு வந்தப்பவும் சிரிப்பு மாறாத முகத்தோடதான் வாடகை வீட்டுக்குப் போச்சு. மங்கம்மாக் கிழவியும், மாமனும் போய்த் துக்கம் தாங்காம தனியா இருந்ததும் நீ ஜெயிலுக்குப் போயிட்டதுமாச் சேர்ந்தே அதை உருக்கி ஒடுங்கப் பண்ணிட்டது. மனசை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன். உடம்பை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன். இந்தப் பிரியமோ மனசு, உடம்பு, எலும்பு அத்தனையையும் உருக்கியிருக்கு. தங்க விக்கிரகமா இருந்தவ எப்படியோ இளைச்சு உருகிப் போயாச்சு. நீ பார்த்தா அப்படியே அழுதுடுவ. அந்த ஜமீந்தாரிணி வந்து பிடிவாதமாகக் கூப்பிட்டுக் கொண்டு போயிருக்காட்டா மதுரம் பிழைக்கறதே சிரமம். 'தயங்காம எங்ககூட வாம்மா! நீ என் வயிற்றிலே பொறக்காட்டாலும் நீயும் என் பொண் தான். எப்ப எப்பவோ உங்கம்மாவுக்கும் எனக்கும் அப்பா உயிரோட இருந்தப்ப மனஸ்தாபம் இருந்திருக்கலாம்; நானே அந்த மனஸ்தாபத்தை எல்லாம் மறந்தாச்சு. நீயும் மறந்துடணும். என் பிள்ளை - தூர தேசத்துக்குப் படிக்கப் போயிருக்கான். பெண் கலியாணமாகிப் புருஷன் வீட்டோட மெட்றாஸ் போயாச்சு. நீ இங்கே மதுரையிலே தனியாக் கிடந்து உருகற மாதிரி நான் அங்கே நாகமங்கலத்திலே கடல் போல் அரண்மனையிலே கிடந்து தவிக்கிறேன். நீ அங்கே வந்தா என் மனசும் குளிரும்; உன் உடம்பும் தேறும்'னு வந்து கூட்டிண்டு போயிட்டா அந்தம்மா. நீ ஜெயில்லேருந்து வந்து உன்னைப் பார்க்கணும்னு இங்கே தவிச்சுட்டிருந்தது அது. அதுக்கு நாகமங்கலம் போக மனசே இல்லே. நானும் எங்க வீட்டுக்காரியும் கண்டிச்சுச் சொன்னோம். அப்புறம் தான் ஜமீந்தாரிணியோட புறப்பட்டுப் போச்சு. நீ ஜெயில்லேருந்து வந்ததும் உன்னைக் கூட்டிண்டு நாகமங்கலத்துக்கு வரேன்னிருக்கேன்" - என்றார் பிருகதீஸ்வரன். அவருக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் பிரமை பிடித்து நின்ற ராஜாராமனுக்குச் சுயநினைவு வரச் சில விநாடிகள் ஆயின.
"க்ஷயரோகம்னு சொல்றீங்களே; அதைக் கேட்டுத் தான் ரொம்பக் கவலையாயிருக்கு..."
"அதான் சொன்னேனே ராஜா, உடம்பை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன், மனசை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன். எலும்பையே உருக்கற பிரியத்தை இப்பத்தான் பார்க்கறேன் நான்... அந்த ஜமீந்தாரிணி, பாவம், சும்மா சொல்லப்படாது. தம் சொந்தப் பெண்ணைக் கவனிச்சுக்கற மாதிரிப் பார்த்துக்கறா. நீ வந்து கொஞ்ச நாள் அங்கேயே கூடத் தங்கியிருந்தீன்னா, மதுரத்துக்கு உடம்பு தேறிடும்..." "ஜமீந்தார் காலமானப்புறம் அந்தக் குடும்பத்தைப் பத்தி நான், மதுரம் எல்லாருமே தப்பா நினைச்சிருந்தோம். மதுரத்தின் அம்மா காலமானப்ப ஜமீந்தாரிணியும், மத்தவங்களும் மதுரத்தைப் பார்த்துத் துக்கம் கேட்க வந்திருந்தாங்கன்னு கேட்டப்ப ஓரளவு அவுங்க மனசு கூட மாறியிருக்குன்னு தெரிஞ்சுது. இப்ப மதுரத்தை அங்கே அழைச்சுண்டு போய் வச்சுக் கண்ணுங் கருத்துமாக் கவனிச்சுக்கிறாங்கன்னு நீங்க சொல்றதைக் கேட்டு, மனசுக்குச் சந்தோஷமாயிருக்கு..." "உண்மையே அதுதான் ராஜா! மனுஷாளிலே நிரந்தரமாக கெட்டவங்க யாருமே கிடையாது. காலதேச வர்த்தமானங்களிலே எல்லாரும் மாற முடியும்கிறதைத் தான் இந்த ஜமீந்தாரிணி விஷயத்திலேயும் பார்க்கிறோம்." நாகமங்கலத்துக்குப் புறப்படும் முன்னால் ஆசிரம நிலைகளைப் பற்றியும் அவர்கள் சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். முத்திருளப்பன் ஆசிரமப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியரான சிறு காலத்தில் ஆசிரமத்துக்கு அருகிலுள்ள கிராமத்திலேயே ஒரு வீடு பார்த்துக் குடும்பத்தோடு அங்கே குடி வந்து விட்டதாகத் தெரிந்தது. அந்த சில வருடங்களில் ஆசிரமத்துக்கு ஏற்பட்ட பொருளாதாரத் தட்டுப்பாடுகளையும், தடைகளையும், கஷ்டங்களையும் நண்பர்கள் அவனுக்குக் கூறினார்கள். பெரியகுளம் தாலுகா - அநுமந்தன்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஐயங்கார் என்ற தேசபக்தரும், திண்டுக்கல் அப்துல் சத்தார் சாயபுவைச் சேர்ந்தவர்களும் அந்தக் கஷ்ட காலத்தில் மாதம் தவறாமல் சத்திய சேவாசிரமச் செலவுக்காக ஐம்பது ஐம்பது ரூபாய் மணியார்டர் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தியைக் கண்களில் நீர் நெகிழத் தெரிவித்தார் பிருகதீஸ்வரன். சில சமயங்களில் தாம் யாத்திரை செய்து கொண்டிருந்த ஊர்களில் வசூல் செய்த தொகையைச் சுவாமி விலாட்சணானந்தர் என்பவர் ஆசிரமத்துக்கு அவ்வப்போது அனுப்பி உதவியதாகவும் தெரிந்தது. அவற்றை எல்லாம் கேட்ட போது பிருகதீஸ்வரனும் நண்பர்களும் ஆசிரமத்தை எவ்வளவு சிரமப்பட்டு நடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. "வ.வே.