14 அவளுடைய மரணத்தை அவனால் நம்பவே முடியவில்லை. சுற்றிச் சுற்றி அவளுடைய முகமும், புன்னகையுமே அவன் கண்களில் நின்றன. அந்த சங்கீதக் குரல் அவன் செவிகளில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. மதுரம் என்ற பதத்திற்கு இனிமை என்று பொருள். அவள் இருந்த வரை அவனுடைய உலகம் இனிமையாயிருந்தது. அவள் போன பின்போ அவனுடைய உலகம் கசப்பு மயமாகி விட்டது. "நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்! அழுது என்ன பிரயோசனம் இனிமே?" என்றார் பிருகதீஸ்வரன். நான்கு நாள் வரை மதுரத்தைப் பறிகொடுத்த அந்த மலையடிவாரத்து வீட்டில் இருப்பதே வேதனையாயிருந்தது. அவன் பைத்தியம் போலானான். வேளா வேளைக்குச் சாப்பிடவில்லை. அன்ன ஆகாரமின்றி அவன் பட்ட அவஸ்தையைப் பார்த்து பிருகதீஸ்வரன் இடம் மாறினால் அவன் கொஞ்சம் ஆறுதல் பெற முடியுமென்று நினைத்தார். முத்திருளப்பனும் அப்படியே அபிப்பிராயப்படவே இருவருமாக ராஜாராமனை ஆசிரமத்துக்கு அழைத்துக் கொண்டு போக முடிவு செய்தனர். ஆசிரமத்துக்குப் புறப்படுமுன் கடைசியாக அவள் தன் கைகளில் கொடுத்த அந்த வீணையையும் தன்னோடு எடுத்துக் கொண்டான் ராஜாராமன். அவர்கள் எல்லாரும் புறப்பட்ட போது ஜமீந்தாரிணி மனசு பொறுக்காமல் வாய்விட்டுக் கதறி அழுதே விட்டாள். "நீங்க எல்லாம் நல்லதா நெனைச்சு, நல்லபடி செஞ்சும், பகவான் வேற மாதிரி நினைச்சுட்டான். நாம என்ன செய்ய முடியும்? நம்ம கையிலே எதுவும் இல்லே. தேசத்துக்குச் சுதந்திரம் வந்ததும், அவா ரெண்டு பேருக்கும் நானே கூட இருந்து கலியாணத்தைப் பண்ணி வைக்கிறேன்னு மதுரத்தோட அம்மாவுக்கு வாக்குக் கொடுத்தேன். தெய்வ சித்தம் வேறு மாதிரி இருக்கும் போலத் தெரியறது" - என்று பிருகதீஸ்வரனும் கண் கலங்கினார். ஆசிரமத்தில் ஓடையின் கரை ஓரமாக பிருகதீஸ்வரன், தான் தங்கியிருந்த ஒரு குடிசையில் ராஜாராமனையும் தன்னோடு தங்கச் செய்து கொண்டார். ***** இதற்கிடையில் தேசத்திலும், தமிழ்நாட்டிலும் எவ்வளவோ மாறுதல்கள் நடந்தன. தமிழ்நாட்டுத் தேச பக்தர்களிடையே திருப்பரங்குன்றம் மகாநாட்டில், திருச்செங்கோடு தேர்தல் செல்லாதென்று தீர்மானம் நிறைவேற்றியதோடு, 'பார்லிமெண்டரி போர்டு அமைக்கும் அதிகாரத்தைக் காரியக் கமிட்டியிடம் கொடுக்க வேண்டும்' என்ற தீர்மானமும் நிறைவேறியிருந்தது. பார்லிமெண்டரி போர்டு அமைக்கும் வேலையைக் காரியக் கமிட்டியிடம் விடக்கூடாது என்று இன்னொரு கோஷ்டியினர் கருதினார்கள். இந்தக் குழப்பம் காங்கிரஸ் மேலிடம் வரை போயிற்று. பிரிவுகளும் பேதங்களும் பலமாயின. அப்போது அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராயிருந்த அபுல்கலாம் ஆசாத் நிலைமையை நேரில் கண்டறிவதற்காகக் காரியக் கமிட்டி உறுப்பினரான அஸப் அலியைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார். 1945-டிசம்பர் மாதம் பதினெட்டாம் தேதி அஸப் அலி சென்னைக்கு வந்து சேர்ந்தார். ஒரு வாரம் தங்கினார். அப்புறம் சர்தார் பட்டேலைச் சந்திப்பதற்காகப் பம்பாய் போனார். கடைசியில் இந்தக் கோஷ்டியில் ஐந்து பேர், அந்தக் கோஷ்டியில் மூன்று பேருமாக எட்டுப் பேரும் கொண்ட பார்லிமெண்டரி கமிட்டி அமைக்கப்பட்டது.
