2 மே மாதம் முதல் வாரம் சித்திரைத் திருவிழாவின் கலகலப்பும் இப்போது மதுரையில் இல்லை. வடக்குச் சித்திரை வீதியில் இருள் சூழ்ந்து விட்டது. என்ன காரணத்தாலோ முனிசிபல் விளக்குகள் பதினொரு மணிக்கே கண்மூடித் தூங்கிவிட்டன. மொட்டைக் கோபுரத்து முனியாண்டியைத் தூங்க வைப்பதற்கு தாலாட்டுப் பாடுவது போல், யாரோ ஒரு வேளார், அல்லியரசாணிமாலை ராகத்தில், மதுரை வீரன் கதையை உடுக்கடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். மீனாட்சி கோவில் மதில்களில் அது பயங்கரமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது. மதிலை ஒட்டி இருந்த நந்தவனத்தில் தென்னை மரத்தின் பச்சை ஓலைகளைக் காற்று சுதந்திரமான சுகத்துடன் அசைத்துக் கொண்டிருந்தது. அன்று 7-5-30ல் வாசகசாலையில் ஒரு மிக முக்கியமான கூட்டம். அதனால் மதிலுக்கு எதிர் வரிசை மாடியில் திலகர் தேசிய வாசகசாலையின் அறையில் மட்டும் விளக்கு இன்னும் அணையவில்லை. மாடி முகப்பில் யாரோ சிலர் நின்று எவருடைய வரவையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. மேலச்சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் சந்திக்கிற மூலையில் இருந்த ஓட்டல் வாசலில் வேலை செய்கிறவர்கள், கோடைக்காக வெளியே கட்டில்களை எடுத்துப் போட்டுக் கொண்டு, தூக்கம் வராததால் ஏதோ ஊர்க் கதைகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாசக சாலையில் கூடியிருந்தவர்கள் எதிர்பார்த்திருந்த ராஜாராமன் அன்னக்குழி மண்டபத்துக்குப் பின்னாலிருந்து புறப்பட்டு வாசக சாலைக்கு வந்து சேரும் போது மணி பதினொன்றரை ஆகிவிட்டது. கையோடு முதல் நாள் சென்னையில் பதிப்பாகி மறுநாள் மதுரைக்குக் கிடைத்திருந்த 'சுதேசமித்திரன்' தினசரியையும் கொண்டு வந்திருந்தான் ராஜாராமன். மாடிப்படி இருண்டிருந்தது. ஆறடி உயரத்திற்கு மேலிருந்த ராஜாராமன் வெளேறென்று தும்பைப் பூப்போல் வெளுத்த தூய உடையின் கம்பீரத்தோடு படியேறி வந்தது மின்னல் புறப்பட்டு மேலேறி வருவது போலிருந்தது. ராஜாராமன் மேலே படியேறி வருவதைப் பார்த்ததும், மாடி முகப்பில் கூடியிருந்தவர்கள் உள்ளே திரும்பினர். வாசக சாலையையும் மாடிப்படியையும் இணைக்கும் கதவு ராஜாராமன் உள்ளே வந்ததுமே தாழிடப்பட்டது. கீழே விரிக்கப்பட்டிருந்த பாயில் நண்பர்கள் சூழ அமர்ந்தான் ராஜாராமன். விளக்கு வெளிச்சத்தில் அவன் தோற்றத்தை இப்போது மிக நன்றாகப் பார்க்க முடிகிறது. உயரத்திற்குத் தகுந்த அழகும் வசீகரமும் அவன் தோற்றத்தில் பொருந்தியிருக்கின்றன. ரோஜாப் பூ நீளமாகப் பூத்துச் சிவந்தது போல் நளினமாயிருந்த அவனுடைய அழகிய கைவிரல்களால் 'சுதேசமித்திரன்' தினசரி படிப்பதற்காக விரித்துப் பிடிக்கப்பட்ட போது எல்லோருடைய கண்களும் அவன் முகத்தையே பார்த்தன. பெண்மையின் வசீகரச் சாயலும், ஆண்மையின் எடுப்பும் கலந்திருந்த அந்த முகத்தில் கலக்கம் நிழலிட்டிருந்தது. சென்னையில் 1930-ம் ஆண்டு மே மாதம் ஆறாந்தேதி வெளியிடப்பட்டு மறுநாள் ஏழாந்தேதி மதுரைக்குக் கிடைத்திருந்த பேப்பர் அது. ராஜாராமன் பேப்பரைப் படிப்பதற்கு முன், "உனக்குத் தெரியுமா, ராஜா? புரொபஸர் சாமுவேல் கடைசியில் அந்தப் பக்கிரிசாமியை