சு. ஐயரின் ஆசிரமத்தில் இருந்த ஆத்ம பலமும், தாஸரின் சாந்தி நிகேதனத்திலிருப்பது போன்ற கலாசார பலமும், மகாத்மாவின் சபர்மதியில் இருந்த புனிதத் தன்மையும் பொருந்தியதாக இது வளர வேண்டுமென்று ஆசைப்பட்டு இத்தனை நாள் கட்டிக்காத்துவிட்டேன் ராஜா! போன மாதம் வடக்கே இருந்து ஒரு குஜராத்தி தேசபக்தர் இங்கே இந்த ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'எல்லாவிதத்திலும் இதுவும் சபர்மதி ஆசிரமத்தைப் போன்ற சூழ்நிலையிலேயே அமைந்திருக்கிறது. அதே போல் அமைதி, அதே போல் நதிக்கரை, அதே போல் இயற்கைச் சூழ்நிலை, எல்லாம் வாய்த்திருக்கிறது' என்று புகழ்ந்தார் அவர். நாளடைவில் இதை இப்படியே ஒரு சுதேசிப் பல்கலைக் கழகமாக ஆக்கிவிட வேண்டும்" என்று உற்சாகமாகக் கூறினார் பிருகதீஸ்வரன். தினந்தோறும் ஆசிரமத்தில் இப்போது நூறு சர்க்காக்கள் நூற்கப்படுகின்றன என்பதை அறிந்து ராஜாராமன் மகிழ்ந்தான். பரபரப்பான திருப்பரங்குன்றம் மாநாட்டைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். சத்தியாக்கிரகம் என்ற மகா நோன்பு மனிதர்களின் போட்டி பொறாமைகளில் அழிந்து விடக் கூடாது என்று எப்போதும் போல் கவலை தெரிவித்தார் பிருகதீஸ்வரன். "திருச்செங்கோடு நிகழ்ச்சியால் தான் இவ்வளவும் வந்தது. திருச்செங்கோடு தேர்தல் - என்ற ஒன்று வந்திருக்காவிட்டால் இவ்வளவு நடந்திருக்காது" என்று முத்திருளப்பன் அபிப்பிராயப்பட்டார். இந்தக் கருத்து வேறுபாடுகள் படிப்படியாக வளர்ந்து, மகாத்மா ஏற்படுத்திய சுதேசி விரதத்தைப் பாதிக்கக் கூடாதே என்று தான் மீண்டும் மீண்டும் அவர்கள் எல்லாருமே கவலைப்பட்டார்கள். அன்று இரவே ஓர் இரட்டை மாட்டு வண்டி அமர்த்திக் கொண்டு பிருகதீஸ்வரனும், ராஜாராமனும் நாகமங்கலத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஆசிரமத்திலிருந்து புறப்படும்போதே மழை பிடித்துக் கொண்டது. பாதை நல்ல காட்டுப் பாதை. போகப் போக மழையும் கடுமையாகியது. வழி நெடுக அங்கங்கே காட்டு ஓடைகள் குறுக்கிட்டன. ஓடைகளில் நீர்ப்பெருக்குத் தணிகிறவரை பிரயாணம் தடைப்பட்டது. ஆசிரமத்துக்கும் நாகமங்கலத்துக்கும் இருபது மைலுக்கு மேலிருக்காது என்றாலும் கடுமையான மழை காரணமாக அங்கங்கே நின்று பயணம் செய்து மறுநாள் காலையில்தான் அவர்கள் நாகமங்கலத்துக்குப் போய்ச் சேர முடிந்தது. நாகமங்கலம் ஊருக்குள் இருந்த ஜமீன் அரண்மனைக்கு அவர்கள் முதலில் சென்றார்கள். ஆனால், அவர்கள் போன போது ஜமீந்தாரிணியோ, மதுரமோ அரண்மனையில் இல்லை. க்ஷயரோகத்துக்கு மாற்றான நல்ல காற்றுக்காக டாக்டர் இடம் மாறச் சொல்லியிருந்ததை முன்னிட்டு ஆறு மைல்களுக்கு அப்பால் நாகமங்கலத்துக்கு மேற்கே மலையடிவாரத்தில் இருந்த ஜமீனுக்குச் சொந்தமான கோடை வாசஸ்தலத்தில் அவர்கள் போய் தங்கியிருப்பதாக தகவல் கூறப்பட்டது. உடனே ராஜாராமனும், பிருகதீஸ்வரனும், தாங்கள் வந்த இரட்டை மாட்டு வண்டியிலேயே மலையடிவாரத்துக்கு விரைந்தனர். எவ்வளவோ முயன்றும் மேடும் பள்ளமுமாக இருந்த மழைகாலத்து வண்டித் தடத்தில் வேகமாக வண்டியை ஓட்ட முடியவில்லை. ஜமீன் கோடை வாசஸ்தலத்துக்கு அவர்கள் போய்ச் சேரும் போது காலை பத்து மணிக்கு மேலாகிவிட்டது. ஜமீந்தாரிணி அவர்களை மிகவும் பிரியமாக வரவேற்றாள். அன்று வெள்ளிக்கிழமையாதலால் அவர்கள் போய்ச் சேர்ந்த போது மதுரம் பூஜையறையில் இருந்தாள். அந்த உடல் நிலையிலும் அவளுக்குப் பூஜை புனஸ்காரங்களில் இருந்த பற்றையும், நம்பிக்கையையும் வியந்தார்கள் அவர்கள். ஜமீந்தாரிணியும், பிருகதீஸ்வரனும் மாளிகை வாசலிலேயே பேசியபடி நின்று விட்டார்கள். ராஜாராமன் மட்டும் ஆவலை அடக்க முடியாமல் பூஜை அறை வாசலுக்கே போய்விட்டான். காலையில் இன்னும் நீராடவில்லையாதலால் பூஜையறை உள்ளே போகாமல் வெளியிலேயே கதவருகே நின்றுவிட்டான் அவன். உள்ளே இருந்த மதுரம் வீணை வாசித்தபடி பூசை செய்து கொண்டிருந்தாள். அங்கே அமர்ந்திருந்த உருவம் தான் மதுரம் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அவன் கண்கள் ஈரமாயின; விழிகளில் நீர் பெருகியது. அப்போதும் அவள் அதே 'தெலியலேது ராமா'வைத்தான் வாசித்துக் கொண்டிருந்தாள். வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டு அவள் குச்சி குச்சியாக இளைத்திருந்த தன் கைகளால் ரோஜாப்பூக்களை அள்ளி அர்ச்சித்த போது அவற்றில் எவை ரோஜாப் பூக்கள், எவை கைகள் என்று கண்டுபிடிக்க அவன் கண்களால் முடியவில்லை. கைகள் இளைத்திருந்தாலும் ரோஜாப்பூக்களை அவள் அள்ளிய போது உள்ளங்கைகளுக்கும் ரோஜாப்பூக்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. அவள் கண்கள் இன்னும் அவன் பக்கமாகத் திரும்பவில்லை. ஒருக்களித்து உட்கார்ந்திருந்ததாலும், கண்கள் தியானிப்பதைப்போல் மூடியிருந்ததாலும் அவன் வந்து நின்றதை அவள் இன்னும் கவனிக்கவில்லை போலிருந்தது. ஒரு வேளை அவனைப் பார்ப்பதற்குத் தவித்தே அவள் தெய்வங்களை அப்படிப் பூஜித்துக் கொண்டிருக்கிறாளோ என்னவோ? அவள் இளைத்து உருகிக் குச்சிபோல் ஆகியிருந்த