இப்போதெல்லாம் முன்னைப் போல் கட்சி வேலைகளில் ராஜாராமனுக்கு ஈடுபாடு இல்லை. ஆசிரமத்தை வளர்க்கவும் கல்வி அறிவைப் பெருக்கி வேற்றுமைகளை அகற்றுவதன் மூலம் நாட்டின் தீண்டாமையை ஒழித்துக் கட்டவும் சுதேசித் தொழில்களை வளர்க்கவும் பாடுபட விரும்பினான் அவன். மகாத்மா காந்திக்குப் பின் அவரைப் போல் இனிமேல் ஆத்ம பலத்தையும், சேவை மனப்பான்மையையும் பெரிதாக மதிக்கும் தலைவர்கள் தோன்றுவார்களா என்று எண்ணித் தயங்கியது அவன் உள்ளம். 'எப்போதோ இந்தத் தேசம் செய்த தவத்தின் பயனாக மகாத்மா வந்து தோன்றியிருக்கிறார். அவரை நம்பி, அவருடைய சத்யாக்கிரக வழியை நம்பித் தேசிய இயக்கம் என்கிற மகாவிரதத்தை மேற்கொண்டவர்கள், அவர் இருக்கிறவரைதான் இங்கே வணங்குவதற்கும், பூஜிப்பதற்குமுரிய ஒரு அவதார புருஷனைப் பார்க்க முடியும். அப்புறம் இந்தியாவில் தலைவர்கள் இருப்பார்கள். ஆனால் ஆத்ம பலத்தையும், சத்தியத்தையும், கருணையையும், அன்பையும் மட்டுமே நித்திய சாதனங்களாக நினைக்கும் தலைவர்கள் இருப்பார்களா? கொஞ்ச நாட்களாக அவனுக்கும், பிருகதீஸ்வரனுக்கும் இதைப் பற்றியே விவாதங்கள் நடந்தன.
"நீ சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் காந்தி மகானைப் போல் ஆத்மபலத்தை நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய், சுபாஷ் சந்திர போஸைப் போல் மன வலிமையையும், உடல் வலிமையையும் நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய்விட்டால் நாளைய இந்தியாவை என்னால் நினைக்கவே முடியவில்லை ராஜா!..." "கீதையைச் சொல்வதற்கு ஒரு பரமாத்மாவும் சத்தியத்தையும் அகிம்சையையும் சுட்டிக் காட்டுவதற்கு ஒரு மகாத்மாவும் தான் இங்கே பிறக்க முடியும் போலிருக்கிறது..." "காரணம் அதில்லை ராஜா! காந்தி ஒரு தேசிய மகா முனிவரைப் போல் அகங்காரத்தையும், நான் எனது என்னும் உணர்வையும் அழித்துவிட்டு அப்புறம் ஒரு குழந்தையின் மனத்தோடு அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்த நாட்டில் தவத்துக்கு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட விரத நியமங்களை அரசியலுக்கும், தேசபக்திக்கும் கூட ஏற்று அங்கீகரித்துக் கொண்டு ஒரு தவத்தோனின் உடை, தவத்தோனின் உணவு, தவத்தோனின் பழக்க வழக்கங்களோடு இந்தியாவில் உலாவுகிறார் அவர். அகங்காரத்தை அழித்து விட்டு இப்படித் தவம் செய்பவர்களைப் போல அரசியலுக்கு வருகிறவர்கள் நாளைக்கும் இங்கே இருப்பார்களா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது இந்தியாவின் எதிர்காலம்" - என்றார் பிருகதீஸ்வரன். "யாருக்குத் தொண்டனாகும் மனோதிடம் இருக்கிறதோ அவனே தலைவனாக முடியும். மகாத்மாவுக்கு அது பரிபூரணமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் இருக்கும் போது அதற்குத் தயாராகி விட்டார் அந்த மகாமுனிவர்..." என்றார் முத்திருளப்பன். குருசாமி எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கட்சி அரசியலிலிருந்து அவர்கள் வழி மெல்ல மெல்ல விலகி அதை விட விசாலமான பணிகளுக்கு வந்துவிட்டது. ஆசிரமப் பணிகளிலும், நண்பர்களின் கூட்டுறவிலும் உயிர்க்குயிராக நேசித்தவளை மரணத்துக்குப் பறிகொடுத்த துயரத்தை மறக்க முயன்றான் ராஜாராமன். எவ்வளவோ மனத்தைத் தேற்றிக் கொள்ள முயன்றும் சில சமயங்களில் சோகம் அவன் மனத்தைக் கவ்விச் சித்ரவதை செய்தது. சில வேதனையான மனநிலைகளில் தன் அறையில் வைக்கப்பட்டிருந்த அந்த வீணையையே இமையாமல் பார்த்தபடி பைத்தியம் போல் நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருப்பது