மதம் மாற்றி விட்டார். நேற்றிலிருந்து காலேஜ் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கூட அவன் பெயரை ஜான் பக்கிரிசாமி என்று மாற்றி எழுதியாச்சாம்!" - என்று உள்ளூர் மிஷன் கல்லுரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப்பற்றிச் சுற்றிலும் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவன் பிரஸ்தாபித்தபோது, அதைக் கேட்டு ராஜாராமனுக்குக் கோபமே வந்து விட்டது.
"காலேஜைப் பற்றியும், வெள்ளைக்காரனுக்குத் துதிபாடும் அந்தச் சாமுவேல் வாத்தியாரைப் பற்றியும் இங்கே பேசாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது? இந்த தேசத்தில் இந்தத் தலைமுறையில் ஒரே ஒரு மதமாற்றம் தான் உடனடியா நடக்கணும். ஜனங்களை அடிமைத் தனத்திலிருந்து சுதந்திரத்திற்கு மதம் மாற்றியாக வேண்டும். அதைக் காந்தி மகான் செய்து கொண்டிருக்கிறார். பாவிகள் அது பொறுக்காமல், முந்தாநாள் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையே இல்லாமல் சிறைத்தண்டனையும் கொடுத்திருக்கிறார்கள்!"- கூறிவிட்டுச் 'சுதேசமித்திரனை'யும் படித்து காட்டிய போது, உயிர்க்களை ததும்பும் ராஜாராமனின் ஜீவன் நிறைந்த விழிகளில் சத்தியாவேசம் ஒளிர்ந்தது. 'சுதேசமித்திரனை'ப் பிடித்திருந்த அவன் கைகள் குங்குமமாகச் சிவந்திருந்தன. கூரிய நாசிக்குக் கீழே சிவந்த அழுத்தமான உதடுகள் அவன் எதையும் சாதிக்கக்கூடியவன் என்ற திடசித்தத்தைக் காட்டின.
மேலக் கோபுரத்தருகே ஃபண்டாபீஸில் மணி பன்னிரண்டு அடிக்கும் ஓசை காற்றில் மிதந்து வந்தது. மேலே ராஜாராமன் என்ன சொல்லப் போகிறான் என்று எதிர்பார்த்து எல்லோரும் அவனையே பார்க்கத் தொடங்கினார்கள். ராஜாராமனைத் தவிர அங்கிருந்த நால்வரில் முத்திருளப்பன் பள்ளி ஆசிரியா; குருசாமி பாண்டிய வேளாளர் தெருவில் தையற்கடை வைத்திருந்தார்; சுந்தரராஜன், பழநியாண்டி, இருவரும் கல்லூரி மாணவர்கள். ராஜாராமனும் சில மாதங்களுக்கு முன்புவரை அவர்களோடுதான் கல்லூரியில் சக மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தான். தேசத்தின் அறைகூவலை ஏற்றுக் கல்லூரியிலிருந்து அவன் வெளியேறிச் சில மாதங்கள்கூட ஆகவில்லை. இண்டர்மீடியட் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்த அவன் படிப்பைவிட்டு விட்டு தேசிய வேள்வித் தீயில் குதித்ததை அவன் தாயே விரும்பவில்லை. இளமையிலேயே விதவைக் கோலம் பூண்ட அந்த அன்னை, தான் வாழ்ந்த குடும்ப வாழ்வின் ஒரே இனிய ஞாபகமாக எஞ்சி நிற்கும் மகன் மனம் கோணும்படி அவனைக் கண்டிக்க முடியாமல் கவலைப்பட்டாள். "ராஜா! நீ இப்படிச் செய்திருக்கப்படாது," என்று ராஜாராமனின் தாய் அவன் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டதைப் பற்றி வருத்தப்பட்டபோது, "ஒரு பிள்ளையைப் பெற்ற தாயாகிய நீயே இப்படிக் கவலைப் படறியே அம்மா! கோடிக்கணக்கான பிள்ளைகளைப் பெற்றிருக்கும் ஒரு தாய் எவ்வளவு கவலைப்படுவாள் என்று நினைத்துப்பாரு"- என்பதாகப் பதில் சொன்னான் அவன். அந்தப் பதிலை எதிர்த்துப் பிள்ளையிடம் முரண்டு பிடிக்கத் தாயால் முடியவில்லை. அவன் போக்கில் விட்டு விட்டாள். ராஜாராமனைத் தொடர்ந்து கல்லூரியிலிருந்து வெளியேறுவதாக வாக்களித்திருந்த சுந்தரராஜனும், பழநியாண்டியும் இதுவரை அப்படிச் செய்யவில்லை. 