சோகக் கோலத்தைக் கண்டு மறுகித் திகைத்து நின்றான் ராஜாராமன். பூஜையறைக்கு வெளியே சுவரில் மதுரத்தின் தாய் தனபாக்கியம், நாகமங்கலம் ஜமீந்தார் படங்கள், அவளுடைய மதுரை வீட்டில் மாட்டப்பட்டிருந்த பழைய படங்கள் எல்லாம் மாட்டப்பட்டிருந்தன. படுக்கையருகே ஒரு நீள பெஞ்சிலே அவள் வழக்கமாக நூற்கும் சர்க்கா வைக்கப்பட்டிருந்தது. படுக்கையின் கீழ் பேஸின், பழைய சட்டி ஒன்று எல்லாம் இருந்தன. அவள் வசிக்குமிடம் ஒரு தீவிர நோயாளியின் அறையாக மாறியிருந்தது. பூஜை முடிந்து அவள் திரும்பிய போது கதவருகே நின்ற அவன் கண்களும், கருவட்டம் போட்டுக் குழிந்திருந்த அவள் கண்களும் சந்தித்துக் கொண்டன. மனத்தில் கனத்திருந்த உணர்ச்சிகளால் இருவருக்குமே ஒன்றும் பேச வரவில்லை. பவித்ரமான உணர்ச்சிகளுடன் மனிதர்கள் எதிரெதிரே சந்தித்துக் கொள்ளும்போது தங்கள் சேவை அநாவசியம் என்று கருதினாற்போல் வார்த்தைகள் அவர்களை விட்டுப் போயிருந்தன போலும். அவன் கண்களில் நீர் நெகிழ நிற்பதை அவள் பார்த்தாள். அவள் கண்களிலும் ஈரம் பளபளத்தது. காற்றில் ஒடிந்து விழுவது போலிருந்த அவள் சரீரம் ஒரு நூல் அசைவது போல் அசைந்து அவனருகே வந்தது. கீழே குனிந்து அவன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் அவள். பூஜை செய்த அவள் வலது கை ஈரத்தில் ஒரே ஒரு ரோஜா இதழ் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த ஒற்றை ரோஜா இதழை அவன் பாதங்களில் அவள் உதிர்த்தாள். சூடனா இரண்டு துளிக் கண்ணீரும் ஒரு ரோஜா இதழும் அவன் பாதங்களில் அர்ச்சிக்கப்பட்டன. மேலே நிமிர்ந்த அவள் நெற்றியில் அவன் கண்ணீர் உதிர்ந்து சுட்டது. உணர்வுகள் அவன் இதயத்தைப் பிசைந்தன. "மதுரம்..." இதயத்தின் ஆழத்திலிருந்து பிறந்த ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. அவள், இளைத்துக் கறுத்துத் தாடியும் மீசையுமாக அவன் இருந்த நிலை கண்டு கண் கலங்கினாள். "தெய்வமே!" என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து அவள் விளித்த குரல் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் ஒடுங்கித் தளர்ந்திருந்தது. தொடர்ந்து அவள் நாலைந்து முறை மூச்சு இழுக்க இழுக்க இருமினாள். அவளுடைய உடல் தள்ளாடியது. அவள் தள்ளாடி தள்ளாடி நடந்து போய்க் கோழையைத் துப்புவதற்காகப் பேஸினை எடுத்துக் கொள்ளக் குனிந்த போது, அவன் ஓடிப்போய் பேஸினை எடுத்துப் பிடித்தான். குனிந்ததன் காரணமாக மேலும் இருமல் குத்திக் கொண்டு வந்தது. மறுபடியும் கோழையைத் துப்பினாள் அவள். கடைசியாக அவள் துப்பிய கோழையோடு ஒரு துளி ரத்தமும் கலந்து சிவப்பாகக் குழம்பியிருந்தது. அதைக் கண்டு ராஜாராமன் இதயம் துடித்தது. பேஸினைக் கீழே வைத்துவிட்டுக் கட்டிலருகே இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அவளைப் படுத்துக் கொள்ளுமாறு கையால் சைகை செய்தான் அவன். எவ்வளவோ அடக்கியும் முடியாமல் அவன் கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடிந்தது. வாழ்நாளிலேயே இப்படி அவன் மனம் விட்டு அழுதது இதற்கு முன் சில முறை நேர்ந்திருக்கிறது. தமது தள்ளாத வயதையும் பொருட் படுத்தாமல் மகாத்மா உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது இருநூற்று நாற்பது மைல்களுக்கு நடந்தே தண்டியாத்திரை மேற்கொண்டிருந்தார் என்ற செய்தியை அறிந்த தினத்தன்று அவன் சிறு குழந்தை போல் அழுதிருந்தான்! அதற்குப் பின் சத்தியமூர்த்தி, மகாதேவ தேசாய், கஸ்தூரிபாய் காந்தி ஆகியவர்களின் மரணத்தைக் கேள்விப்பட்டபோது அமராவதிச் சிறையில் முரட்டுச் சுவர்களை வெறித்துப் பார்த்தபடி கண்ணீர் சிந்தியிருந்தான். வேலூர் சிறையில் தாயின் மரணம் அறிவிக்கப்பட்ட போது அழுதிருந்தான். இன்றோ அவன் மனம் சொல்ல முடியாத துயரத்தால் துடித்தது. கண்களில் நீரும், மனத்தில் ரத்தமும் வடிவது போலிருந்தது. அவள் கண்களோ அவனையே பார்த்தபடி இருந்தது. சாய்ந்தாற் போல் படுக்கையிலே அவன் பக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்தாள் அவள். அவளுடைய விழிகளில் நெகிழும் நீரும், முகத்தின் எல்லையற்ற சாந்தமும் அவனை உருக்கின. எவ்வளவு நேரம் அப்படிக் கண் கலங்கியிருந்தோமென்று அவனுக்கே தெரியாது. இளைத்த வலது கையைத் தூக்கி அவனை அழாமலிருக்கும்படி ஜாடை காட்டினாள் அவள். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். கை ஜாடையாலேயே அவனைக் 'காலையில் ஏதாவது சாப்பிட்டாயிற்றா இல்லையா?' என்றும் விசாரித்தாள் அவள். தளர்ந்து செத்துக் கொண்டிருந்த நிலையிலும் வெள்ளமாகப் பெருகும் அவள் அன்பு அவனைப் பிரியத்தாலேயே கொல்வது போலிருந்தது. ஆசிரமத்துக்கு நிலம் எழுதித் தந்தது, வீட்டை அடமானம் வைத்தும் நகைகளை விற்றும் பணம் உதவியது, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லிப் புலம்பினான் அவன். 