அவன் வழக்கமாயிருந்தது. அப்படி வேளைகளில் ஜடப்பொருளான அந்த வீணையும் அவனோடு பேசியிருக்கிறது, பாடியிருக்கிறது. ஆத்மாவுக்கு மட்டுமே புரிகிற ஆத்மாவின் அநுராகங்களையும், ராகங்களையும், தாபங்களையும், தவிப்புகளையும் சொல்லியிருக்கிறது. ஒரு பிரமையைப் போலவும், நிஜத்தைப் போலவும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வீணையின் ஒலி அவன் செவிகளை மட்டும் நிறைத்திருக்கிறது. வளையணிந்த தந்தக் கைகள் அதன் தந்திகளை மீட்டி நிசப்தமான நள்ளிரவு வேளைகளில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படியான மதுர சங்கீதத்தை வாரி வழங்கியிருக்கிறது. இன்னும் சில வேளைகளில் அந்த வாத்யத்துக்குப் பதில் மதுரமே அங்கு நளினமாக ஒடுங்கி உறங்குவது போல் ஒரு பிரமை அடைந்து மனம் தவித்துத் துடித்திருக்கிறான் அவன். பிருகதீஸ்வரனும், நண்பர்களும் கூட அவன் படும் வேதனையை அறிந்து நெகிழ்ந்து போயிருந்தார்கள். காலம் தான் மெல்ல மெல்ல அவன் மனப் புண்ணை ஆற்ற வேண்டுமென்று தோன்றியது அவர்களுக்கு. ***** 1946-ஆம் வருஷம் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இந்திப் பிரசார சபை வெள்ளி விழாவிற்குத் தலைமை வகிக்க மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தார். பின்னால் சென்னையில் பார்லிமெண்டரி தூதுக் குழுவையும் சந்தித்தார். சென்னையில் மகாத்மாவின் பிரார்த்தனைக்கும், கூட்டங்களுக்கும் இலட்சக் கணக்கில் மக்கள் கூடினார்கள். இந்திப் பிரச்சார சபைக்கருகே அவர் தங்கியிருந்த இடத்தில் திருவிழாக் கூட்டம் கூடியது. மகாத்மாவைத் தரிசிப்பதிலும் அவருடைய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வருவதிலும், உபதேசங்களைக் கேட்பதிலும் சென்னை மக்கள் அளவற்ற உற்சாகம் காட்டினர். ஒரு வாரத்துக்கு மேல் சென்னையில் தங்கி விட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் பழனி முருகனையும் தரிசிப்பதற்காக மகாத்மா தெற்கே மதுரைக்கு வந்தார். எப்படியாவது முயன்று, அந்த மகாபுருஷனின் திருவடிகள் சத்திய சேவாசிரமத்து மண்ணிலும் படவேண்டுமென்று ஏற்பாடு செய்ய முயன்றார்கள் பிருகதீஸ்வரனும், ராஜாராமனும். ஒரு மணி நேரமாவது அவர் ஆசிரமத்தில் வந்து இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துக் கேட்டும் பயனில்லை. மகாத்மாவின் பிரயாண ஏற்பாடுகளை உடனிருந்து கவனித்த எல்.என். கோபாலசாமியைச் சந்தித்து வேண்டிய போதும் முடியவில்லை. மகாத்மாவின் பிரயாணத் தளர்ச்சி காரணமாகவும், சத்திய சேவாசிரமத்துக்கு ஒரு மணி நேரம் பிரயாணத் தொலைவு இருந்ததன் காரணமாகவும், வரவேற்புக்குப் பொறுப்பான தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. எனினும் மகாத்மாவைச் சந்தித்து வணங்கும் பாக்கியமும் 'ஆசிரமம் நன்றாக வளர்ந்து நாட்டுக்குப் பயன்படவேண்டும்' என்று அவர் வாய்மொழியாகவே ஆசிபெறும் பேறும் அவர்களுக்குக் கிடைத்தது. "எல்லாத் தொழில்களையும், யந்திரமயமாக்கி விட்டால் கிராமங்களும், தரித்திர நாராயணர்களும் வருந்திப் பாழடைய நேரிடும். சர்க்கா, நெசவு போன்ற குடிசைத் தொழில்கள் பெருகவும், வளரவும் உங்கள் சத்திய சேவாசிரமம் பாடுபடவேண்டும்" என்று ராஜாராமனிடம் கூறினார் மகாத்மா. அவன் அப்படியே செய்வதாகப் பாபுஜியிடம் வாக்களித்தான். ஆசிரமத்தின் பெயர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர் பாராட்டினார். "கதர் மூலம் பல