'சுதேசமித்திரனை' மடித்து வைத்துவிட்டு "ஏண்டா, நீங்க ரெண்டுபேரும் எப்ப வெளியேறி வரப் போறீங்க?"- என்று சுந்தராஜனையும், பழநியாண்டியையும் பார்த்துக் கேட்டான் ராஜாராமன். பழநியாண்டியும், சுந்தரராஜனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சுந்தரராஜன் தான் முதலில் பதில் கூறினான். "ஃபாதர் ரொம்பக் கண்டிப்பா இருக்கார். ரெண்டு வருஷத்தை எப்படியாவது கடந்திட்டா, லா காலேஜிலே சேர்ந்துகிடலாம்ங்கிறார். அதான் பர்க்கிறேன்..." "சரி! நீ உருப்படவே போறதில்லே. வக்கில் புதுத் தெருவிலேயே கிடந்து, அடிமையாகவே சாகத்தான் லாயக்கு." வக்கீலான தந்தைக்குப் பயந்து சுந்தரராஜன் பின்வாங்கியது ராஜாராமனுக்குக் கோபமூட்டியது. மற்றொருவனாகிய பழநியாண்டி பதில் சொல்லுமுன்பே அவன் பதில் என்னவாயிருக்கும் என்று ராஜாராமனே அநுமானித்து விட்டான். பழநியாண்டியின் தந்தை பழுத்த ஜஸ்டிஸ் கட்சி ஆள். டாக்டர் நாயரைத் தெய்வமாக நினைத்து வெள்ளைக்காரனின் துதி பாடிக் கொண்டிருப்வர். பழநியாண்டியும் தனக்குத் துணை வரமாட்டான் என்பது ராஜாராமனுக்குப் புரிந்து விட்டது. அதனால் அதற்காகத் தன் முடிவை மாற்றிக் கொள்ள அவன் தயாராயில்லை. "சுந்தரராஜன் வக்கீலாகப் போகிறான். உங்கப்பாவோ 'ஸர்' பட்டத்துக்குப் பழி கிடக்கிறார். பையன் தேசப் போராட்டத்துக்குப் போறது நிச்சயமாக அவருக்குப் பிடிக்காது. என்ன, பழநியாண்டி, நான் சொல்றது சரிதானே? "நான் இங்கே வர்ரது போறது கூட எங்கப்பாவுக்குத் தெரியாது,"- என்று பழநியாண்டி பயந்து கொண்டு ஆரம்பித்த போது ராஜாராமனுக்கு மேலும் கோபம் வந்தது. "தெரியாதா, ரொம்ப நல்லது! நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய், வேஷ்டியை அவிழ்த்துப் போட்டு விட்டுச் சேலை கட்டிண்டு காலேஜுக்குப் போங்கடா. வேஷ்டி ஆம்பளைகளோட சின்னம். நீங்க அதைக் கட்டிக்கிறது அதுக்கு மரியாதையில்லே." ராஜாராமனுடைய கோபத்தைக் கண்டு நண்பர்கள் ஒன்றும் பேசத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் நேரமாகிறதென்று சொல்லிக்கொண்டே சுந்தரராஜனும், பழநியாண்டியும் மெல்ல வீட்டுக்கு நழுவினார்கள். முத்திருளப்பனும், குருசாமியும் ராஜாராமன் எப்படிச் செய்யச் சொன்னானோ அப்படிச் செய்யத் தயாராயிருந்தார்கள். வீட்டுக்குத் திரும்ப நேரமில்லாவிட்டால் அங்கேயே அந்த ஒரே பாயில் ராஜாராமனோடு படுத்துத் தூங்கக் கூடியவர்கள் அவர்கள். அது ராஜாராமனுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் அவன் அவர்களை ஒன்றும் கேட்கவில்லை. சுந்தரராஜனும் பழநியாண்டியும் புறப்பட்டுப் போனபின் அவர்கள் மூவரும் தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களுக்குத் திட்டமிடத் தொடங்கினார்கள். அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் தன்னுடைய வீட்டுக்கு முன்புறமிருந்த அறையிலேயே திலகர் தேசிய வாசக சாலையை நடத்தி வந்த ராஜாராமன, அந்த