'அவள் இப்படியாகி இந்த நிலைக்கு வந்ததற்குத் தானே காரணம்,' என்று அவன் கூறத் தொடங்கியபோது, செல்லமான கண்டிப்பு முகத்தில் தெரிய, "நீங்க வந்து பக்கத்திலே இருக்கீங்கங்கற சந்தோஷத்திலே எனக்குப் போன மூச்செல்லாம் திரும்ப வந்திண்டிருக்கு. அந்த சமயத்திலே நீங்கள் இப்படி எல்லாம் பேசினா எப்படி? தயவு செய்து இப்படிப் பேசாதீங்கோ...?" என்று ஒவ்வொரு வார்த்தையாக இருமலை அடக்கியபடி கூறினாள் மதுரம். அவளுடைய ஒவ்வொரு சொற்களும் சற்றுமுன் அவளே அவன் பாதத்தில் உதிர்த்த ரோஜா இதழைப் போல் மிருதுவாக அவன் செவிகளில் வந்து பூவிதழ்களாய் உதிர்ந்தன. அவனுடைய உடம்பு இளைத்திருப்பதைப் பற்றி வருத்தப்பட்டாள் அவள். அப்போது பிருகதீஸ்வரனும் ஜமீந்தாரிணியும் உள்ளே வந்தார்கள். பிருகதீஸ்வரன் வந்த திசையை நோக்கி, எழுந்திருக்க முயன்றபடியே கைகூப்பினாள் மதுரம். பிருகதீஸ்வரன் 'எழுந்திருக்க வேண்டாம்' என்று அவளுக்கு ஜாடை காண்பித்துக் கொண்டே அருகே வந்தார். "ஆசிரமம் எப்படி நடக்கிறது?" என்று கேட்க நினைத்து "ஆசிரமம்..." என்று மதுரம் தொடங்கிய போதே இருமலும் சேர்ந்து வந்து அவளைப் பேசவிடாமல் செய்தது. அவளைப் பேசாமலிருக்கும்படி சொல்லிவிட்டு அவரே ஆசிரமத்தைப் பற்றி அவளுக்குத் திருப்தி ஏற்படும்படி எல்லாம் சொன்னார். கேட்டு முகமலர்ந்தாள் அவள். "கொண்டு வந்து சேர்த்தாச்சு. கொஞ்ச நாள் இங்கே உன்னோட இருக்கச் சொல்லி உத்தரவே போட்டிருக்கேன் இவனுக்கு. நீதான் பிழைச்சு எழுந்திருக்கணும் அம்மா! சீக்கிரமே நம்ம ஆசிரமத்துக்கு வந்து, 'ரகுபதி ராகவ, வைஷ்ணவ ஜனதோ' எல்லாம் பாடணும் நீ. தேசத்துக்குச் சுதந்திரமும் கிடைச்சிடும் போலேருக்கு. முதல் சுதந்திர கீதமாக உன் குரலாலே 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று அந்தப் பாரதியார் பாட்டை நீ பாடி நாங்க கேட்கணும். சுதந்திரம் வந்ததுமே ராஜாராமனோட விரதமும் முடிஞ்சிடறது. உங்க கலியாணத்தையும் நானே ஆசிரமத்தில் வச்சு நடத்தி சந்தோஷப்படணும்" என்று ராஜாராமனைக் காண்பித்துச் சிரித்துக் கொண்டே அவளிடம் கூறினார் பிருகதீஸ்வரன். பதிலுக்கு அவள் முகத்தில் வழக்கமாக மலரும் நாணம் கலந்த புன்னகை ஒரு கணம் மெல்லிய ஒளிக்கீற்றாக மலர்ந்து மறைந்தது. பற்களே வெளியில் தெரியாமல் இரகசியமாய் சிரிக்கும் பெண்களைக் குடும்ப ஸ்திரிகளிலேயே தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமென்றிருக்கையில், அவள் சிரிக்கும் போதெல்லாம் அதில் ஓர் இங்கிதமான அந்தரங்கம் இருப்பதாக ராஜாராமன் என்றும் வியந்தது போலவே இன்றும் வியந்தான். கலீரென்று அவள் சிரித்து அவன் பார்த்ததில்லை. எப்போதோ தனியே அவன் முன் ஓரிரு முறை அவள் அப்படி சிரித்திருந்த போது கூட அந்தப் பற்களின் வனப்பையும் ஒளியையும் கவர்ச்சியையும் முழுமையாகக் காண முடியாத வேகத்தில் சிரித்த சுவட்டோடு அந்தச் சிரிப்பையே விரைந்து ஓர் இரகசியமாக்கி விடும் நளினத்தை அவள் சுபாவமாகவே பெற்றிருந்தாள். அவள் வாசிக்கும் ராகங்களைப் போலவே அதுவும் ஓர் சுகமான ராகமாக அவனுக்குத் தோன்றியது. சிறிது நேரத்தில் பிருகதீஸ்வரனும் ராஜாராமனும் பக்கத்தில் மலையடிவாரத்தில் இருந்த ஓர் அருவிக்குப் போய்க் குளித்துவிட்டு வந்தார்கள். பிருகதீஸ்வரன் சட்டையே போடுவதில்லை. ஒரு நாலு முழம் கதர் வேட்டியும் துண்டும்தான். அருவிக் கரையிலேயே அவற்றை உலர்த்தி உடுத்திக் கொண்டு விட்டார் அவர். நீண்ட நேரம் அருவியில் துளைத்துத் துளைத்து நீராடிய ராஜாராமன், வேறு துணிமணிகள் கைவசம் இல்லையென்பதையும் மறந்து நனைந்த துணிகளை உலர்த்தாமல் ஈரத்தைக் கட்டிக் கொண்டே வீடு திரும்பினான். நடந்து வந்த வழியில் மழை மப்பான மந்த வெளியில் அந்தக் கதர்த் துணிகள் கொஞ்சமும் உலரவில்லை. அவர்கள் வீடு திரும்பிய போது ஜமீந்தாரிணி சமையற்கட்டிலிருந்தாள். பிருகதீஸ்வரன் பூஜையறையில் நுழைந்துவிட்டர். மதுரம் ராஜாராமனை ஜாடை செய்து கட்டிலருகே கூப்பிட்டாள். அவன் போய் நின்றான். "ஈர வேஷ்டியோட நிற்கிறீங்களே? உடம்பு என்னத்துக்கு ஆகும்? வேற வேஷ்டி இல்லையா?" தான் ஈர வேஷ்டியோடிருப்பது அவனுக்கே அப்போது தான் நினைவு வந்தது. அவள் எழுந்திருக்க முயன்றாள். அவன் தடுத்தான். "பரவாயில்லே..." என்று அவள் மீண்டும் எழுந்திருக்க முயன்ற போதும் அவன் தடுத்தான். "என்ன செய்யணும்னு சொல்லு மதுரம்! நானே செய்யறேன். நீ எழுந்திருக்க வேண்டாம்." "நான் உங்களை வேலை வாங்கப்படாதுன்னு பார்த்தேன். நீங்க விட மாட்டீங்க போலேருக்கு..." "என்னன்னு சொல்லேன்... நான் செய்யறேன்..." "அந்தக் கோடி அறையிலே என் டிரங்குப் பெட்டி இருக்கு... அதைக் கொஞ்சம் இப்பிடிக் கொண்டு வாங்கோ..." அவன் டிரங்குப் பெட்டியை எடுத்து வந்து பெஞ்சின் மேல் வைத்தான். அவள் அதைத் திறக்கச் சொல்லி ஜாடை காட்டினாள். அவன் அதைத் திறந்தான். பெட்டியைத் திறந்ததுமே சந்தன வாசனையும், ஜவ்வாது, புனுகு, பச்சைக் கற்பூர