கோடி மக்களின் உடைத் தேவை நிறைவேறாது என்று விவரம் தெரிந்தவர்கள் கூட நினைப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா ஏராளமான கிராமங்களும், விவசாயிகளும் நிறைந்த நாடு. கிராமங்கள் அழிந்தால் இந்தியாவே அழிந்துவிடும். கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் ஏற்பாடு தான் கதர். இதைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. கதர் ஓர் புனிதமான தேசிய விரதத்தின் சின்னம். நான் சொல்லும் ஏனைய இலட்சியங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கதர் அணிவதால் மட்டும் பயனில்லை. அவர்கள் கதரையும், என் இலட்சியங்களையும் சேர்த்தே எரித்து விடலாம்" - என்று வருத்தப்பட்டார் மகாத்மா. "சத்தியத்தின் நம்பிக்கை இல்லாதவன், அகிம்சையில் நம்பிக்கை இல்லாதவன், சுயநலத்தை விட மனமில்லாதவன், பிறர்க்குத் தீங்கு நினைப்பவன், கதர் அணிவதில் அர்த்தமே இல்லை! உங்கள் ஊர் ஆலயம் ஹரிஜனங்களுக்குத் திறக்கப்பட்டது என்று அறிந்த பின்பே நான் மகிழ்ச்சியோடு இங்கே தரிசிக்க வந்தேன். ஹரிஜனங்களுக்கும் ஏழைகளுக்கும் நன்மை உண்டாக்கப் பாடுபட வேண்டும். மதுவிலக்கும், கதரும், கிராமப் புனருத்தாரணமும் எந்த சத்தியாகிரகிக்கும் இலட்சியங்களாகவும் விரதங்களாகவும் ஆகியிருக்கின்றனவோ அவனே கதர் அணிய யோக்யதை உள்ளவன்." ராஜாராமனுக்கு கங்கையில் மூழ்கி எழுந்தது போல் மகாத்மாவைச் சந்தித்து அவர் உரைகளைக் கேட்ட அநுபவம் மெய்சிலிர்க்கச் செய்வதாயிருந்தது. அந்தப் பொக்கை வாய்க் கிழவரின் புன்முறுவலிலும், ஆசியிலும் சகல துக்கங்களையும் மறக்க முடிந்தது. தங்கள் காலத்தின் மகா முனிவரைச் சந்தித்து வணங்கிய பெருமிதத்தோடு ஆசிரமத்திற்குத் திரும்பினார்கள் ராஜாராமனும் நண்பர்களும். காந்தியடிகள் ஆசிரமத்துக்கு வரமுடியவில்லையே என்ற மனத்தாங்கள் அவரை தரிசித்து வணங்கியதிலும் அவரோடு சிறிது நேரம் உரையாடியதிலும் மறைந்து விட்டது. இதற்கு முந்திய முறை மகாத்மா மதுரை வந்திருந்த போது மதுரம் தன் விலையுயர்ந்த நகைகளை எல்லாம் கழற்றி ஹரிஜன நிதிக்குக் கொடுத்ததும் தான் சுப்பராமன் பங்களாவில் அவரைச் சந்தித்து வணங்கியபோது அங்கே உடனிருந்த டி.எஸ்.எஸ். ராஜன் வாய் தடுமாறி "மிஸ்டர் காந்தி ராமன்" என்று தன்னை அழைத்ததையும் நினைத்துக் கண் கலங்கினான் ராஜாராமன். எப்படி நினைத்தாலும் எதை நினைத்தாலும் அந்த நினைவு மதுரத்தோடு போய் முடிந்து அவன் மனத்தைத் தவிக்கச் செய்தது. அவனுடைய நினைவுகளின் எல்லா ஆரம்பத்துக்கும் அவளே முடிவாயிருந்தாள். ***** மெல்ல மெல்ல ஒரு வருடமும் ஓடிவிட்டது. அவள் இறந்த வருடம் முடிந்து முதல் சிரார்த்த தினத்தன்று பிருகதீஸ்வரனையும் அழைத்துக் கொண்டு நாகமங்கலம் போயிருந்தான் அவன். ஜமீந்தாரிணி அம்மாள் அன்று மதுரத்துக்காக சுமங்கலிப் பிரார்த்தனை கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நிகழ்ச்சி அவர்கள் மனத்தை உருக்கியது. தன கணவனுக்கும், தனக்குச் சக்களத்தியாக வந்து முளைத்த யாரோ ஒருத்திக்கும், பிறந்த பெண் என்று ஒதுக்காமல் வயிற்றில் பிறந்த பெண்ணுக்குச் செய்வது போல் அவள் சிரத்தையாக நீராடிப் பட்டினி இருந்து, நாலு சுமங்கலிகளுக்குச் சாப்பாடு போட்டுப் புதுப் புடவையும், வெற்றிலைப் பாக்கும், மஞ்சள் கிழங்கும் வைத்துக் கொடுத்ததைப் பார்த்து