வீட்டுக்காரர் இந்த வாசக சாலையில் நள்ளிரவிலும் ஆட்கள் கூடுவது, வந்தே மாதரம் பாடுவது போன்றவற்றால் கோபப்பட்டுக் காலி செய்யச் சொன்னதால், வடக்குச் சித்திரை வீதி மாடிக்கு மாற்றியிருந்தான். இடம் மாற்றிச் சில நாட்களே ஆகின்றன. கீழேயும், பக்கத்திலும் குடியிருப்பு வீடுகள் இல்லாததால் வடக்குச் சித்திரை வீதி மாடியில் எந்த நேரத்திலும் நண்பர்கள் கூடிப் பேச வசதியாயிருந்தது. மாடிப்படியேறுகிற இடத்தில் கீழே தங்கம் - வெள்ளிப் பூச்சு வேலை செய்த ஒரு கில்ட் ஷாப் இருந்தது. கில்ட்-ஷாப்காரர் ரத்தினவேல் பத்தர் ஒரு காந்தி பக்தர். அவர் தான் இந்த இடத்தை ராஜாராமனுக்குச் சொன்னவர். மாடிப்படிப் பாதை தனியே நேராகத் தெருவுக்கு இறங்கி விடுவதால், இந்தப் புது இடம் எந்த நேரமும் பூட்டத்திறக்க வசதியாக இருந்தது. மாதம் பத்து ரூபாய் வாடகை, அதை நண்பர்கள் பங்கிட்டுக் கொண்டு கொடுத்துவர ஏற்பாடாகி இருந்தது. புது இடத்தில் முதல் முதலாக நடக்கும் நள்ளிரவுக் கூட்டம் இதுதான். பின்புறம் இந்த வாசக்சாலையின் மாடி ரூமை ஒட்டினாற்போல் ஒரு சின்ன மொட்டை மாடி! அடுத்துப் பக்கத்திலுள்ள ஒண்ணாம் நம்பர் சந்தில் இருக்கும் மாடி வீட்டில் அறை ஒன்று இந்த மொட்டை மாடியை ஒட்டி இருக்கிறது. ரொம்ப நேரம் வரை அந்தப் பக்கத்து மாடியறையிலிருந்து யாரோ சுகமாக வீணை வாசித்துக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. ஃபண்டாபீஸ் மணி இரண்டடித்தபின் அந்த வீணை ஒலியும் நின்று போயிற்று. ராஜாராமன், அந்நியத் துணி பகிஷ்காரம், கள்ளுக்கடை மறியல் போன்றவற்றைப் பற்றி ஒரு திட்டம் போட்டு, நண்பர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். எதை எப்படி எங்கெங்கே செய்வதென்பது பற்றி நண்பர்கள் விவாதித்தனர். உப்பு சத்தியாக்கிரகம் அப்போதுதான் நாடெங்கும் நடந்து தலைவர்கள் கைதாகியிருந்தனர். "கள்ளுக்கடை மறியலைச் செல்லூர்லியாவது திருப்பரங்குன்றத்திலயாவது நடத்தணும்,"- என்றார் முத்திருளப்பன். அந்நியத் துணிக்கடை மறியலை மேலக் கோபுர வாசலில் வைத்துக் கொள்வதா, கீழ்ச் சித்திரை வீதியில் அம்மன் சந்நிதியருகே வைத்துக் கொள்வதா என்பது பற்றி ராஜாராமனுக்கும் குருசாமிக்கும் அபிப்ராயபேதம் இருந்தது. பல பெரியவர்கள் ஏற்கெனவே நடத்தியிருந்த இந்த மறியல்களை அவர்கள் மீண்டும் நடத்த எண்ணினர். காந்தி கைதானதால் எதையாவது செய்து, தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தார்மீகக் கோபத்தைக் காட்ட வேண்டும் என்பதில், அவர்களுக்குள் அபிப்ராயபேதம் எதுவும் இருக்கவில்லை. எப்படிச் செய்வது, எங்கே செய்வது என்பதில் தான் அபிப்ராயபேதம் இருந்தது. குருசாமியும், முத்திருளப்பனும் ராஜாராமனைவிட மூத்தவர்கள். ராஜாராமனிடம் துடிப்பும், வேகமும், ஆவேசமும் இருந்தன. குருசாமியிடமும் முத்திருளப்பனிடமும் அநுபவ நிதானம் இருந்தது. "நாடு முழுவதும் தலைவர்களும் தேசபக்தர்களும் எதையாவது சாதனை செய்து கைதாகிக் கொண்டிருக்கிற சமயத்திலே நாம மட்டும் வாசகசாலையில் உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு வம்பு பேசிக் கொண்டிருக்கிறதிலே பிரயோசனமில்லை" - என்று