மணமும் கம்மென்று எழுந்தன. பெட்டியில் மேலாக அவளுடைய கண்ணாடி வளைகளும், அதையடுத்து கதர்ப் புடவைகளும் அடுக்கியிருந்தன. அவற்றை ஒதுக்கிவிட்டுக் கீழே அடியில் கையைவிட்டு ஒரு கதர் வேஷ்டியையும் துண்டையும், சட்டையையும் மடிப்புக் குலையாமல் எடுத்தாள் அவள். "ஜெயிலுக்குப் போறதுக்கு முந்தி நீங்க வாசகசாலை மொட்டை மாடியிலே உலர்த்திவிட்டுப் போனது இது. நான் மறுநாள் காத்தாலே பத்திரமா உலர்ந்ததும் எடுத்து மடிச்சு என் பெட்டியிலே வச்சிருந்தேன்..." அவன் அவற்றை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான். வேஷ்டியும், சட்டையும், துண்டும் பரிமளமான நறுமணங்களில் மூழ்கியிருந்தன. அவள் பெட்டியில் அவை இருந்ததால் வந்த மணம் அது. அவளது அந்த சிரத்தையும் ஞாபக சக்தியும் அவன் மனத்தைக் குளிரச் செய்தன. "இன்னிக்காவது ஈர வேஷ்டியைப் பத்திரமா உலர்த்துங்கோ, நாளைக்குக் கொடுக்கறதுக்கு எங்கிட்டக் கதர் வேஷ்டி சட்டை இல்லே" என்று அந்நிலையிலும் வேடிக்கையாகப் பேச முடிந்தது அவளால். அவன் சிரித்துக் கொண்டே ஈர வேஷ்டியை உலர்த்தப் போனான். பிருகதீஸ்வரனும், அவனும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்த போது - "என்னப்பா, வேஷ்டி புது மாப்பிள்ளை மாதிரி மணக்கிறது?" என்று அவர் அவனைக் கேலி செய்தார். ஒரு விருந்துச் சாப்பாடே தயாரித்திருந்தாள் ஜமீந்தாரினி அம்மாள். சமையலுக்கு ஆளும், உதவியாளும் இருந்தும் கூட அவர்களுக்கு அந்தம்மாளே பரிமாறினாள். வடை, அப்பளம் எல்லாம் இரண்டிரண்டாக இலையில் விழவே - "இதென்ன சம்பந்தி உபசாரம் போல எல்லாம் ரெண்டு ரெண்டாப் போடறீங்களே! நான் ரொம்ப அல்ப ஆகாரக்காரன். ராஜாராமனுக்கு வேணுமானா நாலு நாலாப் போடுங்கோ; தாங்கும்! அமராவதி ஜெயில்லே காய்ந்து போய் வந்திருக்கான்!" என்று சிரித்துக் கொண்டே கூறினார் பிருகதீஸ்வரன். அந்த அம்மாளும் விடவில்லை. உடனே அதற்குப் பொருத்தமாகப் பதில் சொன்னாள் - "சம்பந்தி உபசாரம்னே வச்சுக்குங்களேன். அவர் இன்னிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு எப்பவாவது ஒரு நாள் இந்த வீட்டு மாப்பிள்ளையாகப் போறவர். நீங்களோ அவருக்குத் தமையன் ஸ்தானத்திலே இருக்கிறவர். குறைச்சலாப் பரிமாறி மிச்சம் பிடிச்சேன்னா, நீங்களே மாமியார் பொல்லாதவள்னு நாளைக்கு என்னைக் குறை சொல்ல மாட்டேளா?" "கேட்டுக்கோ ராஜா! உனக்குத்தான் சொல்றாங்க..." என்று ராஜாராமனைப் பார்த்துச் சிரித்தார் பிருகதீஸ்வரன். ராஜாராமன் பதிலே சொல்லவில்லை. வெட்கப்பட்டுக் கூசியவன் போல் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தான். அன்று பிற்பகலில் தாங்கள் வந்த இரட்டை மாட்டு வண்டியிலேயே, எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஆசிரமத்துக்குத் திரும்பி விட்டார் பிருகதீஸ்வரன். "நீ கொஞ்ச நாளைக்கு இங்கே இருந்து வரலாம். மதுரத்துக்கு உடம்பு தேறணும். நான் போகாட்டா ஆசிரம வேலைகள் தடைப்படும். நான் இன்னிக்கே புறப்படறேன்" என்று போகும்போது அவனிடம் வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போனார் அவர். அவனும் அதற்கு இணங்கினான். அங்கே ஜமீந்தார் இருந்த காலத்தில் சேகரித்த பல ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய பெரிய லைப்ரரி ஒன்றிருந்தது. தமிழிலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும், சமஸ்கிருதத்திலுமாக ஏராளமான புத்தகங்கள் அங்கே இருந்தன. அதிர்ஷ்டவசமாக ராஜாராமன் அந்த நான்கு மொழிகளிலும் பயிற்சி உள்ளவனாக இருந்ததால் நிறையப் படிக்க முடிந்தது. சில கதைப் புத்தகங்களை மதுரத்துக்கும் படித்துச் சொன்னான் அவன். பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில் நுணுக்கம் பற்றிய புத்தகங்களையும், எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அரசியல் புத்தகங்களையும் அவன் ஆழ்ந்து கருத்தூன்றிப் படித்தான். ஒரு வாரம் கழித்து, ஓர் ஆள் வசம் அவன் உபயோகத்துக்காக, ஆசிரமத்திலேயே நெய்த கதர் வேஷ்டிகளும், துண்டுகளும், குருசாமி தைத்து அனுப்பிய சட்டைகளும் கொடுத்து விட்டிருந்தார், பிருகதீஸ்வரன். அவற்றை வாங்கிக் கொண்டு தான் முடிந்தவரை அங்கு நூற்றிருந்த நூல் சிட்டங்களைக் கொடுத்தனுப்பினான் ராஜாராமன். படித்த நேரம் தவிர மற்ற ஓய்வு நேரங்களில் விட்டுப் போய் இருந்த நாட்களுக்கு எல்லாம் சேர்த்து டைரி எழுதவும் முடிந்தது. ஒரு நாள் மாலை மதுரத்தோடு அவன் பேசிக் கொண்டிருந்த போது அவள் அவனிடம் ஒரு விநோதமான வேண்டுகோள் விடுத்தாள். "நீங்க இந்தத் தாடி மீசையை எடுத்துடுங்களேன். இன்னமும் எதுக்குத் தாடி மீசை? அதான் ஜெயில்லேருந்து வந்தாச்சே. இன்னமும் பார்க்கறதுக்குச் சாமியார் மாதிரி இருக்கணுமா, என்ன?" "இருந்தா என்ன? சாமியார்னே வச்சுக்கயேன். தேசத்துக்காக என்னைப் போல இப்படி எத்தினியோ பேர் சாமியாராயிருக்கோம்!..." "அது