அவர்கள் மனம் நெகிழ்ந்தே போனார்கள். அன்று முழுவதும் நாகமங்கலத்திலும் மலையடிவாரத்து வீட்டிலுமாக இருந்துவிட்டு, மறுநாள் அவர்கள் ஆசிரமத்துக்குத் திரும்பினார்கள். மறுநாளும் அதற்கடுத்த நாளும் ஒரு வேலையும் ஓடாமல் பிரமை பிடித்தது போல் இருந்தான் ராஜாராமன். மனம் தேறி அவன் பழைய நிலைமை அடைய இரண்டு நாள் பிடித்தது. மறுவாரம் ஆசிரமம் நடத்தி வந்த பள்ளிக் கூடத்துக்கு அரசாங்க அங்கீகாரமும் 'கிராண்ட்'டும் வாங்குகிற விஷயமாக அவனும், பிருகதீஸ்வரனும் சென்னைக்குப் போக வேண்டியிருந்தது. போகும் போது வழியில் திருச்சியில் இறங்கிப் புதுக்கோட்டைப் போய்க் குடும்பத்தினரோடு ஒரு நாள் தங்கிப் போக விரும்பினார் பிருகதீஸ்வரன். ராஜாராமனும் அவரோடு புதுக்கோட்டைக்குப் போனான். பிருகதீஸ்வரன் மனைவி, மதுரத்தின் மரணத்துக்காக அவனிடம் துக்கம் கேட்டு அழுதாள். 'மதுரத்தைப் போலத் தங்கமான பெண்ணை நான் பார்த்ததே இல்லை' என்று வியந்து கூறி, மதுரத்தோடு தான் மதுரையில் இருந்த நாட்களை நினைவு கூர்ந்தாள் அவள். தன்னைப் போலவே எல்லாரும் மதுரத்தை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் - எல்லாருடைய நினைவிலுமே அவள் பசுமையாகத் தங்கியிருக்கிறாள் என்பதை அறியும் போதெல்லாம் அவன் மனத்தைத் தவிக்க வைத்தது. அடைய முடியாத - அடையக் கூடாத ஒரு நஷ்டத்தைத் தான் உணர்ந்து அனுபவிப்பது போதாதென்று ஒவ்வொருவராக அதை நினைவுபடுத்தும் போதெல்லாம் அந்த நஷ்டத்தின் கனம் பெரிதாகித் தாங்க முடியாத பாரமாய் அவன் இதயத்தையே அமுக்கியது. மறுநாள் அவர்கள் புதுக்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டார்கள். சென்னையிலும் சில தேச பக்தர்களையும், மந்திரிகளையும், பிரமுகர்களையும் அவர்கள் சந்தித்தனர். ஆசிரமத்துக்கு அங்கீகாரமும் உதவித் தொகையும் பெற முயலும் முயற்சி வெற்றியடையும் போலிருந்தது. எல்லாருமே உதவி செய்வதாக வாக்களித்தனர். மாகாண மந்திரிகளாயிருந்த தேசபக்தர்கள் உதவுவதாக வாக்களித்திருந்தார்கள். ஆசிரமத்தின் எதிர் காலத்தில் நம்பிக்கையோடு அவர்கள் சென்னையிலிருந்து திரும்ப முடிந்தது. பொருளாதார ரீதியாக ஆசிரமத்துக்குப் பல சிரமங்கள் இருந்தாலும், அவர்கள் மனோபலத்தால் காரியங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். உணவு, காய்கறி, பால், தயிர், நெய் எல்லாமே ஆசிரமத்திலே கிடைக்க வசதிகள் இருந்தன. உடைத் தேவையும் அங்கே சுழன்ற சர்க்காக்களின் மூலமும், தறிகளின் மூலமும் நிறைவேறியது. மதுரம் அவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் தோட்டத்தையும் மனமுவந்து அன்றைக்கு எழுதிக் கொடுத்திருக்காவிட்டால் இன்று இந்த ஆசிரமமே உருவாகியிருக்காது என்பதை மனப்பூர்வமாக உணரும் போதெல்லாம் அவன் இதயத்தில் நன்றியும் கண்களில் நீரும் சுரந்தன. அவனுக்கும் பொதுக் காரியங்களுக்கும் வேண்டிய எல்லா உபகாரங்களையும் செய்துவிட்டுப் பதிலுக்கு ஒரு நன்மையையும் அநுபவிக்காமல் போய்விட்டவளை எண்ணியபோது மட்டும் மனம் உள்ளேயே குமுறி ஊமையாய் அழுதது. அந்த ஆசிரமத்தையே மதுரத்தின் நினைவாகப் பாவித்தான் அவன். தமிழ்நாட்டின் தலைவர்கள், பாரத நாட்டின் பல பகுதியிலிருந்தும் வந்த தேசபக்தர்கள், எல்லோரும் ஆசிரமத்துக்கு வந்து பார்த்து மகிழ்ச்சியோடு அதைப் பாராட்டத் தொடங்கினர். பத்திரிகைகளில் ஆசிரமத்தைப் பற்றிய