ராஜாராமன் கடைசித் தடவையாக வற்புறுத்திய போது ஃபண்டாபீஸ் மணி நாலடித்தது. "நாளை ஒரு முடிவு எடுப்போம்" என்று குருசாமி சொல்லும் போதே போட்டி போட்டுக் கொண்டு வார்த்தைகளைத் தடுத்தது கொட்டாவி. அவர்களும் அங்கேயே படுப்பார்கள் என்ற எண்ணத்தில் பாயை உதறி விரிக்க தொடங்கினான் ராஜாராமன். முத்திருளப்பன் புறப்படத் தயாராகி விட்டார். "இப்பவே மணி நாலாச்சு. நாங்க பேசிக்கிட்டே நடந்து போகச் சரியாயிருக்கும். இங்கே படுத்தா நேரந் தெரியாமத் தூங்கிடுவோம். குருசாமிக்குக் காலைல கடை தெறக்கணும். எனக்கு ஸ்கூல் லீவுன்னாலும் ஹெட்மாஸ்டர் வரச் சொல்லியிருக்காரு. நீயும் வீட்டுக்குப் போயிடேன், ராஜா. உனக்கு எங்களைவிடப் பக்கம் தானே?" "இல்லை, நிங்க வேணும்னா போங்க. எங்க வீட்டு ஓனர் ஒரு முசுடு. ராத்திரியிலே சத்தம் போடறோம்னு வாசகசாலையையே கிளப்பி விட்டவன். இப்ப வீட்டையே காலி பண்ணும்பான். நான் காலையிலேயே போய்க்கிறேன்"-என்று நண்பர்களுக்கு விடைகொடுத்து விட்டுக் கதவைத் தாழிட்டான் ராஜாராமன். மாடி ஓட்டுச் சார்ப்பு. மாதமோ மே மாதம். உள்ளே வெக்கை பொறுக்க முடியவில்லை. தூங்க முடியாது போலிருந்தது. நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தவரை பேச்சு சுவாரஸ்யத்தில் வெக்கை தெரியவில்லை. ராஜாராமன் பாயைச் சுருட்டிக் கொண்டு மொட்டை மாடியில் பாய் விரித்துப் படுத்தான். அங்கிருந்த முற்றத்தில் அவன் கால் நீட்டிய போது சுவரில் இடித்தது. படுத்த சிறிது நேரத்திலேயே தூங்கிவிட்டான் அவன். நீட்ட இடமில்லாததால் தூக்கத்தில் மிகக் குறைந்த உயரமுள்ள விளிம்புச் சுவரில் இரண்டு கால்களையும் தூக்கிப்போட வேண்டியதாயிற்று. சுவர் மறுபுறமிருந்து பார்த்தால் இரண்டு தாமரைகள் பூத்துச் சுவர் விளிம்பில் கிடப்பது போல அந்தக் கால்களின் உட்புறங்கள் தெரிந்தன. ***** கால்களில் சில்லென்று ஏதோ வந்து விழுந்ததை உணர்ந்தபோது அவன் மறுபடி கண் விழித்தான். காலில் வந்து விழுந்த பொருள் உறுத்தவில்லை. மிருதுவாயிருந்ததுடன் சுகமாகவும் இருந்தது. மனோகரமான நறுமணத்தை அவன் நாசி உணரச் செய்தது. அந்தப் பொருள், கண்விழித்துப் பார்த்தால் இலேசாக வாடிய ஒரு கொத்து மல்லிகைச் சரம் சர்ப்பம் போல் சுருண்டு அவன் கால்களில் கிடந்தது. அரகஜா, ஜவ்வாது, புனுகு சந்தன வாசனையும் அந்தப் பூ வாசனையோடு கலந்திருந்தது. அந்த வாசனைகள் அவனைக் கிறங்க அடித்தன. பக்கத்து வீட்டு மாடியிலிருந்து யாரோ சன்னல் வழியே வீசி எறிந்திருக்க வேண்டும். பக்கத்து வீடு யாருடையாதாயிருக்கும் என்று அநுமானிக்க முயன்று அந்த அநுமானம் இலேசாக நினைவில் பிடிபட்டபோது அந்தப் பூவைக் காலால் உதைக்க எண்ணி, 'பூக்களை மிதிக்க வேண்டாம்,' என்ற இங்கிதமான நுண்ணுணர்வோடு கால்களிலிருந்து அதைக் கீழே தரையில் நழுவவிட்டான் அவன். கிழக்கே வானம் வெளுத்திருந்தது. பூ எந்த ஜன்னலிலிருந்து வந்து விழுந்ததோ, அந்த ஜன்னல் வழியே வீணையில் யாரோ பூபாளம் வாசிக்கத் தொடங்கும் ஒலி மெல்ல எழுந்தது. அவன் பாயைச் சுருட்டிக் கொண்டு உள்ளே வந்தான். அந்த மல்லிகைப் பூவின் வாசனை இன்னும் கால்களிலிருந்து போகவில்லை. உள்ளே