சரிதான்! நான் ஒருத்தி இருக்கேனே இன்னும்!" "இருந்தா...?" "நான் ஒருத்தி இருக்கறவரை நீங்க சாமியாராக முடியாது... அதற்கு விடவும் மாட்டேன்..." சொல்லிவிட்டு அவனை நேருக்கு நேர் பார்க்க நாணிக் கீழே பார்த்தாள் அவள். "இப்ப நீ என்ன சொல்றே மதுரம்? நான் தாடி மீசையை எடுத்தே ஆகணுமாக்கும்!" "எனக்கு உங்க பழைய முகத்தைப் பார்க்கணும் போல இருக்கு..." "எனக்கும் கூட உன் பழைய முகத்தையும், பழைய விழிகளையும், பழைய இதழ்களின் கனிவையும் பார்க்கணும் போல இருக்கு! அதுக்கு நான் இப்ப என்ன செய்யறது?" என்று கேட்பதற்கு நினைத்து, அதைக் கேட்பதால் அவள் மனம் புண்படும் என்ற பயத்தில் கேட்காமலேயே இருந்தான் அவன். என்றாலும் அவள் விருப்பத்தையும் அவன் நிறைவேற்றினான். மறுநாள் காலை தாடி மீசையை எடுத்துவிட்டு, அவன் அவள் முன் போய் நின்ற போது, அவள் கண்கள் மலர்ச்சியோடு அவனைப் பார்த்தன. இதழ்கள் புன்னகை பூத்தன. "இப்பத்தான் பழைய மாதிரி இருக்கீங்க! முகத்திலே பழைய ராஜ களை வந்திருக்கு..." "நம்ம சீநிவாசவரதன் 'சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி இருக்கே'ன்னு அடிக்கடி கேலி பண்ணுவார் மதுரம்." "அப்படி ஒண்ணுமில்லே! சுபாஷ் சந்திர போஸுக்கு மூக்கு கொஞ்சம் சப்பை. உங்களுக்கு அழகான கூர் மூக்கு. நீங்க அவரை விட உயரம். அவரை விடச் சிவப்பு! நீங்க மூக்குக் கண்ணாடி போட்டுக்கலே." "நீ அப்படி நினைக்கிறே! ஆனா, நான் பார்த்த தலைவர்களில் தெய்வீகமானவர் மகாத்மா. நளினமானவர் ஜவஹர்லால் நேரு, கம்பீரமானவர் சுபாஷ் சந்திர போஸ். அவருக்கு இணையான கம்பீர புருஷனை இந்தியத் தலைவர்களில் நான் இன்னும் பார்க்கலை..." "நீங்க இருக்கேளே..." "நான் தலைவன் இல்லையே; சாதாரண தேசத் தொண்டன். மகாத்மாவின் பல்லாயிரம் பக்தர்களில் ஒரு பக்தன்." "எனக்கு நீங்க தான் தலைவர்! நான் உங்களைத்தான் பக்தி செய்கிறேன்..." "....." அவனால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. பிரியம் என்ற மழையில் நனைந்து, பேசச் சக்தியற்றுப் போயிருந்தான் அவன். "நான் எப்போதோ செத்துத் தொலைத்திருக்கணும். அம்மா போயிட்டா; பத்தர் போயிட்டார். மாமா, மங்கம்மா எல்லாரும் போயிட்டாங்க. இந்த உயிர் மட்டும் உங்களுக்காக இன்னும் உடம்பிலே ஊசலாடிண்டிருக்குங்கிறதாவது உங்களுக்குப் புரியறதா?" கண்களில் நீர் நெகிழ அவனைக் கேட்டாள் அவள். பதில் சொற்களாக வெளிவருவதற்குப் பதில் அவன் கண்களிலும் நீராக நெகிழ்ந்தது. பல சமயங்களில் வார்த்தைகளை விடக் கண்ணீர் தான் அன்பின் சத்தியமான சாட்சியாயிருக்கிறதென்பதற்கு அவர்கள் அப்போது நிதரிசனமாயிருந்தார்கள். ஜமீந்தாரின் அந்தக் கோடை வாசஸ்தலம் அமைந்திருந்த இடம் மனோரம்யமாக இருந்தது. மேற்கே மிக அருகில் மலைத் தொடரும், கீழ்ப்புறமும், வடக்கும், தெற்கும் சரிவில் ஜமீன் மாந்தோப்பும் அமைய, நடுவே மேட்டில் அமைந்திருந்தது அந்த பங்களா. கொஞ்சம் உடல் நிலை தேறிய பின், தான் உலாவப் போகும்போது காலை மாலை வேளைகளில் மதுரத்தையும் காற்றாட அழைத்துப் போனான் அவன். அவளுடைய உற்சாகம் மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தது. டாக்டர் மதுரையிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு நாள் பகலில் ஜமீந்தாரிணி ஏதோ காரியமாக நாகமங்கலம் ஊருக்குள் போயிருந்தாள். சமையற்கார ஆளிடம் எல்லாவற்றையும் எடுத்துத் தரச் சொல்லி வாங்கி மதுரமே அவனுக்குப் பகல் சாப்பாடு பறிமாறினாள். அவன் சாப்பிட்டு எழுந்திருந்து கைகழுவி விட்டு வந்து பார்த்தால் அவன் சாப்பிட்ட அதே இலையில் உட்கார்ந்து எல்லாப் பண்டங்களையும் கைக்கெட்டுகிற தொலைவில் வைத்துக் கொண்டு தனக்குத் தானே பரிமாறியபடி சாப்பிடத் தொடங்கியிருந்தாள் அவள். அவன் அருகே போய் உட்கார்ந்து கொண்டு பரிமாறுவதில் அவளுக்கு உதவி செய்தான். இலையைப் பற்றிச் சிரித்துக் கொண்டே மெல்ல அவன் கேட்கத் தொடங்கிய போதே அவள் வெட்கப்பட்டு அவன் பக்கம் நிமிரவே இல்லை. யுகயுகாந்திரமாகக் கன்னி கழியாமலே இருந்துவிட்ட ஒருத்தி வாழத் தவிப்பது போல் அவள் வாழத் துடிப்பது அவனுக்குத் தெரிந்தது. அன்று பகலில் பெட்டியிலிருந்து வளைகளை எடுத்து அணிந்து கொண்டாள் அவள். மாலையில் உலாவப் போகு முன் தலைவாரிப் பூச்சூடி முடிந்து கொண்டாள். அன்று மாலை அவளை மலையடிவாரத்து அருவிக்கரை வரை அழைத்துச் சென்றான் அவன். மழைக்காலம் முடிந்து அன்று அபூர்வமாகப் பகல் முழுவதும் நன்றாக வெயில் காய்ந்திருந்தது. பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் மண்ணின் இடைவெளி தெரியாது மலைச்சரிவில் புல்வெளி செழித்திருந்தது. அருவியின் தண்ணீரில் அளவு குறைந்திருந்தாலும் மாலை வெயிலில் அது மிக மிக அழகாயிருந்தது. பறவைகளின் சப்தங்கள், அருவி விழும் ஓசை, கிழிப்பது போல் ஓசையுடன் அடிக்கும் மலைக்கணவாய்க் காற்று, எல்லாமே செவிக்கு இன்பமாக