கட்டுரைகள் 'ராஜாராமன் என்கிற தனி ஒரு காந்தீயவாதியின் சாதனை இது' என்று புகழ்ந்து வெளிவரலாயின. அவனை இத்தனை பெரிய சாதனைகள் புரிய வைத்த ச்கதி எது என்பது அவனுக்கும் அவனுடைய அத்யந்த நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. எந்தப் பவித்திரமான இதயத்தின் பிரியத்தால் அத்தனை விரைவாக நாடு முழுவதும் கொண்டாடிப் பிரியம் செலுத்தப்படும் அந்தஸ்தை அடைந்தானோ, அந்தப் பிரியத்துக்குரியவள் அவனுக்காகத் தவித்து உருகி உருகியே மாய்ந்தாள் என்ற நினைவு வரும்போது சோகம் அவனை இருளாய்க் கவ்வி மூடியது. தன் தாயின் மரணம், தான் நிலம் கரைகளை விற்றுத் தேச சேவைக்குச் செலவழித்தது, எல்லாத் துயரத்தையும் உணர முடியாமல் தன்னை ஊக்கிய அன்பின் ஒளி எது என்பதை இப்போது அவன் நன்றாக உணர்ந்திருந்தான். மதுரம் செய்த தியாகங்களின் ஒளியில் தன்னைச் சுற்றியிருந்த அந்தகாரங்கள் எல்லாம் மறைந்து, தான் உலகின் பார்வையில் பல தியாகங்களின் சொந்தக்காரனாகத் தோன்றியிருப்பதையும் உணர்ந்தான் அவன். பக்தியின் சுகத்தை அனுபவிக்கிறவர்களால் தான் பக்தி செய்யவும் முடிகிறதென்ற தத்துவத்தை வாழ்க்கையில் அநுபவங்களால் இப்போது புரிந்து கொண்டிருந்தான் ராஜாராமன். தன்னுடைய புஷ்பங்களால் அவனுடைய பாதங்களில் அர்ச்சித்தாள் மதுரம். அவனுடைய புஷ்பங்களால் பாரத மாதாவின் பாதங்களை அர்ச்சித்திருந்தான் அவன். உதாசீனத்திலிருந்து அன்பின் எல்லைக்கு அவனை அழைத்து வந்தவள் அவள். வெறுப்பிலிருந்து பிரியத்தின் எல்லைக்கு அவனை அழைத்து வந்தவள் அவள். சிறைச்சாலையின் துன்பங்களை அவன் தாங்கிக் கொள்ளச் செய்தது - அவள் பிரியமாயிருந்தது. 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' என்று அவள் பாடிய போதெல்லாம் தான் தேசத்தைப் பக்தி செய்யும் மார்க்கங்கள் ஒவ்வொன்றாக அவனுக்குப் புரிந்தன. அந்த வருஷக் கடைசியில் ஆசிரமத்தின் பள்ளிக்கூடம் அரசாங்க அங்கீகாரம் பெற்றது. ஆசிரமக் கட்டிடங்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஒரு பெருந்தொகை அரசாங்க 'கிராண்ட்' ஆக வழங்கப்பட்டது. ஆசிரமத்தின் பணிகள் வளர்ந்து விரிவடைந்தன. அதிக வகுப்புகளும், பலதுறை ஆசிரியர்களும் வந்தார்கள். சமூக சேவகர்களைத் தயாரிக்கும் சோஷியல் செர்வீஸ் டிரெயினிங் வகுப்புகளும், பெண்களுக்கான மாதர் நலத்துறையைப் பயிற்றும் வகுப்புக்களும், கிராமப் புனருத்தாரணத்தை விளக்கும் ரூரல் செர்வீஸ் டிரெயினிங் வகுப்புகளும் தொடங்கப்பட்டன. தெற்கே உருவாகும் புதிய யுவ இந்தியாவின் சாந்திநிகேதனமாக அது வளர்ந்தது. அநாதைப் பெண்கள் பலர் ஆசிரமத்தில் சேர்ந்து சமூக சேவகிகளாக வாழ்வு பெறத் தொடங்கினர். புதிய இந்தியாவின் தொண்டர்களை அந்த ஆசிரமம் அந்தரங்க சுத்தியோடு உருவாக்கத் தொடங்கியது. ராஜாராமனின் புகழ் நாடு எங்கும் பேசப்பட்டது. தேசியப் போராட்டங்கள் ஓய்ந்திருந்த காலத்தில் சமூக சேவையின் காந்தியச் சின்னமாக அந்த ஆசிரமம் வளரத் தொடங்கியிருந்தது. இந்து - முஸ்லீம் கலவரம் மூண்டு நாட்டின் வடக்கேயும் வடகிழக்கேயும் மகாத்மா ஒற்றுமைக்காக யாத்திரை மேற்கொண்டார். நவகாளி கலவரப் பகுதிகளில் மகாத்மாவின் பாதங்கள் நடந்தபோது கவலையோடு பத்திரிகைச் செய்திகளைப் படித்தான் ராஜாராமன். அந்த வருடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் போட்டியில் சா. கணேசனும், காமராஜும் போட்டியிட்டுக் காமராஜ் வென்றார். பிரகாசம் மந்திரிசபை கவிழ்ந்தது. பின் ஓமந்தூர் ரெட்டியார் வந்தார். சுதேசி ஆட்சியில் நன்மைகள் விளையலாயின. 1947 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக முகம்மதலி ஜின்னாவும், மகாத்மா காந்தியும் கூட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டார்கள். சுதந்திரத்துக்கான நன்னாள் பாரதத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. 