பெரிதாக மாட்டியிருந்த திலகர், காந்தி படங்கள் அவன் பார்வையில் பட்டதும், "அப்பனே! உன்னுடைய தேசம் விடுதலையடைகிறவரை கூட நீ சுதந்திரமாக இரசிக்க முடியாது!" - என்று அந்தப் படங்களிலிருந்தவர்களின் பார்வை அவனை எச்சரிப்பது போலிருந்தது. மாடிக் கதவைத் திறந்து வாசக சாலைக்காகப் போடப்பட்டிருந்த பத்திரிகைகளை எடுத்தான். சென்னையிலும், மதுரையிலும், திருச்சியிலும், திருநெல்வேலியிலுமாக மேலும் பல சத்தியாக்கிரகிகள் கைதாகியிருந்தார்கள். தேசத்தின் நலனில் அக்கரையுள்ள பலர் தொடர்ந்து கைதாகிச் சிறைக்குப் போய்க் கொண்டிருக்கும்போது தான் மட்டும் வெளியே இருப்பது பாவமென்று தோன்றியது அந்த இளைஞனுக்கு. வாசக சாலையைப் பூட்டிக் கொண்டு அவன் கிழே இறங்கிய போது கில்ட் கடைப் பத்தர், கடையைத் திறந்து கொண்டிருந்தார். வாசகசாலைச் சாவியைக் கொடுக்க அவரிடம் போன போது, "பின் பக்கம் மாடி வீடு யாரோடது; தெரியலியே?" என்று கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலுமிருந்த சந்தேகத்துடனேயே அவரைக் கேட்டான். "இதென்ன கேள்வி தம்பி! பின்பக்கம் ஒண்ணா நம்பர்ச் சந்துங்கிறது தெரியுமில்லே?" - என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் பத்தர். ராஜாராமனும் புரிந்து விட்டாற் போலப் பதிலுக்குச் சிரித்தான். "தெருப் பூராவுமே கந்தர்வ லோகம்கிறது ஊரறிஞ்ச விஷயமாச்சே? ஏன்? என்ன ஆச்சு?" "ஒண்ணுமில்லே! சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்." "அங்கே நீங்க தெரிஞ்சுக்கிறதுக்கு எதுவுமே இல்லை, தம்பி," பத்தரிடம் சாவியைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டான் ராஜாராமன். தெருவில் தயிர்க்காரிகளின் பட்டாளம் ஒன்று சேர்ந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. தலையில் அவ்வளவு பெரிய பானையைக் கூடைக்குள் வைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் வீசிச் சுதந்திரமாக ஒரு சிறிதும் பயப்படாமல் எப்படி அவர்களால் நடந்துவர முடிகிறதென்பது அவன் மனத்தில் ஆச்சரியமாயிருந்தது. வாழ்க்கையில் எந்த மூலையிலும் பொறுப்பும் சுமையுமுள்ளவர்கள் இப்படித்தான் அநாயசமாக நடந்து வருகிறார்களென்று தோன்றியது. பொறுப்பும் சுமையும் இல்லாதவர்கள் தான் தடுமாறி விழுகிறார்களோ என்று ஒரு சிந்தனை உள்ளே ஓடியது. வீட்டுக்குப் போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே புறப்படக் கிளம்பிய ராஜாராமனை மேலுருக்குப் போய் குத்தகைக்காரனைப் பார்த்துவிட்டு வரச் சொல்லித் தாய் வற்புறுத்தினாள். அவர்களுக்குப் பூர்வீகம் மேலூர். மேலூரில் ஒரு பழைய வீடும், திருவாதவூரில் கொஞ்சம் நிலமும் உண்டு. அப்பா காலம் வரை மேலூரில் தான் வாசம். அவன் ஹைஸ்கூல் படிப்புத் தொடங்கிய போது மதுரைக்கு ஒண்டுக் குடித்தனம் வந்தவர்கள் தான்; மதுரை இன்னும் அவர்களை விட்டபாடாக இல்லை. மேலூர் வீடு ஒரு உர டிப்போவுக்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த உர டிப்போவின் ஹெட் ஆபீஸ் மதுரையிலிருந்ததால் வாடகையை அந்தக் கையால் வாங்கி, இந்தக் கையால் மதுரை