இருந்தன. மாந்தோப்பில் எங்கிருந்தோ ஒரு குயில் விட்டு விட்டுக் கூவியது. ராஜாராமன் கூட நடந்து வந்து கொண்டிருந்த மதுரத்தின் பக்கம் திரும்பி - "உலகத்தில் இன்னொரு குயிலும் இருக்கிறது மதுரம். நான் நீ மட்டும் தான் இருக்கிறாய் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்" என்றான். "இருக்கலாம்! நீங்க பாடியிருக்கேளே, 'பல்லாயிரம் ஊழிகள் பாடிப் பசித்த குயில்'னு அந்தக் குயில் என்னைத் தவிர வேறே எங்கேயும் இருக்க முடியாது." அந்தப் பாடலை அவள் மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டிருந்தது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. "அந்தப் பாட்டு உனக்கு இன்னும் நினைவிருக்கா?" "உங்களுக்கு மறந்துட்டாலும் எனக்கு மறக்காது. அப்படி மனப்பாடம் பண்ணியிருக்கேன்." வீடு திரும்பியதும் அவன் கேட்காமல் அவளாகவே அந்தப் பாட்டைப் பாடினாள். பாடினாள் என்பதை விட நெஞ்சில் இழைத்து இழைத்து உருகினாள் என்று தான் தோன்றியது ராஜாராமனுக்கு. நீண்ட நாட்களுக்குப் பின் அவள் தன் ஆத்மாவில் ஊடுருவிப் பதிவது போல் பாடவே அவன் மெய்மறந்து போனான். அந்த உடல் நிலையில் அவள் பாடக் கூடாது என்பது அவனுக்கும் நினைவில்லை. டாக்டரின் கடுமையான எச்சரிக்கைகள் அந்த உணர்ச்சிமயமான வேளையில் அவளுக்கும் நினைவில்லை. ஆத்மாவோடு ஆத்மாவாக உறைந்து போன அன்பு பெருக்கெடுத்து அதுவே சங்கீதமாக நிறைந்து வழிந்தாற் போல் பாடினாள் மதுரம்.
எல்லையில்லாததோர் காட்டிடை - நள் இருளென்றும் ஒளியென்றும் சொல்ல ஒணாததோர் மயக்கத்தே - இளம் சோகக் குயில் ஒன்றிசைக்கிறது அதன் சோகம் முழுதும் தெரியுதிலை சுவடு முழுதும் புரியுதிலை .... .... .... .... .... பாட்டு நடுவே தடைப்பட்டது. அவள் பயங்கரமாக இருமத் தொடங்கினாள். முகம் குப்பென்று வியர்த்தது. கண்கள் சொருகிக் கொண்டு போயின. ராஜாராமன் பயந்து போனான். வீணையை அவள் மடியிலிருந்து எடுத்தான். அவளைப் படுக்க வைத்த போது கண்களை முழித்து முழித்து அவனைப் பார்த்தாள். பேஸினில் கோழையைத் தாங்கினான் அவன். கோழையைத் துப்பி முடித்ததுமே - "இப்போதாவது என் சோகம் முழுவதும் புரிகிறதா? என் சோகத்தின் சுவடு முழுவதும் தெரிகிறதா?" குரல் நலிந்து போய் அவனைக் கேட்டாள் அவள். மறுபடியும் இருமல் குத்திப் பிடுங்கியது. பேஸினில் மறுபடி ஒரு கொத்துக் கோழை செம்பருத்திப் பூவாக வந்து விழுந்தது. ராஜாராமன் பயந்து போய் சமையற்காரனைக் கூப்பிட்டு உடனே ஜமீந்தாரிணிக்கு ஆளனுப்பச் சொன்னான். டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வரவும் சொல்லியனுப்பினான். மதுரையிலிருந்து வரும் பெரிய டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவது என்பது அந்த நேரத்திற்கு மேல் உடனே சாத்தியமில்லை. நாகமங்கலத்தில் லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் ஒரு வயதான எல்.எம்.பி. டாக்டர் உண்டு. அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொல்லி சமையற்காரன் ஆளனுப்பினான். மதுரம் பரக்க பரக்க விழித்தாள். வாய் கோணிக் கோணி வலித்துக் கொண்டு போயிற்று. அரண்மனையிலிருந்த ஒரு பழைய ஃபோர்டு காரில் ஜமீந்தாரிணி அம்மாளும், எல்.எம்.பி. டாக்டரும் விரைந்து வந்தார்கள். ஜமீந்தாரிணி ஒன்றும் புரியாமல் பெரிதாக வாய்விட்டு அழத் தொடங்கி விட்டாள். இரத்தம் ரத்தமாகக் கோழையைப் பார்த்ததும் எல்.எம்.பி. டாக்டருக்குப் பயம் தோன்றியிருக்க வேண்டும். உடனே மதுரைக்குப் போய்ப் பெரிய டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விடச் சொன்னார் அவர். ஜமீந்தாரிணியையும் வைத்தியரையும் மதுரத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அரண்மனைக் காரில் அவன் மதுரைக்கு விரைந்தான். அந்தக் காரில் எவ்வளவு வேகமாகப் போயும் மதுரைக்குப் போக இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. டாக்டரை தூக்கத்திலிருந்துதான் எழுப்ப வேண்டியிருந்தது. ஜமீன் குடும்பத்துக்கு நீண்ட நாளாகப் பழக்கமுள்ள டாக்டராகையால் நிலைமையைப் புரிந்து தட்டிச் சொல்லாமல் வர உடனே ஒப்புக் கொண்டு புறப்பட்டார். "நான் போன வாரம் வந்திருந்தப்ப நிலைமை கொஞ்சம் தேறி நல்லாவே இருந்துதே! மறுபடியும் எப்படி இதுமாதிரி ஆச்சு?" என்று காரில் வரும்போதே டாக்டர் அவனைக் கேட்டார். அவன் நடந்தவற்றைச் சொன்னான். "நீங்கள் அவளைப் பாடவிட்டிருக்கக் கூடாது. நானே 'எப்பவாவது வீணை மட்டும் தான் வாசிக்கலாம்; அதுகூட அடிக்கடி கூடாது'ன்னு கண்டிச்சுச் சொல்லிருக்கேனே." "....." டாக்டருக்கு அவனால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. டாக்டர் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். அவன் கண்கள் நெகிழ்ந்தன. மனத்தில் என்னென்னவோ நினைவுகள் ஓடின. நல்லதும், பொல்லாததுமாக மாறி மாறித் தோன்றியது. "கோழையிலே பிளட் வரது