1947 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் இந்தியா சுதந்திரம் அடைந்தது. கண்ணீராலும் செந்நீராலும் வளர்த்த இயக்கம் சுதந்திரப் பயனளித்தாலும், பாரத நாடு இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தார்கள் உண்மைத் தேசபக்தர்கள். மதுரையிலும் சத்திய சேவாசிரமத்திலும் சுதந்திர தினத்தைப் பிரமாதமாகக் கொண்டாடினார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் வராமலிருந்து பின் வந்த ஒரு தேசியத் திருவிழாவாகவே அது கொண்டாடப்பட்டது. எங்கும் மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசின. சுதந்திர தினத்தன்று தன்னுடைய பழைய விரதம் ராஜாராமனுக்கு நினைவு வந்தது. பதினெட்டு வருஷங்களுக்கு முன் இளமை ஆவேசத்தோடு மீனாட்சியம்மன் சந்நிதிக்கு முன்னால் அவனும், நண்பர்களும் செய்து கொண்ட அந்தச் சத்தியம் அவனைப் பொறுத்த வரையில் இன்னும் தொடரவே செய்தது. தேசம் சுதந்திரம் அடைகிறவரை திருமணமே செய்து கொள்வதில்லை என்று அன்று எடுத்துக் கொண்ட விரதத்தை மற்றவர்கள் இனிமேல் கைவிடலாம்; கைவிட முடியும். ஆனால் அவனோ, அந்த விரதத்தை இனியும் கைவிட முடியாமலே போய்விட்டது. எந்த மகத்தான காரணத்துக்காக அவர்கள் எல்லாம் வீடு வாசலைத் துறந்து, சுகங்களையும் பந்தபாசங்களையும் விடுத்து நோன்பு இயற்றினார்களோ, அந்த நோன்புக்குப் பயன் கிடைத்து விட்டது. ஆனால், அவனுடைய நோன்பு பலித்த வேளையில், அவனுக்காக அல்லும் பகலும் நோன்பிருந்து, "ராமா உன்னைப் பக்தி செய்யும் மார்க்கம் தெரியவில்லையே" என்று மொழியாலும், வீணையாலும் கதறியவள் யாரோ, அவளுடைய நோன்பு பலிக்காமலே தனிப்பட்டவர்களின் விரதங்கள் அந்தத் தியாக வேள்வியில் எரிந்து போயின. தேசபக்தர்களின் மகாவிரதம் பலித்து விட்டது. காந்தி என்ற சத்தியாக்கிரக மகாமுனிவரின் தவம் சித்தி பெற்று விட்டது. அந்த மகா விரதத்தில் எத்தனையோ அல்பமான விருப்பங்களும், தனிப்பட்டவர்களின் அபிலாஷைகளும், குடும்பங்களின் சுகங்களும் அழிந்து போயிருக்கலாம். ஆனால், பனி உருகி இமயம் அழியாது என்றாலும், கங்கை பிறக்கும். தேசபக்தி இமயத்தைப் போன்றதென்றால் சுதந்திரம் கங்கையைப் போன்றது. ராஜாராமனைப் போல் பலருடைய பொன்னான வாலிபத்தைக் காந்தி என்ற மகாமுனிவர் தம்முடைய பணிக்காக வாங்கிக் கொண்டார். அதனால் ராஜாராமன் பெருமைப்படலாம். ஆனால், அவனுடைய தியாகத்தில் அவனுக்காகத் தியாகங்களைச் செய்தவளுடைய தியாகமும் கலந்துதான் இருக்கிறது. அது தனித் தியாகம் இல்லை. வாழ்வில் கலக்க முடியாதவர்கள் தியாகங்களில் கலந்து விட்டார்கள். 'நான் ஒருத்தி இருக்கிறவரை நீங்கள் சாமியாராக முடியாது' என்றாள் அவள். இப்போது அவள் இல்லை. ஆகவே, அந்த விரதத்தை முடிக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை. 