ஒண்டுக் குடித்தனத்துக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள், அவன் அம்மா. அவன் காலேஜ் படிப்பை விட்டதிலிருந்து, "ஏண்டா இனிமேலே மதுரையிலே எதுக்கு குடித்தனம்? மேலூருக்கே வீட்டோடப் போயிடலாமே?" என்று அவன் தாய் வாய்க்கு வாய் முணுமுணுப்பது சகஜமாகியிருந்தது. வாசக சாலையையும், தேச பக்த நண்பர்களையும், தலைவர்களையும் பிரிந்து தேசத்தின் பரபரப்பான காலத்தில் மேலூருக்குப் போக அவனுக்கு விருப்பமே இல்லை. அதனால் அது ஒன்றை மட்டும் அம்மாவிடம் கண்டிப்பாக மறுத்து வந்தான் அவன். ஏ.வைத்தியநாதய்யர், ஜார்ஜ் ஜோசப் போன்ற உள்ளூர்த் தலைவர்களின் ஆசியும் அவனுக்குக் கிடைத்திருந்தது. சீநிவாசவரதன் அவனுக்கு ஒரு பாரதி பாடல் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மூன்று வருஷங்களுக்கு முன் மதுரையின் வீதிகளில் தேச பக்தர் சோமயாஜூலு நடத்திய பட்டாக்கத்தி ஊர்வலத்தின் போது, இளைஞனாயிருந்த அவனைப் பலர் தடுத்தும் கேளாமல் அவனும் கூடப் போயிருந்தான். ஜெனரல் அவாரி நாகபுரியில் நடத்திய கொடி ஏந்திய தேசபக்திப் படையின் வாள் ஊர்வலத்தின் எதிரொலியாக இந்தப் பட்டாக்கத்தி ஊர்வலம் மதுரையிலும் நடந்தது. சென்னையில் நடந்த சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட தேசபக்தர்களையும், பொது மக்களையும் இரவில் வீடு திரும்புகையில், அந்நியர்களின் கூலிப் பட்டாளமும், குண்டர்களும் அடித்து நொறுக்கியதைக் கண்டித்துத் தீரர் சத்தியமூர்த்தி - லார்டு வெல்லிங்டனை அறைகூவி முழங்கிய வீர வாசகங்களைப் பாராட்டி, அப்போது ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த ராஜாராமன் அவருக்கொரு கடிதம் எழுதினான். "பகலில் எங்கள் ஆட்சி நடக்கிறது. இரவிலோ குண்டர்கள் ஆட்சி நடக்கிறது! அப்படியானால் வெல்லிங்டனே உமது ஆட்சி எங்கே நடக்கிறது? எங்கே போயிற்று?" - என்று அந்த தீரர் கூறிய வாக்கியங்களை அவன் பாராட்டி எழுதிய கடிதத்துக்கு ஆசி கூறி, அவர் ஒரு சிறு பதில் எழுதியிருந்தார். அந்தப் பதில் இன்னும் அவனிடம் பத்திரமாக இருந்தது. மதுரையின் இந்த ஞாபகங்களையும் அநுபவங்களையும் விட்டுவிட்டு மேலூர் போக அவனுக்குப் பிடிக்கவில்லை. மேலூரில் அவனுக்கு வேண்டிய சூழ்நிலையே இல்லை. ஜோசப் சாரைப் பார்த்துவிட்டு வரலாம் என்றுதான் அன்று காலை அவன் வெளியே புறப்பட்டிருந்தான். மேலூர் போனாலோ, அங்கிருந்து திருவாதவூர் போய்த் திரும்ப மாலையாகிவிடும். அவனோ பசுமலை போக விரும்பினான். "மேலூருக்கு இன்னொரு நாள் போறேன்," என்று தட்டிக்கழித்து விட்டான் அவன். தாய் முணுமுணுத்தாள். "வெளியே போறதுதான் போறே; திரும்ப எவ்வளவு நாழியாகுமோ? ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போ" என்று இலையைப் போட்டாள் அம்மா. கண்டிப்பையும் விட முடியாமல் பாசத்தையும் விட முடியாமல் தாய் படும் சிரமத்தை அவன் நன்றாக உணர்ந்திருந்தான். ஒற்றைக்கொரு பிள்ளை என்பதால் ரொம்ப நாள் வரை அவனைப் பிச்சை என்று தான் அவள் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவன் காலேஜ் படிப்பு வயதுக்கு வந்ததும் தான், அவள் அப்படிக் கூப்பிடும் வழக்கமே நின்றது. இரண்டு தோசை