நின்றிருந்தது - நல்ல 'டெவலப்மென்ட்னு' நான் சந்தோஷப்பட்டுண்டிருந்தேன். மறுபடியும் இப்படி ஆச்சுங்கிறீங்க, கடவுள் தான் காப்பாத்தணும்...!" "இப்ப என் கடவுள் நீங்க தான் டாக்டர்" என்று அவர் கால்களில் விழாத குறையாகக் கெஞ்சினான் ராஜாராமன். போகும் போதும் வரும்போதும், மெயின் ரோடிலிருந்து கூப்பிடு தூரத்தில் ஆசிரமம் இருந்தும், அவசரம் காரணமாக, அவனால் பிருகதீஸ்வரனுக்கோ மற்றவர்களுக்கோ தகவல் சொல்ல முடியவில்லை. அந்த நள்ளிரவில் மேடும் பள்ளமுமான நாகமங்கலம் சாலையில் எவ்வளவு வேகமாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாகக் கார் போயிற்று. டாக்டர் அமைதியாயிருந்தார். அவரிடம் அதிகம் பேசினாலும் கோபித்துக் கொள்வார் போலிருந்தது. பேசாமலும் இருக்க முடியவில்லை. தெய்வங்களை எல்லாம் மனத்திற்குள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான் அவன். ஓர் அநாதையைப் போல் அவன் இதயம் நிராதரவாய் அழுதது. கார் நாகமங்கலத்தைக் கடந்து மலைச் சாலையில் ஏறி மேல் வளைவில் திரும்பிய போது, டாக்டர் டார்ச் ஒளியைப் பாய்ச்சிக் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தார். மணி இரண்டே கால் ஆகியிருந்தது. சாலை மேல் மலைச்சரிவில் இருந்த மாந்தோப்புக்களில் காவல் நாய்கள் கார் சத்தத்தில் குரைத்தன. மலைச்சாரற் பனி சில்லென்று உறைந்தது. சிள்வண்டுகளின் ஓசையை வெட்டுவது போல் எங்கோ ஓர் ஆந்தை அலறி ஓய்ந்தது. தூரத்தில் நாய் அழுது தணியும் ஒலி இருளில் கோரமாகக் கேட்டது. ராஜாராமன் செவிகளைப் பொத்திக் கொண்டான். அவன் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. மலைச்சரிவில் பங்களா வாசலில் போய்க் கார் நின்ற போது எல்.எம்.பி. டாக்டர் மாட்டு வண்டியில் திரும்பிப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் காரிலிருந்து இறங்குவதற்குள் வண்டி நகர்ந்து விட்டது. வீட்டில் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. வாசலில் பெட்ரோமாக்ஸ் லைட் ஒளியில் ஈசல்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. கட்டை மாட்டு வண்டியில் சக்கரங்கள் தொலைவில் நகரும் ஒலியைத் தவிர பங்களா அமைதியாயிருந்தது. டாக்டர் படிகளில் தயங்கினார். வாசலில் யாருமே இல்லை. உள்ளிருந்து ஜமீந்தாரிணி அம்மாள் எதிர்ப்பட்டாள். அழுதழுது அவள் கண்கள் வீங்கியிருந்தன. தலைமுடி அவிழ்ந்து முதுகில் புரண்டு கொண்டிருந்தது. "ஆசிரமத்திலே பிருகதீஸ்வரனுக்கும், மதுரையிலே அவ மனுஷ்யாளுக்கும் சொல்லி அனுப்புங்கோ. நாம் கொடுத்து வச்சது அவ்வளவுதான்" - என்று நிதானமாய் ஒவ்வொரு வார்த்தையாய் அவள் ராஜாராமனிடம் வந்து கூறினாள். கூறி முடிக்கு முன்பே அழுகை பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு. ராஜாராமன் கோவென்று கதறியழுது கொண்டே உள்ளே ஓடினான். சரீரத்தோடு அவனை அடைவதற்கு ஆசைப்பட்ட மதுரம் சரீரத்தை நீத்து ஆத்மாவாகவே அவனுள் வந்து கலந்து விட்டாள். "சங்கீத உலகத்துக்கு மிகப் பெரிய நஷ்டம் இது" என்று வெளியே டாக்டர், ஜமீந்தாரிணியிடம் சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. 'சங்கீத உலகத்துக்கு நஷ்டம் மட்டும்தான். எனக்கோ என் உலகமே இருண்டு போய்விட்டதே' - என்று கதறியது அவன் உள்ளம். புன்முறுவல் பூத்தபடி, உறங்குவது போல, வாடிய ரோஜா மாலையாகக் கட்டிலில் கிடந்தது மதுரத்தின் சரீரம். அந்தக் குடும்பத்தின் வழக்கம் போல் சுமங்கலிகள் இறந்தால் செய்யும் முறைப்படி அவள் கைகளை நெஞ்சில் குவித்து பூவும் மஞ்சள் கிழங்கும், குங்குமச் சிமிழும் அவள் கைகளின் அருகே நெஞ்சில் வைக்கப்பட்டிருந்தன. அபூர்வமாக அன்று பகலில் அவள் தலைவாரிப் பின்னிப் பூ வைத்துக் கொண்டதும், பெட்டியிலிருந்து வளைகளை எடுத்து அணிந்து கொண்டதும், ராஜாராமனுக்கு நினைவு வந்தன. அவன் அப்படியே ஸ்தம்பித்துப் போனான். கண்கள் வற்றுகிறவரை அழுது கொண்டே நின்றான். இப்படிப் போவதற்காகவே, அன்று பகலில் அவள் அவன் இலையில் சாப்பிட்டுவிட்டு அந்த அல்ப மகிழ்ச்சியிலேயே யுகம் யுகமாகத் தாம்பத்யம் நடத்திவிட்டாற் போன்ற பரிபூரணத் திருப்தியோடு எழுந்திருந்தாளோ என்று அவன் மனம் எண்ணியது. அவள் பேசியிருந்த பேச்சுக்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவன் நெஞ்சை அலைக்கழித்தன. "நான் ஒருத்தி இருக்கிற வரை நீங்க சாமியாராக முடியாது... அதற்கு விடவும் மாட்டேன்." -ஆம் இப்போது அவள் அவனைச் சந்நியாசியாக்கி விட்டாள். தாம்பத்தியத்தின் நளினங்களுக்குச் சாட்சியாக இருந்தவள் போனபின் இனி அவன் யாருக்காகவும் அந்த ஆசையை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஒருவருடைய அன்புக்குக் காரணமான சாட்சி அழியும்போது, மனிதன் சந்நியாசியாகிறான். சந்நியாசியான பின்போ உலகமே அன்பு மயமாகத் தெரிய ஆரம்பிக்கிறது. அன்பின் எல்லைகள் விரிவடைகின்றன. |