'வேத காலத்துக்கு மட்டும்தானா முனிவர்கள் தேவை? நவீன இந்தியாவுக்கும், சுயநலத்தைத் துறந்து பல கோடி மக்களுக்காகத் தங்களை வருத்திக் கொண்டு தவம் புரியும் பல்லாயிரம் சத்தியாக்கிரக முனிவர்கள் தேவைதான். அவர்களின் முதல் அவதாரமாகவே காந்தி தோன்றியிருக்கிறார். காந்தியைத் தொடர்ந்து இன்னும் பல்லாயிரம் புதிய முனிவர்கள் தேசத்துக்கு வேண்டும். சங்கரரின் அத்வைதம் போல், ராமாநுஜரின் விசிஷ்டாத்வைதம் போல் காந்தியம் நாளை வாழ்நாளுக்கு ஓர் அகில இந்திய ஆசாரமாக அமைய வேண்டும். அந்த ஆசாரத்தைப் பரப்பும் வாரிசுகளில் ஒருவனாக நான் இருப்பேன்' என்று சுதந்திர தினத்தன்று நீண்ட நேர மனவேதனைக்குப் பின் தனக்குள் பிரதிக்ஞை செய்து கொண்டான் ராஜாராமன். ***** இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக வந்திருந்த லார்டு மவுன்ட்பேட்டனே இந்திய மக்களின் விருப்பப்படி கடைசி கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். அதே சமயம் ஜின்னா பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலானார். ஜவஹர்லால் நேருவைப் பிரதமராகக் கொண்ட மந்திரிசபை அமைந்தது. சில மாகாணங்கள் நீங்கலாக மற்ற மாகாணங்களுக்குக் கவர்னர்கள் நியமிக்கப் பட்டார்கள். இந்து - முஸ்லிம் கலவரங்கள் மீண்டும் தலையெடுக்கவே மகாத்மா கல்கத்தாவில் உண்ணாவிரதம் தொடங்கினார். பலருடைய அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி எழுபத்து மூன்று மணி நேரத்துக்குப் பின் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் மகாத்மா. அடுத்த வருடம் ஜனவரி மாதம் டில்லியிலே நடைபெற்ற கலவரத்தைக் கண்டித்து மகாத்மா மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். மகாத்மாவின் உண்ணாவிரதம், நாள் கணக்கில் நீடித்தது. எல்லாத் தலைவர்களும் வாக்குறுதி அளித்து மகாத்மா உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி செய்தார்கள். பிரார்த்தனைகளும் கூட்டங்களும் நடந்தன. மக்கள் வெள்ளமாகக் கூடினார்கள். 'வைஷ்ணவ ஜனதோ'வும் 'ரகுபதி ராகவ'வும் இலட்சக் கணக்கான செவிகளில் ஒலித்துச் சாந்தியளித்தன. ஜனவரி மாதம் இருபதாம் தேவி மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட செய்தியை அறிந்து ராஜாராமன், அந்தச் செய்தி தெரிந்த வேளையிலிருந்து அன்ன ஆகாரமின்றி மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டான். காரணமின்றி அவன் மனம் கலங்கியது. கீதையை எடுத்து வாசித்து ஆறுதல் பெற முயன்றான். அப்போது பிருகதீஸ்வரனும் புதுக்கோட்டை போயிருந்தார். உலகில் கெட்டவர்களுக்குத்தான் எதிரிகளும் பகைவர்களும் இருப்பார்கள் என்று அவன் இது வரை எண்ணியிருந்தான். இப்போதோ மகான்களுக்கும், நல்லவர்களுக்கும் கூட எதிரிகள் இருப்பார்களென்று நிதரிசனமாகத் தெரிந்தது. எந்த மகானின் விரதங்களால் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா சுதந்திரம் அடைந்ததோ, அந்த இந்தியாவிலேயே மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டத்திலே வெடிகுண்டு வீசவும் ஒருவன் இருப்பான் என்பது நினைக்கவும் கூச வேண்டிய விஷயமாயிருந்தது. கங்கையும், வேதங்களும் பிறந்த நாட்டில் கருணையும், அன்புமாக வாழ்கிறவர்களின் உயிருக்கு உலை வைக்கும் கொடியவர்களும் பிறந்திருக்க முடியும் என்பதையே இப்போது தான் அநுமானிக்க முடிந்தது. மகாத்மாவுக்காகத் தெய்வங்களைப் பிரார்த்தித்துக் கொண்டான் அவன். |