சாப்பிட்டதுமே அவன் இலையிலிருந்து எழுந்து விட்டான். "ஏண்டா, போதுமா?" "சிக்கிரமா வந்துடுவேன். இது போறும்." செய்யப்போகிற காரியங்களுக்கு உடனிருந்து உதவுகிற மாதிரி மனோதிடமுள்ள பத்திருபது பேர் அவனுக்கு தேவைப்பட்டார்கள். ஒருவர் இரண்டு பேர் செய்வதனால் ஒரு மறியலோ, ஆர்ப்பாட்டமோ நிரக்காது என்பதை அவன் உணர்ந்திருந்தான். மறியலைத் தொடங்கு முன்பே தடயம் தெரிந்து போலிஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டால் மறியலே நடக்காது. பழநியாண்டியும், சுந்தரராஜனும் இனிமேல் வாசகசாலைப் பக்கம் தலைக்காட்ட மாட்டார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாகப் புரிந்தது. 'வயதானவர்களில் பலர் அந்நிய அரசங்கத்துக்குப் பயப்படுகிறவர்கள்; வயதாகாத இளைஞர்கள் அப்பாவுக்குப் பயப்படுகிறவர்கள். கடவுளே! இந்த தேசம் எப்படித் தான் உருப்படப்போறதோ?' - என்று அவன் வாய் முணுமுணுத்தது. 'பயமென்னும் பேய் தன்னை விரட்டியடித்தோம். பொய்மைப் பாம்பைப் பிளந்து உயிரைக் குடித்தோம்' - என்று மனப்பாடம் செய்திருந்த பாரதியார் பாட்டு ஞாபகம் வந்தது. அந்நிய அரசாங்கத்துக்குப் பயப்படுகிற வயதானவர்களையும், வயதானவர்களுக்குப் பயப்படுகிற இளைஞர்களையும் வைத்துக் கொண்டு, இங்கு எதையுமே சாதிக்க முடியாது. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதையும், நூலோர்கள் செக்கடியில் நோவதையும் இனியும் பொறுப்பதற்கில்லை என்று அவனுடைய இளம் ரத்தம் சூடேறிக் கொதித்தது. இதில் தனக்கு உதவக்கூடியவர்கள் என்று நம்பிக்கையளித்த பலரைப் போய்ச் சந்தித்து, வாசக சாலைக்கு அன்றிரவு வருமாறு வேண்டிக் கொண்டான். ராஜாராமன் நிறைய அலைய வேண்டியிருந்தது; நிறையப் பேச வேண்டியிருந்தது. தேச விடுதலையிலும், காந்தியிடமும், அநுதாபமும் நம்பிக்கையுமுள்ளவர்கள் கூடப் பயப்பட்டார்கள். "எல்லாம் சரி. இதுக்காக நீ காலேஜ் படிப்பை விட்டிருக்கப் படாதுப்பா" - என்று அவனைக் கடிந்து கொள்ளத் தலைப்பட்டனர் சிலர். எதைக் கேட்டும் அவன் கலங்கிவிடவில்லை. வீடு திரும்பும் போது பகல் இரண்டு மணி ஆகிவிட்டது. சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளியே மறுபடி புறப்பட்டபோதும், "மேலூருக்குப் போய்க் குத்தகைக்காரனைப் பார்த்துட்டு வரணும்னேனே?" என்று மீண்டும் காலையில் சொன்னதையே திருப்பிச் சொன்னாள் தாய். "நாளைக்குப் போறேன், அம்மா. இன்னிக்கு ராத்திரியும் வாசகசாலையில் கூட்டம் இருக்கு. எல்லோரையும் வரச் சொல்லியிருக்கேன்." "தினம் ராத்திரி ராத்திரி என்ன கூட்டம் வேண்டிக்கெடக்கு?" "....." ராஜாராமன் பதில் சொல்லவில்லை. அவன் வாசகசாலைக்குப் போய்ச் சேர்ந்த போது கில்ட் கடை பத்தர் புதிதாக ஒரு செய்தியைச் சொன்னார். "காலையிலேர்ந்து சி.ஐ.டி. ஒருத்தன் வட்டம் போடறான். எங்கிட்டக் கூட வந்து, 'மேலே என்ன லைப்ரரி?'ன்னான் 'திலகர் லைப்ரரி; சில சமயம் ராத்திரிலே கிதைப் பிரசங்கம் நடக்கும்'னேன். போலீஸ் கண்லே லைப்ரரியும் இருக்கு; தெரிஞ்சுக்கங்க தம்பீ" என்றார் பத்தர். சமயத்தில் அவர் அதைத் தன்னிடம் தெரிவித்ததற்காக ராஜாராமன் அவருக்கு நன்றி தெரிவித்தான். |